பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .

"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !


"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"


"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."


"இரேன்ம்மா ..."


அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .


"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .


ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;
ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .


"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."


"ஹேய் ...குட்டி என்னடா இது !" எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.

"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,

"எம்பொண்ணாக்கும்! "

ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))




(காது ,மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர் Prof .கே.கே.ராமலிங்கம் )


காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க காதினுள் உட்புகும் ஒலியானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோத வேண்டும்,ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நுழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டெப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப் படுகிறது,இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது,இதை இந்த வரைபடம் மூலம் தெளிவாக அறியலாம்.
ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து :


நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி வயது வேறுபாடு இன்றி காதுக்குள் வினோதமான சத்தம் கேட்கத் தொடங்கினால் சில நாட்களில் சரியாகி விடக் கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது.அப்படி வினோதமான சத்தம் வரக் காரணம் என்ன என்பதை காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவரை அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு வினோத சப்தங்களுக்கான காரணங்களை உடனே அறிய முயற்சிக்க வேண்டும்.ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல்லாமல் புறக்கணித்து விட்டு ,நாட்கள் பல கடந்த பின் கேட்கும் திறனை முழுமையாக இழக்கும் நிலை வரை காத்திருப்பது புத்திசாலித்தனம் ஆகாதே.

காதுக்குள் வினோதமான சப்தங்கள் அடிக்கடி கேட்டால் அந்த குறைபாட்டை "ஒடெஸ்லோரோசிஸ்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்தக் குறைபாடு வரக் காரணம் நடுக்காதுப்பகுதியில் காணப்படும் சிறு எலும்புகளின் வளர்ச்சியே,இந்த சிறு எலும்புகளை மருத்துவர்கள் " ஸ்டேப்ஸ்" என்கிறார்கள்.இந்த எலும்புகள் சிலருக்கு பரம்பரை மூலக்கூறுகள் காரணமாக இயல்பான வளர்ச்சியைத் தாண்டி விரைவாக வளர ஆரம்பிக்கின்றனவாம். அப்படி வளரும் எலும்புகள் காதுக்குள் உட்புகும் ஒலி நடுக்காதுப் பகுதியில் இந்த எலும்புகளால் தடுக்கப் பட்டு காது ஜவ்வில் பட்டு ஒலிக்கும் திறனை இழக்கிறது ,மேலும் இடையில் தடுக்கப் படுவதால் வினோதமான சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது.இந்த ஸ்டேப்ஸ் எலும்புகளின் வளர்ச்சியை ஆரம்பம் முதலே அறுவை சிகிச்சை முறையில் முற்றிலுமாக கட்டுப் படுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை குறித்த பயம் உள்ள நோயாளிகள் வயது வித்தியாசமின்றி அறுவை சிகிச்சையைப் புறக்கணித்து காது கேட்கும் திறனளிக்கும் மெசின்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஸ்டேப்ஸ் எலும்புகள் அபிரிமிதமாக வளர்ந்து விட்டால் இந்த உபகரணங்களால் யாதொரு பயனும் இல்லை.படிப்படியாக காது கேட்கும் திறனை இழப்பதை விட ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை என்பதே முற்றாக பலனளிக்க வல்லது என காது,மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தக் குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளையே அதிகம் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.மேலும் பெண்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருக்கும் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடுபட்டாலும் கூட கர்ப்ப காலங்களில் இந்தக் குறைபாடுகள் \ தனது அறிகுறிகளை முழுதாகக் காட்டத் தொடங்கி விடுகின்றனவாம், அப்போதைக்கு வலிநிவாரணிகள் மூலம் சமாளித்தாலும் குழந்தை பிறந்த பின்பு முழு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்,இல்லா விட்டால் காலப் போக்கில் காதுகள் முற்றாக கேட்கும் திறனை இழக்கும் நிலை வரும்.

இதற்கான அறுவை சிகிச்சையை "ஸ்டேபிடெக்ட்டமி" என காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறுவை சிகிச்சை காதின் உட்புறத்தில் நடத்தப் படுவதால் வெளிப்புறம் கத்தியால் அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் வடுக்கள் எதுவும் தோன்ற வாய்ப்புகளே இல்லை. மேலும் அறுவை சிகிச்சையின் பின் முழுமையாக காது கேட்கும் திறனை பெறுவதற்கான உத்திரவாதம் உண்டாம்.

சென்ற சனிக்கிழமை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் கே.கே.ஆர் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமனைக்குப் போயிருந்தோம் ,மருத்துவருக்காக காத்திருந்த நேரத்தில் வாசிக்கக் கிடைத்த தகவலே இன்றைய இடுகையானது ,பயனுள்ளதாக இருக்கக் கூடுமென எண்ணியதால் பகிர்கிறேன்.

