எங்க உறவுக்கார அக்கா ஒருத்தரை ரொம்ப வருஷம்
கழிச்சு பாத்தேன். அவங்களுக்கு ஒரே பொண்ணு.
அந்த பொண்ணை 5 வயசு பாப்பாவா பாத்தது.
இப்ப அந்த செல்லம் காலேஜ் படிக்குது. ரொம்ப
நாள் கழிச்சு பாத்ததுல சந்தோஷமா பேசிக்கிட்டு
இருந்தோம். ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.
”எம் பொண்ணு எப்பவும் கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ்
காலேஜ் தான் கலா!! ஆம்பிளைங்களுடன் பேசவே
சான்ஸ் இல்ல! ரொம்ப ஸ்ட்ரிக்டா வளக்கிறேன்!”
அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரே யோசனை.
”ஏங்கா உங்க பொண்ணை வேலைக்கு அனுப்பணும்னு
சொல்றீங்க! அப்ப கூட ஆண்களே இல்லாத
இடத்துக்குத்தான் அனுப்புவீங்களான்னு??” கேட்டேன்.
அவங்களுக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சு. எனக்கு
அந்தப் பொண்ணை நினைச்சு மனசு ரொம்ப வருத்தம்.
அப்பாவைத் தவிர வேறு ஆண்மகனுடன் பழக்கமே இல்லை.
ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே
போய்விடும். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனாலும்
கொஞ்சம் கஷ்டம் தான். ஆண் நட்பே இல்லாத
காரணத்தால் கணவனிடம் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கணவன் - மனைவி உறவில் ஆரம்பம் நட்பாகத்தான்
இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான புரிதல்
ஏற்படும்.
இதை கொஞ்சம் விவரமா பாப்போம்.
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எதிர்பாலினருடன்
தொடர்பே இருக்கக்கூடாது என பொத்தி பொத்தி
வளர்த்தால் அலுவலகத்தில் வீட்டில் பிரச்சனை
ஏற்பட சாத்தியங்கள் அதிகம்.
வீட்டில் ஒரே ஆண்குழந்தை என்று வைத்துக்கொள்வோம்.
உடன் விளையாட அக்கா, தங்கை இல்லாத பட்சத்தில்
அவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது.
பெண்ணின் பிரச்சனை தெரியாது, புரியாது. அவளின்
வருத்தங்கள் புரிந்துகொள்ள முடியாது. வெளியிலும்
அவனுக்கு நல்ல பெண் நட்பு (நட்பு மட்டுமே)
கிடைக்காத பொழுது சுத்தமாக பெண்வாசனையே
இல்லாமல் தன் தாயையை வைத்து மட்டுமே
பெண்களை எடை போடுவான்.
இப்படி பட்ட சூழ்நிலையில் வள்ர்ந்து
வேலைக்குச் செல்லும் பொழுது அங்கே சக
பணியாளராக பெண்ணோ, அல்லது உயரதிகாரியாக
பெண்ணோ இருந்தால் அந்த சூழ்நிலைக்கு தன்னை
அட்ஜஸ்ட் செய்து கொள்வது கஷ்டமாகிவிடும்.
இதேதான் பெண் குழந்தைகளுக்கும். எல்லோரும்
தன் தந்தையைபோல நல்லவர்/கெட்டவர் என்ற
முடிவுக்கு பெண் வந்துவிடுவாள். அதே கோணத்தில்
பார்த்து பார்த்து பிரச்சனை ஆகிவிடும். வேறு
விதமாக கூட ஆண்கள் இருப்பார்கள் என்று புரியாததற்கு
காரணம் ஆண்களிடம் பழக்கம் இல்லாமல் இருப்பது.
ஆண்களே சுற்றி இல்லாத சூழலில் வளர்ந்த
காரணத்தால் அலுவலகத்தில் தன்னை
பொறுத்திக்கொள்ள இயலாமல் போய்விடும்.
புகுந்த வீட்டில் கணவனைத்தவிர வேறு
ஆண்மகன்கள் இருந்தால் அவர்களுடன் சரியாக
பேசத்தெரியாமல் போய்விடும்.
நம் குடும்ப உறவுகள் தவிர வெளியாருடனும்
பழகத்தெரிவது அவசியம். மனிதர்களை படிக்க,
புரிந்து கொள்ள இது அவசியம்.
இதற்காக ஆண்களிடம் குழைந்து பேசி, மேலே
விழுந்து பழகச்சொல்வதாக நினைக்க வேண்டாம்.
ஆரோக்கியமான நட்பு இருபாலருக்கும் வேண்டும்.
