பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

உலகமயமாக்கலுக்குப் பின்னால நடந்திருக்குற மாற்றங்களால வேலை விசயமா நம்ம ஆட்கள் வெளிநாடுகளுக்கு போறது கடந்த பத்து இருபது வருசங்களில் பலமடங்கு அதிகமாகி இருக்கு. சும்மா ஒரு மாசம் ரெண்டு மாசம்னு தனியா போறவங்க மட்டுமில்லாம ஆறுமாசம் ஒரு வருசம் அதுக்கும் மேலன்னு குடும்பத்தோட வெளிநாடுகளுக்கு போறவங்கள அதிகமா பாக்க முடியுது.

இந்த முறை நான் அமெரிக்காவுக்கு ஆறு வார வேலையா வந்துட்டு அது ஆறு மாசமா எக்ஸ்டெண்ட் ஆனதால என் தங்கமணியவும் பையனையும் இங்க கூட்டிட்டு வந்தேன். அவனை இங்க பள்ளிக்கூடத்துல சேத்தலாம்னு போய் கேட்டப்ப அவங்க கேட்ட சில டாக்குமென்ட்ஸும், பள்ளிக்கூடத்துல சேத்துறதுக்காக நாங்க அலைஞ்சதும் நிறைய விசயங்களை கத்துக் கொடுத்தது. அதை எல்லார்கூடவும் பகிர்ந்துக்குறது நல்லதுன்றதால இங்க பதியுறேன்.

டிஸ்கி: நான் எழுதியிருக்குறது இப்ப நான் இருக்குற டென்னிஸி (Tennessee, USA) மாகாண விதிமுறைகள். இடத்துக்கு இடம் விதிமுறைகள் மாறும்னாலும், பெரிய அளவுல மாற்றம் இருக்காது.

1. குழந்தை பள்ளிக்கு செல்லும் வயது
இங்க குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குறைஞ்ச பட்சம் 5 வயசு கம்ப்ளீட் ஆகி இருக்கணும் (செப்டம்பர் 30 தேதி அன்னிக்கு). என் பையன் ஆகஸ்ட்லயே 5 வயசு கம்ப்ளீட் பண்ணிட்டதால அது பிரச்சினை இல்லை. ஒரு வருசம் KinderGarten, அதுக்கப்புறம் 1st grade, 2nd grade இப்படி போகுது.

2. தடுப்பூசிகள்
குழந்தையை பள்ளியில சேர்க்க முதல்ல அவங்க கேக்குற கேள்வியே “குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் குடுத்தாச்சா?” (vaccine / shots) அப்படிங்குறதுதான். இதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்குறதே இல்லை. ஒவ்வொரு மாகாணமும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் போட்டிருக்க வேண்டிய தடுப்பூசி லிஸ்ட் வெச்சிருக்காங்க. அது எல்லாம் போட்டாச்சின்னு ஒரு டாக்டர் சர்டிஃபிகேட் குடுத்தாத்தான் குழந்தையை பள்ளியில சேர்க்கவே முடியும்.

இந்தியாவுல இருந்து வர்ற நமக்கு இது பெரிய பிரச்சினை. என் பையனுக்கு எல்லா தடுப்பூசிகளும் சரியான நேரத்துல சென்னையில விஜயா ஹாஸ்பிடல்ல போட்டிருக்கோம். அது எல்லாத்தையும் மெடிக்கல் ரெக்கார்ட் எழுதுற நோட்டுலயே டாக்டர் எழுதி ட்ராக் பண்ணியிருக்கோம். ஆனா இங்க அந்த நோட்டை மெடிக்கல் ரெக்கார்டா கன்சிடர் பண்ண மறுத்துட்டாங்க. அதுக்காக அஞ்சு வருச தடுப்பூசிகளை மறுபடியும் போடுறதும் முடியாத காரியம்.

பதிவர் சஞ்சய் மூலமா அவர் நண்பர் டாக்டர் ரியாஸ் அவர்கள் எனக்கு இதுல உதவி பண்ணுனாரு. எல்லா தகவல்களையும் அவருக்கு அனுப்பி, குழந்தைகள் மருத்துவரா இருக்குற அவர் நண்பர் ஒருத்தரோட லெட்டர் ஹெட்ல எல்லாத்தையும் எழுதி கையெழுத்து போட்டு அனுப்பினாரு. அதை கொண்டு போய் கொடுத்ததும்தான் ஒத்துகிட்டாங்க.

அதிலும் அடுத்த பிரச்சினை வந்தது. குழந்தைக்கு நாலு வயசுக்கு அப்புறம் ஒரு தடவை போலியோ மருந்து கொடுத்திருக்கணும்னு சொன்னாங்க. அவனுக்கு ஐந்து வயசு ஆகுற வரைக்கும் ஒவ்வொரு தடவையும் பல்ஸ் போலியோ ப்ரோக்ராம்ல நாங்க அவனுக்கு மருந்து கொடுத்திருக்கோம். இதுவரைக்கும் 10 தடவையாவது கொடுத்திருப்போம். ஆனா அதுக்கு எந்த ரெக்கார்ட்டும் இல்லாததால மறுபடியும் ஒருதடவை கொடுத்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க

அதே மாதிரி லெட்டர்ல “Prevnar" அப்படின்னு மட்டும் எழுதியிருந்தது. அது Prevnar 6ஆ அல்லது Prevnar 13ஆன்னு கேட்டாங்க. நல்ல வேளையா அந்த தடுப்பூசி மேல இருந்த ஸ்டிக்கரை எடுத்து நோட்ல ஒட்டியிருந்தாங்க. அதுல 13ன்னு இருந்தது. இல்லைன்னா அதையும் மறுபடியும் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.

அதனால இந்தியாவுல இருந்து கிளம்பும் முன்னால உங்க டாக்டர்கிட்ட லெட்டர் ஹெட்ல எந்த எந்த தடுப்பு மருந்துகள் எந்த எந்த தேதியில குடுத்திருக்காங்கன்னு தெளிவா எல்லா டீடெய்ல்ஸோடவும் எழுதி கையெழுத்து + சீல் வெச்சி வாங்கிட்டு கிளம்புங்க.

3. தடுப்பூசிகள்
இங்க அரசு சொல்லியிருக்குற லிஸ்ட்ல இருக்குற 3 குறிப்பிட்ட தடுப்பூசிகள் நாங்க குழந்தைக்கு கொடுத்திருக்கலை. அதை கொடுத்தாத்தான் பள்ளிக்கூடத்துல சேத்துக்க முடியும்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்களே அதுக்கான வழியையும் சொன்னாங்க. இங்க குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு எல்லா தடுப்பூசிகளும் இலவசமாவே கொடுக்குறாங்க. அருகில் இருந்த அரசு மருத்துவமனை முகவரியும் கொடுத்தாங்க. ப்ரைவேட் க்ளினிக் போயிருந்தா குறைந்தது 300 டாலர் ஆகியிருக்கக்கூடிய அந்த மூணு தடுப்பூசிகளும் செலவே இல்லாம அதே நாள்ல குழந்தைக்கு கொடுத்துட்டோம்

4. ஆங்கில அறிவு
இங்க பேச்சு மொழியே ஆங்கிலமா இருக்குறதால, குழந்தைக்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவாவது இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க. இந்த மாகாண விதிகளின் படி, வெளிநாட்டில் இருந்து வரும் குழந்தைகள் முதலில் EL Office (English Learners Office) போகணும். அவங்க குழந்தைக்கு ஒரு டெஸ்ட் வெக்குறாங்க, எப்படி ஆங்கிலம் பேசுறான், பேசுறதை புரிஞ்சுக்குறானா எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணுறாங்க. என் குழந்தை எதிர்பார்த்த மாதிரியே “Not Proficient”. ஆனா அவன் ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணினது ஆங்கிலம் படிக்குறதுல, மத்தபடி பேசுறது / புரிஞ்சுக்குறது எல்லாம் ஓரளவு நல்லா பண்ணியிருந்தான். அதனால “நீங்க பள்ளியில சேர்க்கலாம், ஆனா ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் பள்ளி நேரத்துலயே உங்க பையனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் பள்ளியில குடுப்பாங்க”ன்னு சொல்லிட்டு அதை பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்ட்ரக்‌ஷனாவும் எழுதி கொடுத்துட்டாங்க.

