இதோ வந்தாச்சு பள்ளிப் பிள்ளைகளுக்கான விடுமுறைக்காலம். அதே சமயம் அத்தனை தினசரிகளிலும் சுவரொட்டிகளிலும் முளைச்சாச்சு விடுமுறைக்கால வகுப்புக்களுக்கான விளம்பரங்கள்.
என் மகனின் நன்பனின் அம்மா “எங்க வீட்டு சிபிய இந்த தடவை மூணு சம்மர் கேம்ப்ல சேர்த்திருக்கேன்னு” ரொம்ப பெருமையா சொன்னாங்க எனக்கு ரொம்ப பாவமா இருந்தது.
பள்ளி நாட்களிலாவது பிள்ளைகள் விடுப்பு எடுக்கலாம், ரொம்ப முடியலேன்னா வீட்டுப்பாடம் செய்யாமல் தவிர்க்க முடியும் ஆனால் இது போன்ற விடுமுறைக்கால பயிற்சிகளில் வகுப்பு தவறவிடக்கூடாது, கையெழுத்துப்பயிற்சி மாதிரியான வகுப்புக்களில் வீட்டுப்பாடம் கட்டாயம் செய்தே ஆகவேண்டும் ஏகப்பட்ட டென்ஷன் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தான். நாம் கொஞ்சம் சிந்திக்கலாமே…
நாமெல்லாம் சிறு பிள்ளைகளாய் இருக்கும் போது வரும் விடுமுறை காலத்திற்காக எத்தனை ஏக்கமாய் காத்திருப்போம், எனக்கெல்லாம் பாட்டி வீடு, அத்தை வீடு என்று போவதற்கு கூட இடமிருந்தது கிடையாது ஆனாலும் அந்த இரண்டு மாதங்கள் மிகவும் பசுமையாகக் கழியும் (நல்ல வேனலாய் இருந்தாலும் கூட) எங்க அப்பாவும் ஆசிரியர் என்பதால் அவருக்கும் குறைந்தது ஒரு மாதமாவது விடுமுறை இருக்கும் அந்த நாட்களில் வீட்டின் இயல்பு முறையே முற்றிலும் மாறிவிடும், மெதுவாக எழுந்திருப்பது, அதாவது வழக்கத்தில் 5 மணி என்றால் இப்போதைய சலுகை 6.30. பின் ஆறு/குளம்/புதுத்தண்ணி வந்தா வாய்க்கால் இவை எவற்றிலாவது நல்லா கால் ஓயும் வரை நீந்தி குளிச்சுட்டு வந்தால் அம்மா சூடா சமைச்சு வைச்சிருப்பாங்க வீட்டுல இருக்கற அத்தனை பாக்கி வேலைகளையும் (துவைத்து வந்த துணி உலர்த்துவது, உலர்ந்த துணிகள மடிச்சு அந்தந்த இடத்துல வைக்கிறது. இத்யாதி இத்யாதி) அக்கா தலைல கட்டிட்டு அப்பா கூட உக்கார்ந்து சுகமா சாப்பிட வேண்டியது அப்புறம் அப்படியே அம்மாவ குழையடிச்சு நூலகம் போக அனுமதி வாங்கிட்டு (அது பேர்ல கூடுதலா ரெண்டு மூணு இடத்துக்கு விசிட் உண்டு அத இப்ப தைரியமா சொல்லலாம்) போயி அகிலனோ, நாபாவோ, ஜெயகாந்தனோ எடுத்துகிட்டு வந்தா நாள்முழுக்க உட்க்கார்ந்து வாசிக்கலாம். இல்லேன்னா நல்லா தூங்கி எழுந்தா அம்மா டிபன் பண்ணித்தருவாங்க இல்ல நாங்க டிபன் பண்ரோம்கற பேர்ல கிச்சனை கொஞ்சம் துவம்சம் பண்ணிட்டு அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு பொழுத போக்கினா சாயங்காலம் ஆயிடும். அப்பத்தான் டெலிவிஷன் வந்த புதுசு எங்க பக்கத்துல டி.டி. கூடத்தெரியாது மொத மொதல்ல தெரிஞ்சது ரூபவாகினி ங்கற சிலோன் டீவி மட்டும்தான் அந்த மியூசிக்க ரொம்ப நல்லா இருக்கும் இப்பெல்லாம் கேக்க பார்க்கவே முடியல. முதல்ல ஒரு அரை மணி நேரமோ என்னமோ தமிழ் நிகழ்ச்சிகள் இருக்கும் அப்புறம் பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போயிட்டு வந்தா ராச்சாப்பாடு முடிஞ்சு திரும்பவும் அக்காகூட அரட்ட கதைப் புத்தகம், தூக்கம். எவ்வளவு இனிமையா இருக்கும் பள்ளி மீண்டும் திறக்கும் போது உற்சாகமா போவதற்குண்டான அத்தனை சக்தியும் உடம்பில் சேர்ந்திருக்கும்.
