பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

விருட்சம்.காம் வலைதளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள …

இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி விட்டால் விட்டது தொல்லை. மாறாக யோசிக்காமல் வாங்கி ஓன்று வாயில் இடுக்கிக் கொண்டால் பிடித்தது ஏழரை என்பதைக் கூட உணராமல் அதில் மாணவக் கண்மணிகள் மூழ்கிக் கொண்டு இருக்கும் அவலம்
இப்போ கண்டுபிடித்திருக்கிறது ஒரு தனியார் பள்ளி.

பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.

பின் விளைவுகள் என்னென்ன? வேறு என்ன ஒரு நாள் எடுத்துக் கொள்ள வில்லை என்றால் தலை வலி எரிச்சல் தூக்க மின்மை, எரிந்து விழுதல், படிப்பில் கவனமின்மை.

இதை விளம்பரப்படுத்தும் இந்தச் சுட்டி

சொல்லுவது இது ஹெர்பல் தயாரிப்பாம். ஆரோக்கியத்துக்கு நண்பனாம் அதான் ஹெல்த் பிரெண்ட்லி

ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் புகையிலை தயாரிப்பு என்று ஏதாவது உண்டோ.

வானம்பாடிகள் ஐயாவை அறிமுகப் படுத்துவது சூரியனுக்கே டார்ச் அடிக்கறது போல.

அவரின் அனுமதியோடு மிகவும் அருமையான இந்தப் பதிவு parent's club வலைத்தளத்தில் வெளியிடப் படுகிறது.

யோசிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்லை, இந்த நிமஷம் முதலில் நம்மை நாமே கேள்வி கேட்டு மாற்றிக் கொள்ளவும் தூண்டும் பதிவு இது. நீங்க என்ன நினைக்கறீங்க? நாம் குழந்தைகளோடு ஒரு மணிநேரமாவது பேசியோ, விளையாடியோ, அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் பெரும்பாலும் மன-உடல் அயர்வோடுதான் வீட்டுக்குள் நுழைகிறோம். நம் முகமும் உணர்வலைகளும் பிள்ளைகளை நம்மோடு பேசத் தூண்டுமாறு இருக்கா..

வேலை நாட்களில் மாலையில் பெரும்பாலும் எனக்கு வீட்டில் தூங்கும் நேரம் தவிர வெறுமனே இருக்க ஒரு மணிநேரம் கிடைத்தாலே அதிகம். இதில் ஒன்று என் கணவரோடோ அல்லது குழந்தையோடோ என்று யாரேனும் ஒருவரை மட்டுமே பேசி கவனிக்க முடிகிறது. குழந்தைக்கு இன்னும் புரிந்து கொள்ளும் வயதாகவில்லை என்பதால், அவளோடு பெரும்பான்மை நேரங்களை ஒதுக்கி செலவிட வேண்டியிருக்கு. கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தாலும், இப்போதும் அவள் பல நேரங்களில் வேறு யாரோடும் பேசினால் கூட அம்மா அம்மா கன்னம் திருப்பி தன்னை பார்த்துக் கொண்டே அவரோடு பேசவேண்டும் என்று நச்சரிப்பது ஆரம்பித்த்தாள். அப்போதுதான் ஒரு வேளை வளர்ப்பதில் ஏதும் தவறு செய்கிறேனோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். முற்றிலும் என் தவறுதான், அவளை பொறுத்த வரையில், எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் கொடுத்தது யார்? நான்தானே... அப்போது முதல், அவளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களோடும் பேசத் தூண்டுவது, வந்த விருந்தாளிகளுக்கு ஸ்வீட், பிஸ்கட், போன்ற சிதறாத உணவு வகைகளை பரிமாற வைப்பது, கையலம்பிக் கொண்டதும் துடைத்துக் கொள்ள துண்டு போன்றவற்றைத் தரத் தூண்டுவது, போகும்போது சாகலேட், மஞ்சள் கிழங்கு, குங்குமம் தருவது என்று அவர்களையும் கவனிக்குமாறு செய்தேன். இப்போது அவளால் விருந்தாளிகள், முதன்முறை எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு புன்னகை கொடுக்க முடிகிறது. கேள்வி கேட்டால் தகுந்த பதிலும் தரும்படி ஆகி இருக்கிறாள்.

