பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பகுதி - 1: குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதற்கான காரணங்கள்

பகுதி - 2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்

பகுதி - 3: குழந்தைகளைத் தயார்ப்படுத்துதல், முடிவுரை:

குழந்தைகள் மனநிலை:

  • குழந்தைகள் நாமே எதிர்பார்க்காத அளவுக்கு விடுதி வாழ்க்கைக்குத் தயாராகக் கூடும்.
  • அரைகுறை மனதோடு தயாராகக்கூடும்.
  • தயாரே இல்லாமல் இருக்கக்கூடும். மிகவும் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கக்கூடும்.
  • தயாராகி விடுதியில் சேர்த்தவுடன், குழந்தைகள் தரப்பில் விடுதிச் சூழலுக்கு ஒத்துப் போக முடியாத நிலமை இருப்பின் குழந்தையின் மனநிலை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.
***************************************
  • இதில் முதல் நிலை பெற்றோர்க்கு மிகவும் எளிதாக அமையும்.
  • இரண்டாம் நிலை பேசித் தயார்ப்படுத்தி முடிவெடுக்க வழிவகுக்கும்.
  • மூன்றாம் மற்றும் நான்காம் நிலைதான் மிகவும் ஆபத்தானது., அந்த நிலையில் இந்த முடிவைக் கைவிட்டு, மாற்றுவழி யோசிப்பதே நல்லது.
இரண்டாம் நிலை - என்ன செய்ய வேண்டும்?
  • விடுதியில் சேர்ப்பதற்கான காரணத்தின் நன்மைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
  • அவரவர் வயதுக்கேற்ற பக்குவத்தோடு விளக்கங்கள் அமைய வேண்டும்.
  • விடுதியின் நடைமுறைகளை உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு முடிவெடுப்பதற்கான சரியான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
  • பெற்றோர் இருவருக்கும் இவ்விஷயத்தில் பரஸ்பரக் கருத்து வேறுபாடு அல்லது உறுதியற்ற தன்மை நிலவினாலும், அதைத் தனிமையில் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, குழந்தை முன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையைக் குழப்பாமல் இருக்க இது உதவும்.
விடுதி மற்றும் சூழல்:

  • விடுதியின் சூழல், விதிமுறைகள், வசதிகள் எல்லாமே பிறர் மூலம் தெரிய வந்திருந்தாலும், சரியான முறையில் விசாரித்து நாம் தெளிவு பெற வேண்டியது மிகவும் முக்கியம்.
  • பிறர் சொன்னார்கள் என்பதற்காக, சரியாக விசாரிக்காமல் சேர்த்து விடக்கூடாது.
  • விடுதியின் விதிமுறைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் பக்குவமும் பெற்றோர்க்கு மிகவும் அவசியம்.
  • எந்தத் தேவைக்காக / காரணத்துக்காகச் சேர்க்கிறோமோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகும் வண்ணம் சூழல் இருக்கிறதா என்று அவ்வப்போது நேரடியாகக் கண்காணித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அந்தத் தேவைகள் பூர்த்தியாகாத பட்சத்தில் நம் முயற்சிகள் அனைத்தும், பட்ட / படும் சிரமங்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

முடிவுரை:
  • பலவிதக் கோணங்களில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
  • நம் தேர்வு / முடிவு தவறாகிவிடவும் கூடும். எதிர்பார்ப்புகள் பலிக்காமல் போகும்போது, சற்றும் தயங்காமல் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்.
  • சில பெற்றோர்க்கு அருகில் இருந்து, அவர்கள் அனுமதிக்கும் வேளையில் குழந்தைகளைச் சென்று பார்க்க, கூட வந்து வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இன்றிப்போகும். அப்போதுதான் உறவினர்களின் உறவு தேவைப்படும். பெற்றோர் கூட இருக்க முடியாத சூழலில் விடுதியில் இருந்து வெளிவரும் வேளையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
  • நிறைய முயற்சிகள், நிறைய ஒத்துழைப்பு பெற்றோர் தரப்பில் இருந்தால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
முயற்சி நல்லபடியாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்

பகுதி -2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்

விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும்.

