பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி?.. என்றுதான் தோன்றியது..

ஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.

பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .

சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!

இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.

நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..
அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.
சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.

இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.

பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை. சாப்பிட இன்னொரு வயிறு வந்துவிட்டதே... என்று வருத்தப்படுபவர்களுக்கு, உழைக்க இரண்டு கைகள் கிடைத்திருப்பது ஏனோதெரிவதில்லை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்."எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.

சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.எங்கள் வீட்டிலும் என் குழந்தைகள் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். சிலசமயங்களில் பையர் குக்கர் வைத்தால், குழம்பு வைப்பதை பெண் செய்வார்.டைனிங் டேபிளை இருவரும்தான் செட் செய்வார்கள். அதே போல் சாப்பிட்டு முடித்ததும்,ஒதுங்க வைப்பதும் அனேகமாக அவர்கள்தான். அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.

நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.பெண்குழந்தையை பெற்றுவிட்ட காரணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவனைப்பற்றிய செய்தி, தினசரியில்ஒரு மூலையில் இன்று வந்து போனது, ஏனோ,.. இப்ப ஞாபகம் வருது....

சில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா
இருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும்
அஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட்
செஞ்சுக்கலாம்! ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா??
கஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க.

யோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது? யாரைன்னு குத்தம்
சொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்ம வீட்டுலயும்
நம்ம சட்டையில வெச்ச பணம் காணாம போயிருந்தா உஷார்
ஆக வேண்டியதுதான். யாரோட வேலையா இருக்கும்!!
நான் இதைச் சொல்வதால் ஏதோ எல்லா பதின்ம வயதுப்பிள்ளையும்
இப்படித்தான்னு இல்லை. சில வீடுகளில் இதுதான் நிகழ்வு.

பணம் காணாமல் போயிருந்தால் அது அந்த சற்றே பெரிய
குழந்தைதான் எடுத்திருக்கு வாய்ப்பு அதிகம். வயிற்றுப்பசிக்கு
சோறு வீட்டுல இருக்கு, வகைவகையா ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கு,
வெளிய வாச நாங்களே கூட்டிகிட்டு போறோம் அப்புறம்
இதுகளுக்கு பணத்தை கொடுப்பானேன்! என்று சில பெற்றோர்.


பாக்கெட் மணியெல்லாம் வசதி உள்ள வீட்டுப்பசங்களுக்குத்தான்.
நம்மாள முடியாது எனும் வகை பெற்றோர்.

பிள்ளை கையில காசைக்கொடுத்தா கெட்ட
பழக்கத்துக்கு ஆளாகிடுவாங்க என பயப்படும் பெற்றோர்
இப்படி பட்டவர்களால்தான் அப்பாவின் சட்டைபை, அம்மாவின்
அஞ்சறைப்பெட்டி, ஹேண்ட்பேக் ஆகியவற்றில் பணம்
காணாமல் போவது.

சைக்கிளுக்கு காத்தடிக்க, பேனா, பென்சில் வாங்க,
நண்பர்களுடன் சாட் சாப்பிட(எனக்குத் தெரிஞ்சு ஒருபையன்
சாட் கடையில் கடன் சொல்லி சாப்பிட்டு வீட்டுக்குத்
தெரிஞ்சு அடி பின்னிட்டாங்க) என சில செலவீனங்கள்
பதின்ம வயதுக்கு உண்டு.

நாமதான் எல்லாம் செய்யறோமே அப்புறம் இவங்களுக்கு
எதுக்கு காசுன்னு பெத்தவங்க நினைப்போம். ஆனா தானா
தன் கையால காசு வெச்சுகிட்டு செலவு செய்யணும்னு
பசங்க நினைப்பாங்க. பொம்பளைப்பிள்ளைன்னா அழுது
ஆர்பாட்டம் செஞ்சு காசு கறந்துடுவாங்க. பசங்க பாவம்!!
”நீ சிகரட் குடிக்கத்தான் காசு கேக்குற, என் காசை கரியாக்கன்னே
பொறந்திருக்குன்னு” ஏச்சுத்தான் கிடைக்கும்.

