சற்று தூரத்தில் இடைவிடாத ராம நாமம் ஒலித்து கொண்டு இருந்தது. அங்கே வானர கூட்டங்கள் எங்கும் நிறைந்து இருந்தது. சற்றே முன்னிரவானாலும்.. ஜெய விஜயீபவ கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டு இருந்தது
மண்ணுலக குபேர பட்டினம் என்றும்
"பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த
மின் கொண்டு வெயிலை சமைத்த
என் கொண்டு இயற்றிய எனத்தெரிகிலாத
வன்கொண்டல் விட்டு மதி முட்டு வன்னமாய்"
என கவிச்சக்கரவர்த்தியால் போற்றிப் புகழப்பட்டதுமான கோபுரங்களையும் மாட மாளிகைகளையும் கொண்டிருந்த இலங்கை நகரம். இப்போது களை இழந்து சுடுகாட்டினைப் போல் காட்சி அளித்து கொண்டு இருந்தது. நிலம் எங்கும் இரத்தத்தால் செந்நிறம் பூண்டிருந்தது. எங்கும் அழுகுரல். தலையற்று உயிரற்று கிடந்த பிணங்களுடன் கை அறுபட்டும் கால் அறுபட்டும் வெறும் உயிர் மட்டும் தாங்கி கிடக்கும் உடல்கள்.
ராவணன் சுற்றிச் சுற்றி வந்தான். வேதங்கள் போற்றும் இமயவாசியை தன் சாம கானத்தால் மகிழ செய்தவன். இப்போது தன் மகிழ்ச்சி இழந்து இருளினும் இருண்ட முகம் கொண்டு இருந்தான். பத்து வகையான செயல்களை தனி ஒருவனாகவும் அதுவும் ஒரே நேரத்தில் செய்யவல்லவனானவனும் அந்த காரணத்தினால் தச கண்ட இராவணன் என்று அழைக்கப்பட்டவனும் இன்று ஒரு வேலையும் செய்ய நாதியற்றுப் போய் சுற்றி வந்து கொண்டு இருந்தான்.
"யாரது அங்கே மேரு மலை போன்று வீழ்ந்து கிடப்பது.. அது தம்பியல்லவா.. என்னருமை கும்பகர்ணன் அல்லவா.... பல நீதிகளை உரைத்தவன் அல்லவா?!..".
அவன் குரல் இராவணன் காதில் இன்னும் ஒலித்து கொண்டு இருந்தது.
"அண்ணா! எதிர் நிற்பது மறையோதும் இறையென்பது நீயறியாததல்லவே! மாற்றான் மனையை கவர்ந்தது அதுவும் அவள் தனியாய் இருந்த நேரத்தில் கவர்ந்தது தவறென்பதை எத்தனை முறை எடுத்துரைத்தோம்... நீ கேட்கவில்லையே, அந்த அறிவிலி தங்கை சொல்கேட்டாய், மதி இழந்தாய். இருந்தும், இப்போது 'மாற்றானிடம் மன்னிப்பு கோரு!' என்று உன்னிடம் நான் கோர மாட்டேன். அதே நேரம் வீணன் வீடணனைப் போல் மாற்றானிடம் போய்விட மாட்டேன். அது என் ஆண்மைக்கு இழுக்கு. உன் உணவில் உயர்ந்த உடம்பு. உண்டுறங்கி வீணில் வளர்ந்த உடம்பு. இன்று உனக்காகப் பயன்படட்டும். தோல்வி உறுதி என்பதை அறிவேன், அறிந்தும் என்னுயிர் பற்றிக் கவலைப்பட மாட்டேன். ஆன மட்டும் எதிரிகளை அழிப்பேன். இது சத்தியம்"
சொன்ன மாதிரியே செய்து இருந்தான். அவன் இறந்த உடலின் கீழ் நசுக்கப் பட்டு இறந்து கிடந்த வானரங்கள் எண்ணிலடங்கா. எத்தனை வீரமாய் போரிட்டு இருக்கிறான். இன்றைய நாளில் எத்தனை உயிர்சேதம் எதிராளிக்கு. இருந்தும் என் கண்ணொப்பான தம்பியை இழந்துவிட்டேனே...