ஆனா இப்ப பாருங்க பள்ளி நாளுக்கும் விடுமுறைக்கும் வித்யாசமே இல்லாம பிள்ளைங்கள சம்மர் கேம்ப் அனுப்பி, வாட்டி, வதச்சு விளயாட வேண்டிய வயதில அவங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும் அவங்களின் பெற்றோர்கள் என்பாதாலேயே சிதைக்கும் சுதந்திரத்தை நமக்கு யார் தந்தது. அந்த இளம் உள்ளங்களுக்குச் சேர வேண்டிய நியமான மகிழ்ச்சிகளைக்கூட தடை செய்யும் உரிமையை நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் தான். தாய் தந்தை இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வீட்டில் ஒருவரும் இல்லாத வீடுகள் அநேகம் இருக்கும், ஆனால் அதையும் ஒழுங்கு செய்ய வேண்டிய பொறுப்பு நம்மை சார்ந்தது தான் அதற்காக பொறுப்பின் ஒரு பெறும் பகுதியை நம் இளம் பிள்ளைகளின் தலையில் சுமத்த முயல்வது குருவி தலையில் பனங்காய் கதை தான். யோசித்துப் பாருங்கள் நன்பர்களே….
குறள் வழிக்கதைகள்
5 years ago
4 comments:
நல்ல பார்வை. நான் வாழும் நகரத்தில் தமிழ்ப் பாடசாலையோ என்று சொல்லுகின்ற அளவுக்கு தமிழ் பிள்ளைகள். இந்த பிள்ளைகளின் பெற்றோர் சந்தித்து தாம் உரையாடி பெருமிதம் அடித்து கொள்வதிற்கும், தாங்கள் சாதியாதவற்றை குழந்தைகள் மூலம் சாதிக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைகள் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
thevai oru break enbathalethan varutam mudinthu vidumurai tharranga.
pavam pillaigal..
neengalum ceylon tv pathirukeengala.
aaha same blood...
ஆமாம் கிருத்திகா..இங்கே கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்வதை விரும்பாத பெற்றோர்கள்...பாவம் இங்கேயும் சம்மர் கேம்ப் என்ற பெயரில் தண்டனைதான்..
பிள்ளைகளை சம்மர் கேம்ப், டியூஷன் , கோச்சிங் கிளாஸ் இப்படி விரட்டிகிட்டே இருக்கிறது இப்போ பேஷன் ஆயிடுச்சு..அனுப்பாத பெற்றோர்களை மத்த பிள்ளைகளோட பெற்றோர் கேள்வி கேக்க வேற செய்றாங்க.. இதனால பிள்ளைகளோட சுதந்திரம் ,சந்தோசம்,வளர்ச்சி எந்த அளவுக்கு பாதிக்க படுது அப்டின்னு அவங்க உணர்ரதே இல்லை
Post a Comment