ஆப்பிள் ஏன் ரெட் கலரா இருக்கு-வில் ஆரம்பித்து, மண் எப்படி பொடியானது, அலை எங்கேர்ந்து வரும், கடல் தண்ணி ஏன் அங்கேயே நிற்குது ஏன் மத்த (ஆறு போன்ற) தண்ணி மாதிரி ஓடுவதில்லை என்று சராமாரியாய் திகைக்க வைக்க அவர்களுக்கு மட்டும்தான் முடியுமோ என்னவோ.
சனிக்கிழமை சாயந்திரம், ஆற அமர அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு, வாகனங்களும் செயல்பாடுகளும், அவற்றின் பயன்களும் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரை எளிமையான புல்லட் பாயிண்டுகளாக படங்களோடு தயார் செய்து பிரிண்ட் எடுத்து அவளுக்கு விவரித்துக் கொண்டிருந்தேன்.
எல்லாவற்றிக்கும் நான்கு, மூன்று, இரண்டு, என்று சக்கரங்கள் இருப்பதை விவரித்திருந்தேன். ரயிலுக்கு அவ்வாறு சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.
மேடம் கரெக்ட்டா "அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம் இருக்கும்" என்ற ஒரு கேள்விக்கான பதிலை அவள் ஆறு வயதுக்குப் புரியும்படி கொஞ்சம் விளக்கமாய்த் தர முயற்சித்தேன்.
அதற்கான படங்கள் இவை. இந்தப் படங்களை பிரிண்ட் வைத்துக் கொண்டு அவளோடு மூன்று மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் ஒரு வழியாய், என்ஜின்-னுக்கு மொத்தம் 12 சக்கரங்கள் மற்றும் bogie / coach ஒன்றுக்கு நான்கு சக்கரங்கள் என்று இருக்கிறது என்று எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாள். :))
http://www.livechennai.com/detailnews.asp?newsid=1488
வாசகர்களுக்கான தகவல் :
சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ 250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது .
இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி ரூ 50 குறைக்கப்பட்டது. அதன்படி, தடுப்பு மருந்துக்கு ரூ 100, தடுப்பூசிக்கு ரூ 200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடபடுகிறது
முகவரி :
Alandur Road, SIDCO Industrial Estate
Chennai, Tamil Nadu 600032
044 22501520
044 22501778
044 22501706
044 22501233
.
ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.
ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.
"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.
இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.
கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.
உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.
"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.
"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு
"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.
கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.
"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.
கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.
"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.
"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.
மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.
"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.
"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.
கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.
உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.
"என்ன நண்டு" என்றது கொக்கு.
"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.
மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.
புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.
நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.
"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.
"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.
நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.
கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.
வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.
.
இக்கட்டுரை ஈரோடு நண்டு நொரண்டு என்ற பதிவர் எழுதியது.
குழந்தைகளுக்கு விடுமுறை. ஒரு மாதம் பெரிய தொந்தரவு. லீவே விடக்கூடாது. இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம்.
குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி. பள்ளிக்கூடம் வீடு போன்று இருப்பதில்லை என்றே உண்மையில் அனைத்துக் குழந்தைகளும் நினைக்கின்றனர்.
குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும் செழுமைப்படுத்திக்கொள்கின்றன (இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது). 2-லிருந்து 5 வயது வரை குழந்தைகள் மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன, சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது.
குழந்தைகள் 5 வயதிற்குப்பின், 5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில் பயணித்து 12வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து, தொடர்ந்து, பிறகு 16வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள் நுழைகின்றனர். அதுவரை அவர்கள் கட்டற்ற சுதந்திரம் இருப்பவர்களாகவே உணர்கின்றனர்.
இதுவே, குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது.
எனவே, இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள். அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளர ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் அல்லது அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள். அது அவர்களிடத்தில் தாழ்வு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள். அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக் கொள்ளாதீர்கள். நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.
குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள். அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள். அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள். அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள்.தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று
தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள்.உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப் புகுத்தாதீர்.
அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான். விடைகளை தருவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை. கற்றுக்கொள்வது அவர்களின் இயல்பான செயல்.
கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது.
ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் பிறக்கும் பொழுதே பலவிசயங்கள் அவர்களுக்கு இயல்பாகவும் இயற்கையாகவும் ஆணையிடப்பட்டிருக்கின்றது.
அது "சுவாசி உடல் இயங்கும் ". "உண் உடல் வளரும் ". "வளர உணவு தேவை ".
இதுபோன்று...பல...
இதில் "வளர உணவு தேவை" என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும், சேட்டைகளுக்கும் காரணம்.மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான்.காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான் குழந்தைகள் செய்யும் அனைத்தும்.
அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள்.
குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள்.அதனால் பயனேதும் இல்லை.
ஆதலால் , குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள். அவர்களின் வாழ்வை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் மீறினால், அவர்களும் மீறுவார்கள். ஜாக்கிரதை. எனவே குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள். அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள். அவர்களை உற்று கவனியுங்கள். அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள். அதற்கு உதவுங்கள். சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள்.
நம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான். அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன் பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள்?
.
குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்
குழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு. என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
இதில்:
1. படமும் பாடலும் - Tamil Nursery Rhyme
2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக் குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)
3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)
4. குழந்தைகளுக்கான புதிர்கள்
5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)
6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்
7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்
உங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
நன்றி.
= =வித்யா
அதிக ஜலதோஷத்தினால் (சளி) காதில் வலி ஏற்பட்டால், குழந்தை ஓயாமல் அழுது கொண்டும், காது வலியினாலும், அழுகையினால் ஏற்படும் தலை மற்றும் தொண்டை வலியினாலும் அதிக துன்பத்திருக்கும் ஆளாகும்.
காது இன்பக்ஷன் தானா இல்லை சளியால் ஏற்பட்ட காது வலியா என்று எப்படி அறிவது? எப்படித் தவிர்ப்பது?
சளியால் ஏற்பட்ட காது வலியில், ஒற்றைக் காதில் (பெரும்பாலும் இடது) ஊசி குத்துவது போன்ற வலியும், கண்ணுக்கு கீழ் மூக்கின் அருகிலும், நெற்றியில் (படத்தில் dark colour-இல் காட்டப் பட்ட பகுதிகள்) கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால லேசாக அழுத்திக் கொடுத்தால் இதமாகவும் உணரும்.
- ஒரு வேளை அன்றுதான் தலைக்கு குளிப்பாட்டி இருந்தீர்கள் என்றால், சளி பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல சுத்தமான ear-buds அல்லது மல் துணியால் காதுகளை சுத்தம் செய்து விடவும். தலையை நன்றாகத் துவட்டி விட்டு, தலை உச்சியில் சிறிதளவு வீபூதியும் நெற்றியில் சிறிது வீபூதியும் மிக சிறிதளவும் தண்ணீரில் குழைத்து இட்டு விட்டால் நீர் கோத்துக் கொள்ளாமல் இருக்கும்.
- இல்லை என்றால் நாட்டு மருந்துக் கடைகளில் "நீர் கோவை மாத்திரை" என்று கிடைக்கும். ரொம்ப வீரியம் கொண்டது மற்றும் காரமானது. கை கண்ட மருந்து. இதை அப்படியே குழைத்து குழந்தைகளுக்கு நெற்றியில் போட்டால் தோல் எரியும். அதனால் சிறிது வீபூதி அல்லது மஞ்சள் சேர்த்து குழைத்து இடவும்.
- இல்லை என்றால் சுக்கோடு கடுகை அரைத்து மைதாவில் குழைத்து நெற்றிக்கு பத்து போடவும்.
- மேலும் வாரம் ஒரு நாள், தலைக்கு குளிப்பாட்டும் அன்று, மூன்று பல் பூண்டு, மூன்று வெற்றிலை, ஒரு ஆர்க்கு வேப்பிலை, பத்து துளசி இலை, மற்றும் ஓமம், மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, வால் மிளகு, (எல்லாம் மூன்று டீஸ்பூன்) அதிமதுரம், கண்டந்திப்பிலி, அரிசித் திப்பிலி, (எல்லாம் ஒவ்வொன்று) இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒரு சொட்டு (ஒரே ஒரு சொட்டுதான்) விளக்கெண்ணை விட்டு வறுத்துக் கொண்டு மூன்று தம்ப்ளர் தண்ணீரில் போட்டு ஒரு தம்ப்ளராக வற்றும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, வெது வெதுவென்று கொடுக்கவும். என் சொந்த அனுபவத்தில் எனக்கு ரொம்பவே உதவிய கஷாய ரெசிப்பீ இதுதான். குழந்தையை குளிப்பாட்ட வெந்நீர் போடும் போதே இதையும் ரெடியாக வைத்திருப்பேன். குளித்து தலை துவட்டியதும் தானே வந்து குடித்து விட்டு போய் விடுவாள்.