மேலும் அங்கிருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது .

இறந்து விட்ட ஒரு யானையைச் சுற்றி நின்று கொண்டு அதன் அகன்ற காதுகளை ஒருவர்,நீண்ட தும்பிக்கையை ஒருவர் ,கழுத்தை(தொண்டை) ஒருவர் என மூன்று மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இது தான் அந்த ஓவியம் .ஆக மூன்று மருத்துவர்கள் சேர்ந்து அளிக்கத்தக்க சிகிச்சையை ஒரே மருத்துவர் அளிக்கத் தகுதி அடைவது தான் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் போல என எண்ணிக் கொண்டேன்.

:)




http://www.kkrenthospital.org (காது மூக்கு தொண்டைக்கு சிறப்பான மருத்துவம் இங்கே கிடைக்கும் என பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிந்துரைத்ததால் இந்த சுட்டி ,தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்)







ஹரிணிக்கு நாளை யூனிட் டெஸ்ட் ,அதையொட்டி நேற்று பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள்(தோம்).

ஆங்கிலத்தில் முதல் பாடம் மை பேமிலி .

இரண்டாம் பாடம் ஸ்மால் பேமிலி,லார்ஜ் பேமிலி,ஜாயின்ட் பேமிலி இவை மூன்றையும் ஒப்பிட்டு காட்டுவது தான் இரண்டாம் பாடம்.

மை பேமிலி அவளுக்கு எல்.கே.ஜி முதற்கொண்டே இருப்பதால் என்னிடம் கேட்பதற்கு கேள்வி ஒன்றும் இல்லை அவளுக்கு.

ஸ்மால் பேமிலி படித்து விட்டு My family is a small family என்றாள். ஆமாம் என்றேன்.

அடுத்து லார்ஜ் பேமிலி வந்தது ;

Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Childrenஇவர்கள் எல்லோரும் இணைந்து வசித்தால் அது லார்ஜ் பேமிலி .

அடுத்து ஜாயின்ட் பேமிலி ;

Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Cousins,Childrenஇவர்கள் எல்லோருமே சேர்ந்து வசித்தால் அது ஜாயின்ட் பேமிலி .

கடைசியில் Which family you like ?என்றொரு கேள்வி.

ஹரிணியின் பதில் -I LIKE ALL THE THREE FAMILIES .

என்னடா இப்பிடி சொல்ற ,ஏதாவது ஒரு பேமிலி பிடிக்கும்னு சொல்லலாமே என்றதற்கு ;

இல்ல ..எனக்கு எல்லா பேமிலியும் பிடிச்சிருக்கு , ஆனா ஜாயின்ட் பேமிலி தான் நான் இன்னும் பார்த்ததே இல்லை என்றாள். ரொம்ப ஜாலியா இருக்குமில்லம்மா ,நம்ம பெரியப்பாக்கள் நாலு பேரோட பேமிலி ,சித்தி பேமிலி,மாமா பேமிலி , அத்தைகளோட பேமிலி ,அப்புறம் Mummyசைடு தாத்தா,பாட்டி,Daddy சைடு தாத்தா பாட்டி ...அம்மாடி எவ்ளோ பெரிய ஜாயின்ட் பேமிலியா இருக்கும் !

சூப்பரா இருக்கும்ல?!

ம்ம்...சூப்பரா தான் இருக்கும்.

எப்போ நாம ஜாயின்ட் பேமிலி ஆவோம்?

ம்ம்...எப்போ !!! ...அது வந்து ஊர்ல திருவிழா நடந்தா அப்போ ஜாயின்ட் பேமிலி ஆயிடுவோம் அப்புறம் பெரியப்பாக்கள் வீட்ல ஏதாவது விசேசம்னா ,தாத்தா,பாட்டி வீட்ல ஏதாவது விசேஷம்னா ,சித்தி பையனுக்கு பெர்த் டேனா அப்போலாம் நாம எல்லாரும் ஜாயின்ட் பேமிலி தானடா என்றேன்.

அவளுக்கு என் பதில் சமாதானம் ஆகவில்லை போலும்.

அதுக்கு பேர் ஜாயின்ட் பேமிலியா ? ...நாம தான் ரெண்டு நாள்ல சென்னைக்கு வந்து திரும்பி ஸ்மால் பேமிலி ஆயிடரோமே!?

