பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.
லீவு விட்டா போதும் நான் மாமா ஊருக்கு போறேன்,
அத்தை வீட்டுக்கு போறேன், பாட்டி வீட்டுக்கு போறேன்னு
திட்டம் போட்டது ஞாபகம் இருக்கா!

தொந்தரவு விட்டா சரின்னு வீட்டு பெரியவங்களும்
கொண்டு போய் அவங்க வீட்டுல தள்ளிட்டு வந்திடுவாங்க. :))

அப்படி போனதுனாலத்தானே நமக்கு வெளியுலகம்
தெரிஞ்சுச்சு? அப்பா, அம்மாகிட்ட இருக்கற உலகம்
வேற, அடுத்தவங்க வீட்டுல நாம எப்படி அட்ஜஸ்ட்
செஞ்சுக்கணும், இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டோமே!

இப்ப நாம குழந்தைகளை அடுத்தவங்க வீட்டுக்கு
அனுப்ப ரொம்பவே யோசிக்கறோம். நாம்
பாத்துக்கற மாதிரி அவங்க பாத்துக்க மாட்டாங்க!
குழந்தை கஷ்டப்படும், அவங்களுக்கு ஏன் தொந்திரவு?
இப்படி யோசிச்சு நாம போகும்போது மட்டும் தான்
குழந்தையை கூட்டிகிட்டு போறோம், நம்மளோடையே
திரும்ப கூட்டிகிட்டு வந்திடறோம்.

(இப்ப பல உறவினர்கள் வீட்டுல அவங்க பேரக்
குழந்தை வெளிநாட்டுல இருக்க இவங்க தனியா
இருக்கறதுனாலையும் நாம அனுப்பறதில்லை)
நாம் கத்துகிட்ட மாதிரி நம்ம பிள்ளைகள் கத்துக்கறது
எப்படி?

1 அல்லது 2 குழந்தைகள்
ஓர் இடத்தில் சேர்ந்து பேசி, மகிழ்ந்து,
தூங்குவதுதான் SLEEPOVER NIGHTS.
(இது இனிமையான நினைவுகளை
பிள்ளைகளுக்குத் தரும்)

SLEEPOVER NIGHTS குழந்தைகளுக்கு பல
நல்ல விஷயங்களை கத்துக்கொடுக்கும்.
உள்ளூரில் உங்களுக்கு நெருங்கினத் தோழி
இருக்காங்களா? அவங்களுக்கும் உங்க குழந்தை
வயது பிள்ளை இருக்கா? அது போதும்.

ஒரு வார இறுதியில் அவங்க குழந்தையை
உங்க வீட்டுக்கு அனுப்பச்சொல்லுங்க.

இல்லைன்னா உங்க குழந்தையின் நண்பர்களை
அழைங்க.

அவங்களுக்கு விருப்பமான உணவு,
விளையாட்டு, டீவிடி பார்த்தல்
என செம ஜாலியாக பிள்ளைகள்
இருப்பார்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக
இது உதவும்.

இதே போல் அவரின் வீட்டுக்கும்
உங்கள் குழந்தையை அனுப்பலாம்.
(குழந்தை மட்டும் தாங்க போகணும்)


எப்போதும் பெற்றோருடனே ஒட்டிக்கொள்ளாமல்
பிள்ளைகள் தனித்திருக்கவும் பழகுவார்கள்.
நம்ம வீட்டுல இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளையே
மேய்க்க முடியவில்லை, இதில் அந்தப் பிள்ளைகளையுமா!
அப்படின்னு யோசிக்காதீங்க.

தனது நண்பர்களுடன் சேர்ந்து இருப்பதை விரும்புவார்கள்.

**************************************

டிஸ்கி: இது என்னுடைய எண்ணம் + அனுபவம்.
ஆனால் 100 % சரின்னு சொல்ல முடியாது.

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிற
மாதிரி எதற்கும் + - இருக்கலாம்.

அப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.
//அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும். என் வீட்டுல இந்த கூட்டணிதா கலக்கிட்டு இருக்கு... என்னத்த சொல்ல//
இது அத்திரி அவர்களின் பின்னூட்டம்.

இதைப்பத்தியும் பேசணும். இரண்டு சம்பவங்களை
இங்கே தருகிறேன். இது சரியான்னு நீங்களே சொல்லுங்க.

சம்பவம்:1

இயற்கை அழைக்க எழுந்திருக்கிறார் மிஸ்டர். ரங்கு.
அப்படியே தண்ணீர் குடித்து விட்டு படுக்கலாம்
என்று போகும்பொழுது மகனின் அறைக்கதவு
திறந்து கிடக்க ஆச்சரியத்துடன் எட்டி பார்க்க அறைக்
காலியாக இருந்தது. மகன்களை காணோம்.!!!

மனைவியை எழுப்பி" என்ன ஆச்சு! பிள்ளைகளைக்
காணோமே?" என்று கேட்க, நீங்க தூங்கிக்கிட்டிருந்தீங்க!
அதனால பசங்க என் கிட்ட சொல்லிட்டுத்தான் அவங்க
ப்ரெண்ட்ஸ் வீட்டிற்கு போயிருக்காங்க!" என்றதும்
ரங்கமணிக்கு கோபம் தலைக்கேறியது. நள்ளிரவு
12 மணிக்கு மகன்களை வெளியே அனுப்பி அவர்களை
கெடுக்கிறாய் என்று கத்த,"19 வயசுப்பையன் பாதி
ராத்திர்க்கு வெளியே போனால் என்ன தப்புன்னு?"
தங்கமணி வாதிட பெரிய சண்டையாகிப்போனது.


இதில் வேறு அந்தத் தங்கமணி என்னிடம்,"பசங்க
சந்தோஷமா இருந்தாலே என் கணவருக்குப் பிடிக்காது!
என்று மகன்களுக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட்
செய்கிறார்.கைச் செலவிற்கு மகன்களுக்கு
வாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்
தருகிறார். (மத்தியதரக் குடும்பத்தில்
இது எவ்வளவுப் பெரிய பணம் இது!!)
ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்றால்
" I want to give them the better life"
என்கிறார்!!!!!!

சம்பவம் : 2

எனக்குத் தெரிந்த கணவன் - மனைவி விவாகரத்து
பெற இருந்தார்கள். எங்களுடம் பேச வேண்டுமென்று
சொல்லி வந்தார்கள்.(குழந்தைகள் 2ஆம் வகுப்பும்,
எல்.கே.ஜியும் படிக்கிறார்கள்)

மனைவி கணவன் மீது சொன்ன குற்றச்சாட்டு
தான் இந்த இரண்டாவது சம்பவத்தின் காரணம்!!

"கீழ குப்பை இருக்கக்கூடாதுங்கறாருங்க! சின்ன
பசங்க இருக்கற வீட்டுல குப்பை இல்லாமல் இருக்குமா?
அந்தக் குப்பையை பசங்க எடுத்து போடணும்னு
கத்தறாரு!!"

"என் கண்ணு முன்னாடியே என் பசங்களைத்
(!!!)திட்டும்போது மனசு விட்டுப் போகுது"
என் பசங்களை இவரு திட்டக்கூடது!

இப்படி நிறைய சொன்னார். தாய்க்கு மகனுக்கும்
மட்டும்தான் உறவு என்பது போலும், அதில்
கணவனுக்கு இடமில்லை என்பது போலவும்தான்
நிலமை. அந்தப் பெண்ணின் மகன் என்றால்
கணவருக்கும் அந்தக் குழந்தையின் மேல் உரிமை
இருக்கிறது தானே!

மேற் சொன்ன இரு சம்பவங்களிலும் அவர்கள்
வீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகளே!!

தாய் அன்பானவள். ஆனால் அந்த அன்பே
கண்மூடித்தனமாகி குழந்தையின் வாழ்வை
நாசமாக்ககூடாது தானே?

பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்
தாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.
பெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை
இல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு
பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்
அனைவருக்கும் மாற்று கருத்து இறாது
என நினைக்கிறேன்.

உங்க கருத்தையும் சொல்லிட்டு தமிழ்மணத்தில்
ஓட்டும் போட்டுட்டு போங்க.

நன்றி

ஒரு மருத்துவர்தான் வைத்தியம் பாக்கணும்.
ஒரு இஞ்சினியர்தான் கட்டடம் கட்டணும்.
இப்படி அந்தத் துறையில் கல்வி கற்றவர்கள்தான்
அந்தந்த வேலையைச் செய்யணும்னு இருக்கு.
ஆனா டீச்சரா யார் வேணும்னாலும் வேலை பார்க்கலாம்.
என்ன கொடுமைங்க இது????

முறையா ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்கள்தான்
ஆசிரியர் வேலைப் பார்க்கணும்னு எந்த தனியார்
பள்ளியிலும் சட்டம் இருப்பதில்லை.

என்ன கொடுமைங்க இது?

B.Sc, M.Sc, B.A. M.A இதோடு B.T, B.Ed
முடிச்சிருந்தாத்தான் அவங்களுக்கு முறையான
பயிற்சி இருக்கறதா அர்த்தம்.

+2 பரிட்சைக்குபிறகு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்
பட்டம் பெற்றிருந்தாலும் ஒத்துக்கலாம்.
மாண்டிசோரி, ப்ரிஸ்கூல் டிப்ளமோ படிச்சிருந்தாலும்
ஒத்துக்கலாம். ஆனா இந்த மாதிரி ஆசிரியப் பயிற்சி
இல்லாதவங்கதான் இப்ப ஆசிரியரா இருக்காங்க.

அதிகமான விடுமுறை, வீட்டு வேலைக்கு பங்கம்
வராத வேலை நேரம் என்பதாலேயே பல பெண்கள்
இந்த வேலைக்கு வருகிறார்கள்.

குறைந்த சம்பளத்திற்காக வருபவர்களை விடாமல்
எடுத்துக்கொள்கிறது நிர்வாகம். இவர்கள் செய்யும்
தவறுகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

"படிச்சிட்டு சும்மா உக்காந்திருக்க முடியாது
பாருங்க, அதனால் ஏதாவது ஸ்கூலில்
டீச்சர் வேலைகாவது போகலாம்னு இருக்கேன்"
என்று சொல்பவர்கள் அதிகம்.
போலி டாக்டர் கிட்ட மருத்துவம் பாத்துக்குவாங்களா?
போலி டீச்சர்னு சொல்ல மாட்டேன், முறையான
பயிற்ச்சி இல்லாதவங்க எப்படி டீச்சர் ஆகலாம்?

பல ப்ரபலமான பள்ளிகளில் கூட பாருங்கள்.
நிலமை இதுதான். பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான்.
அரசாங்கமும் கண்டுகொள்ளப்போவதில்லை.
பெரிய பள்ளியில் இடம் கிடைத்தால் போதும்
என்று நினைக்கும் பெற்றோர்களும் இதைப் பற்றி
கவலைப்படுவதில்லை.

. ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்தான்
ஆசிரியராக ஆக்கவேண்டும் என அனைத்து பள்ளிகளும்
சட்டம் போட வைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்? வாங்க வந்து உங்க கருத்துக்களைச்
சொல்லுங்க.

*********************************************
ஆசிரியர் என்பவர் யார்?


ஒரு ஆசிரியர் பிள்ளைகளின் உணர்ச்சிகளுக்கு
மதிப்பளிப்பவராக, ஊக்குவிப்பவராக
பலதரப்பட்ட பயிற்சிகளை வகுப்பறையில்
அளிப்பவராக, தனக்குத் தெரிந்தது போதும்
என்று இராமல் தன்னை அப்டேட் செய்துகொள்பவராக,
இருக்கவேண்டும்.

ஒரு ஆசிரியராக அவர் கற்கவேண்டியதற்கு முடிவே
இல்லை எனலாம். LEARN WHILE YOU TEACH இதுதான்
ஆசிரியர் பயிற்சியில் கற்றுக்கொள்ளும் முக்கியமான
பாடம்.


ஆசிரியரின் பேச்சு, நடவடிக்கை, உடை,
உச்சரிப்பு, இவை பிள்ளைகளை பாதிக்கும்.

அன்றாட வகுப்பிற்கு பிறகு ஒரு ஆசிரியை
தன்னைத் தான் கேட்டுக்கொ்ள்ள வேண்டிய
கேள்விகள் இவை.

1. இன்றைய வகுப்பு வெற்றிகரமாக இருந்ததா?
2. எனது மாணவர்கள் கற்றது என்ன?
3. வகுப்பு நேரத்தை உபயோகமாக செல்வழித்தேனா?


A VALUABLE THOUGHT FOR ALL TEACHERSOne day I would like to teach
Just a few people
Many and beautiful things,
That would help them,
When they will one day
Teach a few people.


இந்தப் பதிவிற்கு தமிழ்மணத்தில் ஓட்டு போடுவீங்கன்னு
எனக்குத் தெரியும். போட்டவங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சற்று தூரத்தில் இடைவிடாத ராம நாமம் ஒலித்து கொண்டு இருந்தது. அங்கே வானர கூட்டங்கள் எங்கும் நிறைந்து இருந்தது. சற்றே முன்னிரவானாலும்.. ஜெய விஜயீபவ கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டு இருந்தது

மண்ணுலக குபேர பட்டினம் என்றும்

"பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த
மின் கொண்டு வெயிலை சமைத்த
என் கொண்டு இயற்றிய எனத்தெரிகிலாத
வன்கொண்டல் விட்டு மதி முட்டு வன்னமாய்"

என கவிச்சக்கரவர்த்தியால் போற்றிப் புகழப்பட்டதுமான கோபுரங்களையும் மாட மாளிகைகளையும் கொண்டிருந்த இலங்கை நகரம். இப்போது களை இழந்து சுடுகாட்டினைப் போல் காட்சி அளித்து கொண்டு இருந்தது. நிலம் எங்கும் இரத்தத்தால் செந்நிறம் பூண்டிருந்தது. எங்கும் அழுகுரல். தலையற்று உயிரற்று கிடந்த பிணங்களுடன் கை அறுபட்டும் கால் அறுபட்டும் வெறும் உயிர் மட்டும் தாங்கி கிடக்கும் உடல்கள்.

ராவணன் சுற்றிச் சுற்றி வந்தான். வேதங்கள் போற்றும் இமயவாசியை தன் சாம கானத்தால் மகிழ செய்தவன். இப்போது தன் மகிழ்ச்சி இழந்து இருளினும் இருண்ட முகம் கொண்டு இருந்தான். பத்து வகையான செயல்களை தனி ஒருவனாகவும் அதுவும் ஒரே நேரத்தில் செய்யவல்லவனானவனும் அந்த காரணத்தினால் தச கண்ட இராவணன் என்று அழைக்கப்பட்டவனும் இன்று ஒரு வேலையும் செய்ய நாதியற்றுப் போய் சுற்றி வந்து கொண்டு இருந்தான்.

"யாரது அங்கே மேரு மலை போன்று வீழ்ந்து கிடப்பது.. அது தம்பியல்லவா.. என்னருமை கும்பகர்ணன் அல்லவா.... பல நீதிகளை உரைத்தவன் அல்லவா?!..".

அவன் குரல் இராவணன் காதில் இன்னும் ஒலித்து கொண்டு இருந்தது.

"அண்ணா! எதிர் நிற்பது மறையோதும் இறையென்பது நீயறியாததல்லவே! மாற்றான் மனையை கவர்ந்தது அதுவும் அவள் தனியாய் இருந்த நேரத்தில் கவர்ந்தது தவறென்பதை எத்தனை முறை எடுத்துரைத்தோம்... நீ கேட்கவில்லையே, அந்த அறிவிலி தங்கை சொல்கேட்டாய், மதி இழந்தாய். இருந்தும், இப்போது 'மாற்றானிடம் மன்னிப்பு கோரு!' என்று உன்னிடம் நான் கோர மாட்டேன். அதே நேரம் வீணன் வீடணனைப் போல் மாற்றானிடம் போய்விட மாட்டேன். அது என் ஆண்மைக்கு இழுக்கு. உன் உணவில் உயர்ந்த உடம்பு. உண்டுறங்கி வீணில் வளர்ந்த உடம்பு. இன்று உனக்காகப் பயன்படட்டும். தோல்வி உறுதி என்பதை அறிவேன், அறிந்தும் என்னுயிர் பற்றிக் கவலைப்பட மாட்டேன். ஆன மட்டும் எதிரிகளை அழிப்பேன். இது சத்தியம்"

சொன்ன மாதிரியே செய்து இருந்தான். அவன் இறந்த உடலின் கீழ் நசுக்கப் பட்டு இறந்து கிடந்த வானரங்கள் எண்ணிலடங்கா. எத்தனை வீரமாய் போரிட்டு இருக்கிறான். இன்றைய நாளில் எத்தனை உயிர்சேதம் எதிராளிக்கு. இருந்தும் என் கண்ணொப்பான தம்பியை இழந்துவிட்டேனே...

பாவம் அவனுக்கு என்ன தெரியும்.. எதற்காக சீதையை நான் கடத்தினேன் என்று.. உள்ளில் சூர்ப்பனகையின் முகத்தோடு பல எண்ணங்கள் ஓட, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழியப் பார்த்து கொண்டு இருந்தான். கிடைத்தற்கறிய தம்பி அல்லவா பெற்று இருந்தேன். என் வீணாசையால் அவனை இழந்து நிற்கிறேனே.. மற்றவர்களுக்கு நான் பலருக்கு பகையானவனாய் இருந்தாளும் என்னை அண்டியவர்களை நான் அழ விட்டதில்லையே.. என் கண்ணிமை போல் காத்து வந்தவர்களை இன்று மண்ணில் வீழக் கண்டேனே.. மறுபடி பார்த்தான். உற்றார் உறவினர்.. பிள்ளை முதலானோர் வீழ்ந்து கிடந்தனர். சீதையைத் திருப்பி அனுப்பி விடலாமா?? யோசித்தான். என்பொருட்டு இவர்கள் வீழ்ந்தது பொருளற்று போகக் கூடாது. அதுவுமின்றி நிராயுதபாணியாக்கி இன்று போய் நாளை வா என ஏளனம் செய்தவனிடம் எப்படி என் மனம் உவந்து சரணடைவேன். உலகம் பழிக்கதா? ஏழுலகம் ஆண்ட மன்னன் நான். என் உயிர் போயினும் ராமனை எதிர்ப்பேன்.