சுருக்கமா சொல்லணும்னா,
1. இந்தியாவுல இருந்து கிளம்பும்முன் உங்க குழந்தையோட தடுப்பூசி லிஸ்ட்டை உங்க டாக்டர்ட்ட அவரோட லெட்டர் ஹெட்ல எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்க
2. அப்படியும் சில மருந்துகள் விட்டுப்போயிருந்தா, அதை கொடுக்க இலவசமா எதாவது அரசு மருத்துவமனைகள் இருக்கான்னு கேளுங்க, கேக்குறதில் தப்பில்லை. நமக்கு பணம் மிச்சமாகும்.
3. உங்க குழந்தை சின்ன சின்ன வார்த்தைகளாவது ஆங்கிலத்துல பேசணும், புரிஞ்சுக்கணும். தமிழோ அல்லது உங்களோட தாய்மொழியோ பேசுறது கூட அப்பப்ப இதையும் பழக்கிட்டு வர்றது இந்த மாதிரி வெளிநாட்டுப் பயணங்களில் ரொம்ப உதவும்

முதல்லயே சொன்ன மாதிரி, இது என்னோட அனுபவங்கள் மட்டுமே. இது ஒரு கைட்லைனா எடுத்துக்கிட்டு நான் சொன்ன சின்ன சின்ன விசயங்களை கவனிச்சி செஞ்சிட்டோம்னா வெளிநாட்டுக்கு போய் இறங்கினப்புறம் நமக்கு அலைச்சல் மிச்சமாகும்.

தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்
பொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.

பதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்
உரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த
அந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.

1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை!
பள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய?

நிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்
என நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்
அளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்
என்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.
அதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.

ஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்
நடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்
கூடாது.

2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.
நானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு
சென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.
நீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி?

நிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி
பிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை
நடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு
ஆதரவாக இருப்பது அவசியம்.

3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து
கொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)

நிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி
வேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை
புரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த
பொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்
சில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்
அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த
தகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று
ஓடுவதால் மகன் பாவம்)

( எனக்கு இந்த இடத்தில் தோணிய
பாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்
அடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.
தானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம்.)


4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.
ஏன் இப்படி செய்கிறார்கள்?

நிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு
உங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்
இந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது
பிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை
கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.

5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது
மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
பேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது
நம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் பெரிய மாற்றத்தை உண்டு
படுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்
கொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.

6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?
நிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்
குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்
பிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.

இப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக
பல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்
என்னென்ன பிரச்சனைகளோ? அவற்றை எப்படிக்கையாள்வது என்பது
ஒரு கலை தான்.

3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று
சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு
பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்
நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.
இந்த வயதுதான் கடினம்.

சோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.
அதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்
ஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு
விதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.

நவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்
எபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.
ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.
எங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்
9 மணிக்கே தூங்கப்போய்விடுவோம்.:))

காலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.
அப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்
என்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்
பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

Dorothy Law Nolte சொல்வதைக் கேளுங்கள்:

விமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.

காழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது

பயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது

இரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது

ஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது

பகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது

அவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.

ஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.

சகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.

புகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.

உரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.

திருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது

அங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது

விட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு வாழ்கிறது.

நேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.

நியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.

கருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.

பாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.

நட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம் என்பதைக் கற்றுக் கொள்கிறது.

சிறந்த பெற்றோர்க்கான குறிப்புகள்:

குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.
பெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.
ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது.
குழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.
வயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.
பெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.
தேவையான அளவு அன்பு காட்டுவது.
மன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.
திரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.
நல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.
தகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.
குடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.
நாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.


******************************************************

நிலாமகள் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பியதை பதிவிட்டிருக்கிறேன்.
நன்றி நிலாமகள்.

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .

"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !


"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"


"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."


"இரேன்ம்மா ..."


அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .


"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .


ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;
ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .


"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."


"ஹேய் ...குட்டி என்னடா இது !" எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.

"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,

"எம்பொண்ணாக்கும்! "

ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

கொஞ்ச நாளைக்கு முன்னாடி,.. 'F.A.L.T.U' அப்டீன்னு ஒரு இந்திப்படம் வந்துது. இந்தப்படம் நிறைய கேள்விகளை பொதுமக்கள் மனசுல எழுப்பியது. படத்தோட கதை என்னன்னா, பரீட்சையில குறைச்சலான சதவீதத்துல தேறின நாலஞ்சு மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு எந்தக்காலேஜுலயும் இடம் கிடைக்கலை. அப்பா,அம்மாவோ கரிச்சுக்கொட்டறாங்க. அந்த நண்பர்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு, அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிச்சுடறாங்க.

இது எல்லாத்துலேர்ந்தும் தப்பிக்கிறதுக்காக, போலியா ஒரு காலேஜை உருவாக்கி,  போலியான அட்மிஷன் கடிதமெல்லாம் தயார்செஞ்சு பெத்தவங்களை ஏமாத்துறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா, அந்த காலேஜ் உண்மைன்னு நம்பி குறைச்சலான சதவீதத்துல தேறின எக்கச்சக்கமான மாணவர்கள் அட்மிஷனுக்காக வந்துடறாங்க. வந்தப்புறம்தான், கல்லூரிக்கட்டிடம் முதற்கொண்டு எல்லாமே போலின்னு தெரியுது.

படிக்கவும் முடியாம, வீட்டுக்கு திரும்பிப்போய் பெத்தவங்க முகத்துல முழிக்கவும் முடியாம, தர்மசங்கடமான நிலையில் இருக்கற அவங்கல்லாம் ஒண்ணுகூடி... வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கறதில்லை, ..அவங்கவங்களோட தனித்திறமைகளை வளர்த்துக்கிட்டாலும் பிரகாசிக்கலாம்ன்னு, பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் பாடம் புகட்டறாங்க. அதுக்கு பரிசா அவங்க நடத்திக்கிட்டிருந்த போலியான காலேஜுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்குது.

3 idiotsக்கு அப்புறம், மாணவச்செல்வங்களோட மனவலியை உணரச்செய்த இந்தப்படத்தோட கதை நிஜமாவே நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.  ஆண்டுதோறும் ஒவ்வொரு காலேஜ்லயும் அட்மிஷனுக்காக 'கட்-ஆஃப் மார்க்' நிர்ணயிக்கறது வழக்கம். பொதுவா மொத்தம் மூணு மெரிட் லிஸ்ட் வெளியிடறாங்க. இதுல காலேஜ் நிர்ணயிச்ச உச்சவரம்பு கட்-ஆஃப் மார்க் எடுத்தவங்களோட பேரு, முதல் லிஸ்டுல வந்துடும். இஷ்டமிருந்தா மறுநாளே போய் சேர்ந்துக்கலாம். இல்லைன்னா விருப்பப்பட்ட காலேஜ்ல ரெண்டாவது மெரிட் லிஸ்ட் வர்றவரைக்கும் காத்திருப்பாங்க. இந்த ரெண்டாவது மெரிட் லிஸ்ட், முதலாவதைவிட இன்னும் கொஞ்சம் தளர்த்தப்பட்டதாயிருக்கும். அதாவது,.. முதல் மெரிட் லிஸ்ட் 95%அல்லது அதுக்கு மேல் எடுத்தவங்களுக்கானதாயிருந்தா, ரெண்டாவது லிஸ்ட் 93-95க்குள்ளாக இருக்கும். இந்தசமயங்கள்ல92.50 எடுத்திருந்தாக்கூட சீட் கிடைக்காம திரும்பவேண்டிய அவல நிலை ஏற்படறதுண்டு.

வழக்கமா இதெல்லாம், professional coursesன்னு சொல்லப்படற பொறியியல், மருத்துவம்,மற்றும் இன்னபிற படிப்புகளுக்குத்தான் நடக்கும். ஆனா, இங்கே எல்லா பட்டப்படிப்புகளுக்குமே அட்மிஷன் இப்படித்தான் நடக்குது. அதுலயும் ஒவ்வொரு வருஷமும், முந்தைய வருஷத்தைவிட கட்-ஆஃப் மார்க் எப்பவும் கூடுதலாத்தான் இருக்கும். இதனால மாணவர்களுக்கும் பெத்தவங்களுக்கும் டென்ஷன் கூடுதலாகத்தான் செய்யுது. விரும்பிய படிப்பை விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்கணும்ன்னா, அவங்க எதிர்பார்க்கற உச்சவரம்பு மதிப்பெண்களை எடுத்துத்தான் ஆகணும். இது மறைமுகமா பசங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்குது. இந்த மனஅழுத்தம் விரும்பத்தகாத விளைவுகளுக்கும் காரணமா அமைஞ்சுடறதுதான் ஏத்துக்கவேமுடியலை.

முன்னெல்லாம் ஒருத்தர் 60-70% வாங்குனாலே, 'அடேயப்பா... பெரிய படிப்பாளிதான்!!!' அப்படீன்னு மூக்கு மேல வெரலை வெச்சு நாக்கு நோக பேசித்தீர்ப்போம். அப்றம் கொஞ்ச காலத்துக்கப்புறம் மதிப்பெண்கள் ஏறுமுகமாக ஆக... இப்பல்லாம் மாணவர்கள் சர்வசாதாரணமா 95%க்கு மேல வாங்கறாங்க. ரெண்டுவருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் 85% எடுத்தா, இருந்த மதிப்பு, இப்போ அவ்வளவா இல்லை.