குழந்தையின் கண்களில் ஏக்கம் தெரியத்தான் செய்கிறது .கூடியமட்டும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வகையில் தான் இனிமேல் எந்த ஒரு குடும்ப விழாவையும் திட்டமிட வேண்டும் என அந்த நொடியில் மனதுக்குள் தோன்றியது.கூடவே என்ன தான் சின்னச் சின்ன உரசல்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நம் தலைமுறையோடு மறையட்டும் குழந்தைகளிடம் அவற்றை கடத்திக் கொண்டு தொடர வைக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

குழந்தைகள் எப்போதும் தனிமையை விரும்புவதில்லை ,தன்வசதி வாய்ப்புகள் ,தன் வளர்ச்சி,சூழல் எனும் போர்வையில் பெரியவர்களுக்குத் தான் அதெல்லாம் தேவைப்படுகிறது.குழந்தைகள் எப்போதும் கூட்டமாய் குழுவாய் வாழவே விரும்புகிறார்கள் என்றும் தோன்றியது .



சென்ற டிசம்பரில் நான் இந்தியா போன போது நல்ல மழைகாலம். ஊரில் வெள்ளம். அப்போது காலை அபி வழக்கமா பள்ளி போகும் போது சாப்பிட அடம். எனக்கு கோவம் வந்து லைட்டா திட்டினேன். உடனே அவளுக்கு நல்ல கோவம் வந்துவிட்டது. "சாப்பிட சொல்லி மாத்திரம் திட்டுறீங்க. ஆனா எனக்கு என்ன என்ன ஆசை இருக்கு தெரியுமா? அதை எல்லாம் கேட்டீங்களா ஒரு நாளாவது. நீங்களா கேஎட்[ஈங்கன்னு பார்த்தேன். ஒரு வார்த்தை கூட கேட்கலை நீங்க"ன்னு பொறிஞ்சு தள்ளீட்டா.


எனக்கு என் தப்பு அப்பதான் உறைத்தது.சிறு வயதில் இப்படியாக நினைத்தது உண்டு. அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக பல விஷயங்கள் நிராகரிக்க பட்டிருக்கின்றன. அதே நிலை என் பசங்களுக்கு வர கூடாது என அப்போதே நினைத்தேன். ஆனால் இப்படி அபி மனசுக்குள்ள இப்படி ஒரு ஆசைகள் இப்பதை கூட கண்டுக்காம இருந்து விட்டேனே என நினைத்து ஒரு பேப்பர் பேனாவை அவள் கையில் கொடுத்து "உனக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எல்லாம் எழுது" என்றான். அதை வாங்கிகிட்டு தன் ரூமிற்கு போய் விட்டா. பின்னே எழுதினாளா இல்லையா என தெரியாது. ஆட்டோ வந்தது பள்ளிக்கு போயிட்டா.


பின்னே பள்ளிக்கு எதிர் கடையில் இருந்து அவ அம்மாவுக்கு போன் செய்தா. அவளுடைய மேசை டிராயரில் அந்த லிஸ்ட் இருப்பதாக சொன்னா. நான் போய் அந்த லிஸ்ட் எடுத்து பார்த்தேன்.


1. லேடி பேர்டு சைக்கிள் (சிகப்பு கலர்)
2. என் யூனிபார்ம் அளவு தொட தொடனு இருக்கு. அம்மா இதை வைத்து இந்த வருஷத்தை ஓட்டு என்று சொல்லிட்டாங்க. அதனால வேற யூனிபார்ம் 2 செட். என சரியான அளவு சுடிதார் என் கப்போர்ட்ல் மேலேயே வச்சிருக்கேன்.
3. என் சைஸ் ஷூ (ஸ்போர்ட்ஸ் ஷு)
4. வெள்ளை கலர் சாக்ஸ் - 3 செட்
5. பியர்லெஸ் தியேட்டர் முறுக்கு 1 பாக்கெட்
6. தம்பிக்கு ஒரு நல்ல ஷூ வித் சாக்ஸ்(குளிருக்கு போடுவது போல)


என லிஸ்ட் இருந்தது. அப்போது காலை 8.30 குளித்து முடித்து சாப்பிட்டேன். ஒரு 9.30 மணிகு ஒரு குடையை எடுத்துகிட்டு, அள்வு சுடிதாரை ஒரு மஞ்சமையில் சுத்திகிட்டு நகரின் மழை நீரில் வேஷ்ட்டியை மடித்து கட்டி கொண்டு பெரிய ராஜன் தோட்டம் வழியாக முதலில் மணிகூண்டு காந்திஜி ரோட்டின் ஜெகந்நாதன் சைக்கிள் கம்பனிக்கு வந்தேன். அது தான் மயிலாடுதுறையில் பெரிய சைக்கிள் கம்பனி. ஷோ ரூமில் ஒரு சைக்கிள் லேடிபேர்டு சிகப்பு கலர் என்னை பார்த்து சிரித்தது. உள்ளே பலபேர் சைக்கிள் கோர்த்துகிட்டு இருந்தாங்க. என்ன விலைன்னு கேட்டேன். 3030 ரூபாய்ன்னு சொன்னார். சரி குடுங்கனு பணம் நீட்டினேன்.


