இதோ வந்தாச்சு பள்ளிப் பிள்ளைகளுக்கான விடுமுறைக்காலம். அதே சமயம் அத்தனை தினசரிகளிலும் சுவரொட்டிகளிலும் முளைச்சாச்சு விடுமுறைக்கால வகுப்புக்களுக்கான விளம்பரங்கள்.
என் மகனின் நன்பனின் அம்மா “எங்க வீட்டு சிபிய இந்த தடவை மூணு சம்மர் கேம்ப்ல சேர்த்திருக்கேன்னு” ரொம்ப பெருமையா சொன்னாங்க எனக்கு ரொம்ப பாவமா இருந்தது.
பள்ளி நாட்களிலாவது பிள்ளைகள் விடுப்பு எடுக்கலாம், ரொம்ப முடியலேன்னா வீட்டுப்பாடம் செய்யாமல் தவிர்க்க முடியும் ஆனால் இது போன்ற விடுமுறைக்கால பயிற்சிகளில் வகுப்பு தவறவிடக்கூடாது, கையெழுத்துப்பயிற்சி மாதிரியான வகுப்புக்களில் வீட்டுப்பாடம் கட்டாயம் செய்தே ஆகவேண்டும் ஏகப்பட்ட டென்ஷன் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தான். நாம் கொஞ்சம் சிந்திக்கலாமே…
நாமெல்லாம் சிறு பிள்ளைகளாய் இருக்கும் போது வரும் விடுமுறை காலத்திற்காக எத்தனை ஏக்கமாய் காத்திருப்போம், எனக்கெல்லாம் பாட்டி வீடு, அத்தை வீடு என்று போவதற்கு கூட இடமிருந்தது கிடையாது ஆனாலும் அந்த இரண்டு மாதங்கள் மிகவும் பசுமையாகக் கழியும் (நல்ல வேனலாய் இருந்தாலும் கூட) எங்க அப்பாவும் ஆசிரியர் என்பதால் அவருக்கும் குறைந்தது ஒரு மாதமாவது விடுமுறை இருக்கும் அந்த நாட்களில் வீட்டின் இயல்பு முறையே முற்றிலும் மாறிவிடும், மெதுவாக எழுந்திருப்பது, அதாவது வழக்கத்தில் 5 மணி என்றால் இப்போதைய சலுகை 6.30. பின் ஆறு/குளம்/புதுத்தண்ணி வந்தா வாய்க்கால் இவை எவற்றிலாவது நல்லா கால் ஓயும் வரை நீந்தி குளிச்சுட்டு வந்தால் அம்மா சூடா சமைச்சு வைச்சிருப்பாங்க வீட்டுல இருக்கற அத்தனை பாக்கி வேலைகளையும் (துவைத்து வந்த துணி உலர்த்துவது, உலர்ந்த துணிகள மடிச்சு அந்தந்த இடத்துல வைக்கிறது. இத்யாதி இத்யாதி) அக்கா தலைல கட்டிட்டு அப்பா கூட உக்கார்ந்து சுகமா சாப்பிட வேண்டியது அப்புறம் அப்படியே அம்மாவ குழையடிச்சு நூலகம் போக அனுமதி வாங்கிட்டு (அது பேர்ல கூடுதலா ரெண்டு மூணு இடத்துக்கு விசிட் உண்டு அத இப்ப தைரியமா சொல்லலாம்) போயி அகிலனோ, நாபாவோ, ஜெயகாந்தனோ எடுத்துகிட்டு வந்தா நாள்முழுக்க உட்க்கார்ந்து வாசிக்கலாம். இல்லேன்னா நல்லா தூங்கி எழுந்தா அம்மா டிபன் பண்ணித்தருவாங்க இல்ல நாங்க டிபன் பண்ரோம்கற பேர்ல கிச்சனை கொஞ்சம் துவம்சம் பண்ணிட்டு அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு பொழுத போக்கினா சாயங்காலம் ஆயிடும். அப்பத்தான் டெலிவிஷன் வந்த புதுசு எங்க பக்கத்துல டி.டி. கூடத்தெரியாது மொத மொதல்ல தெரிஞ்சது ரூபவாகினி ங்கற சிலோன் டீவி மட்டும்தான் அந்த மியூசிக்க ரொம்ப நல்லா இருக்கும் இப்பெல்லாம் கேக்க பார்க்கவே முடியல. முதல்ல ஒரு அரை மணி நேரமோ என்னமோ தமிழ் நிகழ்ச்சிகள் இருக்கும் அப்புறம் பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போயிட்டு வந்தா ராச்சாப்பாடு முடிஞ்சு திரும்பவும் அக்காகூட அரட்ட கதைப் புத்தகம், தூக்கம். எவ்வளவு இனிமையா இருக்கும் பள்ளி மீண்டும் திறக்கும் போது உற்சாகமா போவதற்குண்டான அத்தனை சக்தியும் உடம்பில் சேர்ந்திருக்கும்.