 'இதெல்லாம் போறாது.. இன்னும் மார்க் வாங்கு.. வாங்கு'ன்னு பசங்க உயிரை வாங்கறாங்க. இதுல பிரச்சினை என்னன்னா, எல்லோருமே அவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு சொல்லமுடியாது. சுமாரா படிக்கறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க. அப்படீன்னா,.. 50% மார்க் வாங்குனதாலயே அவள்/ன் எதுக்கும் லாயக்கில்லைன்னு ஆகிடுமா என்ன!!. ஒருத்தருக்கு படிப்பு வராது.. ஆனா நல்லா ஓவியம் வரைவார், ஆடை அலங்காரத்துல நிபுணரா இருப்பார், இன்னபிற திறமைகள் ஏதாவது இருக்குன்னு வெச்சுப்போம். நிறைய மார்க் வாங்காததால அவர் கிட்ட இருக்கற திறமைகளும் இல்லைன்னு ஆகிடாதே. அந்தத்திறமைகள் மூலமாக கூட முன்னுக்கு வரலாமே.

 "வெறும் மதிப்பெண்களை மட்டுமே வெச்சு ஒருத்தர் திறமைசாலியா இல்லையான்னு முடிவு செய்யக்கூடாது. 100% மார்க் வாங்குனதாலேயே ஒருத்தர் வாழ்க்கையில முன்னுக்கு வந்துடமுடியாது".. இதைச்சொல்லியிருப்பவர் தாதரைச்சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின். மும்பை டிவிஷனில் இந்தவருஷம் பத்தாம் வகுப்புத்தேர்வில் 100% எடுத்த பத்து மாணவமாணவியரில் இவரும் ஒருத்தர்.

இதையெல்லாம் பத்தி பசங்களோடயும், தோழியின் பசங்களோடயும் பேசிக்கிட்டிருந்தப்ப கொட்டித்தீர்த்துட்டாங்க. ஏன்னா, இந்த வருஷம் மும்பையின் 'சில' காலேஜ்கள்ல 100% எடுத்தவங்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுக்கறாங்க. இந்த நிலை மத்த காலேஜ்களுக்கும் பரவினா என்னாகும்!!!.. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டப்ப, "அட்மிஷனுக்காக பசங்க மனப்பாடம் செஞ்சு, உருப்போட்டு படிக்கிற நிலையையும், டியூஷன் செண்டர்களை முழுக்கமுழுக்க சார்ந்திருக்க வேண்டிய நிலையையும்தான் இது உருவாக்குமே தவிர வேற பிரயோசனமில்லை. அட்மிஷன் கிடைச்ச எல்லாப்பசங்களுமே முழு மதிப்பெண்கள் வாங்கறவங்களாயிருந்தா, காலேஜ்க்கும் ஒழுங்கா வரமாட்டாங்க. டியூஷன் செண்டர்களே கதின்னு கிடக்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே நிறையப்பேரு காலேஜை பங்க் பண்ணிட்டுபோயிடறாங்க. கேட்டா.. அதெல்லாம் நாங்க க்ளாஸ் போயி படிச்சு மார்க் வாங்கிடுவோம்ன்னு சொல்றாங்க."

"அதேமாதிரி, சுமாரா படிக்கிறவங்களுக்குத்தான் ஆசிரியரோட கற்பித்தல் தேவைப்படும்.. ரொம்ப நல்லா படிக்கிறவங்களுக்கு எதுக்கு?ன்னு ஆசிரியர்களும் நினைச்சுட்டா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கல்வித்தரம் குறைய ஆரம்பிச்சுடாதா?.."ன்னு அவங்க மனசுல எக்கச்சக்க கேள்விகள். பொதுவாவே பரீட்சைன்னாலே, பசங்களுக்கு டென்ஷன் வந்து மனசுல டெண்ட் போட்டு உக்காந்துடும். இந்த நிலைமையில 100% எடுத்தாத்தான் கல்லூரில இடம் கிடைக்கும்ன்னு சொல்றது அவங்களை மன உளைச்சல்ல தள்ள வாய்ப்பிருக்கு.

 'F.A.L.T.U' படத்தோட க்ளைமாக்ஸ்ல , "இவ்வளவு மார்க் எடுத்தாத்தான் அட்மிஷன்னு நீங்கள்லாம் வரம்பு வெச்சிருக்கறப்ப எதுக்கு 35% எடுத்தாப்போதும்,.. நீங்க பாஸ்ன்னு சொல்றீங்க?.. அதையும் கூடுதலாக்கிடுங்களேன்.."ன்னு நொந்துபோயி சொல்றதுதான், நிறைய பசங்களோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு.

இந்த விஷயத்தைப்பொறுத்தவரை ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் நிச்சயமா மாறுபடுது. 'பசங்கல்லாம் நிறைய மார்க் வாங்கறதாலதான் நாங்களும் உச்சவரம்பை கூட்டுறோம்,  அதாவது பசங்களோட படிப்புல ரொம்ப நல்ல முன்னேற்றம் இருக்குது.. இது பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே'ன்னு காலேஜும்,...  'நீங்க உச்சவரம்பு மதிப்பெண்களை கூடுதலா வெச்சிருக்கறதாலதான், எப்படியாவது மேல்படிப்புக்கு இடம் கிடைக்கணுமேன்னு நாங்க உயிரைக்கொடுத்து படிக்கறோம்ன்னு பசங்களும் அவரவர் கருத்தை சொல்றாங்க.

 படிக்கிறதுங்கறது அறிவைப்பெருக்கும் ஒரு இனிய அனுபவமா இருக்கணுமேதவிர, பசங்களை மனப்பாட்டம் பண்ணும் இயந்திரங்களா மாத்தறதா இருக்கக்கூடாது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா'ங்கற மாதிரி, இதுவும் அவ்வளவு எளிதா முடிவு செய்யப்பட முடியாமலேயே இருக்கு...

டிஸ்கி: அமைதிச்சாரலில் வெளியானதின் மீள் இடுகை :-)



ஃபேஸ்புக்கில் என்ன பிரச்சனை? ஃபேஸ்புக்கில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்


முதல் பகுதி முழுவதையும் இங்கு வாசிக்கலாம்


உங்கள் மகள் அல்லது மகனின் பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் தரமாட்டேன் என்றால், தாராளமாக திட்டி, இந்த விஷயத்தில் இரகசியம் கூடாது என்பதை கடுமையாகச் சொல்லி பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் பள்ளிக்குச் சென்றபின் அவனுடைய ஃபேஸ்புக்கை திறந்து அவன் Friend ஆகியுள்ள நபர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவனியுங்கள். சந்தேகத்து இடமானவர்களை, உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லி, அவனை விட்டே நீக்கச் சொல்லுங்கள்.

இந்த வரியை சொடுக்கி இரண்டாம் பகுதியை வாசியுங்கள்.

”அங்கிள் என்னுடைய ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ் எல்லாருமே என் ஸ்கூல் பிரண்ட்ஸ்தான். அதனால பயப்பட வேண்டாம்னு எங்கம்மாவுக்கு சொல்லுங்க”

அவர்-

”டேய்.. அதான் ஸ்கூல்ல நாள் முழுக்க பார்க்கறீங்கல்ல.. அப்புறம் தனியா ஃபேஸ்புக்ல வேற வந்து அரட்டையடிக்கணுமா?”

நான் -
அடடா... பெற்றோர்களின் இந்தக் குணம்தான், குழந்தைகளை நம்மிடம் இருந்து தள்ளி வைக்கிறது. ஸ்கூல்ல பேசினா, அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து பேசக் கூடாதா? ஒரு காலத்தில் நாம் வீட்டுக்கு வந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தோம். பிறகு ஃபோனில் பேசினோம். இப்போது குழந்தைகள் ஃபேஸ்புக் வழியாக பேசிக் கொள்கிறார்கள். அது ஒரு உற்சாக குழு உணர்வு. நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்நது ஒரு சினிமாவை அல்லது ஒரு புத்தகத்தை அல்லது ஒரு கிரிக்கெட் மாட்சை பார்க்கும் போது கிடைக்கிற குழு சந்தோஷம் ஃபேஸ்புக்கில் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இதை தடுக்க நினைத்தால் எதிர்மறை விளைவுகள்தான் கிடைக்கும். எனவே நாமும் அவர்கள் நண்பர்களாகி, அவர்களது நண்பர்களின் நண்பர்களுக்கும் இணக்கமாகிவிட்டால், நமது கண்காணிப்பை மீறி அவர்கள் செல்ல மாட்டார்கள்.

