"உங்க பொண்ணு என்ன வகுப்பு படிக்கிறா?"
"இந்தம்மா சுஜா, இங்க வா..என்ன படிக்கிற மாமாகிட்ட சொல்லு..", "அதல பாருங்க..இவ என்ன படிக்கிறான்னே தெரியல..4ஆவதோ 5ஆவதோ...இது எல்லாம் என் மனைவி சமாச்சாரம்..எல்லாப் பொறுப்பும் அவகிட்ட விட்டாச்சு..நமக்கு நேரம் எங்க இருக்குங்க?"
இப்படி ஒரு அப்பா..
"என்ன ரேங்க் ராஜான்னா கேட்ட? ஏ ராஜா..சித்தி கேக்குறாங்க வந்து சொல்லுப்பா..நான் என்னத்தக் கண்டேன்? நா என்ன பெரிய படிப்பா படிச்சுருக்கேன்..எல்லாம் அவுக அப்பாதான் பாத்துப்பாக..இதெல்லாம் அவுக அப்பா சமாச்சாரம். நமக்கு என்ன தெரியும்?"
இப்படி ஒரு அம்மா..
இப்படியும் நடக்கிறது. குழந்தைகளின் உலகத்தில் இன்னும் காலடி எடுத்து வைக்காத பெற்றோரும் சிலருண்டு. தத்தம் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குபவர்கள் பிள்ளைகளுக்காக அன்றாட அலுவல்களுக்கேயன்றி நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகளின் உலகம் நம்முலகத்தினின்று வேறுபட்டது. நமக்குத் துச்சமென்பது அவர்களுக்கு உச்சம்..இதையே மாற்றியும் சொல்லலாம். இதைச் சரிவரப் புரிந்து கொள்வது அவசியம்.
இயந்திரகதி உலகமாகிப் போய்விட்டது இன்றைய உலகம். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக் குடும்பங்கள் தீவுக் குடும்பங்கள் என்று போய்க் கொண்டிருக்கிறோம். வேலை நிமித்தம் புலம் பெயர் வாழ்வு ஒரு பக்கம். நேரமில்லை நேரமில்லை என்று கூறி ஓடிக் கொண்டே இருக்கிறோம். குழந்தைகளுக்கான முன் மாதிரி இன்று பெற்றோர் மட்டும்தானே.
எது எப்படியோ, குழந்தை வளர்ப்பில் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குவதுதான் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம். இதற்கொன்றும் பெரிய படிப்போ, நாளின் பல மணி நேரங்களோ தேவையில்லை. குழந்தைகளின் ரசனை, ஈடுபாடு, திறமை, முயற்சித்திறன் இப்படி ஒரு குழந்தையின் பலவிதமான செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள, அவர்களைப் படிக்க அவர்களுக்காய்ச் சற்று நேரம் ஒதுக்குவது அத்தியாவசியமாகிறது.
இந்த வயதுதான் என்றில்லை..ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் தேவைகளும் செயல்பாடுகளும் மாறி மாறி அமையும். இதனைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
சில டிப்ஸ்:
1. அப்பா, அம்மா இருவரின் கூட்டுப் பங்களிப்பு - குழந்தையைப் பற்றி அ முதல் ஔ வரை
அறிதல் மிக முக்கியம். அவரவர் பார்வையில் குழந்தையைக் கண்காணிக்க நேரம் இருவருமே ஒதுக்குவது மிக முக்கியம்.
2. தினமும்..அல்லது அவ்வப்போது குழந்தையைப் பற்றிய புரிதலைத் தம்பதிகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்தல். சிறிய விஷயமென்று எதையும் ஒதுக்குதல் கூடாது.
3. குழந்தையின் ஈடுபாடுகளுக்கேற்ற சூழல் உருவாக்கிக் கொடுத்தல். உதாரணமாக ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் என்றால் அதற்குச் சமயம் ஒதுக்கிக் கொடுப்பது, அவர்கள் வேலைத்திறனை ஊக்குவிப்பது.
4. வேலைகள் இருந்து கொண்டேதானிருக்கும். இதையும் ஒரு வேலை என்றும் கடமை என்றும் நினைத்துச் செயல்படுங்கள்.
***************************************************
தோழி பாசமலரின் பதிவை மீள்பதிவாக போட்டிருக்கிறேன்.
vandhaan vadivelan
1 year ago
6 comments:
நல்ல போஸ்ட் தென்றல்.. கொஞ்ச நேரமா இருந்தாலும் சரியாப்பயன்படுத்தினா போதுமானது..அழகா சொல்லி இருக்காங்க பாசமலர்.... எத்தனை தடவை வேணா இதை மீள் பதிவு செய்யலாம்.. :))
தேவையான பதிவுதான். ஆனாலும் அதிக அக்கறை காட்டினாலும் சில சமயம் குழந்தைகள் எதிர்மறையாகச் செயல்படுகிறார்கள். குழந்தைகளின் மனநிலையை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டே வரணும். அதுக்கான நேரம் பெற்றோரிடம் இருக்கா இன்றைய சூழ்நிலையில்? அதுவும் ஐடி துறைப் பெற்றோரிடம்?? இதற்காகவே குழந்தைப்பிறப்பைத் தள்ளிப் போடும் தம்பதிகளைக் காண முடிகிறது. குழந்தைகள் வளரும் வரையிலும் இரு தரப்புப் பெற்றோரும் மாறி மாறிப் போய் இருந்து கவனிக்கவும் வேண்டி இருக்கு. சில பெற்றோரால் முடியாது. அப்படிப் பட்ட சூழ்நிலையில் குழந்தையை டே கேர் எனப்படும் க்ரெச் சில் விடவேண்டும். அந்தசூழ்நிலைக்குப் பழகும் குழந்தைகள் தனித்தே இயங்கப் பயிற்சி அளிக்கப் பட்டாலும் உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் வலிமையற்றே இருக்கின்றனர். அதிலும் பாதுகாப்பு உணர்வு குறைவாய் உணருகின்றனர். இந்த விஷயத்தில் பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருக்கலாம்.
மீள் பதிவாயினும் மிகவும் அவசியமான பதிவு. இதையெல்லாம் கூட இருந்து செய்யமுடியவில்லையே என்ற ஏக்கமும் வருகிறது.
நல்ல ஒரு பகிர்வு.
நேரம் மிக முக்கியமானது வாழ்வில்.
நன்றி.
நன்றாக உள்ளது
நான் இந்த பதிவை எனக்கு தெரிந்த அம்மக்களுக்கு மெயில் பண்ணுறன்
அனைவருக்கும் நன்றி
Post a Comment