சென்ற பதிவில் சுட்டிக்குழந்தைகள் நீண்ட நேரம் அமர மாட்டார்கள் மற்றும் அடிக்கடி செயல்களை மாற்றிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். அதனால் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது அடிக்கடி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பார்த்தோம். இந்த பதிவில் அவர்களிடம் இயற்கையாக உள்ள எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி எப்படி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக மாற்றுவது என்று பார்க்கலாம்.
4.எதிர்மறை மனோபாவம்
பொதுவாக குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு (கோபத்தில் மாற்றி செய்வதுஅல்ல, நல்ல மனநிலையில் அல்லது சிரித்துக்கொண்டே மாற்றி செய்வார்கள்). என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் எதிர்மறை மனோபாவமும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.
எதிர்மறை மனோபாவம் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள ஒரு சின்ன நிகழ்ச்சி. தட்டில் சாப்பாடை போட்டுவைத்து விட்டு “நான் சவால் விடுகிறேன் உன்னால் இந்த சாப்பாடை 2 நிமிடத்தில் சாப்பிட முடியாது” என்று சொல்லுங்கள். உடனே சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த முறையை எப்படி வீட்டுப்பாடத்திற்கு பயன்படுத்துவது.
முறை.1.
சொல்லித்தரும்போது scaleஐ முதுகுக்கு பின் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக சொன்னால் அடிப்பேன், தவறாக சொன்னால் அடிக்க மாட்டேன் என்று சொல்லுங்கள். லேசாக அடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவை அடி விழும்போதும் எவ்வளவு சந்தோசமாக படிக்கிறார்கள் அல்லது எழுதுகிறார்கள் என்று கவனியுங்கள். அடி விழாமல் போகும்போது என்ன தவறு என்று எவ்வளவு ஆர்வருடன் தேடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கும்.
முறை.2.
ஒரு கணக்கு போட ஆரம்பிக்கும்போது “இது ரொம்ப கஷ்டம். உன்னால முடியாது தம்பி” என்று சொல்லுங்கள். நன்றாக போட்டுவிட்டால் “சே.. மாட்டுக்குவான்னு நினைச்சேன், தப்பிச்சுட்டாண்டா” என்று சொல்லுங்கள். அடுத்த கணக்கிற்கு “போன தடவைதான் மாட்டல, இந்த தடவை மாட்டிக்குவான் பாரு” என்று தொடருங்கள்.
இந்த முறையை உங்கள் குழந்தைகளால் நன்றாக செய்ய முடிகிற பாடத்தில் மட்டும் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.
முறை.3.
குழந்தைகள் படிக்கும் பாடத்தை நீங்களும் படித்து அவர்களிடம் பார்க்காமல் சொல்லுங்கள். சொல்லும்போது சில இடங்களில் தவறுகளை செய்யுங்கள்.
உதாரணத்திற்கு குழந்தை 7 table படிக்கிறான் என்றால், படித்து முடித்தவுடன் நீங்கள் அதே tableஐ அவனிடம் பார்க்காமல் சொல்லுங்கள். “நீ பார்த்துக்கொண்டே வா, தவறாக சொன்னால் சொல்லு” என்று சொல்லுங்கள். அவன் படிக்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் குழந்தை கஷ்டப்பட்டிருந்தால் அந்த இடத்தில் நீங்கள் தவறாக சொல்லுங்கள். அவன் நம்மை திருத்தும்போது அவனுக்கு மனதில் நன்றாக பதியும். இது மீண்டும் மீண்டும் revision செய்ய வைக்கவும் ஒரு வழி.
எதிர் மறை மனோபாவம் முறையை பயன்படுத்த நினைப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் தவறான் நேரத்தில் பயன்படுத்திவிட்டால் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்து விடும்.
இந்த முறையை பயன்படுத்தக்கூடாத சூழ்நிலைகள்:
1. நீங்களும் உங்கள் குழந்தையும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதாவது tensionலோ, கோபத்திலோ இருக்கக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தி விட்டதாக தெரிந்தால் உடனே கவனத்தை வேறு விசயத்தில் திருப்பி விடுங்கள்
2. இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
3. குழந்தைகளுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது கௌரவத்தை பாதிக்கும் வித்தத்திலோ பயன்படுத்தக்கூடாது. அதாவது அவர்கள் தோற்கும் விதத்தில் இந்த முறையை பயன்படுத்தக்கூடாது.