ஆனா இப்ப பாருங்க பள்ளி நாளுக்கும் விடுமுறைக்கும் வித்யாசமே இல்லாம பிள்ளைங்கள சம்மர் கேம்ப் அனுப்பி, வாட்டி, வதச்சு விளயாட வேண்டிய வயதில அவங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும் அவங்களின் பெற்றோர்கள் என்பாதாலேயே சிதைக்கும் சுதந்திரத்தை நமக்கு யார் தந்தது. அந்த இளம் உள்ளங்களுக்குச் சேர வேண்டிய நியமான மகிழ்ச்சிகளைக்கூட தடை செய்யும் உரிமையை நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் தான். தாய் தந்தை இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வீட்டில் ஒருவரும் இல்லாத வீடுகள் அநேகம் இருக்கும், ஆனால் அதையும் ஒழுங்கு செய்ய வேண்டிய பொறுப்பு நம்மை சார்ந்தது தான் அதற்காக பொறுப்பின் ஒரு பெறும் பகுதியை நம் இளம் பிள்ளைகளின் தலையில் சுமத்த முயல்வது குருவி தலையில் பனங்காய் கதை தான். யோசித்துப் பாருங்கள் நன்பர்களே….
(ரத்னேஷ் அவர்களின் பதிவு படித்து அங்கே பின்னுட்டமாய்ப் பகிர்ந்து கொண்ட செய்தியைச் சற்றே விரிவாகப் பதிவிடுகிறேன்..)
"மாமாவுக்கு ரைம்ஸ் சொல்லிக் காட்டு.."
"ABCD சொல்லிக்காட்டு.."
"திருக்குறள் மொத்தமும் நேர்வரிசை, தலைகீழ் வரிசையில் தப்பு விடாமச் சொல்லுவா.."
"நீயுந்தான் இருக்கியே..கணக்கு வாய்ப்பாடு ஒழுங்காச் சொல்லத்தெரியுதா..அந்தப் பொண்ணைப் பாரு...உலக நாடுகளின் கரன்ஸி, தலைநகரம் எல்லாம் ஒண்ணு விடாமச் சொல்றா..
இப்டிக் கதைகள் கேட்பது/ நிகழ்வுகள் பார்ப்பது நமக்கெல்லாம் சகஜமான ஒன்றுதான். குழந்தைகளின் கற்றல் திறன் மிகவும் கூர்மையானது. சில குழந்தைகளின் செயலாற்றல் சற்றே வயதுக்கு மீறியதாய் இயல்பிலிருந்து வித்தியாசப்பட்டு தனித்து நிற்கும்.
ஒரு மணி நேரத்தில் 617 ஆசனங்கள் செய்யும் குழந்தை, நீச்சலில் புகழ்பெற்ற குற்றாலீஸ்வரன் என்று சாதனைகள் கேள்விப்படும்போது வியப்பு மட்டுமல்ல..ஒருவித கனமும் மனதைக் கவ்விப் போகிறது..Child Prodigy தான்..என்றாலும் இயல்பான குழந்தைத்தனங்கள் மறுக்கப்பட்ட குழந்தைகளின் சாதனையை மிஞ்சி நிற்கும் வேதனை அந்தக் குழந்தைக்கு மட்டும்தானே முழுமையாய்ப் புரியும்..