கலக்கத்துடன் அரண்மனை சென்றான். அதே கலக்கத்துடன் உறங்க முயன்றான். துக்க நேரத்தில் தூக்கம் வருமா என்ன? ஆயினும் கண்கள் சொருகியது போல இருந்தது. எதோ ஒரு காட்சி மனதில் ஓடியது.

**

இரு காவலர்கள் பெரும் வாயிலை காவல் காத்து கொண்டு இருந்தார்கள். கையில் வேலுடன் இருபுறமும் ஒருவர் மாறி ஒருவர் நடந்து கொண்டு இருந்தார்கள். தொலைவில் யாரோ சடாமுடி தரித்து கையில் கமண்டலத்தோடு வேகமாய் வருவது தெரிந்தது. இருவரில் சற்று பெரியவனாய் இருந்தவன் சொன்னான்.

"அங்கே பார் தம்பி.. அந்த ஆளைப் பார்த்தால் பூலோகவாசி போல் தெரிகிறது.. இவருக்கு மனித உடலுடன் வைகுந்தம் வரும் மார்க்கம் எப்படித் தெரிந்த்தது"

"எப்படியோ வந்து விட்டார்.. அதுவா முக்கியம் அவர் உள்ளே போக முயற்சித்தால் என்ன செய்வது"

"அட என்னடா ந... சரியான பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறாயே.. நாம் அந்தப் பரம்பொருளுக்கே காவல் காக்கும் வாயில் காப்பாளிகள்.. நம்மை யார் என்ன செய்துவிட முடியும்?.."

இந்த ஆணவமான பேச்சைக் கேட்டு வாயிலின் உள்பகுதியில் இருந்து னகைப்பொலி கேட்டது.

"பார் எம்பெருமான் என்ன ஆனந்தமாய் கனாக்கண்டு அதை நினைத்துச் சிரிக்கிறார்.. இந்த நேரத்தில் இந்த பரதேசிக்காக வழி விட வேண்டுமா என்ன..."

"அண்ணே சற்றே அடக்கி வாசி... அவர் அருகில் வந்து விட்டார்"

"வரட்டுமே... பார்த்துவிடலாம் "

அகங்காரமாய் சொன்னான்... இறுகக் கட்டிய ஜடாமுடி, கையில் கமண்டலம், உடலில் துவராடை. ஒல்லியானாலும் கடும் தவத்தால் வஜ்ஜிரமாய் மாறியிருந்த உடம்புடன் அந்த முனிவர் தேஜசுடன் காணப்பட்டார்

"யாரைய்யா நீர்?"

"அப்பனே என் பெயர் துர்வாசன், எம்பெருமானை தரிசிக்க வந்தேன்.. சற்று வழி விடு, பார்த்துவிட்டுப் போய்விடுகிறேன்"

"துர்வாசனோ எந்தவாசனோ... இப்போது வைகுந்தவாசனைப் பார்க்க முடியாது போ.. போ"

"இல்லையப்பா.. எம்பெருமானை பார்க்கதானே இத்தனை தூரம் வந்தேன்... தரிசனம் கிடைத்ததும் உடனடியாகப் போய் விடுவேன்.. சற்று ஒதுங்கி நில்!.."

"ம்ம் எச்சரிக்கை போ தூர.., குரங்கு போல் முகம் கொண்ட உனக்கு அரங்கனின் தரிசனம் தேவையா.. எட்டிச் செல்!"

அண்ணே என அழைத்தவன் முனிவரை ஈட்டியால் நெட்டித் தள்ளினான்.

"மூடனே.. கடவுளைக் காண வந்த என்னைச் சற்றும் மதியாமல் எட்டித் தள்ளுவதா...? இது எனக்கு மட்டும் அவமானமில்லை.. என்னுள் உறையும் அவனுக்கும் அவமானம்.. இதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.. மதி இழந்து நடந்த நீங்கள் மண்ணுலகில் பல பிறவி அரக்கர்களாகப் பிறவீர்கள்.."

இருவருக்கும் ஆணவமும் அகங்காரமும் போன இடம் தெரியவில்லை. தாங்கள் மாபெரும் தவறை செய்து விட்டதை உணர்ந்தார்கள். இருவரும் முனிவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள். மன்னிப்பு கோரினார்கள். மனமிறங்கிய முனிவர், "இட்ட சாபம் வீணாகாது.. ஆயினும்.. நீங்கள் ஏழு பிறவிகள் எடுத்து, ஒவ்வொரு பிறவி முடிவிலும் ஆண்டவனால் சம்ஹாரம் செய்யப்ப்டுவீர்கள். ஏழாவது பிறவி முடிவில் நீங்கள் உங்களுடைய பதவியை மீண்டும் அடைவீர்கள்!" என்றார்.

சாமம் முடிந்து பொழுது புலர்ந்ததற்கான மணி அடிக்கபட்டது.. இராவணன் கண்விழித்தான். கண்டது கனவா.. இல்லை நம் முந்தைய வாழ்க்கையா.. ஒருவன் என்னைபோலவே இருந்தானே ஒருவேளை அது நான்தானோ.. அப்படி என்றால் எதிர் நிற்பது சத்தியமாய் இறை தான். அடடா.. அவன் கையால் மாள்வதென்றால். எத்தனை புண்ணியம். இவற்றை எண்ணிக்கொண்டே.. காலைக்கடன்களை முடித்து போருக்கான ஆயத்த உடையுடன் தன் அறை விட்டு வெளி வந்த நேரம் சூர்ப்பனகை எதிர்வந்தாள்.

***

சூர்ப்பனகையின் கண்ணில் தெரிந்தது சோகமா.. இல்லை வெற்றிக் களிப்பா?? தெரியவில்லை.

"தங்கையே இங்கே வா"

இராவணன் அழைத்தான்.

சற்று ஆணவமான தோற்றம். முறம் போன்று விரிந்து கிடக்கும் நகங்கள். பார்க்கையிலே சற்று அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் இருந்தாள்.

"என்னை எதற்காக அழைக்கிறாய்?"

கண்களை சற்று ஆழ்ந்து நோக்கினான். அதில் வெகுநிச்சயமாக உறவுகளை இழ்ந்த சோகத்தையும் மீறிய மகிழ்ச்சி இருப்பதாகவே தெரிந்தது.

"உன்னாசை நிறைவேறி விட்டதல்லவா?"

திகைத்தாற் போல் நின்ற சூர்ப்பனகை பின் கேட்டாள்

"என்னாசையா? உனக்காகவான என்னாசையல்லவா அது?"

"நாடகம் வேண்டாம்.. உன் சபதம் அறிந்தவன் நான்.. உன் சூளுரையைக் காதில் கேட்டவன்..."

"என்ன சொல்கிறாய் இராவணா?"

இத்தனை நாளாய் அண்ணா அண்ணாவென அன்பொழுக அழைத்த வாய் இன்று இராவணா என்றழைக்கிறது. எல்லாம் முடியும் நேரம் எப்படி இருந்தால் என்ன என்று எண்ணிய இராவணன் சொல்ல ஆரம்பித்தான்

"நினைவிருக்கிறதா? கார்த்தவீரியார்சுன யுத்தம்."

அவளின் மறுமொழிக்கும் காத்திராமல் மனதோடு விழிகளின் பார்வையும் எட்டாத ஏதோ உலகில் சஞ்சரிக்க துவங்க... மூடப்பட்ட பாதிக் கண்களுடன் கனவுலகத்தில் இருந்து பேசுபவன் போலப் பேசினான்..

"உன் கணவன் வித்யுத்சுவாவும் அந்த யுத்தத்தில் இருந்தான் எதிரியின் பக்கமாய்.. உன்னருமைக் கணவன் அத்தனை மூர்க்கமாய் எதிர்க்க ஆரம்பித்து படையில் பல பகுதிகளை அழிக்க ஆரம்பித்தான்."

"மறக்க முடியுமா அதை... எத்தனை விவேகமாய் நேர்த்தியாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் என் கணவர்," அவள் நா தழு தழுத்தது.

"ஆம் அந்த யுத்தத்தில் வெகு நேர்மையாய் சண்டையிட்டுக் கொண்டு இருந்த அவனை, அவனின் வீரியமான யுத்தத்தை தாளாமல் பல தெய்வீக அத்திரம் கொண்டு அவனை அழிக்க வேண்டியதாயிற்று.. அதுவும் நேர்மையற்ற முறையில்..."

சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சூர்ப்பனகையின் கண்களில் கொப்பளித்த தீயையும் கூடவே வழிந்த கண்ணீரையும் காணத் தவறவில்லை. இராவணன் தொடர்ந்தான்

"தலைவேறு உடல்வேறு தனியாகக் கிடந்த உன் கணவனை உன் மடிமீது கிடத்தி அழுத காட்சி இன்றும் அந்த நினைவு என்னை விட்டு அகலாமல் நிதம் நிதம் என்னைக் கொல்கிறதே!"

"சபதமிட்டேன்!!!!! உன் அழிவுக்காய் சபதமிட்டேன்..."

வெறி பிடித்தவள் போல சூர்ப்பனகை ஆரம்பித்தாள்..

"அசுர குலமானாலும் என்னையன்றி வேறு பெண்டிரை நோக்காமல் என்னைக் கண்ணின் மணி போலக் காத்துவந்த என் கணவனைக் கொன்று விட்டாய்... நான் அன்று இட்ட சபதம் தானடா இன்று உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது."

"தெரியும் நீ சபதமிடும்போது நான் அங்குதான் இருந்தேன்.. கணவனை இழந்த உன்னைத் தேற்றலாம் என வந்த என்னைக் கிட்டவே நெருங்கவிடாமல் செய்தது உன் சபதம்... அப்பா எத்தனைக் கொடுமையான சபதமிட்டாய்!"

"இராவணா உன் மண்ணாசை, உலகிற்கே அதிபதி என மார்தட்டிக் கொள்ளவாய் உனதாசையினால் தானே இதெல்லாம் செய்தாய்... உனக்கு ஆதரவாய் உன் தம்பி இருக்கிறான், வெற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு படை இருக்கிறது என்ற தைரியம் வேறு... நான் சபதமிடுகிறேன்.. உன்னையும் உன்னைச்சார்ந்தவர்களையும் நிர்மூலமாக்கி பழிக்குப் பழி வாங்குவேன்!' என்றாயே நினைவிருக்கிறதா"

"எதையும் மறக்கவில்லை!"

"பெண்ணாசை காட்டினாய்.. தெரியுமா உனக்கு... முதலில் உன் மகிழ்சிக்காக, உன்மேல் கொண்ட அளவிடா பாசத்தால் இறக்க துணிந்து தான் இச்செயலில் இறங்கினேன்."

சூர்ப்பனகை மவுனித்து இருந்தாள்

"உனக்கே தெரியுமல்லவா பெண்களை அவரனுமதியின்று தீண்டினால் எனக்கு மரணம் சம்பவிக்குமென்று... நீ சொன்ன பெண்ணை தீண்டி நான் உயிர் விட்டு மற்றவர்களின் அழிவைத் தடுக்கலாமென்று தீர்மானித்திருந்தேன்.. சீதையைக் காணும் வரை... கண்டபின் அப்படியே அடியோடு மாறிப் போய்விட்டேன்"

"முதலில் தங்கையின் சபதத்தை நிறைவேற்ற ஆரம்பித்து பின் என்னையே நான் மாற்றிக் கொண்டு என்னுடன் சேர்ந்தாரையும் அழித்து விட்டு தனியனாய் நிற்கிறேன். உன் சபதத்தில் வெற்றியடையப் போகிறாய், இதோ நான் கிளம்பிவிட்டேன்... நிச்சயமாகத் தெரியும் நான் இன்று திரும்பி வரப்போவதில்லை. நீ மட்டும் இருந்து என்ன செய்ய போகிறாய்?"

என்ன சொல்ல வருகிறான் என்று உணரும் முன்னரே இராவணனின் கை வெகு வேகமாக வாளை உருவியது.. "நீயும் எங்களுடன் வரத்தான் வேண்டும் சூர்ப்பனகை... எனக்கு வேறு வழி தெரியவில்லை.." வாள் சுழன்றது... சூர்ப்பனகை தரையில் உயிரற்ற உடலாய் விழுந்தாள்...

**

இதோ எதிர் நிற்பவன் இறையோ இல்லை சாதாரண மானிடனோ அது தேவையற்றது. இப்போதைக்கு என் எதிரி. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தான். விபீடணன் அங்கே எதிர் தரப்பில் நின்றிருந்தான். இராவணனுக்கு ஒருபுறம் வேதனையாகவும் மறுபுறம் மகிழ்ச்சியாகவும் விபீடணனைப் பார்த்தான். எதிரியுடன் போய் சேர்ந்து விட்டானே என்ற வேதனையை விட தன் குலம் விளங்க இவனாவது பிழைக்கட்டும் என்ற மகிழ்ச்சி.

கரிய பெருமாளைப் பார்த்த இராவணன் இரவின் வண்ண முடையவன். 'அட, இவனுக்கும் என் பேர் தான் போலும்!' என்று நினைத்து சற்றே இராமனை நோக்கிக் கர்ஜித்தான் இராவணன்.

"ஹ¤ம், எடு உன் வில்லை! தொடு சரத்தை!! "

கடுமையான தேவாசுரப் போரொத்த யுத்தம் நிகழ்ந்து மறுபடி தன் ஆயுதங்களை இழந்து நின்றான் இராவணன்.

இந்தத் தடவை போகமாட்டேன் அவன் இல்லையேல் நான் ஒருவர் மட்டுமே திரும்ப வேண்டும். பக்கத்தில் உடைந்த தேரினுள் இருந்த வில்லை எடுத்தான்.

மறுபடி சொல்லொணா வன்மையுடன் போர் தொடங்கியது. இராமன் கடைசியாய் தன் இராமபாணமெடுத்தான்.

இராவணன் தன் கையினின்று வில்லைக் கீழே வைத்துவிட்டு மானசீகமாக ஒருமுறை கனவில் வந்த அந்த இறையை நினைந்து இராமன் மேல் அம்பெய்ய முற்பட்டான். அம்பு அவன் கைவில்லில் இருந்து புறப்படும் முன்னமே பேரிடி தாக்கியதைப் போல உணர்ந்தான்.

இராமனைப் பார்த்துக் கொண்டே கண் மூடினான். உடலில் இருந்து யாரும் எளிதில் அறியாவண்ணமாய் கிளம்பிய ஒரு ஜோதி இராமனை ஒருமுறை சுற்றி வந்து உயர உயரக் கிளம்பியது.


கதாசிரியர்: ஜீவ்ஸ்
பிரசூரித்தது: புதுகைத் தென்றல்
**************************************************

எனைத்துணையர் ஆயினும் எண்ணாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்
சிறிதும் நினைத்துப் பார்க்காமல் மாற்றான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு
புகழும் பெருமையும் உடையவனாய் இருந்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை. புகழும்
பெருமையும் ஒழுக்கத்தால் வருவது. ஒழுக்கம் தவறுதல் உயிரை விடுதலுக்குச்
சமமாகும்

டீவியில இதைப் பத்தி பாத்ததும் அதிர்ச்சியாயிடுச்சு.


பல பேரு வீட்டுல இதெல்லாம் அன்றாடம்
உபயோகத்துல இருக்கறதாச்சே! உடனே
எல்லோருக்கும் சொல்லிப்புடணும்னுதான் இந்தப் பதிவு.


Appyfizz - இதைக் குடிக்கக்கூடாதாம். இதில்
கேன்சர் வரவைக்கக்கூடிய சமாசாரங்கள்
நிறைய இருக்காம்.!
இது மிக முக்கியம்:

நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவை
எரித்துக்காட்டினார்கள். இதில் பிளாஸ்டிக் உருகுவது தெரிந்தது.
ஆதாரம்: டீவி 9, டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இந்த மாதிரி பாக்கெட்டுகளில் வரும் எந்த வித
உணவுப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு
வாங்கிக் கொடுக்காதீர்கள். (இதையெல்லாம் படிச்சிட்டும்
பெரியவங்க வாங்கி சாப்பிடுவாங்களா? என்ன?)

மெந்தோஸ்:

பெப்ஸி/ கோக் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு இதை வாயில் போட்டால்
சிவலோக ப்ராப்திதானாம். சயனைடாக மாறிவிடுகிறதாம்.
ஜாக்கிரதை.
சிலருக்கு அதென்னவோ ஒரு மைண்ட் செட். காலையில் குளிச்சதும்
காதை கொடைஞ்சே ஆகணும். தேவையே இல்லீங்க.
காதுகளில் குறும்பு சேரும்போது மட்டும் பட்ஸ் கொண்டு
சுத்தம் செஞ்சா போதும்.

இயர் பட்ஸ் வாங்கும்போது ரொம்ப கவனம் தேவை:

ரோடோரத்தில் சீப்பா கிடைக்குதுன்னு வாங்கினீங்கன்னா
Herpes Zoster Oticus
(a viral infection of the inner, middle, and external ear)
இந்த நோய்க்கு நீங்கதாங்க முதல் விருந்தாளி.

ரோட்டோரோத்தில் விலை குறைவாக விற்கப்படும்
பட்ஸ்கள் மருத்துவமனைக் கழிவு பஞ்சுகளை
சேகரித்து சுத்தம் செய்து, ப்ளீச் செய்து பட்ஸ்
தயாரித்து விற்கிறார்கள். இதனால்தான் மேலே
சொன்ன புது வியாதி வருமாம்.

அப்படியே உங்களுக்கு காது குடைஞ்சே ஆகணும்னா
கண்டிப்பா ப்ராண்டட் பட்ஸ்களை வாங்குங்க.

அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க எல்லோத்துக்கும்
இந்த விசயத்தை சொல்லுங்க.

இமெயில் மூலமா கிடைச்ச விசயம் இது.
இதை நான் நம்பாம இருந்தப்பத்தான் டீவியில்
பாத்தேன். உடன் பதிவா போட்டுட்டேன்.

இதையும் படிங்க:

Message From Gautham Mukkavilli - Managing Director FritoLay India

அப்போது தான் கவனித்தான்.

ஆச்சர்யம்.. அங்கே யாரது அதே நீல வண்ண முகம்.. மயில் இறகு, கொண்டையில். அருகில் ஓடினான்.

"சாமி! சாமி!!"

அந்த உருவம் நின்றது..


"நீங்க யாரு சாமி? .. நீங்க தான் கடவுளா? உங்களை அடிக்கடி எனக்குள்ளே பார்த்து இருக்கேன்."