நாம் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது புரிய வைக்க வேண்டும் என நினைத்து நாம் செய்யும் காரியங்கள் பல நேரங்களில் குழந்தைகள் அரைகுறையாக புரிந்து வைத்திருப்பதையும் குழப்பி விடுவதாக அமைகிறது. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
.
சுட்டிக் குழந்தைகள்
இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள், நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள். எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டிருப்பார்கள் ஆனால் அதிக நேரம் ஒரு செயலில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் செயலை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
துரு துரு என்று இருப்பதால் அடிக்கடி காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதனால் நாம் அடிக்கடி “இதை செய்யாதே, அதை செய்யாதே” என சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இச்செயலே நமக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி, நாம் எதை சொன்னாலும் குழந்தைகள் கேட்காமல் போகும் சூழ்நிலையில் கொண்டுபோய்விடும்.
இவர்களை எப்படி கையாள்வது என்பதிலிருந்த சென்றால்தான் விசயம் முழுமையாகும். இருப்பினும் இந்த பதிவில் வீட்டுப்பாடம் சொல்லித்தர என்ன விதிகளைக் கையாளலாம் என்பதை மட்டும் பதிய விழைகிறேன்.
குறுகிய நோக்கில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:
1. பள்ளியிலிருந்து வந்ததும் 1 மணி நேரமாவது நன்கு விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு என்றால் அறைக்குள் விளையாடும் விளையாட்டு அல்ல. மைதானத்தில் (அ) வெட்ட வெளியில் தங்கு தடையில்லாமல் விளையாட அனுமதிக்க வேண்டும். In other word, First you fulfill their physical needs or their natural interest.
2. சொல்லித்தருபவர் அவருக்கென ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சொல்லித்தர அமரவேண்டும். நாம் சொல்லும் அறிவுரையைவிட நாம் செய்யும் செயல்களையே குழந்தைகள் பின்பற்றுகிறார்கள். நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். (இந்த ஒரு விதிக்கு மட்டும் ஒரு பதிவு போடலாம். இப்பொழுது இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்)
3. ஒரு நாளில் 3 மணிநேரம் சொல்லித் தருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் 1-1.30 மணி நேரம் மட்டுமே பாடத்தை சொல்லித்தர வேண்டும். அதாவது 10 நிமிடம் படித்தால் 15 நிமிடம் வீட்டிற்குள்ளேயே விளையாட்டு. இங்கு விளையாட்டிற்கு அதிகம் யோசிக்க வேண்டாம். சிறு சிறு விளையாட்டுக்கள் போதும் (ஏனெனில் சீக்கிரம் விளையாட்டை முடிக்க வேண்டும்.அதுவும் முக்கியம்) ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்டுபிடிப்பது, இருவரும் எதிரேதிரே அமர்ந்து கை தட்டுவது, கழுவிய பாத்திரத்தை எடுத்து வைப்பது போன்றவை. Foot ball ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இடையிடையே அந்த பந்தை சுவற்றில் உதைத்து விளையாட சொல்லுங்கள்.
இதில் ஒரு பிரச்சினை உண்டு. விளையாட்டை முடிக்கலாம் என்று நீங்கள் சொல்லும்போது அவர்கள் இன்னும் சிறிது நேரம் விளையாடலாம் என்று சொல்லுவார்கள். ஆகவே விளையாட்டை முடிக்கலாம் என நீங்கள் நினைக்கும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாகவே முடிக்கலாம் என்று சொல்லுங்கள். அவர்கள் இன்னும் சிறிது நேரம் என்று சொன்னால் “சரி இன்னும் ஒரு முறை விளயாடிவிட்டு படிக்க வா” என்று சொல்லுங்கள். அடுத்த முறை அழைக்கும்போது கண்டிப்பாக வந்து விடுவார்கள்.
4.எதிர்மறை மனோபாவம்
பொதுவாக குழுந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்க்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு. என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் இதுவும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.
இந்த எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக கொண்டுசெல்லாம். எப்படி? என்று அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
.
2. வேகமாகப் படிப்பவர்கள் Fast Learners
இவர்கள் எதையும் சீக்கிரம் கற்றுக்கொளவர்கள். இவர்களைப் பெற்ற பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் வீட்டுப்பாடம் முடிப்பதில் எந்த சிரமும் இருக்காது. எல்லாவற்றையும் சீக்கிரம் முடித்துவிட்டு விளையாடுவதையோ அல்லது டி.வி பார்க்கவோ சென்றுவிடுவார்கள்.
