பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.





பெற்றோர்கள் கூட்டாக நடத்தும் இந்த வலைப்பூ
வலையுலகில் ஒரு புது முயற்சி என விகடன்
பாராட்டியிருக்கிறது.




அங்கத்தினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஆதரவு அளிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

புதுகைத் தென்றல்





பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.


நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.


நன்றி: சங்கமம்

முன்பெல்லாம் பள்ளியில் மாரல் ஸ்டடி என்று ஒரு
வகுப்பு உண்டு. நல்லது கெட்டது கதைகளாக
சொல்லப்படும்.

value education என்று பிறகு மாற்றினார்கள்.

இப்போது இரண்டு வகையும் இல்லை. அதனால்
பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை
நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.

இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு
செல்கிறது.


குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும்
பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால்
உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால்
அடித்து திட்டி செய்வோம்.

தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி
நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்
சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள்
என்னவென்று பார்ப்போம்.

************************************

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது
கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி
முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக
சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில்
சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில்
இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/
தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது
கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன
வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை
தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது
நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை
திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள்
வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.
கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.
இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.

4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்
சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது
"You're welcome" சொல்ல மறக்காதீங்க.

5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.
பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே
போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எஜமான் பட நெப்போலியன்
போல,”கல்யாண வீட்டுல நான் தான் மாப்பிள்ளை, செத்த
வீட்டுல நா தான் பொணம், மாலையும் மரியாதையும்
எனக்குத்தான்” எனும் அந்த வசனம் சினிமாவில் சரி
நிஜத்தில் வெற்றி/தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை
வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப்
பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின்
மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு
வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால்
என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க
வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே
நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியே
வந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே
செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான்
நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது
மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு
படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின்
பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க
வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை
அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணரவேண்டு.



குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளா? கேள்வி ரொம்பவே
யோசிக்க வைக்குதுல்ல???

நண்பர் பதிவர் கதிர் அவர்கள் எழுதியிருப்பதை படிங்க.
பல பெற்றோர்களுக்கு உதவியாய் இருக்கும்.

***************************************************

என் மகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. (ஒன்னாப்பு தானுங்க படிக்குது) கடந்த மாதம் காலண்டுத் தேர்வுகள் முடிந்த பின், அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பிள்ளைகளின் தரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு.

முதலில் வகுப்பாசிரியையோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அடுத்து சோசியல் பாடம் எடுக்கும் ஆசிரியை சந்திக்கச் சென்றபோது, அந்த வகுப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரி மற்ற ஆசிரியைகளைப் பார்த்து விட்டு பின்னர் அவரைச் சந்திக்கலாம் என நினைத்து, மற்ற ஆசிரியைகளிடம் சில சில நிமிடங்களைச் செலவழித்து விட்டு கடைசியாக வந்த போதும், அந்த அறை கூட்டமாகவே இருந்தது.

சரி வேறு வழியில்லையென்று கூட்டத்தோடு நின்று கவனிக்கும் போது தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாப் பெற்றோர்களும்
* எப்பா பார்த்தாலும் விளையாட்டு
* அடங்காத குறும்பு
* வீட்டிலே படிக்கிறதேயில்லை
* சீக்கிரம் தூங்கறதில்லை
என அந்த ஆசிரியையைச் சுற்றி நின்று கொண்டு ஒவ்வொருவராக புகார் சொல்லிக் கொண்டேயிருந்தனர்.

என் மகள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அடிக்கண்ணால் என்னைப் குறுகுறுப்பாக பார்த்தது.

என் மகள் குறும்பு என்ற புகார் எப்போது என்னிடம் இருந்ததில்லை. நாற்காலியில் நான் உட்கார்ந்து இருக்கும் போது, பெரும்பாலும் என் கால்களின் மேலேயேதான் நின்று கொண்டிருக்கும், சில சமயம் பக்கவாட்டில் ஏறி கழுத்து மேல் உட்கார்ந்து சரிந்து சறுக்கல் விளையாடுவதும் நடக்கும்.

