முதல் பகுதி இங்கே
தற்காப்பும் அதன் அவசியமும்
என் முந்தைய பதிவில் ஒரே நாளில் இரு கயவர்களையும் இரு நல்லவர்களையும் எதிர் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன்.
இன்றும் கூட கராத்தே, ஜூடோ, முகத்தில் குத்துவது, அல்லது கால்களுக்கு இடையில் உதைப்பது போன்றவற்றை தற்காப்பு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். கராத்தே ஜூடோ போன்றவை தன்னம்பிக்கை வளரும். உண்மைதான். ஆனால், நிதர்சனத்தில்??? இதெல்லாம் சினிமாவிலோ டீவீ சீரியல்களிலோ பலன் கொடுக்கலாம். அரிதாகவே, நிஜத்திலும் சில நேரங்களில் உதவலாம்...
ஒருவேளை அடிபட்டவன் ஆக்ரோஷமடைந்து அடித்தவள் மீது பாய்ந்தால்? இவளை விட பலம் பெற்றவனாக இருந்தால்? அவனும் கராத்தே ஜூடோ தெரிந்தவனாக இருந்தால்? ஒருவனுக்கும் மேற்பட்டவர் இருந்தால்?
அடிதடி சண்டை போடுவது, வாயால் கத்திக் கொண்டு உதவி கேட்டுக் கொண்டு நிற்பதை விட, துரிதமாக ஆபத்து நிறைந்த அந்த இடத்திலிருந்து ஓடுவது / வெளியேறுவது எப்படி என்று யோசித்து செயல் பட வேண்டும். எதிராளியை அடிப்பது நிச்சயம் பல நேரங்களில் உதவுவதில்லை. இது வன்மமாகக் கூட மாறி மென்மேலும் ஆபத்துக்களை உருவாக்கலாம். ஆபத்தை எதிர்கொண்டு இன்னொரு ஆபத்தை உருவாக்குவதை விட ஆபத்தை தவிர்ப்பது, அந்த இடத்தை விட்டு ஓடி விடுவது சாலச் சிறந்தது.
தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் ஆண்களுக்குப் பெரும்பாலும் பாலியல் நோக்கமே இருக்கிறது. யாரேனும் உங்களைத் தாக்கியோ / மிரட்டியோ உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழலில், நீங்கள் இடத்தை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில் அவன் வேறு ஒருவரை நாடுவானே தவிர, சினிமா மாதிரி உங்களையே துரத்திக் கொண்டிருக்க மாட்டான். அவனது பாலியல் நோக்கம் (வெறி) கூட அந்த நிமிட மனப் பிழற்வுதான். ஏற்கனவே உணர்ச்சி வசத்தில் இருக்கும் அவனுக்கு அவன் குறிக்கோளை அடைய என்ன வேண்டுமாலும் செய்துவிடும் மனப்போக்கிலேயே இருப்பான். அதனால் உங்கள் மனதுக்கு ஆபத்து என்று படும் பட்சத்தில் 'வீரம்' காட்டுவதை விட 'விவேகமாக'வும் அதி வேகமாகவும் செயல்படுங்கள். எதிராளியின் பார்வையில் இருந்து மறைவதை முதலில் முயற்சியுங்கள். தனிமையான இடத்திலிருந்து கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று விடுங்கள். வேறு வழியே இல்லாத பட்சத்திலேயே சண்டையில் இறங்கலாம்.
தற்காப்பு என்றால் என்ன? தற்காப்புக்கு முதல் தேவை மன உறுதியும் சமயோசிதமும். இவை இரண்டும் ரொம்பவே அவசியம். ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மன உறுதி இல்லை என்றாலோ, ஆபத்து வரும் சமயத்தில் துரிதமாக முடிவெடுத்து, தகுந்தவாறு செயல் பட முடிய வில்லை என்றாலோ தற்காப்புப் பயிற்சிகளால் பயனேதும் இல்லை. உங்கள் உள்ளுணர்வுகளின் ஒவ்வொரு செய்திக்கும் செயல் படுங்கள். பெரும்பாலும் உள்ளுணர்வு தவறுவதே இல்லை.
இது முன் பின் தெரியாத அன்னியனால் வரும் ஆபத்தினை சமாளிப்பது. சரி. டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும், அல்லது பெரும்பாலும் எல்லா வயதுடைய பெண்கள் சிலருக்கு அவர்கள் நண்பர்களால் / மிகவும் நன்கறிந்த ஆண்களாலேயே ஆபத்து நேர்கிறது. அப்போது என்ன செய்வது?