இவர்களிடம் உள்ள பிரச்சினை சீக்கிரம் படிப்பதைப்போல் சீக்கிரம் மறந்தும் விடுவார்கள். படித்ததில் ஆழ்ந்த புரிதல் இருக்காது. புரிந்து படிப்பதைவிட மனப்பாடம் செயவதையே விரும்புவார்கள். அதனால் கணக்கு சரியாக வராது. மற்ற பாடங்கள் நன்றாக வரும். பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த வகையில் வருவார்கள்.
இவர்களுக்கு பாடம் சொல்லித் தரும்போது கீழ்கண்ட விதிகளைப் பின்பற்றுங்கள்.
1. அவர்களின் வேகம் என்னவோ அதே வேகத்தில் சொல்லிக்கொடுத்து விடுங்கள். புரியவைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு மெதுவாக சொல்லிக்கொடுத்தால் பாடம் போரடித்து வீட்டுப்பாடத்தையே வெறுப்பார்கள்.
2. இப்பொழுது புரிந்துபடிக்கவில்லை என்பதற்ககாக கடைசி வரை இப்படியே இருப்பார்கள் என எண்ண வேண்டியதில்லை. எந்த வயதிலும் புரிந்து படிப்பவர்களாக மாறலாம். நம்முடைய கடமை பாடத்தின்மீடு வெறுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் போதும்.
3. கடைக்கு செல்லும்போது கூட்டிச்செல்லுங்கள். பொருட்களின் விலை என்ன? எவ்வளவு கொடுத்தோம்? மீதி எவ்வளவு வாங்கினோம்? என்பதை வெறும் தகவலாக மட்டும் சொல்லுங்கள். சிறிது காலத்திற்கு பிறகு அவர்களாகவே கணக்கு கேட்பார்கள். அப்பொழுதுதான் எப்படி கூட்டினோம், கழித்தோம் என்ற கணக்கையெல்லாம் சொல்ல வேண்டும்.
அடுத்த வாரம் குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
வீட்டுப்பாடம் இனிக்க பல யோசனைகளை தருவதற்கு முன் மாணவர்களை இரண்டாக பிரித்துக்கொள்வோம். மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners), வேகமாக படிப்பவர்கள் (Fast Learners).இவ்விருவர்களின் குணங்களை முதலில் தெரிந்துகொள்வோம்.
1. மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners)
இவர்களைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்குள் வாழ்க்கையை வெறுப்பது உறுதி. பெரும்பாலான ஆண் குழந்தைகள் இந்த வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதையே விரும்புவார்கள். அதனால் படித்து முடிப்பதற்கு காலதாமதமாகும். இவர்களுக்கு கணிதம் நன்றாக வரும். ஓரிரு வார்த்தைகளில் படிக்கும் கோடிட்ட இடத்தை நிருப்புக, பொருத்துக, சரியா? தவறா? போன்றவற்றை சீக்கிரம், தெளிவாக புரிந்துகொண்டு சரியாக விடை அளிப்பார்கள். ஆனால் கேள்வி பதில்கள் பகுதி சீக்கிரம் படிக்க மாட்டார்கள். பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் இவர்களே. இன்றைய கல்வி முறை இவர்களுக்கு எதிராக உள்ளது என்பதும் ஒரு கசப்பான உண்மை.
இவர்களுக்கு பாடம் சொல்லித் தருவது மிக கடினம். ஏனென்றால்
1. ஒரு பாடத்தை புரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அது வரை சொல்லித்தரும் நமக்கு பொறுமை இருக்காது. அவர்கள் படிக்கும் வேகத்தை புரிந்துகொண்டு தேவையான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தக்கூடாது.
2. நாம் 1 தடவைக்கு 2 தடவை சொல்லித் தந்தால் உடனே சரியாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் இக்குழந்தைகள் 1 தடவை 2 தடவைகளில் புரிந்துகொளவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. சில (சின்ன சின்ன) விசயங்களை முதல் தடவையிலேயே புரிந்துகொள்வார்கள். சில விசயங்களை அவர்களாகவே சிறிது காலதாமதத்திற்கு பிறகு அவர்களாகவே புரிந்துகொள்கிறார்கள். அது எப்போது எப்படி நிகழ்கிறது என்பது நமக்குத் தெரியாது.
3. புரியவில்லை என்பதற்காக நாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்தாலும் போரடித்துவிடுகிறது. ஆகவே 2 முறைக்கு மேல் சொல்லிக்கொடுக்காமல் இருப்பதே நல்லது.
