பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டும் உடல் சோர்வை வெளிக் காட்டத் தெரியாமலும் சொல்லவும் தெரியாமல் இருக்கிற போது, குழந்தைகளுக்கு ஜலதோஷம் / சளி  பிடித்திருக்கு என்று பெற்றோராகிய நாம் எப்படிக் கண்டு பிடிப்பது?

 • குழந்தையின் கண்கள் கலங்கலாகவும், நிறம் / ஒளி குறைந்தும் இருக்கும்
 • வழக்கத்திற்கு மாறாக அழுகை அல்லது மகிழ்ச்சி குறைந்து இருக்கும்
 •  மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைபட்ட மூக்கு
 • தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல்
 • உடல் வெதுவெதுப்பாக இருக்கும்  / ஜுரம் இருக்கும்
 • தலையை உயர்த்தி பிடித்து வைத்துக் கொண்டால் சௌகரியமாக  உணரும்.
 • பசி குறைந்து இருக்கும் / சாப்பிட மறுக்கும்
 • சோர்வாய் இருக்கும், தூங்கி  வழியும், அதே சமயம் தூங்கவும் மறுக்கும்
 • நெஞ்சில் / முதுகில் கைவைத்துப் பார்த்தால் மார்பில் சளி கட்டிக் கொண்டு கர்கர் என்று ஒலி கேட்கும். இதனால் ஆஸ்துமா / இளைப்பு நோய் என்றெல்லாம் பயம் கொள்ள வேண்டாம்.
இரவு நேரம். அல்லது வேறேதோ இக்கட்டான சூழல். டாக்டரிடம் உடனடியாகக் கூட்டிச் செல்ல முடியாத நிலை. அப்போது என்ன செய்வது? 

 1. விக்ஸ் அல்லது யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை நெஞ்சிலும் முதுகிலும் மட்டும் தடவி விடவும். நெற்றியில் மூக்கில் தலையில் என்று சகட்டு மேனிக்கு எல்லாம் தடவ வேண்டாம்.
 2. கை, கால், நெஞ்சு, முதுகு, காது போன்ற உடல் பாகங்களை கெட்டியான துணி அல்லது பழைய காட்டன் புடவையால் நன்றாக சுற்றி வையுங்கள். சிறிது வளர்ந்த குழந்தை என்றால் ஸ்வெட்டர் போன்றவற்றை அணிவிக்கலாம். கம்பளியால் போர்த்துவதும் உதவும். ஆனால் முகத்தை மூடிக் கொண்டு விடும் அபாயம் இருப்பதால், பழைய காட்டன் புடவையை  உபயோகித்தல் நலம்.
 3. வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு சிறிய துண்டை (தோரயமாக அரை இன்ச் அளவு) நறுக்கி ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டு சப்பாத்திக் கல்லில் நசுக்கி, பின் ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் பிழிந்தால் மூன்று நான்கு சொட்டு இஞ்சிச் சாறு கிடைக்கும். இதை மூன்று சொட்டுத் தேனில் (டாபர் தேன் சுத்தமாக இருக்கிறது) குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுங்கள். உடனேயே இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் நின்று விடும். இதை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். 
 4. இஞ்சிச் சாரை பிழிந்து ப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டாம். உடலுக்கு கெடுதல். அவ்வப்போது புதிதாக சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
 5. எப்போதும் கைவசம், ஜலதோஷத்திற்கு என்று ஏற்கனவே மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட மருந்து வைத்திருக்கவும். அதை ஒரே ஒரு டோஸ் தரலாம். குழந்தைகளுக்கான பாராசிடமால் மருந்தும் அப்போதைக்கு நிலைமையைக் கட்டுப் படுத்த உதவும். குழந்தையின் தலை பாரத்தைக் குறைக்கும்.
 6. சிறிது வளர்ந்த குழந்தை (ஒரு வயதுக்கு மேல்) என்றால் வெஜ் கிளியர் சூப் (முட்டைகோஸ் மற்றும் சோளமாவு (cornflour) போட்டு உப்பு-மிளகு  தூவி கொடுக்கலாம். ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தை என்றால் வெது வெதுவென்றிருக்கும் (ஜாக்கிரதை) வெந்நீரில் சிறிது தேன் விட்டு டீஸ்பூனால்  கொடுக்கலாம். மிகவும் கவனமாகக் கொடுங்கள்.
 7. அல்லது பாலில் ஒரு சிட்டிகை (pinch) மஞ்சள் பொடி மற்றும்  ஒரே ஒரு சிட்டிகை மிளகுத் தூள்  போட்டுக் கொடுக்கலாம்.
சுய மருத்துவம் / கை வைத்தியம் என்றும் எப்போதும் ஒரு டோஸ்சுக்கு மேல் நீங்களாகச்  செய்ய வேண்டாம். முடிந்தளவு சீக்கிரம் மருத்துவரிடம் காட்டுங்கள். வழக்கமாக குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அப்போது இல்லை என்றால் அருகிலுள்ள பொது மருத்துவரிடம் காட்டி தெளிவு பெறுங்கள்.