குழப்பங்கள் - குழந்தைகளுக்கு:
  • அப்பா அம்மாவைவிட ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்களோ?
  • நண்பர்கள் எவ்விதமாக இருப்பார்கள்?
  • உணவு எப்படி இருக்கும்?
  • என் வேலை அனைத்தையும் நானே எப்படிச் செய்து கொள்வேன்?
  • புதிய மொழி எனக்குப் புரியுமா? என் பேச்சை அவர்கள் புரிந்து கொள்வார்களா?
  • எப்போதெல்லாம் வீட்டுக்கு வர முடியும்?
  • எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுப்பார்கள்?
  • இங்கே கொண்டு வந்து சேர்க்க அப்பா அம்மா ஏன் முடிவெடுத்தார்கள்?
குழப்பங்கள் - பெற்றோர்க்கு:
  • நாம் செய்வது சரிதானா?
  • நம் குழந்தையால் சமாளிக்க முடியுமா?
  • உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?
  • பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்துமா?
  • உடல்நிலை சரியில்லையென்றால் சரியாகக் கவனிப்பார்களா?
  • உணவு சரியாகக் கொடுப்பார்களா?
  • இப்படிச் செய்வதால் நம்மை வெறுத்துவிடுவானா?
  • உணர்வுப் பாதுகாப்பு (Emotional security), சூழல் பாதுகாப்பு (Physical  security) எப்படியிருக்கும்?
இது போலப் பலவிதமான குழப்பங்கள் வந்து போகும். அவரவர் சூழலுக்கேற்றவாறு வந்து போகும் குழப்பங்கள்.

இக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன?
  • உற்றார் உறவினர் நண்பர்கள் ஆலோசனைகளைக் காதும், மனமும் கொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...ஆனாலும் இதுகுறித்த முடிவை நீங்கள் இருவர் மட்டும் எடுங்கள்.
  • அம்மாவும் அப்பாவும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசி இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுங்கள்.
  • குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
  • குழந்தையையும் மனம் திறந்து பேசச் செய்யுங்கள்.
  • எந்தக் காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதற்கான நியாயத்தை விளக்குங்கள்.
  • விடுதியைப் பற்றிய, பாதுகாப்பு பற்றிய தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • அத்தகவல்களை உள்ளது உள்ளவாறே குழந்தைகளிடம் சொல்லுங்கள்...கூடுதலாகவோ குறைவாகவோ எதுவும் சொல்ல வேண்டாம்.
  • குழந்தையின் நிறைகுறைகளைச் சரிவர மதிப்பிட்டு அதற்கேற்றவாறு அணுகுங்கள்.
  • விடுதியில் சேர்ப்பதற்கான காரணம் உங்கள் இருவருக்கும் நியாயமாகத் தோன்றும் என்றால், இதையும் ஒரு பொறுப்பாகக் கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
குழந்தைகளை அணுகும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன?

அடுத்த பகுதியில்...

பேரன்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்துப் பதிவிடுகின்றேன்....


சில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...

அந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள். இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே. கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

பள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..இந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:
  • கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..
  • பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...
  • அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..
  • தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...
  • டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...
  • இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..
  • நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...
  • குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..
  • வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..
  • அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறுவித காரணங்கள்:
  • இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...
  • இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக  இல்லை...
  • வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..

இப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.

ஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..
அடுத்த பகுதியில்..

வெட்கம்... அழகான வார்த்தை. வெட்கப்படும்பொழுது சிலர்
இன்னும் அழகாக தெரிவார்கள். ஆனால் இந்த வெட்கமே
சிலருக்குத் தடையாக இருக்கும். பெரிய அளவில் முன்னேறாமல்
போய்விட இந்த வெட்கம் காரணமாக இருக்கலாம்.

SHY CHILD என அழைக்கப்படும் சில குழந்தைகளை வளர்ப்பது
அவ்வளவு சுலபமல்ல. சுற்றத்துடனும், நட்புடனும் கலந்து
விளையாடாத தன் குழந்தையால் மனவருத்தத்திற்கும்
வெறுப்புக்கும் ஆளாகும் பெற்றோர் எத்தனையோ பேர்.
தன் பெற்றோர் வேறு யாருடனும் பேசி மகிழ்ந்து கொள்ள விடாமல்
அழுது, பிடிவாதம் பிடித்து என கவனத்தை திசை திருப்ப
முயற்சி செய்வார்கள் இத்தகைய குழந்தைகள். பொறுமையாக
இத்தகைய குழந்தைகளை கையாள வேண்டும்.

பொது இடத்தில் சாப்பிட படுத்துவார்கள், பார்ட்டி, கல்யாணம்
போன்ற இடங்களுக்குச் சென்றால் அம்மாவின் காலை கெட்டியாக
பிடித்துக்கொண்டு எங்கும் நகர விடாமல் செய்வார்கள்.


வளர வளர சிலக்குழந்தைகள் எல்லோருடனும் கலந்து பழக
ஆரம்பிப்பாரள் என்றாலும் சிலர் அந்த வெட்கம் தயகக்த்துடனே
வளர்வார்கள். தன்னம்பிக்கை குறையும். யாருடனும் கலந்து
பேசாததால் தனிமை விரும்பிகளாகிவிடுவார்கள்.