4. அதிக வீட்டுப்பாடங்கள் இருப்பதால் இவர்களால் முடிக்க முடியாமல் போகும். அல்லது ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல் பெயருக்கு (Physically) முடித்து விடுவார்கள்.
வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கா? பெற்றோரகளுக்கா? என்கிற அளவுக்கு குழந்தைகளின் வீட்டுப்பாடம் குழந்தைகளுக்கு மட்டுமால்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. குழந்தை வளர்ப்பில் இது ஒரு பெரும் சவால் என்றே நினைக்கிறேன். (என் 6 வயது மகனுடன் நான் போராடி வருகிறேன்). இதைப் பற்றி அலசவே இந்தத் தொடர்.
வீட்டுப்பாடம் தேவையா?
வீட்டுப்பாடம் தேவையா?, வீட்டில் இவ்வளவு சொல்லித் தரவேண்டும் என்றால், பள்ளியில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள், வீட்டிலும் படிப்பு பள்ளியிலும் படிப்பு என்றால் குழந்தை எப்பொழுதுதான் விளையாடுவது என்பது பல பெற்றோர்களின் புலம்பலாக உள்ளது. இக்கருத்து நமது வலையில் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டது. அதற்கு புதுகைத் தென்றல் அவர்கள்கூட “குழந்தைகள் கற்றலில் பாடங்களை மனதில் நிறுத்திக்கொள்ள அதிக revision தேவைப்படுகிறது அதனால் வீட்டுப்பாடம் தேவைதான்” என்று கூறியிருந்தார்கள்.
மேலும் சில காரணங்களை முன் மொழிய ஆசைப்படுகிறேன்.
1. நாம் பேசுவது ஒரு மொழி. ஆனால் நம் குழந்தைகள் படிப்பது ஒரு மொழி. இந்த இடைவெளியை போக்க, பாடத்தைப் புரிய வைக்க ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக கவனிக்கப்படவேண்டி இருக்கிறது. இதனை பள்ளியால் செய்ய இயலாது.
2. குழந்தைகள் விளையாடி கற்க நினைக்கும் வயதில், நாம் படித்து கற்க வற்புறுத்துகிறோம். இந்த முரண்பாட்டினால் கற்றல் கற்பித்தல் இரண்டுமே கடினமாகிறது.
3. பெரும்பாலும் ஆண் குழந்தைகள் புரிந்து படிப்பதையே விரும்புகின்றனர். (மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படும்)ஆனால் நமது கல்வி அதிகம் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. ஆகையால் அதிக revision தேவைப்படுகிறது.
வீட்டுப்பாடம் சொல்லித்தருவதில் ஏன் சிக்கல்கள் எழுகின்றன, அதனை கையாளுவது எப்படி என கட்டுரை தொடரும்...
- விசயகுமார்
குறும்புக்காரக் குழந்தைகள் நமது பார்வையில் வால் குழந்தைகள், அடங்காபிடாரிகள், முந்திரிக்கொட்டைகள், சொல்பேச்சு கேளாதோர், உருப்படாதது.....
ரஷ்ய ஆசிரியர் அமனஷ்வீலி அவர்களின் பார்வையில்:
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக்கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகள் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்.
குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள், விளையாட்டுத்தனமற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள், கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்ப்பார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகள் நன்கு கலந்து பழக க் கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரையெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும்போதுதான் குறும்புகள் பிறக்கின்றன.
குறும்புக்காரக் குழந்தைகள் செயல்முனைப்பான கற்பனையாளர்கள். இவர்கள் சுற்றியுள்ளவற்றை சுயமாக அறியவும், மற்றியமைக்கவும் விழைகின்றனர்.
குழந்தைகளின் குறும்புகள்- வாழ்க்கையின்மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.
குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையான குழந்தைகள். குறும்புக்காரக் குழந்தைகளை தண்டிக்கலாம், ஆனால் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.
குழந்தைகளைப் பற்றிய உங்களது பார்வையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
இது ‘குழந்தைகளின் எதிர்காலம்’ எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர்.ஷ.அமனஷ்வீலி.
தவறு.17.
