பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label Kids Care. Show all posts
Showing posts with label Kids Care. Show all posts

அதிக ஜலதோஷத்தினால் (சளி) காதில் வலி ஏற்பட்டால், குழந்தை ஓயாமல் அழுது கொண்டும், காது வலியினாலும், அழுகையினால் ஏற்படும் தலை மற்றும் தொண்டை வலியினாலும் அதிக துன்பத்திருக்கும் ஆளாகும்.

காது இன்பக்ஷன் தானா இல்லை சளியால் ஏற்பட்ட காது வலியா என்று எப்படி அறிவது? எப்படித் தவிர்ப்பது?
சளியால் ஏற்பட்ட காது வலியில், ஒற்றைக் காதில் (பெரும்பாலும் இடது) ஊசி குத்துவது போன்ற வலியும், கண்ணுக்கு கீழ் மூக்கின் அருகிலும், நெற்றியில் (படத்தில் dark colour-இல் காட்டப் பட்ட பகுதிகள்) கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால லேசாக அழுத்திக் கொடுத்தால் இதமாகவும் உணரும்.


  • ஒரு வேளை அன்றுதான் தலைக்கு குளிப்பாட்டி இருந்தீர்கள் என்றால், சளி பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல சுத்தமான ear-buds அல்லது மல் துணியால் காதுகளை சுத்தம் செய்து விடவும். தலையை நன்றாகத் துவட்டி விட்டு, தலை உச்சியில் சிறிதளவு வீபூதியும் நெற்றியில் சிறிது வீபூதியும் மிக சிறிதளவும் தண்ணீரில் குழைத்து இட்டு விட்டால் நீர் கோத்துக் கொள்ளாமல் இருக்கும்.
  • இல்லை என்றால் நாட்டு மருந்துக் கடைகளில் "நீர் கோவை மாத்திரை" என்று கிடைக்கும். ரொம்ப வீரியம் கொண்டது மற்றும் காரமானது. கை கண்ட மருந்து. இதை அப்படியே குழைத்து குழந்தைகளுக்கு நெற்றியில் போட்டால் தோல் எரியும். அதனால் சிறிது வீபூதி அல்லது மஞ்சள் சேர்த்து குழைத்து இடவும். 
  • இல்லை என்றால் சுக்கோடு கடுகை அரைத்து மைதாவில் குழைத்து நெற்றிக்கு பத்து போடவும்.
  • மேலும் வாரம் ஒரு நாள், தலைக்கு குளிப்பாட்டும் அன்று, மூன்று பல் பூண்டு, மூன்று வெற்றிலை, ஒரு ஆர்க்கு வேப்பிலை, பத்து துளசி இலை, மற்றும் ஓமம், மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை,  வால் மிளகு, (எல்லாம் மூன்று டீஸ்பூன்) அதிமதுரம், கண்டந்திப்பிலி, அரிசித் திப்பிலி, (எல்லாம் ஒவ்வொன்று) இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒரு சொட்டு (ஒரே ஒரு சொட்டுதான்) விளக்கெண்ணை விட்டு வறுத்துக் கொண்டு மூன்று தம்ப்ளர் தண்ணீரில் போட்டு ஒரு தம்ப்ளராக வற்றும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, வெது வெதுவென்று கொடுக்கவும். என் சொந்த அனுபவத்தில் எனக்கு ரொம்பவே உதவிய கஷாய ரெசிப்பீ இதுதான். குழந்தையை குளிப்பாட்ட வெந்நீர் போடும் போதே இதையும் ரெடியாக வைத்திருப்பேன். குளித்து தலை துவட்டியதும் தானே வந்து குடித்து விட்டு போய் விடுவாள்.


எப்படி கண்டு பிடிப்பது?
  • மஞ்சள்/பச்சையாக சளி கட்டிக் கொண்டு, சளி நாற்றம் அடிக்கும். 
  • மூக்கை உரிய சிரமப் படுவார்கள்.
  • தூக்கமின்மை  / படுத்துக்கொள்ள சிரமப்படும்
  • குழந்தை காதுகளை பிடித்து/பொத்திக் கொண்டு அழும் (அல்லது) காதை பிடித்து இழுக்கும், காதை அறைவது போல தட்டும் / தேய்த்து விட்டுக் கொள்ளும்
  • இருமல்
  • தலை வலி
  • மூக்கில் நீர் வடிதல்
  • உணவு உண்ண மறுத்தல்
  • விழுங்க சிரமப் படுதல்
  • மலம் / சிறுநீர் கழிக்காமல் இருத்தல் (குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு தரம் மலமும், அதிக பட்சம் ஆறு முறையாவது சிறுநீரும் கழிக்க வேண்டும்)
  • ஜுரம் வரலாம் 
  • வாந்தி எடுத்தால் 
  • நை நை என்று அழுது கொண்டே இருத்தல்
சரி, காது வலி வந்து விட்டது, என்ன செய்வது?