என்ன செய்வது?? இந்தப் பிள்ளைகளை எப்படி சமாளித்து
வளர்ப்பது??

வாங்க பகிர்ந்துக்கலாம். நாளைய பதிவில் பார்க்கலாம்.

வெறும் இயந்திரம் போல அலுவலகம் செல்வதும், வீடு திரும்புவதும், உண்பதும் உறங்குவதும் என எந்த வண்ணமும் இல்லாத த்ராபையாக இருந்த வாழ்க்கையைத் தன் கேள்விகள் மூலம் எழுப்பியவள், என் சகோதரியின் மகள், வைஷ்ணவி. அவள் கேட்கும் கேள்விகளின் பதில்களுக்காக என் தேடல்கள் துவங்கின. அவளோடு என் மகளும் சேர்ந்து கொண்டால்.... கேள்விகள் இன்னும் தீராமல் தொடர்கின்றன.

ஆப்பிள் ஏன் ரெட் கலரா இருக்கு-வில் ஆரம்பித்து, மண் எப்படி பொடியானது, அலை எங்கேர்ந்து வரும், கடல் தண்ணி ஏன் அங்கேயே நிற்குது ஏன் மத்த (ஆறு போன்ற) தண்ணி மாதிரி ஓடுவதில்லை என்று சராமாரியாய் திகைக்க வைக்க அவர்களுக்கு மட்டும்தான் முடியுமோ என்னவோ.

சனிக்கிழமை சாயந்திரம், ஆற அமர அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு, வாகனங்களும் செயல்பாடுகளும், அவற்றின் பயன்களும் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரை எளிமையான புல்லட் பாயிண்டுகளாக படங்களோடு தயார் செய்து பிரிண்ட் எடுத்து அவளுக்கு விவரித்துக் கொண்டிருந்தேன்.

எல்லாவற்றிக்கும் நான்கு, மூன்று, இரண்டு, என்று சக்கரங்கள் இருப்பதை விவரித்திருந்தேன். ரயிலுக்கு அவ்வாறு சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மேடம் கரெக்ட்டா "அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம் இருக்கும்" என்ற ஒரு கேள்விக்கான பதிலை அவள் ஆறு வயதுக்குப் புரியும்படி கொஞ்சம் விளக்கமாய்த் தர முயற்சித்தேன்.

அதற்கான படங்கள் இவை. இந்தப் படங்களை பிரிண்ட் வைத்துக் கொண்டு அவளோடு மூன்று மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் ஒரு வழியாய், என்ஜின்-னுக்கு மொத்தம் 12 சக்கரங்கள் மற்றும் bogie / coach ஒன்றுக்கு நான்கு சக்கரங்கள் என்று இருக்கிறது என்று எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாள். :))







விருட்சம்.காம் வலைதளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள …

இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி விட்டால் விட்டது தொல்லை. மாறாக யோசிக்காமல் வாங்கி ஓன்று வாயில் இடுக்கிக் கொண்டால் பிடித்தது ஏழரை என்பதைக் கூட உணராமல் அதில் மாணவக் கண்மணிகள் மூழ்கிக் கொண்டு இருக்கும் அவலம்
இப்போ கண்டுபிடித்திருக்கிறது ஒரு தனியார் பள்ளி.

பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.

பின் விளைவுகள் என்னென்ன? வேறு என்ன ஒரு நாள் எடுத்துக் கொள்ள வில்லை என்றால் தலை வலி எரிச்சல் தூக்க மின்மை, எரிந்து விழுதல், படிப்பில் கவனமின்மை.

இதை விளம்பரப்படுத்தும் இந்தச் சுட்டி

சொல்லுவது இது ஹெர்பல் தயாரிப்பாம். ஆரோக்கியத்துக்கு நண்பனாம் அதான் ஹெல்த் பிரெண்ட்லி

ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் புகையிலை தயாரிப்பு என்று ஏதாவது உண்டோ.

4ஆம் வகுப்பு மாணவன் கூட ஐ லவ் யூ என்று தன்
சகவகுப்பு மாணவியிடமோ, தோழியிடமோ சொல்லும்
காலம் இப்போது. இந்த நிலையில் பதின்மவயதுக்குழந்தைகள்
பற்றி சொல்லவே வேண்டாம்.

