பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label கிருத்திகா. Show all posts
Showing posts with label கிருத்திகா. Show all posts

இப்போதெல்லாம் நம்முன் இருக்கும் மிகப்பெரும் சவால் மீட்டிங் த டெட்லைன் தான் இல்லையா அது குடும்பத்திலாகட்டும் இல்லை அலுவல் சம்பந்தமானதாயிருக்கட்டும் அதன் கோணங்களும் விகிதாசாரங்களும் மாறுவதேயில்லை. மாதம் பிறந்தால் மின்சாரக்கட்டணத்தில் இருந்து பால் அட்டை வரை குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்த வேண்டியுள்ளது, இரு பால் உறவுகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நேரம் தவறாமால் செய்யத்தவறினால் அவர்கள் பால் இருக்கும் அக்கறை கேள்விக்குறியாகிறது. அலுவல்கத்திலோ கேட்கவே வேண்டாம், இது போன்ற இன்றியமையாத பண்பை நம் பிள்ளைகளிடத்தில் சிறுவயதில் இருந்து வளர்ப்பது எப்படி என்று ஒரு எண்ண ஓட்டம் வந்ததும் அதற்கு நான் கடைப்படித்த வழி முறைகள் இதுவே.

01. மாதாந்திர சிறுவர் சஞ்சிகைக்கு பணம் கட்டி விட்டு முதல் சில மாதங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு புத்தகம் வந்து விட்டதா என்று அவர்களிடமே விசாரிப்பது. அதன் பலன் அடுத்த மாதத்தில் இருந்து அவனே அந்த தேதிகளில் தாபால் பெட்டிகளில் பார்க்கத்துவங்கிவிட்டான்.

02. அவர்களுக்கு வேண்டிய பேப்பர் பேனா போன்றவைகளை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாங்கித்தருவது என்றும் அந்த குறிப்பிட்ட தேதி வரை இருப்பை கணக்கு வைத்துக்கொள்வதும் பின் தேவைகளைச்சொல்வதும் அவர்கள் பொறுப்பு என்று நடைமுறைப்படுத்தினேன்.

03. கேபிள் காரனுக்கு பணம் தருவதை அவர்கள் பொறுப்பில் கொடுத்தேன். (தவறினாலும் நமக்கேதும் பாதகமில்லை தானே)

இது போல் இன்னும் பலதும் செய்யலாம் உங்கள் அனுபவங்களை/நடைமுறைகளள பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகளும் ஒருவேளை உங்களுக்குப் பயன்படலாம் முயற்சி செய்து பாருங்களேன்.

இதோ வந்தாச்சு பள்ளிப் பிள்ளைகளுக்கான விடுமுறைக்காலம். அதே சமயம் அத்தனை தினசரிகளிலும் சுவரொட்டிகளிலும் முளைச்சாச்சு விடுமுறைக்கால வகுப்புக்களுக்கான விளம்பரங்கள்.

என் மகனின் நன்பனின் அம்மா “எங்க வீட்டு சிபிய இந்த தடவை மூணு சம்மர் கேம்ப்ல சேர்த்திருக்கேன்னு” ரொம்ப பெருமையா சொன்னாங்க எனக்கு ரொம்ப பாவமா இருந்தது.

பள்ளி நாட்களிலாவது பிள்ளைகள் விடுப்பு எடுக்கலாம், ரொம்ப முடியலேன்னா வீட்டுப்பாடம் செய்யாமல் தவிர்க்க முடியும் ஆனால் இது போன்ற விடுமுறைக்கால பயிற்சிகளில் வகுப்பு தவறவிடக்கூடாது, கையெழுத்துப்பயிற்சி மாதிரியான வகுப்புக்களில் வீட்டுப்பாடம் கட்டாயம் செய்தே ஆகவேண்டும் ஏகப்பட்ட டென்ஷன் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தான். நாம் கொஞ்சம் சிந்திக்கலாமே…