எப்படி கண்டு பிடிப்பது?
- மஞ்சள்/பச்சையாக சளி கட்டிக் கொண்டு, சளி நாற்றம் அடிக்கும்.
- மூக்கை உரிய சிரமப் படுவார்கள்.
- தூக்கமின்மை / படுத்துக்கொள்ள சிரமப்படும்
- குழந்தை காதுகளை பிடித்து/பொத்திக் கொண்டு அழும் (அல்லது) காதை பிடித்து இழுக்கும், காதை அறைவது போல தட்டும் / தேய்த்து விட்டுக் கொள்ளும்
- இருமல்
- தலை வலி
- மூக்கில் நீர் வடிதல்
- உணவு உண்ண மறுத்தல்
- விழுங்க சிரமப் படுதல்
- மலம் / சிறுநீர் கழிக்காமல் இருத்தல் (குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு தரம் மலமும், அதிக பட்சம் ஆறு முறையாவது சிறுநீரும் கழிக்க வேண்டும்)
- ஜுரம் வரலாம்
- வாந்தி எடுத்தால்
- நை நை என்று அழுது கொண்டே இருத்தல்
- வாந்தி எடுத்தால் வீட்டில் ஓம வாட்டர் இருந்தால் தண்ணீரில் கலந்து குடிக்க வெந்நீர் கொடுங்கள்.
- பஞ்சில் ஒரு சொட்டு யூகாலிப்டஸ் எண்ணெய் சொட்டி, அதை காதில் வையுங்கள். இதமாக இருக்கும்.
- மூக்கு மற்றும் நெற்றி (சைனஸ் ஸ்பாட்டுகள்) ஆகிய இடங்களில் கொஞ்சமாக விக்ஸ் தடவி அழுத்திக் கொடுங்கள்.
- மேலே சொன்ன "பத்து" ஏதாவது ஒன்றை போடுங்கள்.
- முடிந்த வரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போங்கள். அப்படி போகும் போது "பத்து பதினொன்று", குழந்தையின் மூக்கு எல்லாவற்றையும் துடைத்து விட்டு கூட்டிப் போங்க.
- டாக்டர் தரும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை தவறாமல் கொடுங்கள். Acetaminophen or ibuprofen முக்கால்வாசி காது வலிக்கு நல்ல மருந்தாகவே இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே காது வலி முழுமையாக குணமாகி விடுகிறது. இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி முழு டோஸும் கொடுத்து விடுங்கள்.
0
பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை.
குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...
.
பெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்
பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை.
இது எவ்வளவு பள்ளிகளில் இருக்கிறது என்பது தெரியாது.
இதில் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை _________ “எனக்கேட்க அம்மாவும் “ மகன் தந்தைக்கு _____________இவன் தந்தை என்னோற்றன் கொல்லொனுஞ் சொல்”லை கேட்க அப்பாவும் வருவதுண்டு. கடந்த நான்கு வருடங்களாக நிறைய அப்பாக்கள் தென்படுகிறார்கள்.
என் வீட்டில் மாறிமாறிப் போவதுண்டு.நான் போவதற்கு முன் எனக்கும் ஒரு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடக்கும்.அங்கு போய் இதைப் பற்றி பதிவுப் போடுவதற்கு மண்டையில் யோசித்துக்கொண்டிருக்காமல் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக காதில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதாக."படிப்பு முக்கியம்...பதிவு அல்ல.understand?" "Yes.... mam!"
புத்தகத்திருவிழாவில் ஸ்டால் ஸ்டாலாகப் போவது போல் இங்கு வகுப்பு வகுப்பாகப் போக வேண்டும்.முக்கால்வாசி கவலைத் தோய்ந்த முகங்களைப் பார்த்தாலும் இங்கு நடக்கும் இந்த சந்திப்புகள் பார்த்தால் நன்றாக பொழுதுபோகும்.
ஆசிரியரைக் கும்பலாக சூழ்ந்துக்கொண்டு மற்ற குழந்தைகளின் மார்க்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அவர்களின் “ஓபன் சீக்ரெட்டை”காதில் கேட்டுக்கொண்டுதான் நடக்கும்.அடுத்து அழுவது.ஒரு முறை ஒரு மாணவனின் தாயார் (விசும்பி விசும்பி) அழுதைப் பார்த்தேன்.(இது கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய செயல்.)பிறகு மாணவ/வியின் காதைத் திருகி அங்கேயே கண்டிப்பது.அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது.
ஒரு ஆசிரியர் ஒரு நாளில் கிட்டத்தட்ட 200 பெற்றோர்களைச் சந்தித்து பின்னூட்டம் கொடுக்கிறார்.பரிதாபம்.முப்பது அல்லது நாப்பதாவது பின்னூட்டத்திலேயே சலிப்பு வந்து ரோபோவாகி “டெம்பிளேட் பின்னூட்டம்” ஆகிவிடுகிறது. ”நிறைய பிராக்டீஸ் பண்ணனும்” “கான்செப்ட்ட தெரிஞ்சிகிடனும்””சில்லி மிஸ்டேக்ஸ்””வாய்விட்டு படிக்கணும்” “She/He can still do better"”lacking concentration".
( Lacking concentration எனும்போது இப்போது இருக்கும் தலைமுறைக்கு கவனக்கலைப்புகள் அதிகம்.இதிலிருந்து மீண்டு படிப்பில் பாடம் செலுத்துவது இமாலய சாதனை.)இது பெற்றோர்களுக்கும் ஒரு சவால்.இதில் பல பெற்றோர்கள் சலித்துப்போய் அலுத்து நொந்து விடுகிறார்கள்.
இங்கும் ஒரு பக்கப் பார்வைதான்(one sided view) பார்க்கப்படுகிறது.அதாவது ஆசிரியர்களிடம் குற்றமே இல்லாத மாதிரியும் மாணவ/விகள்தான் முழு பொறுப்பு என்பதாக.பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும் பதிலுக்கு உண்மையான “டெம்பிளேட் பின்னூட்டங்கள்”தொண்டையில் உண்டு.ஆனால் சொல்வதில்லை. அவை” போர்ஷ்ன்களை மின்னல் வேகத்தில் நடத்திக்கொண்டுப் போவது” “பாடத்தை எழுதுவதற்குள் அழித்துவிடுவது””எப்படி இருந்தாலும் மாணவ/விகள் டுயூஷன் வைத்துவிடுவதால் மேலோட்டமாக சொல்லிக்கொடுப்பது”” மார்க் குறைந்தாலும் பணம் இருப்பதால் இன்ஜினியரிங் கல்லூரி சேர்த்துவிடலாம்”
வகுப்பில் ஆசிரியர்களின் கண்டிப்பில் வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது.காரணம் மாணவ/விகள் தற்கொலை.மனித உரிமைக் கழகம்.ஏதாவது நடந்தால் ரெடியாகக் காத்திருக்கும் புலானய்வு ஊடகங்கள்.
நான பார்க்கும் உலக மகா அபத்தம் கம் குற்றம் ஒரு வகுப்புக்கு 65 மாணவ/விகள் மேல் இருப்பது.இருக்க வேண்டியது 30.எவ்வளவு சொல்லியும் இந்த டெம்பிளேட் பின்னூட்டத்தை யாரும் காதில் போட்டுக்கொள்வதில்லை.
குறைவாக மதிப்பெண் பெறும் மாணவ/மாணவிகளின் பெற்றோர்களுக்கு எங்கு தவறு என்று நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது.தெரியவில்லை என்றால் முட்டாள் பெற்றோர் என்றுதான் சொல்வேன்.
சில படித்தப் பெற்றோர்கள் டுயூஷன் வைக்காமல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.ஆனால் இதற்கு.எல்லையில்லா பொறுமையும் எனர்ஜியும் வேண்டும்.அதுவும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் வீடு? அம்மாடியோவ்!
பெரும்பாலும் கணக்குப்பாடத்தில் சறுக்குவது சகஜம்.காரணம் இதில் கதை விட முடியாது. அடிப்படைத் தெரியவேண்டும்.கவனம் குறைந்தால் காலிதான்.