அப்பொழுதுதான் எதிர் பாலினரை புரிந்து கொள்ள
முடியும். ”ஆண் பிள்ளைகளுடன் விளையாடினால்
காதறுந்து போகும்” என்று பயமுறுத்தியோ எங்கே
தன் மகள் காதல் வலையில் விழுந்துவிடுவாளோ
என்ற பயத்தினால் பொத்தி பொத்தி ஆண்வாசனையே
இல்லாமல் செய்வதனால் பெண்ணை காப்பாற்றுவதில்லை,
மாறாக அவளுடைய புரிதல் குணத்தை தடுத்து
நிறுத்துகிறோம்.
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொது இடத்தில் வாழ்வில்
அந்தப் பெண் ஆண்களை சந்தித்தாக வேண்டும்.
ஆண்களே இல்லாத உலகமோ, பெண்களே இல்லாத
உலகமோ சாத்தியப்படாத பொழுது சகஜமாக
பெண்/ஆண் குழந்தையை வளர்க்க வேண்டும்.
பொத்தி பொத்தி வளர்த்து அவர்களின் வாழ்க்கையை
கஷ்டமுள்ளதாக ஆக்க வேண்டாம். மலர்ந்து
நட்புக்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை
உருவாக்க கை கொடுப்போம்.
இக்கட்டுரை ஈரோடு நண்டு நொரண்டு என்ற பதிவர் எழுதியது.
குழந்தைகளுக்கு விடுமுறை. ஒரு மாதம் பெரிய தொந்தரவு. லீவே விடக்கூடாது. இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம்.
குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது. ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி. பள்ளிக்கூடம் வீடு போன்று இருப்பதில்லை என்றே உண்மையில் அனைத்துக் குழந்தைகளும் நினைக்கின்றனர்.
குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும் செழுமைப்படுத்திக்கொள்கின்றன (இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது). 2-லிருந்து 5 வயது வரை குழந்தைகள் மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன, சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது.
குழந்தைகள் 5 வயதிற்குப்பின், 5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில் பயணித்து 12வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து, தொடர்ந்து, பிறகு 16வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள் நுழைகின்றனர். அதுவரை அவர்கள் கட்டற்ற சுதந்திரம் இருப்பவர்களாகவே உணர்கின்றனர்.
இதுவே, குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது.
எனவே, இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள். அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளர ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் அல்லது அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள். அது அவர்களிடத்தில் தாழ்வு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள். அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக் கொள்ளாதீர்கள். நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.
குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள். அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள். அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள். அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள்.தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று
தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள்.உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப் புகுத்தாதீர்.
அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான். விடைகளை தருவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை. கற்றுக்கொள்வது அவர்களின் இயல்பான செயல்.
கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது.
ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் பிறக்கும் பொழுதே பலவிசயங்கள் அவர்களுக்கு இயல்பாகவும் இயற்கையாகவும் ஆணையிடப்பட்டிருக்கின்றது.
அது "சுவாசி உடல் இயங்கும் ". "உண் உடல் வளரும் ". "வளர உணவு தேவை ".
இதுபோன்று...பல...
இதில் "வளர உணவு தேவை" என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும், சேட்டைகளுக்கும் காரணம்.மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான்.காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான் குழந்தைகள் செய்யும் அனைத்தும்.
அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள்.
குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள்.அதனால் பயனேதும் இல்லை.
ஆதலால் , குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள். அவர்களின் வாழ்வை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் மீறினால், அவர்களும் மீறுவார்கள். ஜாக்கிரதை. எனவே குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள். அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள். அவர்களை உற்று கவனியுங்கள். அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள். அதற்கு உதவுங்கள். சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள்.
நம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான். அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன் பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள்?
.
ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.
கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.
அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.
அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?
நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?
எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்
கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பது
போல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே
சொல்லவில்லை.
1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்
இருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்
போட்டு விழுவான். வகை வகையா சமைச்சு
போடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு
பாத்து பாத்து செய்யறோமே! என்னாச்சோன்னு
பயந்து டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப்போனா
உடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.
அதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால
லோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு
சொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு
பால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்
கூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு
கொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,
கொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.
எங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்
6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.
என் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.
அதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு
ஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்
எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு
வேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.
ஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.
ஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.
உயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா
ரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த
உயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்
வலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.
பாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்
கொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது
உயரம் அதிகமான பிள்ளைகளுக்கு.
நார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத
எடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.
போன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்
கிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட
என்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு
தூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா
என் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.
”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே
வளர்ச்சி!!”
நல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.
டயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.
வயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு
வயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.
டயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட
பேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது
BALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்
இருக்கணும்.
ஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த
நல்ல உடலமைப்பை இப்ப உருவாக்கினாத்தான் உண்டு.
இந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,
இப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்
உடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு
கொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.
இந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.
எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்
அளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்
கொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே
ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.
ஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.
இப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.
பால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,
பருப்பு,இட்லி/தோசை/உப்புமா,அரிசி/சப்பாத்தி,
சோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.
அசைவம் சாப்பிடறவங்க
முட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு
இல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்
கொடுக்கலாம்.
இரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து
அதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.
இதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.
உடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.
இரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்
கொடுக்கலாம். பேரிச்சம்பழம் விரும்பாதவங்களுக்கு
அந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,
கீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்
நல்லா கொடுக்கணும்.
இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான
தேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,
ஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்
தேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக
கொடுக்க வேண்டும்.
இதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்
சைக்கிளிங், டான்ஸ், விளையாட்டுக்கள்னு
வைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு
ஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.
இல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி
அவஸ்தையைக் கொடுக்கும்.முறையான உடற்பயிற்சி
பதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்
heart disease, certain cancers, diabetes,
hypertension, bowel problems மற்றும் osteoporosis
போன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.
ஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு
சாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால
கவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு
எப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி
பதின்மவயதுக்குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
இதில் ஆண்குழந்தை, பெண்குழ்ந்தைன்னு
பாகுபாடே இல்லை.
இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு
கொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்
தேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.
அப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.
உடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்
பளிச், பளிச் தானே!
இந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்,
எமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்
பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு
குறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.
உடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்
ரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,
தயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ
சொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை
ரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.
இல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது
பல பிரச்சனைகள் வருமாம்.
முறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி
கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட
நாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ
பிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன??
குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்
வரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.
பதின்மவயதின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம்.
முடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு
டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.
அவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்
அவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,
நாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு
கொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்
குழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.
(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்
கவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல
மேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா
கொடுக்கலாம்.
இப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே
என் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப
சந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்
வெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,
அயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட
ஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.
இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.
இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.
இந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்
கிடைக்கும்.
தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்னு முண்டாசு கவிஞர் பாடிவெச்சதிலேயே
உணவு எவ்வளவு முக்கியம்னு தெரியுது. அதிலயும்
நாம் சாப்பிடும் உணவு சத்தான உணவா இருப்பது
ரொம்ப முக்கியம்.
குழந்தை பிறந்ததும் முதல் உணவு அன்னையின்
அமுதான தாய்ப்பால்தான். அதில் கிடைக்காத
சத்துக்களே இல்லை. அதன் பிறகு குழந்தைக்கு
திட உணவு கொடுக்கும்போது கூட சத்தான
உணவா கொடுக்கணும். இல்லாட்டி உடல்பருமன்,
அல்லது குறைவான எடைன்னு குழந்தை அவதிப்படும்.
பிறந்த குழந்தையை வளர்ப்பதைவிட பள்ளிப்போகும் வயது
குழந்தையை வளப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா
உள்ளதிலேயே ரொம்ப கஷ்டமான ஸ்டேஜ்னு சொன்னா
அது இந்த பதின்மவயதுதான்.
சின்னக்குழந்தையை மிரட்டி, திட்டி, கொஞ்சின்னு
எப்பாடுபட்டாவது சாப்பிடவெச்சிடலாம். வாயில
ஊட்டி ஏதோ ஒரு வகையா சாப்பாட்டை உள்ளேத்
தள்ளிடலாம். ஆனா இந்த பதின்மவயதுக்குழந்தையை
இடுப்பில வெச்சு ஊட்டவா முடியும்?
ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்துக்கு வரப்போகிறாள்னு
அவளோட உடல்வளர்ச்சி கட்டியம் கூற ஆரம்பிச்சதும்
வீட்டுல ஆரம்பிச்சிடுவாங்க. சத்தான உணவு கொடுப்பாங்க.
பூப்பெய்தியதும் பச்சை முட்டை, நல்லெண்ணெய்,
உளுந்தங்களி, அது இதுன்னு நல்லா கவனிப்பாங்க.
நெய், பால், இடுப்பை பலமாக்க திண்பண்டங்கள்னு
ஓவ்வொரு ஊரிலும் ஒரு பழக்கம் இருக்கும்.
எப்படியோ பொண்ணை சரியா கவனிச்சிடறாங்கன்னு
சொல்வேன்.
