பெண்கள் பெண்கள்தானே. மனிதர்கள் தானே. எதற்கு தேவதை பட்டம் எல்லாம்? நற்குணமெல்லாம் தேவைதான். ஆனால் அடக்கம் அடக்கம் என்று "அடக்கம்" பண்ணும் அளவுக்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவையா? சிலர் தேவதைகளாகவும், தெய்வத்தின் பிரதிபிம்பமாகவும், தியாகத்தின் உருவம்,பொறுமையில் பூமி மாதா,அவள் அடக்கத்திற்கு கோவில் கட்டிக் கும்பிடலாம், செதுக்கி வைச்ச சிலை,அழகி, பேரழகி, சுண்டினா ரத்தம் தெரியும் சிகப்பு, நீ என் தேவதை, வாயே திறக்கமாட்டாள் - ரொம்ப நல்லவ, போன்றவைகள் மீதான மயக்கம் இன்னும் போகவில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அழகு, அடக்கம், பொறுமை, தியாகம் போன்ற குணங்களை பெண்களுக்கே மொத்த குத்தகையாக கொடுத்து விட்டாமாதிரியான மூளைச்சலவைகளை.
பல வருடங்கள் முன் செனடாப் ரோடு பயங்கரத் தனிமையான சாலை. இதை தினமும் இரவு எட்டரை மணி வாக்கில் பயன்படுத்த வேண்டி இருந்தது. அதுவும் இருசக்கர வாகனத்தில். ஒரு நாள் இரவு பத்து மணியாகி விட்டது - அலுவலகத்தில் மறுநாள் ஒன்பது மணிக்கே மார்கடிங் மீட்டிங் துவங்குவதால் எல்லாவற்றையும் தயார் செய்து வைக்க நேரமாகி விட்டது. ஒரு குண்டு தைரியத்திலும், ஈவ் டீசிங் போன்ற முன் அனுபவம் எதுவும் இல்லாத அனுபவக் குறைபாட்டாலும், அன்று வீடு திரும்புகையில், "என் வண்டிலையே போய்க்கறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
இரு வாகனங்கள் ஒன்று கார், இன்னொன்று மோட்டார் பைக், இரண்டும் ஏறத்தாழ மவுன்ட் ரோடு கருமுத்து மாளிகை அருகிருக்கும் சிக்னலில் இருந்து பின்தொடர்ந்து கொண்டே வந்தது. பைக்கில் வந்தவன் "ஏ கைனடிக்.... நில்லுடி" என்று கூறிக்கொண்டே கிட்ட வருவதும் பின்தொடர்வதுமாய் இருந்தான். காரும் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தது. எனக்கோ படபடப்பு அதிகமானது. உண்மையிலேயே பயமாகத்தான் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே சிறிது வேகப்படுத்தினேன் வாகனத்தை. அடையார் பிளைஓவர் அப்போது இல்லை. ஐ.டீ. காரிடாரும் இல்லை. போலீசாரும் யாரும் கண்ணில் படவில்லை. அடையார் சர்ச் எதிரில் வருகையில் மோட்டார் பைக்காரன் என் கைனடிக் ஹோண்டாவின் பின் சீட்டில் கையால் தட்டினான். எனக்கு பதற ஆரம்பித்து விட்டது. எங்கிருந்து துணிவு வந்ததோ தெரியவில்லை, வண்டியின் வேகத்தைக் குறைத்து இடது காலால் அவன் வண்டியை எட்டி உதைத்தேன். கீழே விழுந்து விட்டான். காரும் அவன் அருகில் நின்று விட்டது. நான் பின் என்ன நடந்தது என்று கூட பார்க்காமல் வேகமாய் அடையார் பாஸ்கின் ராபின் ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்து விட்டேன். பின் அங்கிருந்த இருவர் துணையோடுதான் வீடு சென்றேன்.
இந்நிகழ்வை இப்போது யோசித்தால் கூட அன்றும் இன்றும் என்றும் தனியாய் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து விளைப்பதோ தீங்கு செய்யவோ, எல்லைகளை மீறுவது கயவர்களுக்கு எளிதாக இருக்கிறது என்று நினைப்பேன். அன்று பாஸ்கின் ராபின்ஸ் போன்ற இரவு நேரக் கடையோ, இல்லை அங்கிருந்த இரு ஆண்கள் நல்லவர்களாகவோ இல்லாதிருந்தால்? நம் பெண்கள் இன்றும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா?
இவள் மூக்கைத் தாண்டியும் அடுத்தவர் தொடுவதையும், சீண்டல்களையும் ஏன் இப்படிச் சகித்துக் கொள்ள வேண்டும்? எதற்காகப் பயப்படுகிறாள் இவள்? ஈவ் டீசிங், அலுவலகத்தில் பாஸ் அல்லது சக பணியாளரின் சூசகமான உள்ளர்த்தம் பொதிந்த பேச்சுக்கள், உடல்/உளரீதியான அல்லது பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் போதும் கூட வாய் மூடி ஒதுங்கி போவது, இப்படி தவறு செய்பவருக்கு ஊக்கம் கொடுப்பது போல ஆகி விடாதா? "உன் செய்கை எனக்கு பிடிக்கவில்லை" என்று சொல்ல / அவர்கள் செயலைத் தடுக்க எதற்குத் தயக்கம்?
இக்கட்டான இது போன்றச் சூழலில் பெண்களாகிய நாம், நம்மை நாமேப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு ஆபத்து நேர்ந்தால் நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மன ரீதியாகத் தயாராக இருக்கிறோமா?
வரும் பதிவுகளில் காணலாம்.
1. தற்காப்பும் அதன் அவசியமும்
2. ஆபத்து என்று எப்படி அறிவது?
3. அலுவலகத்தில் தொல்லைகளை எப்படி சமாளிப்பது?
4. வன்புணர்வு/பலாத்காரத்துக்கு ஆளானால்?
.
குறள் வழிக்கதைகள்
5 years ago
0 comments:
Post a Comment