புதிய மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நீங்கள் ஏற்கனவே குழந்தைக்கு கொடுத்திருக்கவில்லை என்றால், என்னதான் அவை குழந்தைகளுக்கான மருந்துதான் என்றாலும், தயங்காமல் மருந்துகளைப் பற்றி அந்த மருத்துவரிடம் தீர விசாரித்து, மருந்தின் தீவிரத்தன்மை (strength of the medicines to the child) பற்றி நன்கு அறிந்து, உங்களுக்கு (மனதிற்கு) திருப்தி ஏற்பட்ட  பின்பே குழந்தைக்கு கொடுங்கள். தான் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பற்றி உங்களுக்கு விவரிப்பது மருத்துவரின் கடமை. அவர் தப்பா நினைச்சுப்பாரோ என்று ஒன்றும் கேட்காமல் வந்து விடாதீர்கள்.

பெரும்பாலும் தாய்க்கு instinct என்ற உள்ளுணர்வு குழந்தைக்கான இடர்களை உணர்த்தும். எந்த புதிய மருந்தையும் ஒரு டீஸ்பூன் (தாய்/தந்தை) தானே ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்து பின்பே குழந்தைக்கு கொடுக்கவும்.

பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளில் புதியதாக ஏதும் இருந்தால், குழந்தைக்கு கொடுக்கும் முதல் டோஸ் பாதிக்கும் குறைவாக கொடுத்து, நான்கு மணிநேரம் குழந்தையை நன்றாக கவனித்து,  பக்க விளைவு ஏதும் இல்லையா என்று அறிந்த பின்பே முழு டோசும் கொடுக்கவும்.

பக்க விளைவுகள் இருப்பதற்கான அறிகுறிகள்:
 • பெரும்பாலும் முதலில் விரல் நகங்களில் வழக்கமான நிறம் மாறி, கறுத்துப் போகும் அல்லது நிறம் அடர்த்தியாகும். 
 • கை கால்கள் ஜில்லிட்டு விடும் 
 • காது மடல்கள் சூடாகி விடும்.
 • குழந்தை வாந்தி எடுக்கும்
 • உடலில், கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தடித்து, சிவந்து போகும். அரிக்கும், குழந்தை அந்த இடங்களைச் சொரிந்து விடும்.
 • உடலில் கட்டிகள் பொரிகள் தோன்றலாம்
 • குழந்தை சிறு நீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டு அழும்
 • பேதி ஏற்படக் கூடும்
இந்த மாதிரி ஏற்பட்டால், பதட்டப் படாமல் (சொல்வது எளிது.... இருந்தாலும்), குறைந்த பட்சம் நீங்களே அழுது சோர்ந்து போகும் அளவுக்கு பதட்டப் படாமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் முழுதும் காட்டன் துணியால் நன்றாகப் போர்த்தி, கூட்டிச் சென்று விடுங்கள். அப்படி செல்லும் போது, நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்துகள் அனைத்தையும், மருத்துவரின் பிரிஸ்க்ரிப்ஷனையும் (prescription), மருந்து வாங்கிய கடை-பில்லையும் (medical bill) கையோடு கொண்டு செல்லுங்கள்.

