நல்லொதொரு குடும்பம் பல்கலைக்கழகம் இதை
யாரும் மறுக்க முடியாது. இதை அனுபவத்தில்
உணர்ந்தவர்கள் பலர். இப்படி ஒரு நல்ல குடும்பம்
தனக்கு அமையவில்லையே என மறுகும்
உள்ளங்கள் இல்லாமல் இல்லை.
மனித இனத்துக்கு முக்கியமான சந்தோஷம்
நல்ல குடும்பச் சூழல்தான். கைநிறைய்ய சம்பாதிக்கும்
பலரும் ஏங்குவது அன்புக்குத்தானே!! கொடுக்க
கொடுக்க ஆனந்தம் தருவது அன்பு. இனிமையான
கதகதப்பான குடும்பச் சூழல் இந்த ஏக்கத்தை நிவர்த்தி
செய்துவிடும். நம்பிக்கை, புரிதல்,கருணை ஆகியவற்றை
அள்ளித் தரும். சொர்க்கத்தை இறந்த பின் தான் அடைய
வேண்டும் எனும் ஏக்கம் இல்லாமல் வாழும் வீடே
சொர்க்கமாகி பிரச்சனைகள் எதுவந்தாலும் சுமுகமாக
தீர்க்க வழி கொடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் வளரும்
குழந்தைகள் வளர்ச்சி அளவிட முடியாமல் அதீதமாகவே
இருக்கும்.
பெற்றோரின் பங்கு:
பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு வசனம்,
“உலக அழகியும், உலக அழகனுமே திருமணம்
செய்து கொண்டாலும், ஒருவர் முகத்தை ஒருவர்
எத்தனை நாள் பார்த்துக்கொண்டிருப்பார்கள், போரடிக்கும்”
கணவன் - மனைவி வாழும் வாழ்க்கையின் பூரணம்
அவர்கள் அன்பால் பிறந்த குழந்தை.
குழந்தையை பெற்றால் மட்டும் போதாது. குமுதமோ,
குங்குமமோ நினைவில்லை பிள்ளை வளர்ப்புத் தொடர்
வருகிறது. அதில் குறிப்பிட்டிருப்பதுபோல் பிள்ளையை
முறையாக வளர்க்க மனம் இருந்தால் மட்டுமே குழந்தை
பெற்றுக்கொள்வது நலம். தன் காலில் நின்று முன்னேறும்
விதமாகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் குழந்தையை
வளர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
சொத்து கொடுக்கிறோமோ இல்லையோ அன்பையும்,
கல்வியையும் கொடுத்தால் போதும். அதீத அன்பு ஆளையே
அழித்துவிடும். கவனம் தேவை. அன்பு என்றால் தன்னலமற்ற
அம்மாவின் அன்பைத்தானே அனைவரும் சொல்வோம்.
அன்னைதான் குழந்தையின் முதல் ஆசிரியை. இதில் எந்த
மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பிள்ளை மேல் இருக்கும்
அதீத பாசத்தினால் சில அம்மாக்கள் கண்டிப்பு இல்லாமல்,
தகப்பனிடமும் சொல்லாமல் பொத்தி பொத்தி வளர்த்து
கெடுத்துவிடுவார்கள். கணவனும் மனைவியும் நன்கு புரிந்து
பேசி குழந்தை வளர்ப்பில் ஈடு பட வேண்டும்.
அன்னையின் அன்பு, தந்தை கற்றுக்கொடுக்கும் உலக அறிவு
இரண்டும் முறையாக சரியாக குழந்தைக்கு கிடைத்தால் அதன்
வளர்ச்சி மேல் சந்தேகமே வேண்டாம்.
அன்னை, தந்தை இருவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
நல்லது கெட்டது சொல்லிக்கொடுப்பது, ஒழுங்கு நடவடிக்கைகளின்
வரைமுறைகள், அன்பு என கலந்தே வளர்க்க வேண்டும்.
பெற்றோர்-குழந்தை உறவு முறை:
தனக்கு கிடைக்காததும் தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள் தான் பெற்றோர்கள். சிறு குழந்தையிலிருந்து
வளர்த்து வருபவர்கள். அதுவரை தன் பெற்றோர்கள் தான் உலகம்
என நினைத்து, மகிழ்ந்து, பிரமித்து பார்த்து வந்த பிள்ளை
பதின்ம வயதில் மாறிப்போவதேன்?????
காரணம் வேறொன்றும் பெரிதாக இல்லை. தனக்கான அடையாளத்தை
எதிர்பார்க்கும் வயது இது. பெற்றோரை விட்டு ஓடிப்போய் தன்
அடையாளத்தை காட்ட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால்
அவர்களை சார்ந்திருப்பது இதற்கு தடையாக இருப்பதாக நினைப்பார்கள்.
தனது நண்பர்களையே அதிகம் சார்ந்து இருப்பார்கள்.
அப்பாவைவிட அம்மாக்கள்தான் பதின்மவயது பிள்ளைகளுக்கு
வில்லிகளாகத் தெரிவார்கள். தகப்பன் வேலைப்பளு, பிள்ளைகளின்
எதிர்காலம் என ஓடிக்கொண்டிருப்பவர். தாயோ பக்கத்திலேயே
இருந்து அனுஅனுவாக வளர்ச்சியை பார்ப்பவள். சின்ன அசைவும்
சந்தேகத்தை தந்து தாயையை அலர்ட்டாக்கிவிடும்.
சில சமயம் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது,”இதை அப்பாவிடம்
சொல்லவேண்டாம் என்பார்கள்”, சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாகி கடைசியில்
கணவனிடம் சொல்லிவிடுவாள். பிள்ளை கடுப்பாகி விலக ஆரம்பிக்கும்.
சொல்லாமல் போனால் கணவன் மனைவி உறவுக்குள் விரிசல்
வந்துவிடும் என அந்தக் குழந்தைக்கு தெரியாது!!
தவிர அம்மாவிடம் அதிகம் பிரச்சனையாக காரணம் நண்பர்கள்,
பாடங்கள், ஹோம் வொர்க்குகள்,டிவி அதிகம் பார்த்தல்,
அறையை,வீட்டையை சுத்தமாக வைக்கச் சொல்லுதல்
போன்ற சின்ன சின்ன விஷயங்களும் பிரச்சனையை
தரும். அரசியல் போல பெரிய்ய பிரச்சனை இல்லை. அருகில்
அமர்த்தி பேசி புரிய வைக்க வேண்டும்.
(peer pressure என சென்ற பதிவுகளில் படித்தோமே,
அது எப்படி பாதிக்கிறது என்று என் அனுபவத்தில் உணர்ந்ததை
உங்களிடம் பகிர்கிறேன்.)
6 மாதங்கள் முன்பு ஆஷிஷின் கிராப் கொஞ்சம் குறைய்ய
ஆரம்பித்தது. மதிப்பெண் குறைந்தால் அடித்து திட்டுவதை
விட பிள்ளைகளுடன் உட்கார்ந்து எங்கே தவறு நடக்கிறது?
என ஆராய்ந்து அதை முன்னேற்ற வழி சொல்வது என் பாணி.
காரணம் கேட்ட பொழுது அவன் சொன்னது,”என் நண்பர்கள்
கீழே விளையாடுகிறார்கள், நானும் விளையாட வேண்டும்.
அப்பொழுதுதான் படிப்பேன்” என்றார்.
வெள்ளிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை வெளியே விளையாட
அனுப்புவேன். மற்ற நாட்களில் யோகா, தியானம்,ஸ்லோகம்
என நானே சொல்லிக்கொடுப்பது பழக்கம். இரண்டு நாள் அம்ருதா
ஆஷிஷ் இருவர் மட்டும் பார்க்குக்கு சென்று
ஷட்டில் விளையாடுவார்கள். விளையாட்டு,
பிறருடன் கலத்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்
மற்ற விஷயங்களும். அனுப்ப மாட்டேன் என்றால் பிடிவாதம்
ஜாஸ்தியாகும். குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட
வேண்டும் எனும் கண்டீஷனுடன் தினமும் விளையாட அனுப்பினேன்.