"கடவுளா? நானா? எனக்குத் தெரியாது! என்னை எல்லாரும் கண்ணன் என்றும் கிருஷ்ணன் என்றும் சொல்வார்கள்"

முகத்தில் மெல்லிய புன்னகை இழைந்தோடியது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது..

"அப்ப நீங்க கடவுள் இல்லையா?"

மறுபடி புன்னகை.

"தெரியாதப்பா... கடவுள் எல்லாரிடமும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.. அப்படிப் பார்த்தால்.. நீயும் கடவுள்தான்; நானும் கடவுள்தான்"

"என்ன சாமி, அப்ப நான் கூட கடவுளா? அப்ப சாமி சிலை எல்லாம் எதுக்கு?"

"அது தன்னை அறியாதவர்களுக்கு."

"எப்படி என்னை நானே தெரிஞ்சிக்கிறது?"

"தியானம்.. நீ தினமும் காலையில் கண்மூடி செய்வாயே அது. அதை செம்மைபட செய்தால் உன்னில் கடவுளை உணரலாம் அதற்கு மனது கட்டுப்படவேண்டும்."

"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

"புலால் உணவைக் குறை. மனதுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. மாமிச உணவு மனதை அலைபாயச் செய்யும்"

"தியானம் செய்ய எதாவது விதிமுறைகள் இருக்கா சாமி?"

கண்ணன் சொல்லச் சொல்ல ஏகலைவன் வாய்பொத்திக் கேட்டுகொண்டு இருந்தான். மறுபடி ஒரு சிறு கீதோபதேசம் அரங்கேறியது.

"என் கட்டை விரல் குரு கேக்கும்போது உன்னைக் கேட்டேனே கொடுக்கவான்னுட்டு, அது இல்லாம எனக்கு எவ்வளோ பிரச்சினை.. சரியா வேட்டை ஆட முடியலை. நீ வேண்டாம்னு சொல்லியிருக்கக் கூடாதா"

ஏகலைவன் ஆதங்கத்துடன் கேட்டான்

கண்ணன் கண் சிமிட்டினான்..

"நான் வேண்டாம் என சொல்லியிருந்தால் மறுத்திருப்பாயா?"

ஏகலைவன் மௌனித்தான்.

என்னவாயிருந்தாலும், யாராக இருந்தாலும் குருவின் கட்டளையை அவன் நிறைவேற்றி இருப்பான். அது நிச்சயம்.

"சரி சாமி அது கெடக்குது, என் குரு சாமி செய்ஞ்சது சரியா"

கண்ணன் மௌனித்தான்; தன் நினைவைப் பின்னோக்கிச் செலுத்தினான். சகுனி தன்னுள்ளே குமைந்து கொண்டு இருந்த காட்சி தெரிந்தது. சகுனியின் வார்த்தைகளும் நினைவில் வந்தது.

"இந்த துரோணர் சும்மா இருக்கமாட்டாமல் அவன் கட்டை விரலைக் காணிக்கையாய் கேட்டு விட்டார். அர்ஜுனனுக்கு சரியான எதிரி கிடைத்தான் என நினைத்திருந்தேன்.. எல்லாம் பாழாய்ப் போனது"

கண்ணனுக்கும் சகுனிக்கும் மட்டும் தெரிந்த உண்மை இது. இதைக் கண்ணன் சொல்ல விரும்பவில்லை.

"நடந்தது, நடப்பது நடக்கப்போவது எல்லாம் நிச்சயிக்கப்பட்டது. எதுவும் யாராலும் மாற்ற முடியாது. நிகழ்வுகளின் நன்மை தீமை காலத்திற்கேற்றவாறு மாறுபடும். சரியும் தவறும் அந்த நேரத்துக்கேற்றவாறு மாறுபடும் இது உலக நியதி."


ஏகலைவன் மகன் குறுக்கிட்டான்.

"சாமி, அம்பு வுட்டுக் கொல்லும் போது எல்லா உசுருகளுக்கும் வலிக்கும் தானே.. எல்லா உசுரும் சமம்னு நீங்க சொல்றீங்க .. அப்படின்ன விலங்குகளைக் கொல்றது பாவம் இல்லையா??"

கண்ணன் சிறுவனிடம் திரும்பினான்.

"மகனே.. உணவுக்காகவும் தற்காப்புக்காவும் கொல்வதில் தவறில்லை. ஆனால்..."

சிறுவன் வெகு உன்னிப்பாக கவனித்தான்

"அதிகம் வதைக்கவிட்டுக் கொல்லக்கூடாது. அதுதான் பாவம்"

"சரி சாமி"

இருவரும் கண்ணன் காலடியில் வீழ்ந்து வணங்கினார்கள்..

"நாங்க வரோம் சாமி"

கண்ணன் எதோ நினைத்துச் சொன்னான்

"நான் போகிறேன்"

o o o

மறுநாளில் இருந்து ஏகலைவன் அந்த மரத்தடி விட்டு அதிகம் வருவதில்லை. மகனின் விற்பயிற்சி நேரம் மற்றும் உணவு நேரம் போக அந்த மரத்தடியே கதியாய் இருந்தான். புலால் உணவு அறவே துறந்திருந்தான். வேட்டைக்குp போவது எல்லாம் சிறுவன்தான்.

சிறுவனுக்கும் கண்ணன் மேல் ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு.. எங்கோ தேடி அலைந்து மயிற்பீலி கொண்டுவந்தான். கண்ணனைப் போலவே தலையில் சொருகிக்கொண்டான். வெகு நேரம் குளக்கரையில் தன் பிம்பத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்

அன்றும் அவன்தான் வேட்டைக்குச் சென்றது, ஒரு மானை துரத்தி கொண்டு வெகுதூரம் கானகத்தில் சென்றுவிட்டு இருந்தான். எல்லாம் முடித்து திரும்ப அந்திப்பொழுது ஆகி இருந்தது. அட இது என்ன புது மிருகம்.. சற்று நீல நிறமாய், காது சென்னிறமாய். அருகில் சென்று பார்க்கலாமா? அந்தி கருக்கிருட்டில் சரியாக எதுவும் தெரியவில்லை. வேண்டாம்.. அந்த மிருகம் பயந்து ஓடிவிடலாம் இல்லை கொடியமிருகமாய் இருந்து நம்மைத் தாக்கவும் செய்யலாம்.... அருகில் செல்ல சிறுவன் பயந்தான்.

நேராக தந்தையிடம் ஓடினான்.. தான் பார்த்ததை எடுத்துச் சொன்னான்.

"நீ இங்கேயே இரு!"

மகனுக்கு ஆணையிட்டு அவன் குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடந்தான். அதென்ன புது மிருகம்.. நமக்குத்தெரியாமல்... யோசித்துக்கொண்டே அந்த இடம் சேர்ந்தான்.

அய்யோ இது என்ன கொடுமை.. இங்கே சாய்ந்து கிடப்பது கண்ணனைப் போல் இருக்கிறதே.. நம் மகன் தெரியாமல் கொன்றிருப்பானோ? மனம் பதைத்தான். அருகில் சென்று உற்று நோக்கினான். மாலை முழுதும் மங்கி இருந்தது. பக்கத்தில் இருந்த சருகுகளை ஒன்று குவித்து.. இரு கற்களை உரசி நெருப்பு உண்டாக்கினான் வெளிச்சத்தில் நன்றாக ஆராய்ந்தான். தன் மகனாய் இருக்காது.. அவன்தான் கண்ணனை பார்த்திருக்கிறானே. அதுவும் இல்லாமல் இது வெகு ஆழமாய் பாய்ந்திருக்கிறது. சிறுவனால் இதை செய்திருக்க முடியாது. ஆனால் யார் கண்ணனைக் கொன்றிருப்பார்கள்.

அவனுள் போர்க்களக் காட்சி ஓடியது. பாரதப் போர் பற்றி அடிக்கடி நாடு சென்று திரும்புவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருந்தான், என்ன கொடூரமானவர்கள் இந்த மனிதர்கள். ஒரு சிறுவனிடம் பத்து பேர் சேர்ந்து கொண்டு போர் புரிவார்களா? நினைக்கையில் அந்த சிறுவன் மேல் அபரிதமான ஒரு மரியாதை தோன்றியது. தன் குருவைக் கொன்ற த்ருஷ்டதுய்மன் மேல் கோபம் வந்தது. என்ன மனிதன் இவன்? யோக நித்திரையில் அமர்ந்த ஒருவனை கொல்வது எத்தனை பாதகமான செயல் என்று.

கண்ணனைக் கொன்றது ஒருவேளை போர்களத்தில் தப்பிய எதிரிகள் வேலையாய் இருக்குமோ?

கண்கள் பனித்தன.. யாராய் இருந்தால் என்ன, என் கண்ணன் இனி இல்லை, கண்ணனைப் பார்த்து கொண்டே அழுது கொண்டு இருந்தான்.

"நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நிச்சயிக்கப்பட்டது. எதுவும் யாராலும் மாற்ற முடியாது."

கண்ணனின் உபதேசம் மனதில் வந்தது. மரணமும் தவிர்க்க முடியாதது. அது உரிய நேரத்தில் அனைவர்க்கும் வந்து சேரும். கண்ணன் உடலுக்கு வேண்டிய மரியாதையைச் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பினான்.

மனம் முழுக்க கண்ணனின் எண்ணம் மட்டுமே வியாபித்து இருந்தது.

அந்தி நேரத்தில் யாரோ ஒரு வேடன் ஏதோ ஒரு மானின் மேல் அம்பு எய்ததும், அது குறி தவறி மான் நின்றிருந்த இடத்தின் பின்னால் சற்றே மறைவாக படுத்து இருந்த கண்ணன் மேல் பாய்ந்த்ததும், எய்தவனுக்கும் தெரியாது.. அது பாவம் இவனுக்கும் தெரியாது.

o o o-

"என்னதுப்பா அந்த மிருகம்?"

ஏகலைவன் யோசித்தான். நேற்று கண்ட ஒருவன் இன்று இறந்து விட்டான் என்று சொல்வதா?.. இல்லை பொய் சொல்வதா? உண்மை சொன்னால் மகன் தாங்குவானா? கண்ணன் என்றால் மகனுக்கு ரொம்பp பிடிக்குமே? மெல்ல தெரிந்து கொள்வான்.. கண்ணன் சிந்தனை, இந்த உள்ளத்தை வேறு திசையில் திருப்பக்கூடாது.

"எனக்கு எதுவும் தெம்படலையே.. நீ எதைப் பார்த்தியோ என்னமோ.. போய்த் தூங்கு"

"ஆமாம் நீ தினமும் அந்த மரத்தடியில போய் தூங்குறியே.. வீட்ல தூங்கக் கூடாதா?"

"அது தூக்கம் இல்லையப்பா... அதன் பெயர் தியானம்.."

"அப்படின்னா ... "

ஏகலைவன் விவரிக்க தொடங்கினான். அந்தப் பிஞ்சு உள்ளம் மெல்ல மெல்ல அதை உள்வாங்கத் தொடங்கியது. ஈரக் களிமண்ணை போன்று மனதிருக்கும்போதே தேவையான வடிவத்தை வடிக்கவேண்டும். அது கடினப்பட்டு கல் போலானபின் ஏதும் நடக்காது. ஏகலைவன் சொல்லச் சொல்ல அவன் மகனின் மனம் சரியான வடிவமைப்புக்கு மாறத்துவங்கியது.

இதோ மற்றும் ஓர் நல்ல உள்ளத்தின் சந்ததி உருவாகிக் கொண்டு இருக்கிறது.


-=- J -=-

இளங்காலைப் பொழுது, மார்கழிக் குளிரிலும் வியர்வையில் குளித்த பசும்புற்கள். சற்றே அடர்ந்த காடு. ஆங்காங்கே பனங்கழி கொண்டு மரத்தினிடையிலும் இரவு நேரத்தில் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க மரத்தின் மேலும் கட்டப்பட்ட குடில்கள். காட்டுô புற்கள் கொண்டு வேயப்பட்ட கூரை. வெய்யில் காலத்திலும் மழை காலத்திலும் வெப்பமோ இல்லை குளிரோ அதிகம் தாக்காத வண்ணம் கட்டப்பட்டது. இயற்கையோடு இயைந்து வாழும் வேடுவர் குலம் வாழும் காடு.

"அப்பா! அப்பா!!"

தந்தையுடன் வேட்டைக்குச் சென்று கொண்டு இருந்த சிறுவன் குரல். இடையில் கட்டப்பட்ட மான் தோல். தோளில் அவன் வயதுக்கேற்றவாறு செய்யப்பட்ட வில் மற்றும் அம்பராத்தூளி.

"அங்க பாரேன் சாமி ஒருத்தர் உக்காந்து தூங்குறாங்க பகல்ல"

தந்தை சிறுவன் சுட்டிì காட்டிய இடத்தைப் பார்த்தார்.

ஒரு முனிவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். வெளுத்த தாடி, ஒட்டி உலர்ந்திருந்தாலும் ஆரோக்யமான உடல். முகத்தில் காணும் ஒருவித பிரகாசம் காணும் யாவரையும் வணங்க செய்யும் தோற்றம். "அவங்க தூங்கலை கண்ணு, அவங்க சாமி கும்புடுறாங்க வா போய் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்" அப்பா அவனை அழைத்து சென்றார்.

அவர் கண்விழிக்கும் வரை காத்திருந்தனர்

"ஏன் சாமி நீங்க கண்ணு மூடிட்டு என்ன பண்ணிங்க" சிறுவனின் கேள்வி

எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறுவனின் கண்களில் பளிச்சிட்டது. குவிந்த கை அவன் தந்தையை போலô பணிவு

"மகனே அதற்குப் பெயர் தியானம்.. கடவுளைச் சேரும் வழி"

"அப்படின்னா எனக்கும் சொல்லி தருவிங்களா சாமி?"

ஒரு முனிவர் ஆதரவாய் சிறுவனின் தலை தடவினார்.

"உன் ஆர்வத்திற்கு எதையும் நீ சீக்கிரமாகக் கற்று கொள்வாய்; இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்"

"அப்ப சாமி, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க"

வேடுவன் தன் மகனை அழைத்துìகொண்டு சொன்னார்

"கொஞ்சம் *பஞ்சாட்சரம் தாங்க சாமி. நாங்க கெளம்பறோம் சாமி"

*(பஞ்சாட்சரம் = விபூதி )
o o o

காலம் தன் கடமை மறக்கவில்லை. அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடங்கள் உருண்டோட சிறுவன் இப்போது இளம் காளை. வேடுவக் கூட்டம் கூட சற்று அதிகரித்திருந்தது.

"ஏகலைவா!". தந்தை அழைத்தார். சுற்றிலும் கவலை தோய்ந்த பல முகங்கள்.

"என்னப்பா?"

"எனக்கு.. வயசாய்டிச்சி.. இனிமே நீதான் என்னோட பொறுப்பெல்லாம் பார்த்துக்கனும்" மரணப்படுக்கையில் இருந்து கொண்டு அவன் தந்தை சொன்னார்.

"ஆனா எனக்கு எதுவுமே தெரியாதப்பா."

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்" தந்தையின் கடைசி வார்த்தை.

"சரிப்பா ஆன கடவுள் யாருப்பா?" அவன் சொன்னதைக் கேட்பதற்கு தந்தை உயிரோடு இல்லை. எல்லாம் முடிந்து விட்டது

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ஏகலைவன் தலைவன் பதவி வேண்டாம் என்று சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆகப்போகிறது.. ஊரெல்லாம் இதே பேச்சு

"ஏ புள்ளே, நம்ம தலைவரு பையன் ஏன் இப்படி இருக்குது.."

"அப்பா போன வருத்தம் புள்ளைக்கு இருக்காதா? எல்லாம் சரியாய்டும்.. நீ வா சாப்ட"

"நம்ம ஏகலைவன் பைத்தியம் மாதிரி திரியிறானே யாரு இனிமே தலைவரு?"

"அட நம்ம மருதப்பன் இருக்காருல்ல.."

"என்ன இருந்தாலும் இவருதாம்புள்ள வரணும்."

பல விமர்சனங்கள். ஏகலைவன் பித்தன் போல காடு மேடு எல்லாம் திரிந்தான். எதிர்வரும் எதையும் அறியவில்லை. யார் பேசியதையும் கேட்கவில்லை.

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்"

அப்பாவின் வார்தைகள் மட்டும் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் கடவுளை எப்படிப் பார்ப்பது?? எப்படிக் கேட்பது? அதுதான் புரியவில்லை.

"மரத்தடியில் உக்காந்திட்டு இருப்பாரே அந்த முனிவரைப் போய்ப் பார்த்தா என்ன?.."

மறுபடி கானகத்தை நோக்கி ஓடினான். முனிவரைத் தேடி அலைந்த்தான். அடடா அவரையும் காணலையே. அவர்கள் செய்தது போல நாமும் செய்தால் என்ன? அவர் இருந்த இடத்திலேயே கண்மூடி அமர்ந்து யோசித்தான்.

"அப்பாவின் பொறுப்பு மிகப் பெரியதாயிற்றே, அவர் பெரிய வேட்டைக்காரர்.. அவரை நம்பி பல குடும்பம் இருந்திச்சி.. இப்போ எல்லாம் நான் தானே பார்த்துக்கனும்.. எனக்கு அவ்வளவா வேட்டையாடத் தெரியாதே.. சே இந்த சாமி இங்க தானே இருந்தார், எங்க போனார் தெரியலை.. இருந்தா அவரையாவது கேக்கலாம்.. பல எண்ணங்கள் மனதுள் ஓட இன்னும் கண் மூடியே அமர்ந்திருந்தான்.

மனத்திற்க்கும் சுவாசத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. சுவாசம் கட்டுப்பட, சீரான மூச்சு மனதை கட்டுப்படுத்தும். கட்டுப்பட்ட மனதை தொடர்ந்து உற்று பார்க்க மனம் வெளி நினைவுகளில் இருந்து விடுபடும். வெளி நினைவுகள் விடுபட்டால் உள்ளே ஒரு அமைதி தோன்றும். குருவருள் இன்றி அது யாருக்கும் எளிதாக வராது. அவனுக்கு எந்த குருவின் உதவியும் இல்லாமல் தானாக வந்தது. அது கடவுளின் அருள். தான் தியானிப்பது தெரியாமலே தியானத்தில் ஆழ்ந்தான்.