===============================
new update: மேலும் சில தகவல்கள் ஹுசைன்னம்மா கேட்டதால் பின்னூட்டத்தில் கொடுத்தேன். ரீடரில் படிப்பவர்களுக்காகவும், பின்னூட்டங்கள் படிக்காதவர்களுக்கும், இங்கே கொடுக்கிறேன்.
===============================
/// ஃபிரிட்ஜில் ஒருவாரம் வரை வைத்துக் குடித்து வருகிறார். ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது அல்ல என்று சொன்னதால் ஒரு குழப்பம், அதான்.///

இஞ்சிச் சாறு சீக்கிரம் புளித்து விடும். அப்போது அதில் இருந்து சுரக்கும் அமிலம் வயிற்றிற்கு கேடு விளைவிக்கும், மேலும் இஞ்சியின் உண்மையான மருத்துவ குணம் மாறுபடும்.

அதிக கடினமான (சுக்கு அல்ல), கனமான, தோல் சுருங்கி இருக்கும், கொளகொளவென்றிருக்கும், மிகவும் பிஞ்சாக, சின்னதாக இருக்கும் இஞ்சியை, மருத்துவ குணம் இல்லாமலோ இழந்தோ இருப்பதால், உபயோகிக்கக் கூடாது.

இஞ்சியை துண்டுகளாக மதிரா (ஆல்கஹால், வயின்,ஸ்பிரிட்) அல்லது ஷெர்ரி போன்றவற்றில் இட்டு கண்ணாடிக் குடுவை / கண்ணாடி ஜாடியில் பாதுகாக்கிறார்கள்.

இஞ்சித் துண்டுகளை வெல்லம் / சர்க்கரைப் பாகு / frozen ginger போன்ற வகைகளிலும் பாதுகாக்கலாம்.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக, இஞ்சிச் சாரை பாதுகாக்கும் முறைகள் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. http://www.ehow.com/how_5692283_preserve-ginger-juice.html

எப்படி இருந்தாலும், ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு, பழைய / frozen வகை உணவுகளை முடிந்த வரை / அறவே தவிர்க்கலாம்.


// இஞ்சி+எலுமிச்சைச் சாறு தினமும் ஒரு டீஸ்பூன் போல அருந்தி வந்தால் சளி பிடிக்காது //

உண்மைதான். ஆனால் ஒரு தம்ளர் சாதாரண அறை வெப்பநிலையில் (normal room temperature) உள்ள தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றிற்கு மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு என்ற அளவே பயன்படுத்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. வெறும் வயிற்றில் பருகுவதால், இதில் ஒரு பின்ச் (சிட்டிகை) சர்க்கரை மற்றும் ஒரு பின்ச் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

இரவில் இஞ்சி சாப்பிடக் கூடாது. வாயுக் கோளாறு, மற்றும் ஜீரணக் கோளாறுகள் வரும்.


///இஞ்சிச் சாறின் அடியில் தேங்கும் வெண்ணிறப் படலம் ‍ அதைப் பொதுவாக நாம் நீக்கிவிட்டுத்தான் குடிப்போம். ஆனால் ஒரு தோழி, அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் என்று சொன்னார்.///

கால்சியம் எல்லாம் இல்லைங்க. அது ஸ்டார்ச் / ginger starch. சாறாக குடிக்கும் போது அதைப் பயன்படுத்தக் கூடாது.

இஞ்சிச் சாற்றை பிரிட்ஜில் பாதுகாத்தால் இந்த வெள்ளை வண்டலை (ஸ்டார்ச்) நீக்கி விட்டே பாதுகாக்க வேண்டும். fermentation-ஆவதற்கு ஸ்டார்ச் உதவுவதால், கண்ணாடிக் குடுவை வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

மாறாக இந்த ஸ்டார்ச்சை மீன் வறுக்கும் போதும், சூப் போன்றவற்றிலோ கலந்து பயன்படுத்தலாம். இந்த வெள்ளை வண்டலை காயவைத்து பாட்டிலில் வைத்தும் பயன் படுத்தலாம். மொலாசெஸ் போன்றவற்றில் இஞ்சியை பயன்படுத்தவே கூடாது.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

அனைவருக்கும் பேரன்ட்ஸ் கிளப் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

பிள்ளையை பார்த்து பார்த்து வளர்ப்போம்.