அடுத்து ஆங்கிலம்.இலக்கணம் மிக முக்கியமானது.ஆசிரியர்/மாணவர் இரண்டுமே இங்கு சொதப்பல். மூன்றாம் நான்காம் வகுப்பிலேயே அடித்தளம் பலமாக போட வேண்டும்.இல்லாவிட்டால் காலி.தமிழ்(2nd language) இங்கும் சொதப்பல்.காரணம் மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதால்.இதை இரு தரப்பும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.காரணம் இது சோறுப் போடப்
போவதில்லை என்பதால்.பிளாக் எழுத உதவும்(????).
என் மகன் 2nd language தமிழ்தான். ”ஐனூத்தி என்பத்தி நாலு ரூபாய்” என்பதை மார்வாடி போல் தட்டுத்தடுமாறி உச்சரிப்பான்.
இந்த சந்திப்பில் வெளி வரும் விஷயங்கள்:
- பாடத்தின் அடைப்படையை மண்டையில் ஏற்றுதல்
- மாணவ/விகளின் சோம்பேறித்தனம்
- கணக்கில் பயிற்சி நிறைய செய்யவேண்டும்.அசுர சாதகம்.போட போட கணக்கு, பாடபாட பாட்டு.....
- அடித்தளம் பலமாக இருக்கவேண்டும்.இது ஆரம்ப நிலையிலேயே
- பொறுமையின்மை(பெற்றோர்/குழந்தைகள்)
- கவனக்கலைப்புகளை கண்டறிதல்
- டீச்சர்களுக்கும் கவனக்கலைப்புகள்
- பாடச் சுமை
- வாய்விட்டுப் படித்தல்
- தனி கவனம் இல்லாமை
- கூலிக்கு மாரடிப்பது
கவனக்கலைப்பு: டிவி,ரேடியோ,டிவிடி,நண்பர்கள்,வீட்டு உறுப்பினர்கள், ஷாப்பிங், குர்குரே இத்யாதிகள்
0
முதல் பகுதி இங்கே
தற்காப்பும் அதன் அவசியமும்
என் முந்தைய பதிவில் ஒரே நாளில் இரு கயவர்களையும் இரு நல்லவர்களையும் எதிர் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன்.
இன்றும் கூட கராத்தே, ஜூடோ, முகத்தில் குத்துவது, அல்லது கால்களுக்கு இடையில் உதைப்பது போன்றவற்றை தற்காப்பு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். கராத்தே ஜூடோ போன்றவை தன்னம்பிக்கை வளரும். உண்மைதான். ஆனால், நிதர்சனத்தில்??? இதெல்லாம் சினிமாவிலோ டீவீ சீரியல்களிலோ பலன் கொடுக்கலாம். அரிதாகவே, நிஜத்திலும் சில நேரங்களில் உதவலாம்...
ஒருவேளை அடிபட்டவன் ஆக்ரோஷமடைந்து அடித்தவள் மீது பாய்ந்தால்? இவளை விட பலம் பெற்றவனாக இருந்தால்? அவனும் கராத்தே ஜூடோ தெரிந்தவனாக இருந்தால்? ஒருவனுக்கும் மேற்பட்டவர் இருந்தால்?
அடிதடி சண்டை போடுவது, வாயால் கத்திக் கொண்டு உதவி கேட்டுக் கொண்டு நிற்பதை விட, துரிதமாக ஆபத்து நிறைந்த அந்த இடத்திலிருந்து ஓடுவது / வெளியேறுவது எப்படி என்று யோசித்து செயல் பட வேண்டும். எதிராளியை அடிப்பது நிச்சயம் பல நேரங்களில் உதவுவதில்லை. இது வன்மமாகக் கூட மாறி மென்மேலும் ஆபத்துக்களை உருவாக்கலாம். ஆபத்தை எதிர்கொண்டு இன்னொரு ஆபத்தை உருவாக்குவதை விட ஆபத்தை தவிர்ப்பது, அந்த இடத்தை விட்டு ஓடி விடுவது சாலச் சிறந்தது.
தனித்திருக்கும் பெண்களைச் சீண்டும் ஆண்களுக்குப் பெரும்பாலும் பாலியல் நோக்கமே இருக்கிறது. யாரேனும் உங்களைத் தாக்கியோ / மிரட்டியோ உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழலில், நீங்கள் இடத்தை விட்டு விலகிச் செல்லும் பட்சத்தில் அவன் வேறு ஒருவரை நாடுவானே தவிர, சினிமா மாதிரி உங்களையே துரத்திக் கொண்டிருக்க மாட்டான். அவனது பாலியல் நோக்கம் (வெறி) கூட அந்த நிமிட மனப் பிழற்வுதான். ஏற்கனவே உணர்ச்சி வசத்தில் இருக்கும் அவனுக்கு அவன் குறிக்கோளை அடைய என்ன வேண்டுமாலும் செய்துவிடும் மனப்போக்கிலேயே இருப்பான். அதனால் உங்கள் மனதுக்கு ஆபத்து என்று படும் பட்சத்தில் 'வீரம்' காட்டுவதை விட 'விவேகமாக'வும் அதி வேகமாகவும் செயல்படுங்கள். எதிராளியின் பார்வையில் இருந்து மறைவதை முதலில் முயற்சியுங்கள். தனிமையான இடத்திலிருந்து கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று விடுங்கள். வேறு வழியே இல்லாத பட்சத்திலேயே சண்டையில் இறங்கலாம்.
தற்காப்பு என்றால் என்ன? தற்காப்புக்கு முதல் தேவை மன உறுதியும் சமயோசிதமும். இவை இரண்டும் ரொம்பவே அவசியம். ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மன உறுதி இல்லை என்றாலோ, ஆபத்து வரும் சமயத்தில் துரிதமாக முடிவெடுத்து, தகுந்தவாறு செயல் பட முடிய வில்லை என்றாலோ தற்காப்புப் பயிற்சிகளால் பயனேதும் இல்லை. உங்கள் உள்ளுணர்வுகளின் ஒவ்வொரு செய்திக்கும் செயல் படுங்கள். பெரும்பாலும் உள்ளுணர்வு தவறுவதே இல்லை.
இது முன் பின் தெரியாத அன்னியனால் வரும் ஆபத்தினை சமாளிப்பது. சரி. டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும், அல்லது பெரும்பாலும் எல்லா வயதுடைய பெண்கள் சிலருக்கு அவர்கள் நண்பர்களால் / மிகவும் நன்கறிந்த ஆண்களாலேயே ஆபத்து நேர்கிறது. அப்போது என்ன செய்வது?
பாலியல் தாக்குதல் எல்லாமே பெரும்பாலும் அந்த நிமிட மனப் பிழற்வு தான். ஆனால் ஏற்கனவே நன்கறிந்த ஆண்களால் தாக்குதலுக்கு ஆளாவது அந்த ஆணால் 'முன்பே' திட்டமிடப்பட்டது. அந்தப் பெண்ணின் தனிமை, வீட்டில் எப்போது யாரும் இருக்கமாட்டார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே அறிந்திருப்பான். இம்மாதிரி நிகழ்வுகள் எப்போதும் ஒரு அறையோ இல்லை பெண்ணின் வீட்டிலேயோ கூட நடக்கலாம். இதனால் இம்மாதிரிச் சூழ்நிலையில் முடிந்தவரை பதட்டப் படாமல், புத்திசாலித்தனமாகப் பேசி கதவுகளைத் தாண்டி வெளியேற முயற்சியுங்கள். தோற்று விட்டோம் என்று நாமே நம்பாத வரை, யாராலும் நம்மை வீழ்த்த முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள். எந்நிலையிலும், இம்மாதிரிச் சூழலில் உங்கள் கோபத்தையோ, இயலாமையோ வெளிக்காட்டுவது உங்களைத் தோற்கச் செய்யும்.
உங்களைக் கோபமூட்டுவதன் மூலம் அவன் நோக்கம் எளிதில் நிறைவேறும் என்பதை எதிராளி நன்கறிவான். உங்கள் கோபம் உங்கள் "ரெஸ்பான்ஸ்" ஆகிறது. அதே போல அவனை சண்டைக்குத் தூண்டுவதோ, கோபமூட்டுவதோ உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதனால் உணர்ச்சி வசப்படாமல், மெதுவாக அத்தகைய இடத்திலிருந்து வெளியேறுவதை குறித்தே சிந்தித்து செயல்படுங்கள்.