பாவம் அவனுக்கு என்ன தெரியும்.. எதற்காக சீதையை நான் கடத்தினேன் என்று.. உள்ளில் சூர்ப்பனகையின் முகத்தோடு பல எண்ணங்கள் ஓட, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழியப் பார்த்து கொண்டு இருந்தான். கிடைத்தற்கறிய தம்பி அல்லவா பெற்று இருந்தேன். என் வீணாசையால் அவனை இழந்து நிற்கிறேனே.. மற்றவர்களுக்கு நான் பலருக்கு பகையானவனாய் இருந்தாளும் என்னை அண்டியவர்களை நான் அழ விட்டதில்லையே.. என் கண்ணிமை போல் காத்து வந்தவர்களை இன்று மண்ணில் வீழக் கண்டேனே.. மறுபடி பார்த்தான். உற்றார் உறவினர்.. பிள்ளை முதலானோர் வீழ்ந்து கிடந்தனர். சீதையைத் திருப்பி அனுப்பி விடலாமா?? யோசித்தான். என்பொருட்டு இவர்கள் வீழ்ந்தது பொருளற்று போகக் கூடாது. அதுவுமின்றி நிராயுதபாணியாக்கி இன்று போய் நாளை வா என ஏளனம் செய்தவனிடம் எப்படி என் மனம் உவந்து சரணடைவேன். உலகம் பழிக்கதா? ஏழுலகம் ஆண்ட மன்னன் நான். என் உயிர் போயினும் ராமனை எதிர்ப்பேன்.
கலக்கத்துடன் அரண்மனை சென்றான். அதே கலக்கத்துடன் உறங்க முயன்றான். துக்க நேரத்தில் தூக்கம் வருமா என்ன? ஆயினும் கண்கள் சொருகியது போல இருந்தது. எதோ ஒரு காட்சி மனதில் ஓடியது.
**
இரு காவலர்கள் பெரும் வாயிலை காவல் காத்து கொண்டு இருந்தார்கள். கையில் வேலுடன் இருபுறமும் ஒருவர் மாறி ஒருவர் நடந்து கொண்டு இருந்தார்கள். தொலைவில் யாரோ சடாமுடி தரித்து கையில் கமண்டலத்தோடு வேகமாய் வருவது தெரிந்தது. இருவரில் சற்று பெரியவனாய் இருந்தவன் சொன்னான்.
"அங்கே பார் தம்பி.. அந்த ஆளைப் பார்த்தால் பூலோகவாசி போல் தெரிகிறது.. இவருக்கு மனித உடலுடன் வைகுந்தம் வரும் மார்க்கம் எப்படித் தெரிந்த்தது"
"எப்படியோ வந்து விட்டார்.. அதுவா முக்கியம் அவர் உள்ளே போக முயற்சித்தால் என்ன செய்வது"
"அட என்னடா ந... சரியான பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறாயே.. நாம் அந்தப் பரம்பொருளுக்கே காவல் காக்கும் வாயில் காப்பாளிகள்.. நம்மை யார் என்ன செய்துவிட முடியும்?.."
இந்த ஆணவமான பேச்சைக் கேட்டு வாயிலின் உள்பகுதியில் இருந்து னகைப்பொலி கேட்டது.
"பார் எம்பெருமான் என்ன ஆனந்தமாய் கனாக்கண்டு அதை நினைத்துச் சிரிக்கிறார்.. இந்த நேரத்தில் இந்த பரதேசிக்காக வழி விட வேண்டுமா என்ன..."
"அண்ணே சற்றே அடக்கி வாசி... அவர் அருகில் வந்து விட்டார்"
"வரட்டுமே... பார்த்துவிடலாம் "
அகங்காரமாய் சொன்னான்... இறுகக் கட்டிய ஜடாமுடி, கையில் கமண்டலம், உடலில் துவராடை. ஒல்லியானாலும் கடும் தவத்தால் வஜ்ஜிரமாய் மாறியிருந்த உடம்புடன் அந்த முனிவர் தேஜசுடன் காணப்பட்டார்
"யாரைய்யா நீர்?"