சிறு குழந்தையிடம் கத்தி, பிளேட் போன்ற அபாயகரமான பொருட்களை கொடுப்பதைத் தவிர்ப்பது
காரணம்
1. எந்த பொருட்களைக் கொடுக்காமல் தவிர்க்கிறோமோ, அந்த பொருட்களின்மீது குழந்தைக்கு ஈர்ப்பு உண்டாகும். ஆகவே நாம் இல்லாத நேரங்களில் அப்பொருளை பயன்படுத்த முயற்சித்து தீங்கை விளைவித்துக் கொள்ளலாம்.
2. எல்லா நேரங்களிலும் அந்தப் பொருளை அவர்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பது என்பது இயலாத காரியம்.
3. அபாயகரமான பொருட்களைப் பற்றிய அறிவு பெறுவதை தடுக்கிறோம்.
தீர்வு
அந்தப் பொருளை எடுத்துக்கொண்டு, அது ஏன் அபாயகரமானது? தவறாகப் பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும்? என்பதை விளக்க வேண்டும். பின் அந்தப் பொருளில் என்ன என்ன பாகங்கள் உள்ளன, அவற்றில் எது ஆபத்தை விளைவிக்கக் கூடியவை, அப்பொருளின் பயன் என்ன என்பதை விளக்கலாம். நம் மேற்பார்வையில் 2 அல்லது 3 முறை பயன்படுத்த சொல்லலாம். பயன்படுத்தும்போது ‘அபாயகரமான பகுதியில் கையை வைக்காமல் நன்றாக பயன்படுத்துகிறீர்கள்’ என்று பாராட்டுவதன்மூலம் அபாயத்தை மீண்டும் நினைவு கூறலாம். அதிக குறும்பு செய்கிற குழந்தையாக இருந்தால் அதிக கவனம் தேவை.
தவறு.18.
கம்பி கேட்டில் ஏறினால் திட்டுவது.
காரணம்
நாம் இல்லாதபோது ஏறி தீங்கை ஏற்படுத்திக்கொள்வார்கள்.
தீர்வு
நாம் இருக்கும்போதே ஏற அனுமதிக்க வேண்டும். 2 அல்லது 3 முறை ஏறும்போது உடலை சமநிலைப்படுத்துவது (Balance) எப்படி எனக் கற்றுக்கொள்வார்கள். அதன்பிறகு ஆபத்து ஏற்படாது. கீழே விழுந்தால் எப்படி ஆபத்து விளையும் என்பதை விளக்கி, ஏறும்போது கவனம் தேவை ஆகவே மெதுவாக ஏறவும் என்பதை விளக்கி விட வேண்டும்.
-மரு.இரா.வே. விசயக்குமார்
தவறு.14..
கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை கேலி/கிண்டல் செய்வது.
காரணம்
கேலி செய்வதால் நம்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு வரும். அதனால் அந்தத் தீய பழக்கத்தை மேலும் தீவிரமாக செய்யலாம். கை சூப்பும் பழக்கம் பொதுவாக மிரட்டி வளர்க்கப்படுகின்ற, பெரியவர்கள் யாரும் உடன் இல்லாத குழந்தைகளிடமே காணப்படும். இப்பழக்கம் பொதுவாக பொழுது போகாமல் இருப்பதினாலும், கோப உணர்ச்சியின் வடிகாலாகவும் ஏற்படுகிறது எனலாம்.
தீர்வு
குழந்தையை ஏதாவது ஒரு விளையாட்டில் /பணியில் ஈடுபடுத்திக்கொண்டே இருங்கள். பெரியவர்கள் யாராவது உடன் விளையாடிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருப்பது நல்லது. மேற்கண்ட சூழ்நிலை இல்லாதவர்கள் நிறைய விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிப் போடலாம். கணினி விளையாட்டை அறிமுகப்படுத்தலாம். வரைகலை drawing கற்றுக் கொடுக்கலாம். வண்ணம் தீட்டும் புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம். நாம் உடன் இருக்கும் வேலையில் சிறு சிறு வீட்டு வேலைகளையும் கொடுக்கலாம். பலவித வழிகளையும் ஏற்படுத்தி குழந்தை ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
தவறு.15.
மகாத்மா காந்தியின் பென்சில் கதையை நினைத்துக்கொண்டு சிறிய பென்சிலை எழுதக் கொடுப்பது.
காரணம்
சிறிய பென்சிலைக் கொண்டு எழுதும்போது எழுத்துக்கல் அழகாக வராது.
தீர்வு
சிறு குழந்தைகளிடம் எழுதுவதற்கு பெரிய பென்சில்களையே கொடுக்க வேண்டும்.
தவறு.16.