நாமெல்லாம் சிறு பிள்ளைகளாய் இருக்கும் போது வரும் விடுமுறை காலத்திற்காக எத்தனை ஏக்கமாய் காத்திருப்போம், எனக்கெல்லாம் பாட்டி வீடு, அத்தை வீடு என்று போவதற்கு கூட இடமிருந்தது கிடையாது ஆனாலும் அந்த இரண்டு மாதங்கள் மிகவும் பசுமையாகக் கழியும் (நல்ல வேனலாய் இருந்தாலும் கூட) எங்க அப்பாவும் ஆசிரியர் என்பதால் அவருக்கும் குறைந்தது ஒரு மாதமாவது விடுமுறை இருக்கும் அந்த நாட்களில் வீட்டின் இயல்பு முறையே முற்றிலும் மாறிவிடும், மெதுவாக எழுந்திருப்பது, அதாவது வழக்கத்தில் 5 மணி என்றால் இப்போதைய சலுகை 6.30. பின் ஆறு/குளம்/புதுத்தண்ணி வந்தா வாய்க்கால் இவை எவற்றிலாவது நல்லா கால் ஓயும் வரை நீந்தி குளிச்சுட்டு வந்தால் அம்மா சூடா சமைச்சு வைச்சிருப்பாங்க வீட்டுல இருக்கற அத்தனை பாக்கி வேலைகளையும் (துவைத்து வந்த துணி உலர்த்துவது, உலர்ந்த துணிகள மடிச்சு அந்தந்த இடத்துல வைக்கிறது. இத்யாதி இத்யாதி) அக்கா தலைல கட்டிட்டு அப்பா கூட உக்கார்ந்து சுகமா சாப்பிட வேண்டியது அப்புறம் அப்படியே அம்மாவ குழையடிச்சு நூலகம் போக அனுமதி வாங்கிட்டு (அது பேர்ல கூடுதலா ரெண்டு மூணு இடத்துக்கு விசிட் உண்டு அத இப்ப தைரியமா சொல்லலாம்) போயி அகிலனோ, நாபாவோ, ஜெயகாந்தனோ எடுத்துகிட்டு வந்தா நாள்முழுக்க உட்க்கார்ந்து வாசிக்கலாம். இல்லேன்னா நல்லா தூங்கி எழுந்தா அம்மா டிபன் பண்ணித்தருவாங்க இல்ல நாங்க டிபன் பண்ரோம்கற பேர்ல கிச்சனை கொஞ்சம் துவம்சம் பண்ணிட்டு அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு பொழுத போக்கினா சாயங்காலம் ஆயிடும். அப்பத்தான் டெலிவிஷன் வந்த புதுசு எங்க பக்கத்துல டி.டி. கூடத்தெரியாது மொத மொதல்ல தெரிஞ்சது ரூபவாகினி ங்கற சிலோன் டீவி மட்டும்தான் அந்த மியூசிக்க ரொம்ப நல்லா இருக்கும் இப்பெல்லாம் கேக்க பார்க்கவே முடியல. முதல்ல ஒரு அரை மணி நேரமோ என்னமோ தமிழ் நிகழ்ச்சிகள் இருக்கும் அப்புறம் பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போயிட்டு வந்தா ராச்சாப்பாடு முடிஞ்சு திரும்பவும் அக்காகூட அரட்ட கதைப் புத்தகம், தூக்கம். எவ்வளவு இனிமையா இருக்கும் பள்ளி மீண்டும் திறக்கும் போது உற்சாகமா போவதற்குண்டான அத்தனை சக்தியும் உடம்பில் சேர்ந்திருக்கும்.