குழந்தையை mend செய்ய அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும் என்பது மறுக்க முடியாது.... குழந்தைகள் மட்டும் இல்லை, யாருமே ஏதேனும் தவறு செய்தால் பொதுவில் திட்டாமல் இருப்பது எனக்கு எப்போதும் உதவி இருக்கிறது. இவளிடமும் அப்படியே...

அதே போல கதை சொல்லி அதனூடே நமக்கு வேண்டிய 'அறிவுரைகளை' அல்லது விபரங்களை புத்தியில் ஏற்றுவது இலகுவாக இருக்கிறது. ஏதாவது தவறு செய்து விட்டால், குழந்தைக்கு அது தொடர்பாக கதை சொல்லுங்கள்... அறிவுரையாக இல்லை.

கீழிருக்கும் பதிவை வெளியிட அனுமதித்த வானம்பாடிகள் ஐயாவுக்கு நன்றிகள்.

அன்புடன்,
விதூஷ்.

======================================================
பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..
======================================================

ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம்.

மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை

* தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
* படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
* எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
* தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.


இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது

“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம்.

இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?

மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம்.

“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.





.

முதல் பகுதி இங்கே

தற்காப்பும் அதன் அவசியமும்

என் முந்தைய பதிவில் ஒரே நாளில் இரு கயவர்களையும் இரு நல்லவர்களையும் எதிர் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன்.

இன்றும் கூட கராத்தே, ஜூடோ, முகத்தில் குத்துவது, அல்லது கால்களுக்கு இடையில் உதைப்பது போன்றவற்றை தற்காப்பு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். கராத்தே ஜூடோ போன்றவை  தன்னம்பிக்கை வளரும். உண்மைதான்.  ஆனால், நிதர்சனத்தில்??? இதெல்லாம் சினிமாவிலோ டீவீ சீரியல்களிலோ பலன் கொடுக்கலாம். அரிதாகவே, நிஜத்திலும் சில நேரங்களில் உதவலாம்...

ஒருவேளை அடிபட்டவன் ஆக்ரோஷமடைந்து அடித்தவள் மீது பாய்ந்தால்? இவளை விட பலம் பெற்றவனாக இருந்தால்? அவனும் கராத்தே ஜூடோ தெரிந்தவனாக இருந்தால்? ஒருவனுக்கும் மேற்பட்டவர் இருந்தால்?

அடிதடி சண்டை போடுவது, வாயால் கத்திக் கொண்டு உதவி கேட்டுக் கொண்டு நிற்பதை விட, துரிதமாக ஆபத்து நிறைந்த அந்த இடத்திலிருந்து ஓடுவது / வெளியேறுவது எப்படி என்று யோசித்து செயல் பட வேண்டும். எதிராளியை அடிப்பது நிச்சயம் பல நேரங்களில் உதவுவதில்லை. இது வன்மமாகக் கூட மாறி மென்மேலும் ஆபத்துக்களை உருவாக்கலாம். ஆபத்தை எதிர்கொண்டு இன்னொரு ஆபத்தை உருவாக்குவதை விட ஆபத்தை தவிர்ப்பது, அந்த இடத்தை விட்டு ஓடி விடுவது சாலச் சிறந்தது.

தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் ஆண்களுக்குப் பெரும்பாலும் பாலியல் நோக்கமே இருக்கிறது. யாரேனும் உங்களைத் தாக்கியோ / மிரட்டியோ உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழலில், நீங்கள் இடத்தை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில் அவன் வேறு ஒருவரை நாடுவானே தவிர, சினிமா மாதிரி உங்களையே துரத்திக் கொண்டிருக்க மாட்டான். அவனது பாலியல் நோக்கம் (வெறி) கூட அந்த நிமிட மனப் பிழற்வுதான். ஏற்கனவே உணர்ச்சி வசத்தில் இருக்கும் அவனுக்கு அவன் குறிக்கோளை அடைய என்ன வேண்டுமாலும் செய்துவிடும் மனப்போக்கிலேயே இருப்பான். அதனால் உங்கள் மனதுக்கு ஆபத்து என்று படும் பட்சத்தில் 'வீரம்' காட்டுவதை விட 'விவேகமாக'வும் அதி வேகமாகவும் செயல்படுங்கள். எதிராளியின் பார்வையில் இருந்து மறைவதை முதலில் முயற்சியுங்கள். தனிமையான இடத்திலிருந்து  கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று விடுங்கள்.  வேறு வழியே இல்லாத பட்சத்திலேயே சண்டையில் இறங்கலாம்.

தற்காப்பு என்றால் என்ன? தற்காப்புக்கு முதல் தேவை மன உறுதியும் சமயோசிதமும். இவை இரண்டும் ரொம்பவே அவசியம். ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மன உறுதி இல்லை என்றாலோ, ஆபத்து வரும் சமயத்தில் துரிதமாக முடிவெடுத்து, தகுந்தவாறு செயல் பட முடிய வில்லை என்றாலோ தற்காப்புப் பயிற்சிகளால் பயனேதும் இல்லை.  உங்கள் உள்ளுணர்வுகளின் ஒவ்வொரு செய்திக்கும் செயல் படுங்கள். பெரும்பாலும் உள்ளுணர்வு தவறுவதே இல்லை.

இது முன் பின் தெரியாத அன்னியனால் வரும் ஆபத்தினை சமாளிப்பது. சரி.  டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும், அல்லது பெரும்பாலும் எல்லா வயதுடைய பெண்கள் சிலருக்கு அவர்கள் நண்பர்களால் / மிகவும் நன்கறிந்த ஆண்களாலேயே ஆபத்து நேர்கிறது. அப்போது என்ன செய்வது?

பாலியல் தாக்குதல் எல்லாமே பெரும்பாலும் அந்த நிமிட மனப் பிழற்வு தான். ஆனால் ஏற்கனவே நன்கறிந்த ஆண்களால் தாக்குதலுக்கு ஆளாவது அந்த ஆணால்  'முன்பே' திட்டமிடப்பட்டது. அந்தப் பெண்ணின் தனிமை, வீட்டில் எப்போது யாரும் இருக்கமாட்டார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பான். இம்மாதிரி நிகழ்வுகள் எப்போதும் ஒரு அறையோ இல்லை பெண்ணின் வீட்டிலேயோ கூட நடக்கலாம். இதனால் இம்மாதிரிச் சூழ்நிலையில் முடிந்தவரை பதட்டப் படாமல், புத்திசாலித்தனமாகப் பேசி கதவுகளைத் தாண்டி வெளியேற முயற்சியுங்கள்.  தோற்று விட்டோம் என்று நாமே நம்பாத வரை, யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். எந்நிலையிலும், இம்மாதிரிச் சூழலில் உங்கள் கோபத்தையோ, இயலாமையோ வெளிக்காட்டுவது உங்களைத் தோற்கச் செய்யும்.

உங்களைக் கோபமூட்டுவதன் மூலம் அவன் நோக்கம் எளிதில் நிறைவேறும் என்பதை எதிராளி நன்கறிவான். உங்கள் கோபம் உங்கள் "ரெஸ்பான்ஸ்" ஆகிறது. அதே போல அவனை சண்டைக்குத் தூண்டுவதோ, கோபமூட்டுவதோ உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதனால் உணர்ச்சி வசப்படாமல், மெதுவாக அத்தகைய இடத்திலிருந்து வெளியேறுவதை குறித்தே சிந்தித்து செயல்படுங்கள்.