பள்ளியில் பென்சில், ரப்பரைத் தொலைத்து விட்டு வரும் குழந்தையைத் திட்டுவது.
காரணம்
அதிகம் திட்டினால் அடுத்த நாள் பள்ளியில் பென்சில், ரப்பர் மீது தான் கவனம் இருக்குமே தவிர பாடத்தில் இருக்காது. மேலும் பென்சில் தொலைந்துவிட்டால் இன்னொருவன் பென்சிலை திருட வேண்டும் என்ற எண்ணம் வரும். பின் திருடனாகவும் மாறலாம்.
தீர்வு
1.வகுப்பிலேயே தேவையான பென்சிலையும், ரப்பரையும் பொதுவில் கொடுக்க சொல்லலாம்.
2.நிறைய பென்சில், ரப்பரை வாங்கி வைத்துக்கொண்டு தொலைந்தபோதெல்லாம் 'இதற்கே நிறைய செலவாகிரது, முடிந்த வரை தொலைக்காமல் கொண்டு வாருங்கள்' என்று சொல்லலாம்.
3.பென்சில், ரப்பரை இரண்டாக உடைத்துக் கொடுக்கலாம். (மிகச் சிறியதாக அல்ல).
மரு.இரா.வே.விசயக்குமார்
46. குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது, வெளியில் உள்ள விசயங்களளப் பற்றி விவாதியுங்கள். கட்டிட அமைப்பு, போக்குவரத்து விதிகள், வெவ்வேறு வகையான வாகங்கள், விலங்குகள் முதலியன.
47. நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது குழந்தைகளை இடைமறிக்க அனுமதிக்காதீர்கள். “தொந்திரவுக்கு மன்னிக்கனும் அல்லது அப்பா ஒரு நிமிடம்”, என்று கூறிவிட்டு நாம் பேசி முடிக்கும் வரை காத்திருக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
48. குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பழக்கங்களைக் கவனித்து சரிப்படுத்துங்கள். உதாரணத்திற்கு சில குழந்தைகள் கதவை இழுத்து வேகமாக சாத்தும், அவர்களுக்கு கதவை எப்படி மூடுவது எனக் கற்றுக்கொடுங்கள். வீட்டுக்குள் ஓடும் குழந்தைகளுக்கு, வீட்டிற்குள் எப்படி நடக்கவேண்டும் எனவும், மூக்கிள் சளி வரும்பொழுது கைக்குட்டையை எப்படிப் பயன்படுத்துவது எனவும் கற்ற்க்கொடுங்கள்.
49. குழந்தைகளை எல்லாவிதமான் வயதினருடனும் பழக பழக்குங்கள்.
50. மத சம்பிரதாயங்களைப் போதியுங்கள், அவற்றில் பங்கேற்கச் சொல்லுங்கள்.
51. பலவித (மதம், சாதி, மொழி, நம்பிக்கைகள்) மக்களைப் பற்றியும் நல்லவிதமாக நினைக்க குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கல்.
52. நகைச்சுவையாகப் பேசுங்கள் நன்றாக சிரிக்கட்டும், வார்த்தை விளையாட்டு விளையாடுங்கள், மனித நேயத்தைக் கற்றுக் கொடுங்கள்.
53. குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுங்கள். மிக இளம் வயதில் கற்றுக் கொடுப்பது நல்லது.
54. உங்கள் தொழிலைப் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உலகில் வெவ்வேறு தொழில்கள் எப்படி நடக்கிறது என்பதைக் காண்பியுங்கள்.
55. வீட்டில் உலக உருண்டை அல்லது உலக வரைபடம் அல்லது அட்லஸ் வைத்து, எப்பொழுதெல்லாம் நாம் பேசும் விசயத்தில் ஊர் பெயர் வருகிறதோ, உடனே வரைபடத்தில் அந்த ஊர் எங்கு உள்ளது எனக் காண்பியுங்கள்.
56. குழந்தைக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் பயன்படுத்த வசதியான வடிவத்தில் துடைப்பான், பழைய துணி முதலியன.
57. குழந்தைகள் விரும்பாதவற்றை வேண்டாம் எனச் சொல்லும்போது கோபமின்றிச் சொல்லப் பழக்குங்கள்.
58. குழந்தைகள் வேண்டாம் எனச் சொல்லுவதைவிட வேண்டும் எனச் சொல்லும்படி சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள் மற்றும் நீங்களும் நடத்துகொள்ளுங்கள்.