அவர் - 
சில நேரம் ஃபேஸ்புக்ல யார் கூடயாவது சண்டை போட்டுடறான். அதனால மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு ஹோம் ஒர்க் பண்றதுல்ல, ஒழுங்கா சாப்பிடறதுல்ல.. ஏன்னு கேட்டா.. யாரோ தன்னை திட்டிட்டதா அழுகை.. இதெல்லாம்தான் ரொம்ப டிஸ்டர்பிங். அதனாலதான் நான் ஃபேஸ்புக் வேண்டாம்னு சொல்றேன்.

நான்-
ஃபேஸ்புக் சகவாசத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தைக்கும் சீரியஸாகி சண்டை போட்டு, நிஜ வாழ்க்கையிலும் நிம்மதி இன்றி திரிகின்ற எனது நண்பரகளே சிலர் உண்டு. குழந்தைகள் இப்படி இருப்பதில் வியப்பில்லை.

அவர்-
அதுக்காக அவன் அப்படியே இருக்கட்டும்னு விட்டுடச் சொல்றீங்களா?

”போம்மா.. உனக்கு ஒண்ணும் தெரியாது. அங்கிள் என்னோட ஃபிரண்டு ஒருத்தன் யு.எஸ்ல இருக்கான். அங்க silly band அப்படின்னு ஒண்ணு விக்குதாம். கையில வாட்ச் மாதிரி மாட்டிக்கிட்டு போட்டோ போட்டிருக்கான். அது இந்தியாவில கிடைக்கல. அதனால இந்தியாவையே திட்டறான் அங்கிள். எங்க ஸ்கூல். எங்க ஸ்கூல்ல படிக்கறவங்க எல்லாரும் பட்டிக்காடாம். இதைக் கேட்டுட்டு நான் எப்படி அங்கிள் சும்மா இருக்க முடியும். அதான் நான் அவன் கூட சண்டை போட்டேன். இது தப்பா?”
அவர் - 
”டேய் ... பேசிக்கிட்டிருக்கோம்ல.. வந்து டிஸ்டர்ப் பண்ணாத..”

நான் -
இருங்க அவனை விரட்டாதீங்க. டேய் கண்ணா இங்க வாடா..  ஃபேஸ்புக்கல உன்னை யாராவது கிண்டல் செய்தாலோ, டீஸ் பண்ணாலோ அப்படிச் செய்யாத அப்படின்னு சொல்லிப் பாரு. ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனைன்னா என்ன பண்ற? டீச்சர் அல்லது அப்பா அம்மாகிட்ட சொல்றல்ல. அதே மாதிரி இதையும் அம்மாகிட்ட சொல்லு. அல்லது அப்பா கிட்ட சொல்லு. அவங்க உனக்கு எப்படி பதில் சொல்றதுன்னு சொல்லித் தருவாங்க. ஓகே.. அவங்க அதுக்கப்புறம் ஒழுங்கா நடந்துக்கறாங்களான்னு பாரு. இல்லன்னா ஃபிரண்டு லிஸ்டுல இருந்து தூக்கிடு. யாரு உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, உன் கூட ஜாலியா இருக்காங்களோ அவங்க மட்டும் உனக்கு ஃபிரண்டா இருந்தா போதும். ஓகேவா?”

”ஓகே அங்கிள்.. எங்க அம்மாகிட்ட இதைச் சொல்லுங்க. எங்க அப்பா கூட நான் சொன்னா கேட்டுக்குவாரு. ஆனா எங்கம்மா என்னையே திருப்பித் திட்டுவாங்க”


அவர்-
”டேய்.. அங்கிள் கிட்ட என்னை பத்தி போட்டுக் கொடுக்கறியா?”


நான் -
இந்த விஷயத்தில் அவன் கிட்ட பேசாதே, அவனை ஃபிரண்டு லிஸ்டுல இருந்து தூக்கிடுன்னு சொன்னாலும், அதுக்கு அவ்வளவா பலன் இருக்காது.

அவர் - 
நானும் சொல்லக்கூடாது, அவனாவும் கேட்கமாட்டான், கேட்டாலும் பலன் இல்லன்னா, இது மாதிரி ஆன்லைன் சண்டைல இருந்து அவனை எப்படி தப்பிக்க வைக்கிறது?

நான்-
ரொம்ப சிம்பிள். அடிக்கடி ஞாயிற்றுக் கிழமை அல்லது மாலை வேளைகளில் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்குச் செல்லுங்கள். அல்லது உறவினர்கள் நண்பர்களை உங்கள் வீட்டுக்கு வர வையுங்கள். அவர்களிடம் குழந்தைகளை சகஜமாக பழக கற்றுக் கொடுங்கள். ஆன்லைன் சகவாசத்திற்கும், நிஜ சகவாசத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இது போல மறைமுகமாக உணர வையுங்கள்.

அவர் - 
ம்ம்ம்ம் இப்பதான் தெளிவு கிடைச்சிருக்கு. ஆமா உன்னுடைய ஃபேஸ்புக் ஐடி என்ன? நானும் நாளையில இருந்து ஃபேஸ்புக் வர்றேன்.

”ஐயோ...அங்கிள் அம்மாவுக்கு உங்க ஐடியை கொடுக்காதீங்க.. பஜ்ஜி போடறது எப்படி? துணியை அயர்ன் பண்ணுவது எப்படின்னு உங்களை பிளேடு போடுவாங்க”

”டேய்.. உன்னை...”

அம்மாவும், பையனும் ஜாலியாக என்னிடமிருந்து விடைபெற்றார்கள். சமூக வலைத்தளங்களில் நல்லது உண்டு, கெட்டதும் உண்டு. அவை இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. அவற்றில் உள்ள கெட்டவைகளுக்காக பயந்து, குழந்தைகளிடமிருந்து அவற்றை மூடி மறைக்காமல், அவர்களுக்கு உண்மையை புரிய வைத்து, அவர்களுடன் நண்பனாக பழகக் கற்றால், நமக்கு ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல, நம் குழந்தைகளின் நோட் புக்கிலும் நம்மைப் பற்றி நல்ல வார்ததையாக நமது குழந்தைகள் எழுதுவார்கள். சியர்ஸ்!

ஃபேஸ்புக்கில் என்ன பிரச்சனை? ஃபேஸ்புக்கில் ஒரு பிரச்சனையும் இல்லை. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்


முதல் பகுதி முழுவதையும் இங்கு வாசிக்கலாம்

அவர் - 

நீ சொல்வதைக் கேட்டால் எனக்கு பதட்டம்தான் அதிகமாகிறது. என் குழந்தைகளை எப்படி கண்காணிக்கிறது?

”வேணும்னா என் பாஸ்வேர்டை தர்றேன். நீயே அப்பப்போ செக் பண்ணிக்கோ”, தடதடவென வந்து சொல்லி விட்டு கடகடவென மறைந்தான் அவருடைய மகன். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் போலிருக்கிறது.

நான் - 
ரொம்ப சிம்பிள். முதலில் நீங்கள் இது பற்றிய பதட்டத்தை தவிர்க்க வேண்டும். இப்போது இதில் உள்ள பாஸிடிவ் மற்றும் நெகடிவ் அம்சங்கள் இரண்டையுமே சுருக்கமாக உங்களுக்கு சொல்லிவிட்டேன். இதை மனதில் வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக உங்கள் குழந்தைகளை அணுகுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம், கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

அவர் - 
அதைத்தான் தினமும் சொல்லிக்கிடடிருக்கேனே.. கவனமா இரு, கவனமா இருன்னு சொன்னா, என்னை மதிக்கறதே இல்லை, டிஸ்டர்ப் பண்ணாத, எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சண்டை போடறாங்களே..

நான் -

ஹா..ஹா..ஹா.. இதில் ஆச்சரியம் என்ன இருக்கு? அவர்கள் அப்படித்தான் உங்களிடம் சண்டை போடுவார்கள். ஏனென்றால், உங்களுக்கு முழுவதுமாக ஃபேஸ்புக் பற்றி தெரியவில்லை. ”இதெல்லாம் யாருக்கு தெரியும்” என்று அடிக்கடி உங்கள் அறியாமையை அவர்களுக்கு சொல்கிறீர்கள் என்பதால், ஒன்றும் தெரியாமலேயே நீங்கள் கட்டுப்படுத்துவதாக உங்கள் குழந்தைகள் நினைக்கிறாரகள். இது எதிர்பார்த்ததுதான்.

அவர் - 
அவங்க என் கூட சண்டை போடறத எப்படி குறைக்கிறது?

நீங்களும் ஃபேஸ்புக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் இல்லை என்றால், உங்கள் மகனே முன்வந்து சொன்னது போல, அவனுடைய பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் தரமாட்டேன் என்றால், தாராளமாக திட்டி, இந்த விஷயத்தில் இரகசியம் கூடாது என்பதை கடுமையாகச் சொல்லி பாஸ்வேர்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவன் பள்ளிக்குச் சென்றபின் அவனுடைய ஃபேஸ்புக்கை திறந்து அவன் Friend ஆகியுள்ள நபர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கவனியுங்கள். சந்தேகத்து இடமானவர்களை, உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லி, அவனை விட்டே நீக்கச் சொல்லுங்கள்.