அவன் எப்போது தன்னை மறந்தான், அவனுக்கே தெரியவில்லை. விழிப்பு வந்த போது பொழுது சாய்ந்து விட்டு இருந்த்தது. மனம் சற்று தெளிவாக இருப்பது அவனுக்கே புரிந்த்தது. ஏதோ ஒரு முகம் மட்டும் மனதில் வந்து போனது. அந்த முகம் தன்னை தலைமை ஏற்க சொன்னதாய் ஒர் உணர்வு இருந்தது அவனுக்கு. தினமும் அந்த இடத்தில் அமர்ந்து யோசிப்பது என முடிவு செய்தான். மெல்ல வீடு திரும்பினான்..

"எலே எங்க போன?.. இப்ப தான் ஊரு சனம் வந்து உன்னைத் தலைவரா தீர்மானமா முடிவு பண்ணிட்டு போனாங்க.. நீ பாட்டுக்கு நாளைக்கு எல்லார் முன்னாடியும் ஆவாதுன்னு சொல்லாதே.. இது பரம்பரை பரம்பரையா வர்றது. நீ மாத்திப்புடாதே.. அப்புறம் இந்தக் கிழவி சும்மா இருக்க மாட்டேன், ஆமாம்"

பாட்டியின் மிரட்டல் காதில் விழுந்தாலும் மனதில் விழவில்லை.

"சரி பாட்டி."

அவன் அறை நோக்கி சென்றான். அங்கே அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது எதோ ஒரு முகம் தெரிந்ததே.. யாருடையது.. சற்றே கரிய முகம் ஆனால் புன்னகையுடன் எளிதில் வசீகரிக்க கூடிய முகம்.. அந்தத் தலையில் கூட ஏதோ, ஆம்! மயில் இறகு இருந்தது.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அந்த முகத்தை நினைத்துக்கொண்டே உறங்கி விட்டான்.

ஏகலைவன் தலைவன் ஆகி இதோ பல மாதங்கள் ஆகி விட்டது. தந்தை சொல்லிக் கொடுத்த வில் பயிற்சி அவனுக்குப் போதாது போல் உணர்வு..

"எத்தனை பேர் என்னை நம்பிக்கினு இருக்கும் போது.. வெறும் வேட்டையாடறதுக்கா நானு? அதை இங்கு நெறைய பேர் செய்வாங்களே.. இவர்களைக் காப்பாத்த நான் நல்ல வில்லாளி ஆவணும். ஆனா யார் கிட்ட போய் கேட்கிறது? யார் சொல்லித் தருவாங்க... அடடா யோசிச்சிக்கினே ரொம்ப தூரம் வந்துட்டேன் போல் இருக்கிறது."

ஏகலைவன் திரும்ப எத்தனித்தான்..

நடுப்பகல், பசித்தது. எதிரே மாமரம் பொன்னிறத்தில் பழங்களுடன். அருகில் சென்று சில பழங்களை பறித்துச் சாப்பிட்டான். அந்த மரத்தின் பழம் ஓரளவு பசி தீர்த்தது.. அட இதென்ன ஆச்சர்யம்.. மரத்தின் அத்தனை இலைகளிலும் ஓட்டை? கீழே சிதறி கிடக்கும் அம்புகள்.. யார் செய்தது இந்த அதிசயத்தை.. யாரோ வருவது தெரிந்தது ...

"ஏன் சாமி இது என்ன புதுசா மாமரத்துல எல்லா எலையிலயும் ஓட்டை.. எப்படி வந்துச்சி?" எதிர்பட்டவரிடம் கேட்டான்..

"அதுவா.. நம்ம இளவரசர் அர்ஜுனன் இருக்காரில்லை அவர் பண்ணது.. இந்த வயசிலே வில்லு வச்சிட்டு என்ன ஒரு வேகம், தெகச்சி போய்ட்டேன் போ.. அவங்க குருவே அசந்துட்டாருன்னா" .. கேட்டதும் ஏகலைவன் மனம் குதூகலித்தது.

இவர் தான் என் குரு. இவரிடம் தான் நான் வில் கற்று கொள்ள வேண்டும்..

"ஏன் சாமி அவர் பேரு... "

"அட இது தெரியாதா தம்பி, நம்ம துரோணரப்பா, புது ஆச்சார்யார்"

"ரொம்ப நன்றிங்க சாமி!" உள்ளம் குதூகளிக்க துள்ளலுடன் நடந்து சென்றான்

o o o

அது அரச குமாரர்களுக்கான பாடசாலை. நிறைய மாணவர்கள். தயக்கத்துடன் வெளியே இருந்தான். அவனுடைய வித்யாசமான தோற்றம் உள்ளிருந்த்த மாணவர்களை கவர்ந்திருக்க வேண்டும். சிலர் பாடத்தை விட்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தனr. சில கண்கள் நகைத்தன. ஆச்சார்யாரின் பாடம் நின்றது.

"யாரப்பா நீ?"

"சாமி, எம்பேரு ஏகலைவன்"

"சொல்லப்பா, என்ன வேண்டும்?"

"சாமி நான் எங்க காட்ல இருக்கிற வேடர் தலைவனுங்க.. எங்க கும்பலை நான் காப்பாத்த எனக்கு நல்ல வில் பயிற்சி வோணும் சாமி, சாமி சாமி இங்க பாருங்க சாமிக்கு தட்சிணையா பாருங்க மலை தேனு .. ரொம்ப மேல இருந்துதுங்க சாமி.. உங்களுக்கா நானே எடுத்தேன் சாமி.. இங்க பாருங்க உயர்ந்த சாதி புள்ளி மான் தோலு, அப்புறம் இது ரொம்ப முத்துன சந்தனம், இது எல்லாம் எடுத்துகிட்டு எனக்கு வித்தை சொல்லித் தாங்க சாமி"

ஆச்சார்யார் அவனை உற்று பார்த்து கொண்டு இருந்தார்..

மிகுந்த வெகுளி முகம், உண்மை தவிர வேறொன்றும் பேசத் தெரியாத உள்ளம்.. மிகச்சிறிய வயது.. தனக்காக வித்தை கேட்காமல் தன் இனம் காக்க கேட்கிறான். இவன் வாழ வேண்டும்.. இவன் போன்றவர்கள் வாழத்தான் வேண்டும்.

"இல்லையப்பா... நான் இந்த அரச குமாரர்களுக்கு தவிர யாருக்கும் சொல்லி தருவதில்லை என்ற விரதம் கொண்டு இருக்கிறேன்"

"சாமி அப்படி சொன்னா எப்படி.. நான் உங்களை நம்பி வந்துட்டேன்.. நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும்"

அர்ஜுனன் முகத்தில் கனல் தெரித்தது... இருந்தும் சும்மா இருந்தான்.. ஆனால் துரியன்..

"குருவே.. அரகுமாரர்களுக்கு இணையாய் ஒரு வேடுவன் பயில்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" துரியோதனன் வெளிநடப்பு செய்யும் வேகத்தில் இருந்த்தான்..

காலை முதல் துரோணர் அர்ஜுனனை வாழ்த்திப் பேசியது ஏற்கனவே மனதை அரித்திருந்தது. துரோணர் மெளனமாய் இயலாமையுடன் அந்த வேடுவன் தலை தடவி கொண்டு இருந்தார்..

"மகனே என்னால் உனக்குக் கல்வி சொல்லித் தர இயலாது.. சென்றுவா.."

வருத்தம் தோய்ந்த முகத்துடன் துரோணர் சொன்னார்.

"சாமி..."

"கடவுளைக் கேள் மகனே.. உனக்கு வேண்டியது கிட்டும்.. இப்போது நீ புறப்படு.. நான் பாடத்தைத் தொடர வேண்டும்.. நீ கொண்டு வந்த தட்சிணையை எடுத்துச் செல்"

"இல்லை சாமி அது உங்களுக்காகக் கொண்டுவந்தது.."

கொண்டு வந்ததை அப்படியே வைத்துவிட்டு ஏகலைவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

"அர்ஜுனா எடு வில்லை.. அந்த மரத்தின் பின்னால் இருக்கும் பொம்மையை உன் ஒரு கணையால் வீழ்த்து!" பின்னால் குருவின் குரல் மெல்ல மெல்ல காதுகளில் ஒலி குறைந்து ஒலித்தது.

o o o

ஏகலைவன் தினமும் அமரும் மரத்தடி.. இப்போதும் கண் மூடி அமர்ந்திருந்தான். இப்போதெல்லாம் அந்த முகம் சற்று தெளிவாய் இருப்பதாய் உணர்ந்தான். தந்தையின் ஆணை மற்றும் குருவின் ஆணை.. கடவுளைக் கேட்க சொல்லி..

ஆனால் கடவுள் யாரென்று தெரியவில்லை. வெறும் சிலை வைத்து ஏதோ ஒரு உருவம் கொடுத்து வணங்குகிறோமே அது தான் கடவுளா? இல்லை அதைத் தாண்டி ஏதோ ஒன்று.. சிலை வெறும் வாயில். அதன் மூலம் கடவுள் நமக்கு அருள் செய்கிறார். உண்மையில் எது கடவுள்? அதுதான் யாரென்று தெரியவில்லை. ஒருவேளை அடிக்கடி மனதில் வந்து போகும் அந்த முகம்தான் கடவுளோ? அதையே கேட்டால் என்ன?

கடவுள்... கடவுள்.. கடவுள்....

கடவுள் என்றதும் அவனுள் ஒரு பொறி தட்டியது. கடவுளை சிலையாய் வடித்துதானே கும்பிடுகிறோம், அந்த சிலை அருள் செய்யும் போது.. குரு அருள் செய்ய மாட்டாரா என்ன? மலர்ந்தான். குருவின் சிலை மெல்ல மெல்ல உருவானது. இராப்பகலாய் உழைத்தான்.. இதோ குருவின் சிலை தயாராகிவிட்டது. அடடா என்ன கனிவான முகம்.. என்ன ஒரு அருட்பொங்கும் பார்வை.. குருவைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவன் மனத்தின் அழகு சிலையில் வெளி வந்தது. பக்கத்தில் இருந்த மூங்கில் வளைந்து கொடுத்தது போல் இருந்த்தது.. எல்லாம் குருவின் ஆசிர்வாதம். அந்த மூங்கில் கொண்டு அழகான ஒரு வில் செய்தான்.

இரவு பகல் இல்லாத அசுரத்தனமான பயிற்சி. எல்லாம் வெகுவாய் இலகுவாய் வந்தது. இப்போது ஏகலைவன் சிறந்த வில்லாளி. சில நேரம் எதிர் வந்த பகையை வெகு இலகுவாய் ஒருவனாய் துரத்தினான். அவன் ஊரெல்லாம் அதே பேச்சு. இருந்தும் தினமும் அவன் செய்யும் தியானமும் குருவின் முன்னால் விற்பயிற்சியும் தவறுவதில்லை. இச்செய்தி அர்ஜுனன் காதில் தீயென விழுந்தது. பொறாமை மெல்ல உயிர்தெழுந்தது. அது குருவுடன் கானகம் செல்லத் தூண்டியது.

"குருவே இன்றைய பயிற்சியைக் கானகத்தில் வைத்து கொள்ளலாமா??"

குருவுக்கும் தெரிந்திருந்தது ஏகலைவன் புகழ். எப்படிக் கற்றுகொண்டான் இத்தனை அஸ்திரப்ரயோகம்.. நாம் தான் மறுத்து விட்டோமே, வேறு யாரவது? ஒருவேளை கிருபர் சொல்லித் தந்திருப்பாரோ.. சே சே.. இருக்காது.. சரி நேரில் சென்று கேட்டால் என்ன...

"சரி அர்ஜுனா.. அப்படியே ஆகட்டும்" ஆச்சார்யார் சம்மதித்தார்

ஒரு படை போல் திரண்டு சென்றனர் குருவும் மாணவர்களும். கூடவே கானகத்தில் வீழ்த்திய விலங்குகளை இழுத்து வர ஒரு நாயுடன்.

வழக்கம் போல் தியானத்தில் அமர்ந்திருந்தவன் காதில் தான் செல்லமாய் வளர்த்த மானின் அபயக்குரல். எழுந்து சென்று பார்த்தான்.. அங்கே ஒரு நாய் இடைவிடாது குரைத்து மானை பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஒரே ஒரு கணை.. நாயின் குரல் அடங்கியது. பின்னலிட்டு தைத்தார்போல் அதன் வாய் அந்தக் கணையால் கட்டுண்டது.

இது என்ன புது நாய், யாருடையது?.. விளங்காமல் அதன் பின்னே சென்றான். அங்கே, துரோணர் அர்ஜுனனுக்கு பயிற்றுவித்துக் கொண்டுஇருந்தார்.

"அர்ஜுனா.. இந்த அஸ்திரம் எந்த விலங்குகளின் வாயையும் கட்டக் கூடியது.. இதைத் தெரிந்தவர்கள் அதிகம் கிடையாது.. இதை உனக்கு சொல்லித் தருகிறேன்.. கேள்.. நான் சொன்ன மந்திரம் உச்சரித்து இந்த கணை செலுத்து.. "

அர்ஜுனன் கணை எய்ததோ ஒரு புலியின் மேல்.. வாய் தைக்கபட்டு வந்து எதிர் நின்றதோ அவன் அழைத்து வந்த நாய். தவறாய் எய்துவிட்டோமோ.. ஆனால் புலியும் வாய் கட்டுண்டு கிடந்தது. இது வேறு யாரோ எய்த அம்பு.

அர்ஜுனன் கோபம் கனலாய் இருந்தது..

"குருவே.. எனக்கும் மேலான மாணவன் உங்களுக்கு கிடைத்துள்ளான் போலும்.. " பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அழுகையை விட கொடிய ஆயுதம் இல்லை. அர்ஜுனன் அதை அந்த நேரத்தில் நன்றாக பயன் படுத்திக்கொண்டான். கோபம் அழுகையாய் மாறியது..

துரோணர் பதைத்துப் போனார். அரச குல மக்கள் அழுவது நல்லதல்லவே... அது தனக்குத் தீங்காய் அல்லவா முடியும்... துரோணர் சுற்றிலும் பார்த்தார். அங்கே நிற்பது யார்?.. அடடா இது அந்த வேடுவன் அல்லவா.. அவனுக்கு எப்படித் தெரிந்தது இந்த வித்தை....

"நீ ஏகலைவன் தானே?.. இங்கே வா!"

அவர் அழைப்புக் குரல் கேட்டதும் அவர் காலடியில் இருந்தான் ..

"ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி!"

"எழுந்திரு மகனே.. நீடூழி வாழ். இந்த அத்திரப் பிரயோகம் மிகவும் அரிதாயிற்றே, உனக்கெப்படித் தெரிந்தது"

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் சாமி!"

"நான் உனக்கு எதுவும் சொல்லி தரவில்லையே, பின்பு எப்படி ??"

அவன் அந்த சிலை பற்றி விவரித்தான். அதற்குள் ஊர் திரண்டிருந்தது.

குரு அர்ஜுனன் முகம் பார்த்தார்.. தலை கவிழ்ந்து பொறாமையுடன் கோபத்தை மனதுக்குள் அடக்கிக் கொண்டு கண்களில் நீருடன் இருக்கும் அவனைப் பார்க்கும் போது முதன்முறையாக அவன்மேல் சிறு வெறுப்பு ஏற்பட்டது. இருந்தும் இவனால் தான் என் சபதம் நிறைவேற வேண்டும்... துரோணரின் மனமும் முகமும் இறுகியது.

"ஏகலைவா.. குருதட்சிணை இல்லாமல் பயில்வது தவறல்லவா... "

"என்ன வேண்டும் சொல்லுங்க சாமி.. என் உசுரு வோணும்னா கூட குடுத்துடுவேன்."

"உன்னுடைய வலது கை பெருவிரல் வேண்டும்"

பேரதிர்வுக்குள்ளான ஊர் மக்கள் கோபத்தால் ஏசினர்..

"ஏகலைவா இந்தாளு உனக்கு ஒண்ணும் சொல்லி தரலே.. நீயா கத்துக்கிட்டே.. அதனால நீ சும்மா எங்க கூட வா.. அவங்களை நாங்க பாத்துக்கறோம்"

அர்ஜுனன் கை வேகமாய் வில்லின் பக்கம் போனது.. ஏகலைவன் அலட்சியமாய் அர்ஜுனனைப் பார்த்தான். பின் தன் கூட்டத்தினரிடம் திரும்பினான்

"எல்லாரும் சும்மா இருங்க.. கடவுளை சிலையா வச்சித் தான் கும்புடுரோம்.. அதனால கடவுள் நமக்கு அருள் செய்யலைன்னு ஆயிடுமா அது மாதிரி தான் இதுவும் "

கண்ணை மூடினான்.. அந்த நீலவண்ண முகம் பளிச்சிட்டது..

"சம்மதமா" கேட்டான்..


அந்த முகம் சம்மதம் எனத் தலையாட்டியது..

இடையில் இருந்த குறுவாள் மீதிப் பணி செய்தது. குருவின் காலடியில் அவன் பெருவிரல் துடித்தது. துரோணரின் இறுக்கமான முகம் எந்த சலனமும் இல்லாமல் அர்ஜுனனைப் பார்த்தது..

அர்ஜுனன் மகிழ்சியில் தத்தளித்துக்கொண்டு இருந்தான்.

அட இது என்ன துரோணச் சிலையின் கண்களில் நீர் துளிர்ப்பு?? காலைப் பனித்துளி இன்னும் காயலையோ இல்லை துரோணரின் மனத்தின் அழுகை சிலையின் கண்ணீராய் வெளிவந்ததோ? எதையும் பார்க்கும் நிலையில் ஏகலைவன் இல்லை. வலி உயிர் வரை பாய்ந்த்தது. மெல்ல மெல்ல நினைவிழந்தான்.

o o o

ஏகலைவனுக்கு மணமாகி ஒருகுழந்தைக்கு தந்தை ஆகிவிட்டான். தந்தையை கேள்வி கேட்கும் வயது அவன் குழந்தைக்கு. கேள்வி கேட்பது குழந்தைகள் குணம். எதையும் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்ளும். மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் வெளிப்பார்வைக்கு அர்த்தமற்றதாகத் தோன்றினாலும் ஏதேனும் தேடல் உள்பொதிந்து இருக்கும். இந்தப் பருவத்தில் எழும் கேள்விகளும் அதற்குக் கிடைக்கும் பதில்களுமே அவர்கள் வாழ்க்கையின் அத்திவாரங்கள்.

மகனுக்கு முதல் விற்பயிற்சி, குழந்தையின் கேள்விகளுடன் ஆரம்பம் ஆனது.

