பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.


"ஆமா..இப்பவேருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாதான் ஸ்கூல் போறப்ப கஷ்டமிருக்காது"ன்னு சொல்லி ABCD சொல்லிக்கொடுக்கிறாங்க அம்மா..அப்பாவுக்கும் அதே மனநிலை..

இது என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி..இதை நேற்றுத் தொலைபேசியில் கேட்ட போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த அம்மா என் ஒன்று விட்ட சகோதரி என்பதால் உரிமையுடன் ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அந்தக் குழந்தையின் வயது என்னவென்று நினைக்கிறீர்கள்? பிறந்து 5 மாதம் இப்போது. ABCD புத்தகம் எப்போது வாங்கினார்களோ தெரியவில்லை..

சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதில் தப்பில்லை..அதற்காக இப்படியா? இந்தப் பருவத்தில் சொல்லிக் கொடுப்பதற்கு மற்ற விஷயங்கள் எத்தனையோ இருக்க..அதற்குள் அரிச்சுவடி என்றால்..அந்தக் குழந்தை எவ்வளவு பாவம்!

"இவளுக்கு ஆங்கிலமும், கணக்கும் இன்னும் சரியாவே வரலை..அதுனால் திரும்பியும் இந்த வருஷமும் ஆறாவது வகுப்பே படிக்கட்டும்..."

இது என் மகளின் வகுப்புத் தோழியின் பெற்றோர் எடுத்துள்ள முடிவு.
பாவம்..அந்தக் குழந்தையின் மனோநிலை இப்போது எப்படியிருக்கும்..கூடப் படித்த பிள்ளைகள் 7ம் வகுப்பு போய்விட்டார்கள்.பள்ளியிலும் அந்தக் குழந்தையை 7ம் வகுப்புக்கு அனுப்பிவிட்டார்கள். கொஞ்சம் படிப்பில் பலவீனம்தான். என்றாலும், இவர்கள் யோசித்திருக்க வேண்டிய காலங்களில் கோட்டை விட்டுவிட்டு இப்போது யோசிப்பதில் என்ன பயன்? பள்ளியில் சேர்க்கும் போது மூன்று வயது ஒரு மாதம்..அதுவும் CBSE பாடத்திட்டம்..இங்கே பள்ளியில் மூன்றரை வயதில் தான் அனுமதிப்பார்கள்..
அப்படியிருந்தும், இன்னும் ஒரு வருடம் தாமதமாகக்கூடாது என்று இவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றுசாக்குப் போக்குச் சொல்லிப் பள்ளியில் சேர்த்து விட்டனர்.
முன் அந்தக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் வாங்கியிருக்கவில்லை..புதிதாக வாங்கும் போது இவர்களுக்கு வசதியான தேதியில் வாங்கியிருக்கக்கூடும்.

பள்ளியில் சேர்க்கும் ஆரம்பக்கட்டத்தில் வயதுக்கு மீறிய வகுப்பில் சேர்த்துவிட்டு, இப்போது குழந்தையைக் குறை சொல்லிப்பயன் என்ன?பலரும் செய்கின்ற தவறு இது..இருவரும் வேலைக்குப் போகின்ற சூழலில், தனிக்குடித்தன அமைப்பில் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வது சகஜமாகிவிட்ட ஒன்று. குழந்தைக்கு 2 வயது தாண்டினால் போதும்..காப்பகத்தில் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லையென்று, உடனே பள்ளியில் சேர்க்கும் ஆசை வந்துவிடுகின்றது. Play School என்றால் பரவாயில்லை..குழந்தை நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இன்னும் சிலர் 3 வயது முடிந்ததுமே முறையான பள்ளிக் கல்வி முறைக்குக் குழந்தைகளை ஆட்படுத்துகிறார்கள். Play Schoolக்கு அனுப்பி விட்டு "என்ன இது தினமும் வீட்டுப் பாடமும் இருப்பதில்லை..கேட்டாலும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறான்..இந்தப் பள்ளியே சரியில்லை.." என்ற குற்றச்சாட்டுகள் வேறு.

குழந்தைகளின் நரம்பியல் இயக்கங்கள் மற்றும் மனப்பக்குவம் மனதில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஐந்தரை அல்லது ஆறு வயது முடியும் தருணத்தில் முதல் வகுப்பு என்பதுதான் சரியான ஒன்று. மூன்றரை வயது முடிந்ததும் LKG சேர்ப்பதுதான் நல்லது. நம் வசதிக்காக, பொருந்தாத பருவத்தில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு, பின் குழந்தையும் நாமும் கஷ்டப்பட வேண்டியதுதான்..

