ஈகைத் திறன்
கோதையூர் என்ற ஒரு ஊரை வெகு நாட்களுக்கு முன் கோதண்டராமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.
மன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அதோடு ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எல்லாம் உடனுக்குடன் செய்து கொடுப்பார். கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குவார். இதனால் மன்னரின் புகழ் எல்லா நாட்டிலும் பரவத் தொடங்கியது.
வேங்கை நாட்டு மன்னர் வேழவேந்தன் கோதண்டராமனைக் கண்டு பொறாமையடைந்தார். அவரும் என்னைப் போன்ற மன்னர்தானே. அவருக்கு மட்டும் எப்படி இந்தப் பேரும்புகழும் கிடைத்தது? என்று வியப்போடு தனது மந்திரியாரான காளதீபனிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்.
மந்திரியார் காளதீபன் வேழவேந்தரின் கஞ்சத்தனத்தையும், கொடூர குணத்தையும் நன்கு அறிவார்.
நம் மன்னரைத் திருத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவர். மன்னரை வணங்கி அரசே! மன்னர் கோதண்டராமனுக்கு தாங்களும் இணையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஏற்படாத பேரும், புகழும் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க நீங்களும், நானும் மாறுவேடம் அணிந்து அவர் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நான் சொன்னபடி நீங்களும் அங்கே நடிக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நாம் இன்றே கோதையூருக்குப் புறப்படலாம் என்று கூறினார். மன்னர் வேழவேந்தனும் ஆர்வத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் ஏழை விவசாயியைப்போன்று மாறுவேடம் அணிந்து கொண்டு கோதையூருக்குப் புறப்பட்டார்கள்.
அரண்மனையில் நுழையும் நேரம் காவலர்கள் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார்கள்.
"ஐயா! நாங்கள் இருவரும் மிகவும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கின்றோம். மன்னரிடம் உதவி பெற்று எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளோம்" என்று கூறினார் மாறுவேடத்தில் இருந்த காளதீபன்.
காவலர்கள் இருவரையும் தர்பாருக்கு அழைத்துச் சென்றார்கள்.
அந்த நேரத்தில் தர்பாரில் மன்னர் இல்லை. மன்னர் அவசர வேலை காரணமாக தன் அறையைவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.
காவலர்கள் மன்னரை வணங்கி அவர் காதருகே ஏதோ கூறினார்கள்.
மன்னர் புன்னகைத்தபடி "நண்பர்களே! நீங்கள் இருவரும் என்னிடம் உதவிபெற வந்திருப்பததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதோ எனது முத்துமாலை இரண்டை உங்கள் இருவருக்கும் பரிசளிக்கிறேன்" என்று கூறியவாறு தன் கழுத்தில் கிடந்த இரண்டு முத்து மாலைகளையும் மாறுவேடத்தில் இருந்த மன்னர் வேழவேந்தனிடமும், மந்திரியார் காளதீபனிடமும் கொடுத்து விட்டுச் சென்றார்.
நினைத்த மாத்திரத்தில் தர்மம் செய்கின்ற மன்னரின் கொடைத் தன்மையைக் கண்டு மன்னர் வேழவேந்தன் வியப்புற்றார்.
இருவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மந்திரியார் காளதீபன் அரசே இப்போது கவனித்தீர்களா மன்னர் கோதண்டராமனின் தர்மம் செய்யும் முறையே, அவரை புகழ் உச்சியில் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னருக்கு ஈகை திறன் மிகவும் முக்கியம் என்றார்.
மன்னர் வேழவேந்தன் அன்றுமுதல் தன்னுடைய பொறாமை எண்ணத்தையும் கஞ்சத்தனத்தையும் விட்டுவிட்டார். தன் நாட்டு மக்களுக்கு பல உதவிகளையும் செய்யலானார். மன்னர் வேழவேந்தனின் செயல்களை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
தர்மம் செய்து வாழ்பவர்கள் எல்லா நன்மைகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.
.
vandhaan vadivelan
1 year ago
1 comments:
நன்றி வித்யா
Post a Comment