யோகா,தியானம், ஸ்லோக வகுப்புக்கள் நடக்கவில்லை. பரிட்சைகள்
முடிந்து மதிப்பெண்கள் பார்த்தால் இன்னும் குறைந்து விட்டது.
“அனுப்பினால் படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்றாயே!
இப்போது என்னாச்சு? ஏன் குறைந்தது?” எனக் கேட்டேன்.
பதிலே இல்லை.” இப்பொழுது என் சொல்படி கேட்டே ஆக வேண்டும்!
உன் வழியில் சென்றதில் பலனில்லை. என் வழியில் வந்தால்
விளையாட்டு, படிப்பு மற்றும் மற்ற கலைகளுக்கும் நேரம்
இருக்கிறது.” என்றதும் யோசித்து ஒத்துக்கொண்டான். மதிப்பெண்
நல்ல படியாக வந்தது. இப்போது நானும், பிள்ளையும்
சந்தோஷம்.
விட்டு பிடிப்பது எனும் டெக்னிக் தான். இது அதிகம் விட்டு
விடாமல் கொஞ்சம் கயிறை என்னிடமும் வைத்துக்கொண்டு
விட்டேன். பலன் கிடைத்தது. இந்த டெக்னிக் தான் பதின்மவயதுக்கு
ஒத்துவரும். அவர்கள் வழியிலேயே போய் அவர்களை
மாற்றுவது.
மதிப்பெண் பற்றி பேசும்பொழுது வகுப்பில் முதல் மதிப்பெண்,
எல்லாவற்றிலும் 90 க்கு மேல்தான் வரவேண்டும் என அடம்
பிடிக்க மாட்டேன். மனனம் செய்து 100 வாங்குவதை விட
புரிந்து 75 வாங்கினாலும் சந்தோஷம்.
ஆஷிஷிடம் நான் சொல்வது இதுதான்,”நல்லதோர்
விணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோன்னு
பாரதியார் பாடியிருக்கிறார். உனக்கு படிப்பு ஏறாத
முட்டாள் என்றால் என் பிள்ளைக்கு இருக்கும் திறன்
அவ்வளவுதான் என விட்டுவிடுவேன்.
வேறு வகையில் உன் வாழ்க்கை அமைய என்ன செய்யவேண்டுமோ
அதற்கான முயற்சி செய்வேன். அபாரமான
உன் திறமையை நீயே வீணாக்கி கொள்ளும் பொழுது
மனம் பாரமாகிறது”. (இருவரும் இப்போதும் நல்ல
மதிப்பெண்கள், நான் வற்புறுத்தாமலேயே கிளாஸ் செகண்ட்
டாப்பர் மதிப்பெண்கள் பெறுகிறார்கள்)
அப்புறம் சின்ன சின்ன பாராட்டுக்கள் மிக முக்கியம்.
ஊக்கம்தரும் அந்த வார்த்தைகள் செடிக்கு உரம் போல.
பசங்க படத்தில் ஒரு காட்சி. சைக்கிள் ரேஸ் போட்டியில்
தன் பெற்றோர் தன் கூட கைதட்டி வரவேண்டும் என
அன்பரசு கேட்பான். ”சரிப்பா!!” என்று மொத்தக் குடும்பமும்
கைதட்டி உடன் வரும்.
எதிர்வீட்டு ஆசிரியர்,”பையனை ரேஸ் ஆடச்சொன்னா
மொத்த குடும்பமும் கூட ஓடுது” என கமெண்டினாலும்
ஜெயித்தது பெற்றோரின் ஊக்கத்தோடு பங்குபெற்ற
அன்பரசு தான்.
”தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும்
புகழுறைகள்” அப்படின்னு பாடியிருக்காங்க.அதனால்
ஓவர்டோஸாகிப்போகாமல் நிஜமாகவே அவர்களுக்கு ஊக்கம்
தரும் விதத்தில் பாராட்டுக்கள் அவசியம். சின்ன ட்ரீட்
கொடுக்கலாம்.
உடன்பிறப்புக்களுடனான உறவுமுறை:
நண்பர்களுடன் தினம் விளையாண்டாலும் ஆஷிஷ் அம்ருதா
இருவர் மட்டும் சில சமயம் தனியாக விளையாடவேண்டும்
என சொல்லியிருக்கிறேன். காரணம் அண்ணன் தங்கையின்
உறவு பலப்படும். வயது ஏற ஏற உடன் பிறந்தவர்களுடன்
உறவில் கொஞ்சம் விரிசல் விழும். அதிலும் அதிக வயது
வித்தியாசம் இருந்தால் ரொம்ப கஷ்டம்.
ஒருவருக்கு மட்டும் அதிக அன்பு கிடைப்பதாக மற்ற பிள்ளை
நினைப்பது, அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் சண்டைகள்,
பொறாமை ஆகியவை இடைவெளியை கொடுக்கிறது.
பெற்றோர்கள் இருவரிடம் எப்படி நடக்கிறார்கள் என்பதை
பொறுத்தும் இது அமையும். ஆண் குழந்தைதான் பெரிது
என கொஞ்சம் இழிவாக நடத்தப்படும் பெண்குழந்தை, அல்லது
அடுத்தவர் வீட்டுக்கு போய்விடுவாள் என்பதற்காக அன்பை
அள்ளிக்கொட்டி வளர்க்கப்படும் பெண்குழந்தை இருக்கும்
வீட்டில் அன்புக்கு ஏங்கும் ஆண்மகன் இவர்கள் மனதில்
இருக்கும் வடுக்கள் அவர்களின் முதுமை காலத்திலும்
கூட ஆறாத வடுக்கள்.
இது குழந்தைக்கு தன் மீதே வெறுப்பு வர வைக்கும்.
இதனாலேயே தன் உடன் பிறந்தவரைவிட தன்
நட்புடன் காலத்தை கழிக்க விரும்புவார்கள்.
நல்லதொரு குடும்பத்தை பிள்ளைக்கு அளித்து
நல்லவிதமாக வாழ வழி செய்வோம்.
நீதிக்குத் தலைவணங்கு படத்தின்
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்
பாட்டு பல கருத்துக்கள் சொல்லும்.
இதோ உங்களுக்காக.
குறிக்கோளற்ற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
அதைப்பற்றிய பதிவோடு திங்கள் கிழமை
சந்திக்கிறேன்.
மஹாராஷ்ட்ராவில் 23-பெப்ரவரியிலிருந்தும், தமிழ் நாட்டில் மார்ச் ஒன்னாம் தேதியிலிருந்தும் பரீட்சை சீசன் ஆரம்பிக்கவுள்ளது.மொதல்ல பன்னிரண்டாம் வகுப்புக்கான பரீட்சைகளும்,அப்புறம் பத்தாம் வகுப்புக்கான பரீட்சைகளும் அதை தொடர்ந்து entrance exam களும் வரிசை கட்டி வரப்போகுது. (எங்க வீட்டிலும் திருவிழா உண்டு).
- பரீட்சைக்கு முதல் நாளே ஹால் டிக்கெட், பேனா, ரீஃபில், பென்சில்,(தேவைப்பட்டால் கொஸ்டின் பேப்பரில்,ச்சாய்ஸ் கேள்விகளை குறித்துக்கொள்ள)ரப்பர், கணித உபகரணங்கள்,இன்னபிற(பிட் இல்லை)வற்றை சரிபார்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.காலையில எந்திரிச்சு, ஓடாதீங்க.
- எக்ஸாம் சென்டரில் குறைந்தது இருபது நிமிடம் முன்பே இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்க. தேவையற்ற டென்ஷனை இது தவிர்க்கும்.
- முக்கியமான விஷயம், காலை ஆகாரத்தை தவிர்க்கவேண்டாம். ஏதாவது லைட்டாகவாவது எடுத்துக்கொள்வது நல்லது. அட்லீஸ்ட் ஃப்ரூட் சாலட்,வெஜிடபிள் சாண்ட்விச் ஏதாவது எடுத்துக்கோங்க.மூளை சோர்வடையாம இருக்கும்.
