பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.


- கு. செந்தமிழ்ச் செல்வன்
“என் குழந்தை நல்ல மார்க் எடுக்கணும். மாலையிலும் டியூசனுக்கு அனுப்பிடறோம். இல்லைன்னா விளையாடியே நேரத்தை வீணடிச்சிடுவான்”
அக்கறையுள்ள பெரும்பாலான அம்மாக்களின் அணுகுமுறை இது தான்.
“படி, படி, படி”
பள்ளியில் ஆசிரியர்களும்,
வீட்டில் பெற்றோர்களும்,
குழந்தைகளுக்கு இடும் ஒரே கட்டளை இது தான்.
குழந்தைகள் மீது பெற்றோர்களின் அன்பு அளவில்லாதது. “படி படி” என்பது அன்பின் வெளிப்பாடே. ஆனால் ஒரு குழந்தையின் உண்மையான தேவைகளை உணர்ந்து, அதனை அனுமதிப்பது எத்தனை பேர்.
தெருக்களில் குழந்தைகளின் ‘ஓ’வென சத்தம் எவ்வளவு இனிமையானது. விளையாட்டுகளுடன், வேடிக்கை காட்டும் குழந்தைகள் எவ்வளவு அழகானவர்கள். இக்காட்சிகளை எங்கே காண முடிகிறது.
இரண்டு குழந்தைகள் சந்தித்து கொண்டால் போடும் ஒப்பந்தம் விளையாட்டு தானே. பலவகை விளையாட்டுகளை அவர்கள் எங்கு, எப்படி கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் எப்போதேனும் கிடைக்கும் சலுகை நேரங்களில், அவர்களின் விளையாட்டு சாம்ராஜ்யம் தான் விரிகிறது. குழந்தைப் பருவத்தின் பிரிக்க முடியாத இயல்பு விளையாட்டு. குழந்தைகளின் உரிமை விளையாட்டு, அதனைப் பறித்திடும் நாம் குற்றவாளிகள் தானே !!
விளையாட்டு, ஒரு குழந்தைக்கு தேவையான அடிப்படை ஒன்று, உடல்களைக்க விளையாட்டு அவர்களை உற்சாகமூட்டுகிறது, சுறுசுறுப்பாக்குகிறது. உணவை பெற்றோர் கண்டிப்பின்றியே உண்ணத் தூண்டுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள விளையாட்டு வழிவிடுகிறது. கணக்குகளை அறியவும், காரணகாரியங்களை அறியவும் பல விளையாட்டுகளில் உள்ளடக்கமாக உள்ளது. கற்பனைக்கும், ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும் விளையாட்டு மேடை அமைக்கிறது.
நண்பர்களின் வலைபின்னலுக்கும் விளையாட்டு தானே அடிப்படையாக உள்ளது.
விளையாடுவதும், விளையாட்டை கற்பதம் இயல்பானது, இயற்கையானது. சக நண்பர்களிடமிருந்துதான் ஏராளமானவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.
இதனை உணர்ந்தே, பாரதியும் குழந்தைகளுக்கு சொல்லும் முதல் வாழ்த்தாக “ஓடி விளையாடு பாப்பா” என்று பாடினார். மாலை முழுவதும் விளையாடி வழக்கப்படுத்திக் கொள்ள பரிந்துரை செய்கிறார்.
பலவகை உள்ளரங்கு, வெளியரங்கு விளையாட்டுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கம்யூட்டர் விளையாட்டுகளும் சிந்திக்க தூண்டுபவைகளே. ஆனால், அளவை மீறும் போது அது வெறித்தனமாகிவிடுகிறது. அப்போது , அதில் சிந்தனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.
பெற்றோர்களும் குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம்.
“அது சரி, ஆயிரக்கணக்கில் பீஸைக்கட்டி பள்ளிக்கு அனுப்புவது நாங்கள் விளையாடுவதற்கா?”
உங்களின் முணுமுணுப்பு கேட்கிறது.
குழந்தைகளோடு விளையாடுவது உங்களுக்கும் உற்சாகமளிக்கும், குழந்தைகளிடையே உங்களின் மதிப்பு உயரும். அவர்களின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பிடிக்கலாம். குழந்தைப் பருவத்தில் நீங்கள் இழந்ததை உங்களின் குழந்தைக்கள் மீட்டுத்தரட்டுமே.
இதன் அடுத்தப்பகுதி,”விளையாடாதே” எனும் போது, குழந்தைகளின் வெறுப்புக்கு ஆளாகிறோம். அவர்களை விட்டு விலகுகிறோம். அவர்களின் உரிமையினை பறித்த குற்ற உணர்வோடு நிற்கிறோம்.
“என்ன சொன்னாலும், குழந்தைகளின் வருங்காலம் என்பது அவர்களின் படிப்பு தானே, அவர்களின் மார்க்கு தானே அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்றது” இது பெற்றோர்களின் அர்த்தமுள்ள அங்கலாய்ப்பு.
அர்த்தமுள்ள  ஒரு கேள்வியினையும் நாம் முன்வைப்போம்.
“விளையாட்டும் படிப்பும் எதிரெதிரானதா?”
“இல்லவே இல்லை”
விளையாட்டு குழந்தைகளின் மூளைகளை இயங்க வைக்கிறது. புதியவைகளை எளிதாக உள்வாங்கவும் பதிய வைக்கவும் பக்குவப்படுத்துகிறது. விளையாட்டில் ஆர்வமானவர்கள் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவார்கள் என்பது தான் பல ஆய்வுகளில் தெரிகின்றது. விளையாட்டு, சமூக சிந்தனை, சக மாணவர்களுடன் உறவு இவைகளெல்லாம் இல்லாமல் படிப்பை மட்டுமே பெறும் குழந்தைகள் உள்ளீடற்ற மனிதர்களாகவே வளருகின்றார்கள்.
போதிய விளையாட்டும், தேவையான படிப்பும் குழந்தைகள் சீராக வளர வழிவகுக்கும்.
குழந்தைகளோடு விளையாடுங்கள்.
குழந்தைகளை விளையாட விடுங்கள்
அவர்கள் மார்க்குக்கு நாங்க கேரண்டி
- கு. செந்தமிழ்ச் செல்வன்

3 comments:

நல்ல பயனுள்ள பதிவு..

பெற்றோர்கள் பிள்ளைகளுடன் விளையாடணும்னு சொல்லியிருக்கீங்களே அது ரொம்ப ரொம்ப முக்கியம். இருவருக்குமிடையே ஆன பிணைப்பை இது அதிக படுத்தும்.

பயனுள்ள பதிவுக்கு நன்றி

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும்..பெரும்பாலான பெற்றோர்கள் இயந்திரகதி வாழ்க்கையிலிருந்து வெளியேறி வருவதே இல்லை..
பொழுதுபோக்கு அம்சங்களுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கினால் எல்லாமே சரியாகி விடும்..

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்