இல்லப்பா அது கோர்த்து 6 மாசம் ஆகுது. வேற கோக்க சொல்றேன்ன்னு சொல்லி செந்தில் இங்க வாடான்னு கடை பையனை அழைத்தார். அந்த பையன் எங்க தெருதான். "வாங்க அண்ணே எப்ப வந்தீங்க. பாப்பாவுக்கு சைகிளா சூப்பரா கோர்த்து தறேன். அண்ணே எனக்கு ஒரு விசா அடிச்சு கூட்டிக்க கூடாதா" வழக்கமான 3 ம் கட்ட மக்களின் டயலாக். நான் கேட்டேன் "சரி பாஸ்போட் வச்சிருகியா" பட்டுன்னு பதில் வந்துச்சு "இல்லை நீங்க விசா அடிச்சுட்டு ஒரு போனை போடுங்க நான் திருச்சிக்கு போய் எடுத்துட்டு அந்த ஏற்போர்ட்ல இருந்து வந்துடுவேன் அண்ணே" எனக்கு பகுன்னு ஆகிடுச்சு.

சரி நான் கோர்த்து வைக்கிறேன். நீங்க எங்கயாவது போயிட்டு 1 மணி நேரம் கழிச்சு வாங்கன்னு சொன்னவுடன் எதிரே இருக்கும் சீமாட்டிக்கு போனேன். வாசலில் டைலர் மிஷினை துடைட்து கொண்டிருந்தார். அவரிடம் "அய்யா நான் உள்ளே போய் 2 செட் சுடிதார் துணி எடுத்து வருவேன் 1 மணி நேரத்தில் தைத்து தரமுடியுமா என கேட்க அவரு "2 மணி நேரம் ஆகும் தம்பின்னு சொல்லிட்டார். உள்ளே போய் பள்ளியின் பெயரை சொல்லி வாங்கிகிட்டு வந்து அளவு சுடிதாரையும் கொடுத்து விட்டு அங்கிருந்து 10 கடை தள்ளி இருக்கும் அப்சரா வந்தேன். அங்கே எல்லாரும் நல்ல பழக்கம் 30 வருஷ பழக்கம்.


அபிக்கு ஸ்போர்ட்ஸ் ஷு சாக்ஸ், தம்பிக்கு ஷூ எல்லாம் வாங்கிகிட்டு நேரா வண்டிகார தெரு நெரிசல் வழியா பியர்லெஸ் தியேட்டர் போய் முறுக்கு, கடலைமிட்டாய் வாங்கிகிட்டு (இத்தனைக்கு மழை நல்லா பெய்யுது) எல்லாம் நடராஜா சர்வீஸ் தான் திரும்ப தியேட்டரில் இருந்து கச்சேரி ரோடு வழியாக "பாண்டியன் சாமில் வந்து என் நண்பன் சங்கரிடம் 1 மணி நேரம் மொக்கை போட்ட பின் அவனே வண்டியிலே திரும்ப ஜெகந்நாதன் சைகிள் கடைல விட்டு போனான். தெரு பையன் என்பதீல் எக்ஸ்ராவா எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் போட்டிந்தான்.


எடுத்து கொண்டு வண்டிகாரதெரு மாரியம்மன் கோவில் பூக்கடையிலே அதுக்கு பொட்டு இட்டு, மாலை மாதிரு பூ போட்டு பூசை போட்டு விட்டு வந்து சுடிதாரை வாங்கிகிட்டு ஜெகஜோதியா வீட்டுக்கு வந்தேன். அப்போதும் மழை.


வந்து பெல் அடித்ததும் நட்டு தான் குடுகுடுன்னு ஓடி வந்தான். அந்த சைக்கிளை பார்த்ததும் அவன் அடைந்த சந்தோஷம் என்னால் எழுத வார்த்தை இல்லை. அபிக்கு 3 வயதா இருகும் போது ஒரு சைக்கிள் வாங்கி துபாயில் இருந்து வாங்கி குடுத்தேன். அது வாசலில் கட்டி போட்டிருப்பா. அவளின் இப்போதைய உயரத்துக்கு ஓட்ட முடியாது. அதிலே பலதடவை நட்டு ஏற முயன்று பல அடி பட்டிருக்கான். அதை "அய்க்கிள்"னு தான் சொலுவான். சரி அக்காவின் சைக்கிள அய்கிள்ன்னு சொல்றான் அப்படின்னு விட்டுட்டேன்.