- அணியும் உடைகள் இறுக்கமாக அசௌகரியமாக இல்லாம பாத்துக்கோங்க.கோடை ஆரம்பிச்சுட்டதால பரீட்சை எழுதும்போது வேர்த்து வழிஞ்சு,கவனம் சிதறி அவஸ்தைப்பட வேண்டாம்.
- முக்கியமான ஒன்று.. வீட்டுக்கு வந்தப்புறம் கொஸ்டின் பேப்பரை கையில் வெச்சிக்கிட்டு,விடைகள் கரெக்டா தப்பான்னு, உங்களுக்கு நீங்களே மார்க் போடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. அடுத்த நாளே வேற பேப்பருக்கான எக்ஸாம் இருந்தா இது நம்ம மனவுறுதியை அசைச்சு பாக்க வாய்ப்பு இருக்கு. தைரியமானவங்களை இந்த லிஸ்டில் சேக்கலை :-)))
- ஆன்ஸர் ஷீட்டை திரும்ப கொடுக்கும்போது சரியா கட்டியிருக்கீங்களான்னு சரிபார்த்துக்கோங்க. பேப்பர் ஏதாவது விட்டுப்போச்சுன்னா அப்புறம் ஐயோன்னாலும் வராது.. அம்மான்னாலும் வராது. உங்க வாழ்க்கை உங்க கையில்.
- அனைவருக்கும்(என் பொண்ணு உட்பட),எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க, பதிவுலகம் சார்பாக எங்க வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
ஆறு, குளங்கள் ஆகியவற்றுக்கு இருபுறமும் கரை இருக்கும்.
அந்தக் கரைக்குள் அடங்கி ஆறு போவது அழகாக இருக்கும்.
கரையைக் கடந்தால் ஊருக்குள் வெள்ளம் தான். அந்தத் தண்ணீரையே
அப்போது திட்டுவோம்.
பதின்மவயதில் உடல்வளமும்,மனவளமும் கரைகள் போன்றது.
பல பிள்ளைகள் இந்த வயதில் கட்டுமஸ்தான உடம்பு வளர்க்க
ஆசைப்பட்டு உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல விரும்புவார்கள்.
ஆனால் 18 வயதற்கு பிறகு தான் அத்தகைய கூடங்களுக்கு
செல்ல வேண்டுமாம். பலருக்கு அந்த பயிற்சி நிலையத்தில்
வாங்கப்படும் தொகை கட்ட முடியாது.
உடலுக்கு யோகக்கலை தரும் பலன் போல வேறொன்றும்
தர முடியாது. இதை யோகைக்கலை கற்றவர்கள் நன்கு அறிவார்கள்.
யோகா அதுவும் பதின்மவயதுப்பிள்ளைகளுக்கு மிகவும் உதவுகிறது.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலர் அதிக
பருமனாகவோ, உடல் இளைத்தோ காணப்படுவார்கள். இதில்
ஆண்/பெண் என்ற பேதமில்லை. யோகா பயிற்சி தேவையில்லாத
சதையை குறைப்பது மட்டுமில்லாமல் உடல்பலம், ஒருங்கிணைந்த
கவனம்,தன்னம்பிக்கை, மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த
உதவுகிறது.
சூர்ய நமஸ்காரம் எனப்படும் யோகப்பயிற்சி சந்தியாவந்தனத்துக்கு
ஈடானது என்றும் சொல்லலாம். வெறும் சூரிய நமஸ்காரம்
மட்டும் செய்வதை POWER YOGA என்பர். இதை இரட்டைப்படை
எண்ணிக்கையில் செய்வதுதான் சிறந்தது. இரண்டுகால்களாலும்
வந்தனம் செய்வது போல கணக்காகும்.
சூரியன் தரும் சக்தி யாரும் வேண்டாமென்று சொல்லமாட்டார்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இதைச் செய்யலாம்.
வேறெந்த யோகப்பயிற்சியும் செய்ய நேரமில்லாதவர்கள் கூட
இந்த சூரிய நமஸ்காரத்தை மட்டுமே செய்து சக்தி பெறலாம்.
மிக முக்கியமான விடயம் யோகப்பயிற்சி செய்துவிட்டு உடன் குளிக்கக்
கூடாது. உடலுக்கு தேவையான சக்திகள் சேரும் பொழுது குளித்தால்
சக்தி உடலில் ஒட்டாமல் போய்விடும். குறைந்த பட்சம் 30 நிமிடங்கள்
கழித்து குளிக்கலாம். வெறும் வயிற்றில் அல்லது உண்டு உண்டு முடித்து
1 அல்லது 2மணி நேரம் இடைவெளியில் செய்ய வேண்டும். அதிகாலையில்
சுபவேளையில் செய்வதில் எந்த தயக்கமும் இல்லை. பலன் அதிகம்.
சிறந்த குருவின் துணை மிக மிக அவசியம்.
பதின்மவயதில் யோகாவின் பலன் பற்றிய இந்தச் சுட்டி.
yoga poses for teens
இந்த தளத்தில் பதின்ம வயதுக்காரர்கள் யோகா செய்வதன்
பலன்கள் விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
யோகா பற்றி மேலும்
உடலுக்கு யோகா. மனத்துக்கு?????
மனத்தை கட்டுப்படுத்த தியானம் அவசியம். சிறந்த ஆசிரியரைக் கொண்டுதான் தியானப் பயிற்சி பெற்று அன்றாடம் செய்ய வேண்டும்.
இந்த வீடியோவில் தியானத்தைப் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குருவைத் தேடி நாம் அலைய தேவையில்லை.
தற்போது எல்லா ஊரிலும் Art of living, ISHA, மனவளக்கலை பயிற்சி
மன்றங்கள் இருக்கின்றன. அங்கே ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்த மாதிரி
பயிற்சி வகுப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் பிள்ளைகளைச் சேர்த்து
(நாமும் சேர்ந்து பயன் பெறலாம்) பலன் பெற உதவலாம்.
Art of living இணைய தளத்திற்கு
ISHA இணைய தளத்திற்கு.
artoflivingல் YES என்ற பயிற்சி பதின்மவயதுக்காரர்களுக்காகவே
இருக்கிறது.
ஒரு வாரக்காலம் போதும் பயிற்சிக்கு. எதிர் வரும் விடுமுறையில் இந்தப்
பயிற்சி பெறவைத்து அதை அன்றாடம் வீட்டில் செய்யப் பழக்கினால் போதும்.
மூச்சுப் பயிற்சி செய்யப் பழகினால் எந்த பிரச்சனையுமே இல்லை.
நம் உடலையும், மனதையும் மூச்சுப்பயிற்சியினால் கட்டுப்படுத்தி
முறையாக, ஆரோக்கியமாக வாழலாம்.
பிள்ளைகளுக்கு இவைகளின் அவசியத்தை போதிப்போம்.
மகிழ்வான வாழ்வு அவர்கள் வாழ வழிவகுப்போம்.
ஆர்டிஸ்ட் மாயா அவர்களின் ஓவியத்தில் உருவாகும் அழகான
அழைப்பிதழ்கள் பற்றி முன்பே சொல்லியிருந்தேன். அவர் வரைந்த
உபநயன பத்திரிகை ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்த
விடயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அதைத் தொடர்ந்து மேலும்
பல விடயங்களை கற்றதை இங்கே பகிர்கிறேன்.
மத சம்பந்தமான பதிவோ, மத ஆதரவு பதிவோ அல்ல இது.
அப்படி ஏதும் விவகாரமாக புரிந்து கொண்டு பின்னூட்டத்தாக்குதல்கள்
நிகழ்த்த விரும்புபவர்கள் மேலே படிக்க வேண்டாம். அப்படிப்பட்ட
பின்னூட்டங்கள் பிரசூரிக்கப்பட மாட்டாது.
சத்திரியர்கள், பிராமணர்கள்,வைஸ்யர்கள்(நம்மூரில் ஆசாரிகள்)
இவர்களில் மட்டும்தான் பூணூல் அணியும் பழக்கம் இருக்கிறது.