ஆனா இப்ப பாருங்க பள்ளி நாளுக்கும் விடுமுறைக்கும் வித்யாசமே இல்லாம பிள்ளைங்கள சம்மர் கேம்ப் அனுப்பி, வாட்டி, வதச்சு விளயாட வேண்டிய வயதில அவங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும் அவங்களின் பெற்றோர்கள் என்பாதாலேயே சிதைக்கும் சுதந்திரத்தை நமக்கு யார் தந்தது. அந்த இளம் உள்ளங்களுக்குச் சேர வேண்டிய நியமான மகிழ்ச்சிகளைக்கூட தடை செய்யும் உரிமையை நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் தான். தாய் தந்தை இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வீட்டில் ஒருவரும் இல்லாத வீடுகள் அநேகம் இருக்கும், ஆனால் அதையும் ஒழுங்கு செய்ய வேண்டிய பொறுப்பு நம்மை சார்ந்தது தான் அதற்காக பொறுப்பின் ஒரு பெறும் பகுதியை நம் இளம் பிள்ளைகளின் தலையில் சுமத்த முயல்வது குருவி தலையில் பனங்காய் கதை தான். யோசித்துப் பாருங்கள் நன்பர்களே….

வல்லி சிம்ஹன் பதிவிற்கு பின்னூட்டம் இடும் பொழுது தான் இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

எங்கள் வீட்டில் இருவருமே ஆண்பிள்ளைகள், அருகருகே வசிப்பவர்களுக்கு கூட பெண்மகவு இல்லை அதனால் என் சின்னப்பையனுக்கு பெண்களின் சகவாசம் அதிகம் கிடையாது.

ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த அவன் வழக்கத்தை மீறி ரொம்ப சோர்வாகவும் அதேசமயம் ரொம்ப கோபமாகவும் இருந்தான் ஆனா அவன் ரொம்ப அழுத்தம் அதுனால லேசில வாயிலிருந்து விஷயம் வராது எவ்வளவு அழுத்தம்னா, அவனுக்கு ஒரு 5 வயசு இருக்கும் போது தெரு முனையில இருக்கற கடைக்கு தேங்கா வாங்கிட்டு வான்னு 10 ரூபா குடுத்து அனுப்பிச்சோம் கொஞ்ச நேரம் கழிச்சு வெறும் கையோட வந்து நின்னான் நாங்க ரொம்ப பயந்து போய்

01. என்னாச்சு ரூபாய தொலைச்சிட்டயா – பதிலே இல்லை
02. கடைக்காரி தேங்க தரலயா – பதில் “தரல”
03. ஏன் - - பதிலில்லை
04. மீதி காசு எங்கே – “காக்கா தூக்கிட்டு போச்சு”
05. எதை தேங்கயவா காசையா – காசை
06. அப்ப தேங்கா என்ன ஆச்சு - பதிலில்லை
07. வரும்போது கீழ விழுந்திட்டதா – பதிலில்லை
08. எங்க அம்மா அதுக்குள்ள வந்து "குழந்தை கையில இருந்து யாராவது பிடிங்கிண்டு போயிருப்பா இதுக்குத்தான் சின்ன குழுந்தைய அனுப்பாதேன்னு சொன்னா நீங்க ஏதோ டிரெயின் பண்ரேன்னு அனுப்பிச்சேள் ஏண்டா கண்ணா யாராவது பிடிங்கிண்டு போயிட்டாளா" – பதில் “ஆமாம் பாட்டி ஒருத்தன் ஓடி வந்து பிடிங்கிண்டு ஓடியே போய்ட்டான்.”
09. நாங்க பொய் சொல்லாதே பாப்பா, நீ கீழ விழுந்திட்டயா – பதில் “ஆமாம் நான் கீழ விழுந்திட்டேன்…”
10. எங்க விழுந்த – திருப்பதி வீட்டுக்கு பக்கத்துல (அவன் வீட்டுக்கும் தேங்கா கடைக்கும் சம்பந்தமே கிடையாது)