பாய்ஃப்ரெண்ட்/கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாவிடில் அவர்கள்
எதற்கும் லாயக்கற்றவர்கள் என சொல்லும் நட்பு வட்டம்...
ஸ்டேடஸ் சிம்பளாக ஒரு பெண்ணோடோ/ஆணோட
நட்பு இருப்பதாக காட்டிக்கொள்வது சர்வ சாதரணமாகிவிட்ட
சூழல் என இருக்கும் நிலையில் பிள்ளைகள் காதல்
வயப்படுகிறார்கள். இது உண்மையில் காதலில்லை
என்று சொன்னால் கேட்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை.
தனக்கென ஒரு உலகம் அமைத்து அதற்குள் வாழும் அவர்கள்,
தனக்கான தனி அடையாளம் அமைத்துக்கொள்ள என்ன
வேண்டுமானாலும் செய்ய கூடிய ஒரு மனநிலையில்
இருப்பார்கள்.

வீட்டுக்குள் அடைப்பது, திட்டுவது, அடிப்பது, சோறு
போடாமல் கண்டிப்பது எல்லாம் வேலைக்கு ஆவாது.
அவர்களுடன் பேசி நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள
வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள்
தான் தனது வாழ்க்கையின் முக்கிய எதிரி என நினைப்பார்கள்.
அன்பான வார்த்தை கூட எடுபடாத இந்த சூழலில்
இது எதிர்பாலினத்தரின் மீதான ஒரு கவர்ச்சி. இது
இப்பொழுது நிகழக்கூடிய ஒன்று. இதை காதல் என
தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கையை வீணாக்காமல்
படிப்பை கவனித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என
பேசிப் பேசி புரிய வைக்க வேண்டும்.
சொல்வது போன்ற எளிது கிடையாது.

தற்போது படிப்பில் கவனதை செலுத்தி நல்லதொரு
வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு
அப்போதும் இருவருக்கும் இருந்தால் பார்க்கலாம்
என சொல்லலாம். ஏன் கூடாது??? என எதிர் கேள்வி
வீசப்போகும் பிள்ளைக்கு அதை புரிய வைக்க வேண்டியது,
நிதர்சன உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது
பெற்றோரின் கடமை.

ஆகாயத்தில் கோட்டை கட்டாமல் நிதர்சனங்களை அலசி
ஆராய்ந்து தனக்கென கால் ஊன்றிய பிறகு தன் வாழ்க்கை
துணையை தேர்ந்தெடுப்பது நலம் என சொல்லவேண்டும்.
இந்த வயதில் இந்த இனக்கவர்ச்சி இயல்பானது என்பதை
புரிந்து கொண்டு பெற்றோரும் குழந்தைகளை அதிகமாக
கட்டுபடுத்தாமல் நல்ல வழிகாட்டியாக பிள்ளைகளுக்கு
உதவி இனிதாக பதின்மவயதை தாண்ட உதவ வேண்டும்.

ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,

இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர்.

அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.

பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை."லட்ச்சுமணா "என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.

வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராடனங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.

பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.

கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.

அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.

அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;

"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.

பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.

இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.

வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .

"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.

வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.

வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.

தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.

" நீயோ என்னைக் கொன்றது !?"

தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;

"என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே"!

அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;

"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! "

தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.

குழந்தைக்கு ஒன்றுமில்லையா!அப்படியானால் லட்சுமணன்!

பாதையில் கண்ட கீரி நீயோ!

என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!

ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!

அலறித் துடித்தார் அந்தணர்."

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!

மாரல் ஃஆப் தி ஸ்டோரி :

ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.

எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,

முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,

ம்மா ...ரொம்ப வலிக்குமா ?

ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;

சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.

அதெல்லாம் இல்ல...

அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !

ஏன் ?

அவ மகர ராசியாம்

வாட்?!

ம்ம்...டி.வி ல சொன்னாங்க .

சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!

இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...

( !!! )வேறென்ன பல்பு தான் .
அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .
போம்மா நீ பொய் சொல்ற .
நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.
ம்மா ...
ம்ம் ...சொல்லு
ம்மா
சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.
ம்மா ...
கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...
சொல்லிட்டு தூங்கும்மா
சரி கேளு
எப்போ பல்லு விழும்.
அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.
ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.
இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.
இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.
சரி ...சரி தூங்குடா இப்போ .
இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?
சீக்கிரமாவே தான் .
அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?
(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .
ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .
ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.
:((((
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி) நோட்:
நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;
"கடக்" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.
அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .
ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.

கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.

தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.
முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.

சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.
அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?
இதன் செய் முறை:
குருந்தட்டி வேர் - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
சாரண வேர் - 50 கிராம்
மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.
இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.
அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.
பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.

தொடரும்

post by நானானி

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்