சிங்க வேஷம் போட்ட கழுதை
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. பக்கத்துக் கிராமத்திலிருந்து அந்தக் காட்டுக்குள்ள ஒரு கழுதை வழி மாறி வந்திருச்சாம். காட்டுக்குள்ள ஒருத்தர் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு மண் சாலை வழியா நடந்து நடந்து களைச்சுப் போச்சு. தண்ணீர் குடிக்கலாம்முன்னு ஒரு ஓடைப் பக்கம் போனது.
அந்த ஓடைக்கு பக்கத்துல சில வேட்டைக்காரர்கள் வசித்து வந்தாங்க. அவங்க தான் வேட்டையாடிய சிங்கம், புலி, மான் போன்ற சில மிருகங்களின் தோலை எல்லாம் அங்கிருந்தப் பாறைகள் மேலக் காய வைத்திருந்தாங்க.
இதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தோட தோலை எடுத்துத் தன் உடம்பு மேல போத்திக்கிச்சாம். பார்க்க சிங்கம் போலவே இருந்ததுனால, மற்ற மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் போனதாம். மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்துக் கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. மனிசங்களையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து கிராமத்துக்குள்ள போயி சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்திச்சாம். அதோட குரல் அது கழுதைன்னு காட்டிக் கொடுத்திருச்சு. அதுக்குப் பிறகு கழுதைய யாருமே மதிக்கவேயில்லை. யாரும் அதைப் பார்த்துப் பயப்படவேயில்லை.
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.
(ஈசாப் நீதிக் கதைகள் ஆங்கில மூலத்தின் ஆதாரத்தில் சிறிது மாற்றி தமிழில் கூறுவது விதூஷ்)
The Ass in the Lion's Skin
An Ass once found a Lion's skin which the hunters had left out in the sun to dry. He put it on and went towards his native village. All fled at his approach, both men and animals, and he was a proud Ass that day. In his delight he lifted up his voice and brayed, but then every one knew him, and his owner came up and gave him a sound cudgelling for the fright he had caused. And shortly afterwards a Fox came up to him and said: "Ah, I knew you by your voice."
Fine clothes may disguise, but silly words will disclose a fool.
.
வீட்டுப்பாடம் இனிக்க பல யோசனைகளை தருவதற்கு முன் மாணவர்களை இரண்டாக பிரித்துக்கொள்வோம். மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners), வேகமாக படிப்பவர்கள் (Fast Learners).இவ்விருவர்களின் குணங்களை முதலில் தெரிந்துகொள்வோம்.
1. மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners)
இவர்களைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்குள் வாழ்க்கையை வெறுப்பது உறுதி. பெரும்பாலான ஆண் குழந்தைகள் இந்த வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதையே விரும்புவார்கள். அதனால் படித்து முடிப்பதற்கு காலதாமதமாகும். இவர்களுக்கு கணிதம் நன்றாக வரும். ஓரிரு வார்த்தைகளில் படிக்கும் கோடிட்ட இடத்தை நிருப்புக, பொருத்துக, சரியா? தவறா? போன்றவற்றை சீக்கிரம், தெளிவாக புரிந்துகொண்டு சரியாக விடை அளிப்பார்கள். ஆனால் கேள்வி பதில்கள் பகுதி சீக்கிரம் படிக்க மாட்டார்கள். பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் இவர்களே. இன்றைய கல்வி முறை இவர்களுக்கு எதிராக உள்ளது என்பதும் ஒரு கசப்பான உண்மை.
இவர்களுக்கு பாடம் சொல்லித் தருவது மிக கடினம். ஏனென்றால்
1. ஒரு பாடத்தை புரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அது வரை சொல்லித்தரும் நமக்கு பொறுமை இருக்காது. அவர்கள் படிக்கும் வேகத்தை புரிந்துகொண்டு தேவையான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தக்கூடாது.
2. நாம் 1 தடவைக்கு 2 தடவை சொல்லித் தந்தால் உடனே சரியாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் இக்குழந்தைகள் 1 தடவை 2 தடவைகளில் புரிந்துகொளவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. சில (சின்ன சின்ன) விசயங்களை முதல் தடவையிலேயே புரிந்துகொள்வார்கள். சில விசயங்களை அவர்களாகவே சிறிது காலதாமதத்திற்கு பிறகு அவர்களாகவே புரிந்துகொள்கிறார்கள். அது எப்போது எப்படி நிகழ்கிறது என்பது நமக்குத் தெரியாது.
3. புரியவில்லை என்பதற்காக நாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்தாலும் போரடித்துவிடுகிறது. ஆகவே 2 முறைக்கு மேல் சொல்லிக்கொடுக்காமல் இருப்பதே நல்லது.