59. குழந்தைகளைப் பார்த்துக் கேலியாக சிரிக்காதீர்கள்.
60. அடுத்து வரும் நிகழ்வுகளைப் பற்றி ஞாபகப்படுத்துங்கள். உதாரணத்திற்கு “இன்னும் பத்து நிமிடத்தில் படுத்து தூங்க வேண்டும்” எனக் கூறுவது.
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது.
ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு “அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை” என எண்ண வைத்துவிடும்.
இதையே ஜான் ஹோல்ட் என்பவர் “ பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார். குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
பதில் தெரியாத இடத்தில் “தெரியாது” என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.
முறை.1.
“அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்” என்று கூறலாம்.
பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.
முறை. 2.
“இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்” என்று சொல்லலாம்.
பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.
முறை.3.
குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், “நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்” எனலாம்.
பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.
முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து “இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது” எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து “இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா” என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.
மரு. இரா. வே. விசயக்குமார்.
தவறு.8.
குழந்தை விரைவில் பேச வேண்டும் என்று நினைப்பது. அதற்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்வது.
காரணம்
விரைவாக அதாவது 1-2 வயதில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் அதிக நாள் 4-5 வயது வரை கூட தெளிவாக பேசாமல் உளறும். மெதுவாக அதாவது 3-4 வயதில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள் ஆரம்பத்திலேயே தெளிவாக பேச ஆரம்பிக்கும். ஆகவே மெதுவாக பேச ஆரம்பிப்பதே நல்லது.
தீர்வு
குழந்தையை மருத்துவரிடம் எப்பொழுது அழைத்துச் செல்ல வேண்டும்.
1. நாம் சொல்லும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாத குழந்தைகள். அதாவது 1 வயதில் ஒரு பொருளை எடுத்து வர சொன்னால், அதைக்கூட புரிந்துகொள்ளாத குழந்தைகள்
2. 1 வயதில் ஏதேனும் 2 உறவுப் பெயர்களைக்கூட (உதாரணம்: அம்மா, அப்பா) சொல்ல முடியாத குழந்தைகள்.
நன்றாகவும் விரைவாகவும் பேச வைப்பதற்கு சில யோசனைகள்
1. மற்ற குழந்தைகளுடன் அதிக நேரம் பழக விடுங்கள்.
2. 2 அல்லது 3 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை அதிகம் சொல்லிக் கொடுங்கள்.
3. பாடல்களை சொல்லிக் கொடுங்கள்.
(எதையும் அவர்கள் விரும்பும் நேரத்தில் செய்யுங்கள், நீங்கள் விரும்பும் நேரத்தில் அல்ல. ஆரம்பிக்கும்போதே ‘செய்யலாமா, வேண்டாமா’ என்று அவர்கள் விருப்பத்தை கேட்டுவிடுங்கள்.)
தவறு.9.
குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உச்சரிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவது.
காரணம்
இது வரை பேசாமல் இருந்த குழந்தை பேச ஆரம்பிக்கும்போது உச்சரிப்புகள் சரியாக வராது. அக்குழந்தை மிகுந்த ஆசையுடன் தான் பேச ஆரம்பிக்கும். அப்பொழுதே தவறுகளை சுட்டிக் காட்டினால், அது பேசுவதை குறைத்துக்கொள்ளும் அல்லது நிறுத்தி விடும்.
தீர்வு
பேச ஆரம்பிக்கும்போது உச்சரிப்புகள் சரியாக இல்லை என்றாலோ? தவறாக பேசினாலோ கண்டுகொள்ளாதீர்கள். “அருமையாக பேசுகிறீர்கள்” என்று பாராட்டுங்கள். ஒரு நாளைக்கு ஒரு correction என்று வேண்டுமானால் செய்யுங்கள்.
தவறு.10.
பேச ஆரம்பிக்கும்போதே மரியாதை கற்றுக் கொடுக்கிறோம் என்று நினைத்து “வாங்க, போங்க என்று சொல்லுங்கள்” என்று அடிக்கடி நினைவூட்டுவது.
காரணம்
முதலில் பேசும் குழந்தைகளுக்கு 1 அல்லது 2 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளையே பேச ஆரம்பிக்கும். ‘ங்க’ என்று மேலும் 2 எழுத்துக்களை சேர்ப்பது கற்றுக்கொள்ளும் வேகத்தைக் குறைக்கும்.