"முதலில் எந்த விலங்கு மீதும் அனாவசியமாக அம்பு செலுத்தக் கூடாது"

"அப்பா எது அவசியம்? எது அனாவசியம்?"

"உணவுக்காகவும் தற்காப்புக்காகவும் செய்வது அவசியம், விளையாட்டுக்காவும் வெறி கொண்டு கொல்வதும் தவறு"

"உணவுக்காகக் கொல்வது தவறில்லையா?"

"அது நம் குலதர்மம்."

"உங்கள் கட்டை விரல் எங்கே?"

"குருவுக்குக் காணிக்கையாய் வெட்டிக் கொடுத்துவிட்டேன்"

"அப்போது உங்களுக்கு வலிக்கவில்லலையா?"

"வலிச்சது.. மிகவும் வலிச்சது கண்ணா, உயிர் போறது போல வலிச்சது"

"கட்டை விரலுக்கே உனக்கு அவ்வளவு வலித்ததா?"

"ஆமாம் கண்ணு "

"அப்படியானால் நாம் அம்பு எய்து கொல்லும் உயிர்களுக்கும் வலிக்கும் தானே.. அது பாவமில்லையா?"

ஏகலைவன் அயர்ந்தான். என்ன சொல்வது.. கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றா? இல்லை கொல்லுதல் கூடாதென்றா?.. கொல்லாமல் உயிர் வாழ்வதெப்படி? சற்று நேரம் மௌனமாய் இருந்தான். அந்தக் கேள்வி வெகுவாய் பாதித்தது. சற்று நேரம் தேவையான அடிப்படை வித்தை சொல்லித்தந்து விட்டு அதனை மறுபடி செய்யச்சொல்லி சரிபார்த்தான். பரவாயில்லை.. வேகமாய் கற்றுக் கொள்கிறான்.. மனம் திருப்தி அடைந்தது.

மகனை அழைத்துக் கொண்டு அவன் அமரும் மரத்தடி சென்றான். இலை உதிர் காலம்.. மரம் எதையோ பறி கொடுத்தார் போல சோகமாய் இருப்பது போல் தெரிந்தது. அவன் மனம் இன்று ஒருமுகப்படவில்லை.. பிள்ளையின் கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது. சற்று காலாற நடந்தால் என்ன.. எழுந்து நடந்து சென்றான்.

அப்போது .....

( தொடரும் )
இரண்டாம் பாகம்

வேலைக்காகப்
போனீங்க இன்டர்வ்யூ,
ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
எங்களுக்கு இன்டர்வ்யூ!
*

நலுங்காமல் நாலு வயசில்
நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!
நாலைந்து நோட்டுதான்
நாலாவது வகுப்பு வரை.
*

எம் மழலை மாறும் முன்னே
ப்ளே ஸ்கூல் அறிமுகம்!
வருஷங்கள் ஆக ஆக நிரம்பி
வழிகின்ற புஸ்தகங்கள்.
*
அஸ்ட்ரனாட் முதுகிலே
ஆக்ஸிஜன் ஸிலிண்டரோடு
அசைஞ்சு அசைஞ்சு
மிதக்கிறாப்பலே-
தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க
அதை ஏன் கேக்குறீங்க ?
*

ஏழாவது வகுப்பிலே நீங்க
வாசிச்ச விஷயமெல்லாம்
எல்கேஜியிலேயே நாங்க
யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்.
*

இருபது வயசிலே நீங்க
வியந்து பார்த்த மானிட்டரிலே
இப்போதிலிருந்தே நாங்க
புகுந்து கேம் ஆடறோம்.
*

கதவை விரியத் திறங்க!
இன்னும் என்னென்ன
காத்து இருக்குன்னு
பாத்து வச்சுக்கிறோம்.
*

கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்.
*** *** *** *** ***

குழந்தையின் குரலாய் நம்பிக்கை கவிதையை
அனுப்பி வைத்த ராமலக்ஷ்மிக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

பூக்களாய்ச் சிரிக்கும் பிள்ளைகள்.
பூமிக்கு கிடைத்திருக்கும் நித்திய மலர்கள்.

அந்த மு்கத்தில் என்றும் புன்னகை தவழ்ந்திருக்க
இறைவனைப் பிரார்த்திக்கி்றோம்.

பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள் சார்பாக
அனைத்து குட்டீஸுகளுக்கும் மனமார்ந்த
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

இதற்கு முந்தைய பதிவில் பலரின் பலவகையான கருத்துக்களைப் பார்த்தோம்.

அதிக வீட்டுப்பாடம் தவறு என்றாலும் பிள்ளைகள்
வீட்டுப்பாடத்துடன் தான் வீட்டிற்கு வருகிறார்கள்.

வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதின் உண்மையான நோக்கம்
இதுதான்.

1. பள்ளியில் படித்த பாடத்தை ரிவைச் செய்துக்கொள்ள.

வீட்டில் ஒரு முறைப் படித்தால் பள்ளியில் படித்தது
நன்றாக மனதில் பதியும்.

2. நன்கு படிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.
படித்ததில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

3. வீட்டுப்பாடம் செய்யப் பழகுவாதால் பிள்ளைகள்
தன் வேலையைத் தானே செய்யப் பழகுகிறார்கள்.

4. படிப்பைத் தவிர தனித்துவமாக வேலையை
முடிக்கப் பழகுகிறார்கள்.

5. சாதாரணமாக ஒரு பாடத்திற்கு கேள்வி, பதில்
எழுதும் பொழுது கூட சில மாணவர்கள் அதை
அசைன் மெண்ட் மாதிரி அழகாக ச்கெட்ச் கொண்டு
தலைப்பு எழுதி, அழகாக கோடு போட்டு என்ரு
செய்வார்கள். இதனால் ஒரு பெருமை உணர்வு
கிடைக்கும்.

இப்படி சில பாசிடிவ்களும் இருக்கிறது
வீட்டுப்பாடத்தில்.

இங்கு பெற்றோராக நாம் பின் பற்றி ஆகிய வேண்டிய
சில வி்டயங்களைப் பார்ப்போம்.

இன்னைக்கும் உங்க ஸ்கூல்ல ஹோம்வொர்க் கொடுத்துட்டாங்களா?!
என்று பிள்ளைகள் எதிரில் பேசினால் படிக்கும் பள்ளியைப்
பற்றி, படிப்பைப் பற்றி தவறான அபிப்பிராயம் பிள்ளைகளுக்கு
ஏற்படு்ம்.

பள்ளியிலிருந்து வந்ததும் உண்ண உணவுக் கொடுத்து
சிறிது நேரம் விளையாட விடுங்கள்.

அதன் பிறகு அன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது
என்று கேட்டு அறிந்து பிறகு என்ன பாடம் நடத்தினார்கள்?
என்று கேட்டு பிறகு ஹோம் வொர்க் செய்யச் சொல்லுங்கள்.

ஆம் வீட்டுப்பாடத்தைப் பிள்ளைகள் தான் செய்ய வேண்டும். நாம் செய்து கொடுப்பதினால்
அவர்கள் சோம்பேறிகளாகிறார்கள். மேலும் பள்ளியில்
ஆசிரியர் இது ஹோம் வொர்க் என்று சொல்லும்போது
ஹ, நானா செய்யப் போகிறேன்! என்று நினைக்கையில்
படிப்பே தேவையில்லை என்ற மன நிலைக்கு ஆவார்கள்.


பிள்ளைகளை வீட்டுப்பாடத்தைச் செய்யச் சொல்லவேண்டும்.
தவறாகச் செய்தாலும் சரி. தவறில் இருந்துதான் கற்றுக்கொள்ள
முடியும். தவறாகவே இருந்தாலும் அவர்களாகவே செய்து
முடிப்பார்கள். தன் வேலையைத் தானே செய்யும் திறமை
உண்டாகும். அடுத்தவர்களைச் சார்ந்து இருக்க மாட்டார்கள்.

வீட்டுப் பாடத்தை முடிக்க இயலாத போது (அதாவது
புரியாத கணக்கு, புரியாத வார்த்தை, புரியாத அர்த்தம்)
போன்ற சமயத்தில் நாம் அருகிருந்து அவர்களுக்கு உதவ
வேண்டும்.

பெற்றோர்களின் ஈடுபாடு பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு
வழிவகுக்கும். அதுவே பெற்றோரே செய்து கொடுத்தால்
அவர்களது முன்னேற்றத்திற்கு நாம் ஒரு தடைக்கல்லாகிறோம்.


***********************************************************

வீட்டுபாடத்தில் பிள்ளைகளுக்கு இப்படியும் உதவலாம்.

வீட்டுப்பாடம் செய்யும் நேரம் நாம் வீட்டில்
இருக்கும் நேரமாக பார்த்துக்கொள்ளவும்.
(இதுதான் பலரின் பிரச்சனை. வேலைக்குச்
செல்லும் அம்மாக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்).

அப்படிபட்ட நிலையில் பி்ள்ளைகள் தன்னால் இயன்ற
பாடத்தை செய்து முடித்துவிட்டு தெரியாததை
பெற்றோ்ர் வந்ததும் கேட்டுச் செய்வது போல்
திட்டமிட்டுக்கொள்ள்லாம்.

ஏதோ அவசர வேலையில் வர முடியாவிட்டால்
பிள்ளையை போனிலாவது தொடர்பு கொண்டு உதவுங்கள்.

இப்படிச் செய்வதன் முக்கிய நோக்கம் பிள்ளைக்கு
அவனும் அவனது பாடங்களும், வேலையும்
நமக்கு முக்கியம் என்ற செய்தியைச் சொல்கிறோம்.

படிக்க என்று தனியாக ஒரு இடம் அவசியம்.
டைனிங்டேபிளில் உட்கார்ந்தும் படிக்கலாம்.
ஆனால் டீவி போடப்பட்டிருக்கக்கூடாது.
பிள்ளைகளின் கவனம் திசை திரும்பும்
வஸ்துக்கள் ஏதும் அருகில் இல்லாமல்
பார்க்கவேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில்
உட்கார்ந்து படிக்கவேண்டும் என்று திட்ட
மிட்டுவிட்டால் பிரச்சனையில்லை.

சனி, ஞாயி்று விடுமுறை தினங்களில்
கொஞ்சம் அதிகாமாக வீட்டுப்பாடம்
கொடுத்திருந்தால் கூட அவைகளை
வெள்ளி இரவுக்குள் முடித்துவிடக்
கூறுங்கள். இதனால் சனி, ஞாயிறு
விடுமுறையை பிள்ளைகள் அனுபவிக்க
முடியும்.

மொத்ததில் வீட்டுப்பாடத்தை சுமையில்லாமல்
ஆக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பிள்ளைங்களுக்கு பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம்
அதாங்க ஹோம்வொர்க் கொ்டுத்தா அது
பிள்ளைகளுக்கா? இல்லை பெற்றோர்களுக்கா!ன்னு
கேக்குற அளவுக்கு இருக்கு.

ப்ரொஜ்க்ட் கொடுத்தாங்கன்னா, எக்சிபிஷனுக்கு
ஏதாவது செய்யுங்கன்னா எல்லாம் பெத்தவங்களுக்குத்தான்.


நாம படிச்சு முடிச்சதுக்கப்புறமும் ஹோம்வொர்க்
பூதம் நம்மளை துரத்துற மாதிரியே இருக்கா?

இல்ல குழந்தையா இருந்து அழகா செய்ய முடியாம
விட்ட ஹோம்வொர்க்கை இப்ப ஆசையோடு
செஞ்சு கொடுக்கறீங்களா?

சரி வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதன் நோக்கம்
என்னன்னு நீங்க நினைக்கறீங்க.

எம்புட்டு ஹோம்வொர்க் கொடுக்கலாம்னு நினைக்கறீங்க.

வாங்களேன்! இந்த ஹோம்வொர்க் டென்சனைப் பத்தி
ஒரு கலந்துரையாடல் செய்யலாம்.

உங்க கருத்தை பதிஞ்சுட்டு போங்க.

தவறு.11.
சிறு நீர், மலம் கழிக்கக் குழந்தைகள் அவசரப்படுத்தும்போது திட்டுவது

காரணம்
சிறுநீர் மற்றும் மலத்தை தேவையான நேரம் வரும் அடக்குவதற்கு சில தசைகளின் ஒத்துழைப்புத் தேவை. ஆனால் இத்தசைகள் 3 வயது வரை குழந்தையின் கட்டுப்பாட்டிற்கு வராது. ஆகவே தேவையான நேரம் வரை அடக்குவது குழந்தைகளால் இயலாது.

தீர்வு
இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

தவறு.12.
இரவில் படுக்கையில் சிறுநீர் போய் விடுவதை திட்டுவது மற்றும் கேலி செய்வது

காரணம்
3வயது வரை படுக்கையில் சிறுநீர் போய்விடுவதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன
1.சிறுநீரை அடக்குவதற்கான தசைகள் கட்டுப்பாட்டிற்குள் வராமல் இருப்பது
2.அதிகப்படியான பயம் மற்றும் அச்சம் கலந்த சுபாவம்
3.குழந்தைகளின் பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு
4.வியாதி உ.தா: காய்ச்சல்
மேலும் கேலி செய்வதால் இந்தப் பழக்கம் அதிகமாகும். அதற்குப் பதிலாக அன்பும், அரவணைப்பும் இப்பழக்கத்திலிருந்து விடுபட உதவி செய்யும்.

தீர்வு
1.மேற்கண்ட காரணங்களில் ஏதேனும் ஒன்றால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறாரா என ஆராய்ந்து அதற்கான தீர்வு காணுங்கள்.
2.இரவு படுக்கும் முன் திரவ உணவுப் பொருளைத் தவிர்த்து விடுங்கள்.
3.நடு இரவில் ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள்.
4.அன்பும் அரவணைப்பும் வழங்குவது.
மேற்கண்ட வழிகளில் தீர்க்க முடியாமல் 3 வயதிற்கு மேலும் இப்பழக்கம் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.


தவறு.13.
பாலுறுப்பில் கையை வைத்துக்கொண்டு இருந்தால் திட்டுவது.

காரணம்
எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் திட்டுவதால் திருத்த முடியாது. திட்டும்பபோது, “அப்படி என்னத்தான் இருக்கிறது இந்த செயலில், அம்மா/அப்பா திட்டுகிறார்கள்” என்று எண்ணி அந்தச் செயலின்மீது மேலும் ஆர்வம் அதிகரிக்கும்.

தீர்வு
1.ஆடை எதுவும் அணிவிக்காமல் சும்மா விடும்பொழுதே இந்த மாதிரி பழக்கம் ஏற்பட காரணமாகிறது. ஆகவே ஆடை இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க விடாதீர்கள்.
2.ஆடைகள் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
3.தினமும் 2 நேரம் குழந்தைகளைக் குளிக்கவையுங்கள்.
4.'பால் உறுப்பில் அடிக்கடி கை வைத்தால் அழுக்கு ஒட்டி புண்ணாகும் 'என்று சொல்லுங்கள். 'நான் சின்ன வயதாக இருக்கும்போது எனது நண்பன் X இப்படித்தான் செய்து புண்ணாகி ஆஸ்பத்திரி சென்று 10 நாள் ஊசி போட்டார்கள்' என்று சொல்லுங்கள்.

மரு.இரா.வே.விசயக்குமார்

முந்தைய பதிவுக்க்கு இங்கே.


திட்டமிட்டால் மட்டும் போதாது. அதை
பிள்ளைகள் முறையாக பின்பற்றச் சொல்லிக்
கொடுத்தால்தான் திட்டமிட்டதின் பலனை
அனுபவிக்கலாம். அதைச் செய்வது
எவ்வாறு? அதை இங்கே பார்க்கலாம்.

பொன்னான காலத்தை வீணாக போகவிட்டால்
திரும்ப வராது என்பதை பி்ள்ளைகளுக்குச்
சொல்ல வேண்டும். ( காலம் பொண் போன்றது என்பதை
கதையாகச் சொல்லலாம்.)

தொலைந்ததைத் தேடுவதிலேயே நாளின்
பெரும் பகுதி போய்விடும். இதனால்
பிள்ளைகள் தேடித்தேடி இளைத்து,
அழுது எல்லாம் முடிவில் அலுத்து
போய்விடுவார்கள்.

பிள்ளைகள் தங்களின் உடைகள், புத்தகங்கள்,
விளையாட்டுப்பொருட்கள், பெண்குழந்தையாய்
இருப்பின் அவர்களது ஹெர்பின், ஸ்டிக்கர்ஸ்
(இவைகள் வைக்க சரியான டப்பா எது
தெரியுமா? சமையலறையில் உபயோகிக்கப்
படும் அஞ்சறைப்பெட்டி) இப்படி எல்லாவற்றையும்
எடுத்த பொருட்களை திரும்ப அதே இடத்தில்
வைக்கப் பழக்க வேண்டும்.

அவர்களுக்கென ஒரு சின்ன அலமாரி
இயலாவிட்டால், நம் அலமாரியில் கீழ்
இரண்டு செல்ஃப் அவர்களுக்கென ஒதுக்கலாம்.

ஸ்கூலுக்கு போகும் அவசரத்தில் வைத்துவிட்டாள்,
புத்தகம் இங்கே கிடக்கிறது என்று நாம்
எடுத்து வைப்பதை விட பிள்ளைகளை
எடுத்து வைக்கச் சொல்லவேண்டும்.
தனது அறையை/அலமாரியை வாரம் ஒரு
முறையாவது சுத்தமாக்கி முறையாக
அடுக்கிவைக்கப் பழக்கவேண்டும்.

அவர்களது பொருட்களுக்கு அவர்களே
பொறுப்பு என்பதை உணர்த்த வேண்டும்.
இப்படிச் செய்வதால்,”அம்மா! என் ஹிஸ்டரி
புக் டேபிள் மேல் வெச்சிருந்தேன், இப்பக் காணோம்!
நீ பாத்தியா,”,”அப்பா! என் வொயிட் சாக்ஸை
பாத்தீங்களா”வெல்லாம் இருக்காது.

தன்னை தன் பொருட்களையும் பார்த்துக்கொள்ளும்
திறமை அவர்களிடம் நிறையவே இருக்கிறது.
அதை வெளிக்கொணரவேண்டியது மட்டுமே
நம் செயல். இல்லாவிட்டால் அவர்கள் சோம்பேறிகளாகவும்,
நாம் மட்டுமே உழைப்பாளிகளாகவும் ஆகிவிடுவோம்.

