பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வயது வித்தியாசமில்லாம எல்லா பெண்ணும் சலிச்சுக்கும்
விஷயம் இது. யாரு கூப்பிட்டா இந்த அழையா விருந்தாளிய?
எப்ப வேணாம்னு நினைக்கிறோமோ அப்ப கரெக்டா வந்திடும்?
இப்படி அர்ச்சனை வாங்குவது வேற யாருமில்லை மாதாமாதாம்
வரும் மாதவிடாய்க்குப் பெயர் தான் அழையா விருந்தாளி.

ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள்னு சொன்னாலே பாவம்! இன்னும்
35 வயசுக்கு கஷ்டப்படணும், தலையெழுத்து!!! நல்லவங்களுக்குத்தான்
40ல நிக்கும்!! என ஏஏஏகப்பட்ட சொலவடைகள் சொல்லி
டெர்ரர் ஆக்குவதே வேலையா இருக்கும். இது மனோதத்துவ
ரீதியில பாதிச்சு மனசுல செட்டாகி மாதவிடாய் என்றாலே
ஏதோ ஒரு வியாதி மாதிரி ஆகி அதனாலே கூட அந்த
சமயங்களில் உபாதைகள் அதிகமா இருக்காம்.


இப்பெல்லாம் பெண் குழந்தைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்திடறாங்க.
அதனால அவங்களுக்கு எல்லாம் சொல்லி வைக்க வேண்டியது
அவசியம். என்னைப்பொறுத்தவரைக்கும் இதை ஒரு
mental preparation அப்படின்னு சொல்வேன். இப்படி செய்வதால
அழுது, பயந்து, மயக்கமாகின்னு பசங்க கஷ்டப்படாம இருக்கும்.
தனது வகுப்பில் ஒரு ஃப்ரெண்ட் பூப்படைந்ததை அம்ருதா
சொல்வதற்கு முன்னே அவளிடம் பேசிக்கொண்டு தான்
இருந்தேன். ஆனாலும் அவள் எதற்கோ தயங்குவது போல
தெரிந்தது.

“நான் தான் எல்லாம் சொல்லியிருக்கேனே பாப்பா! உங்களுக்கென்ன
பயம்?” அப்படின்னு கேக்கவும் அம்மா ஆரம்பிச்சாங்க.
“இல்ல!!! வந்து.... பீரியட்ஸ் வந்தா நானும் உங்களை மாதிரி
கஷ்டப்படுவேனா??? அதை நினைச்சாலே பயம்மா இருக்கு!!இது ஏந்தான்
பெண்களுக்கு வரணும்? ஏம்மா இந்தக் கஷ்டம்??”
நான் இந்தக் கோணத்தில் யோசிக்கலையே. என் நிலை
மகளுக்கு பயம் தரும்னு நினைக்கலையே!!! பெற்றவர்கள்
ஆன பிறகு கற்பதுதானே நிறைய்ய...


பக்கத்தில் உக்கார வெச்சு பேசினேன். இந்த மாதிரி எல்லோருக்கும்
இருக்காது, என் வயசென்ன? உன் வயசென்ன? அப்படி எல்லாம்
இருக்காது! போன்ற பதில்கள் சமாதானம் ஆக்கவில்லை. தேவையாம்மா
இப்படி ஒரு பீரியட்ஸ்? அதனால என்ன பலன்? அப்படின்னு கேட்டாள்.
நானும் முன்பு மாதவிடாய் காலங்களில் பாரதியாரின் பாடல்வரிகளை உல்டா
செஞ்சு “மங்கயராகப் பிறப்பதற்கே மாபாதகம் செய்திடல் வேணுமடா””ன்னு பாடியிருக்கேன்.

எல்லாத்தையும் சொல்லிட முடியுமா??? ஆனா சிலதை அழகாச்
சொல்லலாமேன்னு முயற்சி செஞ்சேன். குழந்தையின் மனதிலிருந்து
பயத்தை எடுப்பது தான் என் நோக்கம்.

அம்ருதம்மா, PUBERTY ஆண்டவன் பெண்களுக்கு கொடுத்திருக்கும்
வரம். ஹார்மோன்ஸ் சேஞ்சாகி சின்னக்குழந்தைக்கும்-
பெரிய பெண்ணிற்கும் இடைபட்ட இந்த நிலை ரொம்ப
முக்கியம். மாதாமாதம் சின்ன சின்ன கஷ்டம் இருக்கும்.
இல்லைன்னு சொல்லலை. இது கிளைமேட்
சேஞ்சானா எப்படி தும்மல், ஜுரம் வருதோ அதுமாதிரி தான்.
அதுக்காக மழைக்காலமே வேணாம், குளிர்காலமே வேணாம்னு
சொல்வோமா!!

இல்ல சொல்ல மாட்டோம். வீ வில் எஞ்சாய் த கிளைமேட் வித் த
கிளைமேடிக் சேஞ்ச் என்றாள் அம்ருதம்மா.