பாலியல் தாக்குதல் எல்லாமே பெரும்பாலும் அந்த நிமிட மனப் பிழற்வு தான். ஆனால் ஏற்கனவே நன்கறிந்த ஆண்களால் தாக்குதலுக்கு ஆளாவது அந்த ஆணால் 'முன்பே' திட்டமிடப்பட்டது. அந்தப் பெண்ணின் தனிமை, வீட்டில் எப்போது யாரும் இருக்கமாட்டார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பான். இம்மாதிரி நிகழ்வுகள் எப்போதும் ஒரு அறையோ இல்லை பெண்ணின் வீட்டிலேயோ கூட நடக்கலாம். இதனால் இம்மாதிரிச் சூழ்நிலையில் முடிந்தவரை பதட்டப் படாமல், புத்திசாலித்தனமாகப் பேசி கதவுகளைத் தாண்டி வெளியேற முயற்சியுங்கள். தோற்று விட்டோம் என்று நாமே நம்பாத வரை, யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். எந்நிலையிலும், இம்மாதிரிச் சூழலில் உங்கள் கோபத்தையோ, இயலாமையோ வெளிக்காட்டுவது உங்களைத் தோற்கச் செய்யும்.
உங்களைக் கோபமூட்டுவதன் மூலம் அவன் நோக்கம் எளிதில் நிறைவேறும் என்பதை எதிராளி நன்கறிவான். உங்கள் கோபம் உங்கள் "ரெஸ்பான்ஸ்" ஆகிறது. அதே போல அவனை சண்டைக்குத் தூண்டுவதோ, கோபமூட்டுவதோ உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதனால் உணர்ச்சி வசப்படாமல், மெதுவாக அத்தகைய இடத்திலிருந்து வெளியேறுவதை குறித்தே சிந்தித்து செயல்படுங்கள்.
வழிப்பறி, திருடன் போன்றவரிடம் மாட்டிக் கொண்டால் அவனிடம் பர்ஸ் நகைகள் போன்றவற்றை கொடுத்து விடுவது தப்பிப்பது சாலச் சிறந்ததாகும். அவன் நோக்கம் பணம் பொருள் என்பதே. இவை சண்டைபோடுவதால் அவன் நோக்கம் மாறிவிடக்கூடும். பொருளை இழப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
இம்மாதிரி தாக்குதலுக்கு ஆளாகும் போது முடிந்த வரை உங்கள் உயிர், சுய மரியாதை, ஆகிவற்றைக் காப்பதிலே முழு கவனமும் இருக்கட்டும். தாக்குபவனைத் திருப்பித் தாக்குவது பெரும்பாலும் அவனை ஆக்ரோஷப்படுத்துகிறது. நீங்கள் பாதுகாப்பென்றும் கருதும், உள்ளுணர்வு நம்பும் எந்த ஒரு அன்னியரிடமும் உதவி கேட்கத் தயங்காதீர்கள். அதற்காக முன் பின் தெரியாத அன்னியரின் கார் போன்ற வாகனங்களில் முழுமையாக நம்பி, தனியாகப் பயணிக்க வேண்டாம்.
உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிருங்கள் - முழுமையாக.
- தனியாக பயணிக்கும் போது, அந்த இடம், பயணிக்கும் சாலைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருங்கள்.கூட்டத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தனிமை படுத்திக் கொள்ளாதீர்கள். இலக்கிலாத வழிகளில் பயணிக்க வேண்டாம். அதே போல, நெடுந்தொலைவு / ஏற்கனவே போகாத இடங்களுக்கு தனியாக பயணிக்க வேண்டாம் / தவிருங்கள்.
- எப்போதும் குறுக்கு வழிகளில், இருட்டான சாலைகள், யாரும் பயன்படுத்தாத சந்துகளில் செல்லாதீர்கள்.
- வீட்டில் இருந்தால் உங்கள் பெற்றோர், ஹாஸ்டல் / விடுதி போன்ற இடங்களில் இருந்தால் உங்கள் தோழிகளுக்கு நீங்கள் எங்கே போகிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதை தெளிவாகக் கூறுங்கள்.
- டேட்டிங் (dating) போன்றவைகளுக்குச் சென்றால், முடிந்தவரை உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம் யாருடன் போகிறீர்கள் என்பதை பகிருங்கள். என்னதான் அந்த நண்பர் நம்பகமானவராக இருந்தாலும், தனிமையில் இருக்கும் போதோ, டேட்டிங் செல்லும் போதோ, வெளியிடங்களில் / மூடிய அறைக்குள் குளிர் பானங்களை அருந்த வேண்டாம் / உணவு உட்கொள்ள வேண்டாம்.