ஆனா இந்த பதின்மவயது ஆண்குழந்தைகள்தான்
ரொம்ப பாவம். தட்டு நிறைய்ய சோறு வெச்சா
சரி. பத்தோ பதினொண்ணோ தோசைன்னு ஊத்தி
போட்டா சரின்னு இருப்பாங்க சிலர். இதனால
அந்த வயசுபசங்க சரியான வளர்ச்சி இலலாமா
ஒண்ணா ரொம்ப குண்டா இல்லாட்டி ஒல்லியா
இருப்பாங்க. முறையான கவனிப்பு இல்லாததுதான்
காரணம். எங்க ஊர் பக்கம் ஒரு வாக்கியம் சொல்லி
கேள்விப்பட்டிருக்கேன். “குறத்தி பிள்ளைபெற
குறவன் மருந்து சாப்பிட்டானாம்” என்பதுதான் அது.
சத்தான உணவு குறவனுக்கு கிடைக்காட்டி பிரச்சனைதானே!!!
யாருக்காவது பதின்மவயதுக் குழந்தைக்கு என்ன
கொடுக்கணும்? எப்படிக்கொடுக்கணும்னு தெரியுமா?
காலங்காலமா சமைஞ்ச பொண்ணு, சமைய போகும்
பொண்ணுன்னு எல்லாம்பொண்ணையே டார்கட் கட்டி
ஊட்டச்சத்தை கொடுத்தாங்க.
அதுக்காக நாம அப்புடியே விட்டுடலாமா?
எப்படி உணவு கொடுக்கணும்? எப்பப்போ கொடுக்கணும்?
இதைப்பத்தி பேசுவோமா??
தெரிஞ்சவங்க உங்க கருத்தையும் சொல்லுங்க.
பலருக்கும் உதவப்போகுது இந்தப் பதிவு.
நாம சின்ன பசங்களா இருந்த காலத்துலயும் லீவு
வந்திருக்கு. எந்த சம்மர் கேம்புக்கும் போகாமலேயே
நல்லா ஆனந்தமா சிறகடிச்சு லீவைக் கொண்டாடி
இருக்கோம்.
எப்படி? ஒரு முறை அப்படியே சின்ன வயசுக்குப்
போய் ஒரு கொசுவத்தி சுத்திப்பாருங்க. ஆனந்தமா
கல்லா மண்ணா விளையாண்டது, நுங்குவண்டி,
டயர் வண்டி, கிட்டிப்புல், கோலி, பச்சைக்குதிரை,
தாயம், பரமபதம், ஆடுபுலி ஆட்டம் இப்படி
விளையாடியது எல்லாம் ஞாபகத்துக்கு வருதா??
அப்ப விளையாடினது ஞாபகம் இருக்கு. ஆனா
அதை பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க தெரியலை.
அதாவது ஆட்டம் பேரு ஞாபக்ம் இருக்கு. விதிமுறைகள்,
எப்படி விளையாடுவது எல்லாம் ஞாபகம் இல்லை.
நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இந்த
வலைத்தளத்தில் அழகா அதையெல்லாம் தொகுத்து
வெச்சிருக்காங்க. TRADITIONAL GAMES
அப்படிங்கற வலைத்தளத்துல போய் பாக்கலாம்.
நான் ரசித்து விளையாடி மகிழ்ந்த பல
விளையாட்டுக்களை நம்ம பசங்களுக்கும்
சொல்லிக் கொடுத்து பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு
உயிர் கொடுக்கலாம்.
ஹேப்பி ஹாலிடேஸ் குட்டீஸ்!!!
குழந்தைகளை நர்சரியிலோ, ப்ரீஸ்கூலிலோ சேர்க்கும்
முன் குழந்தைகளை தயார் செய்வது மிக முக்கியம்.
இண்டர்வ்யூவுக்கு தயார் செய்வது பத்தி நான் சொல்லவில்லை.
பசங்களுக்கு மைண்ட்செட் செய்வதற்கு முன்னாடி
பெற்றோர்கள் இதை ஒருவாட்டி படிச்சிக்கணும்.
ரொம்ப முக்கியம்.
பள்ளியில் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகமல்
இருக்க சில அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுப்பது
நல்லது. பள்ளிக்கு அனுப்பும்முன் பெற்றோர்கள் இதை
மனதில் வைத்து பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த
வேண்டியது அவசியம்.
1.TOILET TRAINING:
6 மாதம் முடிந்ததுமே இந்த பழக்கத்தை துவக்கிவிடலாம்.
டாய்லட் சீட்டில் உட்காரவைத்து பழக்கினால் பழகிவிடும்.
இது வீட்டில் பழக்கப்படாவிட்டால், பள்ளியில் பிரச்சனைதான்.
அதனால் கவனமாக, முக்கியமாக பழக்கவேண்டிய
விஷயம் இது.