வழிப்பறி, திருடன் போன்றவரிடம் மாட்டிக் கொண்டால் அவனிடம் பர்ஸ் நகைகள் போன்றவற்றை கொடுத்து விடுவது தப்பிப்பது சாலச் சிறந்ததாகும். அவன் நோக்கம் பணம் பொருள் என்பதே. இவை சண்டைபோடுவதால் அவன் நோக்கம் மாறிவிடக்கூடும். பொருளை இழப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
இம்மாதிரி தாக்குதலுக்கு ஆளாகும் போது முடிந்த வரை உங்கள் உயிர், சுய மரியாதை, ஆகிவற்றைக் காப்பதிலே முழு கவனமும் இருக்கட்டும். தாக்குபவனைத் திருப்பித் தாக்குவது பெரும்பாலும் அவனை ஆக்ரோஷப்படுத்துகிறது. நீங்கள் பாதுகாப்பென்றும் கருதும், உள்ளுணர்வு நம்பும் எந்த ஒரு அன்னியரிடமும் உதவி கேட்கத் தயங்காதீர்கள். அதற்காக முன் பின் தெரியாத அன்னியரின் கார் போன்ற வாகனங்களில் முழுமையாக நம்பி, தனியாகப் பயணிக்க வேண்டாம்.
உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிருங்கள் - முழுமையாக.
- தனியாக பயணிக்கும் போது, அந்த இடம், பயணிக்கும் சாலைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருங்கள்.கூட்டத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தனிமை படுத்திக் கொள்ளாதீர்கள். இலக்கிலாத வழிகளில் பயணிக்க வேண்டாம். அதே போல, நெடுந்தொலைவு / ஏற்கனவே போகாத இடங்களுக்கு தனியாக பயணிக்க வேண்டாம் / தவிருங்கள்.
- எப்போதும் குறுக்கு வழிகளில், இருட்டான சாலைகள், யாரும் பயன்படுத்தாத சந்துகளில் செல்லாதீர்கள்.
- வீட்டில் இருந்தால் உங்கள் பெற்றோர், ஹாஸ்டல் / விடுதி போன்ற இடங்களில் இருந்தால் உங்கள் தோழிகளுக்கு நீங்கள் எங்கே போகிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதை தெளிவாகக் கூறுங்கள்.
- டேட்டிங் (dating) போன்றவைகளுக்குச் சென்றால், முடிந்தவரை உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம் யாருடன் போகிறீர்கள் என்பதை பகிருங்கள். என்னதான் அந்த நண்பர் நம்பகமானவராக இருந்தாலும், தனிமையில் இருக்கும் போதோ, டேட்டிங் செல்லும் போதோ, வெளியிடங்களில் / மூடிய அறைக்குள் குளிர் பானங்களை அருந்த வேண்டாம் / உணவு உட்கொள்ள வேண்டாம்.
- ஹாங்-அவுட் (hang-out), ஆடல்/பாடல் நிகழ்ச்சிகள், திரையரங்குகள், விருந்துகள், போன்ற பெருந்திரளான மக்கள் வரும் பொதுவிடங்களுக்குப் போகும் போது முழுமையான உடையணிந்து (பெண்கள் மன்னிக்க, ஆனால் கவனம்) செல்லவும். நடைமுறையில் உடல் பாகங்கள் தெரியுமாறு உடையணிந்த பெண்களே அதிகளவில் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இம்மாதிரி இடங்களில் தான் வாய்ப்பு தேடி அலையும் கயவர்கள் அதிகம் நடமாடுகிறார்கள். சமூகம் / சில ஆண்கள் மாறவில்லை, மாறவேண்டும், என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதுவரை, நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது நலம். அதே போல, நீங்கள் இருக்கும் குழுவினரோ, அல்லது உங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் நபர்களோ (ஆண்கள் பெண்கள் இருபாலாரும்தான்) பொறுப்பற்ற அல்லது வரம்பு மீறிய பேச்சுக்கள் அல்லது செயல்களில் ஈடுபட்டால், வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று விடுங்கள். ஆபத்து வரும் வரை காத்திருக்க வேண்டாம். இது உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைத் தடுக்கும்.
- ஆங்கிலத்தில் vulnerable target என்பார்கள். அதாவது எளிதில் தாக்கக்கூடிய இலக்கு. இவர்களைத் தேடித்தான் "அவர்கள்" அலைவார்கள். இவர்கள் அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். எப்படி? நண்பர்கள் அல்லாத அன்னியர்களோடு - தொட்டு பேசுவது, அவர்கள் அளிக்கும் மது / குளிர் பானங்கள் / உணவுகளை ஏற்பவர்கள், இவர்களை மிக விரைவிலேயே தாக்குவார்கள். உங்கள் தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் வெளிக்காட்டுங்கள். அவமரியாதையான / மரியாதைக்கு குறைவான பேச்சுக்களை ஒரு போதும் அனுமதிதோ சமரசம் செய்தோ பொறுத்துக் கொள்ளாதீர்கள். "உங்கள் எல்லையை மீறவேண்டாம்" என்று முதலிலேயே பொறுமையாக அதே சமயம் உறுதியான குரலில் கூறி விட்டால், 99% ஆபத்துக்களை நீங்கள் முளையிலேயே கொன்றதாக ஆகிறது. பெரும்பாலும் அப்போதே 'கயவர்கள்' வேறு நபரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். (ஐயோ! அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்)
- அம்மாக்களே!!! தயவு செய்து பதிமூன்று வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கே ஓரளவு விபரம் தெரியும் வரை, சினிமாவில் அணிவிப்பது போன்ற உடைகளை (முதுகு முழுதும் திறந்து / தொப்புள் தெரியுமாறு / மினி போன்ற உடைகள்) அணிவித்து மகிழ வேண்டாம். அதுவும் பொதுவிடங்களில், பேருந்துகளில் பயணிக்கும் போது, யாரேனும் தவறான எண்ணத்தோடு bad touch செய்தால் பாவம் குழந்தைகளுக்குச் சொல்லவும் தெரியாது. நீங்களும் கண் கொத்திப் பாம்பாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா? பயணங்களில் பான்ட் ஷர்ட் / சுடிதார் போன்ற எளிய பாதுகாப்பான உடைகளையே நீங்களும் அணியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் அணிவித்துப் பழக்குங்கள். மற்ற உடைகளை வீட்டிலோ இல்லை மிகவும் நம்பிக்கையான இடங்களுக்கோ போகும் போது அணிவித்து மகிழுங்கள்(!!).
- கைபேசியில் shortcut program-கள் செய்து ஒரே நம்பரை அழுத்துவதனால் பெற்றோர் / கணவர்/உறவினரை அழைக்கும் வண்ணம் ஏது செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
- உங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து, முதல் முறையே, உங்கள் பெற்றோர் / பள்ளி / கல்லூரி / போலீஸ் ஆகியவர்களிடம் பகிர / முறையிட (complaint) தயங்காதீர்கள். யாரும் தப்பா நினைப்பாங்களோ அல்லது நம்மை கெட்டுப் போனவள்-ன்னு நினைச்சிருவாங்களோ அல்லது "ரொம்ப நெருங்கிய உறவுக்காரர் / நண்பர் ஆவாரே.. அவர் உறவு / நட்பு பிரிஞ்சுடுமோ" என்றெல்லாம் வீண் கற்பனை செய்து பயப்படாதீர்கள். (பெற்றோரே. நீங்களும் இத்தகைய குறைகளைக் காது கொடுத்து கேளுங்கள். உங்கள் பெண்ணை முழுமையாக நம்புங்கள்)
- முறையான தற்காப்புக் கலை ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஓடிப் போய் தப்பிக்க முடியாத நிலையில் கை கொடுக்கும்.
உங்கள் குழந்தைகளுக்குப் பாலியல் குறித்த அந்தந்த வயதிற்கேற்ற செய்திகளை மெல்ல மெல்ல கொடுத்துக் கொண்டே இருங்கள்.
"பாய்ஸ் ஏம்மா பாய்ஸ்ஸா இருக்காங்க. அவங்களும் ஏன் கேர்ள்ஸா இல்ல? அவங்களாம் ரவ்டீஸ்ஸா?" என்ற கேள்விக்கு ஒரு தாயாக / தந்தையாக என்ன பதில் அளிப்பீர்கள்?
நான் "ரவுடின்னா என்னம்மா?" என்றேன்.