இந்த பூணூல் ஏன் அணிய வேண்டும்? ஏன் கட்டாயம்?
அதற்கும் பதின்ம வயதுக்கும் என்ன சம்பந்தம்? கட்டாயம்
தெரிந்து கொள்வோம்.
பூணூல் அணியும் சடங்கு கல்யாணத்திற்கு இணையாக
விமர்சையாக செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆனால் பலரோ
திருமணத்திற்கு முதல் நாள் தான் பூணூல் பங்ஷன் செய்வார்கள்.
உண்மையில் பூணூல் சடங்கு செய்ய ஏற்ற வயது 7-11 தான்.
பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று சொல்வார்கள்.
உபநயனம்-அதாவது மூன்றாவது கண்ணை திறக்கும் நிகழ்ச்சி.
ஞானத்திற்கு மூன்றாவது கண் அவசியம். அந்தக் காலத்தில்
குருகுல பாடத்திட்டம் இருந்தது. பூணூல் அணிந்தபிறகே இங்கே
அனுமதி கிடைக்கும். (இப்போதும் வேத பாடசாலைகளில்
இம்முறை இருக்கிறது)
7 வயதில் ஏன் உபநயனம் செய்கிறார்கள் தெரியுமா?
உபநயனத்தை inviting youth என்று சொல்லலாம்.
சிறு குழந்தையிலிருந்து பதின்ம வயதிற்குள் அடி எடுத்து
வைக்கும் நிகழ்ச்சி எனலாம். (பெண்களின் பூப்பெய்துதலை கொண்டாடுவது
போல்) பதின்ம வயதில் ஏற்படும் மாறுதல்கள் உடல், மனம்
இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
பதின்ம வயதுக்குத் தன்னை தயார் செய்து கொள்ள உபநயனம்
பயனாகிறது. அது எப்படி?
உபநயனம் ஆன சிறுவன் தினமும் 3 வேளை சந்தியாவந்தனம்
எனும் பூஜையை செய்ய வேண்டும். காலை, நண்பகல், மாலை
வேளைகளில் இது கண்டிப்பாய் செய்யப்பட வேண்டும். செய்வதால்
என்ன பயன். அங்க தான் இருக்கு மேட்டர்.
இந்த சந்தியாவந்தனம் செய்யும் பொழுது ஆச்சமனியம் செய்வார்கள்.
அதாவது 3ஸ்பூன் தண்ணீரை எடுத்துக்கொள்வது. இது ரெய்கி பாஷையில்
சொன்னால் “cleanising" and helps in the flow of bio-electricity
within the body.
பிராணாயாமம்- யோகக்கலை தெரிந்தவர்கள் சொல்வார்கள் இது
மூச்சுப் பயிற்சி என்று. மூச்சுப்பயிற்சி செய்யக்கற்றவர்களின்
உடலில் இருக்கும் சக்கரங்கள் முறையாக வேலை செய்யும்.
முறையாக பிராணாயாமம் கற்று அதை தினமும் பயிற்சி
செய்வதால் மன அழுத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகளை
கட்டுக்குள் கொண்டு வர முடியும். சுவாசம் சரியாக இருந்தாலே
எல்லாம் சரியாக வேலை செய்யும்.
அடுத்ததாக காயத்ரி ஜபம்:
அறிவை போதிக்கும் தந்தை தானே குருவாகி தனயனுக்கு
காயத்ரி மந்திரத்தை போதிக்கிறார்.
அன்னை காயத்ரிக்கு மிஞ்சிய சக்தியே கிடையாது. எந்த ஒரு
தெய்வத்திற்கு அதனதன் காயத்ரி மந்திரத்தை சொல்லி பூஜிப்பதால்
பலன் பன்மடங்கு அதிகமாகும்.(காயத்ரி பற்றி விரிவான பதிவும்
வரும்) சந்தியாவந்தனத்தில் மிக முக்கியமாக காயத்ரி ஜபம்
செய்வது தான். எத்தனை முறை காயத்ரியை ஜபிக்கிறார்களோ,
அவ்வளக்களவு சக்தி கிடைக்கும்.
இது ஒரு வகை தியானம். தியானம் செய்தால் மனம் அமைதி
அடையும். தியானம் செய்வதால் மனத்தை ஒருங்கிணைக்க
முடியும். concentration அதிகமாகும். இதனால் நல்ல பலன்
கிடைக்கும்.
மனத்தை ஒருங்கிணைக்க கற்றவனுக்கு பதின்ம வயதை கடப்பது
கஷ்டமாக இருக்காது. சுகமான படகுப்பயணம் போல் அமைந்துவிடும்.
கோபத்தை ஆளக்கற்க முடியும்.
பதின்மவயதில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு
முக்கியம் மன ஆரோக்கியம்.
முஸ்லீம் சகோதர்களில் கூட 5 வேளை தொழுகை கட்டாயம்.
மதங்கள் மனிதத்தைத்தான் போதிக்கின்றன. இந்து மதத்தில்
பத்மாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது உசிதம் என்றால்
இஸ்லாமில் வஜ்ராசனம்.
வஜ்ராசனம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கருப்பை பிரச்சனைகளுக்கு
அருமருந்து. வஜ்ராசனத்தில் 10 நிமிடம் உட்கார்ந்தால் 4 கிமீ தொலைவு
நடந்ததற்கு சமம். வஜ்ராசனம் ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
சந்தியாவந்தனத்தில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் பலவற்றிற்கும்
பல அர்த்தம் இருக்கிறது. உதாரணமாக: ஷ்ரயம் ஆவாஹயாமி, பலம் ஆவாஹயாமி,
சரஸ்வதிம் ஆவாஹயாமி என சொல்லி புகழ், பலம், கல்வி ஆகிய்வற்றை
தனக்குள் இருத்துதல் என பல இருக்கிறது. அது முழுதும் எனக்குத்
தெரியாது. அந்த அழைப்பிதழ் தந்த விடயங்களில் ஆச்சரியமாகி
கேட்டு,இண்டர்நெட்டில் கண்டு என நான் தெரிந்து கொண்டவற்றில் மிக
முக்கியமானதை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.
பிராம்மணர்கள் பூணூல் போட்டு சந்தியாவந்தனம் செய்யலாம்.
மற்றவர்கள் என்ன செய்வது? ஏங்க அலோபதி,ஹோமியோபதி,ஆயுர்வேதம்,
நேச்சுரோபதி, ரெய்கி, பிரானிக் ஹீலிங்னு வியாதிகளுக்கு விதம் விதமா
வைத்தியம் இருக்கு.
மற்றவர்கள் என்ன செய்யலாம் என்பதுதானே அடுத்த பதிவு.
கண்டிப்பாய் திங்கள்கிழமை வரும்.
தீய நட்புக்களால் பிள்ளைகள் கெட்டுவிடாமல் பாதுகாக்க முடியும்.
இதுல முக்கிய காரணியா உளவியாளர்கள் சொல்வது பெற்றோரைத்தான்.
பேரண்ட்ஸ் கிளப்பில் பதிவுகள் பெற்றோருக்கு அதிகமாக இருக்கும்.
அன்பாலே இணைந்து அன்புச்சின்னத்தை பெற்றவர்கள் வாழ்வு மட்டுமல்ல,
அவர்களின் குழந்தையின் வாழ்வும் மலர்ந்து இருக்கும்.
ஏனோ தானா கல்யாணம்,குழந்தை பிறப்பு என வளரும் குழந்தை
தன்னம்பிக்கையை இழக்கிறதுன்னு சுய மரியாதை பதிவுலேயே
பார்த்தோம்.
மேலை நாடுகளைப்போல இப்ப நம்ம இந்தியாவிலயும் விவாகரத்துக்கள்
பெருகிவிட்டன. விவாகம் ரத்தானால் பாதிப்பு அவர்களின்
பிள்ளைகளுக்குத்தான். பெற்றோரின் சண்டை, சச்சரவுகள் இவற்றை
குழந்தை பருவத்தில் அனுபவித்த குழந்தை பதின்மவயதைத்
தொடும்பொழுது தன் குடும்பத்தை விட்டு பிரிகிறான்.