ஆமாம். உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாறுதல்களை சகிச்சுகிட்டாத்தான்
அழகான பெண்மை ஏற்படும். இதுதான் உனக்கு அழகைத் தரும்.
அழகான உடலமைப்பு, நல்ல சத்துள்ள எலும்புகள் எல்லாத்துக்கும்
உன்னை பாதுகாக்கும் ஒரு ஃப்ரெண்டா பீரியட்ஸ் இருக்கு.
45-50 வயது வரைக்கும் கூட வரும் இந்த ஃப்ரெண்டால தான்
நம் எலும்புகள் வலுவா இருக்கு. இதனால நமக்கு எத்தனையோ
நன்மைகள் இருக்கும்மா” என
சொன்னதும் கண்களை அகல விரித்து இவ்வளவு இருக்கா!!
தெரியலையே அம்மா! என்றாள்.

இப்பச் சொல்லு இந்தப் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும்
வேணுமா? வேண்டாமா?

கண்டிப்பாய் வேணும்மா! நீங்க எப்பவும் சொல்வது போல்
with out pain no gain புரிஞ்சுகிட்டேன்! அப்படின்னு சொல்லியும்
மனசு பூர்த்தியா நிறைஞ்ச மாதிரித் தெரியலை.

இனிமே பீரியட்ஸை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்.
அந்த ஃப்ரெண்ட் இல்லாட்டி நமக்கு கஷ்டம் தானே.
ஆக பெண்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் பீரிட்யட்ஸ். சரியா?
என்றேன். சரிம்மா என்ற கண்களில் இருந்த ஒளி மனதுக்கு
நிம்மதியை தந்தது.

எல்லா பெண்களும் மாதவிடாயின் போது
படும் துயரங்களை வீட்டில் இருக்கும் மகளும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறாள் என்பதை நினைவில் வைய்யுங்கள். அதற்காக
வலி பொறுத்து நடிக்க வேண்டுமென்பதில்லை. அந்த
நேரத்தை வேண்டா வெறுப்பான நேரமாக்கி விடாதீர்கள்.

நாம்தான் நம் பிள்ளைகளுக்கு முன்னுதாரனங்கள். நாமே
வெறுப்பு உமிழ பேசினால் அது அவர்களுடைய மனதிலும்
பசுமரத்தாணி போல உட்கார்ந்துவிடும்.

இப்பொழுதெல்லாம் அம்ருதம்மா நான் அதிக டயர்டாக
இருந்தாலோ இல்லை பீ எம் எஸ் சிம்ப்டங்களுடன்(இப்போது
எவ்வளவோ குறைந்துவிட்டன)இருப்பதை உணர்ந்தாலோ,
“ஏம்மா டயர்டா இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் வந்தாச்சா??”
என்று கேட்கிறாள். பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் மகளிடம் பேசுவதும்
ஒரு சுகம். பகிர்ந்துகொள்ள ஒரு தோழி கிடைத்தது போல்
இருக்கிறது.


மாதவிடாயை அழையா விருந்தாளி எனச் சொல்லி வெறுத்து
ஒதுக்காமல் அன்புத்தோழி ஆக்கி ஆனந்தமாக இருப்போம்.

ஒவ்வொரு வீட்டில் பிள்ளைகளும் வேறுபடலாம். ஆனால்
எனக்கும் எனது மகளுக்குமிடையேயான இந்த உரையாடல்
சிலருக்கு உதவலாம் என்பதால் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

12 comments:

nice post and use ful info. also insist on rubella vaccine after attaining puberty in your next post. thank you .

www.doctorrajmohan.blogspot.com

என்ன ஒரு அழகான பாடம் ,

women will not be affected by heart attack till the mentrual period. the hormones protect them till they attain menopause from cardiac disease.

அருமையான இடுகைப்பா.

இப்படி ஒவ்வொரு பெற்றோரும் சிந்திச்சாவே நம்ம குழந்தைகள் வைரமா ஜொலிச்சுரும்.

இனிய பாராட்டுகள் மை ஃப்ரெண்ட்.

இது இயற்கை என்பது உணரவேண்டியது ரொம்ப முக்கியம்.

நன்றி டாக்டர் ஜகன் மோகன்,

தங்களின் முதல் வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாருங்கள்

நன்றி யாதவன்

ஆமாம் துளசி டீச்சர்,

அந்தக்கால பெற்றோர் போல இப்ப இருக்க முடியலை. நிறைய கற்கிறோம், நிறைய்ய்ய வேலை இருக்கிறது, சில சமயம் சவாலாகவும் இருக்கிறது. ஒவ்வொன்றையும் மனதில் நல்லவிதமாக புரிய வைக்க மெனக்கெட வேண்டும்.

வருகைக்கு நன்றி

super post. Well written.

குழந்தைகளிடம் நிச்சயமாக பேசவேண்டிய விஷயம் இது...

நன்றி வானதி

நன்றி அமைதிச்சாரல்

Wowwwww.. great post.. :-))

thanks for sharing

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்