"அடிப்பாங்க. கெட்ட வார்த்தை சொல்வாங்க. சாக்லேட் ஸ்நாக்ஸ் எல்லாம் யாருக்கும் ஷேர் செய்யவே மாட்டாங்க... அவங்களே ஸ்விங்-ல (ஊஞ்சல்) விளையாடிண்டே இருப்பாங்க. அவங்கதான் ரவ்டீஸ் ..." என்றாள்.
"அப்பா பாயா கேர்ள்-ளா?" என்றேன்
"பாய்தான்...." என்றாள்.
"தாத்தா ?"
"தாத்தாவும் பாய்தான் - பின்னல் இல்ல ...வேஷ்டி கட்டிகாரங்க, பான்ட் ஷர்ட் போட்டுக்கறாங்க."
யோசிக்க ஆரம்பித்தாள் "அப்பா தாத்தால்லாம் ரவ்டீஸ் இல்லம்மா." என்றாள். கொஞ்ச நேரம் கழித்து "ஆனா விஷால்-லும் நிஷாந்த்-தும் இருக்கான்ல ... இவங்கதான் கேர்ள்-சை அடிப்பாங்க. ஸ்நாக்ஸ்-சை எல்லாம் பிடுங்கி சாப்ட்ருவாங்க... மிஸ் அடிச்சாக் கூட பயப்படவே மாட்டாங்க. இவங்க மட்டும் தான் ரவ்டீஸ் மா... "
(உடனே ஸ்கூல் மிஸ்ஸிடம் பேசி ஸ்நாக்ஸ்/அடிதடி பிரச்சினையை ரிப்பேர் செய்தாகி விட்டது. ப்ரைமரி ஸ்கூல் மிஸ்ஸுகள் ரொம்ப பாவம்ங்க )
ஒரு முறை என் கணவரின் சக பணியாளருக்கு குழந்தை பிறந்திருந்தது. பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்ற போது தர்ஷிணியும் வந்திருந்தாள். அங்கு வந்திருந்த ஒருவர் "என்ன குழந்தை" என்று கேட்டார். குழந்தையின் தாய் "கேர்ள் சைல்ட்" என்றார். தர்ஷிணி மெல்ல என் காதில் "பேபிக்கு பின்னல் தோடு எல்லாம் இல்லையே? பாய் மாதிரி மொட்டையா இருக்கே. எப்படிம்மா பொண்ணுன்னு கண்டு பிடிச்சா அவ அம்மா?" என்றாள்.
000 -- தொடரும் -- 000
அடுத்து:
3. ஆபத்து என்று எப்படி அறிவது?
4. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
5. கற்பழிப்புக்கு ஆளானால்?
(நான் எதையும் தவறாக / தவற விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தலாம். பிறரை அவமதிக்காத / புண்படுத்தாத / ஆரோக்கியமான விவாதங்கள் செய்யலாம்.)
.
பெண்கள் பெண்கள்தானே. மனிதர்கள் தானே. எதற்கு தேவதை பட்டம் எல்லாம்? நற்குணமெல்லாம் தேவைதான். ஆனால் அடக்கம் அடக்கம் என்று "அடக்கம்" பண்ணும் அளவுக்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவையா? சிலர் தேவதைகளாகவும், தெய்வத்தின் பிரதிபிம்பமாகவும், தியாகத்தின் உருவம்,பொறுமையில் பூமி மாதா,அவள் அடக்கத்திற்கு கோவில் கட்டிக் கும்பிடலாம், செதுக்கி வைச்ச சிலை,அழகி, பேரழகி, சுண்டினா ரத்தம் தெரியும் சிகப்பு, நீ என் தேவதை, வாயே திறக்கமாட்டாள் - ரொம்ப நல்லவ, போன்றவைகள் மீதான மயக்கம் இன்னும் போகவில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அழகு, அடக்கம், பொறுமை, தியாகம் போன்ற குணங்களை பெண்களுக்கே மொத்த குத்தகையாக கொடுத்து விட்டாமாதிரியான மூளைச்சலவைகளை.
பல வருடங்கள் முன் செனடாப் ரோடு பயங்கரத் தனிமையான சாலை. இதை தினமும் இரவு எட்டரை மணி வாக்கில் பயன்படுத்த வேண்டி இருந்தது. அதுவும் இருசக்கர வாகனத்தில். ஒரு நாள் இரவு பத்து மணியாகி விட்டது - அலுவலகத்தில் மறுநாள் ஒன்பது மணிக்கே மார்கடிங் மீட்டிங் துவங்குவதால் எல்லாவற்றையும் தயார் செய்து வைக்க நேரமாகி விட்டது. ஒரு குண்டு தைரியத்திலும், ஈவ் டீசிங் போன்ற முன் அனுபவம் எதுவும் இல்லாத அனுபவக் குறைபாட்டாலும், அன்று வீடு திரும்புகையில், "என் வண்டிலையே போய்க்கறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
இரு வாகனங்கள் ஒன்று கார், இன்னொன்று மோட்டார் பைக், இரண்டும் ஏறத்தாழ மவுன்ட் ரோடு கருமுத்து மாளிகை அருகிருக்கும் சிக்னலில் இருந்து பின்தொடர்ந்து கொண்டே வந்தது. பைக்கில் வந்தவன் "ஏ கைனடிக்.... நில்லுடி" என்று கூறிக்கொண்டே கிட்ட வருவதும் பின்தொடர்வதுமாய் இருந்தான். காரும் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தது. எனக்கோ படபடப்பு அதிகமானது. உண்மையிலேயே பயமாகத்தான் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே சிறிது வேகப்படுத்தினேன் வாகனத்தை. அடையார் பிளைஓவர் அப்போது இல்லை. ஐ.டீ. காரிடாரும் இல்லை. போலீசாரும் யாரும் கண்ணில் படவில்லை. அடையார் சர்ச் எதிரில் வருகையில் மோட்டார் பைக்காரன் என் கைனடிக் ஹோண்டாவின் பின் சீட்டில் கையால் தட்டினான். எனக்கு பதற ஆரம்பித்து விட்டது. எங்கிருந்து துணிவு வந்ததோ தெரியவில்லை, வண்டியின் வேகத்தைக் குறைத்து இடது காலால் அவன் வண்டியை எட்டி உதைத்தேன். கீழே விழுந்து விட்டான். காரும் அவன் அருகில் நின்று விட்டது. நான் பின் என்ன நடந்தது என்று கூட பார்க்காமல் வேகமாய் அடையார் பாஸ்கின் ராபின் ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்து விட்டேன். பின் அங்கிருந்த இருவர் துணையோடுதான் வீடு சென்றேன்.
இந்நிகழ்வை இப்போது யோசித்தால் கூட அன்றும் இன்றும் என்றும் தனியாய் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து விளைப்பதோ தீங்கு செய்யவோ, எல்லைகளை மீறுவது கயவர்களுக்கு எளிதாக இருக்கிறது என்று நினைப்பேன். அன்று பாஸ்கின் ராபின்ஸ் போன்ற இரவு நேரக் கடையோ, இல்லை அங்கிருந்த இரு ஆண்கள் நல்லவர்களாகவோ இல்லாதிருந்தால்? நம் பெண்கள் இன்றும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா?
இவள் மூக்கைத் தாண்டியும் அடுத்தவர் தொடுவதையும், சீண்டல்களையும் ஏன் இப்படிச் சகித்துக் கொள்ள வேண்டும்? எதற்காகப் பயப்படுகிறாள் இவள்? ஈவ் டீசிங், அலுவலகத்தில் பாஸ் அல்லது சக பணியாளரின் சூசகமான உள்ளர்த்தம் பொதிந்த பேச்சுக்கள், உடல்/உளரீதியான அல்லது பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் போதும் கூட வாய் மூடி ஒதுங்கி போவது, இப்படி தவறு செய்பவருக்கு ஊக்கம் கொடுப்பது போல ஆகி விடாதா? "உன் செய்கை எனக்கு பிடிக்கவில்லை" என்று சொல்ல / அவர்கள் செயலைத் தடுக்க எதற்குத் தயக்கம்?
இக்கட்டான இது போன்றச் சூழலில் பெண்களாகிய நாம், நம்மை நாமேப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு ஆபத்து நேர்ந்தால் நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மன ரீதியாகத் தயாராக இருக்கிறோமா?
வரும் பதிவுகளில் காணலாம்.
1. தற்காப்பும் அதன் அவசியமும்
2. ஆபத்து என்று எப்படி அறிவது?
3. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
4. வன்புணர்வு/பலாத்காரத்துக்கு ஆளானால்?