  • வாந்தி எடுத்தால் வீட்டில் ஓம வாட்டர் இருந்தால் தண்ணீரில் கலந்து குடிக்க வெந்நீர் கொடுங்கள்.
  • பஞ்சில் ஒரு சொட்டு யூகாலிப்டஸ் எண்ணெய் சொட்டி, அதை காதில் வையுங்கள். இதமாக இருக்கும்.
  • மூக்கு மற்றும் நெற்றி (சைனஸ் ஸ்பாட்டுகள்) ஆகிய இடங்களில் கொஞ்சமாக விக்ஸ் தடவி அழுத்திக் கொடுங்கள்.
  • மேலே சொன்ன "பத்து" ஏதாவது ஒன்றை போடுங்கள்.
  • முடிந்த வரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போங்கள். அப்படி போகும் போது "பத்து பதினொன்று", குழந்தையின் மூக்கு எல்லாவற்றையும் துடைத்து விட்டு கூட்டிப் போங்க.
  • டாக்டர் தரும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை தவறாமல் கொடுங்கள். Acetaminophen or ibuprofen முக்கால்வாசி காது வலிக்கு நல்ல மருந்தாகவே இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே காது வலி முழுமையாக குணமாகி விடுகிறது. இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி முழு டோஸும் கொடுத்து விடுங்கள்.
டாக்டர் கொடுத்த மருந்துகள் 24-மணி நேரத்துக்குள் செயல் படவில்லை என்றாலோ, தொடர்ந்து காது வலி இருந்து கொண்டே இருந்தாலோ, குழந்தையை சமாதானம் செய்ய முடியாதளவு அழுது கொண்டே இருந்தாலோ, குழந்தைக்கு கழுத்து பிடிப்பு (stiff neck) ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று விடுங்கள். அது காது இன்பெக்ஷன்னாகக் கூட இருக்கலாம்.



0






குழந்தைகளின் உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அது தனித்துவமானது. எல்லையற்ற பாதையில் முடிவில்லாத பயணமாய் செல்ல அவர்களை தூண்டுகிறது. நட்பும் சந்தோஷமும் மட்டுமே அவர்களின் ஆசை, விருப்பம் மகிழ்ச்சி.


அப்படி எல்லையில்லா பேரானந்தத்தை விரும்பிய இரண்டு பாலினம் புரியாத பால்ய நட்பு சிறார்களின் கதையே விவா கியூபா என்றும் ஸ்பானிஷ் திரைப்படம்.


மாலு உயர்குடியில் பிற்ந்த செல்வந்தரான சிறுமி. அவளது தந்தையோ அவளது குடும்பத்தை விட்டு விலகி வெகுதூரம் வாழ்ந்து வருபவன். தாயுடனும் தனது முதிர்ந்த பாட்டியுடன் வசித்து வருகிறாள்.


மாலுவுக்கு சம வயதுடைய ஜார்ஜி எதிர் வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் சிறுவன். கம்யூனிச சித்தாந்த கொள்கைகளுடைய குடும்பத்தில் பிறந்தவன்.


இருவரும் ஒரே பள்ளியில் படிக்கும் இணை பிரியா நண்பர்கள். துள்ளி திரிவதும் சிறு சிறு சண்டைகளுடன் சதா விளையாடி மகிழ்வதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுமாய் பொழுதுகள் போகின்றது. இது இரு வீட்டாருக்கும் பிடிப்பதில்லை. மாலுவை அவள் தாய் ஆண்பிள்ளைகளுடன் விளையாடுவது தவறென்றும் பெண் குழந்தைகள் வீட்டின் உள்ளேயே தான் விளையாட வேண்டும் என்றும் நச்சரித்து கொண்டே இருக்கிறாள். இதனால் மாலுவுக்கோ தாயின் மீது அளவற்ற கோவம். ஆனால் அவளின் ஒரே ஆறுதல் வயதான பாட்டி மட்டுமே.


இதே நிலைதான் ஜார்ஜிக்கும். ஜார்ஜியின் தந்தை மாலுவினுடனான நட்பை துண்டிக்க வேண்டுமென்றும் சக ஆண் நண்பர்களுடன் விளையாட அறிவுறுத்துகிறார். அப்பாவை கண்டாலே அவனுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. மாலு & ஜார்ஜியாவின் நட்பால் இரு குடும்பமும் இந்தியா பாகிஸ்தானாய் முறைத்து கொள்கிறது.