முந்தைய பதிவிற்கு இங்கே:


திட்டமிடுதல் குறித்து பிள்ளைகளிடம் பேசியாகிவிட்டதா?
சரி அவங்களுக்கு எப்படி திட்டமிடக் கற்றுக்
கொடுப்பதுன்னு இப்ப பார்ப்போம்.

திட்டமிட வேண்டிய பொழுது கவனிக்க
வேண்டியவை இவைகள் தான்.

1. கல்வியாண்டில் குழந்தையிடமிருந்து
என்ன எதிர் பார்க்கிறோம்?
(இங்கே குறிப்பிட வேண்டிய மிக
முக்கியமான விடயம் அவர்கள் விரும்பிக்
கற்பதை மாத்திரம் கற்கட்டும். நம்
விருப்பத்திற்காக பாட்டு, கராத்தே,நீச்சல்
எல்லாம் வேண்டாம். பாவம் பிள்ளைகள்.
குழந்தைப் பருவத்தை ஆனந்தமாக
அனுபவிக்கட்டும். திரும்பி வராத பருவம்
தித்திப்பாய் இருக்கட்டுமே!)

2. பள்ளியில் கொடுக்கப்படும்
அசைண்மெண்டுகளுக்கான நாட்களை
குறித்து வைத்தல்.

3. பள்ளிப்பாடத்தை தவிர குழந்தைகளுக்கான
கதைப்புத்தகங்களை படிக்க, செய்தித்தாள்கள்
வாசிக்க நேரம் ஒதுக்குதல்.

(இவை மறைமுகமாக பிள்ளைகளின்
அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
படிக்கும் பழக்கமும் ஏற்படும்.
ஆங்கில, தமிழ் இதழ்கள் படிக்கப்படும்
போது பல புதிய வார்த்தைகள்
கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.)

4. செய்யவேண்டியவைகளை குறித்து
வைத்துக்கொள்ளுதல் ( to do list )

அடுத்தநாள் பள்ளிக்கு கொண்டு செல்ல
வேண்டியவைகளை குறித்துக்கொள்ளுதல்,

இப்படிச் செய்வதால் அதை மறந்தேன்,
இதை மறந்தேன் என்று அவர்களும்
டென்ஷ்னாகி என்று காலை நேரம்
பரபரப்பாகாது.

5. பள்ளியில் டீச்சர் வரைபடம்,
ரிப்பன் போன்று எது வாங்கி வரச்
சொன்னாலும் அதை ஒரு சின்ன
டயரி மாதிரி நோட்டில் எழுதிக்
கொண்டு வரச்சொன்னால் நாமும்
சரி பார்க்க வசதியாக இருக்கும்.
(திங்கள் கிழமைகாலையில்
“அம்மா! சொல்ல மறந்துட்டேன்.
சயன்ஸ் நோட் தீர்ந்து போச்சு
என்பார்களே! அது இனி சொல்ல
மாட்டார்கள்.

6. அந்தந்த வார இறுதிக்குள்
செய்து முடிக்கவேண்டிய
வேலைகளை டார்கெட் செட்
செய்து கொண்டு டார்கெட் தேதியையும்,
செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும்
கு்றித்து வைத்துக்கொள்ள பழக்க வேண்டும்.


இப்படி ஒவ்வொன்றையும் குறித்து வைத்துக்கொண்டு
அதை நிறைவேற்றுமாறு ஒரு டைம் டேபிள்
போட்டுக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக:

காலையில் எழுந்தது முதல் பள்ளி செல்லும் வரை
செய்ய வேண்டியவை,

பள்ளியிலிருந்து வந்த பிறகு செய்ய வேண்டியவை,

படிக்கும் நேரம், விளையாட்டு நேரம்,
பள்ளிப்பாடங்கள் செய்யும் நேரம்,

அடுத்த நாளுக்கு புத்தகங்களையும், யூனிபார்ம்களையும்
எடுத்து வைத்தல்

என்று நேரப்படி டைம்டேபிள் அவர்களை விட்டே
போடச்சொன்னால், நேரத்தை அழகாக
திட்டமிடக் கற்றுக்கொள்வார்கள்.
அவர்களூக்கும் மகிழ்ச்சி, நமக்கும் நிம்மதி.

பெரிதாக எழுதி அவர்கள் அறையில்
மாட்டி வைத்துவிட்டால் அதைப் பார்த்து
அவர்கள் நடக்க வசதியாய் இருக்கும்.

இவ்வளவு செய்யும் குழந்தைகளுக்கு
டைம் டேபிள் படி நடந்தால் பாராட்டோடு
பரிசும் கொடுக்க மறக்காதீர்கள்.

பிள்ளைகளுக்கு திட்டமிடக் கற்று கொடுத்துவிட்டோம்.
அதை பின்பற்றக் கற்றுக்கொடுத்தால்தானே
பிள்ளைகளுக்குட் தெரியும்.

நாளை அதையும் பார்க்கலாம்.

அன்புடன்
புதுகைத்தென்றால்

நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
காலையில் புதுகைத்தென்றல் பிளாக்கில்
போடப்பட்ட வாக்கினில் இனிமை வேண்டும்
கதை பேரண்ட்ஸ் கிளப்பில் அதன் ப்ரத்யேக
வாசகர்களுக்காக( அப்படித்தான் ராமலக்ஷ்மி
பின்னூட்டத்துல சொல்லியிருக்காங்க.)

*********************************************

”நீதான் பேய்!,” என்று கத்திக்கொண்டே

ஓடி வந்து என்னிடம் ஒளிந்துக்கொண்ட
தம்பி் நவீனை துரத்திக்கொண்டே ஓடிவந்தாள்
என் பெரிய மகள் நீலிமா.

பொழுது விடிந்து பொழுது போவதற்குள்
வீட்டில் ஒரே களேபரம்தான். இவர்கள்
இருவரும் பள்ளிக்கு சென்றிருக்கு நேரம்தான்
வீடு நிசப்தமாக இருக்கும்.

”இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டேன்.

”அக்கா! என்னைத் திட்டறாங்க. தலையில
கூட கொட்டிட்டாங்க பாருங்கம்மா வலிக்குது!”என்றான்
மகன் நவீன்.

“திட்டனதையும், கொட்டினதையும் மட்டும் சொல்லு!”
நீ செஞ்சதைச் சொல்லாத, என்ற பெரி்ய மகள்
நீலிமாவிடம்,”என்ன நடந்தது? ப்ரச்சன்னை என்னன்னு?
நீதான் சொல்லு” என்றேன்.

”பாத்துட்டு தர்றேன்னு சொல்லி என் ஃபரெண்டு
கொடுத்த கீ செயினை உடைச்சிட்டான்! என்
பெஸ்ட் ப்ரெண்ட் என் பர்த்டேக்காக கொடுதது
அது”, என்று வருத்தத்தோடு சொன்னாள்.

”அதுக்கு அக்கா என்னை கோட்டான், நாய்
அப்படின்னு திட்டி்னாங்கம்மா!” என்றான்.

”எதுக்கு தலையில கொட்டின?,” என்றதும்
”வெவ்வேன்னு அழகு காட்டினான் தம்பி”,
என்றாள்.

அலுப்பாக வந்தது எனக்கு. எப்போதும் இதே
நிலைதான். அடிதடி சண்டை நடக்கும்.
இவள் முடியைப்பிடித்து் இழுப்பான், அவள்
அடிக்க என்று பெரிய யுத்தமே நடக்கும்.

தாளமுடியாமால் இருவருக்கும் 2 போட்டு
விட்டு வருவேன். ஆளுக்கொரு மூலையில்
உட்கார்ந்து அழுவார்கள். இதுதான் இவர்களின்
சண்டையின் முடிவாக இருக்கும்.
பிள்ளைகளை அடித்துவிட்டு அந்த
வருத்தத்தில் சாப்பிடமால் இருப்பேன்.
இந்த நிலமை தொடரக்கூடாது.
புரிய வைக்கவேண்டும்
என்று முடிவு செய்தேன்.

”என் கூட வாங்க ரெண்டு பேரும்”, என்றேன்.
அடிக்காமல் அழைத்த அம்மாவை ஆச்சரியமாக
பார்த்தனர் பிள்ளைகள்.
” இப்படி உட்காருங்க” என்று டைனிங் டேபிளு்ருகில்
அமர்த்தி விட்டு உள்ளே சென்றேன்.

தலையைத் தடவிக்கொண்டே மகனும்,
முனுமுனுத்துக்கொண்டே மகளும் உட்கார்ந்திருந்தனர்.

“ம்ம். ரெண்டு பேரும் இதை சாப்பிடுங்க”, என்று
அவர்களிடம் நீட்டிய தட்டை பார்த்து முகம்
சுளித்தனர்.

“என்னம்மா! வாழைக்காயைக் கொடுக்கறீங்க.
காயை பச்சையா சாப்பிட்டா பல் கறுப்பாயிடும்னு
சொல்வீங்களே!” என்று கேட்டாள் மகள்.

”பரவாயில்லை சாப்பிடுங்க” என்றேன்.
“காயைச் சாப்பிட்டா நல்லா இருக்காதும்மா.
பழம் தான் சுவையா இருக்கும், இருங்க
நான் போய் வாழப்பழத்தை எடுத்துகிட்டு
வர்றேன்”! என்று எழுந்த மகனை
உட்கார வைத்தேன்.

”வாழைக்காய், வாழைப்பழம் ரெண்டும்
ஒரே மரத்திலேர்ந்துதானே வருது.
அப்ப ஏன் வாழைப்பழத்தை மட்டும்
விரும்பி சாப்பிடற? என்றதும் மகள்
அதான் தம்பி சொன்னானே அம்மா,
“ பழம் சுவையா இருக்கும்னு. அதான்!”
என்றாள் மகள்.

”சரியா சொன்ன! சுவையான பழம் இருக்க
காயைச் சாப்பிட யாருக்குத்தான்
விருப்பம் இருக்கும்?” அதே போல
அன்பான கனிவான வார்த்தைகள்
இருக்க ரெண்டுபேரும் கடுமையான
வார்த்தைகளை உபயோகிக்கலாமா??”
என்றேன்.


என்னை ஏறிட்ட மகளிடம்,”தம்பி
கீழே போட்டு உடைச்சது தப்பு. என்னிடம்
வந்து சொல்லியிருக்கணும். இல்ல
இப்படி செய்யலாமான்னு மென்மையா
கண்டிக்கணும். அதைவிட்டு
கோட்டான், நாய்னு சொல்லலாமா,”என்றேன்.

”தப்புதாம்மா!” என்றாள் மகள்.

“அக்காவோட சாமானை பாக்க எடுத்த சரி.
அதை பத்திரமாக கையாள வேண்டாமா?
அது உடஞ்சதுல அக்கா எவ்வளவு
வேதனைப்படறாங்க, வயசுல பெரியவங்களை
பேய்னு வேற சொல்வது சரியா நவீன்?
என்றதும் தலையைக் குனிந்து கொண்டு
”சாரி” என்றான்.

”சாரி, சொல்லவேண்டியது எனக்கில்லை”
என்றதும் அக்கா எழுந்து போய் தம்பிக்கு
முத்தம் கொடுத்து,”சாரிடா தம்பி! வலிக்குதா?
வா! ஐஸ் க்ப்யூஸ் வைக்கிறேன்,” என்றழைத்தாள்.

அவனும் பதிலுக்கு முத்தம் கொடுத்து
“இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன்
அக்கா!”என்றபடி அக்காவுடன் சென்றான்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்வர்ந்தற்று

என்ற திருக்குறளை படித்து அதன்
பொருள் அறிந்திருந்தாலும் பொறுமை
இன்மையால் பிள்ளைகளிடம் கடுமையாக
நடந்து கொண்டிருந்தேன். இன்று பிள்ளைகளை
அடிக்காமல் இதமாக புரியவைத்ததன் பலன்
அனைவருக்கும் மகிழ்ச்சி.

என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைதான்
ஞாபகம் வந்தது.”படித்தால் மட்டும் போதாது!”

*****************************************************

தொடர் பதிவாக வந்து கொண்டிருக்கும்
திருக்குறள் பதிவிற்காக இன்னொரு கதை இது.

இறைவன் எல்லோருக்கும் அதே 24 மணிநேரம்தான்
கொடுத்திருக்காரு. ஆனால் அதை முறையா திட்டமிட்டவங்க
வாழ்வில் ஜெயிக்கிறாங்க. பிள்ளைகள் மேல் பாசம்
வைத்திருக்கும் நாம் அவர்களுக்கு அந்த நேரத்தை
உபயோகப்படுத்தனும்னு அழகா சொல்லிக்கொடுத்து
விட்டால் நம்ம பசங்களும் ஜெயிப்பாங்களே!


நாமலே போடற திட்டத்தை கடைபிடிக்காம
போறோம், இதுல பிள்ளைங்களுக்கு என்ன
சொல்லிக்கொடுப்போம்னு? நினைக்காதீங்க.
அவங்களுக்கு சொல்லிக்கொடுக்கற சாக்குல
நாமளும் நம்மளை முறைப்படுத்திக்கலாமே.ரெண்டு பேருக்குள்ள ஒரு போட்டி மாதிரி
வெச்சுகிட்டு யார் டார்கெட்டை அசீவ்
செய்யறாங்களோ அவங்களுக்கு பரிசுன்னு
செஞ்சு பாக்கலாம். மாற்றம் சில சமயம்
நல்லது.


எதுக்குமே MIND SETTING ரொம்ப முக்கியம்.
முதலில் பிள்ளையை பக்கத்தில் இருத்தி
பேசுங்க. நாம இப்ப வீட்டுக்கு ஒரு
டைம் டேபிள் செய்யப்போறோம். இதுனால
உனக்கு படிக்க, விளையாட, டீவி பார்க்க,
ஒண்ணுமே செய்யாம சும்மா இருக்க,
(அதுவும் முக்கியமுங்க.அதைப்பத்தின ஒரு
பதிவும் இருக்கு. லிங்க் கொடுக்க முடியல.
பேரண்டிங் டிப்ஸை கிளிக்கினால் பார்க்கலாம்)
எல்லாத்துக்கும் நேரம் கிடைக்கும்.
அப்படின்னு சொல்லவேண்டும்.


நேரத்தை திட்டுமிடுதலின் அவசியத்தை
பிள்ளைக்கு உணர்த்தனும்

திட்டமிடும்போது நிறைய “நோ”
சொல்ற மாதிரி டைம்டேபிள்
இல்லாமல் அவங்கவங்க தேவை
வீட்டுச்சூழலை மனசுல வெச்சுகிட்டு
டைம் டேபிள் போடக் கற்று கொடுக்கலாம்.ஆமாம். நாம டைம்டேபிள் போட்டு
அதை பிள்ளைகள் கடைபிடிக்க
வேண்டுமென்றால் அவர்கள் விரும்ப
மாட்டார்கள். ஆகவே டைம்டேபிள்
போடல் ஐடியா கொடுக்கணும். பசங்க
எழுதணும்.


போட்டுவத்தை திட்டத்தை அவங்க
ஒழுங்கா கடைபிடிக்கிறாங்களா?
அப்படின்னு பாத்து அதை பாயிண்ட்ஸ்களாகவோ,
ஹேப்பி பேஸாகவோ, ஸ்டார் ஸ்டிக்கர்களாகவோ
குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்படி முறையா செய்யவதன் பலனை
பிள்ளைகள் விரும்ப ஆரம்பிச்சிருவாங்க.
ஏன் என்றால் எல்லாவற்றிற்கும் அதில்
நேரம் இருக்குல்ல. படிப்பு, விளையாட்டு
டீவி எல்லாமும் சரிவிகிதமா இருக்கும்.
பிள்ளைகள் இதை விரும்புவாங்க.

சரி, முதலில் பிள்ளைகளிடம் பேசிட்டு
வாங்க. திட்டமிடுதல் எப்படின்னு
பார்ப்போம்.

(தொடரும்)

91. கடற்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள், மணலில் விளையாட அனுமதியுங்கள்.

92. பேருந்து மற்றும் ரயிலில் ஒரு முறையாவது அழைத்துச் செல்லுங்கள்.

93. சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காட்டுங்கள்.

94. செய்தித் தாள்களில் வரும் குழந்தைகளுக்குப் பிடித்தமான செய்திகளை விவாதியுங்கள். விலங்கியல் பூங்காவில் பிறந்த புதிய யானைக் குட்டி, வானிலை முன்னறிவிப்பு முதலியன.

95. குழந்தையின் தலை முடி சுத்தமாக உள்ளதா? முடி கண்ணை மறைக்கிறதா? என அடிக்கடி பாருங்கள்.

97. காரை சுத்தம் செய்யும்போது குழந்தையை உதவிக்கு அழையுங்கள். காரின் பாகங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே சுத்தம் செய்யுங்கள்.

98. மேற்கண்ட குறிப்பின் நோக்கம்: ஒவ்வொரு செயலிலும் இறுதியில் என்ன கிடைக்கும் என்ற சிந்தனையைவிட, ஒரு செயலில் படிப் படியாக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு உள்ளது என்கிற சிந்தனையை உருவாக்குவதாகும்.

99. வலது, இடது மற்றும் 4 திசைகளையும் கற்றுக் கொடுங்கள். திசைகளை பற்றிய உணர்வினை உருவாக்குங்கள்.

100. குடிநீரை உயரம் குறைந்த இடத்தில் வையுங்கள். தண்ணீர் குடிப்பதற்கு குழந்தை உங்களைத் தேட வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.

101. குழந்தைகள் உங்களை சார்ந்திராமல் தங்கள் தேவைகளை தாங்களே முடித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு தயார் செய்யுங்கள்.


In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

76. குழந்தையின் பொம்மைகளை ஆராயுங்கள்
அ. பொம்மையிலிருந்து எதாவது கற்றுக்கொள்ள இயலுமா
ஆ. பொமையை குழந்தை பயன்படுத்துகிறாளா
இ. பொம்மையின் அனைத்து பாகங்களும் சரியாக உள்ளதா
ஈ. பொம்மை குழந்தைக்குப் பாதுகாப்பான நிலையில் உள்ளதா (கடையில் புதிய பொம்மை வாங்கும்போதும் இப்படி ஆராயலாமே)

77. குழந்தையால் செய்யக்கூடிய வேலையை நீங்கள் செய்து கொடுக்காதீர்கள்.

78. உடல் பயன்பாட்டை ஊக்குவியுங்கள். விளையாட அனுமதியுங்கள்.