சில வீடுகளில் கண்டிப்பு அதிகமாகவே இருக்கும்.
அதுவும் உயர் பதிவுகளில் இருப்பவர்களின் பிள்ளைகள்,
கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் வீட்டுப்
பிள்ளைகள் கொஞ்சம் விலகியே இருப்பார்கள்.
காரணம் வீட்டில் விதிக்கப்படும் கட்டுப்பாடு.

என்ன கட்டுப்பாடு???

அவங்களோட சேராத. நமக்கு சமமானவங்க இல்ல!!

அவங்களோட சேர்ந்து சுத்தினா நமக்கு கொளரவ
குறைச்சல்!

நம்ம வீட்டு நிலையென்ன? அவுங்க நிலை என்ன?
பாத்து நட்பு வெச்சுக்கோ.

இப்படி தனிமைப்படுத்தி யாருடனும் அதிகமாக
கலக்காமல் வளர்ப்பதால் அந்தக் குழந்தையின் மனதில்
ஏக்கம் இருக்கும்.

என் நண்பர் ஒருவர். மிகச்சிறந்த வக்கீல். அருமையான
இரண்டு குழந்தைகள். மகனும், மகளும் மதிப்பு, மரியாதை
தெரிந்த குழந்தைகள். அனைவருடனும் அன்பாக இருப்பார்கள்.

”உங்கள் பிள்ளைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்! இனிமையான
பிள்ளைகள். அனைவருடனும் கலந்து பேசி மகிழ்வாக இருக்கிறார்கள்!”
என்றேன். அதற்கு அவர். பாராட்டிற்கு மிக்க சந்தோஷம்.

என் அப்பாவும் வக்கீல் தான். அதானால் வக்கீல்,
டாக்டர் போன்ற பதவிகளில்
இருப்பவர்களின் பிள்ளைகளோடுதான் விளையாடி, பேச
வேண்டும் என வீட்டில் கட்டுப்பாடு இருந்தது. அதனால் சராசரி
குழந்தையின் ஆனந்தத்தை அடைந்ததில்லை. பிள்ளையார
ஆற்றில் கரைக்க ஆடிச்செல்லும் சக நண்பனின் சந்தோஷம்
எனக்கு கிட்டியதே இல்லை.

நான் இழந்த பிள்ளை பிராயத்தை என் பிள்ளைகள் அனுபவிக்க
வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்”. என்றார்.

சத்தியமான வார்த்தைகள்.

திரும்ப கிடைக்காத பிள்ளை பருவத்தை தடையில்லாமல்
அனுபவிக்க அனைவருடனும் கலந்து பழக விடுங்கள்.

எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் இவனுக்கு புரியமாட்டேன் என்கிறது என்று சலித்துக் கொள்ளும் பெற்றோர் பலர். புரிய வைப்பதற்காக நாம் செய்யும் முயற்சிகள் பல தோல்வியையே தழுவுகின்றன. அதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வோம்.

பொதுவாக புரிதல் எப்படி நடக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்வோம். நமக்கு ஏற்கெனவே தெரிந்த அல்லது புரிந்த ஒரு விசயத்தை வைத்தே புதிய விசயங்களை தெரிந்துகொள்கிறோம் அல்லது புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு குச்சியைப் (அல்லது கம்பி) பற்றி நன்றாக தெரியும். அது ஒரு சாதாரண பொருள். அதனால் அதை பார்த்திருக்கும், பயன்படுத்தியும் இருக்கும். ஒரு பேனாவை அதன் கையில் கொடுக்கும்பொழுது, அதை ஒரு குச்சியாகத்தான் குழந்தை பார்க்கும். நாம் மூடியை திறந்து எழுதிக் காண்பிக்கும்போது குச்சி எப்படி எழுதுகிறது எனும் வியப்போடே பார்க்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கீழ்க்கண்டவற்றை புரிந்துகொள்ளும்.
1. குச்சி மாதிரியே இருக்கிறது ஆனால் எழுதுகிறது.
2. ஒரு பக்கம்தான் எழுதுகிறது, இன்னொரு பக்கம் எழுதமாட்டேன் என்கிறது.
3. எழுதுகிற பக்கம் கூராக இருக்கிறது. அதுதான் எழுதுகிறது.
4. குச்சியை ஒடிக்க முடியும் பேனாவை ஒடிக்க முடியவில்லை.
இப்படி பேனாவைப் பற்றிய புரிதல் படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். இவை எல்லாம் முதல் பார்வையிலேயே புரிந்துவிடும் என்றும் சொல்ல முடியாது, இதே வரிசையில் நிகழும் என்றும் சொல்ல முடியாது. குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.