நிலைமை இப்படி இருக்க மாலுவின் தாய் வேறொருவனை மணமுடிக்க எண்ணுகிறாள். ஜெர்மனியில் வசிக்கும் அவனிடம் சேர்ந்து வாழ விருப்பமும் தெரிவிக்கிறாள். இதற்காக சட்டப்படி மாலுவின் தந்தைக்கு அவர் கையெழுத்திட வேண்டி ஒப்புதல் படிவத்தையும் அனுப்பி வைக்கிறாள். மனமுடைந்து போகிறாள் மாலு.

ஒரு புதிய வாழ்க்கை வருகிறதென்றும் ஜெர்மனியில் சுகமாய் வாழலாம் என்று மாலுவை தேற்றுகிறாள் தாய். சோகத்திலும் சோகமாய் பாட்டியும் திடிரென்று மரணித்து விட சொல்லமுடியாத வேதனையுடன் இருக்கிறாள் மாலு. விளையாடவோ பாடத்திலோ விருப்பமின்றி இருப்பதை பார்த்து ஜார்ஜியாவும் மிகவும் வருத்தப்படுகிறான்.


தாயின் விருப்பத்தையும் இடம் பெயர்வது பற்றியும் மற்றும் அனைத்து விபரங்களையும் நண்பன் ஜார்ஜியாவிடம் அழுதபடியே சொல்கிறாள். தற்போதைய பள்ளி கூடத்தையோ ஜார்ஜியாவையோ பிரிய ஒரு போதும் இயலாது என்றும் வருந்துகிறாள். அவளை தேற்றுகிறான் ஜார்ஜியோ.


இதற்கு ஒரே வழி மாலுவின் தந்தையை சந்தித்து அவரை அந்த ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடாமல் செய்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் என்றும் இருவரும் தனியே கிளம்பி போய் அவரை சந்திக்கலாம் என்று முடிவும் செய்கின்றனர்.

இரவோடு இரவாக வேண்டிய துணிகளையும், ஊருக்கு செல்ல வரைப்படம் சேர்த்து வைத்த உண்டியலையும் எடுத்து கொண்டு பள்ளி செல்வது போல காலையில் கிளம்பி இருவரும் உற்சாகமாகவும் அதீத சந்தோஷத்துடனும் பயணத்தை தொடங்குகின்றனர்.

படகில் ஆரம்பித்த பயணம் கார், மோட்டர் சைக்கிள், மாட்டுவண்டி, இரயில் என்று சகலவித பாதைகளிலும் பயணிக்கிறது.

பசியும் சோர்வும் வாட்டுகிறது. தொலை தூர கிராமத்தில் பார்வையிழந்த பெண்ணொருத்தியின் வீட்டிலிருந்து ரொட்டியையும் பாலையும் திருட முற்பட அவள் நாயின் துணையோடு இருவரையும் விரட்டி பிடிக்க செய்வதறியாது திகைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து ஒட இரவில் காட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக வழி போக்கன் சொன்னதை நம்பி பயந்து ஜார்ஜியாவிற்கு கடுமையான காய்ச்சல்.

டாக்டரிடம் சென்று காண்பிக்க ஊர் மக்கள் உதவினாலும் ஊசிக்கு பயந்து ஜார்ஜியா ஒடுவதும் நகைச்சுவையாய் காட்சிகள்.


இதனிடையே இரு வீட்டாரும் போலிஸில் புகார் கொடுக்க இரு குடும்பமும் ஒத்துழைத்தால் மட்டுமே குழந்தைகளை மீட்க முடியும் என்கிறார் அதிகாரி. சண்டையிட்டு கொண்டிருந்த இருவரின் குடும்பம் சிறிது சிறிதாய் நட்பாகி ஒருவருகொருவர் ஆறுதலாய் இருந்து வர குழந்தைகள் இருவரும் ஒரு பக்கம் போலிஸ் துரத்திலில் இருந்தும் மறைந்து மறைந்து ஒடுவதும் பல புதிய மனிதர்களை சந்திப்பதுடன் ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுக்க் பல வித அனுபவத்தையும் புத்துணர்வையும் அளிக்கிறது.

ஒரிடத்தில் தவறுதலாய் விட்டு சென்ற ஜார்ஜியாவின் கைப்பையை வைத்து போலிஸ் அவர்களின் இருப்பிடம் தெரிவிக்க இரு குடும்பமும் குழந்தைகளை தேடி புறப்படுகின்றனர்.