இதனால அப்பா, அம்மாக்குத் தெரியாம காசை எடுக்க
ஆரம்பிக்கறாங்க. தனுஷோட ஒரு படம்.(திருடா திருடின்னு)
அவர் அப்பா பணத்தை எடுத்து செலவு செய்வதுபோல
காட்டியிருப்பாங்க. இது நிஜத்துல நடப்பதுதான்.
(இல்லைன்னு யாராவது சொல்லுங்கப்பா, பாப்போம்)

போன வாரத்துல ஒரு நாள் ஆஷிஷ் கூட பேசிகிட்டு இருந்த
போது அவன் வகுப்பில் சில பசங்க வந்து, ”நான் இன்னைக்கு
எங்க அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்தேன்” என்று
சொல்ல ஐயா ஷாக் ஆகியிருக்கிறார். ”அப்பா, அம்மா
பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பது தப்பாச்சேம்மா!!
எப்படிம்மா இப்படி செய்யலாம்? என்றான். இதனால்
இந்தப் பழக்கம் பசங்களுக்கு இப்பவும் இருக்குன்னு
நான் நம்பறேன்.

பணம் கையில் வைத்திருப்பது பெரிய மனிதத்தன்மையைக்
காட்டுது. தனக்குன்னு ஒரு அடையாளத்தை தேடும் அந்த
வயதில் தன் கையில் காசில்லை என்பதே பெரிய குறையாத்
தெரியும். நல்லா படிச்சு முடிச்சாத்தான் சம்பாரிக்க முடியும்.
சம்பாரிக்காம காசுவரணும்னா பர்ஸ்ல கை வைப்பதுதான்.
நாமே நம் பையனை திருடனாக்குறோம்.

பசங்களுக்கு காசு கொடுத்து குட்டிச்சுவராக்கச் சொல்லறீங்களான்னு?
சண்டைக்கு வரவேணாம். நம்ம பிள்ளைகளை நாம் முறையா
வளர்க்கணும். பணத்தை எப்படி செலவு செய்வதுன்னு சொல்லி
கொடுக்க வேண்டியதும் நம் கடமையாச்சே! இப்ப பழக்குவது
பின்னாளில் தான் சம்பாதிக்கும்பொழுது சேமிக்க கற்க வைக்கும்.

யோசிச்சு பாருங்க. ஆரம்பத்துல சொல்லியிருக்கற நிகழ்வு
நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்கு நடந்தா நமக்கு
எவ்வளவு அவமானம்?? நம்மைப்பத்தி, நம்ம பிள்ளைய பத்தி
என்ன நினைப்பாங்க??

என்ன செய்யலாம்? பாக்கெட் மணி கொடுத்திடலாம்.
(பதின்மவயது பிள்ளைகள் ஆண்/பெண் இருவருக்கும்)
சும்மா தூக்கி கொடுத்திட்டா பணத்தோட அருமை தெரிஞ்சிடுமா?
1 ரூபாய் காசுகூட சும்மா கிடைக்காதுன்னு நாம
சொல்லிக்கொடுப்போம். எப்படி? நான் என் வீட்டில் செய்வதை
சொல்றேன். ஆரம்பத்துல சொல்லியிருந்த அனுபவம் விருந்தினராப்
போனப்ப எனக்கும் ஏர்பட்டிருக்கு. அதனால என் பசங்க
அந்த வழிக்கு போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சிருந்தேன்.

அதுக்கு உருவகம் கொடுத்தது என் தோழி அண்ணபூர்ணா.
அவங்க சொல்லிக்கொடுத்ததை நான் கொஞ்சம் முன்னேற்றி
ஆரம்பிச்சதுதான் என் பசங்களுக்கு பாக்கெட் மணி
கொடுக்கும் பழக்கம்.


HOME IMPROVEMENT COMMITTEE இங்க அதைப்பத்தி
சொல்லியிருக்கேன்.

GOLDEN RULES</span> இதை வெச்சுத்தான் பாயிண்ட்ஸ் கொடுத்து
அதை மாத இறுதியில பாக்கெட் மணியா கொடுக்கறேன்.