நாம் சொல்லித் தரும்போது என்ன நிகழ்கிறது? குழந்தை குச்சியுடன் ஒப்பிட்டு பேனாவை புரிந்துகொண்டிருக்கும் வேளையில், நாம் Lead penடன் (பந்து முனைப் பேனா) விளக்கிக் கொண்டிருப்போம். அதனால் குழந்தை ஒரு முரண்பட்ட மன நிலையில் இருக்கும். நாம் ஒப்பிடும் Lead penஉடனேயே குழுந்தையும் ஒப்பிட்டாலும் கூட, முதல் கருத்தை குழந்தை புரிந்து உள்வாங்கிக் கொண்டிருக்கும்போதே நாம் நான்கைந்து கருத்துக்களை ஒப்பித்துக்கொண்டிருப்போம். சரி மெதுவாக ஒவ்வொரு கருத்தாக சொல்லலாம் என்றால், குழந்தைகள் வேகமாக புரிந்துகொண்டிருக்கும் வேளையில் சலிப்படைய செய்துவிடும். இப்படி பல காரணங்களால் நாம் சொல்லித் தரும்போது முரணபாடான சூழ்நிலையை உருவாக்கி புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறோம்.

சரி நாம் என்னதான் செய்வது. உங்களுக்கு தெரிந்த வழியில் ஒரு முறை சொல்லிவிட்டு புரிந்தாலும் புரியாவிட்டாலும் அடுத்த பாடத்திற்கு சென்றுவிடுங்கள். புரிய வைத்து விட்டுத்தான் அடுத்த பாடம் செல்வேன் என்று அடம் பிடிக்காதீர்கள். சொல்லித் தரும்போது சிறிது நேரம் இடைவேளை விடுங்கள். அந்த நேரத்தில் அவர்கள் விளையாண்டாலும் படித்ததை புரிந்தகொள்ள முயற்சிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் சிறிது நாள் கழித்து அவன் புரிந்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

உதாரணத்திற்கு எனது மகனுக்கு கல்-கால், பல்-பால், படம்-பாடம், படி-பாடி என்று உச்சரிப்பை வைத்து எங்கே கால் வரும் என்ற வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன். அவனுக்கு புரிந்தது போல் இருந்தது. Test வைத்தால் ஒன்று சரியாக எழுதினான், சிலவற்றை தவறாக எழுதினான். மறுபடியும் விளக்க முயற்சித்தேன். அவன் முகத்தில் ஒரு சலிப்பு தெரிந்தது. Rest என்று சொல்லி, விட்டு விட்டேன். நான் கணினியின் முன் அமர்ந்திருந்தேன். அவன் ஒரு சிறிய கார் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். விளாயாடிக்கொண்டே கல் கால் வராது, கால் கால் வரும் (குழப்பிக் கொள்ளாதீர்கள் ஹி! ஹி!) பல் கால் வராது பால் கால் வரும் என்று அவனாகவே பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ‘அப்பா பல்லுக்கு கால் வராது, பாலுக்கு கால் வரும் correct தானே’ என்றான். ‘very good சிபி correct ஆ சொல்றே’ என்று பாராட்டிவிட்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன், அவன் விளையாட ஆரம்பித்து விட்டான். இந்த நிகழ்ச்சி எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. நாம் புரிய வைக்க பல முறை முயற்சி செய்யும்போது நடக்காத புரிதல், பிறகு எப்படி நடந்தது என ஆராயும்போதே மேற்கண்ட கருத்துக்கள் எனக்குத் தோன்றின.