மாண்டிச்சோரி அம்மையாரின் மகத்தான திட்டம் குறித்துப் புதுகைத் தென்றல் பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். அப்படியெல்லாம் இருக்க வேண்டிய அந்தப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன உண்மையில்..

அந்தத் திட்டத்தின் பெயரால் நம் ஊரில் நடக்கிற கூத்து கொஞ்சம் நஞ்சமல்ல..என் உறவுப் பெண் ஒருத்தி சென்னையில் இது போன்ற ஒரு பள்ளியில் வேலை செய்கிறாள். பெயரளவுக்கு மட்டுமே கடைப்பிடிக்கப்படும் மாண்டிச்சோரி முறை..போதிய காற்றோட்ட வசதிகளே இல்லாத ஓர் அறை அமைப்பு..இந்தச் சூழலில் பள்ளி நடத்துவது தவறென்றால், நிலைமை தெரிந்தே பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் செய்வதும் தவறுதானே?

பள்ளியில் சேர்க்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:


  • ஆரம்பக் கல்விக்குக் குழந்தையின் வயது மூன்றரை முடிந்திருப்பது அவசியம்

  • பள்ளியின் போதனை முறைகளுக்காக முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர் என்ற பட்சத்தில், சேர்க்கும் பள்ளியின் தரமும், செயல்பாடுகளும் அறிந்து சேர்ப்பது அவசியம். அதிகம் பிரபலமாகாத தரமான பள்ளிகளும் உண்டு.

  • பள்ளியில் குழந்தை செலவிடும் நேரம் வயதுக்குத் தக்கதாய், குழந்தையால் சமாளிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்.

  • நல்ல பள்ளி என்று தொலை தூரம் பயணம் செய்ய விட்டுவிடாதீர்கள்..வெகு சீக்கிரம் புறப்பட்டு, வெகு தாமதமாகத் திரும்பும் நிலை அவ்வளவு ஆரோக்கியமனதல்ல..கொஞ்சம் வளர்ந்தபின் அப்பள்ளியில் சேர்க்கலாம்..இல்லை..நீங்கள், உங்கள் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு, பள்ளிக்கு அருகில் வீடு மாறலாம்.

நம் நாட்டின் பாடத்திட்டங்கள் ஆரம்பக் கட்டத்தில் எப்படியிருந்தாலும், போகப் போகக் குழந்தைகளுக்கு ஒரு சவாலாகத்தான் அமைகின்றன. அந்தச் சவாலை அவர்கள் சிறந்த முறையில் மேற்கொண்டு செயலாற்ற நாம்தான் உதவ வேண்டும்.


20 comments:

2 வயதுக்கு மேல் அரிச்சுவடி சொல்லிக்கொடுக்கலாம். (எழுத்துக்களை அறிய மட்டுமே.)
அதுவரை, மர வகைகள், பழவகைகள், பூக்கள், அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களின் பெயர்கள், வீட்டில் இருக்கும் அறைகளின் பெயர்கள், பள்ளியில் என்னென்ன இருக்கும், இப்படிப் பல இருக்கின்றன இவைகளை படங்களுடன் போத்தித்தால் மனதில் பதியும்.

வாய்மொழியாகச் சொன்னால் போதும்.

பாசமலர் மேடம்,

// அந்தக் குழந்தையின் வயது என்னவென்று நினைக்கிறீர்கள்? பிறந்து 5 மாதம் இப்போது. ABCD புத்தகம் எப்போது வாங்கினார்களோ தெரியவில்லை..//

அடடா, ஐந்து மாதங்கள் வீணாகி விட்டனவா?

நான் என் நண்பர் ஒருவருக்கு ஐடியா கொடுத்துள்ளேன், கர்ப்பிணிகளுக்காக ஒரு பெல்ட் தயாரிக்கச் சொல்லி. அதனை இடுப்பில் கட்டிக்கொண்டால் சிறிய அதிர்வுகள் மூலம் வயிற்றில் இருக்கும் கருவிற்கு அது ஆங்கிலப்பாடம் எல்லாம் சொல்லிக் கொடுத்து விடும் என்று விளம்பரம் செய்தால், நடுத்தர மேல் நடுத்தர குடும்பக் கூமுட்டைகள் வரிசையில் புக் பண்ணி வாங்குவார்கள் என்று.