கடைசியில் மலை குகைகளை ஆராய்ச்சி செய்யும் ஒருவனின் துணையோடு மாலுவின் தந்தையிருக்குமிடத்தை சென்றடைந்து விடுகின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

அதற்கு முன் அங்கு வந்த் சேர்ந்த மாலுவின் தாயும் ஜார்ஜியாவின் பெற்றோர்களும் குழந்தைகளை கண்ட அனைவரும் முதலில் சந்தோஷத்திலும் பரவசத்தில் திளைத்தாலும் சிறிது நேரத்தில் யார் மீது குற்றம் என்று சண்டை பிடிக்க தொடங்கியவுடன் அருகே இருக்கும் கடற்கரையை பார்த்ததும் எதையும் பொருட்படுத்தாது அளவில்லா ஆனந்தத்துடன் விளையாட செல்கின்றனர் மாலுவும் ஜார்ஜியாவும்.

தூரத்தில் பெற்றோர்கள் சண்டையிட மணலில் குழந்தைகள் விளையாட அற்புத காட்சியாய் திரைப்படம் நிறைவு பெறுகிறது.


2005ல் வெளியான இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் பங்கு பெற்றதுடன் 34 உலக விருதுகளை வாரி குவித்துள்ளது. 2005 கேன்ஸ் குழந்தைகள் சர்வதேச விழாவில் முதன் முதலில் பரிசு பெற்ற கியூபா திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது. இயல்பான நடிப்பும் அருமையான ஒளிபதிவும் கூடுதல் சிறப்பு.

வானொலியில் காணாமல் போனவர்களின் பற்றிய அறிவிப்பை கேட்டவுடன் ஜார்ஜியா பெண் வேடமிட்டு திரிவதும், வழி நெடுகிலும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி பொய்யுரைப்பதும் பிறகு மாட்டி கொண்டு முழிப்பதும் சிறு சிறு சண்டையிடுவதும் மீண்டும் நட்பாவதும் இயல்பான நகைச்சுவையுடன் நெகிழ வைக்கும் காட்சிகள்.

இத்திரைப்பட்த்தை எழுதி இயக்கியிருப்பவர் கியூபா திரைப்பட துறையில் மிகவும் போற்றதக்க Juan Carlos Cremata. இவர் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் இயக்கிய அனுபவம் பெற்றவர். இயக்குநர் மற்றும் எடிட்டிங் பயிற்ச்சி பள்ளியில் ஆசிரியராகவும் இருந்து பல மாணவர்களுக்கு பயிற்ச்சியும் அளித்துள்ளார்.


குழந்தைகளை பற்றிய இத்திரைப்படம் பார்பவர் அனைவருக்கும் தமது பாலர் பருவத்தை கிளர செய்யும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளுடனும் குடுமபத்துடனும் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்.


பார்க்க டிரைலர் இங்கே

குழந்தைகள் குறித்த எந்தவித சிந்தனையில்லாமல் சென்னை போன்ற பெரு நகரங்களில் அவசர உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய புத்தகப்பைக்களுக்குள் அவர்கள் நசுங்கி கிடப்பதும் சதாராணமான நிகழ்வுகள். இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட தெருக்களில் விளையாடும் பிள்ளைகளை பார்க்க முடிவதில்லை.


நமது சிறு வயதில் நூற்றுகணக்கான விளையாட்டுகளில் உலகம் விரிந்து கிடந்ததை நினைத்து சந்தோஷப்படும் வேளையில் “தொலைக்காட்சி” பூதம் அந்த விளையாட்டுகளையெல்லாம் விழுங்கி விட்டதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடிவதில்லை.



குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டும் உடல் சோர்வை வெளிக் காட்டத் தெரியாமலும் சொல்லவும் தெரியாமல் இருக்கிற போது, குழந்தைகளுக்கு ஜலதோஷம் / சளி  பிடித்திருக்கு என்று பெற்றோராகிய நாம் எப்படிக் கண்டு பிடிப்பது?