4. அதிக வீட்டுப்பாடங்கள் இருப்பதால் இவர்களால் முடிக்க முடியாமல் போகும். அல்லது ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல் பெயருக்கு (Physically) முடித்து விடுவார்கள்.
உடலினை உறுதிசெய்
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.
குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரே! உமக்கு என்ன நேர்ந்தது! ஏன் குகையை விட்டு இரண்டு நாளாக வெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.
கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது.
சுருண்டு படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்கு என்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா? அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது.
"கரடியாரே! நான் என்ன செய்வது? எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. அதன் காரணமாக உடலும் சோர்வடைகிறது. நாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டே போகிறது" என கவலையுடன் கூறியது.
அதனைக்கேட்ட கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும் அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலைவலுப்படுத்த நீர் துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர். அதனால்தான் உமக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றது.
கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன். என் உடல் நிலை சீராக நீ எனக்கு உதவி செய்வாயா என்று கேட்டது நரி.
நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும். நாம் இருவரும் சிறிது நேரம் உற்பயிற்சி செய்யலாம். என்றது கரடி.
நரியும், கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன.
கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது.
தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரி உணர்ந்தது.
அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? ஏதோ உற்சாகம் நிரம்பியவர் போன்று காணப்படுகின்றீரே என்று கேட்டது.
ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனைப் போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம் மறைந்துவிடும். என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.
அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.
நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
.
வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கா? பெற்றோரகளுக்கா? என்கிற அளவுக்கு குழந்தைகளின் வீட்டுப்பாடம் குழந்தைகளுக்கு மட்டுமால்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. குழந்தை வளர்ப்பில் இது ஒரு பெரும் சவால் என்றே நினைக்கிறேன். (என் 6 வயது மகனுடன் நான் போராடி வருகிறேன்). இதைப் பற்றி அலசவே இந்தத் தொடர்.
வீட்டுப்பாடம் தேவையா?
வீட்டுப்பாடம் தேவையா?, வீட்டில் இவ்வளவு சொல்லித் தரவேண்டும் என்றால், பள்ளியில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள், வீட்டிலும் படிப்பு பள்ளியிலும் படிப்பு என்றால் குழந்தை எப்பொழுதுதான் விளையாடுவது என்பது பல பெற்றோர்களின் புலம்பலாக உள்ளது. இக்கருத்து நமது வலையில் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டது. அதற்கு புதுகைத் தென்றல் அவர்கள்கூட “குழந்தைகள் கற்றலில் பாடங்களை மனதில் நிறுத்திக்கொள்ள அதிக revision தேவைப்படுகிறது அதனால் வீட்டுப்பாடம் தேவைதான்” என்று கூறியிருந்தார்கள்.
மேலும் சில காரணங்களை முன் மொழிய ஆசைப்படுகிறேன்.
1. நாம் பேசுவது ஒரு மொழி. ஆனால் நம் குழந்தைகள் படிப்பது ஒரு மொழி. இந்த இடைவெளியை போக்க, பாடத்தைப் புரிய வைக்க ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக கவனிக்கப்படவேண்டி இருக்கிறது. இதனை பள்ளியால் செய்ய இயலாது.
2. குழந்தைகள் விளையாடி கற்க நினைக்கும் வயதில், நாம் படித்து கற்க வற்புறுத்துகிறோம். இந்த முரண்பாட்டினால் கற்றல் கற்பித்தல் இரண்டுமே கடினமாகிறது.
3. பெரும்பாலும் ஆண் குழந்தைகள் புரிந்து படிப்பதையே விரும்புகின்றனர். (மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படும்)ஆனால் நமது கல்வி அதிகம் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. ஆகையால் அதிக revision தேவைப்படுகிறது.
வீட்டுப்பாடம் சொல்லித்தருவதில் ஏன் சிக்கல்கள் எழுகின்றன, அதனை கையாளுவது எப்படி என கட்டுரை தொடரும்...
- விசயகுமார்
ஒற்றுமை வலிமையாம்
ஒரு ஊருல, வயலோரத்தில் அடர்ந்த புளிய மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த புளியமரத்தில் ஏராளமான கொக்குகள் வசித்து வந்தன.
அந்தக் கொக்குகள் பொறாமையின் காரணமாக தங்களுக்குள் "நீ பெரியவனா.. நான் பெரியவனா.." என்று போட்டியிட்டவாறு வாழ்ந்து கொண்டிருந்தன.
வரப்போரமாக நின்று கொண்டு தனித்தனியாகப் பிரிந்து தாங்கள் இரையை தேடி அலைந்தன.