2. தானாகவே சாப்பிடுவது:
”என் பிள்ளைக்கு நான் ஊட்டினால்தான் வயிறு நிறைஞ்சா மாதிரி!!”
அப்படின்னு சொல்லி சொல்லி ஊட்டி விட்டு பழக்கப்படுத்தியிருப்பீங்க.
ஆனா பள்ளியில யாரும் ஊட்டி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்க.
குழந்தை உட்கார ஆரம்பித்த உடனேயே தட்டு போட்டு
சாப்பிட வைப்பது அதுவும் தானாகவே சாப்பிட் வைப்பது
நல்லது.
3.பகிர்ந்து கொள்ளுதல்:
சில குழந்தைகள் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள
மாட்டார்கள். இதனால் யாருடனும் எளிதில் பழகவும்
மாட்டார்கள். பகிர்ந்து கொள்ள பழக்கினால் பள்ளியில்
வாழ்க்கை இனிதாகும்.
4. சின்னச் சின்ன வேலைகள் செய்வதை பழக்கப்படுத்த
வேண்டும். தன் உடையை கழற்ற மாட்ட, ஷூ அணிய
என பழக்கப் படுத்துவது அவசியம்.
பிறருக்கு உதவும் பாங்கு, sorry, thank u சொல்லப்
பழக்குதல், மரியாதையாக நடந்து கொள்ளுதல்,
தன் சாமான்களை பாதுகாத்துக்கொள்ளுதல் எல்லாமும்
மெல்ல மெல்ல பழக்க வேண்டும்.
இவை பள்ளியில் குழந்தை நல்ல முறையில்
செட்டாக உதவும்.
ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி?.. என்றுதான் தோன்றியது..
ஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.
பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .
சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!
இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.
நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..
அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.
சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.
இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.
பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை. சாப்பிட இன்னொரு வயிறு வந்துவிட்டதே... என்று வருத்தப்படுபவர்களுக்கு, உழைக்க இரண்டு கைகள் கிடைத்திருப்பது ஏனோதெரிவதில்லை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்."எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.
சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.எங்கள் வீட்டிலும் என் குழந்தைகள் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். சிலசமயங்களில் பையர் குக்கர் வைத்தால், குழம்பு வைப்பதை பெண் செய்வார்.டைனிங் டேபிளை இருவரும்தான் செட் செய்வார்கள். அதே போல் சாப்பிட்டு முடித்ததும்,ஒதுங்க வைப்பதும் அனேகமாக அவர்கள்தான். அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.
நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.பெண்குழந்தையை பெற்றுவிட்ட காரணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவனைப்பற்றிய செய்தி, தினசரியில்ஒரு மூலையில் இன்று வந்து போனது, ஏனோ,.. இப்ப ஞாபகம் வருது....
சில வீடுகளுக்கு போகும்போது நாம ஒரு ரொம்ப கவனமா
இருப்போம். பர்ஸை பாதுகாத்து பக்குவமா வெச்சிருந்தாலும்
அஞ்சு, பத்து காணாம் போகும். அஞ்சு பத்துன்னா அட்ஜஸ்ட்
செஞ்சுக்கலாம்! ஊருக்குப்போன இடத்துல 100,200 குறைஞ்சா??
கஷ்டம்தான். இதென்ன புதுசா கதை சொல்றேன்னு நினைக்காதீங்க.
யோசிச்சு பாத்தா பலரின் அனுபவம் இது? யாரைன்னு குத்தம்
சொல்லன்னு வாயை மூடிகிட்டு வந்திருப்போம். நம்ம வீட்டுலயும்
நம்ம சட்டையில வெச்ச பணம் காணாம போயிருந்தா உஷார்
ஆக வேண்டியதுதான். யாரோட வேலையா இருக்கும்!!
நான் இதைச் சொல்வதால் ஏதோ எல்லா பதின்ம வயதுப்பிள்ளையும்
இப்படித்தான்னு இல்லை. சில வீடுகளில் இதுதான் நிகழ்வு.
பணம் காணாமல் போயிருந்தால் அது அந்த சற்றே பெரிய
குழந்தைதான் எடுத்திருக்கு வாய்ப்பு அதிகம். வயிற்றுப்பசிக்கு
சோறு வீட்டுல இருக்கு, வகைவகையா ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கு,
வெளிய வாச நாங்களே கூட்டிகிட்டு போறோம் அப்புறம்
இதுகளுக்கு பணத்தை கொடுப்பானேன்! என்று சில பெற்றோர்.
பாக்கெட் மணியெல்லாம் வசதி உள்ள வீட்டுப்பசங்களுக்குத்தான்.