இங்கே எனக்கு அறிமுகமான ஒரு குழந்தையின் கதை இது..பெற்றோருக்கு ஒரே குழந்தை..நீண்ட நாள் குழந்தையின்றி இருந்த பெற்றோருக்கு மருத்துவ உதவிகள் மூலம் கிடைக்கப்பெற்ற குழந்தை..நினைவாற்றல் சற்றே அதிகம்..எப்போதும் ஒரு புத்தகம் கையில்..திருக்குறள், தலைநகரம், பொது அறிவு தொடங்கி ஷேக்ஸ்பியர் வரிகள், வரலாற்று நிகழ்வுகள் என்று மனனப் பயிற்சி நாள்தோறும்.. ..நண்பர்கள் கூட்டத்தில் இது போன்ற அவள் பங்களிப்பு காணும்போது வியப்பையும் மீறிய ஒரு கனம் இருக்கத்தான் செய்தது..
இயல்பாக வந்தால் பரவாயில்லை..வலிந்து வரவழைக்கப்பட்ட செயலென்று கேள்விப்பட்டபோது..கஷ்டமாகவே இருந்தது..
ஆனாலும் சோகம் சிந்தும் கண்கள்..மற்ற குழந்தைகளுடன் ஒட்ட முடியாத இயல்பாகிவிட்ட தனிமை...கூட்டங்களில் இருக்கும் போதுகூட ஒரு புத்தகம் கைகளில்..தாய் ஆசிரியை, தகப்பனும் கணக்காளர் பணியில்..பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்ற போதும் ஆசிரியர்களை மட்டும் வரச் சொல்லும் தினங்களில், என் தோழியின் வீட்டில் அந்தக் குழந்தையை விட்டுப் போவார்கள்..தோழியின் குழந்தையும் சம வயதினள்தான்..அந்தக் குழந்தை அப்போதும் பை நிறையப் புத்தகங்களுடன் தான் வருமாம்..வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் அவ்வப்போது பொம்மைகளுடன் விளையாடும் தோழியின் குழந்தையின் பக்கம் வெறுமையான பார்வை ஒன்றை வீசிவிட்டு மீண்டும் புத்தகத்துக்குத் தாவும் கண்கள்..(இது நடந்தது அவளின் ஆறு வயதில்)
கணினியிலும் எப்போதும் இதுபோன்ற அக்கறைதான் அவளுக்கு...படிப்பிலும் படுசுட்டிதான்..
ஆனால் சமீபத்தில்(இப்போது அவளுக்கு வயது 11..) சற்றே மந்தமான நிலை..படிப்பிலும் சரி..இது போன்ற விஷயங்களிலும் சரி..மற்ற குழந்தைகளை விட அதிகப்படியாகச் சாதித்த குழந்தை..இன்று பல படிகள் கீழே..இயல்பான நினனவாற்றல் மங்கிவிட்ட நிலையில்..மருத்துவ சோதனைக்குட்படுத்தினார்கள்..ஒரு ப்ரச்னையுமில்லை உடலில் நல்லவேளையாக..இன்று அவள் பாடப் புத்தகத்தை எடுத்தாலே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெற்றோரின் நிலையும் பரிதாபத்துக்குரியது..
இது போன்ற நிகழ்வுகள் பெற்றோர் சமூகத்தில் அத்திப் பூத்தாற்போல் நடப்பதுதான்..
சாதனைக் குழந்தைகள் பலரின் பின்னும் இது போன்ற வேதனைகள் இருக்குமோ?