பணத்தை எப்படி செலவழிக்கறாங்க என்பதை கண்காணிக்கணும்.

செலவு செய்வதை எழுதச் சொல்லி பழக்கி, மாத கடைசியில்
கையிருப்பு எவ்வளவு என்பதை எழுதச் சொல்வதால் பணம்
எங்கே தேவையில்லாமல் செலவாகுதுன்னு புரியும்.
கட்டுப்படுத்த முடியும். இதெல்லாம் நாம பக்கத்துல இருந்து
செய்யணும்.

கார் கழுவுதல் போன்ற அதிகமான வேலைகளில்
உதவும் பொழுது எக்ஸ்ட்ரா பாக்கெட்மணி.
(கொழும்புவில் இருந்த பொழுது ஆஷிஷும்,
அம்ருதாவும் சேர்ந்து கார் பார்க் ஏரியாவை கழுவுவார்கள்.
நானும் உதவுவேன். அன்றைக்கு இருவருக்கும் 25 ரூபாய்
எக்ஸ்ட்ரா மணி)

என்ன கொடுமைன்னு என்ன புலம்ப வெச்சிட்டாங்க பசங்க :))


சின்னக்குழந்தையா இருக்கும்பொழுதே இதை பழக்கிட்டா
பதின்ம வயதுக்கு வரும்பொழுது சுலபமா இருக்கும் என்பதால்
அப்போதே போட்டுவைத்துவிட்டேன் இந்தத் திட்டத்தை.

எங்க அப்பார்ட்மெண்டில் இருக்கும் பசங்க கூட ஆஷிஷ்
பேசிகிட்டு இருக்கும்பொழுது தனக்கு மாசா மாசம்
பாக்கெட்மணி கிடைப்பது பத்தி சொல்ல அந்த பசங்களோட
அம்மாக்கள் என்னை கேட்டாங்க. நானும் என் திட்டத்தைப்
பத்திச் சொல்ல ,”ஐடியா நல்லாயிருக்கேன்னு!” ஆஷிஷ்,
அம்ருதாவோட பாயிண்ட்ஸ் புக்கை வாங்கிகிட்டு போய்
ஜெராக்ஸ் எடுத்து தன் வீட்டிலும் நடைமுறை படுத்த
ஆரம்பிச்சிட்டாங்க. ”ஆஷிஷ் உன் புண்ணியத்துல
இப்ப எங்களுக்கும் பாக்கெட் மணி கிடைக்குதுன்னு!”
பாராட்டுக்கள்தான்.

இந்தப் பழக்கம் மேலைநாடுகளில் இருக்கு. அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா வீட்டிலும் தன் குழந்தைகளுக்கு
பாக்கெட்மணி வேலை செய்வதற்குத்தான் கொடுக்கிறார்
என செய்தி படித்தேன்.(அவர் பசங்களை விட எங்களுக்கு
பாக்கெட் மணி கூடவே கிடைக்குதுன்னு பசங்களுக்கு
சந்தோஷம்.)

பதின்மவயதுப்பிள்ளைகளை மதித்து அவர்கள்
வாழ்வில் நல்லபடியாக வளர உதவுவோம்.

நாளை மகளீர் தினம் என்பதால் நாளை வரவேண்டிய
பதிவு வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை அன்றே.


”கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?”//

இந்த பாடல் சொல்லும் கருத்து என்ன??
குறிக்கோள் இல்லாத வாழ்க்கையில் சாதனைகள்
இருப்பதில்லை.

தன்னம்பிக்கை மனிதர்களுக்கு தான் அடையவேண்டிய
இலக்கு எது என்பது தெரிந்து தெளிவாக இருப்பார்கள்.
தனக்கு எது முக்கியம், அவசியம் எல்லாம் புரிந்து
வைத்திருப்பார்கள். தனது திறமையை எங்கே வளர்த்துக்
கொள்ள வேண்டும் என்று அறிந்து தனது குறிக்கோளை
அடைய சிறந்த வழிகளை மேற்கொள்வார்கள்.