எனக்கு புரிந்தும் புரியாமலும் இருந்த ஒரு விசயத்தை உங்களுக்கு புரியவைத்து விட்டேன் என நினைக்கிறேன். புரிந்தால் புரியுதுன்னு சொல்லுங்க.புரியலைனா புரியலைனு சொல்லுங்க. புரியாம புரிஞ்சதுன்னு சொன்னா எப்பவுமே புரியாம போகும். புரிஞ்சத புரியலன்னு சொன்னா புரிஞ்சதும் புரியாம போகும். நான் சொல்றது புரிஞ்சுதா, புரியலையா? உங்களுக்கு புரிஞ்சிதா இல்லை புரியலயான்னு எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க.

"உங்க பொண்ணு என்ன வகுப்பு படிக்கிறா?"

"இந்தம்மா சுஜா, இங்க வா..என்ன படிக்கிற மாமாகிட்ட சொல்லு..", "அதல பாருங்க..இவ என்ன படிக்கிறான்னே தெரியல..4ஆவதோ 5ஆவதோ...இது எல்லாம் என் மனைவி சமாச்சாரம்..எல்லாப் பொறுப்பும் அவகிட்ட விட்டாச்சு..நமக்கு நேரம் எங்க இருக்குங்க?"

இப்படி ஒரு அப்பா..

"என்ன ரேங்க் ராஜான்னா கேட்ட? ஏ ராஜா..சித்தி கேக்குறாங்க வந்து சொல்லுப்பா..நான் என்னத்தக் கண்டேன்? நா என்ன பெரிய படிப்பா படிச்சுருக்கேன்..எல்லாம் அவுக அப்பாதான் பாத்துப்பாக..இதெல்லாம் அவுக அப்பா சமாச்சாரம். நமக்கு என்ன தெரியும்?"

இப்படி ஒரு அம்மா..

இப்படியும் நடக்கிறது. குழந்தைகளின் உலகத்தில் இன்னும் காலடி எடுத்து வைக்காத பெற்றோரும் சிலருண்டு. தத்தம் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குபவர்கள் பிள்ளைகளுக்காக அன்றாட அலுவல்களுக்கேயன்றி நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகளின் உலகம் நம்முலகத்தினின்று வேறுபட்டது. நமக்குத் துச்சமென்பது அவர்களுக்கு உச்சம்..இதையே மாற்றியும் சொல்லலாம். இதைச் சரிவரப் புரிந்து கொள்வது அவசியம்.

இயந்திரகதி உலகமாகிப் போய்விட்டது இன்றைய உலகம். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக் குடும்பங்கள் தீவுக் குடும்பங்கள் என்று போய்க் கொண்டிருக்கிறோம். வேலை நிமித்தம் புலம் பெயர் வாழ்வு ஒரு பக்கம். நேரமில்லை நேரமில்லை என்று கூறி ஓடிக் கொண்டே இருக்கிறோம். குழந்தைகளுக்கான முன் மாதிரி இன்று பெற்றோர் மட்டும்தானே.

எது எப்படியோ, குழந்தை வளர்ப்பில் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குவதுதான் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம். இதற்கொன்றும் பெரிய படிப்போ, நாளின் பல மணி நேரங்களோ தேவையில்லை. குழந்தைகளின் ரசனை, ஈடுபாடு, திறமை, முயற்சித்திறன் இப்படி ஒரு குழந்தையின் பலவிதமான செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள, அவர்களைப் படிக்க அவர்களுக்காய்ச் சற்று நேரம் ஒதுக்குவது அத்தியாவசியமாகிறது.

இந்த வயதுதான் என்றில்லை..ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் தேவைகளும் செயல்பாடுகளும் மாறி மாறி அமையும். இதனைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

சில டிப்ஸ்:

1. அப்பா, அம்மா இருவரின் கூட்டுப் பங்களிப்பு - குழந்தையைப் பற்றி அ முதல் ஔ வரை
அறிதல் மிக முக்கியம். அவரவர் பார்வையில் குழந்தையைக் கண்காணிக்க நேரம் இருவருமே ஒதுக்குவது மிக முக்கியம்.