அவர் -
இது நல்ல ஐடியாவா இருக்கே.. ஆனா இது மட்டுமே போதுமா? ஃபேஸ்புக்ல அவங்க பத்ரமா இருப்பாங்களா?

நான் -
நிச்சயமாக இது மட்டும் போதாது. அவர்களுக்கு Profile Page என ஒன்று இருக்கும். அதாவது தங்களைப் பற்றிய சுய விபரங்கள் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பாருங்க. அதுல ஃபோன் நம்பர், இமெயில் ஐடி, வீட்டு விலாசம், குடும்பத்தினர் பற்றிய விளக்கம் இதெல்லாம் இருந்தா, திரும்பவும் உங்க மகனையே கூப்பிட்டு நீக்குங்க. நம்மைப் பற்றிய உண்மையான சுய விபரங்கள், நம்மைப் போன்ற பெரியவர்களே அதில் விட்டு வைத்தல் தவறு. இன்டர்நெட் கிரிமினல்கள் இவர்களைத்தான் எளிதாக இரையாக்குகிறார்கள். முடிந்தால் உங்கள் மகன் அல்லது மகளை புனைப் பெயரில் இயங்கச் சொல்லுங்கள். அது மிகவும் நல்லது.

அவர் - 
என்னுடைய சின்னப் பையன் புனைப் பெயர்தான் வைத்திருக்கிறான். அவனுடைய நண்பர்களில் சிலரும் இஷ்டத்துக்கு புனைப் பெயர்தான் வைத்திருக்கிறாரகள். அது நல்லது என்பது இப்போது புரிகிறது. ஆனால் அவர்களின் Friend list பெரிதாகிக் கொண்டே போகிறது. நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுக்க வைப்பது?

”என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் நல்லவங்கதான். நீங்கதான் உங்க ஃபிரண்டு கூட அடிக்கடி மொபைல் போன்ல அடிக்கடி சண்டை போடுவீங்க. நாங்க அப்படியெல்லாம் கிடையாது”, மின்னல் போல அவருடைய மகன் மீண்டும் வந்து சொல்லிவிட்டு மறைந்தான்.

நான் -
ஹா..ஹா..ஹா... பார்த்தீங்களா? பசங்க முன்னாடி நாம எப்படி நடந்துக்க கூடாதுன்னு உங்க பையனே சொல்லிட்டு போறான். அவங்க முன்னாடி நாம் சண்டை போடக் கூடாது. அது அவர்களை பாதிக்கும். அந்தக் குணம் அவர்களையும் தொற்றும். அதே போல உங்கள் மகன் எல்லோரும் நல்லவர்கள் என்று சொன்னதையும் கவனிங்க. அவனுடைய மனது நல்ல மனது என்றாலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கில் இது போன்ற நல்ல மனதுக்காரர்களைதான் குற்றவாளிகள் குறி வைக்கிறார்கள். மும்பையிலிருக்கும் என் நண்பரின் மகள், இப்படித்தான் கேரளாவிலிருக்கும் எவனோ ஒரு ஃபேஸ்புக் நண்பனை நம்பி, கல்யாணம் செய்து வை என்று அடம்பிடித்து ஒரே இரகளை ஆகிவிட்டது. கடைசியில் போலீஸ் துணையுடன் விசாரித்ததில், அவன் ஏற்கனவே திருமணமானவன் என்பது தெரியவந்து அப் பெண் மணம் மாறினாள். எனவே நமது குழந்தைகளுக்கு ஃபேஸ்புக் Friend மற்றும் நிஜ வாழ்க்கை Friend ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக, ஆணித்தரமாக அவ்வப்போது ஒரு நண்பனைப் போல அமர்ந்து சொல்லித் தரவேண்டும்.

(விரைவில் அடுத்தபகுதி)

அம்மா என் நோட்புக்கை காணோம் என்று அப்பாவியாக திரிந்து கொண்டிருந்த குழந்தைகள், தற்போது ஃபேஸ்புக்கில் அநாயசமாக புகுந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதென்ன ஃபேஸ்புக்? நம் நோட்டு புத்தகத்தில் நாம் மட்டுமே எழுதுவோம். நாம் விரும்பினால மட்டுமே மற்றவர்களுக்கு காட்டுவோம். ஆசிரியர்கள் சொல்வதைத்தான் நாம் எழுதுவோம். நாம் எழுதியதில் தவறு இருந்தால் ஆசிரியர் திருத்துவார். பெற்றோர்கள் அதை வாங்கிப் பார்ப்பார்கள்.

நம் ஃபேஸ்புக் என்பது ஒரு virtual உலகம். இன்டர்நெட்டில் இருக்கக் கூடிய ஒரு மாய புத்தகம். இந்தப் புத்தகத்தில் நீங்களும் எழுதலாம், உங்கள் நண்பர்களும் எழுதலாம். உங்கள் புத்தகத்தில் இருந்து அடுத்தவர் புத்தகத்திற்கு எளிதில் தாவலாம். அடுத்தவர், லாஸ்பேட்டையிலும் இருக்கலாம், லாஸ்ஏஞ்சல்ஸிலும் இருக்கலாம். அதாவது நமது புத்தகம் ஒரு திறந்த புத்தகம். இதில் எழுத்து, ஆடியோ, வீடியோ என சகலமும் இருக்கும். இதை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமே ஃபேஸ்புக்.


இதில் என்ன பிரச்சனை? பிரச்சனை இதில் அல்ல. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்.

அவர் : 
போன வாரம் பசங்களோட ஊட்டி போயிட்டு வந்தோம். வந்த அடுத்த நாளே, எங்களோட ஃபோட்டோ எனக்கே இமெயில்ல வருது. எனக்கு ஷாக். ஏன்னா நான் யாருக்குமே ஃபோட்டோவை அனுப்பல. விசாரிச்சதுல, சின்னவன் தான் ஃபேஸ்புக்ல ஃபோட்டோவை போட்டிருந்தான்னு தெரியவந்தது. அவன் 9thதான் படிக்கறான்.அதுக்குள்ள எப்படி இதையெல்லாம் பழகினான்னே தெரியல. உனக்குதான் கம்ப்யூட்டர் பத்தி எல்லாம் தெரியுமே.. ஃபேஸ்புக்னா என்னது..? அதுல இவன மாதிரி சின்னப்பசங்கள்லாம் இருக்கலாமா? கூடாதா?

அவர் சொல்லும்போதே, முகம் சிவந்து, கோபம் பொத்துக் கொண்டு வருவதை யூகிக்க முடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த +2 பையனை, எல்லாம் இவனாலதான்.. இவன்தான் அவனுக்கு கத்துக் கொடுத்திருப்பான் என்று அவனை கடிந்து கொள்ள ஆரமபித்தார். நான் இடை மறித்தேன். எனக்கு மாணவர்களையும், குழந்தைகளையும் கடிந்து கொள்வது பிடிக்காது. அவர்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொன்னால், எதையும் புரிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து. 

நான் : 
அவசரப்பட்டு குழந்தைகளை திட்ட வேண்டாம். அவர்கள் ஒன்றும் கிரிமினல் வேலைகளைச் செய்யவில்லை. சொல்லப் போனால், இந்த கால கட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும், தெரிந்து  வைத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத் தளம் (Social Networking Site) அது ஒரு வெப் சைட் அவ்வளவுதான். அங்கு நாம் நம் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதியதை பார்த்து கமெண்ட் கொடுக்க யாராவது வேண்டுமல்லவா, அதனால் நமக்கு நண்பர்கள் தேவை. எனவே நண்பர்களை இணைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடி பகிரந்து கொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் ஊட்டி புகைப்படத்தை, உன் மகன் இப்படித்தான் தன் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளான் என்று நினைக்கிறேன்.

அவர் :
அவனாவது பரவால்ல. ஃபேஸ்புக்கோட சரி. இவன் Myspaceன்னு இன்னும் எது எதுலயோ மெம்பர் ஆகி வைச்சிருக்காங்க. படிக்கறதே இல்ல. சதா அதுலயே இருக்கான். உன்னை.... (என்று மீண்டும் மகனை அடிக்க கை ஓங்கினார்)

நான் :
அடடா...என்ன இது வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு சின்னப் பையனை இப்படி அதட்டுற. அவன் ஒண்ணும் தப்பு பண்ணல. Facebook என்பது போல Myspace என்பதும் ஒரு சமூக வலைத் தளம். இதுல மெம்பர் ஆகறதால ஒரு தப்பும் கிடையாது. உன் மகன்களைப் போலவே இதுல தினமும் குத்துமதிப்பா ஒரு நாளைக்கு 3 இலட்சம் பேர், உலகம் முழுக்க மெம்பர் ஆகிக்கிட்டே இருக்காங்க. ஃபேஸ்புக்ல இது வரைக்கும் 20 கோடி பேர் மெம்பர் ஆகியிருக்காங்க. அதுல நானும், உன் மகன்களும் இருக்கோம். இத்தனை பேர் அதுல இருக்கும்போது, அதைப் பத்தி தெரியாம இருந்தால்தான் தவறு. உன் மகன்களை பாராட்டு. அவங்க updatedஆ இருக்காங்க.