தீர்வு
ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் குழந்தைகளிடம் 'வாங்க, போங்க' என்று மரியாதையாக பேசிக்கொண்டு இருங்கள். 4 அல்லது 5 எழுத்து கொண்ட வார்த்தைகளை சரளமாக குழந்தைகள் பேசும்போது “நீங்க வாங்க, போங்க என்று பேசினால் இன்னும் அழகாக இருக்கும். மற்றவர்களும் உங்களை விரும்புவார்கள்” என்று ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் நினைவூட்டுங்கள்.
- மரு.இரா.வே.விசயக்குமார்
நாம் குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் இங்கே தர முயன்றிருக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க விமர்சனத்தை எதிர்நேக்கி,
தவறு.1
கீழே விழுந்த குழந்தையை உடனே சென்று தூக்குவது. உடனே அழுகையை அடக்குவதற்காக ‘இந்த இடம் தானே, தள்ளி விட்டது’ என்று கீழே விழுந்த இடத்தை உதைப்பது அல்லது அடிப்பது.
காரணம்
உடனே தூக்கும் பெற்றோரது குழந்தையே அதிகமாக அழும். அந்த இடத்தை அடிப்பது, தன் தவற்றிற்கு அடுத்தவர்தான் காரணம் என்கிற பழி போடும் மனோபாவத்தை வளர்க்கும்.
தீர்வு
கீழே விழுந்த இடம், விழும்போது ஏற்பட்ட சத்தம் ஆகியவற்றைக்கொண்டு அதிகமாக அடி பட்டிருக்குமா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். குறைவாக அடி பட்டிருக்கும்பட்சத்தில் கண்டுகொள்ளாமல் நம் வேலையை கவனிப்பது நல்லது. அதிகமாக அடி பட்டிருக்கும் என்று உணரும் பட்சத்தில் உதவிக்கு செல்லலாம். அடிபட்ட உடல் பாகத்தை நன்கு தேய்க்க சொல்ல வேண்டும். ‘சிறிது நேரம்தான் வலிக்கும் பிறகு சரியாகிவிடும்’ என்று ஆறுதல் கூறலாம்.
தவறு.2
குழந்தை அடம்பிடித்தால் அப்போதைக்கு பிரச்சினையில் இருந்து விலக கேட்டதை வாங்கிக் கொடுப்பது.
காரணம்
அடம்பிடித்தால் எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்று குழந்தை உணர்ந்துகொள்கிறது. பிறகு எதற்கெடுத்தாலும் அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
தீர்வு
குழந்தை பொருளை முதல் முறை கேட்கும்பொழுதே வாங்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்து விட வேண்டும். வாங்க சம்மதமானால் “இன்று இந்த ஒரு பொருள் மட்டும்தான் அல்லது இன்னும் ஒரு பொருள் மட்டும்தான்” என்று சொல்லி விட்டு உடனே வாங்கிக்கொடுத்து விட வேண்டும், வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டல் அதற்கான காரணத்தை குழந்தையிடம் விளக்க வேண்டும். ஒரு முறைக்கு இரு முறை விளக்க முயற்சிக்கலாம். அதற்கு மேல் எவ்வளவு அடம் பிடித்தாலும் வாங்கிக்கொடுக்கக் கூடாது. சில நேரங்களில் அழுது வாந்தி எடுக்கும் நிலை வரை கூட அடம் பிடிக்கும்.
தவறு.3
குழந்தைகள் சொல்லும் சிறு சிறு செயல்களையும் குழந்தைதானே கேட்கிறது என்று செய்யாமல் இருப்பது.
காரணம் & தீர்வு
குழந்தைகள் கேட்கும் ஒவ்வொரு சிறு சிறு செயலையும் உடனே செய்யும்போது, குழந்தையும் நாம் சொல்லும்போது உடனே கேட்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதை நாம் மறுத்தால், நாம் சொல்லும்போதும் கேட்கத் தேவையில்லை என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதில் அதிகம் எளிதாக செய்யக்கூடிய காரியங்களாக இருக்கும். சில நேரங்களில் மட்டும் செய்யவே முடியாத காரியங்களாக இருக்கும். அந்நேரத்தில் ஏன் செய்ய முடியவில்லை என்ற விளக்கமும் கொடுத்து விட வேண்டும். நாம் அதிக தடவை அவர்கள் பேச்சைக் கேட்டுவிடுவதால், சில நேரங்களில் கேட்காமல் இருப்பது அவர்களுக்கு பெரிதாகத் தெரியாது.