இப்படி கேட்கிற கேட்விக்கெல்லாம் அவனுக்கு தோன்றிய படி பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரியிடம் விசாரித்ததில் அவள் தேங்காயும் இரண்டு ரூபாய் சில்லரையும் கொடுத்து விட்டுருந்தது தெரியவந்தது, வழியில் எங்கும் தேங்காயை காணவில்லை இன்று வரை அது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. எங்கள் அனுமானம் தேங்காய் கீழே விழுந்திருக்கும் அவனுக்கு மண்ணைத்தொடப் பிடிக்காது எனவே எடுக்காமல் வந்திருப்பான் ஆனால் அவன் வாயில் இருந்து இன்று வரை என்ன நடந்தது என்று சொன்னதில்லை. எனவே இந்த மாதிரி ஏதாவது நடந்தால் உடனே நாங்கள் நித்தா தேங்கா வாங்கின கதைதான் என்று ஸ்டேட்மெண்ட் விடுவோம். அந்த அளவு அழுத்தமானவன் இன்று வரை அப்படித்தான் (இப்போது அவனுக்கு வயது 10) அதனால் யாரும் நேரடியாய் என்ன விஷயம் என்று கேட்கவில்லை.

இரவு வழக்கமாய் அவன் எங்களுக்கு கதை சொல்வான் அது அவனுக்கும் எங்களுக்கும் மிகவும் பிடித்த தருணம். நான் ஒரு மாதிரி சாயங்காலமா – பாப்பா இன்னிக்கி என்ன கதை என்று ஆரம்பித்து பின் மெதுவா என்ன ஆச்சு இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து ரொம்ப டல்லா இருந்தே யார் கூட பிரச்சனை என்றதும் தான் விஷயம் வந்தது.

அம்மா என்ன மிஸ் எடம் மாத்திட்டாங்க (அது வழக்கமாய் நடக்கும் ஒன்றுதான் அவர்கள் ஒரு மாதிரி பீரியாடிக்கலா பிள்ளைகளின் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் இதிலென்ன புதுசு என்று எண்னியபடி) க்ரேட் யாரு இப்ப உன் பக்கத்துல இருக்காங்க என்று கேட்டதும் தான் தாமதம், அதான் அந்த மேகி (மரகதமத்தின் சுருக்கம் இவர்களாக வைத்துக்கொண்டது) அவ பக்கத்துல போய் என்னப் போட்டிருக்காங்க நான் மிஸ்கிட்ட கம்ப்ளெயின் பண்ணியிருக்கேன் ஆனா நாளைக்கு மாத்தறேன்னு சொல்லியிருக்காங்க அப்படி மாத்தலேன்னா நாளைக்கு நான் எங்க சோசியல் மிஸ்கிட்ட சொல்லுவேன் என்று ரொம்ப ஆதங்கத்தோடு சொன்னான் (எனக்கு ஒரே ஆச்சரியம் ஏன்னா அவன் இப்படி எல்லாம் ரொம்ப சென்சிடிவா இருக்க மாட்டான் யாரு வந்தாலும் போனாலும் கண்டுக்கவே மாட்டான் அவன் உலகம் தனி என இருப்பான் இப்ப என்ன வந்தது என்ற எண்ணத்துடன்) ஏன் அந்த மேகி பக்கத்துல உக்காந்தா என்ன? என்றதுக்கு அம்மா அவ தல பூராவும் ஒரே பேன் எப்பவும் தலைய சொறிஞ்சிண்டே இருப்பா அவ பக்கத்துல இருந்தா எனக்கும் அவ தல பேன் பூரா வந்துரும் அவ டார்க்கா தலைக்கு எண்ணை தடவிண்டு வருவா (அந்தப்பெண்ணிற்கு சற்றே நீண்ட கூந்தல் அவள் தினமும் அழகாக அதைப்பின்னி ரிப்பன் வைத்து கட்டிக்கொண்டு வரும் அழகை நான் பார்த்து ரசிப்பதுண்டு) அதான் நான் மிஸ்கிட்டே சொல்லிட்டேன் மிஸ் அவ தலைல பேன் இருக்கு நான் அவ பக்கத்தில உக்கார மாட்டேன், சம்டைம் அவள் தலைல இருக்கிற எண்ணை என் சைட்டைல பட்டுடும்னு. மிஸ் நாளைக்கி இடம் மாத்திருவாங்க. என்று முடித்ததும் அவன் முகம் ரிலாக்ஸ் ஆனாது ஆனால் என் மனம் மிகவும் கனத்துப்போனது. உடன் ஒரு பெண் குழந்தை வளரும் பட்சத்தில் ஒரு ஆண் குழத்தையால் இவ்வளவு நிர்தாட்சண்யமாக ஒரு சக பெண்குழந்தையை நிராகரிக்க முடியுமா??? இதை கேட்ட அந்த பள்ளி ஆசிரியை, அந்த மாணவியின் மனது எப்படி இருந்திருக்கும் அதை நான் இவனுக்கு எவ்வாறு புரிய வைப்பது போன்ற பல கேள்விகள் என்னுள் பிறந்தது.