79. அமைதியாக பேசாமல் அமர்ந்திருப்பதைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நீங்களும் அவர்களுடன் தியானம் செய்யுங்கள்.

80. குழந்தைகளுக்கு அவர்களது பிறந்த தேதி, இரத்த வகை, தொலைபேசி எண் போன்ற முக்கிய குறிப்புகளை சொல்லிக்கொடுங்கள்.

81. பள்ளியிலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறிப்புகளையும் படித்துப் பின்பற்றவும்.

82. குழந்தையை பாதித்துள்ள விசயம் பற்றி அவர்களது ஆசிரியருக்கு தெரிவியுங்கள். உதாரணத்திற்கு குழந்தை தூங்காமல் இருந்தது, உடல் நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தது, வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தது, பெற்றோர்கள் வெளியூருக்கு சென்றிருப்பது முதலியன. ஏனெனில் பள்ளியில் குழந்தையின் நடத்தையில் உள்ள மாற்றத்தை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள.

83. மண்ணில் குழி பறிக்கச் சொல்லுங்கள். அசுத்தமாவதைப் பற்றி சிறிது கூட தயக்கம் கொள்ளக்கூடாது (அந்த சிறிது நேரத்திற்கு மட்டும்).

84. நல்ல செயலுக்குப் பரிசுகள் வழங்காதீர்கள். அவர்களது அனுபவமே அல்லது மன நிறைவே அவர்களுக்கு பரிசாக அமைய வேண்டும்.

85. குழந்தைகளிடன் மற்றவர்கள் பேசும்போது நீங்கள் தலையிடாதீர்கள். குழந்தைகளால் பதில் சொல்ல முடியாத நேரங்களில் மட்டும் நீங்கள் தலையிட்டால் போதும்.

86. நீங்கள் தவறு செய்கிறபோது குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.

87. குழந்தைகளுக்குக் கற்றுத் தர நினைக்கும்போது, அவர்களால் எதை புரிந்துகொள்ள முடியுமோ அதை மட்டும் கற்றுத் தாருங்கள்.

88. குடும்பத்தில் அனைவரும் சேர்ந்த்து பந்து விளையாடலாம்.

89. குழந்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். மேலும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

90. எப்பொழுதும் உண்மையே பேசுங்கள். (ரொம்பக் கஷ்டம்)

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

61. மாத நாட்காட்டி (காலண்டர்) ஓன்றை குழந்தைக்கு வழங்குங்கள். அதை பயன்படுத்துவது பற்றி அடிக்கடி விவாதியுங்கள்.

62. செல்லப் பிராணி ஒன்றை வாங்கிக்கொடுத்து, அதை வளர்த்தும் பொறுப்பை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

63. உடந்த பொருட்கள் எல்லாவற்றிற்கும் புது பொருள் வாங்கிக் கொடுக்காதீர்கள். பணத்தின் பெருமையை உணரச் செய்யுங்கள்.

64. இரவில் நடைக்கு (walking) அழைத்துச் செல்லுங்கள். பலவிதமான் ஒலிகளையும், நிலவையும் ரசிக்கச் சொல்லுங்கள். காற்றின் வாசனையை நுகரச் செய்யுங்கள்.

65. மழை பெய்யும்போது கோட் மற்றும் பூட்ஸ் அணிந்து மழையில் விளையாட அனுமதியுங்கல்.

66. செய்யும் வேலைகளில் குழந்தைகளின் முழு மனதும் மற்றும் உடலும் ஈடுபடும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.

67. எல்லாவிதமான் இசைகளையும் கேட்கும் வாய்ப்பை வழங்குங்கள்.

68. பலவிதமான கலைகளைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

69. பலவிதமான தொழில்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

70. பொருட்கட்சி மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் முதலியனவற்றிற்கு அழைத்துச் செல்லுங்கள்.

71. சப்தங்களைப் பற்றி விளக்குங்கள். உதாரணத்திற்கு T என முடியும் வார்த்தை எது என்று கேட்பது.

72. குழந்தைகளின் பொருட்களை வைப்பதற்குத் தேவையான் பெட்டிகள் மற்றும் உயரம் குறைந்த அலமாரி ஆகியவற்றைக் கொடுங்கள்.

73. அழகை ரசிக்கக் கற்றுக் கொடுங்கள். மலர்கள், மரக்கட்டைகள், கற்கள் மற்றும் இயற்கையான பொருட்களை கையில் வைத்துக்கொண்டு வர்ணனை செய்யுங்கள்.

74. குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருட்களை சேகரிக்க் உதவுங்கள்.

75. படம் வரைவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குங்கள். இறுதியில் சுத்தம் செய்வதற்குத் தேவையான பொருட்களையும் வழங்குங்கள்.

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

"எங்க ஆபிஸ் ப்யூனோட பையனைப்
பாரு, டாகடருக்கு படிக்கறாப்ல!
ஆனா நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்லை.
ராஜா சர் முத்தையா செட்டியார் வீட்டுல கூட
இப்படி வசதி இருக்காது! தெரிஞ்சுக்கோ!
உனக்கெல்லாம் நான் செஞ்சு கொடுத்திருக்கற
வசதிகளை நினைச்சுப்பாரு! வெளியில போனா
என் அருமை தெரியும்” என்று சொன்ன
அப்பாவை வெறுப்புடன் பார்த்தேன்.


காரணம் அப்பா ஆபீஸ் ப்யூன் செல்லையா
படிப்பு வராத தனது பெரிய மகனுக்காக
ஆபீஸுக்கு எதிரிலேயே டீக்கடை
வைத்துக்கொண்டு, சின்ன மகனை
டாக்டருக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி
எழுந்து விட்டேன்,” பதில் பேசுவதா
நினைக்காதீங்க அப்பா! உங்க கிட்ட
ரொம்ப நாளாவே பேசணும்னு நினைச்சு
அடக்கி வெச்சு கிட்டு இருந்தேன். இந்த
டயலாக்கை 1 லட்சம் தடவ சொல்லியிருப்பீங்க.
அப்படி என்னப்பா ஊருல இல்லாத வசதியை
செஞ்சு கொடுத்துட்டீங்க?” என்றேன்.அப்பா ஒரு அரசு அதிகாரி. ஆனால்
சம்பாதிக்கும் காசை சேமிக்காமல்
செலவழிக்கும் மிகப் பெரிய செ
செலவாளி.
15 தேதிக்கு மேல் குடும்பம் நடத்த
அம்மா படும் பாட்டை நானறிவேன்.


அப்பா கோபம் கொண்டு பெரிதாக
கத்தினார். "உங்களுக்காகத்தான்
ஓடா தேயுறேன்! என்னிய பாத்து
என்ன செஞ்சீங்கன்னு நாக்குல நரம்பில்லாம
கேக்குறியா?” என்று அடிக்க கை ஓங்கி வந்தார்.அம்மா வந்து அடியை தாங்கிக்கொண்டாள்.
அப்பா கொஞ்சம் அடங்கினார். 1 சொம்பு
தண்ணியை அவர் கையில் வைத்தேன்.
வாங்கிக் குடித்தார்.


“நான் சொல்வதில் கோபம் தான் வரும்
அப்பா! ஆனா உங்க ஆபிஸ் ப்யூன் தன்
மகனை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார்.
நான் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன்.


+2 முடித்ததும் சயன்ஸ் குரூப் எடுத்து
படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
என் மார்க்குக்கு ஈஸியா சீட்டு கிடைத்தும்
டாக்டருக்கு படிக்க வைக்க முடியாதுன்னு
சொல்லி vocational group படிச்சிட்டு
இன்னைக்கு பி.காம் படிச்சுகிட்டு இருக்கேன்.உங்க ஆபிஸ் ப்யூன் பையன் இப்ப
டாக்டருக்கு படிச்சு கிட்டு இருக்காப்ல.
அவரை விட பலமடங்கு பெரிய போஸ்ட்ல
இருக்குற உங்க பையன் நான் திறமை இருந்தும்
உங்களால இப்படி இருக்கேன்.

வருசத்துக்கு 2 ட்ரெஸ் எடுத்து கொடுக்கறீங்க.
சாப்பாடு 3 வேளையும் சாப்பிடறோம். ஆனா
அதுல பல நாள் வெஞ்சனம் கூட இல்லாம
வெறும் சோறு மட்டும் தான் இருக்கும்.
செய்யுற கறி உங்களுக்கு மட்டும் தான்
அம்மா கொடுப்பாங்க. உங்களை விட
வீட்டோட நிலமை எனக்கு நல்லாவே
தெரியும். அதை விட உங்களைபத்தி
ரொம்ப நல்லாவே தெரியும்.


ப்யூன் செல்லையா தன் பசங்களுக்கு
ஒவ்வொரு பண்டிகைக்கும் ட்ரெஸ்
எடுத்து தர்றாரு. வருசத்துக்கு ஒருதடவை
குடும்பத்துல எல்லோரும் சேர்ந்து
சுற்றுலா போயிட்டு வர்றாங்க.


உங்களுக்கு எல்.டீ.ஸின்னு ஒன்னு
இருக்கு. ஆனா நாம ஒரு நாளாவது
ஏதாவது ஊருக்கு போயிருக்கோம்னு
சொல்லுங்க பாப்போம்.


உங்க ஆபீஸ் ப்யூன் கூட ஜம்பமா
டீ.வீ.ஏஸ் 50ல் ஆபிஸுக்கு வர்றப்போ
நீங்க நடராஜா சர்வீஸுதான்.
ஆபிசில் ப்யூன் கூட வீட்டுக்கு
போயிடுவாரு. ஆனா நீங்க மட்டும்
அங்கயே உட்கார்ந்து இருப்பீங்க.
அதுக்கப்புறம் உங்க ஃப்ரண்ட்ஸ்
கூட வெளியே போய் சீட்டாடறது,
தண்ணின்னு முடிச்சு நீங்க வீட்டுக்கு
வரும்போது அர்த்தஜாமம்தான்.


நேரத்துக்கு வீட்டுக்கு வந்தோம், பையனோட
கொஞ்ச நேரம் பேசுவோம், எங்கயாவது
வெளிய தெருவுல கூட்டிகிட்டு போவோம்னு
உண்டா?


ஊதாரித்தனமா செலவு செய்துட்டு
சொந்த பையனோட வாழ்க்கையை
நசுக்கிட்டீங்க.


வள்ளுவர் உங்களை மாதிரி அப்பாக்களுக்காகத்தான்
ஒரு திருக்குறள் சொல்லியிருக்கிறார்.

தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
- என்பதுதான்
அந்தக் திருக்குறள்.

இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

ஒரு அப்பா தன் மகனுக்கு செய்யும் உதவி
என்ன தெரியுமா? படிச்சவங்க இருக்குற
இடத்தில் எல்லாம் தெரிஞ்ச அறிஞனா
தன் மகனை ஆக்கறதுதான். தெரிஞ்சுக்கோங்க
என்று சொன்னேன்.

அப்பா வெகுநேரத்திற்கு தலையை தொங்க
போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.


**************************************

”இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

ஈரடியில் என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்
கருத்துக்களை சொன்னவர் திருவள்ளுவர்.

அப்பெரியவர் சொன்ன திருக்குறள்களின்
கருத்துக்களை கதையாக வடிக்க
நானழைப்பது.


1.ஜீவ்ஸ்
2.கயல்விழி முத்துலட்சுமி
3. அப்துல்லா
விதிமுறைகள்:

கதை குறளின் பொருளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
எந்த அதிகாரத்திலிருந்தும் இருக்கலாம்.
3 பேரை எழுத அழைக்க வேண்டும்.

என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா
இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.
இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.

பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னா
பெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்ன
செய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.
அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்
விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்
பிள்ளைகளை அழைச்சுகிட்டே போக மாட்டாங்க.

இப்படி இருந்தா தப்பில்லையா? பிளைங்களுக்கும்
எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியாமலேயே
போயிடும்ல.

ஹோட்டலுக்கு போனால் அங்கே குழந்தைகள்
ஓடி பிடித்து விளையாடுவதை பார்க்க கோவம்
தான் வரும் எனக்கு. கிளிங் என்ற சப்தத்துடன்
சர்வரின் கையில் இருந்த கிளாஸ் கீழே விழுந்து
உடையும். பல சமையம் கையில் கொண்டுவரும்
உணவைத் தட்டி விட்டுவிடுவார்கள் குழந்தைகள்.

ஹோட்டலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்தப்படாததே இதன் காரணம்.

நண்பர்கள் அல்லது உறவினரின் வீட்டிற்கு
சென்றால் இந்த பிள்ளைகளை ஏன் அழைத்து
வந்தார்கள் என்று நினைக்கும் அளவிற்கு
பிள்ளைகள் நடந்து கொள்கிறார்கள்.

நம் வீட்டில் நாம் எப்படி வேண்டுமானாலும்
நடந்து கொள்ளலாம். ஆனால் அடுத்த வீட்டிற்கு
செல்லும்போது அவர்களுக்கு தகுந்தாற்போல்
நடந்து கொள்ள வேண்டும். அதாவது
சூழ்நிலைக்கு தகுந்த வாறு.

எப்படி செய்வது?

என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கறேன். இது
உங்களுக்கு உதவுமான்னு பாருங்க.

எங்கே போகப்போகிறோமோ அதைப் பத்தி
முதலில் பிள்ளைகளிடம் சொல்லிவிடுவேன்.
(setting the mood). போகும் இடம்,
அங்கு யார் இருப்பார்கள்? எப்படி நடந்து
கொள்ள வேண்டும்? எல்லாம் முன்பே
சொல்லி அழைத்து செல்வேன்.

உதாரணமா: கோவிலுக்கு போகிறோம் என்றால்
அதை சொல்லிவிடுவேன். போகும் இடத்திற்கு
தகுந்த உடை அவர்களே தெரிவு செய்து விடுவார்கள்
(கோவில்னா பாவாடை சட்டைதான், நோ பாண்ட்ஸ்னு
அம்ருதாவுக்கு தெரியும்)

அடுத்தது,”கண்ணா! கோயிலுக்கு போறோம்.
கோவில் ஓடி விளையாடும் இடம் இல்லை.
ஆண்டவனை பிரார்த்திக்கும் இடம். ஆக
அமைதியா உங்களுக்குத் தெரிந்த பிரார்த்தனைகளை
சொல்லிக்கொண்டு வரவேண்டும். அனைவரும்
அமைதியை நாடி வரும் இடம் தானே கோவில்னு சொல்லி
கூட்டிகிட்டு போவேன். (சின்ன பிள்ளைகளாக
இருந்தால் ஒவ்வொரு முறையும் சொல்வது முக்கியம்)

இப்பொழுதெல்லாம் கோவிலுக்கு சென்றால் ஆஷிஷ், அம்ருதா
இருவரும் அந்தந்த தெய்வங்களுக்கு உண்டான மந்திரங்களைச்
சொல்லி பிரார்த்தி வருவதை பார்த்து திகைக்காதவர்களே
கிடையாது.


பார்கிற்கு சென்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தால்
நன்றாக இருக்காது. அது மாதிரி கோவிலில் ஆர்ப்பரிக்கும்
சத்தத்துடன் பிள்ளைகள் விளையாடுவது அவர்களின்
முறையற்ற வளர்ப்பையே காட்டும்.

சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அழைத்துச் சென்றால்
பார்ப்பதை எல்லாம் பிள்ளை கேட்கிறான் என்பதற்காக
அழைத்துச் செல்லாமல் விட்டு விடுவதால்
அவனுக்கு அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்பது தெரியாமலேயே போய்விடக்கூடும்.
பதிலாக குழந்தையிடமும் ட்ராலி ஒன்றைக் கொடுத்து
”நான் கொடுப்பதை ட்ராலியில் போட்டுக்கொண்டு
தள்ளிக்கிட்டு வரையா?” என்று பொறுப்பை
கொடுத்து பாருங்கள்..

இதுவும் பிள்ளை வளர்ப்புத்தானே! தெரியாமல்
இருப்பதனால்தான் பிள்ளைகள் தவறு செய்கிறார்கள்.

சொல்லிக்கொடுத்தால் போதும். சூப்பர் பிள்ளைகள்
ஆகிவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.

மன்னித்தல்
-----------------
எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...

விட்டுக் கொடுத்தல்
------------------------------
என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார் டாக்டர்" என்று எப்பொழுதும் சண்டையாம். "நீ என்ன" என்றேன். "நான் நர்ஸ்" என்றாள். "நீ ஏன் டாக்டர் இல்லை" என்றேன். "எல்லாரும் டாக்டர் ஆனால், யார் தான் நர்ஸாக இருப்பதாம்", என்றாள். நியாயமான பேச்சு என்று தோன்றியது.

நம்பிக்கை
---------------
பள்ளியில் போட்டி ஒன்று முடித்து வந்திருந்தாள். "என்ன பரிசு கிடையாதா?", என்றேன். "நீ தானம்மா சொல்லி இருக்க, ப்ரைஸ் வாங்குவது முக்கியம் இல்லை, பங்கெடுப்பது தான் முக்கியம்", என்றாள். அவள் ஆணித்தரமாக கூறியது, நான் கூறும் விஷயங்கள் அவள் மனதில் பசுமரத்தாணி போல் பதிகின்றன என்பதை பறை சாற்றின.