ஏன் பிரகலாதன் நாராயண மந்திரத்தையும், அபிமன்யு சக்கரவியூக ரகசியத்தையும் கருவிலேயே கற்றுக் கொண்டதாக, தெய்வத்தின் பெயரால் கதை சொல்லித் திரியும் தேசத்தில் இது மட்டுமேன் சாத்தியமாகக் கூடாது?

புதுகைத் தென்றல்,

வாய்மொழி என்பதைப் பெற்றோர் சரியாகப் புரிந்து கொண்டாலே போதுமே..

ரத்னேஷ் சார்,

//ஆங்கிலப்பாடம் எல்லாம் சொல்லிக் கொடுத்து விடும் என்று விளம்பரம் செய்தால்..//

விளம்பரம் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது..

ரொம்ப சரியா சொன்னீங்க மலர், இப்பெல்லாம் விடியற்காலையிலேயே எழுந்து (பல் கூட தேய்ச்சிருப்பாங்களோ இல்லையோ) யூனிபார்ம் மாட்டி பசங்க காத்திருப்பதை பார்த்தால் ரொம்ப பாவமா இருக்கும். ஆனா பெற்றோர்களுக்கு இதில் ஒரு வரட்டு பெறுமை. நிலமை மாற பெற்றவர்கள் தான் சிந்திக்கவேண்டும். நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.

ரொம்ப நல்லா பதிவா போட்டு இருக்கீங்க.

உண்மைதான் கிருத்திகா,

பெற்றோரின் வறட்டு கவுரவம்..தவறாகப் புரிந்து கொள்ளுதல்..இதற்கெல்லாம் பலியாவது குழந்தைகள்தான்.

//ஏன் பிரகலாதன் நாராயண மந்திரத்தையும், அபிமன்யு சக்கரவியூக ரகசியத்தையும் கருவிலேயே கற்றுக் கொண்டதாக, தெய்வத்தின் பெயரால் கதை சொல்லித் திரியும் தேசத்தில் இது மட்டுமேன் சாத்தியமாகக் கூடாது//

ரத்னேஷ்,
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு கேட்கும் சக்தி உண்டு என்பது இப்போது அறிவியலாரும்
ஒத்துக்கொண்ட உண்மை.

நன்றி நிஜமா நல்லவன்...

பாசமலர்,
இந்த ஊரில் மாண்டிசோரி முறை வீணாவதை நினைத்து வருந்துகிறேன்.

நீங்கள் சொல்வதுபோல பெற்றோரின் ஆசைக்கு அடிமையாக நடத்தப் படும் குழந்தைகள் நிலைமை கடுமைதான்.
குழந்தைகள் அவர்கள் இஷ்டம் போல
இருக்கும் நாட்கள் எங்கே இருக்கோ?

அருமையான பதிவு மலர்.. ஏனைய பதிவுகளையும் படித்தேன். பின்னூட்டம் போட நேரமில்லை.
குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பது ஒரு விஷயம். 2 வயதிலே கொண்டு போய் பள்ளிகூடத்தில் சேர்த்துவிடுவதுதான் மிக கொடுமை. குழந்தைகளுக்குறிய தடுப்பூசிகளை சரிவர போட்டிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் எதிர்க்கும் சக்தி வேண்டும்.

ரத்னேஷ்!
நான் என் நண்பர் ஒருவருக்கு ஐடியா கொடுத்துள்ளேன், கர்ப்பிணிகளுக்காக ஒரு பெல்ட் தயாரிக்கச் சொல்லி. அதனை இடுப்பில் கட்டிக்கொண்டால் சிறிய அதிர்வுகள் மூலம் வயிற்றில் இருக்கும் கருவிற்கு அது ஆங்கிலப்பாடம் எல்லாம் சொல்லிக் கொடுத்து விடும் என்று விளம்பரம் செய்தால், நடுத்தர மேல் நடுத்தர குடும்பக் கூமுட்டைகள் வரிசையில் புக் பண்ணி வாங்குவார்கள் என்று////////////.

என் சிரிப்பு சத்தம் கேட்கிறதா? :P

வல்லி மேடம்,

உண்மைதான்..மிகவும் வீணடிக்கிறார்கள் ஒரு நல்ல அமைப்பை..விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இது போன்ற அமைப்பில் நல்ல பள்ளிகள் இயங்குகின்றன..

பயிற்சிப் பள்ளிகள் என்று கூறிக் காசு பிடுங்க ஒரு கூட்டம்..இந்த அமைப்பு எங்கள் பள்ளியில் இருக்கிறது என்று போலி விளம்பரம் செய்ய ஒரு கூட்டம்..