  • குழந்தையின் கண்கள் கலங்கலாகவும், நிறம் / ஒளி குறைந்தும் இருக்கும்
  • வழக்கத்திற்கு மாறாக அழுகை அல்லது மகிழ்ச்சி குறைந்து இருக்கும்
  •  மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைபட்ட மூக்கு
  • தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல்
  • உடல் வெதுவெதுப்பாக இருக்கும்  / ஜுரம் இருக்கும்
  • தலையை உயர்த்தி பிடித்து வைத்துக் கொண்டால் சௌகரியமாக  உணரும்.
  • பசி குறைந்து இருக்கும் / சாப்பிட மறுக்கும்
  • சோர்வாய் இருக்கும், தூங்கி  வழியும், அதே சமயம் தூங்கவும் மறுக்கும்
  • நெஞ்சில் / முதுகில் கைவைத்துப் பார்த்தால் மார்பில் சளி கட்டிக் கொண்டு கர்கர் என்று ஒலி கேட்கும். இதனால் ஆஸ்துமா / இளைப்பு நோய் என்றெல்லாம் பயம் கொள்ள வேண்டாம்.
இரவு நேரம். அல்லது வேறேதோ இக்கட்டான சூழல். டாக்டரிடம் உடனடியாகக் கூட்டிச் செல்ல முடியாத நிலை. அப்போது என்ன செய்வது? 

  1. விக்ஸ் அல்லது யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை நெஞ்சிலும் முதுகிலும் மட்டும் தடவி விடவும். நெற்றியில் மூக்கில் தலையில் என்று சகட்டு மேனிக்கு எல்லாம் தடவ வேண்டாம்.
  2. கை, கால், நெஞ்சு, முதுகு, காது போன்ற உடல் பாகங்களை கெட்டியான துணி அல்லது பழைய காட்டன் புடவையால் நன்றாக சுற்றி வையுங்கள். சிறிது வளர்ந்த குழந்தை என்றால் ஸ்வெட்டர் போன்றவற்றை அணிவிக்கலாம். கம்பளியால் போர்த்துவதும் உதவும். ஆனால் முகத்தை மூடிக் கொண்டு விடும் அபாயம் இருப்பதால், பழைய காட்டன் புடவையை  உபயோகித்தல் நலம்.
  3. வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு சிறிய துண்டை (தோரயமாக அரை இன்ச் அளவு) நறுக்கி ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டு சப்பாத்திக் கல்லில் நசுக்கி, பின் ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் பிழிந்தால் மூன்று நான்கு சொட்டு இஞ்சிச் சாறு கிடைக்கும். இதை மூன்று சொட்டுத் தேனில் (டாபர் தேன் சுத்தமாக இருக்கிறது) குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுங்கள். உடனேயே இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் நின்று விடும். இதை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். 
  4. இஞ்சிச் சாரை பிழிந்து ப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டாம். உடலுக்கு கெடுதல். அவ்வப்போது புதிதாக சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. எப்போதும் கைவசம், ஜலதோஷத்திற்கு என்று ஏற்கனவே மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட மருந்து வைத்திருக்கவும். அதை ஒரே ஒரு டோஸ் தரலாம். குழந்தைகளுக்கான பாராசிடமால் மருந்தும் அப்போதைக்கு நிலைமையைக் கட்டுப் படுத்த உதவும். குழந்தையின் தலை பாரத்தைக் குறைக்கும்.
  6. சிறிது வளர்ந்த குழந்தை (ஒரு வயதுக்கு மேல்) என்றால் வெஜ் கிளியர் சூப் (முட்டைகோஸ் மற்றும் சோளமாவு (cornflour) போட்டு உப்பு-மிளகு  தூவி கொடுக்கலாம். ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தை என்றால் வெது வெதுவென்றிருக்கும் (ஜாக்கிரதை) வெந்நீரில் சிறிது தேன் விட்டு டீஸ்பூனால்  கொடுக்கலாம். மிகவும் கவனமாகக் கொடுங்கள்.
  7. அல்லது பாலில் ஒரு சிட்டிகை (pinch) மஞ்சள் பொடி மற்றும்  ஒரே ஒரு சிட்டிகை மிளகுத் தூள்  போட்டுக் கொடுக்கலாம்.
சுய மருத்துவம் / கை வைத்தியம் என்றும் எப்போதும் ஒரு டோஸ்சுக்கு மேல் நீங்களாகச்  செய்ய வேண்டாம். முடிந்தளவு சீக்கிரம் மருத்துவரிடம் காட்டுங்கள். வழக்கமாக குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அப்போது இல்லை என்றால் அருகிலுள்ள பொது மருத்துவரிடம் காட்டி தெளிவு பெறுங்கள்.