நம்மாள முடியாது எனும் வகை பெற்றோர்.
பிள்ளை கையில காசைக்கொடுத்தா கெட்ட
பழக்கத்துக்கு ஆளாகிடுவாங்க என பயப்படும் பெற்றோர்
இப்படி பட்டவர்களால்தான் அப்பாவின் சட்டைபை, அம்மாவின்
அஞ்சறைப்பெட்டி, ஹேண்ட்பேக் ஆகியவற்றில் பணம்
காணாமல் போவது.
சைக்கிளுக்கு காத்தடிக்க, பேனா, பென்சில் வாங்க,
நண்பர்களுடன் சாட் சாப்பிட(எனக்குத் தெரிஞ்சு ஒருபையன்
சாட் கடையில் கடன் சொல்லி சாப்பிட்டு வீட்டுக்குத்
தெரிஞ்சு அடி பின்னிட்டாங்க) என சில செலவீனங்கள்
பதின்ம வயதுக்கு உண்டு.
நாமதான் எல்லாம் செய்யறோமே அப்புறம் இவங்களுக்கு
எதுக்கு காசுன்னு பெத்தவங்க நினைப்போம். ஆனா தானா
தன் கையால காசு வெச்சுகிட்டு செலவு செய்யணும்னு
பசங்க நினைப்பாங்க. பொம்பளைப்பிள்ளைன்னா அழுது
ஆர்பாட்டம் செஞ்சு காசு கறந்துடுவாங்க. பசங்க பாவம்!!
”நீ சிகரட் குடிக்கத்தான் காசு கேக்குற, என் காசை கரியாக்கன்னே
பொறந்திருக்குன்னு” ஏச்சுத்தான் கிடைக்கும்.
இதனால அப்பா, அம்மாக்குத் தெரியாம காசை எடுக்க
ஆரம்பிக்கறாங்க. தனுஷோட ஒரு படம்.(திருடா திருடின்னு)
அவர் அப்பா பணத்தை எடுத்து செலவு செய்வதுபோல
காட்டியிருப்பாங்க. இது நிஜத்துல நடப்பதுதான்.
(இல்லைன்னு யாராவது சொல்லுங்கப்பா, பாப்போம்)
போன வாரத்துல ஒரு நாள் ஆஷிஷ் கூட பேசிகிட்டு இருந்த
போது அவன் வகுப்பில் சில பசங்க வந்து, ”நான் இன்னைக்கு
எங்க அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்தேன்” என்று
சொல்ல ஐயா ஷாக் ஆகியிருக்கிறார். ”அப்பா, அம்மா
பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பது தப்பாச்சேம்மா!!
எப்படிம்மா இப்படி செய்யலாம்? என்றான். இதனால்
இந்தப் பழக்கம் பசங்களுக்கு இப்பவும் இருக்குன்னு
நான் நம்பறேன்.
பணம் கையில் வைத்திருப்பது பெரிய மனிதத்தன்மையைக்
காட்டுது. தனக்குன்னு ஒரு அடையாளத்தை தேடும் அந்த
வயதில் தன் கையில் காசில்லை என்பதே பெரிய குறையாத்
தெரியும். நல்லா படிச்சு முடிச்சாத்தான் சம்பாரிக்க முடியும்.
சம்பாரிக்காம காசுவரணும்னா பர்ஸ்ல கை வைப்பதுதான்.
நாமே நம் பையனை திருடனாக்குறோம்.
பசங்களுக்கு காசு கொடுத்து குட்டிச்சுவராக்கச் சொல்லறீங்களான்னு?
சண்டைக்கு வரவேணாம். நம்ம பிள்ளைகளை நாம் முறையா
வளர்க்கணும். பணத்தை எப்படி செலவு செய்வதுன்னு சொல்லி
கொடுக்க வேண்டியதும் நம் கடமையாச்சே! இப்ப பழக்குவது
பின்னாளில் தான் சம்பாதிக்கும்பொழுது சேமிக்க கற்க வைக்கும்.
யோசிச்சு பாருங்க. ஆரம்பத்துல சொல்லியிருக்கற நிகழ்வு
நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினருக்கு நடந்தா நமக்கு
எவ்வளவு அவமானம்?? நம்மைப்பத்தி, நம்ம பிள்ளைய பத்தி
என்ன நினைப்பாங்க??
என்ன செய்யலாம்? பாக்கெட் மணி கொடுத்திடலாம்.
(பதின்மவயது பிள்ளைகள் ஆண்/பெண் இருவருக்கும்)
சும்மா தூக்கி கொடுத்திட்டா பணத்தோட அருமை தெரிஞ்சிடுமா?
