வானம்பாடிகள் ஐயாவை அறிமுகப் படுத்துவது சூரியனுக்கே டார்ச் அடிக்கறது போல.
அவரின் அனுமதியோடு மிகவும் அருமையான இந்தப் பதிவு parent's club வலைத்தளத்தில் வெளியிடப் படுகிறது.
யோசிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்லை, இந்த நிமஷம் முதலில் நம்மை நாமே கேள்வி கேட்டு மாற்றிக் கொள்ளவும் தூண்டும் பதிவு இது. நீங்க என்ன நினைக்கறீங்க? நாம் குழந்தைகளோடு ஒரு மணிநேரமாவது பேசியோ, விளையாடியோ, அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் பெரும்பாலும் மன-உடல் அயர்வோடுதான் வீட்டுக்குள் நுழைகிறோம். நம் முகமும் உணர்வலைகளும் பிள்ளைகளை நம்மோடு பேசத் தூண்டுமாறு இருக்கா..
வேலை நாட்களில் மாலையில் பெரும்பாலும் எனக்கு வீட்டில் தூங்கும் நேரம் தவிர வெறுமனே இருக்க ஒரு மணிநேரம் கிடைத்தாலே அதிகம். இதில் ஒன்று என் கணவரோடோ அல்லது குழந்தையோடோ என்று யாரேனும் ஒருவரை மட்டுமே பேசி கவனிக்க முடிகிறது. குழந்தைக்கு இன்னும் புரிந்து கொள்ளும் வயதாகவில்லை என்பதால், அவளோடு பெரும்பான்மை நேரங்களை ஒதுக்கி செலவிட வேண்டியிருக்கு. கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தாலும், இப்போதும் அவள் பல நேரங்களில் வேறு யாரோடும் பேசினால் கூட அம்மா அம்மா கன்னம் திருப்பி தன்னை பார்த்துக் கொண்டே அவரோடு பேசவேண்டும் என்று நச்சரிப்பது ஆரம்பித்த்தாள். அப்போதுதான் ஒரு வேளை வளர்ப்பதில் ஏதும் தவறு செய்கிறேனோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். முற்றிலும் என் தவறுதான், அவளை பொறுத்த வரையில், எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் கொடுத்தது யார்? நான்தானே... அப்போது முதல், அவளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களோடும் பேசத் தூண்டுவது, வந்த விருந்தாளிகளுக்கு ஸ்வீட், பிஸ்கட், போன்ற சிதறாத உணவு வகைகளை பரிமாற வைப்பது, கையலம்பிக் கொண்டதும் துடைத்துக் கொள்ள துண்டு போன்றவற்றைத் தரத் தூண்டுவது, போகும்போது சாகலேட், மஞ்சள் கிழங்கு, குங்குமம் தருவது என்று அவர்களையும் கவனிக்குமாறு செய்தேன். இப்போது அவளால் விருந்தாளிகள், முதன்முறை எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு புன்னகை கொடுக்க முடிகிறது. கேள்வி கேட்டால் தகுந்த பதிலும் தரும்படி ஆகி இருக்கிறாள்.
குழந்தையை mend செய்ய அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும் என்பது மறுக்க முடியாது.... குழந்தைகள் மட்டும் இல்லை, யாருமே ஏதேனும் தவறு செய்தால் பொதுவில் திட்டாமல் இருப்பது எனக்கு எப்போதும் உதவி இருக்கிறது. இவளிடமும் அப்படியே...
அதே போல கதை சொல்லி அதனூடே நமக்கு வேண்டிய 'அறிவுரைகளை' அல்லது விபரங்களை புத்தியில் ஏற்றுவது இலகுவாக இருக்கிறது. ஏதாவது தவறு செய்து விட்டால், குழந்தைக்கு அது தொடர்பாக கதை சொல்லுங்கள்... அறிவுரையாக இல்லை.
கீழிருக்கும் பதிவை வெளியிட அனுமதித்த வானம்பாடிகள் ஐயாவுக்கு நன்றிகள்.
அன்புடன்,
விதூஷ்.
======================================================
பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..
======================================================
ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம்.
மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை
* தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
* படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
* எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
* தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.
இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது
“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம்.
இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?
மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.
அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம்.
“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.
.
குறள் வழிக்கதைகள்
5 years ago