பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தை வளர்ப்பில் சின்னச்சின்ன விடயங்களையும்
பக்குவாமக கையாள வேண்டும். இதனால் என்ன
பெரிய பாதிப்பு வந்திடும் என அலட்சியமாக இருக்கக்
கூடாது. சக பதிவர் அமுதா அவர்கள் தன் வலைப்பூவில்
போட்டிருந்த பதிவு அனைவருக்கும் உதவும் என்பதால்
நமது கிளப்பிலும். இதோ அவரின் பதிவு.

குழந்தைகளின் குணநலன்கள் அமைவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. என்னை யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

யோசிப்போமா பெற்றோர்களே...?
என் மகள் என்னிடம் அவள் தோழி அடிக்கடி தன் ஆசிரியருக்கு ஒன்றும் தெரியாது என்றோ, கோபமானவர் என்றோ கிண்டலாகக் கூறுவதாகக் கூறினாள். ஓரிருமுறை அவள் தாயார் ஆசிரியர் பற்றி அவள் முன்னே விமர்சிப்பதைக் கவனித்துள்ளேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மீது குழந்தைகளுக்கு மரியாதை இருந்தால் தானே கற்றல் முழுமையாகும்? ஆசிரியர்களும் மனிதர்கள் தான், குறைகள் இருக்கலாம். அதைக் குழந்தைகள் முன் கிண்டலாக விமர்சித்தால், குழந்தைகள் எப்படி மரியாதை கற்றுக் கொள்வர்? குறை களைய என்ன வழி என்று யோசிப்பதே நல்வழி, குழந்தைகள் முன் விமர்சிப்பது அல்ல. ஆசிரியர் என்று அல்ல மரியாதை கொடுக்கப்பட வேண்டிய எவருக்குமே இது தகும். யோசிப்போமா?

கொஞ்சம் தனியாக சுவாசிக்கட்டுமே?
எல்.கே.ஜி செல்லும் என் மகள் பள்ளியில், பல நாட்களாகப் பெற்றோர் வகுப்பறை வரை அனுமதிக்கப்படுவர். இதனால் ஏற்பட்ட ஒரு சில குழப்பங்களைத் தவிர்க்க, குழந்தைகளை வாசலில் விட்டுச் செல்லக் கூறினர். வாசலில் இருந்து பத்தடி தூரத்தில் வகுப்பறைகள் ஆரம்பித்து விடும். பள்ளியில் தான் நாம் குழந்தைகளின் விரலை விட்டு கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுவோம். எனவே இதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளை வழி நடத்த ஆசிரியர்களும், ஆயாக்களும் நின்று கொண்டுதான் இருக்ககின்றனர். என்றாலும் சிலர் வந்து போடும் கூச்சல் இருக்கின்றதே!!!! ஒவ்வொரு குழந்தையையும் விரல் பிடித்து வகுப்பறையில் விட வேண்டும் என்றால், என்று தான் அவர்களை சுவாசிக்க விடப்போகிறோம்?

விதிகளை மதிப்போமா?
என் பெண்ணிற்கு அப்பொழுத் எட்டு வயது. பூங்கா சென்றிருந்தோம். சில பெரியவர்கள் தங்கள் சின்ன புத்தியால் குழந்தைகளின் ஊஞ்சலில் ஆடுவார்கள். அதுவும் சிலர், அருகே ஏக்கத்துடன் நிற்கும் குழந்தைகளைக் கூட கவனியாது, கூறினாலும் கேட்காது ஆடுவார்கள். அப்படி ஒரு பூங்காவில், ஒரு சிறிய இராட்டினம் "6 வயதுக்குட்பட்டோர் மட்டும்" என்ற அறிவிப்புடன் இருந்தது. அவளுக்கு மிகவும் ஆசை, ஆனால் அறிவிப்பைக் கண்டவுடன் அவள் விலகி விட்டாள். "உனக்கு 2 வயது தான் அதிகம், தெரியாது ஏறிக் கொள்", என்றேன். அவள் மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு என்னை யோசிக்க வைத்தது. அறிவிப்பைக் காட்டி விதிகளை மதிக்க அவளுக்குப் புரிய வைக்க வேண்டிய நானே விதிகளை மிதிக்கக் கற்றுக் கொடுப்பது நியாயமா? ஊஞ்சலில் ஆடுவோரைக் குறை கூறும் தகுதி கூட இழந்து விடுகிறேன். இது போன்ற விஷயங்களிலும் சற்று கவனம் செலுத்தினால், நற்குணங்கள் என்றும் அவ்ர்களிடம் இருக்கும். அவளைப் பாராட்டினேன் விதிகளை மதித்ததற்கு