முதலில் நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி
“குறிக்கோள் என்ன?” உதாரணம்: என்ன படிக்க விரும்புகிறோம்?
என்ன சாதிக்க ஆசை? என்ன வேலை பார்க்க விருப்பம்?
இதை முதலில் தெரிந்து கொண்டால் தான் நாம் அடைய
வேண்டிய பாதைக்கான வழியை வகுத்துக்கொள்ள முடியும்.

சின்ன சின்ன personal goals வைத்துக்கொள்வது நல்லது.
அவை நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். டூவீலர் ஓட்டத்
தெரியாத ஒருவர் தான் ஓட்டக்கற்றுக்கொள்ள வேண்டும்
என திட்டமிட்டு அதை சாதிப்பதை சொல்லலாம்.


குறிக்கோள்/இலக்கு இவற்றை அமைத்துக்கொள்ள 5 முக்கிய
தேவைகள் இருக்கின்றன. இது வேலை, personal goals
எதற்கும் பொருந்தும்.

CREAM என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்
அதாவது - CLARITY,REALISM, ECONOMY, ACTIVITY & MEANS:

CLARITY - தெளிவு
REALISM -நிஜத்தன்மை
ECONOMY- பொருளாதாரம்
ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை
MEANS-வழிவகை

CLARITY - தெளிவு:
நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதில்
தெளிவாக இருக்க வேண்டும். எதை சாதிக்க விரும்புகிறோம்,
எப்போதைக்குள் அடைய விரும்புகிறோம், இலக்கை
அடைந்துவிட்டோம் என்று எப்படித் தெரிந்து கொள்வது
என பல கேள்விகளை கேட்டு ஒரு தெளிவான
பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

REALISM -நிஜத்தன்மை

நிஜத்தில் அடைய முடியாத ஒன்றுக்கு ஆசைப்படுவது,
அதை குறிக்கோளாக வைத்துக்கொள்வது என்பது மிகப்
பெரிய தவறு. மிகப் பெரிய/அடைய முடியாத ஒரு
குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைய முயற்சி
செய்வது பலனை அளிக்காது. தோல்வி அடைய வைக்கும்
இந்த நிகழ்வு தன்னம்பிக்கையை குலைத்துப்போடும்.
அதற்காக மிகச் சாதரணமான இலக்கு வைத்துக்கொள்வதும்
தவறு.


ECONOMY:வழிவகை

ஒரே நேரத்தில் பல இலக்குகள் வைத்துக்கொண்டால் எதை
முதலில் முடிப்பது என்று தெரியாமல் குழம்ப நேரும்.
பேராசை பெரு நஷ்டம் எனும் வழக்கு இங்கும் பொருந்தும்.
ஒவ்வொன்றாக முடிப்பதே நல்லது.

ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை


நல்லதைச் சொல், நல்லதைச் செய், நல்லதை நினை.
இது நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். நம் இலக்கையும்
நல்லவிதமாகவும், செயல்திறன் உடையதாகவும் வைத்துக்
கொள்வது நல்லது. நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும்?
என திட்டமிட வேண்டும்.

MEANS-வழிவகை

இலக்குகளை திட்டமிடும் பொழுது எந்த வழியில் அதை நாம்
அடையப்போகிறோம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ள
வேண்டும். இதற்காக நாம் சில கலைகளை கற்க
நேரலாம். நடவடிக்கைகளில் சில மாறுதல்களும் தேவைப்படலாம்.
சில நேரங்களில் குறிக்கோள்களே புது அறிவை தந்து
அதை அடைய வழி வகுக்கும்.


குறிக்கோள்களை அடைய பல திறன்கள் வேண்டும்.

நேரத்தை திட்டமிடாமல் எதுவும் செய்ய முடியாது.
சரியான முறையான திட்டமிடல் அவசியம்,
முறையாக பேசத் தெரிய வேண்டும், பிரச்சனைகளைத்
தீர்க்கும் தன்மை, குழு அமைத்தல் என பல இருக்கிறது
ஒவ்வொன்றாக வரும் வாரங்களில் பார்க்கலாம்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்