ஒரு நாள் வேட்டைக்காரர் ஒருவர் அந்த புளியமரத்தின் பக்கமாக வந்தார். அவர் பார்வைக்கு கொக்குகள் எல்லாம் தெரிந்துவிட்டன. அதுவும் ஒவ்வொரு கொக்கும் தனித்தனியாக பிரிந்து சென்று இரை தேடிக் கொண்டிருப்பதையும் கண்டார். உடனே தன் வேட்டை துப்பாக்கியை எடுத்து தனித்தனியாக நின்று கொண்டிருக்கும் கொக்குகளை எல்லாம் சுட ஆரம்பித்தார்.
"ஆஹா.. இன்று எனக்கு நல்ல வேட்டைதான். இதோ மூன்று கொக்குகளை சுட்டு வீழ்த்தி விட்டேன். இனி நாளை வேட்டையாட வந்தால் போதும்" என்று மகிழ்ச்சியடைந்தார்.
மூன்று கொக்குகள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டதை கண்ட புளிய மரம் மிகவும் வருந்தியது.
"இந்த கொக்குகளுக்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் இனிமேல் இந்த வேட்டைக்காரனுக்கு மிகவும் கொண்டாட்டமாகவே இருக்கும். தினமும் இங்கு வந்து இந்த கொக்குகளை எல்லாம் வேட்டையாட ஆரம்பித்துவிடுவான். நாம் அதற்கு முன்னர் இந்த கொக்குகளை ஒற்றுமையாக இருக்கும்படி செய்துவிட வேண்டும்" என்று எண்ணியது.
மாலை நேரத்தில் கொக்குகள் எல்லாம் இரை தேடி முடித்து விட்டு மரத்தில் வந்து தங்கத் தொடங்கின. அதுவரையிலும் கொக்குகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த புளியமரம், கொக்குகளைப் பார்த்து, புளியமரம் பேசியது.
"பறவையின நண்பர்களே நெடு நாட்களாக என் மனதில் இருந்து வந்ததை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அதனை கவனமுடன் கேட்கின்றீர்களா?" என்று அன்போடு கேட்டது.
புளியமரம் அன்போடு பேசுவதை கண்டு கொக்குகளும் அதன் பேச்சை கேட்க வேண்டி ஆவலாயின.
"புளியமரமே! உனது கிளைகளில்தான் நாங்கள் எல்லோரும் கூடுகட்டி வசித்துக் கொண்டிருக்கிறோம். உன் நன்றியை மறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாங்கள் உனது பேச்சைக் கேட்க மறுப்பு தெரிவிக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் எங்களிடம் தாராளமாக கூறலாம்" என்றன.
"பறவையின நண்பர்களே! நீங்கள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு வாழ்வதால் உங்களில் மூன்று பேர்கள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டார்கள். இனிமேலும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்தால் வேட்டைக்காரருக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். உங்கள் கூட்டத்தினர்கள் ஒவ்வொருவரையும் அவர் சுட்டு வீழ்த்திக் கொண்டேயிருப்பார். முடிவில் உங்கள் கூட்டத்தினர்கள் எல்லோருமே காலியாகிவிடுவீர்கள். இதனை நன்கு யோசித்து உங்கள் பொறாமை எண்ணத்தை கைவிட்டு ஒற்றுமையோடு வாழுங்கள்" என்று கூறியது.
மறுநாள் வேட்டைக்காரர் கையில் வேட்டை துப்பாக்கியுடன் புளியமரத்தின் அருகே வந்தார். வேட்டைக்காரர் எதிர்பாராத வண்ணம் புளிய மரத்திலிருந்து கொக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக வேட்டைகாரரை நோக்கிப் பறந்தன.
அவரை சூழ்ந்து கொண்டு அவர் கையில் இருந்து வேட்டை துப்பாக்கியை கீழே தட்டிவிட்டு கைகளை பலமாக தம் அலகுகளால் கொத்த தொடங்கின. இன்னும் சில கொக்குகள் அவரின் முகத்தைப் பலமாக தாக்கத் தொடங்கின.
கொக்குகளின் கூட்டமான தாக்குதலுக்குப் பயந்துபோய் வேட்டைகாரர் ஓட்டமெடுத்தார்.
கொக்குகள் எல்லாம் ஒற்றுமையின் வலிமையை உணர்ந்தன. கொக்குள் எல்லாம் மனம் மாறியதைக் கண்டு புளியமரம் மகிழ்ச்சியடைந்தது.
ஒற்றுமையுடன் வாழ்வதால் எந்த தீமையும் நம்மை நெருங்காது.
