தவறு.8.
குழந்தை விரைவில் பேச வேண்டும் என்று நினைப்பது. அதற்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்வது.
காரணம்
விரைவாக அதாவது 1-2 வயதில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் அதிக நாள் 4-5 வயது வரை கூட தெளிவாக பேசாமல் உளறும். மெதுவாக அதாவது 3-4 வயதில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் ஆரம்பத்திலேயே தெளிவாக பேச ஆரம்பிக்கும். ஆகவே மெதுவாக பேச ஆரம்பிப்பதே நல்லது.
தீர்வு
குழந்தையை மருத்துவரிடம் எப்பொழுது அழைத்துச் செல்ல வேண்டும்.
1. நாம் சொல்லும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாத குழந்தைகள். அதாவது 1 வயதில் ஒரு பொருளை எடுத்து வர சொன்னால், அதைக்கூட புரிந்துகொள்ளாத குழந்தைகள்
2. 1 வயதில் ஏதேனும் 2 உறவுப் பெயர்களைக்கூட (உதாரணம்: அம்மா, அப்பா) சொல்ல முடியாத குழந்தைகள்.
நன்றாகவும் விரைவாகவும் பேச வைப்பதற்கு சில யோசனைகள்
1. மற்ற குழந்தைகளுடன் அதிக நேரம் பழக விடுங்கள்.
2. 2 அல்லது 3 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை அதிகம் சொல்லிக் கொடுங்கள்.
3. பாடல்களை சொல்லிக் கொடுங்கள்.
(எதையும் அவர்கள் விரும்பும் நேரத்தில் செய்யுங்கள், நீங்கள் விரும்பும் நேரத்தில் அல்ல. ஆரம்பிக்கும்போதே ‘செய்யலாமா, வேண்டாமா’ என்று அவர்கள் விருப்பத்தை கேட்டுவிடுங்கள்.)
தவறு.9.
குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உச்சரிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவது.
காரணம்
இது வரை பேசாமல் இருந்த குழந்தை பேச ஆரம்பிக்கும்போது உச்சரிப்புகள் சரியாக வராது. அக்குழந்தை மிகுந்த ஆசையுடன் தான் பேச ஆரம்பிக்கும். அப்பொழுதே தவறுகளை சுட்டிக் காட்டினால், அது பேசுவதை குறைத்துக்கொள்ளும் அல்லது நிறுத்தி விடும்.
தீர்வு
பேச ஆரம்பிக்கும்போது உச்சரிப்புகள் சரியாக இல்லை என்றாலோ? தவறாக பேசினாலோ கண்டுகொள்ளாதீர்கள். “அருமையாக பேசுகிறீர்கள்” என்று பாராட்டுங்கள். ஒரு நாளைக்கு ஒரு correction என்று வேண்டுமானால் செய்யுங்கள்.
தவறு.10.
பேச ஆரம்பிக்கும்போதே மரியாதை கற்றுக் கொடுக்கிறோம் என்று நினைத்து “வாங்க, போங்க என்று சொல்லுங்கள்” என்று அடிக்கடி நினைவூட்டுவது.
காரணம்
முதலில் பேசும் குழந்தைகளுக்கு 1 அல்லது 2 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளையே பேச ஆரம்பிக்கும். ‘ங்க’ என்று மேலும் 2 எழுத்துக்களை சேர்ப்பது கற்றுக்கொள்ளும் வேகத்தைக் குறைக்கும்.
தீர்வு
ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் குழந்தைகளிடம் 'வாங்க, போங்க' என்று மரியாதையாக பேசிக்கொண்டு இருங்கள். 4 அல்லது 5 எழுத்து கொண்ட வார்த்தைகளை சரளமாக குழந்தைகள் பேசும்போது “நீங்க வாங்க, போங்க என்று பேசினால் இன்னும் அழகாக இருக்கும். மற்றவர்களும் உங்களை விரும்புவார்கள்” என்று ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் நினைவூட்டுங்கள்.
- மரு.இரா.வே.விசயக்குமார்
தவறு.6.
