பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.


தோழியரே! கல்வி கண் போன்றது.நமது அறிவைத்தீட்டி,நம் வாழ்க்கையை ஒளிபெறச்செய்வது கல்வி ஒன்றே! கற்றோருக்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு.கல்வியின் துணை கொண்டு கண்டம் விட்டு கண்டம் சென்று,உலகெலாம் பயணித்து, செல்வம் தேடி சிறப்புறுகிறார்கள்.உண்மை.இதில் இரு வேறு கருத்தோ,நம் குழந்தைகளும் கல்வியில் தேறி,அந்நிய நாடுகளில் மின்னி வலம் வரக் கனவு காணும் தாயின் சிந்தனைகளில் தவறோ கிடையாது.ஆனால் எல்லாக்குழந்தைகளும் ஒன்று போல் படிக்க முடியாது என்கிற கருத்தை தயவு செய்து பெற்றோர்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ளுங்கள்.அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் ஆரம்பிக்க இருக்கிறது.குழந்தைகளுடன், பெற்றோரும் மன அழுத்ததிற்கும்,படபடப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.ஆசிரியர்களோ ஒரு படி மேல்.தனது பாடத்தில் குழந்தைகள் 100 சதவிகித வெற்றி பெற வேண்டி அவர்கள் கடைசி நேரம் வரை சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றனர்.பள்ளி,வீடு,நண்பரகள் அனைவரும் தேர்வுப்பபடப்பில் இருக்க குழந்தைகள் இன்னும் நெருக்கடியாய் உணர்கிறார்கள்.

தாய்மார்களே! குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுங்கள்.எந்த நேரமும் புத்தகத்தோடு இருக்கும் படி அறிவுறுத்தாதீர்கள்.எதிர்மறையான எண்ணங்களை அல்லது அவர்களின் நம்பிக்கை தகர்ந்து போகும் படி திட்டுவதோ,பேசுவதோ கண்டிப்பாகக் கூடாது.அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வரும்படி மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது மற்றும் குறைந்த மதிப்பெண்களைச்சுட்டிக்காட்டி குத்திப்பேசுவது கண்டிப்பாகக்கூடாது. நமது மூளையானது தொடர்ந்து 45 நிமிடம் தான் படிப்பதை ஏற்கும்.அதன் பிறகு நமது சிந்தனைகள் தானே ஊர் சுற்றக்கிளம்பிவிடும்.பிறகு 10 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குப்பிறகு தான் மறுபடி மனம் ஒருமுகப்படும்.ஆகவே குழந்தைகள் படிக்கும் போது இடையிடையே கொஞ்ச நேரம் விளையாட விட்டு அல்லது தொலைக்காட்சியில் பிடித்த நிகழ்ச்சி அல்ல்து பாடல் கேட்பது அல்லது கொஞ்சம் வெளியில் உலாத்திவிட்டு வருவது நல்லது.உடலுக்கும் கொஞ்சம் பயிற்சி.மனதிற்கும் நன்றாக இருக்கும்.கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவச்சொல்லுங்கள்.கொஞ்ச நேரம் பச்சைச்செடி,கொடிகளைப்பார்ப்பது கண்களுக்குக் குளுமையாக இருக்கும்.செல்லப்பிராணிகள் நாய்கள்,பூனைகள் இருந்தால் விளையாட விடுவதும் நல்லது.

தோழியரே! குழந்தைகளின் தேர்வு நேரங்களில் வீடுகளில் வாக்குவாதங்கள்,சண்டைகள்,அக்கம்பக்கம் அரட்டைகளைத் தவிர்ப்பது நலம்.குழந்தைகளுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நலம்.அவர்களுக்கு மன உளைச்சளைத் தரும் நிகழ்வுகளைத் தவிருங்கள்.விருந்தாளிகள் முன் குழந்தைகளைத் தரக்குறைவாகப்பேசுவதைத்தவிருங்கள்.விருந்தாளிகள் குழந்தைகளை கிணடலடிப்பது ஆகியவற்றை அனுமதிக்காதீர்கள்.நல்ல சத்தான ஆகாரம்,பழங்களில் ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை காய்களில் உருளைக்கிழங்கு,வெண்டைக்காய்,வெள்ளரி,காரட்,பீட் ரூட், கீரைகள்,பருப்பு சேர்ப்பது நல்லது.மசாலா அதிகமுள்ள உணவு,செயற்கை பானங்கள்,சிப்ஸ், எண்ணெயில் பொரித்த உணவு ஆகியவற்றைத்தவிர்ப்பது நல்லது.உடல் நலமும்,மன நலமும் எப்போதும் அவசியமென்றாலும் தேர்வு நேரங்களில் இன்னும் அதிமுக்கியம்.அது போல் உடல்,மன ஆரோக்கியத்தில் தூக்கத்திற்கு முக்கியப்பங்கு உண்டு.ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.குறைந்தது 6 மணி நேரத்தூக்கம் அவசியம்.

குழந்தைகளின் தேர்வு அட்டவனையை வெள்ளைக்காகிதத்தில் வண்ணப்பேனாக்களை உபயோகித்து பெரிய எழுத்தில் எழுதி,தேதி,பாடங்களை மறுபடி சரிபார்த்து, அனைவரின் பார்வையில் படுமிடத்தில் ஒட்டி வையுங்கள்.தேர்வைத்தவறவிடுவது தவிர்க்கப்படுவது மட்டுமல்ல,குழந்தைக்கும் இன்னும் நான்கு நாள்,மூன்று நாள் என்று தன்முனைப்பை ஏற்படுத்தவும் உதவும்.கடந்த வருடம் இங்கு நிறையக்குழந்தைகள் இடையில் நிறைய விடுமுறை இருப்பதால் தேர்வு எழுதாமல் தவற விட்டு அழுதனர்.குழந்தைகளின் தேர்வு அனுமதிச்சீட்டை (Hall ticket) படியெடுத்து வைத்துக்கொள்வது நலம்.எனது மகனும் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.நான் கடைபிடிக்கும் சில குறிப்புகளைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நம் நாட்டின் கல்வி முறையை விமர்சிப்பவர்கள் பலர்.ஆனாலும் எல்லாக்குழந்தைகளும் பந்தயத்தில் ஓடத்தயாராய் இருக்கும் போது நம் குழந்தைகளும் ஓடி வெற்றி பெற வேண்டுமென்பது ஒவ்வொரு பெற்றோரின் ஆசையும்,குறிக்கோளும்.அன்போடும், அக்கறையோடும் பயிற்சியளித்து அவர்களையும் தயாராக்குவது நமது கடமை.குழந்தைகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று,நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துங்கள் நண்பர்களே!.

4 comments:

அருமையான பதிவு சாந்தி லட்சுமணன்.

மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் மகனுக்கு என்னுடைய வாழ்த்தைக் கூறுங்கள்.

அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

//ஆனாலும் எல்லாக்குழந்தைகளும் பந்தயத்தில் ஓடத்தயாராய் இருக்கும் போது நம் குழந்தைகளும் ஓடி வெற்றி பெற வேண்டுமென்பது ஒவ்வொரு பெற்றோரின் ஆசையும்,குறிக்கோளும்.அன்போடும், அக்கறையோடும் பயிற்சியளித்து அவர்களையும் தயாராக்குவது நமது கடமை.//

ரொம்பச் சரி சாந்தி.

பயனுள்ள பதிவு. நன்றி.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்