2. தினமும்..அல்லது அவ்வப்போது குழந்தையைப் பற்றிய புரிதலைத் தம்பதிகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்தல். சிறிய விஷயமென்று எதையும் ஒதுக்குதல் கூடாது.

3. குழந்தையின் ஈடுபாடுகளுக்கேற்ற சூழல் உருவாக்கிக் கொடுத்தல். உதாரணமாக ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் என்றால் அதற்குச் சமயம் ஒதுக்கிக் கொடுப்பது, அவர்கள் வேலைத்திறனை ஊக்குவிப்பது.

4. வேலைகள் இருந்து கொண்டேதானிருக்கும். இதையும் ஒரு வேலை என்றும் கடமை என்றும் நினைத்துச் செயல்படுங்கள்.


***************************************************

தோழி பாசமலரின் பதிவை மீள்பதிவாக போட்டிருக்கிறேன்.இந்த வலைப் பக்கத்தைப் பற்றிய எனது பதிவை படிக்கவும்.


இன்றைய இலவச மென் பொருளாக மழலையருக்குரிய மென் தொகுப்பு உள்ளது.


நான் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை.


நேரம் கருதி இன்றே அவசர அவசரமாக இந்த பதிவை இடுகிறேன்.


உபயோகமா இருக்கலாம்.


இன்றே பதிவிறக்கம் செய்து நிறுவிப் பாருங்கள்.

பிள்ளைகள் மனது கல்மிஷமில்லாதது, பரிசுத்தமானது.
அதனால் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள்.

கள்ளங்கபடமற்ற அந்த பூக்களின் சுகந்தம் தரும்
சுகம் சுகமோ சுகம்.

அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விளைவிப்பது போல
பெரியவர்கள் நாமே பல செய்கைகள் செய்கிறோம்.
இது மிக மிக தவறு.

அப்படி என்னங்க செஞ்சிடறோம்னு கேட்டா...
பல பெரியவங்க அந்தக்கால ஆளுங்க மட்டுமில்ல
மாடன் காலத்து காரங்களும் தான் ஒரு குழந்தையை
பார்த்தா கொஞ்சினோமா, பேசினோமான்னு வாரது இல்ல.

கலர் குறைவா இருக்கற குழந்தையா இருந்தா
“உங்கப்பா,அம்மா என்ன நேரம்!! நீ மட்டும்
ஏண்டி கரிக்கட்டையா பொறந்திருக்க” என்று
சொல்வது.

”உங்க கலர் உங்க குழந்தைக்கு வரலை சார்”என்பது
இதெல்லாம் குழந்தையின் மனதில் நஞ்சை கட்டாயம்
விதைக்கிறது.

நிறத்தில் என்ன இருக்கிறது??? புற அழகு முக்கியாமா?
அக அழகு முக்கியமா??? அகம் அழுக்கு இல்லாமல்
இருந்தால் புறத்தில் தானாகவே தெரியும்.


பாரதியின் இந்தக் கவிதையை எப்போதும்
மறக்காதீர்கள் பெற்றோர்களே, பெரிய்வர்களே!!!


வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.அடுத்த நஞ்சு,” பிள்ளைக்கு சோறே போட மாட்டீங்களா!!இப்படி
நோஞ்சானா இருக்கு!!”

பிள்ளை பெத்த பிறகு நீ நல்லா ஊறியிருக்க, உன் பிள்ளை
சவங்கி கிடக்கு”

இத்தகைய வார்த்தைகள் பிள்ளைகளின் மனதில் ஆறாத
காயத்தை உண்டாக்கி விடுகின்றன. எதிர்த்து பேசாமல்
குழந்தை இருக்கிறது என்பதற்காக பெரியவர்கள் செய்வது
எல்லாமும் சரியில்லை.

பல பிள்ளைகள் மனதுக்குள் வைத்து கொண்டே மெல்ல
மொளனமாக அழுவார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


தயவு செய்து பிள்ளை மனத்தில் நஞ்சு வளர்க்க வேண்டாம்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்