.
குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டும் உடல் சோர்வை வெளிக் காட்டத் தெரியாமலும் சொல்லவும் தெரியாமல் இருக்கிற போது, குழந்தைகளுக்கு ஜலதோஷம் / சளி பிடித்திருக்கு என்று பெற்றோராகிய நாம் எப்படிக் கண்டு பிடிப்பது?
- குழந்தையின் கண்கள் கலங்கலாகவும், நிறம் / ஒளி குறைந்தும் இருக்கும்
- வழக்கத்திற்கு மாறாக அழுகை அல்லது மகிழ்ச்சி குறைந்து இருக்கும்
- மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைபட்ட மூக்கு
- தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல்
- உடல் வெதுவெதுப்பாக இருக்கும் / ஜுரம் இருக்கும்
- தலையை உயர்த்தி பிடித்து வைத்துக் கொண்டால் சௌகரியமாக உணரும்.
- பசி குறைந்து இருக்கும் / சாப்பிட மறுக்கும்
- சோர்வாய் இருக்கும், தூங்கி வழியும், அதே சமயம் தூங்கவும் மறுக்கும்
- நெஞ்சில் / முதுகில் கைவைத்துப் பார்த்தால் மார்பில் சளி கட்டிக் கொண்டு கர்கர் என்று ஒலி கேட்கும். இதனால் ஆஸ்துமா / இளைப்பு நோய் என்றெல்லாம் பயம் கொள்ள வேண்டாம்.
- விக்ஸ் அல்லது யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை நெஞ்சிலும் முதுகிலும் மட்டும் தடவி விடவும். நெற்றியில் மூக்கில் தலையில் என்று சகட்டு மேனிக்கு எல்லாம் தடவ வேண்டாம்.
- கை, கால், நெஞ்சு, முதுகு, காது போன்ற உடல் பாகங்களை கெட்டியான துணி அல்லது பழைய காட்டன் புடவையால் நன்றாக சுற்றி வையுங்கள். சிறிது வளர்ந்த குழந்தை என்றால் ஸ்வெட்டர் போன்றவற்றை அணிவிக்கலாம். கம்பளியால் போர்த்துவதும் உதவும். ஆனால் முகத்தை மூடிக் கொண்டு விடும் அபாயம் இருப்பதால், பழைய காட்டன் புடவையை உபயோகித்தல் நலம்.
- வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு சிறிய துண்டை (தோரயமாக அரை இன்ச் அளவு) நறுக்கி ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டு சப்பாத்திக் கல்லில் நசுக்கி, பின் ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் பிழிந்தால் மூன்று நான்கு சொட்டு இஞ்சிச் சாறு கிடைக்கும். இதை மூன்று சொட்டுத் தேனில் (டாபர் தேன் சுத்தமாக இருக்கிறது) குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுங்கள். உடனேயே இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் நின்று விடும். இதை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள்.
- இஞ்சிச் சாரை பிழிந்து ப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டாம். உடலுக்கு கெடுதல். அவ்வப்போது புதிதாக சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
- எப்போதும் கைவசம், ஜலதோஷத்திற்கு என்று ஏற்கனவே மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட மருந்து வைத்திருக்கவும். அதை ஒரே ஒரு டோஸ் தரலாம். குழந்தைகளுக்கான பாராசிடமால் மருந்தும் அப்போதைக்கு நிலைமையைக் கட்டுப் படுத்த உதவும். குழந்தையின் தலை பாரத்தைக் குறைக்கும்.
- சிறிது வளர்ந்த குழந்தை (ஒரு வயதுக்கு மேல்) என்றால் வெஜ் கிளியர் சூப் (முட்டைகோஸ் மற்றும் சோளமாவு (cornflour) போட்டு உப்பு-மிளகு தூவி கொடுக்கலாம். ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தை என்றால் வெது வெதுவென்றிருக்கும் (ஜாக்கிரதை) வெந்நீரில் சிறிது தேன் விட்டு டீஸ்பூனால் கொடுக்கலாம். மிகவும் கவனமாகக் கொடுங்கள்.
- அல்லது பாலில் ஒரு சிட்டிகை (pinch) மஞ்சள் பொடி மற்றும் ஒரே ஒரு சிட்டிகை மிளகுத் தூள் போட்டுக் கொடுக்கலாம்.
புதிய மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நீங்கள் ஏற்கனவே குழந்தைக்கு கொடுத்திருக்கவில்லை என்றால், என்னதான் அவை குழந்தைகளுக்கான மருந்துதான் என்றாலும், தயங்காமல் மருந்துகளைப் பற்றி அந்த மருத்துவரிடம் தீர விசாரித்து, மருந்தின் தீவிரத்தன்மை (strength of the medicines to the child) பற்றி நன்கு அறிந்து, உங்களுக்கு (மனதிற்கு) திருப்தி ஏற்பட்ட பின்பே குழந்தைக்கு கொடுங்கள். தான் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பற்றி உங்களுக்கு விவரிப்பது மருத்துவரின் கடமை. அவர் தப்பா நினைச்சுப்பாரோ என்று ஒன்றும் கேட்காமல் வந்து விடாதீர்கள்.
பெரும்பாலும் தாய்க்கு instinct என்ற உள்ளுணர்வு குழந்தைக்கான இடர்களை உணர்த்தும். எந்த புதிய மருந்தையும் ஒரு டீஸ்பூன் (தாய்/தந்தை) தானே ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்து பின்பே குழந்தைக்கு கொடுக்கவும்.
பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளில் புதியதாக ஏதும் இருந்தால், குழந்தைக்கு கொடுக்கும் முதல் டோஸ் பாதிக்கும் குறைவாக கொடுத்து, நான்கு மணிநேரம் குழந்தையை நன்றாக கவனித்து, பக்க விளைவு ஏதும் இல்லையா என்று அறிந்த பின்பே முழு டோசும் கொடுக்கவும்.
பக்க விளைவுகள் இருப்பதற்கான அறிகுறிகள்:
- பெரும்பாலும் முதலில் விரல் நகங்களில் வழக்கமான நிறம் மாறி, கறுத்துப் போகும் அல்லது நிறம் அடர்த்தியாகும்.
- கை கால்கள் ஜில்லிட்டு விடும்
- காது மடல்கள் சூடாகி விடும்.
- குழந்தை வாந்தி எடுக்கும்
- உடலில், கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தடித்து, சிவந்து போகும். அரிக்கும், குழந்தை அந்த இடங்களைச் சொரிந்து விடும்.
- உடலில் கட்டிகள் பொரிகள் தோன்றலாம்
- குழந்தை சிறு நீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டு அழும்
- பேதி ஏற்படக் கூடும்
===============================
new update: மேலும் சில தகவல்கள் ஹுசைன்னம்மா கேட்டதால் பின்னூட்டத்தில் கொடுத்தேன். ரீடரில் படிப்பவர்களுக்காகவும், பின்னூட்டங்கள் படிக்காதவர்களுக்கும், இங்கே கொடுக்கிறேன்.
===============================
/// ஃபிரிட்ஜில் ஒருவாரம் வரை வைத்துக் குடித்து வருகிறார். ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது அல்ல என்று சொன்னதால் ஒரு குழப்பம், அதான்.///
இஞ்சிச் சாறு சீக்கிரம் புளித்து விடும். அப்போது அதில் இருந்து சுரக்கும் அமிலம் வயிற்றிற்கு கேடு விளைவிக்கும், மேலும் இஞ்சியின் உண்மையான மருத்துவ குணம் மாறுபடும்.
அதிக கடினமான (சுக்கு அல்ல), கனமான, தோல் சுருங்கி இருக்கும், கொளகொளவென்றிருக்கும், மிகவும் பிஞ்சாக, சின்னதாக இருக்கும் இஞ்சியை, மருத்துவ குணம் இல்லாமலோ இழந்தோ இருப்பதால், உபயோகிக்கக் கூடாது.
இஞ்சியை துண்டுகளாக மதிரா (ஆல்கஹால், வயின்,ஸ்பிரிட்) அல்லது ஷெர்ரி போன்றவற்றில் இட்டு கண்ணாடிக் குடுவை / கண்ணாடி ஜாடியில் பாதுகாக்கிறார்கள்.
இஞ்சித் துண்டுகளை வெல்லம் / சர்க்கரைப் பாகு / frozen ginger போன்ற வகைகளிலும் பாதுகாக்கலாம்.
நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.
பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.
வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.
கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?
இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக, இஞ்சிச் சாரை பாதுகாக்கும் முறைகள் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. http://www.ehow.com/how_5692283_preserve-ginger-juice.html
எப்படி இருந்தாலும், ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு, பழைய / frozen வகை உணவுகளை முடிந்த வரை / அறவே தவிர்க்கலாம்.
// இஞ்சி+எலுமிச்சைச் சாறு தினமும் ஒரு டீஸ்பூன் போல அருந்தி வந்தால் சளி பிடிக்காது //
உண்மைதான். ஆனால் ஒரு தம்ளர் சாதாரண அறை வெப்பநிலையில் (normal room temperature) உள்ள தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றிற்கு மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு என்ற அளவே பயன்படுத்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. வெறும் வயிற்றில் பருகுவதால், இதில் ஒரு பின்ச் (சிட்டிகை) சர்க்கரை மற்றும் ஒரு பின்ச் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.
இரவில் இஞ்சி சாப்பிடக் கூடாது. வாயுக் கோளாறு, மற்றும் ஜீரணக் கோளாறுகள் வரும்.
///இஞ்சிச் சாறின் அடியில் தேங்கும் வெண்ணிறப் படலம் அதைப் பொதுவாக நாம் நீக்கிவிட்டுத்தான் குடிப்போம். ஆனால் ஒரு தோழி, அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் என்று சொன்னார்.///
கால்சியம் எல்லாம் இல்லைங்க. அது ஸ்டார்ச் / ginger starch. சாறாக குடிக்கும் போது அதைப் பயன்படுத்தக் கூடாது.
இஞ்சிச் சாற்றை பிரிட்ஜில் பாதுகாத்தால் இந்த வெள்ளை வண்டலை (ஸ்டார்ச்) நீக்கி விட்டே பாதுகாக்க வேண்டும். fermentation-ஆவதற்கு ஸ்டார்ச் உதவுவதால், கண்ணாடிக் குடுவை வெடிக்கவும் வாய்ப்புள்ளது.
மாறாக இந்த ஸ்டார்ச்சை மீன் வறுக்கும் போதும், சூப் போன்றவற்றிலோ கலந்து பயன்படுத்தலாம். இந்த வெள்ளை வண்டலை காயவைத்து பாட்டிலில் வைத்தும் பயன் படுத்தலாம். மொலாசெஸ் போன்றவற்றில் இஞ்சியை பயன்படுத்தவே கூடாது.
நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.
பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.
வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.
கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?
அனைவருக்கும் பேரன்ட்ஸ் கிளப் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
.
ஈகைத் திறன்
கோதையூர் என்ற ஒரு ஊரை வெகு நாட்களுக்கு முன் கோதண்டராமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.
மன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அதோடு ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எல்லாம் உடனுக்குடன் செய்து கொடுப்பார். கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குவார். இதனால் மன்னரின் புகழ் எல்லா நாட்டிலும் பரவத் தொடங்கியது.
வேங்கை நாட்டு மன்னர் வேழவேந்தன் கோதண்டராமனைக் கண்டு பொறாமையடைந்தார். அவரும் என்னைப் போன்ற மன்னர்தானே. அவருக்கு மட்டும் எப்படி இந்தப் பேரும்புகழும் கிடைத்தது? என்று வியப்போடு தனது மந்திரியாரான காளதீபனிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்.
மந்திரியார் காளதீபன் வேழவேந்தரின் கஞ்சத்தனத்தையும், கொடூர குணத்தையும் நன்கு அறிவார்.
நம் மன்னரைத் திருத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவர். மன்னரை வணங்கி அரசே! மன்னர் கோதண்டராமனுக்கு தாங்களும் இணையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஏற்படாத பேரும், புகழும் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க நீங்களும், நானும் மாறுவேடம் அணிந்து அவர் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நான் சொன்னபடி நீங்களும் அங்கே நடிக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நாம் இன்றே கோதையூருக்குப் புறப்படலாம் என்று கூறினார். மன்னர் வேழவேந்தனும் ஆர்வத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் ஏழை விவசாயியைப்போன்று மாறுவேடம் அணிந்து கொண்டு கோதையூருக்குப் புறப்பட்டார்கள்.
அரண்மனையில் நுழையும் நேரம் காவலர்கள் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார்கள்.
"ஐயா! நாங்கள் இருவரும் மிகவும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கின்றோம். மன்னரிடம் உதவி பெற்று எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளோம்" என்று கூறினார் மாறுவேடத்தில் இருந்த காளதீபன்.
காவலர்கள் இருவரையும் தர்பாருக்கு அழைத்துச் சென்றார்கள்.
அந்த நேரத்தில் தர்பாரில் மன்னர் இல்லை. மன்னர் அவசர வேலை காரணமாக தன் அறையைவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.
காவலர்கள் மன்னரை வணங்கி அவர் காதருகே ஏதோ கூறினார்கள்.
மன்னர் புன்னகைத்தபடி "நண்பர்களே! நீங்கள் இருவரும் என்னிடம் உதவிபெற வந்திருப்பததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதோ எனது முத்துமாலை இரண்டை உங்கள் இருவருக்கும் பரிசளிக்கிறேன்" என்று கூறியவாறு தன் கழுத்தில் கிடந்த இரண்டு முத்து மாலைகளையும் மாறுவேடத்தில் இருந்த மன்னர் வேழவேந்தனிடமும், மந்திரியார் காளதீபனிடமும் கொடுத்து விட்டுச் சென்றார்.
நினைத்த மாத்திரத்தில் தர்மம் செய்கின்ற மன்னரின் கொடைத் தன்மையைக் கண்டு மன்னர் வேழவேந்தன் வியப்புற்றார்.
இருவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மந்திரியார் காளதீபன் அரசே இப்போது கவனித்தீர்களா மன்னர் கோதண்டராமனின் தர்மம் செய்யும் முறையே, அவரை புகழ் உச்சியில் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னருக்கு ஈகை திறன் மிகவும் முக்கியம் என்றார்.
மன்னர் வேழவேந்தன் அன்றுமுதல் தன்னுடைய பொறாமை எண்ணத்தையும் கஞ்சத்தனத்தையும் விட்டுவிட்டார். தன் நாட்டு மக்களுக்கு பல உதவிகளையும் செய்யலானார். மன்னர் வேழவேந்தனின் செயல்களை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
தர்மம் செய்து வாழ்பவர்கள் எல்லா நன்மைகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.
.
அவைகளைப் பார்த்த இறைவன் மனமிரங்கினார். அந்த மலையடிவாரத்தில் அப்பறவைகள் முன் காட்சியளித்தார்.
இறைவனைத் தங்கள் கண் முன்னேக் கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.
பறவைகளே! உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார்.
உடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.
காகமே உனக்கு உனது எண்ணப்படியே வரம் தந்தேன் என்று கூறியவாறு இறைவன் உடனே புறாவைப் பார்த்தார்.
புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது. அன்பும் இல்லாமல், இரக்கமும் இல்லாமல் பலக் கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.
இறைவன் புறாவை வியப்போடு பார்த்தார்.
புறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை அப்படியே என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது. நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே நீ கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்கும் அனைவரும் அதை மதித்து நடப்பார்கள். உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.
காகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்னிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்து அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது.
புறாவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது.
புறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக் கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல்லறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு மதிப்புக் கிடைத்தது. புறாவும் மிகவும் மகிழ்ச்சியோடு தமக்குக் கிடைத்த உணவு வகைகளை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்துக் கொடுத்தது.
ஒரு நாள் பொன்னிறமான இறக்கைகள் கொண்டக் காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தைப் பிடித்துச் சென்று கூண்டிலடைத்து வேடிக்கைப் பொருளாக்கினான்.
வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது பேராசை பிடித்து கீழ் தரமான எண்ணத்தால் இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்தத் துன்பம் நேர்ந்திருக்காதே. இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவரின் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடைவார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.
எண்ணத்தால் எண்ணம் போல் வாழ்க்கை அமைவதால், நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்.
.
சிங்க வேஷம் போட்ட கழுதை
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. பக்கத்துக் கிராமத்திலிருந்து அந்தக் காட்டுக்குள்ள ஒரு கழுதை வழி மாறி வந்திருச்சாம். காட்டுக்குள்ள ஒருத்தர் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு மண் சாலை வழியா நடந்து நடந்து களைச்சுப் போச்சு. தண்ணீர் குடிக்கலாம்முன்னு ஒரு ஓடைப் பக்கம் போனது.