பள்ளியில் சேர்க்கும் ஆரம்பக்கட்டத்தில் வயதுக்கு மீறிய வகுப்பில் சேர்த்துவிட்டு, இப்போது குழந்தையைக் குறை சொல்லிப்பயன் என்ன?பலரும் செய்கின்ற தவறு இது..இருவரும் வேலைக்குப் போகின்ற சூழலில், தனிக்குடித்தன அமைப்பில் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வது சகஜமாகிவிட்ட ஒன்று. குழந்தைக்கு 2 வயது தாண்டினால் போதும்..காப்பகத்தில் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லையென்று, உடனே பள்ளியில் சேர்க்கும் ஆசை வந்துவிடுகின்றது. Play School என்றால் பரவாயில்லை..குழந்தை நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
இன்னும் சிலர் 3 வயது முடிந்ததுமே முறையான பள்ளிக் கல்வி முறைக்குக் குழந்தைகளை ஆட்படுத்துகிறார்கள். Play Schoolக்கு அனுப்பி விட்டு "என்ன இது தினமும் வீட்டுப் பாடமும் இருப்பதில்லை..கேட்டாலும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறான்..இந்தப் பள்ளியே சரியில்லை.." என்ற குற்றச்சாட்டுகள் வேறு.
குழந்தைகளின் நரம்பியல் இயக்கங்கள் மற்றும் மனப்பக்குவம் மனதில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஐந்தரை அல்லது ஆறு வயது முடியும் தருணத்தில் முதல் வகுப்பு என்பதுதான் சரியான ஒன்று. மூன்றரை வயது முடிந்ததும் LKG சேர்ப்பதுதான் நல்லது. நம் வசதிக்காக, பொருந்தாத பருவத்தில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு, பின் குழந்தையும் நாமும் கஷ்டப்பட வேண்டியதுதான்..
மாண்டிச்சோரி அம்மையாரின் மகத்தான திட்டம் குறித்துப் புதுகைத் தென்றல் பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். அப்படியெல்லாம் இருக்க வேண்டிய அந்தப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன உண்மையில்..
அந்தத் திட்டத்தின் பெயரால் நம் ஊரில் நடக்கிற கூத்து கொஞ்சம் நஞ்சமல்ல..என் உறவுப் பெண் ஒருத்தி சென்னையில் இது போன்ற ஒரு பள்ளியில் வேலை செய்கிறாள். பெயரளவுக்கு மட்டுமே கடைப்பிடிக்கப்படும் மாண்டிச்சோரி முறை..போதிய காற்றோட்ட வசதிகளே இல்லாத ஓர் அறை அமைப்பு..இந்தச் சூழலில் பள்ளி நடத்துவது தவறென்றால், நிலைமை தெரிந்தே பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் செய்வதும் தவறுதானே?
பள்ளியில் சேர்க்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- ஆரம்பக் கல்விக்குக் குழந்தையின் வயது மூன்றரை முடிந்திருப்பது அவசியம்
- பள்ளியின் போதனை முறைகளுக்காக முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் என்ற பட்சத்தில், சேர்க்கும் பள்ளியின் தரமும், செயல்பாடுகளும் அறிந்து சேர்ப்பது அவசியம். அதிகம் பிரபலமாகாத தரமான பள்ளிகளும் உண்டு.
- பள்ளியில் குழந்தை செலவிடும் நேரம் வயதுக்குத் தக்கதாய், குழந்தையால் சமாளிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்.
- நல்ல பள்ளி என்று தொலை தூரம் பயணம் செய்ய விட்டுவிடாதீர்கள்..வெகு சீக்கிரம் புறப்பட்டு, வெகு தாமதமாகத் திரும்பும் நிலை அவ்வளவு ஆரோக்கியமனதல்ல..கொஞ்சம் வளர்ந்தபின் அப்பள்ளியில் சேர்க்கலாம்..இல்லை..நீங்கள், உங்கள் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு, பள்ளிக்கு அருகில் வீடு மாறலாம்.