விசேசங்களுக்குச் செல்லும்போது விலையுயர்ந்த ஆபரணங்களை குழந்தைகளுக்குப் போட்டுவிட்டு, அவர்களை விளையாட விடாமல் அருகிலேயே இருக்கச் சொல்வது.
காரணம்
குழந்தைகள் விரும்புவது ஆடை ஆபரணங்களை அல்ல, சுதந்திரமாக விளையாடுவதையே. விளையாட்டின் மூலம் அவர்களுக்கு பலருடன் பழகும் வய்ப்புக் கிடைக்கிறது. நம்மை அதிகம் தொந்தரவு செய்யாமல் இருப்பர்.
தீர்வு
ஆபரணங்கள் இல்லாமல் எளிய ஆடை அணிவித்து விருந்துகளுக்கு அழைத்துச் செல்லலாம். மற்றொரு வழி கவரிங் நகைகள் அணிவித்து விட்டு ‘போனால் போகட்டும்’ என இருவருமே சந்தோசமாக இருக்கலாம்.
தவறு.7.
குழந்தை எட்டாமல் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்யும்போது, பிள்ளை கஷ்டப்படுகிறானே என்று நாமே அப்பொருளை எடுத்துக் கொடுப்பது.
காரணம்
எட்டாமல் இருக்கும் பொருளை ‘சீ இந்த பழம் புளிக்கும்’ என்று குழந்தை நம்மப்போல் விட்டுவிடாது. எப்படியாவது எடுக்க பலவிதங்களிலும் யோசிக்கும், முயற்சிக்கும். இந்த மனோபாவம் குழந்தையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அவசியம். நாம் எடுத்துக்கொடுப்பதன் மூலம் இந்த மனோபாவத்தை முலையிலேயே கிள்ளி எறிந்துவிடுகிறோம். அது மட்டுமல்லாமல் எதற்கும் நம்மை சார்ந்து வாழும் மனோபாவத்தை ஏற்படுத்தி விடுகிறோம்.
தீர்வு
எட்டாத பொருளை எடுக்க குழந்தைகள் செய்யும் முயற்சிகளை தூர இருந்து பார்த்து ரசியுங்கள். பலவிதங்களிலும் முயன்ற சிறிது சலிப்பு வரும் வேலையில் உதவிக்கு செல்லுங்கள். “நாற்காலியை சுற்றி வந்து எளிதாக எடுக்கலாமே”, “நாற்காலியின் மீது ஏறி எடுக்கலாமே” என்று ஆலோசனை கூறி அவர்களையே எடுக்க செய்யுங்கள். இந்த நேரத்தில் ‘நாற்காலியின் மீது ஏறும்போது என்ன மாதிரி விபத்து நேரும். அதற்கு எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றும் விளக்கலாம். எந்த விதத்திலும் அவர்களால் எடுக்க முடியாது என்கிற பட்சத்தில், “இது மிக உயரமாக உள்ளது, அதனால் தான் எடுக்க முடியவில்லை. நீங்கள் நன்றாக சாப்பிட்டல் சீக்கிரம் உயரமாக வளர்ந்து இதுபோல் உயரமாக இருக்கும் பொருட்களை எளிதாக எடுத்து விடலாம்” என்று கூறிவிட்டு எடுத்துக் கொடுத்து விடுங்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாயிற்று.
-மரு.இரா.வே.விசயக்குமார்
தாய்மை என்பது அன்பும், பாசமும், சகிப்புத்தன்மையும் நிறைந்தது. குழந்தை அறியாமை நிறைந்தது. அதைப் போக்க அறியும் வேகத்துடன் சுட்டித்தனம் நிறைந்தது. குழந்தைகள் என்றும் சிறந்த குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம்தான் எல்லா நேரங்களிலும் சிறந்த பெற்றோராக இருக்க முடிவதில்லை.
தவறு.4.
குழந்தை தவறு செய்தால் தண்டனை கொடுப்பதுதான் திருத்தும் வழி என்று நினைப்பது.