எல்லோருக்கும் ஒரு புன்னைகையோடு அந்த ஆசிரியை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். “இதுகெல்லாம் குழந்தைங்க, குழந்தைங்னா விளையாடத்தானே செய்யும். தயவுசெய்து குறும்பு செய்யும் குழந்தையை மிரட்டி மிரட்டி அடக்கி வைக்காதீங்க. நீங்க வீட்டில் அதைத் தொடாதே, அங்க போகாதேனு தொடர்ந்து மிரட்டினா, எதற்கெடுத்தாலும் அந்த குழந்தைக்கு பயம் வர ஆரம்பிக்கும் அல்லது அங்கே அடக்கி வைத்ததெல்லாம் பள்ளியில் வந்து வெளிப்படுத்த முயலும். நான் 40 நிமிட வகுப்பில் 25 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்துவதில்லை. மீதி 15 நிமிடங்கள் கட்டாயம் கதை பேசுவேன்” என்றார்.

இது போல் தொடர்ந்து நிறைய பகிர்ந்து கொண்டேயிருந்தார்...

மனது விட்டேத்தியாக இருந்தது. ‘ஏன் குழந்தைகள் பற்றி பெற்றோரிடம் இத்தனை புலம்பல்கள்’

*சமீபகாலமாக குழந்தைகளை அதிகமாக பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ?
அதிக தூரம் நடக்க பழக்குவதில்லை
*வீட்டு வாசலிலிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறோம்
*வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை
*நமக்கு சிரமம் கொடுக்கும் நேரங்களில் ஒன்று மிரட்டி தூங்க வைக்கிறோம் அல்லது தொலைக்காட்சி பார் என ஒதுக்கி வைக்கிறோம்.

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகளை அழகாகவும், சொகுசாகவும் குரோட்டன்ஸ் செடி போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோமோ என அச்சம் வருகிறது.

(உங்க கருத்தை கண்டிப்பா பதிஞ்சிட்டு போங்க.

-------------------------------------------------------------------------

ஒரிஜின்ல் பதிவு இங்கே இருக்கு.

சென்ற பதிவில் சுட்டிக்குழந்தைகள் நீண்ட நேரம் அமர மாட்டார்கள் மற்றும் அடிக்கடி செயல்களை மாற்றிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். அதனால் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது அடிக்கடி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பார்த்தோம். இந்த பதிவில் அவர்களிடம் இயற்கையாக உள்ள எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி எப்படி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக மாற்றுவது என்று பார்க்கலாம்.

4.எதிர்மறை மனோபாவம்

பொதுவாக குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு (கோபத்தில் மாற்றி செய்வதுஅல்ல, நல்ல மனநிலையில் அல்லது சிரித்துக்கொண்டே மாற்றி செய்வார்கள்). என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் எதிர்மறை மனோபாவமும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.

எதிர்மறை மனோபாவம் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள ஒரு சின்ன நிகழ்ச்சி. தட்டில் சாப்பாடை போட்டுவைத்து விட்டு “நான் சவால் விடுகிறேன் உன்னால் இந்த சாப்பாடை 2 நிமிடத்தில் சாப்பிட முடியாது” என்று சொல்லுங்கள். உடனே சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.


இந்த முறையை எப்படி வீட்டுப்பாடத்திற்கு பயன்படுத்துவது.

முறை.1.
சொல்லித்தரும்போது scaleஐ முதுகுக்கு பின் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக சொன்னால் அடிப்பேன், தவறாக சொன்னால் அடிக்க மாட்டேன் என்று சொல்லுங்கள். லேசாக அடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவை அடி விழும்போதும் எவ்வளவு சந்தோசமாக படிக்கிறார்கள் அல்லது எழுதுகிறார்கள் என்று கவனியுங்கள். அடி விழாமல் போகும்போது என்ன தவறு என்று எவ்வளவு ஆர்வருடன் தேடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கும்.