நம் நாட்டின் பாடத்திட்டங்கள் ஆரம்பக் கட்டத்தில் எப்படியிருந்தாலும், போகப் போகக் குழந்தைகளுக்கு ஒரு சவாலாகத்தான் அமைகின்றன. அந்தச் சவாலை அவர்கள் சிறந்த முறையில் மேற்கொண்டு செயலாற்ற நாம்தான் உதவ வேண்டும்.
வல்லி சிம்ஹன் பதிவிற்கு பின்னூட்டம் இடும் பொழுது தான் இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
எங்கள் வீட்டில் இருவருமே ஆண்பிள்ளைகள், அருகருகே வசிப்பவர்களுக்கு கூட பெண்மகவு இல்லை அதனால் என் சின்னப்பையனுக்கு பெண்களின் சகவாசம் அதிகம் கிடையாது.
ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த அவன் வழக்கத்தை மீறி ரொம்ப சோர்வாகவும் அதேசமயம் ரொம்ப கோபமாகவும் இருந்தான் ஆனா அவன் ரொம்ப அழுத்தம் அதுனால லேசில வாயிலிருந்து விஷயம் வராது எவ்வளவு அழுத்தம்னா, அவனுக்கு ஒரு 5 வயசு இருக்கும் போது தெரு முனையில இருக்கற கடைக்கு தேங்கா வாங்கிட்டு வான்னு 10 ரூபா குடுத்து அனுப்பிச்சோம் கொஞ்ச நேரம் கழிச்சு வெறும் கையோட வந்து நின்னான் நாங்க ரொம்ப பயந்து போய்
01. என்னாச்சு ரூபாய தொலைச்சிட்டயா – பதிலே இல்லை
02. கடைக்காரி தேங்க தரலயா – பதில் “தரல”
03. ஏன் - - பதிலில்லை
04. மீதி காசு எங்கே – “காக்கா தூக்கிட்டு போச்சு”
05. எதை தேங்கயவா காசையா – காசை
06. அப்ப தேங்கா என்ன ஆச்சு - பதிலில்லை
07. வரும்போது கீழ விழுந்திட்டதா – பதிலில்லை
08. எங்க அம்மா அதுக்குள்ள வந்து "குழந்தை கையில இருந்து யாராவது பிடிங்கிண்டு போயிருப்பா இதுக்குத்தான் சின்ன குழுந்தைய அனுப்பாதேன்னு சொன்னா நீங்க ஏதோ டிரெயின் பண்ரேன்னு அனுப்பிச்சேள் ஏண்டா கண்ணா யாராவது பிடிங்கிண்டு போயிட்டாளா" – பதில் “ஆமாம் பாட்டி ஒருத்தன் ஓடி வந்து பிடிங்கிண்டு ஓடியே போய்ட்டான்.”
09. நாங்க பொய் சொல்லாதே பாப்பா, நீ கீழ விழுந்திட்டயா – பதில் “ஆமாம் நான் கீழ விழுந்திட்டேன்…”
10. எங்க விழுந்த – திருப்பதி வீட்டுக்கு பக்கத்துல (அவன் வீட்டுக்கும் தேங்கா கடைக்கும் சம்பந்தமே கிடையாது)
இப்படி கேட்கிற கேட்விக்கெல்லாம் அவனுக்கு தோன்றிய படி பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரியிடம் விசாரித்ததில் அவள் தேங்காயும் இரண்டு ரூபாய் சில்லரையும் கொடுத்து விட்டுருந்தது தெரியவந்தது, வழியில் எங்கும் தேங்காயை காணவில்லை இன்று வரை அது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. எங்கள் அனுமானம் தேங்காய் கீழே விழுந்திருக்கும் அவனுக்கு மண்ணைத்தொடப் பிடிக்காது எனவே எடுக்காமல் வந்திருப்பான் ஆனால் அவன் வாயில் இருந்து இன்று வரை என்ன நடந்தது என்று சொன்னதில்லை. எனவே இந்த மாதிரி ஏதாவது நடந்தால் உடனே நாங்கள் நித்தா தேங்கா வாங்கின கதைதான் என்று ஸ்டேட்மெண்ட் விடுவோம். அந்த அளவு அழுத்தமானவன் இன்று வரை அப்படித்தான் (இப்போது அவனுக்கு வயது 10) அதனால் யாரும் நேரடியாய் என்ன விஷயம் என்று கேட்கவில்லை.