வழிப்பறி, திருடன் போன்றவரிடம் மாட்டிக் கொண்டால் அவனிடம் பர்ஸ் நகைகள் போன்றவற்றை கொடுத்து விடுவது தப்பிப்பது சாலச் சிறந்ததாகும். அவன் நோக்கம் பணம் பொருள் என்பதே. இவை சண்டைபோடுவதால் அவன் நோக்கம் மாறிவிடக்கூடும்.  பொருளை இழப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

இம்மாதிரி தாக்குதலுக்கு ஆளாகும் போது முடிந்த வரை உங்கள் உயிர், சுய மரியாதை, ஆகிவற்றைக் காப்பதிலே முழு கவனமும் இருக்கட்டும்.  தாக்குபவனைத் திருப்பித் தாக்குவது பெரும்பாலும் அவனை ஆக்ரோஷப்படுத்துகிறது. நீங்கள் பாதுகாப்பென்றும் கருதும், உள்ளுணர்வு நம்பும்  எந்த ஒரு அன்னியரிடமும் உதவி கேட்கத் தயங்காதீர்கள். அதற்காக முன் பின் தெரியாத அன்னியரின் கார் போன்ற வாகனங்களில் முழுமையாக நம்பி, தனியாகப்  பயணிக்க  வேண்டாம்.

உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிருங்கள் - முழுமையாக.