பொதுவாகவே பதின்மவயது பிள்ளைகளுக்கு mood swings
எனப்படும் மனநிலை மாற்றம் அதிகம். சில பிள்ளைகள்
அதிகம் கோபம் கொள்வர். சிலர் தனி அறைக்குள் அடைந்து
போய்க்கிடப்பர். வீடியோ கேம்ஸ், ஐபாட், கம்ப்யூட்டர்
என குடும்பத்தினரிடமிருந்து விலகியே இருக்க விரும்புகின்றனர்.
காரணம் பிள்ளையின் மனநிலை புரியாமல் நாமும் அவர்களுடன்
சண்டையிடுவது, தனது கனவை தன் பிள்ளையாவது நினைவாக்க
வேண்டும் என பிள்ளைக்கு பிடிக்காத படிப்பை படிக்க வற்புறுத்துவது.
அதிகம் கண்ணாடி முன் நிற்க விரும்பும் வயது இது. அதற்கும்
திட்டு வாங்குவார்கள். இதனால் பதின்ம வயது பிள்ளைக்கு
பெற்றோர்கள் வில்லன்களாகத் தெரிகிறார்கள். சிடு சிடுப்பு,
கோபம், எரிச்சல் என இருவரும் பேசிக்கொள்வதால் விரிசல்
அதிகமாகிறது.
குழந்தையையாக இருந்த பொழுது பக்கத்தில் இருத்தி பேசுவோம்.
பிள்ளை வளர வளர அரவணைப்பதே இல்லை. தொட்டு பேசுவது
சுத்தமாக இல்லை. ஸ்பரிசம் தரும் சுகம், கதகதப்பு இல்லாமலேயே
போய்விட முகம் பாக்காமலேயே பதில் சொல்லிப்போகும் குழந்தைதான்
அதிகம்.
இதெல்லாம் பிள்ளையை நட்பு வட்டத்துக்குள் பின்னிபிணைக்கிறது.
அது தீய கூட்டமாக இருந்தால் அவ்வளவுதான். படிப்பு, எதிர்காலம்,
உடல்நலம் எல்லாம் பாதிக்கப்படும்.
என்ன செய்யலாம்??
அன்பு காட்டுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
நட்பாக நாம் மாறுவதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை.
“தோளுக்கு மிஞ்சினால் தோழன்” என பெரியவங்க சொல்லி
வெச்சதை பெத்தவங்க நாமே மறந்திட்டா எப்படி??
வீட்டுக்குள்ளேயே நட்பு வட்டத்தை உருவாக்க வேண்டும்.
கணவன்,மனைவி சச்சரவுகளைக்குறைத்து இது என் குடும்பம்,
என் பலம் இது, இங்கே நான் நிம்மதியாக இருக்கிறேன் எனும்
எண்ணத்தை பிள்ளையிடம் வளர்க்க வேண்டும்.
“என்ன ஆனாலும் ராசாத்தி நானிருக்கிறேன்”எனும்
நம்பிக்கையை பெண்ணுக்கு தந்துவிட்டாள் அவள் ஏன்
படிக்கும் வயதில் காதலை தேடப்போகிறாள்.
”என் வீடு எனக்குத் துணையிருக்கு என்ற எண்ணம்
இருந்தாலே தவறான பாதைக்கு அழைக்கும் நண்பனை
விட்டு விலகிடுமே பிள்ளை!!”
இதற்கு பள்ளிகளும் உதவ வேண்டும். கவுன்சிலர்கள்
உளவியாலர்கள் வைத்து பதின்ம வயது பிள்ளைகளுக்கு
கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க
வேண்டும்.
உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், போஷாக்கான
உணவு(வீட்டை விட்டு பிள்ளை இறங்கும்போது வெறும்
வயிற்றோடு அனுப்பாமல் போஷாக்கான உணவு கொடுத்து
அனுப்புவது நட்புக்களுடன் ஹோட்டல், பாஸ்ட் ஃபுட் என
ஓட விடாமல் செய்யும்) மிக மிக அவசியம்.
தேவையான அன்பு, அதீதமில்லாத கண்டிப்பு, நட்பான
பெற்றோர் இதுதான் பதின்மவயதுப்பிள்ளையின் தேவை.
பொண்ணும், பரிசும், பொருளும் இவற்றை ஈடு செய்யாது.
குவாலிட்டி டைம் மிக மிக முக்கியம்.
some tips for the adolescents:
* Develop trustworthy relationships with others and be open and
be open honest.
* Develop hobbies
* Physical exercise is a must to relax build and sustains the body.
* Avoid junk and fast food. Nutrition is very important. A balanced
diet gives balanced body and mind.
* Avoid tobacco, smoking and use of alcohol. Remember the alcoholic
you see today took his first drink when he was an adolescent.
* Follow good rituals and religious practices and once you cultivate the
habit, you will find in them an emotional anchor.
இந்தத் தொடரில் அடுத்த பதிவு வியாழக்கிழமை வரும்
வழக்கமான பாட்டை மாத்தி பாடுவதாலே இது என்னவோ
ஹஸ்பண்டாலஜின்னு நினைக்காதீங்க. பதின்ம வயது பிள்ளை
வளர்ப்பு தொடரில் தான் இந்த பாட்டு.
உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் அப்படின்னு
ஒரு பழமொழியே இருக்கு. நம் நண்பர்கள் தான் நம்மை
நல்வழிக்கு அழைத்துச் செல்வதும், தீய வழியில் சிக்க வைப்பதும்
நட்புதான். உடுக்கை இழந்தவன் கைபோலே இடுக்கணை
களையும் சில நிஜமான நட்புக்களும் உண்டு,
முக நக நட்பு கொண்டு ஏமாற்றும் கயவர்களும் உண்டு.
நட்புக்கு அர்த்தம் புரியாத, நட்பென்றால் என்னவென்று புரியாமல்
எல்லோரையும் நட்பாக கருதுவது பதின்ம வயதில் இயல்பு.
அதுவும் பெற்றோரின் வளர்ப்பு, குடும்ப பாரம்பரியம்
எல்லாவற்றையும் ஏறக்கட்டவைத்து கண்கட்டி வித்தை
நடத்தும் அளவுக்கு ஆழமாக மாயம் செய்ய வல்லது நட்பு.
எங்க அம்மம்மா படிச்சவங்க இல்லை. ஆனா எனக்கு எங்க
அம்மம்மாவை ரொம்ப பிடிக்கும். மனுஷனை எடை போடுவதில்
கில்லாடி. ஆனா அதுக்காக முகத்துல அறைஞ்சா மாதிரி சொல்ல
மாட்டாங்க. எங்க சின்ன மாமா +2 படிக்கும்போது மாமாவைப்
பாக்க அவங்க ஃப்ரெண்ட் இரண்டு பேரு வீட்டுக்கு வந்திருந்தாங்க.
மாமா உள்ளே வேலையா இருக்க, அம்மம்மாதான் வந்தவங்க
கிட்ட பேசினது. அப்புறம் மாமா வந்து ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசி
அவங்க கேட்ட நோட்டை கொடுத்து அனுப்பிட்டு உள்ளே வந்தாரு.
அம்மம்மா மாமாவைக் கூப்பிட்டு,” இவங்கதான் உன் ஃப்ரெண்ட்ஸா!”
அப்படின்னு கேக்க, ஆமாம்மான்னு சொன்னாங்க. ”ஜாக்கிரதையா இரு!”
அப்படின்னு சொல்ல “தப்பாவே பாக்காதீங்கம்மா”ன்னு மாமா
திரும்ப சொல்ல,” இந்த பசங்க சிகரெட் பிடிப்பாங்க. அவங்க கூட
நீ நின்னு பழகினா உனக்கும் அந்த பழக்கம் வரும். உன்னையும்
வற்புருத்துவாங்க.உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் அப்படின்னு
ஒரு பழமொழியே இருக்கு. சொல்லிட்டேன்னு” அத்தோட பேசாம
விட்டுட்டாங்க.