- ஹாங்-அவுட் (hang-out), ஆடல்/பாடல் நிகழ்ச்சிகள், திரையரங்குகள், விருந்துகள், போன்ற பெருந்திரளான மக்கள் வரும் பொதுவிடங்களுக்குப் போகும் போது முழுமையான உடையணிந்து (பெண்கள் மன்னிக்க, ஆனால் கவனம்) செல்லவும். நடைமுறையில் உடல் பாகங்கள் தெரியுமாறு உடையணிந்த பெண்களே அதிகளவில் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இம்மாதிரி இடங்களில் தான் வாய்ப்பு தேடி அலையும் கயவர்கள் அதிகம் நடமாடுகிறார்கள். சமூகம் / சில ஆண்கள் மாறவில்லை, மாறவேண்டும், என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதுவரை, நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது நலம். அதே போல, நீங்கள் இருக்கும் குழுவினரோ, அல்லது உங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் நபர்களோ (ஆண்கள் பெண்கள் இருபாலாரும்தான்) பொறுப்பற்ற அல்லது வரம்பு மீறிய பேச்சுக்கள் அல்லது செயல்களில் ஈடுபட்டால், வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று விடுங்கள். ஆபத்து வரும் வரை காத்திருக்க வேண்டாம். இது உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைத் தடுக்கும்.
- ஆங்கிலத்தில் vulnerable target என்பார்கள். அதாவது எளிதில் தாக்கக்கூடிய இலக்கு. இவர்களைத் தேடித்தான் "அவர்கள்" அலைவார்கள். இவர்கள் அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். எப்படி? நண்பர்கள் அல்லாத அன்னியர்களோடு - தொட்டு பேசுவது, அவர்கள் அளிக்கும் மது / குளிர் பானங்கள் / உணவுகளை ஏற்பவர்கள், இவர்களை மிக விரைவிலேயே தாக்குவார்கள். உங்கள் தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் வெளிக்காட்டுங்கள். அவமரியாதையான / மரியாதைக்கு குறைவான பேச்சுக்களை ஒரு போதும் அனுமதிதோ சமரசம் செய்தோ பொறுத்துக் கொள்ளாதீர்கள். "உங்கள் எல்லையை மீறவேண்டாம்" என்று முதலிலேயே பொறுமையாக அதே சமயம் உறுதியான குரலில் கூறி விட்டால், 99% ஆபத்துக்களை நீங்கள் முளையிலேயே கொன்றதாக ஆகிறது. பெரும்பாலும் அப்போதே 'கயவர்கள்' வேறு நபரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். (ஐயோ! அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்)
- அம்மாக்களே!!! தயவு செய்து பதிமூன்று வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கே ஓரளவு விபரம் தெரியும் வரை, சினிமாவில் அணிவிப்பது போன்ற உடைகளை (முதுகு முழுதும் திறந்து / தொப்புள் தெரியுமாறு / மினி போன்ற உடைகள்) அணிவித்து மகிழ வேண்டாம். அதுவும் பொதுவிடங்களில், பேருந்துகளில் பயணிக்கும் போது, யாரேனும் தவறான எண்ணத்தோடு bad touch செய்தால் பாவம் குழந்தைகளுக்குச் சொல்லவும் தெரியாது. நீங்களும் கண் கொத்திப் பாம்பாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா? பயணங்களில் பான்ட் ஷர்ட் / சுடிதார் போன்ற எளிய பாதுகாப்பான உடைகளையே நீங்களும் அணியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் அணிவித்துப் பழக்குங்கள். மற்ற உடைகளை வீட்டிலோ இல்லை மிகவும் நம்பிக்கையான இடங்களுக்கோ போகும் போது அணிவித்து மகிழுங்கள்(!!).
- கைபேசியில் shortcut program-கள் செய்து ஒரே நம்பரை அழுத்துவதனால் பெற்றோர் / கணவர்/உறவினரை அழைக்கும் வண்ணம் ஏது செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
- உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து, முதல் முறையே, உங்கள் பெற்றோர் / பள்ளி / கல்லூரி / போலீஸ் ஆகியவர்களிடம் பகிர / முறையிட (complaint) தயங்காதீர்கள். யாரும் தப்பா நினைப்பாங்களோ அல்லது நம்மை கெட்டுப் போனவள்-ன்னு நினைச்சிருவாங்களோ அல்லது "ரொம்ப நெருங்கிய உறவுக்காரர் / நண்பர் ஆவாரே.. அவர் உறவு / நட்பு பிரிஞ்சுடுமோ" என்றெல்லாம் வீண் கற்பனை செய்து பயப்படாதீர்கள். (பெற்றோரே. நீங்களும் இத்தகைய குறைகளைக் காது கொடுத்து கேளுங்கள். உங்கள் பெண்ணை முழுமையாக நம்புங்கள்)
- முறையான தற்காப்புக் கலை ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஓடிப் போய் தப்பிக்க முடியாத நிலையில் கை கொடுக்கும்.