புதிய மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நீங்கள் ஏற்கனவே குழந்தைக்கு கொடுத்திருக்கவில்லை என்றால், என்னதான் அவை குழந்தைகளுக்கான மருந்துதான் என்றாலும், தயங்காமல் மருந்துகளைப் பற்றி அந்த மருத்துவரிடம் தீர விசாரித்து, மருந்தின் தீவிரத்தன்மை (strength of the medicines to the child) பற்றி நன்கு அறிந்து, உங்களுக்கு (மனதிற்கு) திருப்தி ஏற்பட்ட  பின்பே குழந்தைக்கு கொடுங்கள். தான் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பற்றி உங்களுக்கு விவரிப்பது மருத்துவரின் கடமை. அவர் தப்பா நினைச்சுப்பாரோ என்று ஒன்றும் கேட்காமல் வந்து விடாதீர்கள்.

பெரும்பாலும் தாய்க்கு instinct என்ற உள்ளுணர்வு குழந்தைக்கான இடர்களை உணர்த்தும். எந்த புதிய மருந்தையும் ஒரு டீஸ்பூன் (தாய்/தந்தை) தானே ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்து பின்பே குழந்தைக்கு கொடுக்கவும்.

பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளில் புதியதாக ஏதும் இருந்தால், குழந்தைக்கு கொடுக்கும் முதல் டோஸ் பாதிக்கும் குறைவாக கொடுத்து, நான்கு மணிநேரம் குழந்தையை நன்றாக கவனித்து,  பக்க விளைவு ஏதும் இல்லையா என்று அறிந்த பின்பே முழு டோசும் கொடுக்கவும்.

பக்க விளைவுகள் இருப்பதற்கான அறிகுறிகள்:
  • பெரும்பாலும் முதலில் விரல் நகங்களில் வழக்கமான நிறம் மாறி, கறுத்துப் போகும் அல்லது நிறம் அடர்த்தியாகும். 
  • கை கால்கள் ஜில்லிட்டு விடும் 
  • காது மடல்கள் சூடாகி விடும்.
  • குழந்தை வாந்தி எடுக்கும்
  • உடலில், கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தடித்து, சிவந்து போகும். அரிக்கும், குழந்தை அந்த இடங்களைச் சொரிந்து விடும்.
  • உடலில் கட்டிகள் பொரிகள் தோன்றலாம்
  • குழந்தை சிறு நீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டு அழும்
  • பேதி ஏற்படக் கூடும்
இந்த மாதிரி ஏற்பட்டால், பதட்டப் படாமல் (சொல்வது எளிது.... இருந்தாலும்), குறைந்த பட்சம் நீங்களே அழுது சோர்ந்து போகும் அளவுக்கு பதட்டப் படாமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் முழுதும் காட்டன் துணியால் நன்றாகப் போர்த்தி, கூட்டிச் சென்று விடுங்கள். அப்படி செல்லும் போது, நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்துகள் அனைத்தையும், மருத்துவரின் பிரிஸ்க்ரிப்ஷனையும் (prescription), மருந்து வாங்கிய கடை-பில்லையும் (medical bill) கையோடு கொண்டு செல்லுங்கள்.

===============================
new update: மேலும் சில தகவல்கள் ஹுசைன்னம்மா கேட்டதால் பின்னூட்டத்தில் கொடுத்தேன். ரீடரில் படிப்பவர்களுக்காகவும், பின்னூட்டங்கள் படிக்காதவர்களுக்கும், இங்கே கொடுக்கிறேன்.
===============================
/// ஃபிரிட்ஜில் ஒருவாரம் வரை வைத்துக் குடித்து வருகிறார். ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது அல்ல என்று சொன்னதால் ஒரு குழப்பம், அதான்.///

இஞ்சிச் சாறு சீக்கிரம் புளித்து விடும். அப்போது அதில் இருந்து சுரக்கும் அமிலம் வயிற்றிற்கு கேடு விளைவிக்கும், மேலும் இஞ்சியின் உண்மையான மருத்துவ குணம் மாறுபடும்.

அதிக கடினமான (சுக்கு அல்ல), கனமான, தோல் சுருங்கி இருக்கும், கொளகொளவென்றிருக்கும், மிகவும் பிஞ்சாக, சின்னதாக இருக்கும் இஞ்சியை, மருத்துவ குணம் இல்லாமலோ இழந்தோ இருப்பதால், உபயோகிக்கக் கூடாது.

இஞ்சியை துண்டுகளாக மதிரா (ஆல்கஹால், வயின்,ஸ்பிரிட்) அல்லது ஷெர்ரி போன்றவற்றில் இட்டு கண்ணாடிக் குடுவை / கண்ணாடி ஜாடியில் பாதுகாக்கிறார்கள்.