நம் மக்கள் ஏமாறாமல் இருப்பது அவர்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது..

//குழந்தைகள் அவர்கள் இஷ்டம் போல
இருக்கும் நாட்கள் எங்கே இருக்கோ//

பெரியவர்கள் தம் ஆர்வக்கோளாறுக்காக, படிப்பையும் ஒரு சொத்தைப் போல நினைப்பதுதான் காரணம்..இந்த மாற்றம் எல்லா நிலையிலும் ஏற்படுவது கஷ்டம்தான்..

//குழந்தைகளுக்குறிய தடுப்பூசிகளை சரிவர போட்டிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் எதிர்க்கும் சக்தி வேண்டும்.//

ஒரு மருத்துவர் கோணத்தில் மிகச் சரியான அறிவுரை..

அவ்வப்போது, நேரம் கிடைக்கையில் இந்தப் பக்கம் வந்து பதிவுகள் மூலமும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் டாக்டர்..

நான் கேட்க நினைத்ததை நீங்க
கேட்டுடீங்க பாசமலர்.

டெல்பின் அவர்களை மருத்துவம் சம்பந்தமாக (குழந்தை மருத்துவம்)
பதிவு போடச்சொன்னதை சொன்னேன்.

வாங்க டாக்டர். கொஞ்சம் வந்து உதவுங்களேன்.

புதுகைத் தென்றல் மேடம்,

//ரத்னேஷ்,
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு கேட்கும் சக்தி உண்டு என்பது இப்போது அறிவியலாரும்
ஒத்துக்கொண்ட உண்மை.//

பிரச்னை என்னுடைய கடவுள் நம்பிக்கை குறித்தது அல்ல; குழந்தைகள் கருவில் இருக்கையில் என்னென்ன அதிர்வுகளுக்கு ஆளாகும் என்பது வரை ஆய்வுகள் வந்து விட்டன. கர்ப்பிணியிடம் அதிர்ந்து சண்டை போடக் கூடாது; அது குழந்தையின் முளைத் திறனைக் கூட பாதிக்க வாய்ப்பு இருக்கிறது; கர்ப்பிணியின் மனோநிலை குழந்தையின் PERSONALITY-ஐத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மனைவியைத் தனியே தவிக்க விட்டுவிட்டு, அவளுக்கு நிலைமையைச் சரிவரப் புரியவைக்க வேண்டியதைக் கடமை என்று எண்ணாமல், பெற்றவர்கள், உடன்பிறந்தவர்களின் நன்மைக்காக வெளிநாடு சென்று பொருள் ஈட்டும் பல கணவர்களின் முதல் குழந்தைகள் தந்தையை மதிப்பதில்லை என்பதெல்லாம் குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாயின் எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடே என்பது வரை நிறைய ஆய்வுகள் உள்ளன.

நான் சொல்ல வந்தது, எந்தக் குழந்தையும் கருவில் நாராயண மந்திரத்தையோ சக்கரவியூக வித்தையையோ உள்வாங்கி விட முடியாது என்பது தான். அதெல்லாம் தெய்வத்தின் பெயரால் சொல்லப்படும் அபத்தங்கள்.

ஒருபக்கம் அவற்றையும் நம்பிக் கொண்டு மறுபக்கம் மூன்று வயது வரை குழந்தையின் மூளை வளர்ச்சி குறித்தும் கவலைப்படுவது எப்படி சரியாக இருக்கும்?

நன்றி டாக்டர் மேடம்.

//என் சிரிப்பு சத்தம் கேட்கிறதா?//

வாய்விட்டுச் சிரித்தா நோய் விட்டுப் போகும் என்கிறீர்கள்!

நான் கூட கொஞ்சம் இதே மாதிரி செஞ்சி இருக்கேன். எங்க குட்டி இம்சை பிறந்து 6 மாதத்தில் ABCD புக், Flash Card, எல்லாம் வாங்கி வந்தேன் .

இப்படி எல்லாம் அறிவுரை அடிக்கடி சொல்லுங்க அப்ப தானெ என்ன மாதிரி இம்சைங்களுக்கு தெரியும்.

இம்சை,

நீங்க இதெல்லாம் வாங்கி வச்சிருந்தாலும் பவனைத் தொந்தரவு பண்ணின மாதிரித் தெரில...

நன்றி மலர், புதுகை தென்றல்...

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்