இந்த புது சைக்கிளை பார்த்த உடனே "அய்க்கிள் அய்க்கிள்"ன்னு கத்திகிட்டே கிச்சன் போய் அவன் அம்மா புடவையை பிடிச்சு இழுத்து கிட்டு வந்து "அம்மா அய்ய்கிள் அய்க்கிள்"ன்னு காமிக்கிறான். கீழே புரண்டு விழுந்து சிரிக்கிறான். பெடலை வந்து சுத்துறான். சைக்கிளை வீட்டின் உள்ளே சாமிரூம் கிட்ட கொண்டு வந்து நிப்பாட்டி கிருஷ்ணா தலைமைல அங்க ஒரு பூஜை.
பின்னே அப்படியே அதை அலேக்காக தூக்கிகிட்டு மாடி ஏறினேன். நட்டுவும் தாவி தாவி ஏறுகிறான். மாடி ரூம்ல கொண்டு போய் வைக்கிறேன். பின்ன கிருஷ்ணா அந்த சுடிதார் ஷு எல்லாம் எடுத்து கொண்டு மேலே நட்டுவையும் தூக்கிகிட்ட்டு பின்னாலே வருது. எல்லாத்தையும் வைத்து ஒரு போர்வை போட்டு மூடினேன். பின்னே கீழே வந்து சாப்பிட்டு மதிய தூக்கம் போடும் போது 2 மணி. அபி 3 மணிக்கு வருவா. வந்தவுடன் அவ இரவு மாடிக்கு படிக்க போகும் போது ஆச்சர்ய படட்டும் என நினைத்தேன். அந்த மதிய தூக்கத்தின் போது நட்டுவும் தூளியிலே படுத்து தூங்கிடுவான். சரியா அபி ஆட்டோ நகர் முனைக்கு வரும் சத்தம் கேட்ட உடனே எழுந்து கேட்டுக்கு போய் அவ புத்தக மூடையை பிடித்து இழுத்து வந்து ஏகப்பட்ட கொஞ்சல் நடக்கும் அவன் அக்கா கிட்ட.


ஆனா அன்று தூங்கவே இல்லை கேட்டை பிடிச்சுகிட்டே நிக்கிறான். உள்ளே வர மாட்டேன்னு அடம். அபி வந்தா அவ்வளவுதான். அவன் ரியாக்ஷன் இப்பவும் என் மனசிலே வீடியோவா ஓடுது. வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவ புத்தக மூட்டையை சட்டை பண்ணலை அபியை இழுத்துகிட்டு மாடிகு இழுக்குறான். அக்கா அய்க்கிள் அய்க்கிள்னு சத்தம் வேற. தவ்வி தவ்வி ஏறுறான். பின்னாலயே அபியும் ஏறுறா. அந்த கண்கொள்ளா காட்சியை காண நானும் கிருஷ்ணாவும் மேலே போனோம்.
அங்கே போய் அந்த போர்வையை இழுத்து அக்கா அய்க்கிள் ன்னு புரண்டு புரண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான். (இதான் விழுந்து விழுந்து சிரிப்பதா). நான் அப்படியே அபி ரியாக்ஷனை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன். "போய் பாரும்மா" என கிருஷ்ணா சொல்கிறது. காலை 1 ஸ்டெப் எடுத்து முன்னே வைக்கிறாள். பின்னே பின்னால் இழுத்து கொண்டாள். என்னிடம் பேசவில்லை. பின்னே அதை தொட கூட இல்லை. அப்படியே கீழே போய்விட்டாள். என் மீது கோவத்தில் இருக்காலாம்.


பின்பு மேலேயே போகலை. எப்போதும் இரவு படிக்க மாடிக்கு போவது கூட அன்று போகலை. சீக்கிரமே என் கூட படுத்துட்டா. நான் தூங்கிட்டேன். இரவு 11 மணிக்கு நான் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த போது அபி என்னை பார்த்துகிட்டு உட்காந்து இருந்தா அந்த இரவிலே. நான் முழித்து என்னம்மா னு கேட்டேன்.


"அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா"ன்னு சொல்லிட்டு கண்ணை கசக்க ஆரம்பிச்சுட்டா. நான் எழுந்து வாடா மாடிக்கு போய் சைக்கிளை பார்க்கலாம் என கூட்டி போனேன். ஆசை ஆசையா சைக்கிளை கட்டி பிடிச்சுகிட்டா. அப்பா சுடிதாரை போட்டு பார்க்கிறேன்ன்னு போட்டு பார்த்தா. ஷூ வை போட்டு பார்த்தா. கடலை மிட்டாய் சாப்பிட்டா, நட்டுவின் ஷூவை எடுத்துகிட்டு தூங்கிகிட்டு இருந்த நட்டுக்குக்கு போட்டு அழகு பார்த்தா. அப்பா இப்பவே ஓட்டனும் போல இருக்குப்பா என சொல்லியது அந்த 11 மணிக்கு (இரவு) கீழீ இறக்கினேன். மழை விட்டு இருந்தது. நகரில் லைட் இல்லை. அவளை அழைச்சுகிட்டு ராஜேஸ்வரி நகர் (நல்ல ரோடும் லைட்டும் இருக்கும்) சைக்கிள் ஓட்டின்னா. அவளின் சந்தோஷத்தை விட நான் சந்தோஷ பட்டனா என்னை விட அவள் அதிகம் சந்தொஷ பட்ட்டாளா என பாலமன் ஆப்பையா பட்டி மன்றம் நடத்தினா கூட தீர்ப்பு சொல்ல முடியாது.


இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தைகள் ஆசைப்பட்ட நேரத்தில் வாங்கி கொடுங்க. இல்லாவிடில் அது அவர்கள் வாழ்க்கையில் தீராத வடுவாகவே ஆகி இருக்கும். பிறகாலத்தில் அவர்கள் சம்பாதிக்கும் போது நினைத்தா கூட அந்த விஷயங்களை நடத்தி கொள்ள முடியாது.
நான் அப்போதே சொன்னேன் "அபி உனக்கு எப்போது எது தேவையோ அதை கேட்டுவிடு. தயங்காதே."


10 நாள் முன்ன போன் செய்யும் போது "அப்பா நான் இனி ஆட்டோவிலே போகலை. எனக்கு ஆட்டோகாரர் எல்லா பசங்கலையும் இறக்கி விட்டு விட்டு கடைசியா தான் நம்ம நகர்க்கு வருது, அது போல காலை முதல் ஆளா என்னை எடுக்கிறார். கிட்ட தட்ட 2 மணி நேரம் எனக்கு ஆட்ட்டோ விலே போகுது. அதனால நான் சைக்கிள்ல போகிறேன்"
"சரி அப்படின்னு சொல்லிட்டேன். இப்ப அபி பள்ளிக்கு சைக்கிள்ல போறா சந்தோஷமா!


போட்டோ உபயம் கூகிள் இமேஜ் தேடல்

இப்போதெல்லாம் நம்முன் இருக்கும் மிகப்பெரும் சவால் மீட்டிங் த டெட்லைன் தான் இல்லையா அது குடும்பத்திலாகட்டும் இல்லை அலுவல் சம்பந்தமானதாயிருக்கட்டும் அதன் கோணங்களும் விகிதாசாரங்களும் மாறுவதேயில்லை. மாதம் பிறந்தால் மின்சாரக்கட்டணத்தில் இருந்து பால் அட்டை வரை குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்த வேண்டியுள்ளது, இரு பால் உறவுகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நேரம் தவறாமால் செய்யத்தவறினால் அவர்கள் பால் இருக்கும் அக்கறை கேள்விக்குறியாகிறது. அலுவல்கத்திலோ கேட்கவே வேண்டாம், இது போன்ற இன்றியமையாத பண்பை நம் பிள்ளைகளிடத்தில் சிறுவயதில் இருந்து வளர்ப்பது எப்படி என்று ஒரு எண்ண ஓட்டம் வந்ததும் அதற்கு நான் கடைப்படித்த வழி முறைகள் இதுவே.

01. மாதாந்திர சிறுவர் சஞ்சிகைக்கு பணம் கட்டி விட்டு முதல் சில மாதங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு புத்தகம் வந்து விட்டதா என்று அவர்களிடமே விசாரிப்பது. அதன் பலன் அடுத்த மாதத்தில் இருந்து அவனே அந்த தேதிகளில் தாபால் பெட்டிகளில் பார்க்கத்துவங்கிவிட்டான்.

02. அவர்களுக்கு வேண்டிய பேப்பர் பேனா போன்றவைகளை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாங்கித்தருவது என்றும் அந்த குறிப்பிட்ட தேதி வரை இருப்பை கணக்கு வைத்துக்கொள்வதும் பின் தேவைகளைச்சொல்வதும் அவர்கள் பொறுப்பு என்று நடைமுறைப்படுத்தினேன்.