"அப்பனே என் பெயர் துர்வாசன், எம்பெருமானை தரிசிக்க வந்தேன்.. சற்று வழி விடு, பார்த்துவிட்டுப் போய்விடுகிறேன்"
"துர்வாசனோ எந்தவாசனோ... இப்போது வைகுந்தவாசனைப் பார்க்க முடியாது போ.. போ"
"இல்லையப்பா.. எம்பெருமானை பார்க்கதானே இத்தனை தூரம் வந்தேன்... தரிசனம் கிடைத்ததும் உடனடியாகப் போய் விடுவேன்.. சற்று ஒதுங்கி நில்!.."
"ம்ம் எச்சரிக்கை போ தூர.., குரங்கு போல் முகம் கொண்ட உனக்கு அரங்கனின் தரிசனம் தேவையா.. எட்டிச் செல்!"
அண்ணே என அழைத்தவன் முனிவரை ஈட்டியால் நெட்டித் தள்ளினான்.
"மூடனே.. கடவுளைக் காண வந்த என்னைச் சற்றும் மதியாமல் எட்டித் தள்ளுவதா...? இது எனக்கு மட்டும் அவமானமில்லை.. என்னுள் உறையும் அவனுக்கும் அவமானம்.. இதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.. மதி இழந்து நடந்த நீங்கள் மண்ணுலகில் பல பிறவி அரக்கர்களாகப் பிறவீர்கள்.."
இருவருக்கும் ஆணவமும் அகங்காரமும் போன இடம் தெரியவில்லை. தாங்கள் மாபெரும் தவறை செய்து விட்டதை உணர்ந்தார்கள். இருவரும் முனிவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள். மன்னிப்பு கோரினார்கள். மனமிறங்கிய முனிவர், "இட்ட சாபம் வீணாகாது.. ஆயினும்.. நீங்கள் ஏழு பிறவிகள் எடுத்து, ஒவ்வொரு பிறவி முடிவிலும் ஆண்டவனால் சம்ஹாரம் செய்யப்ப்டுவீர்கள். ஏழாவது பிறவி முடிவில் நீங்கள் உங்களுடைய பதவியை மீண்டும் அடைவீர்கள்!" என்றார்.
சாமம் முடிந்து பொழுது புலர்ந்ததற்கான மணி அடிக்கபட்டது.. இராவணன் கண்விழித்தான். கண்டது கனவா.. இல்லை நம் முந்தைய வாழ்க்கையா.. ஒருவன் என்னைபோலவே இருந்தானே ஒருவேளை அது நான்தானோ.. அப்படி என்றால் எதிர் நிற்பது சத்தியமாய் இறை தான். அடடா.. அவன் கையால் மாள்வதென்றால். எத்தனை புண்ணியம். இவற்றை எண்ணிக்கொண்டே.. காலைக்கடன்களை முடித்து போருக்கான ஆயத்த உடையுடன் தன் அறை விட்டு வெளி வந்த நேரம் சூர்ப்பனகை எதிர்வந்தாள்.
***
சூர்ப்பனகையின் கண்ணில் தெரிந்தது சோகமா.. இல்லை வெற்றிக் களிப்பா?? தெரியவில்லை.
"தங்கையே இங்கே வா"
இராவணன் அழைத்தான்.
சற்று ஆணவமான தோற்றம். முறம் போன்று விரிந்து கிடக்கும் நகங்கள். பார்க்கையிலே சற்று அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் இருந்தாள்.
"என்னை எதற்காக அழைக்கிறாய்?"
கண்களை சற்று ஆழ்ந்து நோக்கினான். அதில் வெகுநிச்சயமாக உறவுகளை இழ்ந்த சோகத்தையும் மீறிய மகிழ்ச்சி இருப்பதாகவே தெரிந்தது.
"உன்னாசை நிறைவேறி விட்டதல்லவா?"
திகைத்தாற் போல் நின்ற சூர்ப்பனகை பின் கேட்டாள்
"என்னாசையா? உனக்காகவான என்னாசையல்லவா அது?"
"நாடகம் வேண்டாம்.. உன் சபதம் அறிந்தவன் நான்.. உன் சூளுரையைக் காதில் கேட்டவன்..."
"என்ன சொல்கிறாய் இராவணா?"
