ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.
ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.
"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.
இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.
கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.
உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.
"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.
"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு
"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.
கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.
"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.
கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.
"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.
"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.
மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.
"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.
"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.
கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.
உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.
"என்ன நண்டு" என்றது கொக்கு.
"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.
மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.
புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.
நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.
"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.
"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.
நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.
கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.
வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.
.
8 comments:
நல்லதொரு நீதிக் கதை :-)
நல்ல நீதிக்கதை வித்யா
யப்பாடி...இன்னொரு கதை கிடைத்து விட்டது...! அப்பா ஆனதைவிட கதை தேடுவது கஷ்டமப்பா :-)
நல்ல கதை
ஹாஹா எனக்கு மிகவும் பிடித்த கதை இது...நன்றி
நல்லாருக்கு கதை..
ஹைய்.. எனக்கும் ரொம்ப பிடிச்ச கதை.
அந்த கொக்குக்கு எந்த கேடும் வரவில்லையே! சரி அந்த குளத்துலேயே தங்கிட்டா அடுத்த் நாள் மீன் புடிக்கிறவங்க வந்து மொத்தமா கொண்டு போயிட மாட்டாங்களா? இது பழங்காலத்து கதை தான், இருந்தாலும் ஏன் இவ்வளவு Logic ஓட்டைகள்?
Post a Comment