  1. தனியாக பயணிக்கும் போது, அந்த இடம், பயணிக்கும் சாலைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருங்கள்.கூட்டத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தனிமை படுத்திக் கொள்ளாதீர்கள். இலக்கிலாத வழிகளில் பயணிக்க வேண்டாம். அதே போல, நெடுந்தொலைவு / ஏற்கனவே போகாத இடங்களுக்கு தனியாக பயணிக்க வேண்டாம் / தவிருங்கள்.
  2. எப்போதும் குறுக்கு வழிகளில், இருட்டான சாலைகள், யாரும் பயன்படுத்தாத சந்துகளில் செல்லாதீர்கள்.
  3. வீட்டில் இருந்தால் உங்கள் பெற்றோர், ஹாஸ்டல் / விடுதி போன்ற இடங்களில் இருந்தால் உங்கள் தோழிகளுக்கு நீங்கள் எங்கே போகிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதை தெளிவாகக் கூறுங்கள். 
  4. டேட்டிங் (dating) போன்றவைகளுக்குச் சென்றால், முடிந்தவரை உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம் யாருடன் போகிறீர்கள் என்பதை பகிருங்கள். என்னதான் அந்த நண்பர் நம்பகமானவராக இருந்தாலும்,  தனிமையில் இருக்கும் போதோ, டேட்டிங் செல்லும் போதோ, வெளியிடங்களில் / மூடிய அறைக்குள் குளிர் பானங்களை அருந்த வேண்டாம் / உணவு உட்கொள்ள வேண்டாம்.
  5. ஹாங்-அவுட் (hang-out), ஆடல்/பாடல் நிகழ்ச்சிகள், திரையரங்குகள், விருந்துகள், போன்ற பெருந்திரளான மக்கள் வரும் பொதுவிடங்களுக்குப் போகும் போது முழுமையான உடையணிந்து (பெண்கள் மன்னிக்க, ஆனால் கவனம்) செல்லவும். நடைமுறையில் உடல் பாகங்கள் தெரியுமாறு உடையணிந்த பெண்களே அதிகளவில் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இம்மாதிரி இடங்களில் தான் வாய்ப்பு தேடி அலையும் கயவர்கள் அதிகம் நடமாடுகிறார்கள். சமூகம் / சில ஆண்கள் மாறவில்லை, மாறவேண்டும், என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதுவரை, நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது நலம். அதே போல, நீங்கள் இருக்கும் குழுவினரோ, அல்லது உங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் நபர்களோ (ஆண்கள் பெண்கள் இருபாலாரும்தான்) பொறுப்பற்ற அல்லது வரம்பு மீறிய பேச்சுக்கள் அல்லது செயல்களில் ஈடுபட்டால், வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று விடுங்கள். ஆபத்து வரும் வரை காத்திருக்க வேண்டாம். இது உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைத் தடுக்கும்.
  6. ஆங்கிலத்தில் vulnerable target என்பார்கள். அதாவது எளிதில் தாக்கக்கூடிய இலக்கு. இவர்களைத் தேடித்தான் "அவர்கள்" அலைவார்கள். இவர்கள் அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். எப்படி? நண்பர்கள் அல்லாத அன்னியர்களோடு -  தொட்டு பேசுவது,  அவர்கள் அளிக்கும் மது / குளிர் பானங்கள் / உணவுகளை ஏற்பவர்கள், இவர்களை மிக விரைவிலேயே தாக்குவார்கள். உங்கள் தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் வெளிக்காட்டுங்கள். அவமரியாதையான / மரியாதைக்கு குறைவான பேச்சுக்களை ஒரு போதும் அனுமதிதோ சமரசம் செய்தோ பொறுத்துக் கொள்ளாதீர்கள். "உங்கள் எல்லையை மீறவேண்டாம்" என்று முதலிலேயே பொறுமையாக அதே சமயம் உறுதியான குரலில் கூறி விட்டால், 99% ஆபத்துக்களை நீங்கள் முளையிலேயே கொன்றதாக ஆகிறது. பெரும்பாலும் அப்போதே 'கயவர்கள்' வேறு நபரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். (ஐயோ! அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்)
  7. அம்மாக்களே!!! தயவு செய்து பதிமூன்று வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கே ஓரளவு விபரம் தெரியும் வரை,  சினிமாவில் அணிவிப்பது போன்ற உடைகளை (முதுகு முழுதும் திறந்து / தொப்புள் தெரியுமாறு / மினி போன்ற உடைகள்) அணிவித்து மகிழ வேண்டாம். அதுவும் பொதுவிடங்களில், பேருந்துகளில் பயணிக்கும் போது, யாரேனும் தவறான எண்ணத்தோடு bad touch செய்தால் பாவம் குழந்தைகளுக்குச் சொல்லவும் தெரியாது. நீங்களும் கண் கொத்திப் பாம்பாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா? பயணங்களில் பான்ட் ஷர்ட் / சுடிதார் போன்ற எளிய பாதுகாப்பான உடைகளையே நீங்களும் அணியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் அணிவித்துப் பழக்குங்கள். மற்ற உடைகளை வீட்டிலோ இல்லை மிகவும் நம்பிக்கையான இடங்களுக்கோ போகும் போது அணிவித்து மகிழுங்கள்(!!).
  8. கைபேசியில் shortcut program-கள் செய்து ஒரே நம்பரை அழுத்துவதனால் பெற்றோர் / கணவர்/உறவினரை அழைக்கும் வண்ணம் ஏது செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  9. உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து, முதல் முறையே, உங்கள் பெற்றோர் / பள்ளி / கல்லூரி / போலீஸ் ஆகியவர்களிடம் பகிர / முறையிட (complaint) தயங்காதீர்கள். யாரும் தப்பா நினைப்பாங்களோ  அல்லது நம்மை கெட்டுப் போனவள்-ன்னு நினைச்சிருவாங்களோ அல்லது "ரொம்ப நெருங்கிய உறவுக்காரர் / நண்பர் ஆவாரே.. அவர் உறவு / நட்பு பிரிஞ்சுடுமோ" என்றெல்லாம் வீண் கற்பனை செய்து பயப்படாதீர்கள். (பெற்றோரே. நீங்களும் இத்தகைய குறைகளைக் காது கொடுத்து கேளுங்கள். உங்கள் பெண்ணை முழுமையாக நம்புங்கள்)
  10. முறையான தற்காப்புக் கலை ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஓடிப் போய் தப்பிக்க முடியாத நிலையில் கை கொடுக்கும்.
 =================================================
உங்கள் குழந்தைகளுக்குப் பாலியல் குறித்த அந்தந்த வயதிற்கேற்ற செய்திகளை மெல்ல மெல்ல கொடுத்துக் கொண்டே இருங்கள்.

"பாய்ஸ் ஏம்மா பாய்ஸ்ஸா இருக்காங்க. அவங்களும் ஏன் கேர்ள்ஸா இல்ல? அவங்களாம் ரவ்டீஸ்ஸா?" என்ற கேள்விக்கு ஒரு தாயாக / தந்தையாக என்ன பதில் அளிப்பீர்கள்?