4 நாள் கழிச்சு மாமா அம்மம்மாகிட்ட வந்து அம்மா நீ சொன்னது
சரிதான். ”அவங்க சிகரெட் பிடிக்கறாங்க. என்னையும் பிடிக்கச் சொன்னாங்க.
மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்” அப்படின்னு சொல்லிட்டு அவங்க கிட்ட
இனி ஜாக்கிரதையா இருப்பேன்னு சொன்னார்.
எனக்கு செம ஆச்சரியம். அம்மம்மா அந்த பசங்க கிட்ட கூட போகலை.
ஆனா சிகரெட் பிடிப்பாங்கன்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்க.(கூடவே
நிக்கும் மாமாவால கண்டு பிடிக்க முடியலை) எப்படிம்மா இதுன்னு? கேட்டேன்.
உனக்கும் முக்கியம் கத்துக்க. சிகரெட் பிடிக்கறவங்க உதடு கறுப்பா இருக்கும்.
குடி பழக்கம் உள்ளவங்க கண்ணு எப்போதும் கொஞ்சம் போதையோடு இருக்கும்னு
சொன்னாங்க. ஒரு தடவை நாவல் படிக்கும்போது “நிக்கோடின் கறை படிந்த
அவனது உதடுகள் சிரித்தனன்னு” படிச்சப்போ படிக்காத மேதை என் அம்மம்மா
ஞாபகம்தான் வந்துச்சு.
பார்த்திபன் கனவு படத்துல அந்த 4 பசங்களுமே சிகரெட் பிடிக்கறமாதிரியும்,
பெத்தவங்களை திட்டற மாதிரியும் காட்டியிருப்பாங்க. தான் கெடுவது
மட்டுமல்லாம கம்பெனிக்காக கூட இருக்கும் நண்பனையும் சிகரெட், மதுன்னு
பழகிக் கொ(கெ)டுப்பது நட்பு வட்டம் தான்.
உன் நண்பன் சரியில்லைன்னு சொன்னா பிள்ளைகளுக்கு கோவம் பொத்துகிட்டு
வரும். இதில் ஆண்/பெண் பிள்ளை பாகுபாடே இல்லை. ஒவ்வொருவர்
வளர்க்கப்படும் சூழல், வீட்டில் பெற்றோரின் அத்யாவசியமான கண்காணிப்பு
இல்லாது போதல், தேவையான அரவணைப்பு இல்லாமல் போதல் எல்லாம்
காரணம். இதெல்லாம் இருந்தாலும் நம்ம பிள்ளையை மாத்திடக் கூடிய
சக்தி அவங்களுக்கு உண்டு. இதை மறக்க வேண்டாம்.
இப்ப குடி, சிகரெட் பழக்கம் உள்ள யாரேனும் தானாக ஆரம்பிச்சது
கிடையாது. நல்லா விசாரிச்சு பாருங்க ஃப்ரெண்ட்ஸுங்க கூட ஆரம்பிச்சதுன்னு
வாக்குமூலமே கிடைக்கும். சில பேரு மட்டும் தான் இந்த விஷயத்துல
அப்பாவை ரோல் மாடலா(இதுக்கு மட்டும்) எடுத்துகிட்டிருப்பாங்க.
“எங்க வீட்ல இதெல்லாம் பழக்கம் இல்லை” “இது உடம்புக்கு கெடுதல்”
அப்படி இப்படி ஆரம்பத்துல மறுக்கும் பிள்ளையை கூட,” இப்படித்தான்
பெருசுங்க சொல்லும். அதெல்லாம் நாம காதுல வாங்கி போட்டுக்கூடாது.
ஸ்டைலா புகை விட்டா ஃபிகருங்க மடங்கும், அப்பாவே அப்புறம் பேச
பயப்படுவார். இன்னும் சின்ன புள்ளையா நீயி, அப்பா,அம்மாக்கு பயந்து
கிட்டு, உனக்கு வயசாகுதில்லை!” இதெல்லாம் கூடா நட்பு சொல்லிக்
கொடுத்து மாத்தும் முறை.
தனக்கென ஒரு அடையாளத்தை தேடும் வயது, நான் யார் எனும் கேள்விக்கு
பதில் தேடிக்கொண்டிருக்கும் மனது, பெற்றவர்களிடமிருந்து தனித்து தன்னைக்
காட்டி தான் தனிமனிதன் என சொல்ல நினைக்கும் வயதுதான் பதின்ம
வயது. தனது நட்புக்களுடன் அதிக நேரம் இருப்பதில் ஆச்சரியமில்லை.
உண்மையில் குழந்தையும் இல்லாத பெரிய மனிதனும் அல்லாத
இடைப்பட்ட வயது,நிலை அவர்களது என்று சொன்னால் கோபம் தான்
வரும். நாம் வில்லனாகிப்போவோம்.(25 வயசுல வீட்டுல இருக்கற ஒரே
தொல்லை அப்பன் தான்னு பின்னாளில் சினிமா வசனம் பேசுவார்கள்)
ஆண் பிள்ளைக்கு ஒரு விதம் என்றால் பெண் பிள்ளைக்கு இன்னொரு ரகம்.
“உன்னையே பாக்கற மாதிரி தான் இருக்கு” “ஸ்லைட்டா சிரிச்சா மாதிரி
தெரியுது” “ஐ திங்க் ஹீ லைக்ஸ் யூ! யூ ஆர் லக்கி” நானா இருந்தா
உடனே எஸ் சொல்லிடுவேன், இப்படி ஏத்திவிடும் தோழிகள் நம்மை
கவிழ்க்கப்பாக்கிறார்கள் என்று புரியாமல் பலிக்கடா ஆகும் பெண்கள்
எத்தனை பேர்.
” உன் அழகுக்கு நீ பெரிய்ய நடிகை ஆகலாம்!” என உசுப்பேத்தும்
தோழிகளின் வார்த்தையில் மயங்கி படிப்பைக் கோட்டைவிட்டு
வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனையோ பேர் வெளிச்சத்திற்கு
வராத சங்கதிகள்.
“உன் ட்ரெஸ்ஸிங் சென்சை கொஞ்சம் மாத்திக்க” மாடர்னா இரு!
தலையெல்லாம் பின்னாம லூசில் விட்டுக்கன்னு” சொல்லிக் கொடுக்கும்
களவாணிகள் எத்தனையோ பேர்.
குரூப் ஸ்டடி என்று வீட்டில் சொல்லிவிட்டு பார்க், பீச், சினிமா
என்று நட்புக்கள் கொட்டம் அடிப்பது(காதலர்க்ளை சொல்லவில்லை)
என எத்தனையோ.
நட்புக்கள் குடும்பத்தையே மறந்துவிடச் செய்துவிடுகிறார்கள்.
தனது நண்பன் சொல்வதே வேதம், அவர்களின் வாழும் முறையை
தானும் வாழாவிட்டால் ஏதோ தவறு செய்வது போல் அர்த்தம்
எனும் ரீதியில் அவர்கள் மனதை மாற்றுவதை நண்பர்களின்
தாக்கம் (peer pressure)என்று சொல்வார்கள்.
அவர்களின் உலகம் தனி, அதற்கான நீதிக்களும் தனி.
இதைப் பத்தி இத்தோடு பேசிவிட்டு போய்விட முடியாது.
இந்த நண்பர்களின் தாக்கம் இன்னும் என்னென்ன செய்யும்?
அதையிலிருந்து வெளிப்பட குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது?
அப்படின்னு குழம்பறீங்களா? அட கவலையை விடுங்க.
எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. ஆகவே கவலைப்பட தேவையில்லை.
தீர்வே இல்லாத பிரச்சனையா இருந்தா அதைப்பட்டு கவலைப்பட்டு
எந்த பிரயோசனமும் இல்லை.
இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் அறிஞர்கள், உளவியாளர்கள்
கொடுத்திருக்காங்க. அவற்றோடு திங்கள் கிழமை சந்திக்கிறேன்.
