ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,
இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.
நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர்.
அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.
பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை."லட்ச்சுமணா "என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.
வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராடனங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.
பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.
கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.
அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.
அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;
"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.
பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.
இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.
வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .
"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.
வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.
வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.
தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.
" நீயோ என்னைக் கொன்றது !?"
தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;
"என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே"!
அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;
"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! "
தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.
குழந்தைக்கு ஒன்றுமில்லையா!அப்படியானால் லட்சுமணன்!
பாதையில் கண்ட கீரி நீயோ!
என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!
ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!
அலறித் துடித்தார் அந்தணர்."
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!
மாரல் ஃஆப் தி ஸ்டோரி :
ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
2 comments:
அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி
ரொம்ப கவலையாக இருக்கிறது. நன்றாக இருந்தது கதை வெகுவாக பாதித்து விட்டது...என் செல்ல பிராணி தொலைந்து விட்ட நினைவு என்னுள் வருகிறது.
Post a Comment