1 ரூபாய் காசுகூட சும்மா கிடைக்காதுன்னு நாம
சொல்லிக்கொடுப்போம். எப்படி? நான் என் வீட்டில் செய்வதை
சொல்றேன். ஆரம்பத்துல சொல்லியிருந்த அனுபவம் விருந்தினராப்
போனப்ப எனக்கும் ஏர்பட்டிருக்கு. அதனால என் பசங்க
அந்த வழிக்கு போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சிருந்தேன்.
அதுக்கு உருவகம் கொடுத்தது என் தோழி அண்ணபூர்ணா.
அவங்க சொல்லிக்கொடுத்ததை நான் கொஞ்சம் முன்னேற்றி
ஆரம்பிச்சதுதான் என் பசங்களுக்கு பாக்கெட் மணி
கொடுக்கும் பழக்கம்.
HOME IMPROVEMENT COMMITTEE இங்க அதைப்பத்தி
சொல்லியிருக்கேன்.
GOLDEN RULES</span> இதை வெச்சுத்தான் பாயிண்ட்ஸ் கொடுத்து
அதை மாத இறுதியில பாக்கெட் மணியா கொடுக்கறேன்.
பணத்தை எப்படி செலவழிக்கறாங்க என்பதை கண்காணிக்கணும்.
செலவு செய்வதை எழுதச் சொல்லி பழக்கி, மாத கடைசியில்
கையிருப்பு எவ்வளவு என்பதை எழுதச் சொல்வதால் பணம்
எங்கே தேவையில்லாமல் செலவாகுதுன்னு புரியும்.
கட்டுப்படுத்த முடியும். இதெல்லாம் நாம பக்கத்துல இருந்து
செய்யணும்.
கார் கழுவுதல் போன்ற அதிகமான வேலைகளில்
உதவும் பொழுது எக்ஸ்ட்ரா பாக்கெட்மணி.
(கொழும்புவில் இருந்த பொழுது ஆஷிஷும்,
அம்ருதாவும் சேர்ந்து கார் பார்க் ஏரியாவை கழுவுவார்கள்.
நானும் உதவுவேன். அன்றைக்கு இருவருக்கும் 25 ரூபாய்
எக்ஸ்ட்ரா மணி)
என்ன கொடுமைன்னு என்ன புலம்ப வெச்சிட்டாங்க பசங்க :))
சின்னக்குழந்தையா இருக்கும்பொழுதே இதை பழக்கிட்டா
பதின்ம வயதுக்கு வரும்பொழுது சுலபமா இருக்கும் என்பதால்
அப்போதே போட்டுவைத்துவிட்டேன் இந்தத் திட்டத்தை.
எங்க அப்பார்ட்மெண்டில் இருக்கும் பசங்க கூட ஆஷிஷ்
பேசிகிட்டு இருக்கும்பொழுது தனக்கு மாசா மாசம்
பாக்கெட்மணி கிடைப்பது பத்தி சொல்ல அந்த பசங்களோட
அம்மாக்கள் என்னை கேட்டாங்க. நானும் என் திட்டத்தைப்
பத்திச் சொல்ல ,”ஐடியா நல்லாயிருக்கேன்னு!” ஆஷிஷ்,
அம்ருதாவோட பாயிண்ட்ஸ் புக்கை வாங்கிகிட்டு போய்
ஜெராக்ஸ் எடுத்து தன் வீட்டிலும் நடைமுறை படுத்த
ஆரம்பிச்சிட்டாங்க. ”ஆஷிஷ் உன் புண்ணியத்துல
இப்ப எங்களுக்கும் பாக்கெட் மணி கிடைக்குதுன்னு!”
பாராட்டுக்கள்தான்.
இந்தப் பழக்கம் மேலைநாடுகளில் இருக்கு. அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா வீட்டிலும் தன் குழந்தைகளுக்கு
பாக்கெட்மணி வேலை செய்வதற்குத்தான் கொடுக்கிறார்
என செய்தி படித்தேன்.(அவர் பசங்களை விட எங்களுக்கு
பாக்கெட் மணி கூடவே கிடைக்குதுன்னு பசங்களுக்கு
சந்தோஷம்.)
பதின்மவயதுப்பிள்ளைகளை மதித்து அவர்கள்
வாழ்வில் நல்லபடியாக வளர உதவுவோம்.
நாளை மகளீர் தினம் என்பதால் நாளை வரவேண்டிய
பதிவு வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை அன்றே.
”கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?”//
இந்த பாடல் சொல்லும் கருத்து என்ன??
குறிக்கோள் இல்லாத வாழ்க்கையில் சாதனைகள்
இருப்பதில்லை.