செய்யக்கூடாதது
--------------------------
மற்றொரு நாள், கீதை போட்டியில் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாள். கேட்ட டேப்பை வாங்கிக் கொடுத்தேன். கற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது, கற்றுக் கொடு என்றாள். என்னால் சமஸ்கிருத உச்சரிப்பைக் கற்று சொல்லித் தர முடியாது என்றேன். பின் அவள் ஆர்வத்துக்காக ஒத்துக் கொண்டேன். அலுவலக மற்றும் வீட்டு வேலைகளுடன் இதையும் இழுத்துச் செய்ததால் ஒரு நாள் விளையாட்டாக, "இவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுக்கிறேன், ஒழுங்கா பரிசு வாங்கிட்டு வரணும்", என்றேன். ஒரு நாள், தலைவலியுடன் வீட்டிற்கு வந்தாள், பரிசு கிடைக்கவில்லை என்றாள். நன்றாக சொன்னாய் அல்லவா , அது போதும் என்று கூறினேன். பின் ஒரு நாள் அவள் ஆசிரியையைக் காணச் சென்ற பொழுது, "தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள், அன்று முழுவதும் தலைவலி என்று அழுது கொண்டிருந்தாள்", என்றார். எனக்கு அதிர்ச்சி, அன்று அவள் ஆணித்தரமாகப் பேசிய மொழிகளை நான் எத்தனை முறை என் தோழியரிடம் கூறி
பெருமையுற்றேன். அவளுடன் பேசிய பின்பு தான் புரிந்தது, நான் அன்று விளையாட்டாகக் கூறிய மொழிகள் அவள் மீது இத்தனை அழுத்ததைக் கொடுக்கும் என்று நான் உணரவில்லை. நாம் விளையாடுகிறோமா அல்லது உண்மை கூறுகிறோமா என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணக்கூடாது. நாம் தான் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற மற்றொரு விஷயம், சொன்னதை செய்தல். எப்பொழுதும் வாக்குறுதி கொடுத்து மறந்து விடாதீர்கள். நாம் அவர்கள் அசைவுகளை கவனிக்கிறோமோ இல்லையோ, அவர்கள் நமது ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறார்கள். சின்னதாக சாக்லேட் வாங்கி கொடுக்கிறேன் என்று, சொன்னால் கூட கடைபிடிக்க முயலுங்கள். முடியாவிட்டால், காரணம் கூறி மன்னிப்பு கேட்பது தவறல்ல. அப்பொழுது தான் அவர்களுக்கும் சொன்னதை செய்யும் பழக்கம் ஏற்படும்.

இவ்விஷயத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. தாய் நண்டு தன் சேய்க்கு நடை பயில கற்றுக் கொடுக்கிறது. பக்கவாட்டில் நடக்கும் பழக்கம் உள்ள அது, தன் குட்டி நேராக நடக்க ஆசைப்படும். எனவே நேராக நடக்க கூறும். ஆனால் குட்டி நண்டால் நடக்க முடியாது. கோபமுற்ற தாய் நண்டு, குட்டியைத் திட்டும். அப்பொழுது குட்டி நண்டு கூறும், "நீ ஒரு முறை நடந்து காட்டு அம்மா, அப்புறம் நான் நடக்கிறேன்", என்று.

மிக உண்மை. நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

******************************************************

இது அமுதா அவர்களின் என் வானம் வலைப்பூவில்
வெளியான பதிவு. பெற்றோர்களின் கடமை என்று
அவர் குறிப்பிட்டுள்ளது சத்தியமான உண்மை.

46. குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது, வெளியில் உள்ள விசயங்களளப் பற்றி விவாதியுங்கள். கட்டிட அமைப்பு, போக்குவரத்து விதிகள், வெவ்வேறு வகையான வாகங்கள், விலங்குகள் முதலியன.

47. நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது குழந்தைகளை இடைமறிக்க அனுமதிக்காதீர்கள். “தொந்திரவுக்கு மன்னிக்கனும் அல்லது அப்பா ஒரு நிமிடம்”, என்று கூறிவிட்டு நாம் பேசி முடிக்கும் வரை காத்திருக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

48. குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பழக்கங்களைக் கவனித்து சரிப்படுத்துங்கள். உதாரணத்திற்கு சில குழந்தைகள் கதவை இழுத்து வேகமாக சாத்தும், அவர்களுக்கு கதவை எப்படி மூடுவது எனக் கற்றுக்கொடுங்கள். வீட்டுக்குள் ஓடும் குழந்தைகளுக்கு, வீட்டிற்குள் எப்படி நடக்கவேண்டும் எனவும், மூக்கிள் சளி வரும்பொழுது கைக்குட்டையை எப்படிப் பயன்படுத்துவது எனவும் கற்ற்க்கொடுங்கள்.

49. குழந்தைகளை எல்லாவிதமான் வயதினருடனும் பழக பழக்குங்கள்.

50. மத சம்பிரதாயங்களைப் போதியுங்கள், அவற்றில் பங்கேற்கச் சொல்லுங்கள்.

51. பலவித (மதம், சாதி, மொழி, நம்பிக்கைகள்) மக்களைப் பற்றியும் நல்லவிதமாக நினைக்க குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கல்.

52. நகைச்சுவையாகப் பேசுங்கள் நன்றாக சிரிக்கட்டும், வார்த்தை விளையாட்டு விளையாடுங்கள், மனித நேயத்தைக் கற்றுக் கொடுங்கள்.

53. குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுங்கள். மிக இளம் வயதில் கற்றுக் கொடுப்பது நல்லது.

54. உங்கள் தொழிலைப் பற்றியும், அதன் சிறப்புப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உலகில் வெவ்வேறு தொழில்கள் எப்படி நடக்கிறது என்பதைக் காண்பியுங்கள்.

55. வீட்டில் உலக உருண்டை அல்லது உலக வரைபடம் அல்லது அட்லஸ் வைத்து, எப்பொழுதெல்லாம் நாம் பேசும் விசயத்தில் ஊர் பெயர் வருகிறதோ, உடனே வரைபடத்தில் அந்த ஊர் எங்கு உள்ளது எனக் காண்பியுங்கள்.

56. குழந்தைக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் பயன்படுத்த வசதியான வடிவத்தில் துடைப்பான், பழைய துணி முதலியன.

57. குழந்தைகள் விரும்பாதவற்றை வேண்டாம் எனச் சொல்லும்போது கோபமின்றிச் சொல்லப் பழக்குங்கள்.

58. குழந்தைகள் வேண்டாம் எனச் சொல்லுவதைவிட வேண்டும் எனச் சொல்லும்படி சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள் மற்றும் நீங்களும் நடத்துகொள்ளுங்கள்.

59. குழந்தைகளைப் பார்த்துக் கேலியாக சிரிக்காதீர்கள்.

60. அடுத்து வரும் நிகழ்வுகளைப் பற்றி ஞாபகப்படுத்துங்கள். உதாரணத்திற்கு “இன்னும் பத்து நிமிடத்தில் படுத்து தூங்க வேண்டும்” எனக் கூறுவது.

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

31. பழைய குடும்ப படங்களைக் குழந்தையுடன் அமர்ந்து பார்த்து விவாதியுங்கள். குடும்பத்தின் முன்னோர்கள் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ளட்டும்.

32. குழந்தையின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யச் சொல்லுங்கள். சிறு வயது என்றால் வீடியோ அல்லது புகைப்படக் காட்சிக்ளாக நாமே பதிவு செய்யலாம்.

33. குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களும் புரிந்துகொள்ள உதவுங்கள். வேதனையில் அழும்போது அழுகையை அடக்காதீர்கள். அவ்வேதனையைப் பற்றி அவர்கள் சொல்லுவதையெல்லாம் முழுமையாகக் கேட்டு ஆறுதல் சொல்லுங்கள்.

34. குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். அவர்களை மாறி மாறி ஜெயிக்கவும், தோற்கவும் விடுங்கள். இரண்டுக்கும் அவர்கள் பழக்கப்படட்டும்.

35. மற்றவர்களுக்கு உதவும்போது குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். உதாரணத்திற்கு பிச்சை போடும்போது குழந்தையிடம் கொடுத்து போட சொல்லலாம்.

36. நற்குணங்களைப் பற்றி சொல்லிக் கொடுங்கள். பொறுமையாக இருப்பது, ஒத்துழைத்துச் செல்வது, உதவி வாழ்வது, பெருந்தன்மையுடன் இருப்பது, சிந்திப்பது முதலியன. இவற்றைக் கதையாக சொல்லலாம் அல்லது நம் முன் வாழ்பவர்களை உதாரணமாக சொல்லலாம்.

37. ஒரே சமயத்தில் அதிகமான விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். அப்படி வாங்கி இருந்தால் சிறிது சிறிதாக மாற்றி மாற்றிக் கொடுக்கலாம்.

38. கவிஞர் ஒருவரை ஞாபகப்படுத்தி, அவரது பாடலை சொல்லிக் கொடுத்து, குழந்தைகளுடன் சேர்ந்து பாடுங்கள்.

39. ஒரு பறவையை வீட்டில் வளர்க்கும் பொறுப்பை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள். மனிதநேயம் மலரும்.

40. குழந்தைகளை எங்கு கூட்டிச் சென்றாலும், எங்கு போகிறோம்? எவற்றையெல்லாம் பார்க்கலாம் என்ற விசயங்களை முன்பே தெரிவித்து விடுங்கள்.

41. குழந்தைகளைப் பாராட்டுங்கள். அவர்களையும் மற்றவர்களைப் பாராட்ட வலியுறுத்துங்கள். நண்பர்களுக்கு வாழ்த்து மடல்கள் அனுப்புவதை ஊக்கப்படுத்துங்கள்.

42. ஆரோக்கியமான உணவு முறைகளைப் பற்றி சொல்லிக்கொடுங்கள். உணவு தயாரிக்கும்போது சிறு சிறு வேலைகளைக் கொடுங்கள். இதைச் செய்ய உங்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

43. குழந்தைகளுக்குப் பிடிக்காத உணவை உண்ண வற்புறுத்தாதீர்கள். நிறைய உணவு வகைகளை ஒரே சமயத்தில் கொடுக்காதீர்கள்.

44. உணவுக் கடைகளுக்குச் செல்லும்போது, அந்த உணவுப் பொருள் நம் கைக்கு வர யார் யார் உழைக்கிறார்கள் என்பதை விளக்குங்கள்.

45. குழந்தைகளுக்கு அவர்கள் உருவத்திற்குத் தகுந்த மேசை, நாற்காலி, கட்டில், அலமாரி ஆகியவற்றைக் கொடுங்கள்.

தொடரும்,

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

16. குழந்தைகளின் வயதுக்குத் தக்கவாறு தினசரி செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைக் கொடுங்கள்.

17. குழந்தைகளின் பள்ளியில் நடக்கக்கூடிய அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டும்.

18. குழந்தையின் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

19. குழந்தைகளுடன் பேசும்பொழுது தெளிவான உச்சரிப்பில் பேச வேண்டும்.

20. குழந்தைகளிடம் மரியாதை கொடுத்து பேசுங்கள். (குழந்தைகள்தானே என்ற அசட்டை வேண்டாம்).

21. புதுப் புது வார்த்தைகளையும், பேசும்பொழுது பலவித முக பாவனைகளையும் அறிமுகப்படுத்துங்கள்.

22. குழந்தைகளிடம் பேசும்பொழுது முடிந்தவரை அவர்கள் உயரத்திற்கு குனிந்து பேசுங்கள்.

23. குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டே பேசுங்கள்.

24. அடிக்கடி குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டுப் பாடுங்கள்.

25. குழந்தைகளின் நேரம் முழுவதையும் என்ன செய்ய வேண்டும் என நீங்களே முடிவு செயாதீர்கள். சில நேரம் அவர்களாக விளையாட விடுங்கள் அதுவும் அவர்கள் விரும்பும் நேரத்தில்.

26. சாலை பாதுகாப்புப் பற்றிய விதிகளை சலையில் செல்லும்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துங்கள்.

27. வீட்டில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களைப் (கத்தி, தீப்பெட்டி, நெருப்பு) பற்றி சொல்லிக்கொடுங்கள்.

28. குழந்தைகளுக்கு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

29. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் எண்ணச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு முட்டை வாங்கி வந்தால் எத்தனை முட்டை உள்ளது என எண்ண சொல்லலாம்.

30. குடும்பத்தில் நடந்த சுவாரசியமான விசயங்களைக் கதையாகச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு அப்பா சின்னப் பையனாக இருந்தபோது (தற்புகழ்ச்சிக்காக பொய்யெல்லாம் வேண்டாம்)
தொடரும்,

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில் பேரன்ட்ஸ் க்ளப்புக்காக எனது சில கருத்துக்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அக்கரையில் இருந்தபடி அக்கறையில் சொல்லும்...
அன்பு
ராமலக்ஷ்மி


-------------------------------------------------------------------------------------
உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான்.
ஆனால் அதுவே போட்டி என்ற பெய(போ)ரில் தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும் களமாக மாறிப் போக வேண்டுமா?


சமீபத்தில் கல்கத்தாவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பெண் அதன் நடுவர்களின்
கருத்துக்களால் அங்கேயே கண்ணீர் சிந்தி வருத்தத்துடன் வீடு திரும்பியவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பெற்றோரால் குற்றம் சாட்டப் பட்டு, பத்திரிகைகளில் பரபரப்பாக்கப் பட்டு பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆனார். பின்னர் ஏற்கனவே அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்ததால்தான் இத்தகைய மன உளைச்சல் ஏற்பட்டதென்றும் நிகழ்ச்சி நடுவர்கள் மேல் எந்தத் தவறுமில்லை எனவும் மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிரூபணமாகியதும் பலரும் அறிந்திருக்கக்கூடும். சேனல்,நிகழ்ச்சி, பெண்ணின் பெயர் எதுவும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.


பொதுவாகப் பார்த்தால் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் தோல்விகளை குழந்தைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வண்ணம் ஒரு ஸ்போர்டிவ் ஸ்ப்ரிட் இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் வெகு கவனமாக இருக்கிறார்கள். நமது காலத்தை விட இக்காலத்தில் அதைப் பல பள்ளிகள் ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளார்கள். ஐந்தாவது வகுப்பு வரை படிப்புக்கு கூட ரேங்கிங் சிஸ்டம் இருப்பதில்லை. அதுபோல ஒரு ஆண்டு விழா என்றால் குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவரவருக்கு ஏற்ற வேடங்களாகக் கொடுத்து அத்தனை பேரையும் மேடையேற்றி அழகு பார்க்கிறார்கள். இந்த மாதிரியான தளங்களையும் தாண்டி தனித் திறமை வாய்ந்த குழந்தைகளின் பெற்றோர் மேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளை நாடுவதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.


சில நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் தவறுகளை மென்மையாகச் சொல்கிறார்கள். சிலவற்றில் குழந்தைகள் சரிவரச் செய்யாமல் தடுமாறுகையில் அவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் மாறி மாறிக் காட்டி டென்ஷனை அதிகரிப்பார்கள். இது இரு சாராருக்கும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒரு பிரபல சேனலின் ஜூனியர் பாட்டுப் போட்டி முதல் கட்டத் தேர்வுச் சுற்றிலே தேர்வாகாத குழந்தைகள் தேம்பி அழுதபடி கீழிறங்க இந்தப் பக்கம் ஏங்கி அழுதபடி பெற்றோர். அவ்வளவு ஏன்? அதே சேனலில் பெரியவர்களுக்கான ஜோடி ஆட்டபாட்ட நிகழ்ச்சியில் கூட தன் மகள் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாது தாயார் நடந்து கொண்ட விதம் பலரும் அறிந்திருக்கக் கூடும்.


தோல்வியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தோற்று நின்றால் அதுவே "வெற்றிக்கு முதல் படி" எனச் சொல்லித் தேற்றி அரவணைக்கும் முதிர்ச்சி முதலில் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள் 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விடாமல். இந்தப் பக்குவமும் முதிர்ச்சியும் மிஸ்ஸிங் என்றால் இந்த நிகழ்ச்சிகளின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்.
ஒரு சென்சேஷனை உண்டு பண்ணுமாறு நிர்ப்பந்திக்கும் விளம்பரதாரர்களுக்காகவும் அவர்கள் மூலம் கிடைக்கிற வருமானத்துக்காகவும் சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது.


பி.கு: 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அளவுக்கு யாரும் இருப்பதில்லை என சிலர் சொல்லக் கூடும். விதி விலக்காய் இருக்கும் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படவே இப்பதிவு. மற்றொரு பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பமாக போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சுற்று பெற்றோரில் ஒருவர் க்ளூ கொடுக்க பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பதிலளிப்பார்கள். சில குழந்தைகள் தடுமாறி சரியான பதிலையும் கூடவே தங்கக் காசுகளையும் தவற விட்டு விட்டு குடும்பத்திடம் திரும்பி வருகையில் கடுகடு சிடுசிடுவென அவர்களை எதிர்கொள்ளும் தாய்மாரைக் காமிராக் கண்கள் கவரத் தவறியதில்லை. அவர்களுக்கு அவர்தம் வியாபாரம் முக்கியம் என்றால் நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல்

பிள்ளைகளுக்கு உதவ விரும்பும் பெற்றோர்களுக்கு 101 ஐடியாக்கள் என்ற தலைப்பில் புதுகைத் தென்றல் அவர்கள் போட்ட பதிவின் தொடர்ச்சியே இப்பதிவு.

1. குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். எந்த மாதிரி குணங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

2. குழந்தைக்கென தனி அறை ஒதுக்குங்கள். அதில் எந்தவித தொந்திரவுகளும் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்.

3. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைச் சொல்லிக்கொடுங்கள். அவற்றினை நீங்களும் பின்பற்றுங்கள்.

4. நூலகத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்லுங்கள். அங்கிருந்து புத்தகம் எடுத்து வீட்டில் படித்துவிட்டு திரும்ப ஒப்படைக்கும் முறைக்கு பழக்கப்படுத்துங்கள்.

5. தினமும் சிறிது நேரமாவது குழந்தையுடன் அமர்ந்து நீங்களும் படியுங்கள்.

6. குழந்தை உடைகளைத் தானே அணிந்துகொள்ள தேவையான நேரத்தை அளியுங்கள்.

7. தேவையான நேரம் உறக்கம் கொள்ள அனுமதியுங்கள்.

8. குழந்தைகளுக்குத் தனியான ஒரு அலமாரி ஒதுக்குங்கள். அவர்களது பொருட்களை அங்கு வைத்து பராமரிக்கப் பழக்குங்கள்.

9. குழந்தையின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்துகொள்ள வலியுறுத்துங்கள்.

10. வீட்டில் சிறு தோட்டத்தை அவர்களுக்காக கொடுங்கள் அல்லது சில தொட்டிச் செடிகளையாவது கொடுங்கள். செடிகளை வளர்த்து அனுபவம் பெறட்டும்.

11. தினமும் குழந்தைகளுடன் சிறு நடை (walking) செல்லுங்கள். அவர்கள் வேகத்துக்கு மெதுவாக நடக்கவேண்டும். அப்பொழுது சுற்றியுள்ள விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே செல்லுங்கள்.

12. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

13. குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் நீங்களும் உடன் பாருங்கள். பின் என்ன பார்த்தீர்கள் என்பது பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.

14. வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எங்கு வைக்க வேண்டும் என பழக்குங்கள்.

15. அடிக்கடி குழந்தைகளைக் கொங்சுங்கள்.

தொடரும்,

In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)

தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்