அந்த ஓடைக்கு பக்கத்துல சில வேட்டைக்காரர்கள் வசித்து வந்தாங்க. அவங்க தான் வேட்டையாடிய சிங்கம், புலி, மான் போன்ற சில மிருகங்களின் தோலை எல்லாம் அங்கிருந்தப் பாறைகள் மேலக் காய வைத்திருந்தாங்க.
இதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தோட தோலை எடுத்துத் தன் உடம்பு மேல போத்திக்கிச்சாம். பார்க்க சிங்கம் போலவே இருந்ததுனால, மற்ற மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் போனதாம். மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்துக் கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. மனிசங்களையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து கிராமத்துக்குள்ள போயி சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்திச்சாம். அதோட குரல் அது கழுதைன்னு காட்டிக் கொடுத்திருச்சு. அதுக்குப் பிறகு கழுதைய யாருமே மதிக்கவேயில்லை. யாரும் அதைப் பார்த்துப் பயப்படவேயில்லை.
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.
(ஈசாப் நீதிக் கதைகள் ஆங்கில மூலத்தின் ஆதாரத்தில் சிறிது மாற்றி தமிழில் கூறுவது விதூஷ்)
The Ass in the Lion's Skin
An Ass once found a Lion's skin which the hunters had left out in the sun to dry. He put it on and went towards his native village. All fled at his approach, both men and animals, and he was a proud Ass that day. In his delight he lifted up his voice and brayed, but then every one knew him, and his owner came up and gave him a sound cudgelling for the fright he had caused. And shortly afterwards a Fox came up to him and said: "Ah, I knew you by your voice."
Fine clothes may disguise, but silly words will disclose a fool.
.
உடலினை உறுதிசெய்
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.
குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரே! உமக்கு என்ன நேர்ந்தது! ஏன் குகையை விட்டு இரண்டு நாளாக வெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.
கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது.
சுருண்டு படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்கு என்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா? அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது.
"கரடியாரே! நான் என்ன செய்வது? எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. அதன் காரணமாக உடலும் சோர்வடைகிறது. நாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டே போகிறது" என கவலையுடன் கூறியது.
அதனைக்கேட்ட கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும் அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலைவலுப்படுத்த நீர் துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர். அதனால்தான் உமக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றது.
கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன். என் உடல் நிலை சீராக நீ எனக்கு உதவி செய்வாயா என்று கேட்டது நரி.
நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும். நாம் இருவரும் சிறிது நேரம் உற்பயிற்சி செய்யலாம். என்றது கரடி.
நரியும், கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன.
கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது.
தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரி உணர்ந்தது.
அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? ஏதோ உற்சாகம் நிரம்பியவர் போன்று காணப்படுகின்றீரே என்று கேட்டது.
ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனைப் போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம் மறைந்துவிடும். என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.
அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.
நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
.
ஒற்றுமை வலிமையாம்
ஒரு ஊருல, வயலோரத்தில் அடர்ந்த புளிய மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த புளியமரத்தில் ஏராளமான கொக்குகள் வசித்து வந்தன.
அந்தக் கொக்குகள் பொறாமையின் காரணமாக தங்களுக்குள் "நீ பெரியவனா.. நான் பெரியவனா.." என்று போட்டியிட்டவாறு வாழ்ந்து கொண்டிருந்தன.
வரப்போரமாக நின்று கொண்டு தனித்தனியாகப் பிரிந்து தாங்கள் இரையை தேடி அலைந்தன.
ஒரு நாள் வேட்டைக்காரர் ஒருவர் அந்த புளியமரத்தின் பக்கமாக வந்தார். அவர் பார்வைக்கு கொக்குகள் எல்லாம் தெரிந்துவிட்டன. அதுவும் ஒவ்வொரு கொக்கும் தனித்தனியாக பிரிந்து சென்று இரை தேடிக் கொண்டிருப்பதையும் கண்டார். உடனே தன் வேட்டை துப்பாக்கியை எடுத்து தனித்தனியாக நின்று கொண்டிருக்கும் கொக்குகளை எல்லாம் சுட ஆரம்பித்தார்.
"ஆஹா.. இன்று எனக்கு நல்ல வேட்டைதான். இதோ மூன்று கொக்குகளை சுட்டு வீழ்த்தி விட்டேன். இனி நாளை வேட்டையாட வந்தால் போதும்" என்று மகிழ்ச்சியடைந்தார்.
மூன்று கொக்குகள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டதை கண்ட புளிய மரம் மிகவும் வருந்தியது.
"இந்த கொக்குகளுக்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் இனிமேல் இந்த வேட்டைக்காரனுக்கு மிகவும் கொண்டாட்டமாகவே இருக்கும். தினமும் இங்கு வந்து இந்த கொக்குகளை எல்லாம் வேட்டையாட ஆரம்பித்துவிடுவான். நாம் அதற்கு முன்னர் இந்த கொக்குகளை ஒற்றுமையாக இருக்கும்படி செய்துவிட வேண்டும்" என்று எண்ணியது.
மாலை நேரத்தில் கொக்குகள் எல்லாம் இரை தேடி முடித்து விட்டு மரத்தில் வந்து தங்கத் தொடங்கின. அதுவரையிலும் கொக்குகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த புளியமரம், கொக்குகளைப் பார்த்து, புளியமரம் பேசியது.
"பறவையின நண்பர்களே நெடு நாட்களாக என் மனதில் இருந்து வந்ததை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அதனை கவனமுடன் கேட்கின்றீர்களா?" என்று அன்போடு கேட்டது.
புளியமரம் அன்போடு பேசுவதை கண்டு கொக்குகளும் அதன் பேச்சை கேட்க வேண்டி ஆவலாயின.
"புளியமரமே! உனது கிளைகளில்தான் நாங்கள் எல்லோரும் கூடுகட்டி வசித்துக் கொண்டிருக்கிறோம். உன் நன்றியை மறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாங்கள் உனது பேச்சைக் கேட்க மறுப்பு தெரிவிக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் எங்களிடம் தாராளமாக கூறலாம்" என்றன.
"பறவையின நண்பர்களே! நீங்கள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு வாழ்வதால் உங்களில் மூன்று பேர்கள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டார்கள். இனிமேலும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்தால் வேட்டைக்காரருக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். உங்கள் கூட்டத்தினர்கள் ஒவ்வொருவரையும் அவர் சுட்டு வீழ்த்திக் கொண்டேயிருப்பார். முடிவில் உங்கள் கூட்டத்தினர்கள் எல்லோருமே காலியாகிவிடுவீர்கள். இதனை நன்கு யோசித்து உங்கள் பொறாமை எண்ணத்தை கைவிட்டு ஒற்றுமையோடு வாழுங்கள்" என்று கூறியது.
மறுநாள் வேட்டைக்காரர் கையில் வேட்டை துப்பாக்கியுடன் புளியமரத்தின் அருகே வந்தார். வேட்டைக்காரர் எதிர்பாராத வண்ணம் புளிய மரத்திலிருந்து கொக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக வேட்டைகாரரை நோக்கிப் பறந்தன.
அவரை சூழ்ந்து கொண்டு அவர் கையில் இருந்து வேட்டை துப்பாக்கியை கீழே தட்டிவிட்டு கைகளை பலமாக தம் அலகுகளால் கொத்த தொடங்கின. இன்னும் சில கொக்குகள் அவரின் முகத்தைப் பலமாக தாக்கத் தொடங்கின.
கொக்குகளின் கூட்டமான தாக்குதலுக்குப் பயந்துபோய் வேட்டைகாரர் ஓட்டமெடுத்தார்.
கொக்குகள் எல்லாம் ஒற்றுமையின் வலிமையை உணர்ந்தன. கொக்குள் எல்லாம் மனம் மாறியதைக் கண்டு புளியமரம் மகிழ்ச்சியடைந்தது.
ஒற்றுமையுடன் வாழ்வதால் எந்த தீமையும் நம்மை நெருங்காது.
=================================================================
குழந்தைகள் கற்றுக் கொள்ளும் புதிய வார்த்தைகள்:
வயல்
வரப்பு
கொக்கு
புளியமரம்
வேட்டைக்காரன்
துப்பாக்கி
ஒற்றுமை
கொத்துதல்
அலகு
எதிர்பாராதது
பொறாமை
=================================================================
குழந்தைகளுக்கான தமிழ் ரைம்ஸ் இங்கே தொகுத்துள்ளேன்.
அன்புடன்,
விதூஷ்
.