காரணம்
தண்டனை கொடுக்கும்போது அதன் வலியைத்தான் உணருவார்களே தவிர, என்ன தவறு செய்தார்கள் என்பதை மறந்து விடுவார்கள். தண்டனை என்பது தற்காலிக மன பாதிப்பை ஏற்படுத்தும். அந்நிலையில் நல்ல முடிவையோ அல்லது நாம் சொல்லும் விளக்கத்தையோ புரிந்துகொள்ள முடியாது. இதனால் திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாமலேயே போய்விடும்.
தீர்வு
தவறு செய்யும்பொழுது நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். நமது தண்டனை சிறியதாக இருக்க வேண்டும். அதாவது முகத்தைக் கோபமாக (சிறிது நேரம் மட்டும்) வைத்துக்கொள்வது, no, wrong (தப்பு இப்படி செய்யக்கூடாது) என்று சொல்லிவிட வேண்டும். உடனே சிறிது நேரம் விட்டு (10-20 வினாடிகள்) முடிந்தால் முகத்தை சரி செய்துகொண்டு ஏன் தவறு என்று விளக்குங்கள். "தப்பு இப்படி செய்யக்கூடாது" என்பதை மந்திரமாக மாற்றிவிடுங்கள். அதாவது தேவையான நேரத்தில் மட்டும் உபயோகப்படுத்துங்கள். பிறகு அந்த வார்த்தையை கேட்கும்பொழுதே குழந்தை தான் செய்வது தவறு என்பதை புரிந்துகொள்ளும்.
தவறு.5.
அம்மா திட்டினால் அப்பாவும், அப்பா திட்டினால் அம்மாவும் குழந்தைக்கு support செய்வது.
காரணம்
திட்டும்பொழுது 1 அல்லது 2 தடவைக்குள் எது தவறு என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ளும். அது புரிவதற்குள் support செய்யும்பொழுது எது சரி, எது தவறு என்று புரிந்துகொள்வதற்கு பதிலாக, திட்டுபவர் கெட்டவர் என்றும், support செய்பவர் நல்லவர் என்றும் புரிந்துகொள்கிறது.
தீர்வு
1. திட்டும்பொழுது என்ன காரணத்தினால் திட்டுகிறோம் என்ற விளக்கத்தைக் கொடுத்துவிடுங்கள். திட்டும் வார்த்தைகளின் வீரியத்தைக் குறைத்து, விளக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். முதல் முறையே திருந்திவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். 2 அல்லது 3 முறை வாய்ப்புக் கொடுங்கள். அப்படியும் திருந்தவில்லையா “போடா செல்லம் அப்பா/ அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க” என்று sentimental அஸ்திரத்தை
பயன்படுத்துங்கள். மிக மிகக் கவனம் அடிக்கடி இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது. பிறகு இந்த அஸ்திரத்திற்கு பயன் இல்லாமல் போய்விடும்.
2. ஒருவர் திட்டும்பொழுது மற்றவரிடம் ஆறுதல் வேண்டி குழந்தை வரும். என்ன காரணத்திற்காக அழுகிறது என்று குழந்தையிடம் மற்றும் துணைவரிடமும் விசாரியுங்கள். பின் குழந்தையிடம் “இனிமேல் இப்படி செய்யாமல் இருங்கள், அம்மா அடிக்க/ திட்ட மாட்டார்கள்” என்று ஆறுதல் கூறுங்கள்.
3. அப்படி விசாரிக்கும்போது குழந்தை தவறே செய்யாமல் கூட திட்டப்பட்டிருக்கலாம். அப்பொழுதுகூட துணைவரிடம் சண்டைக்கு செல்லாமல் “ அம்மா/ அப்பா tensionல் இருக்கிறார்கள், அதன்னல் தான் திட்டிவிட்டார். பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று சமாதானம் கூறுங்கள். தனியே துணைவரிடம் (குழந்தைக்குத் தெரியாமல்) மன்னிப்புக் கோரும்படி சொல்லுங்கள்.
- இரா. வே. விசயக்குமார்.