முறை.2.
ஒரு கணக்கு போட ஆரம்பிக்கும்போது “இது ரொம்ப கஷ்டம். உன்னால முடியாது தம்பி” என்று சொல்லுங்கள். நன்றாக போட்டுவிட்டால் “சே.. மாட்டுக்குவான்னு நினைச்சேன், தப்பிச்சுட்டாண்டா” என்று சொல்லுங்கள். அடுத்த கணக்கிற்கு “போன தடவைதான் மாட்டல, இந்த தடவை மாட்டிக்குவான் பாரு” என்று தொடருங்கள்.
இந்த முறையை உங்கள் குழந்தைகளால் நன்றாக செய்ய முடிகிற பாடத்தில் மட்டும் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.

முறை.3.
குழந்தைகள் படிக்கும் பாடத்தை நீங்களும் படித்து அவர்களிடம் பார்க்காமல் சொல்லுங்கள். சொல்லும்போது சில இடங்களில் தவறுகளை செய்யுங்கள்.
உதாரணத்திற்கு குழந்தை 7 table படிக்கிறான் என்றால், படித்து முடித்தவுடன் நீங்கள் அதே tableஐ அவனிடம் பார்க்காமல் சொல்லுங்கள். “நீ பார்த்துக்கொண்டே வா, தவறாக சொன்னால் சொல்லு” என்று சொல்லுங்கள். அவன் படிக்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் குழந்தை கஷ்டப்பட்டிருந்தால் அந்த இடத்தில் நீங்கள் தவறாக சொல்லுங்கள். அவன் நம்மை திருத்தும்போது அவனுக்கு மனதில் நன்றாக பதியும். இது மீண்டும் மீண்டும் revision செய்ய வைக்கவும் ஒரு வழி.



எதிர் மறை மனோபாவம் முறையை பயன்படுத்த நினைப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் தவறான் நேரத்தில் பயன்படுத்திவிட்டால் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்து விடும்.

இந்த முறையை பயன்படுத்தக்கூடாத சூழ்நிலைகள்:
1. நீங்களும் உங்கள் குழந்தையும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதாவது tensionலோ, கோபத்திலோ இருக்கக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தி விட்டதாக தெரிந்தால் உடனே கவனத்தை வேறு விசயத்தில் திருப்பி விடுங்கள்
2. இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
3. குழந்தைகளுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது கௌரவத்தை பாதிக்கும் வித்தத்திலோ பயன்படுத்தக்கூடாது. அதாவது அவர்கள் தோற்கும் விதத்தில் இந்த முறையை பயன்படுத்தக்கூடாது.

நாம் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது புரிய வைக்க வேண்டும் என நினைத்து நாம் செய்யும் காரியங்கள் பல நேரங்களில் குழந்தைகள் அரைகுறையாக புரிந்து வைத்திருப்பதையும் குழப்பி விடுவதாக அமைகிறது. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.


.

எண்ணுவது உயர்வு

ஒரு ஊரில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆலமரமொன்றில் ஒரு காகமும், ஒரு புறாவும் நெடுநாட்களாகத் தவம் செய்துக் கொண்டிருந்தன.

அவைகளைப் பார்த்த இறைவன் மனமிரங்கினார். அந்த மலையடிவாரத்தில் அப்பறவைகள் முன் காட்சியளித்தார்.

இறைவனைத் தங்கள் கண் முன்னேக் கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.

பறவைகளே! உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார்.

உடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.

காகமே உனக்கு உனது எண்ணப்படியே வரம் தந்தேன் என்று கூறியவாறு இறைவன் உடனே புறாவைப் பார்த்தார்.

புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது. அன்பும் இல்லாமல், இரக்கமும் இல்லாமல் பலக் கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.

இறைவன் புறாவை வியப்போடு பார்த்தார்.

புறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை அப்படியே என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது. நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே நீ கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்கும் அனைவரும் அதை மதித்து நடப்பார்கள். உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.

காகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்னிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்து அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது.

புறாவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது.

புறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக் கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல்லறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு மதிப்புக் கிடைத்தது. புறாவும் மிகவும் மகிழ்ச்சியோடு தமக்குக் கிடைத்த உணவு வகைகளை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்துக் கொடுத்தது.

ஒரு நாள் பொன்னிறமான இறக்கைகள் கொண்டக் காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தைப் பிடித்துச் சென்று கூண்டிலடைத்து வேடிக்கைப் பொருளாக்கினான்.

வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது பேராசை பிடித்து கீழ் தரமான எண்ணத்தால் இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்தத் துன்பம் நேர்ந்திருக்காதே. இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவரின் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடைவார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.


எண்ணத்தால் எண்ணம் போல் வாழ்க்கை அமைவதால், நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்.




.

மலர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுட்டிப் பையன்களைப் பற்றி இந்த பதிவில் எழுதுகிறேன். நான் சுட்டிப் பையன்களை நேரடியாக கையாண்டதில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன். ஆகவே இந்த பதிவில் எனது கருத்து முழுமையாகிவிடாது. எனக்குப் புரிந்ததை எழுதுகிறேன். மேலும் அனைவரையும் பங்குகொள்ளவும் அழைக்கிறேன்.

சுட்டிக் குழந்தைகள்

இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள், நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள். எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டிருப்பார்கள் ஆனால் அதிக நேரம் ஒரு செயலில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் செயலை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

துரு துரு என்று இருப்பதால் அடிக்கடி காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதனால் நாம் அடிக்கடிஇதை செய்யாதே, அதை செய்யாதேஎன சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இச்செயலே நமக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி, நாம் எதை சொன்னாலும் குழந்தைகள் கேட்காமல் போகும் சூழ்நிலையில் கொண்டுபோய்விடும்.

இவர்களை எப்படி கையாள்வது என்பதிலிருந்த சென்றால்தான் விசயம் முழுமையாகும். இருப்பினும் இந்த பதிவில் வீட்டுப்பாடம் சொல்லித்தர என்ன விதிகளைக் கையாளலாம் என்பதை மட்டும் பதிய விழைகிறேன்.
குறுகிய நோக்கில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:

1. பள்ளியிலிருந்து வந்ததும் 1 மணி நேரமாவது நன்கு விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு என்றால் அறைக்குள் விளையாடும் விளையாட்டு அல்ல. மைதானத்தில் () வெட்ட வெளியில் தங்கு தடையில்லாமல் விளையாட அனுமதிக்க வேண்டும். In other word, First you fulfill their physical needs or their natural interest.

2. சொல்லித்தருபவர் அவருக்கென ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சொல்லித்தர அமரவேண்டும். நாம் சொல்லும் அறிவுரையைவிட நாம் செய்யும் செயல்களையே குழந்தைகள் பின்பற்றுகிறார்கள். நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். (இந்த ஒரு விதிக்கு மட்டும் ஒரு பதிவு போடலாம். இப்பொழுது இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்)

3. ஒரு நாளில் 3 மணிநேரம் சொல்லித் தருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் 1-1.30 மணி நேரம் மட்டுமே பாடத்தை சொல்லித்தர வேண்டும். அதாவது 10 நிமிடம் படித்தால் 15 நிமிடம் வீட்டிற்குள்ளேயே விளையாட்டு. இங்கு விளையாட்டிற்கு அதிகம் யோசிக்க வேண்டாம். சிறு சிறு விளையாட்டுக்கள் போதும் (ஏனெனில் சீக்கிரம் விளையாட்டை முடிக்க வேண்டும்.அதுவும் முக்கியம்) ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்டுபிடிப்பது, இருவரும் எதிரேதிரே அமர்ந்து கை தட்டுவது, கழுவிய பாத்திரத்தை எடுத்து வைப்பது போன்றவை. