வழக்கமான பாட்டை மாத்தி பாடுவதாலே இது என்னவோ
ஹஸ்பண்டாலஜின்னு நினைக்காதீங்க. பதின்ம வயது பிள்ளை
வளர்ப்பு தொடரில் தான் இந்த பாட்டு.
உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் அப்படின்னு
ஒரு பழமொழியே இருக்கு. நம் நண்பர்கள் தான் நம்மை
நல்வழிக்கு அழைத்துச் செல்வதும், தீய வழியில் சிக்க வைப்பதும்
நட்புதான். உடுக்கை இழந்தவன் கைபோலே இடுக்கணை
களையும் சில நிஜமான நட்புக்களும் உண்டு,
முக நக நட்பு கொண்டு ஏமாற்றும் கயவர்களும் உண்டு.
நட்புக்கு அர்த்தம் புரியாத, நட்பென்றால் என்னவென்று புரியாமல்
எல்லோரையும் நட்பாக கருதுவது பதின்ம வயதில் இயல்பு.
அதுவும் பெற்றோரின் வளர்ப்பு, குடும்ப பாரம்பரியம்
எல்லாவற்றையும் ஏறக்கட்டவைத்து கண்கட்டி வித்தை
நடத்தும் அளவுக்கு ஆழமாக மாயம் செய்ய வல்லது நட்பு.
எங்க அம்மம்மா படிச்சவங்க இல்லை. ஆனா எனக்கு எங்க
அம்மம்மாவை ரொம்ப பிடிக்கும். மனுஷனை எடை போடுவதில்
கில்லாடி. ஆனா அதுக்காக முகத்துல அறைஞ்சா மாதிரி சொல்ல
மாட்டாங்க. எங்க சின்ன மாமா +2 படிக்கும்போது மாமாவைப்
பாக்க அவங்க ஃப்ரெண்ட் இரண்டு பேரு வீட்டுக்கு வந்திருந்தாங்க.
மாமா உள்ளே வேலையா இருக்க, அம்மம்மாதான் வந்தவங்க
கிட்ட பேசினது. அப்புறம் மாமா வந்து ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசி
அவங்க கேட்ட நோட்டை கொடுத்து அனுப்பிட்டு உள்ளே வந்தாரு.
அம்மம்மா மாமாவைக் கூப்பிட்டு,” இவங்கதான் உன் ஃப்ரெண்ட்ஸா!”
அப்படின்னு கேக்க, ஆமாம்மான்னு சொன்னாங்க. ”ஜாக்கிரதையா இரு!”
அப்படின்னு சொல்ல “தப்பாவே பாக்காதீங்கம்மா”ன்னு மாமா
திரும்ப சொல்ல,” இந்த பசங்க சிகரெட் பிடிப்பாங்க. அவங்க கூட
நீ நின்னு பழகினா உனக்கும் அந்த பழக்கம் வரும். உன்னையும்
வற்புருத்துவாங்க.உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் அப்படின்னு
ஒரு பழமொழியே இருக்கு. சொல்லிட்டேன்னு” அத்தோட பேசாம
விட்டுட்டாங்க.
4 நாள் கழிச்சு மாமா அம்மம்மாகிட்ட வந்து அம்மா நீ சொன்னது
சரிதான். ”அவங்க சிகரெட் பிடிக்கறாங்க. என்னையும் பிடிக்கச் சொன்னாங்க.
மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்” அப்படின்னு சொல்லிட்டு அவங்க கிட்ட
இனி ஜாக்கிரதையா இருப்பேன்னு சொன்னார்.
எனக்கு செம ஆச்சரியம். அம்மம்மா அந்த பசங்க கிட்ட கூட போகலை.
ஆனா சிகரெட் பிடிப்பாங்கன்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்க.(கூடவே
நிக்கும் மாமாவால கண்டு பிடிக்க முடியலை) எப்படிம்மா இதுன்னு? கேட்டேன்.
உனக்கும் முக்கியம் கத்துக்க. சிகரெட் பிடிக்கறவங்க உதடு கறுப்பா இருக்கும்.
குடி பழக்கம் உள்ளவங்க கண்ணு எப்போதும் கொஞ்சம் போதையோடு இருக்கும்னு
சொன்னாங்க. ஒரு தடவை நாவல் படிக்கும்போது “நிக்கோடின் கறை படிந்த
அவனது உதடுகள் சிரித்தனன்னு” படிச்சப்போ படிக்காத மேதை என் அம்மம்மா
ஞாபகம்தான் வந்துச்சு.
பார்த்திபன் கனவு படத்துல அந்த 4 பசங்களுமே சிகரெட் பிடிக்கறமாதிரியும்,
பெத்தவங்களை திட்டற மாதிரியும் காட்டியிருப்பாங்க. தான் கெடுவது
மட்டுமல்லாம கம்பெனிக்காக கூட இருக்கும் நண்பனையும் சிகரெட், மதுன்னு
பழகிக் கொ(கெ)டுப்பது நட்பு வட்டம் தான்.
உன் நண்பன் சரியில்லைன்னு சொன்னா பிள்ளைகளுக்கு கோவம் பொத்துகிட்டு
வரும். இதில் ஆண்/பெண் பிள்ளை பாகுபாடே இல்லை. ஒவ்வொருவர்
வளர்க்கப்படும் சூழல், வீட்டில் பெற்றோரின் அத்யாவசியமான கண்காணிப்பு
இல்லாது போதல், தேவையான அரவணைப்பு இல்லாமல் போதல் எல்லாம்
காரணம். இதெல்லாம் இருந்தாலும் நம்ம பிள்ளையை மாத்திடக் கூடிய
சக்தி அவங்களுக்கு உண்டு. இதை மறக்க வேண்டாம்.
இப்ப குடி, சிகரெட் பழக்கம் உள்ள யாரேனும் தானாக ஆரம்பிச்சது
கிடையாது. நல்லா விசாரிச்சு பாருங்க ஃப்ரெண்ட்ஸுங்க கூட ஆரம்பிச்சதுன்னு
வாக்குமூலமே கிடைக்கும். சில பேரு மட்டும் தான் இந்த விஷயத்துல
அப்பாவை ரோல் மாடலா(இதுக்கு மட்டும்) எடுத்துகிட்டிருப்பாங்க.
“எங்க வீட்ல இதெல்லாம் பழக்கம் இல்லை” “இது உடம்புக்கு கெடுதல்”
அப்படி இப்படி ஆரம்பத்துல மறுக்கும் பிள்ளையை கூட,” இப்படித்தான்
பெருசுங்க சொல்லும். அதெல்லாம் நாம காதுல வாங்கி போட்டுக்கூடாது.
ஸ்டைலா புகை விட்டா ஃபிகருங்க மடங்கும், அப்பாவே அப்புறம் பேச
பயப்படுவார். இன்னும் சின்ன புள்ளையா நீயி, அப்பா,அம்மாக்கு பயந்து
கிட்டு, உனக்கு வயசாகுதில்லை!” இதெல்லாம் கூடா நட்பு சொல்லிக்
கொடுத்து மாத்தும் முறை.
தனக்கென ஒரு அடையாளத்தை தேடும் வயது, நான் யார் எனும் கேள்விக்கு
பதில் தேடிக்கொண்டிருக்கும் மனது, பெற்றவர்களிடமிருந்து தனித்து தன்னைக்
காட்டி தான் தனிமனிதன் என சொல்ல நினைக்கும் வயதுதான் பதின்ம
வயது. தனது நட்புக்களுடன் அதிக நேரம் இருப்பதில் ஆச்சரியமில்லை.
உண்மையில் குழந்தையும் இல்லாத பெரிய மனிதனும் அல்லாத
இடைப்பட்ட வயது,நிலை அவர்களது என்று சொன்னால் கோபம் தான்
வரும். நாம் வில்லனாகிப்போவோம்.(25 வயசுல வீட்டுல இருக்கற ஒரே
தொல்லை அப்பன் தான்னு பின்னாளில் சினிமா வசனம் பேசுவார்கள்)
ஆண் பிள்ளைக்கு ஒரு விதம் என்றால் பெண் பிள்ளைக்கு இன்னொரு ரகம்.
“உன்னையே பாக்கற மாதிரி தான் இருக்கு” “ஸ்லைட்டா சிரிச்சா மாதிரி
தெரியுது” “ஐ திங்க் ஹீ லைக்ஸ் யூ! யூ ஆர் லக்கி” நானா இருந்தா
உடனே எஸ் சொல்லிடுவேன், இப்படி ஏத்திவிடும் தோழிகள் நம்மை
கவிழ்க்கப்பாக்கிறார்கள் என்று புரியாமல் பலிக்கடா ஆகும் பெண்கள்
எத்தனை பேர்.
” உன் அழகுக்கு நீ பெரிய்ய நடிகை ஆகலாம்!” என உசுப்பேத்தும்
தோழிகளின் வார்த்தையில் மயங்கி படிப்பைக் கோட்டைவிட்டு
வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனையோ பேர் வெளிச்சத்திற்கு
வராத சங்கதிகள்.
“உன் ட்ரெஸ்ஸிங் சென்சை கொஞ்சம் மாத்திக்க” மாடர்னா இரு!
தலையெல்லாம் பின்னாம லூசில் விட்டுக்கன்னு” சொல்லிக் கொடுக்கும்
களவாணிகள் எத்தனையோ பேர்.
குரூப் ஸ்டடி என்று வீட்டில் சொல்லிவிட்டு பார்க், பீச், சினிமா
என்று நட்புக்கள் கொட்டம் அடிப்பது(காதலர்க்ளை சொல்லவில்லை)
என எத்தனையோ.
நட்புக்கள் குடும்பத்தையே மறந்துவிடச் செய்துவிடுகிறார்கள்.
தனது நண்பன் சொல்வதே வேதம், அவர்களின் வாழும் முறையை
தானும் வாழாவிட்டால் ஏதோ தவறு செய்வது போல் அர்த்தம்
எனும் ரீதியில் அவர்கள் மனதை மாற்றுவதை நண்பர்களின்
தாக்கம் (peer pressure)என்று சொல்வார்கள்.
அவர்களின் உலகம் தனி, அதற்கான நீதிக்களும் தனி.
இதைப் பத்தி இத்தோடு பேசிவிட்டு போய்விட முடியாது.
இந்த நண்பர்களின் தாக்கம் இன்னும் என்னென்ன செய்யும்?
அதையிலிருந்து வெளிப்பட குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது?
அப்படின்னு குழம்பறீங்களா? அட கவலையை விடுங்க.
எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. ஆகவே கவலைப்பட தேவையில்லை.
தீர்வே இல்லாத பிரச்சனையா இருந்தா அதைப்பட்டு கவலைப்பட்டு
எந்த பிரயோசனமும் இல்லை.
இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் அறிஞர்கள், உளவியாளர்கள்
கொடுத்திருக்காங்க. அவற்றோடு திங்கள் கிழமை சந்திக்கிறேன்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
11 comments:
அழகான பதிவு. அருமையான கருத்து.
தொடருங்கள். தொடர்கிறோம்.
அழகான துவக்கம்....... காத்திருக்கிறேன். நட்பைப் பற்றிய என்னுடைய பதிவை இங்கே பார்க்கவும்.
http://ulagamahauthamar.blogspot.com/2009/12/blog-post_11.html
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
அருமை தென்றல். தொடருங்கள்!
நன்றி துபாய் ராஜா,
கண்டிப்பா படிக்கிறேன் பெயர் சொல்ல விருப்பமில்லாதவரே
நன்றி யாதவன்
நன்றி ராமலக்ஷ்மி
அருமை. கலக்கறீங்க தென்றல். :)
நன்றி வித்யா
அட!பூங்கொத்து!
கை நிறைய்ய பெற்றுக்கொண்டேன் அருணா,
நன்றி
சூப்பர். தென்றல்
உலகத்துலேயே தி பெஸ்ட் ஃப்ரெண்டும் எனக்கு கிடைச்சிருக்கான்.
உலகத்துலெயே தி வொர்ஸ்ட் ப்ரெண்டும் எனக்கு கிடைச்சிருக்கான்.
நட்புதான் எவ்ளோ விசித்திரமானது இல்லை.
Post a Comment