இதைக் கேட்டதும் அவருக்கு என் மேல் கோபம் வர ஆரம்பித்துவிட்டது.

அவர் :
பசங்களுக்கு நல்ல புத்தி சொல்லுவேன்னு கூட்டிட்டு வந்தா, நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறயே.. இத்தனை கோடி பேர் ஃபேஸ்புக்ல மெம்பரா இருக்காங்கன்னா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கும். ஃபேஸ்புக்கால நமக்கு என்ன பிரயோஜனம் சொல்லு?

நான் :
இது நல்ல கேள்வி. ஃபேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற எல்லா தளங்களிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. முதலில் நல்லதுக்கு வருகிறேன். இது தகவல் யுகம். SMS, Email என்று எல்லாமே எக்கச் சக்க வேகம். இதோட அடுத்த கட்டம்தான், சோஷியல் நெட் ஒர்க்கிங். ஒருத்தருக்கு எப்படி இமெயில் பற்றியும், எஸ்.எம்.எஸ் பற்றியும் தெரிந்து இருக்கணுமோ, அதே போல ஃபேஸ் பற்றியும் தெரிஞ்சு இருக்கணும். ஏன்னா? ஒரு தகவலை உடனடியா, உலகின் பல்வேறு திசைகளில் இருக்கும் பலருக்கும், ஒரே ஒரு கிளிக்கில் தெரிவிக்க ஃபேஸ்புக்கால் முடியும். ஊட்டியில நீங்க எடுத்த ஃபோட்டோ, மொபைல் போன் வழியா, சென்னையில இருக்கற உங்க கம்ப்யூட்டருக்கு வந்து, அங்கே இருந்து ஃபேஸ்புக் வழியா, உலகம் பூரா பரவி, ஆஸ்திரேலியாவில இருக்கிற உங்க அத்தை பார்த்துட்டு, விசாரிக்கறாங்கன்னா சாதாரண விஷயமா? இது மாதிரி ஒரு கிளிக்குல ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கவிதைகள் என அனைத்தையும் ஷேர் பண்ணிக்க முடியும். இவ்வளவு நல்ல நவீன விஷயத்தை உன் குழந்தைகள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால்தான் நீ கண்டிக்க வேண்டும். எனவே இனி அவர்களை திட்டாதே என்றேன்.

அவர் :
நல்லதுன்னு ஒண்ணு இருந்தா, நிச்சயம் கெட்டதுன்னு ஒண்ணு இருக்கும். ஃபேஸ்புககுல பசங்கள பாதிக்கிற விஷயங்கள் ஒண்ணு கூடவா கிடையாது?
பேசிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மகனின் பள்ளித் தோழன் கையில் ரப்பர் பந்துடன் வந்துவிட்டான். இருவரும் உடனே 
விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் -
நீ சொன்னது போலவே இதில் நெகட்டிவ் அம்சங்கள் பல இருக்கு. ஆபாச படங்கள், ஆபாச வீடியோக்கள், அருவருக்கத் தக்க பேச்சுகள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் உரையாடல்கள், ஒருவரை பலர் சேர்ந்து கேலி செய்தல், பெண்களை இழித்தல், தவறான வழிகாட்டும் இரகசிய சிநேகிதங்கள் என எல்லாமும் ஃபேஸ்புக்கில் உண்டு. எப்படி நம் வீட்டுக் குழந்தைகள் இயல்பாக ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல, இவர்களை குறி வைத்து மனதைக் கெடுக்க முயற்சிப்பவர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வெளி உலகம் போலவே தான் இணைய உலககும் இயங்குகிறது. கெட்டவர்களும், தீயவைகளும் இங்கேயும் உண்டு.

அவர் -
நீ சொல்வதைக் கேட்டால் பயமாக இருக்கிறது. இதை குழந்தைகளிடம் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டேன்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?

நான் -
இந்தக் கேள்வியை நீ கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். கட்டுப்படுத்துவது என்பது சரியான வார்த்தை. குழந்தைகளிடம் சமூக வலைத் தளங்களை முழுக்க மறைக்க முடியாது. அதில் மெம்பர் ஆகக் கூடாது என்று சொல்லக் கூடாது. சொல்ல சொல்லத்தான் அவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், உடன் படிப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களே கூட மாணவர்களிடம் ஃபேஸ்புக் வழியாக பழகுகிறார்கள். எனவே அவர்களை தவிர்க்கச் சொல்லவே முடியாது.

அவர்-
ஃபேஸ்புக்கை முழுக்க தவிர்க்க முடியாது என்பது புரிந்து விட்டது. ஆனால் வேறு எப்படித்தான் அவர்களை கட்டுப்படுத்துவது?

நான் -
அவர்களை கட்டுப்படுத்துவதற்கு முன், பெற்றோர்களாகிய நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸில் friend என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனக்கு ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்களுக்கு மேல் உள்ளனர்.

அவர் - 
ஃபேஸ்புக்கில் உங்களுக்கு ஆயிரம் நண்பர்களுக்கு மேல் இருக்காங்களா?

நான் -
ஆமாம், சிலர் 5000ம் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜவாழ்க்கை நண்பர்களுக்கும், ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நிஜவாழ்க்கையில் Friend என்பவர் யார்? நமது நம்பிக்கைக்கு உரிய, நமது சுக துக்கங்களில் பங்கு கொள்கிற, நமது குடும்பத்தினருக்கும் தெரிந்த, நம்முடன் நீண்ட நாள் பழகியவர்தான் நண்பர். ஆனால் ஃபேஸ்புக்கில் Add Friend என ஒரே ஒரு க்ளிக்கில் ஒரு நண்பர் கிடைத்துவிடுவார். ஒரு நிமிடத்திற்கு ஒரு நண்பர் கிடைத்துக் கொண்டே இருப்பார்.

அவர் - 
ஃபேஸ்புக்கில் கிடைக்கிற நண்பர்கள் உண்மையானவர்களா?

நான் -
அது சந்தேகம்தான். ஒரு கிளிக்கில் எப்படி ஒரு உண்மையான நண்பர் கிடைப்பார். பழகப்பழகத்தான் தெரியும். சிலர் வேறு ஒருவரின் ஃபோட்டோவை தன் முகமாக போட்டிருப்பார்கள். சிலர் தங்கள் வயதை குறைத்துப் போடுவார்கள். சிலர் தான் பெரிய வியாபார நிறுவனத்தின் அதிபதி என பொய் சொல்வார்கள். சில ஆண்கள் பெண்கள் படத்தைப் போட்டு மற்றவர்களை ஈர்த்து பணம் கறப்பார்கள்.
அவர் -
என்ன சொல்ற நீ? நீ சொல்றதைக் கேட்டால் இன்றைக்கே, என் குழந்தைகளை முழுக்க முழுக்க ஃபேஸ்புக் பக்கம் போகவிடாமல் செய்துவிடத் தோன்றுகிறது. ஆனால் நீ என்னடாவென்றால், இருக்கட்டும் பரவாயில்லை என்கிறாய்?

நான் -
இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். நம் குழந்தைகள் ஃபேஸ்புக்கில் இருக்கட்டும். ஆனால் தான் எப்படிப்பட்ட சூழலில் இயங்குகிறோம் என்பதைத் தெரிந்து இருக்கட்டும். அதை நாம் தான் சொல்லித் தரவேண்டும். நிஜ வாழ்க்கை Friendக்கும் ஃபேஸ்புக் Friendக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை தடுப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அவர் -
நான் இப்ப தடுக்கறதே இல்லை. தடுத்தா என் கூட சண்டை போடறாங்க. அதனால வேறவழியில்லாம விட்டுடறேன்.

நான் -
குழந்தைகள் மட்டுமல்ல, ஆண்-பெண் பேதமில்லாமல் பெரியவர்களும் தற்போது இதற்கு அடிமை ஆகிவிட்டார்கள். மொபைல் போன், இமெயில் போல, ஃபேஸ்புக் உலவலும் இப்போது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. கடந்த மாத ஆராய்ச்சியின்படி ஒவ்வொருவரும் தினசரி 20 நிமிடம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் நேரம் செலவழிக்கிறார்களாம். அப்படி இருக்கும்போது, நம் குழந்தைகளிடம் இருந்து இதை மூடி வைக்க முடியாது. ஆனால் அவர்களை கண்காணிக்கலாம்.