03. கேபிள் காரனுக்கு பணம் தருவதை அவர்கள் பொறுப்பில் கொடுத்தேன். (தவறினாலும் நமக்கேதும் பாதகமில்லை தானே)

இது போல் இன்னும் பலதும் செய்யலாம் உங்கள் அனுபவங்களை/நடைமுறைகளள பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகளும் ஒருவேளை உங்களுக்குப் பயன்படலாம் முயற்சி செய்து பாருங்களேன்.

வல்லி சிம்ஹன் பதிவிற்கு பின்னூட்டம் இடும் பொழுது தான் இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

எங்கள் வீட்டில் இருவருமே ஆண்பிள்ளைகள், அருகருகே வசிப்பவர்களுக்கு கூட பெண்மகவு இல்லை அதனால் என் சின்னப்பையனுக்கு பெண்களின் சகவாசம் அதிகம் கிடையாது.

ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த அவன் வழக்கத்தை மீறி ரொம்ப சோர்வாகவும் அதேசமயம் ரொம்ப கோபமாகவும் இருந்தான் ஆனா அவன் ரொம்ப அழுத்தம் அதுனால லேசில வாயிலிருந்து விஷயம் வராது எவ்வளவு அழுத்தம்னா, அவனுக்கு ஒரு 5 வயசு இருக்கும் போது தெரு முனையில இருக்கற கடைக்கு தேங்கா வாங்கிட்டு வான்னு 10 ரூபா குடுத்து அனுப்பிச்சோம் கொஞ்ச நேரம் கழிச்சு வெறும் கையோட வந்து நின்னான் நாங்க ரொம்ப பயந்து போய்

01. என்னாச்சு ரூபாய தொலைச்சிட்டயா – பதிலே இல்லை
02. கடைக்காரி தேங்க தரலயா – பதில் “தரல”
03. ஏன் - - பதிலில்லை
04. மீதி காசு எங்கே – “காக்கா தூக்கிட்டு போச்சு”
05. எதை தேங்கயவா காசையா – காசை
06. அப்ப தேங்கா என்ன ஆச்சு - பதிலில்லை
07. வரும்போது கீழ விழுந்திட்டதா – பதிலில்லை
08. எங்க அம்மா அதுக்குள்ள வந்து "குழந்தை கையில இருந்து யாராவது பிடிங்கிண்டு போயிருப்பா இதுக்குத்தான் சின்ன குழுந்தைய அனுப்பாதேன்னு சொன்னா நீங்க ஏதோ டிரெயின் பண்ரேன்னு அனுப்பிச்சேள் ஏண்டா கண்ணா யாராவது பிடிங்கிண்டு போயிட்டாளா" – பதில் “ஆமாம் பாட்டி ஒருத்தன் ஓடி வந்து பிடிங்கிண்டு ஓடியே போய்ட்டான்.”
09. நாங்க பொய் சொல்லாதே பாப்பா, நீ கீழ விழுந்திட்டயா – பதில் “ஆமாம் நான் கீழ விழுந்திட்டேன்…”
10. எங்க விழுந்த – திருப்பதி வீட்டுக்கு பக்கத்துல (அவன் வீட்டுக்கும் தேங்கா கடைக்கும் சம்பந்தமே கிடையாது)

இப்படி கேட்கிற கேட்விக்கெல்லாம் அவனுக்கு தோன்றிய படி பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரியிடம் விசாரித்ததில் அவள் தேங்காயும் இரண்டு ரூபாய் சில்லரையும் கொடுத்து விட்டுருந்தது தெரியவந்தது, வழியில் எங்கும் தேங்காயை காணவில்லை இன்று வரை அது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. எங்கள் அனுமானம் தேங்காய் கீழே விழுந்திருக்கும் அவனுக்கு மண்ணைத்தொடப் பிடிக்காது எனவே எடுக்காமல் வந்திருப்பான் ஆனால் அவன் வாயில் இருந்து இன்று வரை என்ன நடந்தது என்று சொன்னதில்லை. எனவே இந்த மாதிரி ஏதாவது நடந்தால் உடனே நாங்கள் நித்தா தேங்கா வாங்கின கதைதான் என்று ஸ்டேட்மெண்ட் விடுவோம். அந்த அளவு அழுத்தமானவன் இன்று வரை அப்படித்தான் (இப்போது அவனுக்கு வயது 10) அதனால் யாரும் நேரடியாய் என்ன விஷயம் என்று கேட்கவில்லை.