அதனால் பொதுவாக அன்றிலிருந்து நான் அவன் வயது பெண்குழந்த்தைகளைப்பற்றி அவனிடம் அதிகம் பேசத்துவங்கினேன். முடிந்த போதெல்லாம் அவர்களின் உலகம் பற்றிய புரிதலை அவனுள் விதைக்கத்தலைப்படுகிறேன். ஏனெனில் எதிர் எதிர் உலகமும் அதைச்சூழ்ந்த பிரச்சனைகளயும் புரிந்து கொள்பவரால் தானே நல்ல தகப்பனாய், பிள்ளையாய், நன்பனாய், கணவனாய், மனிதனாய் இருக்க முடியும்.

இவற்றையெல்லாம் வெறும் இலட்சிய குறிக்கோள்களாகக் கொள்ளமால் நாம் தொடர்ந்து நம் தினசரி நடவடிக்கைகளில் கைகொள்வோமானால் ஒரு நல்ல குடிமகனை/மகளை உருவாக்க முடியும்.

1. குழந்தைகளோடு நாம் பழகும்போது நம் ஒவ்வொரு வெளிப்பாடும் அவர்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும். பிரிதொரு சமயம் அவர்களும் அதையொத்த சூழ்நிலை உருவாகும்போது அதை மீள் பாவனை செய்ய முற்படுவர். அதற்காக புறச்சூழலில் நாம் எத்தனையோ நிகழ்வுகளைத் தாண்டிவரும் போது நாம் எப்பொழுதும் ஒரு ஆதர்சமான நடவடிக்கைகளையே மேற்கொள்ளுவதும் சாத்தியமில்லை. அது போன்ற சமயங்களில் நாம் நம் குழந்தைகளிடம் மிகவும் உண்மையாக அவர்களுக்கு ஒரு பெரியவர்களுக்குரிய (நாம் மிகவும் மதிப்பவர்களில் ஒருவராகக் கொண்டு) மரியாதை கொடுத்து, அந்த சூழலின் ஆதர்சமான எதிர்விளைவுகள் எவ்வாறு இருந்திருக்கும் என்றும் நாம் எதற்காக இப்படி எதிர்வினையாற்றினோம் என்றும் விளக்க முற்படுவோமேயானால் அவர்களிடத்து ஒரு மிகப்பெரும் புரிதலும் நிகழ்வுகளை சீர்தூக்கிப்பார்க்கும் மனப்பக்குவமும் உண்டாகும். இது போன்ற நடவடிக்கைகள் இருவருக்கும் உண்டான நெருக்கத்தை அதிகரிக்கும்.

२. கணவன் மனைவி இருவருமே தனித்தனியாக குழந்தைகளோடு சிறிது நேரமாயினும் செலவிடவேண்டும். அது எங்காவது சிறிய கடைகளுக்குச் செல்லும் நேரமாகக் கூட இருக்கலாம். அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்து நாம் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது குறிப்பிட்டு பேச முயலவேண்டும் அது நாம் அவர்கள் பேச்சிற்கு அளிக்கும் மரியாதையையும், அவர்கள் பேச தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் குறித்தான விழிப்புணர்வையும் தோற்றுவிக்கும்.

சிறு துளி பெறுவெள்ளம் தானே.. ஒவ்வொரு வீடும் தலைப்பட்டால் ஒரு மிகச்சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் நாமாகலாம். இன்னும் தொடரும்….

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்