(எப்படிக் கண்காணிப்பது? அடுத்த பகுதி)

வணக்கம்,

உங்களையெல்லாம் சந்திச்சு ரொம்ப நாளாச்சு. C.B.S.C பாடத்திட்டத்தில்
இப்பொழுது பல மாறுதல்கள். பாடத்தை மனப்பாடம் செய்து
பரிட்சை எழுதி மார்க் வாங்கிய காலமெல்லாம் போயிடிச்சு.

இப்போ சப்ஜெக்டுகளுடன் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸுக்கும்
மதிப்பெண் கொடுக்கப்படுது. பாட்டு, யோகா, படம் வரைதல்
என எத்தனையோ இருக்கு.

ரேங்கார்டில் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள், ப்ராஜக்ட்களை
முறையாக சொன்ன தேதியில் சமர்ப்பித்தல், என பல அம்சங்களும்
சேர்க்கப்படுது. CONTINUOUS ASSESSMENT மூலம் பாடங்கள் மதிப்பீடு
செய்யப்படுவது போல மேற்சொன்னவைகளையும் பார்க்கிறார்கள்.
ஆகவே குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால்
உட்கார வைத்து பேசுங்கள். பள்ளியில் அன்றாடம் என்ன நடக்கிறது?
என கேட்டுத் தெரிந்து ப்ராஜக்ட் சரியாக சமர்ப்பிக்கிறார்களா? என
பார்க்க வேண்டியதும் நம் கடமை.



இந்த ப்ராஜக்ட் பத்தி பேசும் பொழுது அது என்னவோ பெற்றவர்களுக்கு
தரப்படுவது போல நினைக்கும் சூழல் ஏற்படுகிறது. நாம் செய்து
கொடுப்பதற்கு பதில், அருகிலிருந்து செய்ய உதவ வேண்டும்.
பல ப்ராஜக்டுகளுக்குத் தேவையான படங்கள் கடைகளில் கிடைப்பதில்லை.
ஆகவே, வீட்டில் கணிணி,இண்டர்நெட் கனெக்‌ஷன்,
பிரிண்டர் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டது. தனக்குத் தேவையான
விவரங்களை அவர்கள் தேடி கண்டுபிடித்து, வேர்ட் டாக்குமெண்டில்
போட்டு எப்படி பிரிண்ட் எடுப்பது என்பதை சொல்லிக்கொடுப்பது
அவசியம். நாமும் கவனமாக அவர்களை கண்காணிப்பது அவசியம்.



ப்ராஜக்டுக்கு தேவையான சில உதவிப் பொருட்களை முன்னக்கூடியே
வாங்கி வைத்துக்கொள்தல் நல்லது. அப்பொழுதென்று ஓட முடியாது.
ஒரு மினி ஷ்டேஷனரி ஷாப் போல சார்ட், க்ளூ, வகை வகையாக
வெட்டும் கத்திரிக்கோல், செலோ டேப், கலர் செலோடேப்கள்,
ஹேண்ட் மேட் பேப்பர், ஸ்ட்ரா, ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்( ஷ்டேஷனரி
ஷாப்பில் கிடைக்கும்), சாடின் ரிப்பன், சின்னசின்ன ஸ்டிக்கர்ஸ்,
நெற்றிக்கு வைக்கும் பொட்டுக்கள், கலர் நூற்கண்டு, ஊசி செட்,
என ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வதால் பிள்ளைகள் ப்ராஜக்டை
நேரத்தில் சமர்ப்பிக்க நாமும் உதவ முடியும். கடைசி நேரத்தில்
சொல்கிறாயே என பிள்ளைகளிடம் கோவப்படாமல் இருக்கவும்,
கடைசி நேரத்தில் கடைக்கு ஓடுவதை தவிர்க்கவும் இந்த முன்னேற்பாடுகள்
அவசியமாக இருக்கும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதே போல வெறும்
மனனம் செய்து மதிப்பெண் வாங்குவது வாழ்க்கைக்கு போதாது
என்பதால்தான் இந்த மாற்றம் கல்வித்துறையில் வந்திருக்கு. நல்லதொரு
மாற்றம் தான். மாற்றத்தை நாமும் உணர்ந்து குழந்தைகளுக்கு
உதவி செய்வோம்.

பகுதி - 1: குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதற்கான காரணங்கள்

பகுதி - 2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்

பகுதி - 3: குழந்தைகளைத் தயார்ப்படுத்துதல், முடிவுரை:

குழந்தைகள் மனநிலை:

  • குழந்தைகள் நாமே எதிர்பார்க்காத அளவுக்கு விடுதி வாழ்க்கைக்குத் தயாராகக் கூடும்.
  • அரைகுறை மனதோடு தயாராகக்கூடும்.
  • தயாரே இல்லாமல் இருக்கக்கூடும். மிகவும் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கக்கூடும்.
  • தயாராகி விடுதியில் சேர்த்தவுடன், குழந்தைகள் தரப்பில் விடுதிச் சூழலுக்கு ஒத்துப் போக முடியாத நிலமை இருப்பின் குழந்தையின் மனநிலை பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.
***************************************
  • இதில் முதல் நிலை பெற்றோர்க்கு மிகவும் எளிதாக அமையும்.
  • இரண்டாம் நிலை பேசித் தயார்ப்படுத்தி முடிவெடுக்க வழிவகுக்கும்.
  • மூன்றாம் மற்றும் நான்காம் நிலைதான் மிகவும் ஆபத்தானது., அந்த நிலையில் இந்த முடிவைக் கைவிட்டு, மாற்றுவழி யோசிப்பதே நல்லது.
இரண்டாம் நிலை - என்ன செய்ய வேண்டும்?
  • விடுதியில் சேர்ப்பதற்கான காரணத்தின் நன்மைகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
  • அவரவர் வயதுக்கேற்ற பக்குவத்தோடு விளக்கங்கள் அமைய வேண்டும்.
  • விடுதியின் நடைமுறைகளை உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு முடிவெடுப்பதற்கான சரியான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
  • பெற்றோர் இருவருக்கும் இவ்விஷயத்தில் பரஸ்பரக் கருத்து வேறுபாடு அல்லது உறுதியற்ற தன்மை நிலவினாலும், அதைத் தனிமையில் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, குழந்தை முன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையைக் குழப்பாமல் இருக்க இது உதவும்.
விடுதி மற்றும் சூழல்:

  • விடுதியின் சூழல், விதிமுறைகள், வசதிகள் எல்லாமே பிறர் மூலம் தெரிய வந்திருந்தாலும், சரியான முறையில் விசாரித்து நாம் தெளிவு பெற வேண்டியது மிகவும் முக்கியம்.
  • பிறர் சொன்னார்கள் என்பதற்காக, சரியாக விசாரிக்காமல் சேர்த்து விடக்கூடாது.
  • விடுதியின் விதிமுறைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் பக்குவமும் பெற்றோர்க்கு மிகவும் அவசியம்.
  • எந்தத் தேவைக்காக / காரணத்துக்காகச் சேர்க்கிறோமோ, அந்தத் தேவைகள் பூர்த்தியாகும் வண்ணம் சூழல் இருக்கிறதா என்று அவ்வப்போது நேரடியாகக் கண்காணித்துத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அந்தத் தேவைகள் பூர்த்தியாகாத பட்சத்தில் நம் முயற்சிகள் அனைத்தும், பட்ட / படும் சிரமங்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

முடிவுரை:
  • பலவிதக் கோணங்களில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
  • நம் தேர்வு / முடிவு தவறாகிவிடவும் கூடும். எதிர்பார்ப்புகள் பலிக்காமல் போகும்போது, சற்றும் தயங்காமல் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்.
  • சில பெற்றோர்க்கு அருகில் இருந்து, அவர்கள் அனுமதிக்கும் வேளையில் குழந்தைகளைச் சென்று பார்க்க, கூட வந்து வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இன்றிப்போகும். அப்போதுதான் உறவினர்களின் உறவு தேவைப்படும். பெற்றோர் கூட இருக்க முடியாத சூழலில் விடுதியில் இருந்து வெளிவரும் வேளையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
  • நிறைய முயற்சிகள், நிறைய ஒத்துழைப்பு பெற்றோர் தரப்பில் இருந்தால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
முயற்சி நல்லபடியாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்

பகுதி -2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்

விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும்.