=================================================================
குழந்தைகள் கற்றுக் கொள்ளும் புதிய வார்த்தைகள்:
வயல்
வரப்பு
கொக்கு
புளியமரம்
வேட்டைக்காரன்
துப்பாக்கி
ஒற்றுமை
கொத்துதல்
அலகு
எதிர்பாராதது
பொறாமை
=================================================================
குழந்தைகளுக்கான தமிழ் ரைம்ஸ் இங்கே தொகுத்துள்ளேன்.
அன்புடன்,
விதூஷ்
.
ஏறு போல் நட
குழந்தைகளா! ஒரு ஊருல, சலவைக்காரர் ஒருவருக்கு பொன்னி, செம்பி என்ற இரண்டு கழுதைகள் இருந்தன.பொன்னி சலவைக்காரர் இட்ட வேலைகளை எல்லாம் சரியாக செய்துவிடும். செம்பியோ சற்று முரட்டுத்தனம் காட்டும்.
ஒரு நாள் சலவைக்காரர் வழக்கத்துக்கு மாறாக அதிக துணிகளை சலவை செய்து காயவைத்து துணியெல்லாம் உலர்ந்த பின்னர் அதனை செம்பியின் முதுகிலும், பொன்னியின் முதுகிலும் ஏற்றி அவைகளை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பொன்னியும், செம்பியும் துணிமூட்டைகளை சுமந்தபடியே வந்து கொண்டிருந்தன.
அமைதியாக சென்று கொண்டிருந்த பொன்னியைப் பார்த்த செம்பி "இதோ பார் நாம் இப்படி கடினமாக வேலைசெய்ய வேண்டுமா?" என்று கேட்டது.
உடனே பொன்னி "இன்று உனக்கு என்ன நேர்ந்து விட்டது? எதனால் இப்படிப் பேசுகிறாய்?" என்று கேட்டது.
உடனே செம்பி "ஆமாம் நீ எப்போதுமே ஏதாவது கூறினால் ஏன் எதற்கு என்று கேட்டுக் கொண்டே இருப்பாய். நான் சொல்வதை கவனமாக கேள். எதற்காக நாம் இந்த சலவைக்காரருக்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அதனால், இவர் முன்பு உடம்பில் வலு இல்லாதது போல் நம்மால் மூட்டையை சுமந்து செல்ல முடியாதது போல் நடிக்க வேண்டும். நம் நடிப்பை அவரும் உண்மை என்று நம்பி நம்மை துணி சுமக்க செய்யமாட்டார். இரக்கப்பட்டு நம்மை விட்டுவிடுவார்" என்று கூறியது.
செம்பியின் பேச்சைக் கேட்ட பொன்னி "இதோ பார் செம்பி உன் எண்ணத்தை மாற்றிக் கொள். துணி மூட்டைகளை சுமந்து செல்லும் ஆற்றல் உனக்கு ஏற்கனவே இருக்கிறது. எனவே அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு நம் சலவைக்காரருக்கு தகுந்தபடி நடந்துகொள். இப்படி கூனிக்குறுகி நடக்காதே. ஏறுபோல் நட. பொய்யுரைக்காதே. நடித்து ஏமாற்றாதே!" என்று கூறியது.
பொன்னியின் பேச்சைக் கேட்காத செம்பி தான் சுமந்து வந்த துணி மூட்டையை பொத்தென்று தரையில் போட்டது. துணி மூட்டை தரையில் விழுந்த வேகத்தில் சாக்கடைநீரில் உருண்டோடியது.
அந்த நேரம் கழுதைகளின் பின்னே வந்து கொண்டிருந்த சலவைக்காரர் இந்த காட்சியைப் பார்த்து விட்டார். வேகமாக ஓடிவந்து தனது துணி மூட்டைகளை எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, செம்பியை பலமாக தாக்கத் தொடங்கினார்.
செம்பியை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டார்.
செம்பியை விலைக்கு வாங்கிய சலவைக்காரரோ அதற்கு சரியாக உணவு கொடுக்காமல் துன்புறுத்தினார்.
செம்பி பொன்னி கூறிய அறிவுரைகளை அப்போதுதான் உணரத் தொடங்கியது. ஏறுபோல் நட என்று பொன்னி கூறியதே அதன் பேச்சுப்படி நாம் நடந்திருந்தால் இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காதே என்று நினைத்தது.
வாழ்க்கையில் எந்த துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, பொய்யுரைக்காமல் அடுத்தவரை ஏமாற்றாமல், ஏறுபோல் நடைபயணத்தை தொடர்ந்தால் வெற்றி உறுதி.
--மீண்டும் அடுத்த வாரம் பார்க்கலாமா!
.