இரவு வழக்கமாய் அவன் எங்களுக்கு கதை சொல்வான் அது அவனுக்கும் எங்களுக்கும் மிகவும் பிடித்த தருணம். நான் ஒரு மாதிரி சாயங்காலமா – பாப்பா இன்னிக்கி என்ன கதை என்று ஆரம்பித்து பின் மெதுவா என்ன ஆச்சு இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து ரொம்ப டல்லா இருந்தே யார் கூட பிரச்சனை என்றதும் தான் விஷயம் வந்தது.
அம்மா என்ன மிஸ் எடம் மாத்திட்டாங்க (அது வழக்கமாய் நடக்கும் ஒன்றுதான் அவர்கள் ஒரு மாதிரி பீரியாடிக்கலா பிள்ளைகளின் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் இதிலென்ன புதுசு என்று எண்னியபடி) க்ரேட் யாரு இப்ப உன் பக்கத்துல இருக்காங்க என்று கேட்டதும் தான் தாமதம், அதான் அந்த மேகி (மரகதமத்தின் சுருக்கம் இவர்களாக வைத்துக்கொண்டது) அவ பக்கத்துல போய் என்னப் போட்டிருக்காங்க நான் மிஸ்கிட்ட கம்ப்ளெயின் பண்ணியிருக்கேன் ஆனா நாளைக்கு மாத்தறேன்னு சொல்லியிருக்காங்க அப்படி மாத்தலேன்னா நாளைக்கு நான் எங்க சோசியல் மிஸ்கிட்ட சொல்லுவேன் என்று ரொம்ப ஆதங்கத்தோடு சொன்னான் (எனக்கு ஒரே ஆச்சரியம் ஏன்னா அவன் இப்படி எல்லாம் ரொம்ப சென்சிடிவா இருக்க மாட்டான் யாரு வந்தாலும் போனாலும் கண்டுக்கவே மாட்டான் அவன் உலகம் தனி என இருப்பான் இப்ப என்ன வந்தது என்ற எண்ணத்துடன்) ஏன் அந்த மேகி பக்கத்துல உக்காந்தா என்ன? என்றதுக்கு அம்மா அவ தல பூராவும் ஒரே பேன் எப்பவும் தலைய சொறிஞ்சிண்டே இருப்பா அவ பக்கத்துல இருந்தா எனக்கும் அவ தல பேன் பூரா வந்துரும் அவ டார்க்கா தலைக்கு எண்ணை தடவிண்டு வருவா (அந்தப்பெண்ணிற்கு சற்றே நீண்ட கூந்தல் அவள் தினமும் அழகாக அதைப்பின்னி ரிப்பன் வைத்து கட்டிக்கொண்டு வரும் அழகை நான் பார்த்து ரசிப்பதுண்டு) அதான் நான் மிஸ்கிட்டே சொல்லிட்டேன் மிஸ் அவ தலைல பேன் இருக்கு நான் அவ பக்கத்தில உக்கார மாட்டேன், சம்டைம் அவள் தலைல இருக்கிற எண்ணை என் சைட்டைல பட்டுடும்னு. மிஸ் நாளைக்கி இடம் மாத்திருவாங்க. என்று முடித்ததும் அவன் முகம் ரிலாக்ஸ் ஆனாது ஆனால் என் மனம் மிகவும் கனத்துப்போனது. உடன் ஒரு பெண் குழந்தை வளரும் பட்சத்தில் ஒரு ஆண் குழத்தையால் இவ்வளவு நிர்தாட்சண்யமாக ஒரு சக பெண்குழந்தையை நிராகரிக்க முடியுமா??? இதை கேட்ட அந்த பள்ளி ஆசிரியை, அந்த மாணவியின் மனது எப்படி இருந்திருக்கும் அதை நான் இவனுக்கு எவ்வாறு புரிய வைப்பது போன்ற பல கேள்விகள் என்னுள் பிறந்தது.