இஞ்சித் துண்டுகளை வெல்லம் / சர்க்கரைப் பாகு / frozen ginger போன்ற வகைகளிலும் பாதுகாக்கலாம்.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக, இஞ்சிச் சாரை பாதுகாக்கும் முறைகள் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. http://www.ehow.com/how_5692283_preserve-ginger-juice.html

எப்படி இருந்தாலும், ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு, பழைய / frozen வகை உணவுகளை முடிந்த வரை / அறவே தவிர்க்கலாம்.


// இஞ்சி+எலுமிச்சைச் சாறு தினமும் ஒரு டீஸ்பூன் போல அருந்தி வந்தால் சளி பிடிக்காது //

உண்மைதான். ஆனால் ஒரு தம்ளர் சாதாரண அறை வெப்பநிலையில் (normal room temperature) உள்ள தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றிற்கு மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு என்ற அளவே பயன்படுத்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. வெறும் வயிற்றில் பருகுவதால், இதில் ஒரு பின்ச் (சிட்டிகை) சர்க்கரை மற்றும் ஒரு பின்ச் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

இரவில் இஞ்சி சாப்பிடக் கூடாது. வாயுக் கோளாறு, மற்றும் ஜீரணக் கோளாறுகள் வரும்.


///இஞ்சிச் சாறின் அடியில் தேங்கும் வெண்ணிறப் படலம் ‍ அதைப் பொதுவாக நாம் நீக்கிவிட்டுத்தான் குடிப்போம். ஆனால் ஒரு தோழி, அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் என்று சொன்னார்.///

கால்சியம் எல்லாம் இல்லைங்க. அது ஸ்டார்ச் / ginger starch. சாறாக குடிக்கும் போது அதைப் பயன்படுத்தக் கூடாது.

இஞ்சிச் சாற்றை பிரிட்ஜில் பாதுகாத்தால் இந்த வெள்ளை வண்டலை (ஸ்டார்ச்) நீக்கி விட்டே பாதுகாக்க வேண்டும். fermentation-ஆவதற்கு ஸ்டார்ச் உதவுவதால், கண்ணாடிக் குடுவை வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

மாறாக இந்த ஸ்டார்ச்சை மீன் வறுக்கும் போதும், சூப் போன்றவற்றிலோ கலந்து பயன்படுத்தலாம். இந்த வெள்ளை வண்டலை காயவைத்து பாட்டிலில் வைத்தும் பயன் படுத்தலாம். மொலாசெஸ் போன்றவற்றில் இஞ்சியை பயன்படுத்தவே கூடாது.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

அனைவருக்கும் பேரன்ட்ஸ் கிளப் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



.





பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.


நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.


நன்றி: சங்கமம்

குழந்தைகளுக்கு முதல் வருடப் பிறப்பு கொண்டாடும் நாளன்றே, உங்கள் குழந்தையின் பல் மருத்துவருக்கும் ஒரு கேக் கொடுத்துவிட்டு, அப்படியே உங்கள் குழந்தையின் பல் குறித்த அவரது ஆலோசனையும் கேட்டு வாருங்கள்.

  • பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஆஸ்துமாவை விட ஐந்து மடங்கு அதிகமாகவும், இன்புளுயன்சா என்ற வைரஸ் தாக்குதலால் வரும் ஒருவித சுவாச மண்டலத்தை பாதிக்கும் காய்ச்சலான ப்ளூ ஜுரத்தை விட ஏழு மடங்கு அதிகமாகவும் பல் நோய்கள் வருவதாகத் தெரிகிறது.
  • முக்கியமாக, இரண்டு முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் பல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.







பற்கள்
சரியான முறையில் பாதுகாக்கப்படாததின் விளைவுகள்:
  • மோசமான பற்கள் இருப்பதால், அவர்களால் படிப்பில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல்போகலாம்.
  • அவர்கள் சிரிப்பது குறைந்து போகலாம். தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடும்.
  • சமூகத்தில் இலகுவாக பழகவியலாமல் போகலாம்.
  • பல் சீரமைப்பு சிகிச்சைக்கு மருத்துவச் செலவு மிகவும் அதிகம்.
  • மோசமான பல் பராமரிப்பு, சர்க்கரை நோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பல் நோய்கள் வராமல் எப்படி தடுக்கலாம்?

