பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தை வளர்ப்பு ஒரு கலை மட்டுமல்ல.பெரிய பொறுப்பான கடமை.நம் குழந்தை குடும்பத்திற்கும்,பரம்பரைக்கும் நல்ல சந்ததியாகவும்,ஊருக்கும்,நாட்டிற்கும் நல்ல குடிமகனாகவும் உருவாக வேண்டுமென்பது நமது ஒவ்வொருவரின் கனவும்,ஆசையும்.பிறந்த குழந்தை களிமண்ணைப்போல. நாம் எப்படி வனைகிறோமோ அப்படி உருவாகிறார்கள் ஒரு வயது வரை.அதன் பிறகு அவர்கள் நண்பர்கள்,அவர்களின் ஆதர்ச ஆசிரியர்கள்,திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் சமூகத்தின் தாக்கத்தாலும் தம்மை வார்த்துக்கொள்கிறார்கள்.இதை நமது பெற்ற மனது ஏற்க மறுக்கிறது.நாம் சொல்லும் வழியில் அவர்களைப்பயணிக்க நிர்ப்பந்திக்கிறோம்.குழந்தைகள் - நம் வழி வந்தவர்கள்.நாம் உருவாக்கியவர்கள் அல்லர்.அவர்கள் நாம் படைத்த பாண்டங்கள் இல்லை.அவர்களுக்கென தனியான உணர்வும்,சிந்தனையும்,எண்ணங்களையும்,விருப்பு வெறுப்புகளும் அமையப்பெற்றவர்கள் என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது.அவர்களை அவர்களின் சொந்த முயற்சியில்,சுயசிந்திப்பில் வளர விடுகிறோமா? அவர்களை," அவளப்பாரு அவ மாதிரி இரு.இவனப்பாரு,இவன மாதிரி மார்க் வாங்கு" இப்படி அவர்களை நாம் விரும்புபவர்களின் பிரதிகளாக,படியெடுக்கும் வேலையைச்செய்யச்சொல்கிறோம்.ஒப்பீடு என்பது குழந்தைகளைக் கடுமையாக பாதிக்கிறது.

இப்போது பத்தாம்,மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான மாதிரித்தேர்வு (Pre-Board) முடிந்திருக்கிறது.இந்தத் தேர்வில் வெற்றி பெறாத மாணவ,மாணவியரை 100% தேர்வு முடிவு காட்ட விரும்பும் பள்ளிகள் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை.இது மாணவர்களை மட்டுமல்ல,அவர்களின் பெற்றொரையும் கடுமையாக பாதித்துள்ளது.இங்கு பொதுத்தேர்வு சுரம் ஊரையே பாதிக்கும்.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் காலை நான்கு மணி முதல் தொடங்கி விடுவார்கள்.அவர்களைக்கொண்டு விட்டு கூட்டிவரவென பெற்றொரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.படி,படி என்று படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைத்து அவர்களின் தனித்திறமைகளை முடக்கிப்போட்டு விடுகிறார்கள்.இன்று என் மகனின் பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர் சந்திப்பிற்குப் போயிருந்த போது ஒரு தாய் தன் மகளை குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் அறைய அந்தப்பெண்குழந்தை வெட்கி அழுதது கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.இங்கு மத்திய அரசின் பொறியியல் இட ஒதுக்கீட்டில் இடம் பெற,கடந்த வருடம் முதல் +2 பொதுத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒதுக்குவதில்லை.AIEEE நுழைவுத்தேர்வில் பெறும் தரவரிசையின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுமென்பதால் பெற்றோர் குழந்தைகளை +2 வில் மதிப்பெண் பெறாவிட்டலும் பரவாயில்லை.நுழைவுத்தேர்வுக்கு நல்லமுறையில் தயார் செய்துகொள் என்று அறிவுறுத்த,பொதுத்தேர்வுச்சுமையுடன் நுழைவுத்தேர்வுச்சுமையும் கூடி மாணவர்களைப் படுத்துகிறது.இன்று சமூகம் அடுத்த சந்ததியினரை ஒட்டுமொத்தமாக ஒரே திசை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறது.அதாவது பொறியியல் படிப்பை நோக்கி.வேலை வாய்ப்பும்,அபரிதமான சம்பளமும் காரணமாக இருக்கலாம்.ஆனாலும் ஒரு சமூகத்திற்கு பலவகையான மனிதர்களும் தேவையில்லையா? அறியும் ஆவலுடன் தானே படிப்பது வேறு.அது கூட புத்தகப்புழுக்களாக இருப்பவர்கள்,செய்முறைப்பயிற்சியில் தடுமாறுவதைப்பார்க்கிறோம்.புத்தக அறிவு என்பதை விட நாமே அனுபவித்துக் கற்றுக்கொள்வது தான் நடைமுறை வாழ்க்கைக்குப்பயனளிக்கிறது.இங்கு எல்லாப்பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப்படிக்கவைத்து அரசு வேலை வாங்கிக்கொடுத்துவிட்டால் போதும்.அவர்கள் போராட்டமின்றி வாழ்க்கையைக்கடத்துவார்கள் என்றுதான் சிந்திக்கிறார்களே தவிர அவர்களுக்குப்போராடக் கற்றுக்கொடுத்து அவர்களை சாதிக்க வைக்க மிகச்சிலரே விரும்புகின்றனர்.அதனால் பலருக்கு இங்கு வாழ்க்கை, ஒரு சலிப்பை ஏற்படுத்தி இயந்திரத்தனத்திற்கு வழிகோலியுள்ளது.