இத்தனை நாளாய் அண்ணா அண்ணாவென அன்பொழுக அழைத்த வாய் இன்று இராவணா என்றழைக்கிறது. எல்லாம் முடியும் நேரம் எப்படி இருந்தால் என்ன என்று எண்ணிய இராவணன் சொல்ல ஆரம்பித்தான்
"நினைவிருக்கிறதா? கார்த்தவீரியார்சுன யுத்தம்."
அவளின் மறுமொழிக்கும் காத்திராமல் மனதோடு விழிகளின் பார்வையும் எட்டாத ஏதோ உலகில் சஞ்சரிக்க துவங்க... மூடப்பட்ட பாதிக் கண்களுடன் கனவுலகத்தில் இருந்து பேசுபவன் போலப் பேசினான்..
"உன் கணவன் வித்யுத்சுவாவும் அந்த யுத்தத்தில் இருந்தான் எதிரியின் பக்கமாய்.. உன்னருமைக் கணவன் அத்தனை மூர்க்கமாய் எதிர்க்க ஆரம்பித்து படையில் பல பகுதிகளை அழிக்க ஆரம்பித்தான்."
"மறக்க முடியுமா அதை... எத்தனை விவேகமாய் நேர்த்தியாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் என் கணவர்," அவள் நா தழு தழுத்தது.
"ஆம் அந்த யுத்தத்தில் வெகு நேர்மையாய் சண்டையிட்டுக் கொண்டு இருந்த அவனை, அவனின் வீரியமான யுத்தத்தை தாளாமல் பல தெய்வீக அத்திரம் கொண்டு அவனை அழிக்க வேண்டியதாயிற்று.. அதுவும் நேர்மையற்ற முறையில்..."
சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சூர்ப்பனகையின் கண்களில் கொப்பளித்த தீயையும் கூடவே வழிந்த கண்ணீரையும் காணத் தவறவில்லை. இராவணன் தொடர்ந்தான்
"தலைவேறு உடல்வேறு தனியாகக் கிடந்த உன் கணவனை உன் மடிமீது கிடத்தி அழுத காட்சி இன்றும் அந்த நினைவு என்னை விட்டு அகலாமல் நிதம் நிதம் என்னைக் கொல்கிறதே!"
"சபதமிட்டேன்!!!!! உன் அழிவுக்காய் சபதமிட்டேன்..."
வெறி பிடித்தவள் போல சூர்ப்பனகை ஆரம்பித்தாள்..
"அசுர குலமானாலும் என்னையன்றி வேறு பெண்டிரை நோக்காமல் என்னைக் கண்ணின் மணி போலக் காத்துவந்த என் கணவனைக் கொன்று விட்டாய்... நான் அன்று இட்ட சபதம் தானடா இன்று உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது."
"தெரியும் நீ சபதமிடும்போது நான் அங்குதான் இருந்தேன்.. கணவனை இழந்த உன்னைத் தேற்றலாம் என வந்த என்னைக் கிட்டவே நெருங்கவிடாமல் செய்தது உன் சபதம்... அப்பா எத்தனைக் கொடுமையான சபதமிட்டாய்!"
"இராவணா உன் மண்ணாசை, உலகிற்கே அதிபதி என மார்தட்டிக் கொள்ளவாய் உனதாசையினால் தானே இதெல்லாம் செய்தாய்... உனக்கு ஆதரவாய் உன் தம்பி இருக்கிறான், வெற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு படை இருக்கிறது என்ற தைரியம் வேறு... நான் சபதமிடுகிறேன்.. உன்னையும் உன்னைச்சார்ந்தவர்களையும் நிர்மூலமாக்கி பழிக்குப் பழி வாங்குவேன்!' என்றாயே நினைவிருக்கிறதா"
"எதையும் மறக்கவில்லை!"
"பெண்ணாசை காட்டினாய்.. தெரியுமா உனக்கு... முதலில் உன் மகிழ்சிக்காக, உன்மேல் கொண்ட அளவிடா பாசத்தால் இறக்க துணிந்து தான் இச்செயலில் இறங்கினேன்."