அதனால் பொதுவாக அன்றிலிருந்து நான் அவன் வயது பெண்குழந்த்தைகளைப்பற்றி அவனிடம் அதிகம் பேசத்துவங்கினேன். முடிந்த போதெல்லாம் அவர்களின் உலகம் பற்றிய புரிதலை அவனுள் விதைக்கத்தலைப்படுகிறேன். ஏனெனில் எதிர் எதிர் உலகமும் அதைச்சூழ்ந்த பிரச்சனைகளயும் புரிந்து கொள்பவரால் தானே நல்ல தகப்பனாய், பிள்ளையாய், நன்பனாய், கணவனாய், மனிதனாய் இருக்க முடியும்.
மதியம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என நினைத்து சமைத்து அனுப்புவேன். ஆனால் வீடு திரும்பும் பிள்ளையின் டப்பாவில் சோறு அப்படியே இருக்கும்.
ஒரு வாய் மட்டும்தான் சாப்பிட்டு இருப்பான். மனம் பதைத்துப்போகும். தினமும் இப்படியே என்றால் என்ன செய்ய? ஒரு நாள் மகனைப் பக்கத்தில் இருத்தி கேட்டபோது கிடைத்த விடயம்
இதுதான்.
சோறு சாப்பிட பிடிக்கவில்லை. ஆறிப்போய் இருகிவிடுகிறது. சோறு சாப்பிட்டு கொண்டிருந்தால் விளையாட நேரம் குறைவாகி விடுகிறாதாம். :(
அன்றுமுதல் மதியம் சோறு கொடுத்தனுப்பாமல் வித்தியாசமாக செய்து கொடுத்தனுப்ப
ஆரம்பித்தேன். மகனின் வயறும், என் மனதும் நிறைந்தது.
Nesessity is the mother of invention என்பது மறுபடியும் உண்மையாகி விட்டது.
வித்தியாசமான, பிள்ளை விரும்பும் சமையல் கற்க ஆரம்பித்தேன். சரி இன்னைக்கு என்ன ரெசிப்பின்னு பார்ப்போம்:
தோசை வகைகள்:
பொதுவாக தோசை ஆறி வரட்டி மாதிரி ஆகிவிடும். மெலிதாக ஊற்றாமல் ஊத்தப்பம் மாதிரி
செய்யலாம்.
1. சின்னச் சின்ன ஊத்தப்பங்கள் ஊற்றி அதில் ஏதாவது ஒரு சட்னி, (தேங்காய்ச் சட்னி தவிர்த்து)வைத்தால் தோசை சாண்ட்விச் ரெடி. (இங்கே தான் நாம் புதினா சட்னி, கொத்துமல்லி சட்னி ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம்)
2. ஊத்தப்பங்களுக்குள் தோசை மிளகாய்ப்பொடி நெய் தடவி கொடுக்கலாம்.
3. ஊத்தப்பத்தில் தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி தழை சேர்த்து, மேலே சீஸ் தூவினால்
"ஹோம் மேட் பிட்சா" ரெடி.
4. தோசையை கட் செய்து, வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ்,, ப.மிள்காய சேர்த்து வதக்கினால், "கொத்து தோசை".
5. நெய் தோசை செய்து அதில் தோசை மிளகாய்ப் பொடி தூவி மடக்கி கொடுக்கலாம்.
6. சட்னியைத்தடவி மடித்து கொடுத்தால், தோசை ரோல் ரெடி.
7. டொமேடோ சாஸ், சில்லி சாஸ் தடவி கொஞ்சம் சீஸ் சேர்துக்க்கொடுக்கலாம்.