குழப்பங்கள் - குழந்தைகளுக்கு:
  • அப்பா அம்மாவைவிட ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்களோ?
  • நண்பர்கள் எவ்விதமாக இருப்பார்கள்?
  • உணவு எப்படி இருக்கும்?
  • என் வேலை அனைத்தையும் நானே எப்படிச் செய்து கொள்வேன்?
  • புதிய மொழி எனக்குப் புரியுமா? என் பேச்சை அவர்கள் புரிந்து கொள்வார்களா?
  • எப்போதெல்லாம் வீட்டுக்கு வர முடியும்?
  • எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுப்பார்கள்?
  • இங்கே கொண்டு வந்து சேர்க்க அப்பா அம்மா ஏன் முடிவெடுத்தார்கள்?
குழப்பங்கள் - பெற்றோர்க்கு:
  • நாம் செய்வது சரிதானா?
  • நம் குழந்தையால் சமாளிக்க முடியுமா?
  • உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?
  • பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்துமா?
  • உடல்நிலை சரியில்லையென்றால் சரியாகக் கவனிப்பார்களா?
  • உணவு சரியாகக் கொடுப்பார்களா?
  • இப்படிச் செய்வதால் நம்மை வெறுத்துவிடுவானா?
  • உணர்வுப் பாதுகாப்பு (Emotional security), சூழல் பாதுகாப்பு (Physical  security) எப்படியிருக்கும்?
இது போலப் பலவிதமான குழப்பங்கள் வந்து போகும். அவரவர் சூழலுக்கேற்றவாறு வந்து போகும் குழப்பங்கள்.

இக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன?
  • உற்றார் உறவினர் நண்பர்கள் ஆலோசனைகளைக் காதும், மனமும் கொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...ஆனாலும் இதுகுறித்த முடிவை நீங்கள் இருவர் மட்டும் எடுங்கள்.
  • அம்மாவும் அப்பாவும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசி இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுங்கள்.
  • குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
  • குழந்தையையும் மனம் திறந்து பேசச் செய்யுங்கள்.
  • எந்தக் காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதற்கான நியாயத்தை விளக்குங்கள்.
  • விடுதியைப் பற்றிய, பாதுகாப்பு பற்றிய தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • அத்தகவல்களை உள்ளது உள்ளவாறே குழந்தைகளிடம் சொல்லுங்கள்...கூடுதலாகவோ குறைவாகவோ எதுவும் சொல்ல வேண்டாம்.
  • குழந்தையின் நிறைகுறைகளைச் சரிவர மதிப்பிட்டு அதற்கேற்றவாறு அணுகுங்கள்.
  • விடுதியில் சேர்ப்பதற்கான காரணம் உங்கள் இருவருக்கும் நியாயமாகத் தோன்றும் என்றால், இதையும் ஒரு பொறுப்பாகக் கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
குழந்தைகளை அணுகும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன?

அடுத்த பகுதியில்...

பேரன்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்துப் பதிவிடுகின்றேன்....


சில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...

அந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள். இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே. கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

பள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..இந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.

பகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:
  • கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..
  • பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...
  • அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..
  • தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...
  • டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...
  • இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..
  • நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...
  • குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..
  • வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..
  • அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறுவித காரணங்கள்:
  • இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...
  • இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக  இல்லை...
  • வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..
  • இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..

இப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.

ஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..
அடுத்த பகுதியில்..

வெட்கம்... அழகான வார்த்தை. வெட்கப்படும்பொழுது சிலர்
இன்னும் அழகாக தெரிவார்கள். ஆனால் இந்த வெட்கமே
சிலருக்குத் தடையாக இருக்கும். பெரிய அளவில் முன்னேறாமல்
போய்விட இந்த வெட்கம் காரணமாக இருக்கலாம்.

SHY CHILD என அழைக்கப்படும் சில குழந்தைகளை வளர்ப்பது
அவ்வளவு சுலபமல்ல. சுற்றத்துடனும், நட்புடனும் கலந்து
விளையாடாத தன் குழந்தையால் மனவருத்தத்திற்கும்
வெறுப்புக்கும் ஆளாகும் பெற்றோர் எத்தனையோ பேர்.
தன் பெற்றோர் வேறு யாருடனும் பேசி மகிழ்ந்து கொள்ள விடாமல்
அழுது, பிடிவாதம் பிடித்து என கவனத்தை திசை திருப்ப
முயற்சி செய்வார்கள் இத்தகைய குழந்தைகள். பொறுமையாக
இத்தகைய குழந்தைகளை கையாள வேண்டும்.

பொது இடத்தில் சாப்பிட படுத்துவார்கள், பார்ட்டி, கல்யாணம்
போன்ற இடங்களுக்குச் சென்றால் அம்மாவின் காலை கெட்டியாக
பிடித்துக்கொண்டு எங்கும் நகர விடாமல் செய்வார்கள்.


வளர வளர சிலக்குழந்தைகள் எல்லோருடனும் கலந்து பழக
ஆரம்பிப்பாரள் என்றாலும் சிலர் அந்த வெட்கம் தயகக்த்துடனே
வளர்வார்கள். தன்னம்பிக்கை குறையும். யாருடனும் கலந்து
பேசாததால் தனிமை விரும்பிகளாகிவிடுவார்கள்.

என்ன செய்வது?? இந்தப் பிள்ளைகளை எப்படி சமாளித்து
வளர்ப்பது??

வாங்க பகிர்ந்துக்கலாம். நாளைய பதிவில் பார்க்கலாம்.

வெறும் இயந்திரம் போல அலுவலகம் செல்வதும், வீடு திரும்புவதும், உண்பதும் உறங்குவதும் என எந்த வண்ணமும் இல்லாத த்ராபையாக இருந்த வாழ்க்கையைத் தன் கேள்விகள் மூலம் எழுப்பியவள், என் சகோதரியின் மகள், வைஷ்ணவி. அவள் கேட்கும் கேள்விகளின் பதில்களுக்காக என் தேடல்கள் துவங்கின. அவளோடு என் மகளும் சேர்ந்து கொண்டால்.... கேள்விகள் இன்னும் தீராமல் தொடர்கின்றன.

ஆப்பிள் ஏன் ரெட் கலரா இருக்கு-வில் ஆரம்பித்து, மண் எப்படி பொடியானது, அலை எங்கேர்ந்து வரும், கடல் தண்ணி ஏன் அங்கேயே நிற்குது ஏன் மத்த (ஆறு போன்ற) தண்ணி மாதிரி ஓடுவதில்லை என்று சராமாரியாய் திகைக்க வைக்க அவர்களுக்கு மட்டும்தான் முடியுமோ என்னவோ.

சனிக்கிழமை சாயந்திரம், ஆற அமர அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு, வாகனங்களும் செயல்பாடுகளும், அவற்றின் பயன்களும் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரை எளிமையான புல்லட் பாயிண்டுகளாக படங்களோடு தயார் செய்து பிரிண்ட் எடுத்து அவளுக்கு விவரித்துக் கொண்டிருந்தேன்.

எல்லாவற்றிக்கும் நான்கு, மூன்று, இரண்டு, என்று சக்கரங்கள் இருப்பதை விவரித்திருந்தேன். ரயிலுக்கு அவ்வாறு சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மேடம் கரெக்ட்டா "அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம் இருக்கும்" என்ற ஒரு கேள்விக்கான பதிலை அவள் ஆறு வயதுக்குப் புரியும்படி கொஞ்சம் விளக்கமாய்த் தர முயற்சித்தேன்.

அதற்கான படங்கள் இவை. இந்தப் படங்களை பிரிண்ட் வைத்துக் கொண்டு அவளோடு மூன்று மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் ஒரு வழியாய், என்ஜின்-னுக்கு மொத்தம் 12 சக்கரங்கள் மற்றும் bogie / coach ஒன்றுக்கு நான்கு சக்கரங்கள் என்று இருக்கிறது என்று எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாள். :))







விருட்சம்.காம் வலைதளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள …

இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி விட்டால் விட்டது தொல்லை. மாறாக யோசிக்காமல் வாங்கி ஓன்று வாயில் இடுக்கிக் கொண்டால் பிடித்தது ஏழரை என்பதைக் கூட உணராமல் அதில் மாணவக் கண்மணிகள் மூழ்கிக் கொண்டு இருக்கும் அவலம்
இப்போ கண்டுபிடித்திருக்கிறது ஒரு தனியார் பள்ளி.

பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.

பின் விளைவுகள் என்னென்ன? வேறு என்ன ஒரு நாள் எடுத்துக் கொள்ள வில்லை என்றால் தலை வலி எரிச்சல் தூக்க மின்மை, எரிந்து விழுதல், படிப்பில் கவனமின்மை.

இதை விளம்பரப்படுத்தும் இந்தச் சுட்டி

சொல்லுவது இது ஹெர்பல் தயாரிப்பாம். ஆரோக்கியத்துக்கு நண்பனாம் அதான் ஹெல்த் பிரெண்ட்லி

ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் புகையிலை தயாரிப்பு என்று ஏதாவது உண்டோ.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்