நான் "ரவுடின்னா என்னம்மா?" என்றேன்.

 "அடிப்பாங்க. கெட்ட வார்த்தை சொல்வாங்க. சாக்லேட் ஸ்நாக்ஸ் எல்லாம் யாருக்கும் ஷேர் செய்யவே மாட்டாங்க... அவங்களே ஸ்விங்-ல (ஊஞ்சல்) விளையாடிண்டே இருப்பாங்க. அவங்கதான் ரவ்டீஸ் ..." என்றாள்.

 "அப்பா பாயா கேர்ள்-ளா?" என்றேன்

 "பாய்தான்...." என்றாள்.

"தாத்தா ?"

"தாத்தாவும் பாய்தான் - பின்னல் இல்ல  ...வேஷ்டி கட்டிகாரங்க, பான்ட் ஷர்ட் போட்டுக்கறாங்க."

யோசிக்க ஆரம்பித்தாள் "அப்பா தாத்தால்லாம் ரவ்டீஸ் இல்லம்மா." என்றாள். கொஞ்ச நேரம் கழித்து "ஆனா விஷால்-லும் நிஷாந்த்-தும் இருக்கான்ல ... இவங்கதான் கேர்ள்-சை அடிப்பாங்க. ஸ்நாக்ஸ்-சை எல்லாம் பிடுங்கி சாப்ட்ருவாங்க... மிஸ் அடிச்சாக் கூட பயப்படவே மாட்டாங்க. இவங்க மட்டும் தான் ரவ்டீஸ் மா... "
(உடனே ஸ்கூல் மிஸ்ஸிடம் பேசி ஸ்நாக்ஸ்/அடிதடி பிரச்சினையை ரிப்பேர் செய்தாகி விட்டது. ப்ரைமரி ஸ்கூல் மிஸ்ஸுகள் ரொம்ப பாவம்ங்க )

ஒரு முறை என் கணவரின் சக பணியாளருக்கு குழந்தை பிறந்திருந்தது. பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்ற போது தர்ஷிணியும் வந்திருந்தாள். அங்கு வந்திருந்த ஒருவர் "என்ன குழந்தை" என்று கேட்டார். குழந்தையின் தாய் "கேர்ள் சைல்ட்" என்றார். தர்ஷிணி மெல்ல என் காதில்  "பேபிக்கு பின்னல் தோடு எல்லாம் இல்லையே? பாய் மாதிரி மொட்டையா இருக்கே. எப்படிம்மா பொண்ணுன்னு கண்டு பிடிச்சா அவ அம்மா?" என்றாள்.


000 -- தொடரும் -- 000
அடுத்து:
3. ஆபத்து என்று எப்படி அறிவது?
4. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
5. கற்பழிப்புக்கு ஆளானால்?



(நான் எதையும் தவறாக / தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தலாம். பிறரை அவமதிக்காத / புண்படுத்தாத / ஆரோக்கியமான விவாதங்கள் செய்யலாம்.)



.

பெண்கள் பெண்கள்தானே. மனிதர்கள் தானே. எதற்கு தேவதை பட்டம் எல்லாம்? நற்குணமெல்லாம் தேவைதான். ஆனால் அடக்கம் அடக்கம் என்று "அடக்கம்" பண்ணும் அளவுக்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவையா? சிலர் தேவதைகளாகவும், தெய்வத்தின் பிரதிபிம்பமாகவும், தியாகத்தின் உருவம்,பொறுமையில் பூமி மாதா,அவள் அடக்கத்திற்கு கோவில் கட்டிக் கும்பிடலாம், செதுக்கி வைச்ச சிலை,அழகி, பேரழகி, சுண்டினா ரத்தம் தெரியும் சிகப்பு, நீ என் தேவதை, வாயே திறக்கமாட்டாள் - ரொம்ப நல்லவ, போன்றவைகள் மீதான மயக்கம் இன்னும் போகவில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அழகு, அடக்கம், பொறுமை, தியாகம் போன்ற குணங்களை பெண்களுக்கே மொத்த குத்தகையாக கொடுத்து விட்டாமாதிரியான மூளைச்சலவைகளை.