இன்று முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்று இப்படியான குழந்தை வளர்ப்பும்.குழந்தைகளுக்கு கல்வியையும்,பணம் சம்பாதிக்கவும்,சொத்துசேர்க்கவும் கற்றுக்கொடுத்த நாம்,கடமைகளை,பொறுப்புகளை ஏற்று,அவற்றை நிறைவேற்றும் உணர்வைக்கற்றுக்கொடுக்கவில்லை.அன்பு காட்டவும்,இரக்கம் கொள்ளவும் கற்றுக்கொடுக்கவில்லை.குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பு,வெறுப்பறிந்து,அவர்களின் பிற திறமைகளை ஊக்குவித்தால் போதும்,சாதிப்பார்கள்.குழந்தைகளுக்கு அடிப்படை நற்பண்புகளைச்சொல்லிக்கொடுத்தால் போதும்.மற்றவற்றை சமூகத்தைப்பார்த்து அவர்களே பகுத்தறிந்து பண்படுவார்கள்.ஒரு மூத்த ஆசிரியை சொல்கிறார்,"70-80 சத்விகித மதிப்பெண் பெறுபவர்களுக்குத்தான் படைப்புத்திறன் அதிகமிருக்கும்.அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் புத்தக அறிவு நிரம்பியவர்கள்.ஒரு சமச்சீர் வளர்ச்சி அவர்களிடம் இருக்காது" என்று.ஆக குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்த்து தனிதிறன் களுக்கான மேடை அமைத்துக்கொடுப்பதும் அவசியமாகிறது.கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி.இந்த உலகிற்கு எல்லாவகையான மனிதர்களும் தேவை.ஒரு குழந்தை ரோஜாச்செடி எனில் ஒரு குழந்தை கத்திரிச்செடி.ரோஜாச்செடி கண்டிப்பாக,நிச்சயமாக கத்தரிக்காய்களைத் தரப்போவதில்லை.கத்தரிக்காய்களைத் தரும்படி நிர்ப்பந்தித்தால்,பலவந்தப்படுத்தினால் அந்தக்குழந்தை முரடனாக,சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் உதவாதவனாக உருவாவான்.ஆனால் அதே சமயத்தில் நாம் செய்யும் தொல்லையினால் அந்த ரோஜாச்செடி ரோஜாக்களையும் தரமுடியாது பட்டுப்போவார்கள்.அப்படி நம் வாரிசுகள் கருகத் திருவுளமோ?

4 comments:

அட நீங்களா.. மிக்க மகிழ்ச்சி சகோதரி:)

//இன்று என் மகனின் பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர் சந்திப்பிற்குப் போயிருந்த போது ஒரு தாய் தன் மகளை குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் அறைய அந்தப்பெண்குழந்தை வெட்கி அழுதது கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.//

மிக வருத்தம். படிப்பு மட்டுமா உலகம் ?

முதல் பதிவுக்கு வாழ்த்து சாந்தி

படம் தோற்றம் கருத்துக்கள் என மொத்தமாக ஒரு பூங்காவிற்குள் வந்து இருப்பது போல் மென்மையாக யோசிக்க வைக்கிறது.

//குழந்தைகளுக்கு அடிப்படை நற்பண்புகளைச்சொல்லிக்கொடுத்தால் போதும்.//

முன்னெல்லாம் “மாரல் சைன்ஸ்”ன்னு ஒரு கிளாஸ் இருக்கும்; அதுதான் ரொம்ப நல்லாருக்கும். இப்பவும் இருக்கு கடமைக்குன்னு.

நல்ல கருத்துக்கள், அருமையா சொல்லிருக்கீங்க. ஆனா கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சு போட்டீங்கன்னா வாசிக்க வசதியா இருக்கும். :-)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்