சூர்ப்பனகை மவுனித்து இருந்தாள்
"உனக்கே தெரியுமல்லவா பெண்களை அவரனுமதியின்று தீண்டினால் எனக்கு மரணம் சம்பவிக்குமென்று... நீ சொன்ன பெண்ணை தீண்டி நான் உயிர் விட்டு மற்றவர்களின் அழிவைத் தடுக்கலாமென்று தீர்மானித்திருந்தேன்.. சீதையைக் காணும் வரை... கண்டபின் அப்படியே அடியோடு மாறிப் போய்விட்டேன்"
"முதலில் தங்கையின் சபதத்தை நிறைவேற்ற ஆரம்பித்து பின் என்னையே நான் மாற்றிக் கொண்டு என்னுடன் சேர்ந்தாரையும் அழித்து விட்டு தனியனாய் நிற்கிறேன். உன் சபதத்தில் வெற்றியடையப் போகிறாய், இதோ நான் கிளம்பிவிட்டேன்... நிச்சயமாகத் தெரியும் நான் இன்று திரும்பி வரப்போவதில்லை. நீ மட்டும் இருந்து என்ன செய்ய போகிறாய்?"
என்ன சொல்ல வருகிறான் என்று உணரும் முன்னரே இராவணனின் கை வெகு வேகமாக வாளை உருவியது.. "நீயும் எங்களுடன் வரத்தான் வேண்டும் சூர்ப்பனகை... எனக்கு வேறு வழி தெரியவில்லை.." வாள் சுழன்றது... சூர்ப்பனகை தரையில் உயிரற்ற உடலாய் விழுந்தாள்...
**
இதோ எதிர் நிற்பவன் இறையோ இல்லை சாதாரண மானிடனோ அது தேவையற்றது. இப்போதைக்கு என் எதிரி. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தான். விபீடணன் அங்கே எதிர் தரப்பில் நின்றிருந்தான். இராவணனுக்கு ஒருபுறம் வேதனையாகவும் மறுபுறம் மகிழ்ச்சியாகவும் விபீடணனைப் பார்த்தான். எதிரியுடன் போய் சேர்ந்து விட்டானே என்ற வேதனையை விட தன் குலம் விளங்க இவனாவது பிழைக்கட்டும் என்ற மகிழ்ச்சி.
கரிய பெருமாளைப் பார்த்த இராவணன் இரவின் வண்ண முடையவன். 'அட, இவனுக்கும் என் பேர் தான் போலும்!' என்று நினைத்து சற்றே இராமனை நோக்கிக் கர்ஜித்தான் இராவணன்.
"ஹ¤ம், எடு உன் வில்லை! தொடு சரத்தை!! "
கடுமையான தேவாசுரப் போரொத்த யுத்தம் நிகழ்ந்து மறுபடி தன் ஆயுதங்களை இழந்து நின்றான் இராவணன்.
இந்தத் தடவை போகமாட்டேன் அவன் இல்லையேல் நான் ஒருவர் மட்டுமே திரும்ப வேண்டும். பக்கத்தில் உடைந்த தேரினுள் இருந்த வில்லை எடுத்தான்.
மறுபடி சொல்லொணா வன்மையுடன் போர் தொடங்கியது. இராமன் கடைசியாய் தன் இராமபாணமெடுத்தான்.
இராவணன் தன் கையினின்று வில்லைக் கீழே வைத்துவிட்டு மானசீகமாக ஒருமுறை கனவில் வந்த அந்த இறையை நினைந்து இராமன் மேல் அம்பெய்ய முற்பட்டான். அம்பு அவன் கைவில்லில் இருந்து புறப்படும் முன்னமே பேரிடி தாக்கியதைப் போல உணர்ந்தான்.
இராமனைப் பார்த்துக் கொண்டே கண் மூடினான். உடலில் இருந்து யாரும் எளிதில் அறியாவண்ணமாய் கிளம்பிய ஒரு ஜோதி இராமனை ஒருமுறை சுற்றி வந்து உயர உயரக் கிளம்பியது.
கதாசிரியர்: ஜீவ்ஸ்
பிரசூரித்தது: புதுகைத் தென்றல்
**************************************************
எனைத்துணையர் ஆயினும் எண்ணாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்
சிறிதும் நினைத்துப் பார்க்காமல் மாற்றான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு
புகழும் பெருமையும் உடையவனாய் இருந்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை. புகழும்
பெருமையும் ஒழுக்கத்தால் வருவது. ஒழுக்கம் தவறுதல் உயிரை விடுதலுக்குச்
சமமாகும்
குறள் வழிக்கதைகள்
5 years ago
10 comments:
ஜீவ்ஸ் அண்ணே.... கதை நல்லா இருக்கு...