பல வருடங்கள் முன் செனடாப் ரோடு பயங்கரத் தனிமையான சாலை. இதை தினமும் இரவு எட்டரை மணி வாக்கில் பயன்படுத்த வேண்டி இருந்தது. அதுவும் இருசக்கர வாகனத்தில். ஒரு நாள் இரவு பத்து மணியாகி விட்டது - அலுவலகத்தில் மறுநாள் ஒன்பது மணிக்கே மார்கடிங் மீட்டிங் துவங்குவதால் எல்லாவற்றையும் தயார் செய்து வைக்க நேரமாகி விட்டது. ஒரு குண்டு தைரியத்திலும், ஈவ் டீசிங் போன்ற முன் அனுபவம் எதுவும் இல்லாத அனுபவக் குறைபாட்டாலும், அன்று வீடு திரும்புகையில், "என் வண்டிலையே போய்க்கறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

இரு வாகனங்கள் ஒன்று கார், இன்னொன்று மோட்டார் பைக், இரண்டும் ஏறத்தாழ மவுன்ட் ரோடு கருமுத்து மாளிகை அருகிருக்கும் சிக்னலில் இருந்து பின்தொடர்ந்து கொண்டே வந்தது. பைக்கில் வந்தவன் "ஏ கைனடிக்.... நில்லுடி" என்று கூறிக்கொண்டே கிட்ட வருவதும் பின்தொடர்வதுமாய் இருந்தான். காரும் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தது. எனக்கோ படபடப்பு அதிகமானது. உண்மையிலேயே பயமாகத்தான் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே சிறிது வேகப்படுத்தினேன் வாகனத்தை. அடையார் பிளைஓவர் அப்போது இல்லை. ஐ.டீ. காரிடாரும் இல்லை. போலீசாரும் யாரும் கண்ணில் படவில்லை. அடையார் சர்ச் எதிரில் வருகையில் மோட்டார் பைக்காரன் என் கைனடிக் ஹோண்டாவின் பின் சீட்டில் கையால் தட்டினான். எனக்கு பதற ஆரம்பித்து விட்டது. எங்கிருந்து துணிவு வந்ததோ தெரியவில்லை, வண்டியின் வேகத்தைக் குறைத்து இடது காலால் அவன் வண்டியை எட்டி உதைத்தேன். கீழே விழுந்து விட்டான். காரும் அவன் அருகில் நின்று விட்டது. நான் பின் என்ன நடந்தது என்று கூட பார்க்காமல் வேகமாய் அடையார் பாஸ்கின் ராபின் ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்து விட்டேன். பின் அங்கிருந்த இருவர் துணையோடுதான் வீடு சென்றேன்.

இந்நிகழ்வை இப்போது யோசித்தால் கூட அன்றும் இன்றும் என்றும் தனியாய் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து விளைப்பதோ தீங்கு செய்யவோ, எல்லைகளை மீறுவது கயவர்களுக்கு எளிதாக இருக்கிறது என்று நினைப்பேன். அன்று பாஸ்கின் ராபின்ஸ் போன்ற இரவு நேரக் கடையோ, இல்லை அங்கிருந்த இரு ஆண்கள் நல்லவர்களாகவோ இல்லாதிருந்தால்? நம் பெண்கள் இன்றும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா?

இவள் மூக்கைத் தாண்டியும் அடுத்தவர் தொடுவதையும், சீண்டல்களையும் ஏன் இப்படிச் சகித்துக் கொள்ள வேண்டும்? எதற்காகப் பயப்படுகிறாள் இவள்? ஈவ் டீசிங், அலுவலகத்தில் பாஸ் அல்லது சக பணியாளரின் சூசகமான உள்ளர்த்தம் பொதிந்த பேச்சுக்கள், உடல்/உளரீதியான அல்லது பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் போதும் கூட வாய் மூடி ஒதுங்கி போவது, இப்படி தவறு செய்பவருக்கு ஊக்கம் கொடுப்பது போல ஆகி விடாதா? "உன் செய்கை எனக்கு பிடிக்கவில்லை" என்று சொல்ல / அவர்கள் செயலைத் தடுக்க எதற்குத் தயக்கம்?