இன்று 07/02/2010 தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து தினம். காலை முதல் குழந்தையா நட்டுவுக்கு போட்டாச்சு. நகராட்சி தலைவர் திரு.லிங்கராஜன், நகராட்சி ஆணயர், கவுன்சிலர்கள் புடை சூழ போட்டாச்சு.
குழந்தை மனசு கொண்ட பெரியங்களுக்கும் உண்டா என கேட்டு வாயை பிளந்த எனக்கு "போடமாட்டேன் போ! சட்டத்தில் இடமில்லை"ன்னு சொல்லிட்டாங்க.
பெற்றோர்களே! உடனே மறக்காக போலியோ தடுப்பு சொட்டு மருந்து போட்டுடுங்க! போலியோ இல்லாத உலகத்தில் உங்க பங்களிப்பை செஞ்சுடுங்க!!!
SELF ESTEEM - சுய மரியாதை இது நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் பிம்பத்தின்
பெயர். நமது எண்ணங்களை வைத்து நாம் அளவீடு செய்து வைத்திருக்கும்
ஒரு பிம்பம். இது நம் பிம்பம்.
உதாரணமாக: நான் அழகானவள், என் தவற்றில் இருந்து நான் கற்கிறேன்,
போன்ற எண்ணங்கள் நம்மை பாசிட்டிவ் மனிதராக காட்டும். அதிக
அளவில் சுய மரியாதை உடையவர் என புரிந்து கொள்ளலாம்.
என்னத்த செஞ்சு, என்னத்த படிச்சு, நான்லாம் எங்க தேறப்போறேன்,
ரீதியில் பேசுபவர்கள். சுய மரியாதை அற்றவர்கள். எவ்வளவு
நெகட்டிவ் எண்ணங்கள் இருக்கிறதோ அவ்வளவு சுயமரியாதை
அற்றவராக இருப்பார்கள்.
நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் சில அபிப்ராயத்தை
சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்கும். மற்றவரைப்போல்
இல்லாமல் கொஞ்சம் வித்யாசமானவராக இருக்கலாம்.தனித்துவம்
என்றும் சொல்லலாம். (Unique individual)இந்த ஒரு காரணம்
போதும் நாம் கர்வத்தோடு தலை நிமிர்ந்து நிற்க.
சுயமரியாதை நம் வாழ்க்கையை பலவிதமாக பாதிக்கிறது.
நாம் நினைக்கும் விதம், நடந்து கொள்ளும் விதம், அடுத்தவரைப்
பற்றிய நம் எண்ணங்கள் எல்லாம் இதில் அடங்கும். நாம் இலக்கை
அடையும் விதத்தில் இது பாதிக்கிறது.
அதிக சுய மரியாதை எண்ணம் நம்மை அதிக செய்ல்பாட்டுத்திறன்
உடையவராகவும், தகுதிவாய்ந்தவராகவும், அன்பானவராகவும்,
காரிய சித்தி உடையவராகவும் எண்ண வைக்கிறது.
குறைந்த சுய மரியாதை எதற்கும் உபயோகமற்றவராக,
எந்தச் செயலும் செய்யத்தெரியாதவராக,அன்பற்றவராக
எண்ண வைக்கும்.
உங்கள் சுய மரியாதையில் தாக்கத்தை
ஏற்படுத்தும் சில காரணிகள் சில வற்றைப்பார்ப்போம்:
1. வீடு: வீட்டில் இருப்பவர்களுடனான உங்களின் உறவு
எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்து சுய மரியாதை அளவு
நிர்ணயிக்கப்படுகிறது.
2.பள்ளி: ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்கள்,
அலுவலக பணியாளர்கள் இவர்களுடன் உங்களின்
உறவு பள்ளியில் வெறும் பாடம் மட்டும் பயிலாமல்
விளையாட்டு,ஒழுங்கு, லீடர்ஷிப் கிளப், ஃப்ரெண்ட்ஷிப் கிளப்,
NSS ஆகியவற்றில் ஈடுபாடு.
3: பணியிடத்தில்: அலுவலகத்தில் உயரதிகாரி, சம பணியாளர்கள்,
வேலைப்பளு, வாங்கும் திட்டுக்கள், பாராட்டுக்கள், பதவிஉயர்வு
வேலையை பொறுப்பாக முடித்து வீட்டையும் அலுவலகத்தையும்
சமமாக பார்க்கும் பொறுப்புணர்ச்சி.
4. சின்ன வயதில் நாம் நடத்தப்பட்ட விதம்,பெரிய வயது
நண்பர்கள்( அண்ணாவோட ஃப்ரெண்ட் நமக்கும் ஃப்ரெண்டாகி
அவருடைய அனுபவங்களும் நமக்கு பாடமாகுமே)அக்கம் பக்கத்துக்காரர்கள்
5. சமூகம்: ஒரே ஊரில் ஒரே தெருவில் பல வருடங்கள் எங்கும்
செல்லாமல் வாழ்பவர் கற்றதை விட பல இடங்களுக்கு செல்பவர்
கற்பது ஏராளம். பிற மதக் கலாச்சாரங்கள், மத வழிபாட்டு முறைகள்,
அடுத்தவர்கள் காட்டியிருக்கும் பிம்பங்களுடன் உங்களின் அனுபவம்.
6. பொதுவாக: நல்ல அனுபவங்கள், நிறைந்த உறவு இவை சுய மரியாதையை
நிறைவாக்கும். கெட்ட அனுபவங்கள், துயரமான உறவுநிலை குறைவான
சுய மரியாதைத் தான் தரும்.
எந்த ஒரு சின்ன விடயமோ அல்லது நபரோ நமது சுய மரியாதை
இவ்வளவுதான் என்று வரையறுக்காது. அனுபவங்கள் தரும் பாடமாக
அவை மாறிக்கொண்டே இருக்கும்.
நம் சுயமரியாதையை அதிகபடுத்துவது எப்படி?
சேலஞ்சிங்கான வேலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
(ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு
டயலாக் அடிச்சு ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டா அது ஓவர்
கான்பிடன்ஸாகி கவுத்துப்புடும்)
வாழ்க்கையை அர்த்தமுள்ளாதாக்கிக்கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாறும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும்
மனம் இருந்தால் மார்கமுண்டு.
எப்போதும் நம்மை பற்றி நல்லதாக நினைக்க என்னென்ன
செய்யலாம்??
நமக்கு நாமே தான் நல்ல நண்பன்/தோழி.
நமது பலம் பலவீனத்தை அலசிப்பார்த்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சாத்தியமான குறிக்கோள்களை வைத்துக்கொண்டு, அதை அடைய
ஏதாவது கற்கவேண்டியிருந்தால் கற்று திறமையை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.(கார் வாங்க வேண்டும் என்ற ஆசையிருந்தால்
கார் ஓட்ட பழகிக்கொள்ள வேண்டும் என்பது போல்)
நாம் நம்மை உணர்ந்து நமக்கே நமக்கென நேரம் ஒதுக்கி
நம்மை நாம் மகிழ்வித்துக்கொள்ள வேண்டும்.
நம்மை நாம் உணர்ந்தால் எனும் இந்தப் பதிவு படிச்சிருக்கீங்களா??
நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்மை நம் எண்ணங்களை நாம்
நம்பி அதன் படி வாழவேண்டும். அடுத்தவரின் எண்ணங்களால்
உதைபட்டு பந்து போல் வாழ்வதால் புண்ணியம் ஏதுமில்லை.
சுய மரியாதை. ஆம் நமக்கு நாமே மரியாதை செலுத்திக்கொள்ள
வேண்டும். என்ன சாதித்திருக்கோமே அதற்கு பெருமை
பட்டுக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் நல்ல குணம்,
திறமை இவற்றை அடையாளம் காணுதல் வேண்டும்.
தேவையானல் மேம்படுத்திக்கொள்ளவும் இது உதவும்.
நம்மிடம் நாம் அன்பு செலுத்தி நம்மை நாம் நல்லமுறையில்
கவனித்துக்கொள்ள வேண்டும். நம் தவறுகளை ஏற்றுக்கொண்டு
அதை திருத்திக்கொள்ள வேண்டும். சாதனைகளையு, சோதனைகளையும்
மிகைப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என்னால் முடியும் எனும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சின்ன சின்ன personal goalகள் அவற்றை அடைந்ததும்
ஊக்கப்படுத்த நமக்கு நாமே பாராட்டிக்கொள்வது/ பரிசளிப்பதும்
நல்லது.
மொத்தத்தில் POSITIVE ATTITUDE நற் சிந்தனைகள், செயல்கள்
நம் சுயத்தை அதிகமாக்கி மகிழ்ச்சியையும், தனித்துவத்தையும்
தரும்.
BSRB பரிட்சை பயிற்சி வகுப்பில் என்னுடன் படித்த நண்பர்
ஒருவர் செல்கடாகி இண்டர்வ்யூவுக்கு சென்றார். அங்கே
அவர் PERSONALITY DEVELOPMENT பத்தாது என்று நிராகரிக்கப்பட்டார்.
கெச்சலான அவரின் உருவம் தவறான்னு யோசிச்சுகிட்டே
எங்களுக்கு பயிற்சி கொடுத்த ராஜா அண்ணாவை கேட்ட
பொழுது PERSONALITY DEVELOPMENT என்றால் வெளிப்புறத்
தோற்றமட்டுமில்லை என்று புரிய வைத்தார்.
பலருக்கும் PERSONALITY DEVELOPMENT என்றால் சிக்ஸ் பேக்,
போல பழநி படிக்கட்டாக உடல் வளர்ப்பது போல என்று தான்
நினைத்திருப்பார்கள்.
உண்மையில் PERSONALITY என்பது ஒவ்வொருவரின் ப்ர்த்யேக
உள் அமைப்பு போன்றது. பொதுவாக நிலையாகவே இருந்தாலும்
சில சமயம் மெல்ல மெல்ல மாறுவதற்கான வாய்ப்புக்கள்
இருக்கிறது. அதை மாற்றும் காரணிகள் அவரவரின்
எண்ணங்கள், உணர்வுகள், attitude மற்றும் நடவடிக்கைகள்
ஆகும்.
பர்சனாலிட்டியில் பலவித அங்கங்கள் இருக்கின்றன.
உடல், புத்திசாலித்தனம்,உணர்வு பெருக்கு,சமூகம்,
தார்மீகம், ஆன்மீகம்.(physical, intellectual, emotional,
social, moral and spiritual)
இவை ஒவ்வொன்றும் 4 முக்கியமான காரணிகளால்
உருவாக்கப்படுகிறது.
பரம்பரைவாகு, கற்றல், மனமுதிர்ச்சி மற்றும் சுற்றுப்புரம்.
பரம்பரையாக நமக்கு வரும் பழக்க வழக்கங்களில் நமாக
ஏதும் தேர்ந்தெடுப்பதில்லை. மனமுதிர்ச்சி வயது சம்பந்த பட்டது.
(பலர் வயதுக்குத் தகுந்த முதிர்ச்சி குறைவாகவோ, அதிகமாகவோ
இருப்பர்) ஆனால் சுற்றுப்புரத்தை முக்கியமான தூண்டும்
காரணியகாச் சொல்லலாம்.
நம் PERSONALITYயை வளர்த்துக்கொள்வதை மிக அழகாகச் செய்யலாம்.
கற்றல், பயிற்சி, நல்ல முறையான பழக்க வழக்கங்கள்
கை கொடுக்கும். இது இருந்தால் சுற்றுப்புரம் எப்படி இருந்தாலும்
சேற்றில் முளைத்த செந்தாமரையாக திகழலாம்.
1. நம்மை பற்றி நாமே ஒரு நல்ல சுய பிம்பம்(SELF IMAGE) அமைத்துக்கொள்ள
வேண்டும். நாம் இப்படித்தான் இருப்போம் எனும் மனத்தால்
உணரும் பிம்பம் அது. நம்மை பற்றிய ஆள்மன நம்பிக்கை அது.
நம் நடவடிக்கைகள்,செய்கைகள் நம் மன பிம்பத்தை வைத்துதான்
நடைபெறுகிறது. நம் சுய பிம்பம் நல்ல நிலையில் இருந்தால்
நல்ல நடவடிக்கைகள் உள்ளவராகவும், சுய பிம்பம் தாழ்வு
நிலையில் இருந்தால் தீய செயல்கள் செய்பவராக இருப்போம்.
நம் ஏற்றத்தையும் தாழ்வையும் தீர்மானிப்பது நம் சுய பிம்பமே!!!
2. நிஜவாழ்க்கை என்பது நாம் நிஜத்தில் என்னவாக இருக்கிறோம்
என்பதை வைத்தே ஏற்படும்.(REAL SELF)
3. மற்றவர் கண்களுக்கு தெரியும் நம் பிம்பம் உண்மையானது.
(ACTUAL SELF)
4. நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உருவகப்படுத்தியிருக்கும்
நம் பிம்பம் IDEAL SELF
இதில் பிள்ளைகளுக்கு நாம் எப்படி உதவ முடியும்.
ஒரு சின்ன கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.
சிறந்த பயில்வான் ஒருவரை எதிர் கொள்ள முடியாத
ஒருவர் அவரிடம் நயந்து பேசி, “எண்ணன்னே, ரொம்ப
டய்ர்டாக இருக்கீங்க! உடம்பு ஏதும் சரியில்லையா,
கண்ணெல்லாம் உள்ள போயிருச்சு, பெருமூச்சு வாங்குது!”
என அவர் ஏதோ வியாதிப்பிண்டம் போல பேச
நல்லாவே இருக்கும் அவரும் தனக்கு ஏதோ வியாதி
இருப்பதாக நினைத்துக்கொண்டே வீடு போய்ச் சேரும் பொழுது
வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்து விடுவார்.
நம் பிள்ளைகளையும் நீ மக்கு, உனக்கு ஒண்ணும் தெரியாது,
உன்னால ஏதும் முடியாது! நீ எதுக்கும் லாயக்கில்லாதவள்
எனும் ரீதியில் பேசினால் தன் சுய பிம்பத்தில் அடி பட்டு
தான் அப்படித்தானோ எனும் எண்ணம் அவர்களுக்கு வந்துவிடுகிறது.
மாறாக,”உன்னால முடியும் கண்ணா, ட்ரை செஞ்சு பாரேன்!”
”பரிசா முக்கியம் நீ கலந்து கொண்டதே நல்ல பயிற்சி மாதிரி!”
கணக்கு பரிட்சைக்கே டென்ஷன் ஆகாத நீ ------- ஏன் பயப்படர?
உன்னால கண்டிப்பா முடியும்! போன்ற வார்த்தைகள்
உத்வேகத்தை தந்து அவர்களின் நல்ல சுய பிம்பத்தை பெற
வழி செய்யும்.
ஆஷிஷிடம் நான் சொல்லும் வாக்கியம் இதுதான்.
“அனுமனுக்கு அவன் பலம் தானாகத் தெரியாது.
ஆனால் மிகச் சிறந்த பலசாலி அனுமன். நீயும்
அப்படித்தான். உன்னால் இது சாதிக்க முடியும்!
உன் பலம் எனக்குத் தெரியும்!!”” இந்த வர்ர்த்தைகள்
செய்திருக்கும் மாயாஜாலங்கள் எவ்வளவோ!
IWMS COLOMBO நடத்திய ELOCUTION பரிட்சைகளில் 100/100 மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி பெற்ற 400 மாணவர்கள் லிஸ்டில்
ஆஷ்ஷும், அம்ருதாவும்.
பிள்ளைகள் மட்டுமல்ல பலரின் சுயத்தை நாம் அவமதிக்கும்
பொழுதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. சிறியவர்கள்
என்பதால் நம் பிள்ளைகளை நாமே அவமதிக்கலாமா???
தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வகையில் பிள்ளைகளுடன்
உரையாடுவோம்!!