:P
Hmm.. ippadi ellam kadha solli engala yaarum valakkaliyae :( seri paravaa illa.. ippo padichikkarom.. innum naanga chinna pullainga dhaane ;)
நல்லா இருக்கு கதை..இதே போலத்தானே சகுனிக்கும் ஒரு கதை இருக்கும்.. சரியா ஞாபகம் இல்லை.
"ரகசியமாய்.... ஒரு ரகசியம்"
ஆமாம். இக்கதையில் பல ரகசியங்கள்.. தெரியாத விஷயங்கள் அறியத் தந்துள்ளீர்கள். தங்கை சூர்ப்பனகையுடனான பகையும் அவளை இராவணனே அழித்ததும் நான் அறியாதது.
கதை அழகான நடையில் அற்புதமாக செல்கிறது. குறிப்பாக கும்பகர்ணனின் குரல்:
//அந்த அறிவிலி தங்கை சொல்கேட்டாய், மதி இழந்தாய். இருந்தும், இப்போது 'மாற்றானிடம் மன்னிப்பு கோரு!' என்று உன்னிடம் நான் கோர மாட்டேன். அதே நேரம் வீணன் வீடணனைப் போல் மாற்றானிடம் போய்விட மாட்டேன். அது என் ஆண்மைக்கு இழுக்கு. உன் உணவில் உயர்ந்த உடம்பு. உண்டுறங்கி வீணில் வளர்ந்த உடம்பு. இன்று உனக்காகப் பயன்படட்டும்."//
அருமை.
நல்ல முயற்சி சிறப்பாக இருக்கிறது... நீளம் அதிகம்.. அடுத்த முறை கொஞ்சம் கொஞ்சமாக பிச்சி பிச்சி போடவும்....
நன்றி மக்களே,
இபப்டி எல்லாம் இராமயணத்துல இருக்கான்னு தெரியாது. ஆனா பெரும்பாலானவை என் கற்பனை.
அன்புடன்
ஜீவ்ஸ்
/முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்லா இருக்கு கதை..இதே போலத்தானே சகுனிக்கும் ஒரு கதை இருக்கும்.. சரியா ஞாபகம் இல்லை.//
ஆமா. ஏகலைவன் கதைல லேசா இதை கோடி காமிச்சிருப்பேன். அதை வச்சும் கதை எழுதலாம். நிறைய படிக்கனும்.
// ராமலக்ஷ்மி said...
"ரகசியமாய்.... ஒரு ரகசியம்"
ஆமாம். இக்கதையில் பல ரகசியங்கள்.. தெரியாத விஷயங்கள் அறியத் தந்துள்ளீர்கள். தங்கை சூர்ப்பனகையுடனான பகையும் அவளை இராவணனே அழித்ததும் நான் அறியாதது.
//
இராமலக்ஷ்மி அக்கா!,
ஏற்கனவே சொன்னது போல பெரும்பாலானவை என் கற்பனை. சூர்ப்பநகையின் கணவன் கார்த்தவீரியார்ஜ்ஜுன சண்டையின் போது கொல்லப்பட்டதாக படித்தேன். மிச்சமெல்லாம் அதை சூழ்ந்து பின்னப்பட்டது.
நன்றி
விக்கியண்ணே, அடுத்த தடவை நீங்க சொன்னாப்பல செஞ்சுடலாம்ணே.
oru chinna correction. thurvasar sabam koduthathu 3 jenmathuku vishnu ku ethiriya irunthu, vishunuval vatham seiyapattu vaikundam varanum or 7 piravi vishnu ku nanbana iruntu, sevaigal seithu vaikundam varanum. Jaya and Vijaya (kavalali of vaikundam) chosen the first option. So it is 3 births not 7.
The three births are as follows: hiranyakshan (killed in varaha avatar), hiranyakasipu (killed in narasimha avatar), ravanan, kumbakarnan, kamsan, sisubalan (killed by rama and krishna avatar).
Post a Comment