இரவு வழக்கமாய் அவன் எங்களுக்கு கதை சொல்வான் அது அவனுக்கும் எங்களுக்கும் மிகவும் பிடித்த தருணம். நான் ஒரு மாதிரி சாயங்காலமா – பாப்பா இன்னிக்கி என்ன கதை என்று ஆரம்பித்து பின் மெதுவா என்ன ஆச்சு இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து ரொம்ப டல்லா இருந்தே யார் கூட பிரச்சனை என்றதும் தான் விஷயம் வந்தது.

அம்மா என்ன மிஸ் எடம் மாத்திட்டாங்க (அது வழக்கமாய் நடக்கும் ஒன்றுதான் அவர்கள் ஒரு மாதிரி பீரியாடிக்கலா பிள்ளைகளின் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் இதிலென்ன புதுசு என்று எண்னியபடி) க்ரேட் யாரு இப்ப உன் பக்கத்துல இருக்காங்க என்று கேட்டதும் தான் தாமதம், அதான் அந்த மேகி (மரகதமத்தின் சுருக்கம் இவர்களாக வைத்துக்கொண்டது) அவ பக்கத்துல போய் என்னப் போட்டிருக்காங்க நான் மிஸ்கிட்ட கம்ப்ளெயின் பண்ணியிருக்கேன் ஆனா நாளைக்கு மாத்தறேன்னு சொல்லியிருக்காங்க அப்படி மாத்தலேன்னா நாளைக்கு நான் எங்க சோசியல் மிஸ்கிட்ட சொல்லுவேன் என்று ரொம்ப ஆதங்கத்தோடு சொன்னான் (எனக்கு ஒரே ஆச்சரியம் ஏன்னா அவன் இப்படி எல்லாம் ரொம்ப சென்சிடிவா இருக்க மாட்டான் யாரு வந்தாலும் போனாலும் கண்டுக்கவே மாட்டான் அவன் உலகம் தனி என இருப்பான் இப்ப என்ன வந்தது என்ற எண்ணத்துடன்) ஏன் அந்த மேகி பக்கத்துல உக்காந்தா என்ன? என்றதுக்கு அம்மா அவ தல பூராவும் ஒரே பேன் எப்பவும் தலைய சொறிஞ்சிண்டே இருப்பா அவ பக்கத்துல இருந்தா எனக்கும் அவ தல பேன் பூரா வந்துரும் அவ டார்க்கா தலைக்கு எண்ணை தடவிண்டு வருவா (அந்தப்பெண்ணிற்கு சற்றே நீண்ட கூந்தல் அவள் தினமும் அழகாக அதைப்பின்னி ரிப்பன் வைத்து கட்டிக்கொண்டு வரும் அழகை நான் பார்த்து ரசிப்பதுண்டு) அதான் நான் மிஸ்கிட்டே சொல்லிட்டேன் மிஸ் அவ தலைல பேன் இருக்கு நான் அவ பக்கத்தில உக்கார மாட்டேன், சம்டைம் அவள் தலைல இருக்கிற எண்ணை என் சைட்டைல பட்டுடும்னு. மிஸ் நாளைக்கி இடம் மாத்திருவாங்க. என்று முடித்ததும் அவன் முகம் ரிலாக்ஸ் ஆனாது ஆனால் என் மனம் மிகவும் கனத்துப்போனது. உடன் ஒரு பெண் குழந்தை வளரும் பட்சத்தில் ஒரு ஆண் குழத்தையால் இவ்வளவு நிர்தாட்சண்யமாக ஒரு சக பெண்குழந்தையை நிராகரிக்க முடியுமா??? இதை கேட்ட அந்த பள்ளி ஆசிரியை, அந்த மாணவியின் மனது எப்படி இருந்திருக்கும் அதை நான் இவனுக்கு எவ்வாறு புரிய வைப்பது போன்ற பல கேள்விகள் என்னுள் பிறந்தது.

அதனால் பொதுவாக அன்றிலிருந்து நான் அவன் வயது பெண்குழந்த்தைகளைப்பற்றி அவனிடம் அதிகம் பேசத்துவங்கினேன். முடிந்த போதெல்லாம் அவர்களின் உலகம் பற்றிய புரிதலை அவனுள் விதைக்கத்தலைப்படுகிறேன். ஏனெனில் எதிர் எதிர் உலகமும் அதைச்சூழ்ந்த பிரச்சனைகளயும் புரிந்து கொள்பவரால் தானே நல்ல தகப்பனாய், பிள்ளையாய், நன்பனாய், கணவனாய், மனிதனாய் இருக்க முடியும்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்