தன்னம்பிக்கை மனிதர்களுக்கு தான் அடையவேண்டிய
இலக்கு எது என்பது தெரிந்து தெளிவாக இருப்பார்கள்.
தனக்கு எது முக்கியம், அவசியம் எல்லாம் புரிந்து
வைத்திருப்பார்கள். தனது திறமையை எங்கே வளர்த்துக்
கொள்ள வேண்டும் என்று அறிந்து தனது குறிக்கோளை
அடைய சிறந்த வழிகளை மேற்கொள்வார்கள்.
முதலில் நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி
“குறிக்கோள் என்ன?” உதாரணம்: என்ன படிக்க விரும்புகிறோம்?
என்ன சாதிக்க ஆசை? என்ன வேலை பார்க்க விருப்பம்?
இதை முதலில் தெரிந்து கொண்டால் தான் நாம் அடைய
வேண்டிய பாதைக்கான வழியை வகுத்துக்கொள்ள முடியும்.
சின்ன சின்ன personal goals வைத்துக்கொள்வது நல்லது.
அவை நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். டூவீலர் ஓட்டத்
தெரியாத ஒருவர் தான் ஓட்டக்கற்றுக்கொள்ள வேண்டும்
என திட்டமிட்டு அதை சாதிப்பதை சொல்லலாம்.
குறிக்கோள்/இலக்கு இவற்றை அமைத்துக்கொள்ள 5 முக்கிய
தேவைகள் இருக்கின்றன. இது வேலை, personal goals
எதற்கும் பொருந்தும்.
CREAM என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்
அதாவது - CLARITY,REALISM, ECONOMY, ACTIVITY & MEANS:
CLARITY - தெளிவு
REALISM -நிஜத்தன்மை
ECONOMY- பொருளாதாரம்
ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை
MEANS-வழிவகை
CLARITY - தெளிவு:
நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதில்
தெளிவாக இருக்க வேண்டும். எதை சாதிக்க விரும்புகிறோம்,
எப்போதைக்குள் அடைய விரும்புகிறோம், இலக்கை
அடைந்துவிட்டோம் என்று எப்படித் தெரிந்து கொள்வது
என பல கேள்விகளை கேட்டு ஒரு தெளிவான
பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
REALISM -நிஜத்தன்மை
நிஜத்தில் அடைய முடியாத ஒன்றுக்கு ஆசைப்படுவது,
அதை குறிக்கோளாக வைத்துக்கொள்வது என்பது மிகப்
பெரிய தவறு. மிகப் பெரிய/அடைய முடியாத ஒரு
குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைய முயற்சி
செய்வது பலனை அளிக்காது. தோல்வி அடைய வைக்கும்
இந்த நிகழ்வு தன்னம்பிக்கையை குலைத்துப்போடும்.
அதற்காக மிகச் சாதரணமான இலக்கு வைத்துக்கொள்வதும்
தவறு.
ECONOMY:வழிவகை
ஒரே நேரத்தில் பல இலக்குகள் வைத்துக்கொண்டால் எதை
முதலில் முடிப்பது என்று தெரியாமல் குழம்ப நேரும்.
பேராசை பெரு நஷ்டம் எனும் வழக்கு இங்கும் பொருந்தும்.
ஒவ்வொன்றாக முடிப்பதே நல்லது.
ACTIVITY- செயல்திறன், ஊக்கமுடமை
நல்லதைச் சொல், நல்லதைச் செய், நல்லதை நினை.
இது நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். நம் இலக்கையும்
நல்லவிதமாகவும், செயல்திறன் உடையதாகவும் வைத்துக்
கொள்வது நல்லது. நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும்?
என திட்டமிட வேண்டும்.
MEANS-வழிவகை
இலக்குகளை திட்டமிடும் பொழுது எந்த வழியில் அதை நாம்
அடையப்போகிறோம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ள
வேண்டும். இதற்காக நாம் சில கலைகளை கற்க
நேரலாம். நடவடிக்கைகளில் சில மாறுதல்களும் தேவைப்படலாம்.
சில நேரங்களில் குறிக்கோள்களே புது அறிவை தந்து
அதை அடைய வழி வகுக்கும்.
குறிக்கோள்களை அடைய பல திறன்கள் வேண்டும்.
நேரத்தை திட்டமிடாமல் எதுவும் செய்ய முடியாது.
சரியான முறையான திட்டமிடல் அவசியம்,
முறையாக பேசத் தெரிய வேண்டும், பிரச்சனைகளைத்
தீர்க்கும் தன்மை, குழு அமைத்தல் என பல இருக்கிறது
ஒவ்வொன்றாக வரும் வாரங்களில் பார்க்கலாம்.