உங்கள் குழந்தைகளுக்குப் பாலியல் குறித்த அந்தந்த வயதிற்கேற்ற செய்திகளை மெல்ல மெல்ல கொடுத்துக் கொண்டே இருங்கள்.
"பாய்ஸ் ஏம்மா பாய்ஸ்ஸா இருக்காங்க. அவங்களும் ஏன் கேர்ள்ஸா இல்ல? அவங்களாம் ரவ்டீஸ்ஸா?" என்ற கேள்விக்கு ஒரு தாயாக / தந்தையாக என்ன பதில் அளிப்பீர்கள்?
நான் "ரவுடின்னா என்னம்மா?" என்றேன்.
"அடிப்பாங்க. கெட்ட வார்த்தை சொல்வாங்க. சாக்லேட் ஸ்நாக்ஸ் எல்லாம் யாருக்கும் ஷேர் செய்யவே மாட்டாங்க... அவங்களே ஸ்விங்-ல (ஊஞ்சல்) விளையாடிண்டே இருப்பாங்க. அவங்கதான் ரவ்டீஸ் ..." என்றாள்.
"அப்பா பாயா கேர்ள்-ளா?" என்றேன்
"பாய்தான்...." என்றாள்.
"தாத்தா ?"
"தாத்தாவும் பாய்தான் - பின்னல் இல்ல ...வேஷ்டி கட்டிகாரங்க, பான்ட் ஷர்ட் போட்டுக்கறாங்க."
யோசிக்க ஆரம்பித்தாள் "அப்பா தாத்தால்லாம் ரவ்டீஸ் இல்லம்மா." என்றாள். கொஞ்ச நேரம் கழித்து "ஆனா விஷால்-லும் நிஷாந்த்-தும் இருக்கான்ல ... இவங்கதான் கேர்ள்-சை அடிப்பாங்க. ஸ்நாக்ஸ்-சை எல்லாம் பிடுங்கி சாப்ட்ருவாங்க... மிஸ் அடிச்சாக் கூட பயப்படவே மாட்டாங்க. இவங்க மட்டும் தான் ரவ்டீஸ் மா... "
(உடனே ஸ்கூல் மிஸ்ஸிடம் பேசி ஸ்நாக்ஸ்/அடிதடி பிரச்சினையை ரிப்பேர் செய்தாகி விட்டது. ப்ரைமரி ஸ்கூல் மிஸ்ஸுகள் ரொம்ப பாவம்ங்க )
ஒரு முறை என் கணவரின் சக பணியாளருக்கு குழந்தை பிறந்திருந்தது. பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்ற போது தர்ஷிணியும் வந்திருந்தாள். அங்கு வந்திருந்த ஒருவர் "என்ன குழந்தை" என்று கேட்டார். குழந்தையின் தாய் "கேர்ள் சைல்ட்" என்றார். தர்ஷிணி மெல்ல என் காதில் "பேபிக்கு பின்னல் தோடு எல்லாம் இல்லையே? பாய் மாதிரி மொட்டையா இருக்கே. எப்படிம்மா பொண்ணுன்னு கண்டு பிடிச்சா அவ அம்மா?" என்றாள்.
000 -- தொடரும் -- 000
அடுத்து:
3. ஆபத்து என்று எப்படி அறிவது?
4. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
5. கற்பழிப்புக்கு ஆளானால்?
(நான் எதையும் தவறாக / தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தலாம். பிறரை அவமதிக்காத / புண்படுத்தாத / ஆரோக்கியமான விவாதங்கள் செய்யலாம்.)
.
6 comments:
அனானி கமெண்ட் அழிக்கப் பட்டு விட்டது.
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
தேவையான ஒரு நல்ல இடுகை நண்பா.
பகிர்வுக்கு நன்றி :-)
வித்யா, பாராட்டுக்கள். எல்லாமே அருமையான, அவசியமான வழிமுறைகள். பெண்குழந்தைகளின் உடையும் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியம்.
//தனிமையான இடத்திலிருந்து கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று விடுங்கள்.//
எப்பொழுதுமே கடைபிடிக்க வேண்டியது!!
மொத கமெண்டே அனானி போணியா? வாழ்த்துக்கள்!!
நன்றி ராடான். டிவி-சினிமா மீதும், திரை சம்பந்த மீடியாவிற்கு வருவதிலும் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் இல்லை. நன்றி.
நன்றி சிங்கக்குட்டி.
நன்றி ஹுசைன்னமா.
-வித்யா
சொல்ல பட்டிருக்கும் எல்ல விசயங்களும் மிக பயனுள்ளவை...மிகவும் அவசியமான பதிவு...வாழ்த்துக்கள்...
Post a Comment