எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் இவனுக்கு புரியமாட்டேன் என்கிறது என்று சலித்துக் கொள்ளும் பெற்றோர் பலர். புரிய வைப்பதற்காக நாம் செய்யும் முயற்சிகள் பல தோல்வியையே தழுவுகின்றன. அதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வோம்.
பொதுவாக புரிதல் எப்படி நடக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்வோம். நமக்கு ஏற்கெனவே தெரிந்த அல்லது புரிந்த ஒரு விசயத்தை வைத்தே புதிய விசயங்களை தெரிந்துகொள்கிறோம் அல்லது புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு குச்சியைப் (அல்லது கம்பி) பற்றி நன்றாக தெரியும். அது ஒரு சாதாரண பொருள். அதனால் அதை பார்த்திருக்கும், பயன்படுத்தியும் இருக்கும். ஒரு பேனாவை அதன் கையில் கொடுக்கும்பொழுது, அதை ஒரு குச்சியாகத்தான் குழந்தை பார்க்கும். நாம் மூடியை திறந்து எழுதிக் காண்பிக்கும்போது குச்சி எப்படி எழுதுகிறது எனும் வியப்போடே பார்க்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கீழ்க்கண்டவற்றை புரிந்துகொள்ளும்.
1. குச்சி மாதிரியே இருக்கிறது ஆனால் எழுதுகிறது.
2. ஒரு பக்கம்தான் எழுதுகிறது, இன்னொரு பக்கம் எழுதமாட்டேன் என்கிறது.
3. எழுதுகிற பக்கம் கூராக இருக்கிறது. அதுதான் எழுதுகிறது.
4. குச்சியை ஒடிக்க முடியும் பேனாவை ஒடிக்க முடியவில்லை.
இப்படி பேனாவைப் பற்றிய புரிதல் படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். இவை எல்லாம் முதல் பார்வையிலேயே புரிந்துவிடும் என்றும் சொல்ல முடியாது, இதே வரிசையில் நிகழும் என்றும் சொல்ல முடியாது. குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.
நாம் சொல்லித் தரும்போது என்ன நிகழ்கிறது? குழந்தை குச்சியுடன் ஒப்பிட்டு பேனாவை புரிந்துகொண்டிருக்கும் வேளையில், நாம் Lead penடன் (பந்து முனைப் பேனா) விளக்கிக் கொண்டிருப்போம். அதனால் குழந்தை ஒரு முரண்பட்ட மன நிலையில் இருக்கும். நாம் ஒப்பிடும் Lead penஉடனேயே குழுந்தையும் ஒப்பிட்டாலும் கூட, முதல் கருத்தை குழந்தை புரிந்து உள்வாங்கிக் கொண்டிருக்கும்போதே நாம் நான்கைந்து கருத்துக்களை ஒப்பித்துக்கொண்டிருப்போம். சரி மெதுவாக ஒவ்வொரு கருத்தாக சொல்லலாம் என்றால், குழந்தைகள் வேகமாக புரிந்துகொண்டிருக்கும் வேளையில் சலிப்படைய செய்துவிடும். இப்படி பல காரணங்களால் நாம் சொல்லித் தரும்போது முரணபாடான சூழ்நிலையை உருவாக்கி புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறோம்.
சரி நாம் என்னதான் செய்வது. உங்களுக்கு தெரிந்த வழியில் ஒரு முறை சொல்லிவிட்டு புரிந்தாலும் புரியாவிட்டாலும் அடுத்த பாடத்திற்கு சென்றுவிடுங்கள். புரிய வைத்து விட்டுத்தான் அடுத்த பாடம் செல்வேன் என்று அடம் பிடிக்காதீர்கள். சொல்லித் தரும்போது சிறிது நேரம் இடைவேளை விடுங்கள். அந்த நேரத்தில் அவர்கள் விளையாண்டாலும் படித்ததை புரிந்தகொள்ள முயற்சிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் சிறிது நாள் கழித்து அவன் புரிந்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
உதாரணத்திற்கு எனது மகனுக்கு கல்-கால், பல்-பால், படம்-பாடம், படி-பாடி என்று உச்சரிப்பை வைத்து எங்கே கால் வரும் என்ற வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன். அவனுக்கு புரிந்தது போல் இருந்தது. Test வைத்தால் ஒன்று சரியாக எழுதினான், சிலவற்றை தவறாக எழுதினான். மறுபடியும் விளக்க முயற்சித்தேன். அவன் முகத்தில் ஒரு சலிப்பு தெரிந்தது. Rest என்று சொல்லி, விட்டு விட்டேன். நான் கணினியின் முன் அமர்ந்திருந்தேன். அவன் ஒரு சிறிய கார் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். விளாயாடிக்கொண்டே கல் கால் வராது, கால் கால் வரும் (குழப்பிக் கொள்ளாதீர்கள் ஹி! ஹி!) பல் கால் வராது பால் கால் வரும் என்று அவனாகவே பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ‘அப்பா பல்லுக்கு கால் வராது, பாலுக்கு கால் வரும் correct தானே’ என்றான். ‘very good சிபி correct ஆ சொல்றே’ என்று பாராட்டிவிட்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன், அவன் விளையாட ஆரம்பித்து விட்டான். இந்த நிகழ்ச்சி எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. நாம் புரிய வைக்க பல முறை முயற்சி செய்யும்போது நடக்காத புரிதல், பிறகு எப்படி நடந்தது என ஆராயும்போதே மேற்கண்ட கருத்துக்கள் எனக்குத் தோன்றின.
எனக்கு புரிந்தும் புரியாமலும் இருந்த ஒரு விசயத்தை உங்களுக்கு புரியவைத்து விட்டேன் என நினைக்கிறேன். புரிந்தால் புரியுதுன்னு சொல்லுங்க.புரியலைனா புரியலைனு சொல்லுங்க. புரியாம புரிஞ்சதுன்னு சொன்னா எப்பவுமே புரியாம போகும். புரிஞ்சத புரியலன்னு சொன்னா புரிஞ்சதும் புரியாம போகும். நான் சொல்றது புரிஞ்சுதா, புரியலையா? உங்களுக்கு புரிஞ்சிதா இல்லை புரியலயான்னு எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க.
குறள் வழிக்கதைகள்
5 years ago
3 comments:
இது பேரண்ட்ஸ் கிளப்பின் 150ஆவது பதிவு. பாராட்டுக்கள் டாக்டர். அருமையான பதிவு
ரொம்ப நல்ல பகிர்வு, உங்கள் பதிவு சூப்பர்
150 ஆவது பதிவிற்கு பாராட்டுக்கள்
Post a Comment