இக்கட்டான இது போன்றச் சூழலில் பெண்களாகிய நாம், நம்மை நாமேப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு ஆபத்து நேர்ந்தால் நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மன ரீதியாகத் தயாராக இருக்கிறோமா?

வரும் பதிவுகளில் காணலாம்.

1. தற்காப்பும் அதன் அவசியமும்
2. ஆபத்து என்று எப்படி அறிவது?
3. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
4. வன்புணர்வு/பலாத்காரத்துக்கு  ஆளானால்?




.

அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.


13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????


பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....


பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.


ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???


பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.



பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???


இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.


பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.


பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

டீவியில இதைப் பத்தி பாத்ததும் அதிர்ச்சியாயிடுச்சு.


பல பேரு வீட்டுல இதெல்லாம் அன்றாடம்
உபயோகத்துல இருக்கறதாச்சே! உடனே
எல்லோருக்கும் சொல்லிப்புடணும்னுதான் இந்தப் பதிவு.


Appyfizz - இதைக் குடிக்கக்கூடாதாம். இதில்
கேன்சர் வரவைக்கக்கூடிய சமாசாரங்கள்
நிறைய இருக்காம்.!




இது மிக முக்கியம்:

நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவை
எரித்துக்காட்டினார்கள். இதில் பிளாஸ்டிக் உருகுவது தெரிந்தது.
ஆதாரம்: டீவி 9, டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இந்த மாதிரி பாக்கெட்டுகளில் வரும் எந்த வித
உணவுப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு
வாங்கிக் கொடுக்காதீர்கள். (இதையெல்லாம் படிச்சிட்டும்
பெரியவங்க வாங்கி சாப்பிடுவாங்களா? என்ன?)





மெந்தோஸ்:

பெப்ஸி/ கோக் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு இதை வாயில் போட்டால்
சிவலோக ப்ராப்திதானாம். சயனைடாக மாறிவிடுகிறதாம்.
ஜாக்கிரதை.




சிலருக்கு அதென்னவோ ஒரு மைண்ட் செட். காலையில் குளிச்சதும்
காதை கொடைஞ்சே ஆகணும். தேவையே இல்லீங்க.
காதுகளில் குறும்பு சேரும்போது மட்டும் பட்ஸ் கொண்டு
சுத்தம் செஞ்சா போதும்.

இயர் பட்ஸ் வாங்கும்போது ரொம்ப கவனம் தேவை:

ரோடோரத்தில் சீப்பா கிடைக்குதுன்னு வாங்கினீங்கன்னா
Herpes Zoster Oticus
(a viral infection of the inner, middle, and external ear)
இந்த நோய்க்கு நீங்கதாங்க முதல் விருந்தாளி.

ரோட்டோரோத்தில் விலை குறைவாக விற்கப்படும்
பட்ஸ்கள் மருத்துவமனைக் கழிவு பஞ்சுகளை
சேகரித்து சுத்தம் செய்து, ப்ளீச் செய்து பட்ஸ்
தயாரித்து விற்கிறார்கள். இதனால்தான் மேலே
சொன்ன புது வியாதி வருமாம்.

அப்படியே உங்களுக்கு காது குடைஞ்சே ஆகணும்னா
கண்டிப்பா ப்ராண்டட் பட்ஸ்களை வாங்குங்க.





அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க எல்லோத்துக்கும்
இந்த விசயத்தை சொல்லுங்க.

இமெயில் மூலமா கிடைச்ச விசயம் இது.
இதை நான் நம்பாம இருந்தப்பத்தான் டீவியில்
பாத்தேன். உடன் பதிவா போட்டுட்டேன்.

இதையும் படிங்க:

Message From Gautham Mukkavilli - Managing Director FritoLay India

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்