8. தோசை மாவில், வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக, மிளகுப்பொடி சேர்த்து கலக்கி
குழிப்பணியாரக் கல்லில் ஊற்றினால், மசாலா பணியாரம் ரெடி.
9. துருவிய கேரட், கோஸ் இவற்றை வதக்கி மாவில் கலக்கி குழிப்பணியாரம் செய்யலாம்.
இந்த தோசை மாவில் alphabet dosa,கடிகார தோசை, பூனை தோசை(டிசைன்ஸ்தான்)
இப்படி விதவிதமா ஊத்தினா கணக்கு வழக்கே இல்லாம சாப்பாடு உள்ள போகும்..
இப்போதைக்கு இதை செய்து பாருங்கள் மேலும் சிலக் குறிப்புகளோடு சந்திக்கிறேன்...
தொடரும்.
புதுகைத்தென்றல்
ஜூஜ்ஜுலூ, அச்சுலு.....
பப்ளிக்குட்டி,
என்ன இதெல்லாம் என்று பார்க்கிறீர்களா?
சின்னக் குழந்தையை அதன் பாஷையில்
கொஞ்சுவதாக நினைத்துக்கொண்டு
நாம் செய்யும் கோமாளித்தனம் தான்.
இதைப் பார்த்து "நீ பேசும் பாஷையே
புரியலையே"! என்பது போல் சிரிக்கும் குழந்தை.
இது மிகத்தவறான ஒன்று. குழந்தையின்
மொழிவளர்ச்சி ஏற்படுவது தன் காதில்
கேட்கும் மொழி, வார்த்தைகளை வைத்துதான்.
பிறந்த குழந்தைக்கு எந்த ஒரு மொழியும் தெரியாது.
வீட்டில் பேசப்படும் மொழியை கணகச்சிதமாக
கற்றுத் தேர்கிறது.
ஆகவே நாம் சரியான முறையில், குழந்தையுடன்
பேசவேண்டும். உச்சரிப்புக்கள் சரியாக இருக்க வேண்டும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்:
எங்கள் வீட்டிற்கு கிராமத்திலிருந்து ஒரு அம்மா
வந்திருந்தார். அவரின் மகளுக்கு பேச முடியாது.
பிறவி ஊமை இல்லையாம். வீட்டில் அனைவரும்
வேலைக்குப் போய்விட, குழந்தையிடம் அமர்ந்து
பேச ஆளில்லை.
வேலை முடித்து வந்த பிறகும் அலுப்பு,
வீட்டு வேலை இவைகளால் பிள்ளையிடம்
உட்கார்ந்து யாரும் பேசவில்லை.
இந்தச் சூழலில் வளர்ந்தக்குழந்தை, மொளனத்தையே
மொழியாக்கிக்கொண்டது. பேசும் திறனை இழந்து
விட்டது. வயது 10 ஆகியும் பேச்சு இல்லை.
அந்தப் பெண்ணை தான் வேலை பார்க்கும்
பள்ளிக்கு அழைத்துச் சென்று, அங்கு பிள்ளைகளுடன்
உட்காரச் செய்தார் என் அம்மா.
6 மாதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
சின்னச் சின்ன வார்த்தைகள் அந்தப் பெண்
உச்சரிக்க தாயின் கண்ணில் கண்ணீர்.
1 வருடத்தில் நன்கு பேசக் கற்றுக்கொண்டாள்
இந்த உண்மைச் சம்பவம் தரும் உண்மை,
குழந்தைக்கு மொழிவளர்ச்சி இன்றியமையாதது.
அதிகமான வார்த்தைகளை பழக்குங்கள்.
சொல்வதை திரும்பச் சொல்லி பழக்க வேண்டும்.
பள்ளி செல்லும் முன்னரே சின்ன சின்னப் பாடல்கள்,
ஸ்லோகங்கள், ஆகியவற்றை சொல்லிக்கொடுக்கலாம்.
இவை மொழியறிவைத்தருவதுடன், ஞாபக சக்தியை
அதிகரிக்கச் செய்கிறது.