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...
"வெயிலில் ஆடாது, கருத்து போய்டுவ...", இது என் குழந்தைகளிடம் எப்பொழுதாவது நான் கூறும் சொற்கள். இவை எனக்குத் தவறாகத் தெரியவில்லை, எனது தோழி கூறும்வரை. அவளது பிள்ளை நல்ல நிறம். வெயிலில் ஆடியதால் கருத்தாலும், "நீ கருத்துவிடுவாய்" என்று கூற அவள் விழையவில்லை. காரணம்... கருப்பு நல்ல நிறம் அல்ல என்ற எண்ணம் அவனுக்கு உருவாகக்கூடாது என்பதால். எனவே "நீ களைத்து விடுவாய்" என்பாளாம். ஆனால் அவள் பையன் அவளை மிஞ்சி விட்டான். "கருப்பா கூட ஆகுது... ஆனால் என்ன கருப்பும் நல்ல நிறம் தானே!!" என்றானாம். நிறம் பற்றிய தவறான எண்ணங்கள் உருவாகுவதைத் தவிருங்கள்.

5 comments:

அஞ்சுமே நல்ல கருத்துன்னாலும், கடைசிக் கருத்து என்னக் கவர்ந்ததது. ஏன்னா நானும் கருப்பு. அந்தத் தாழ்வு மனப்பாண்மை எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது

கற்றுக் கொடுக்க மட்டுமல்ல குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளவும்தான் எத்தனை இருக்கிறது?

ஊஞ்சல் பற்றி எனக்கும் இதே கருத்து. ஆடும் பெரியவர்கள் சுற்றி இருக்கும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் என்பது ஒரு பாயிண்ட். இடத்தைப் பிடித்து தன் குழந்தைக்கு கொடுத்து விட்ட பெருமிதத்தில் பல பெற்றோர் சுற்றி ஏக்கப் பார்வையுடன் காத்திருக்கும் பல குழந்தைகளைக் கண்டு கொள்வதேயில்லை. ‘கொஞ்ச நேரம் ஆடி விட்டு அடுத்தவர்களுக்கு சான்ஸ் கொடுத்திடணும்’ என தம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினால் அவர்கள் கேட்க மாட்டார்ங்களா என்ன?

\\ ராமலக்ஷ்மி said...

கற்றுக் கொடுக்க மட்டுமல்ல குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளவும்தான் எத்தனை இருக்கிறது?//
வழிமொழிகிறேன்.. நல்ல பதிவு..

சரியா சொல்லியிருக்கீங்க தென்றல்.. குழந்தைகள் நம்மகிட்ட இருந்துதான் கத்துக்கிறாங்க, நல்லதும் கெட்டதும்.. சின்ன வயசில இருந்து பெரியவங்கள நாம மதிக்காம இருக்கிறதை பாத்தா பின்னால நம்ம பெரியவங்க ஆனதும் நம்மையே மதிக்கமாட்டாங்க.. குறைந்தது இந்த சுயநல சிந்தனையாவது நமக்கு இருந்தாலே குழந்தைகுளுக்கு நல்லது சொல்லி கொடுப்போம்..

அருமையான கருத்துக்கள். இப்படித்தான் என் மகனை என் உறவினர்கள் ரூல்ஸ் ராமநாதன் என்று வேடிக்கையாக அழைப்பர். அவனேடு நான் வெளியில் செல்லும் போது பேரூந்தில் ஏறும் வழியில் ஏற வேண்டும்.'இறங்கும் வழியில்' இறங்க வேண்டும். கடைக்குப் போனல் பேப்பரைக் கூட தெருவில் போடவிடமாட்டான்.சிக்னலில் கிரீன் வரும் வரை வண்டியை எடுக்க முடியாது. இந்த பழக்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதனால் தான் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவனோடு இருக்கும் போது மட்டுமாவது ஒழுங்காக இருக்க முயல்கிறேன்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்