பற்களை தினமும் இருமுறை சுத்தம் செய்யுங்கள்.
  • பிறந்த குழந்தையாக (1 முதல் 9 மாதங்கள் வரை) இருந்தால் ஒரு நாளுக்கு இருமுறையேனும் ஓமம் வறுத்து பொடி செய்து, சிறிது உங்கள் ஆட்காட்டிவிரல்முனையில் தொட்டு கொண்டு ஈறுகளைத் துடைக்கவும். (ஓமம் உரைக்கும் (காரமாகஇருக்கும்)என்பதால், கவனமாக மிக மிக சிறிய அளவே எடுக்க வேண்டும்.)
  • ஒவ்வொரு முறை பால் அல்லது பானங்கள் ஏதும் குடித்த பிறகு வாயை நன்கு தண்ணீரால் துடையுங்கள்.
  • ஆறு மாதம் ஆன பிறகு, ஒரு பல் வரும். ஒரு அரிசி அளவே டூத் பேஸ்ட் எடுத்துக்கொண்டு, ஸாஃப்ட் டூத் பிரஷால் தேய்த்து விடவும். (இப்படித் தேய்க்கும் போதுகுழந்தையின் தலை உங்கள் மடியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்)
ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் பானங்களையே கொடுக்கவும்.
  • பாட்டில் பால், ஃபார்முலா பால் வகைகள் கொடுப்பதாக இருந்தால், கொடுத்து முடித்ததும், ஒன்றிரண்டு டேபிள்-ஸ்பூன் தண்ணீர் கொடுக்கவும்.
  • ஸ்நாக்ஸ் சாப்பிடும் வயது வந்ததும், சீஸ், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்ற உணவு வகைகளும், மென்று சாப்பிடக் கூடிய வகைகளையுமே தேர்ந்தெடுக்கவும்.
  • பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள், மிட்டாய்கள், கர்போனேட்டட் பானங்களை முற்றிலும் தவிர்க்கவும்.
  • ஜவ்வு போன்ற உணவுகளை (சுயிங் கம் போன்ற) மற்றும் உறிஞ்சி குடிக்கக் கூடிய பானங்கள் ஆகியவை இளவயதினருக்கு, பல் இன்னும் முழுமையாக உருவாகாமல் இருப்பதால், பற்சிதைவு ஏற்படலாம்.
  • சர்க்கரை சேர்க்காத, இனிப்பூட்டப் படாத பானங்கள், ஜூஸ், மற்றும் தண்ணீர் மட்டும் அடிக்கடி கொடுக்கவும்.
குழந்தையின் உதடுகளை அடிக்கடி தூக்கிப் பற்களை பரிசோதிக்கவும்.
  • குழந்தைகள் சீக்கிரம் வளர்ச்சியடைவது போலவே பற்களும் அதிவேகத்தில் வளரும்.
  • ஒவ்வொரு மாதமும் உங்கள் குழந்தையின் பற்கள் சரியான விதத்தில் வளருகிறதா என்று பரிசோதித்து பார்க்கவும்.
  • பற்சிதைவு பெரும்பாலும் ஈறுகளை ஒட்டிவாறு முன் பற்கள், அல்லது பின் பற்களில் தான் ஏற்படுகிறது.
  • வித்தியாசமான வெள்ளை நிறமோ, அல்லது பிரவுன் நிறமோ பற்களில் அல்லது ஈறுகளில் தென்பட்டால் உங்கள் பல் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
  • குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறும் போதே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும்.
  • இதற்கு முன்பே பற்களில் ஏதும் பிரச்சினைகள் தென்பட்டால் அப்போதே மருத்துவரிடம் காட்டித் தெளிவு படுத்திக் கொள்ளவும்.
மருத்துவப் பரிசோதனைகளின் போது:

ஒவ்வொரு முறை பல் மருத்துவரிடம் செல்லும் போதும்:

  • பற்கள், பல் வரிசை / அமைப்பு சரியானபடி வளர்ந்திருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொள்ளவும்
  • பற்சிதைவு இருக்கிறதா என்று தெளிவு படுத்திக் கொள்ளவும்
  • தினசரி பல் தேய்க்கும் முறைகள், மற்றும் டூத் பேஸ்ட் / பிரஷ் ஆகியவற்றைப் பற்றி மருத்துவரிடம் பேசவும்.
  • உங்கள் குழந்தையின் உணவுப் பழக்கம் பற்றி பேசவும்.
  • ப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா என்று கேட்டுக் கொள்ளவும்

இவை எல்லாவற்றுக்கும் மேலே, ஒரு பெற்றோராக நீங்களும், கை கழுவிய பின் சாப்பிடுவது, சாப்பிட்டபின் வாய் கொப்பளிப்பது, தினசரி இருமுறை பல் துலக்குவது போன்ற பழக்கங்களை கொண்டால், உங்களை பார்த்து, குழந்தைகளும் சீக்கிரம் இந்த நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வார்கள்.

.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்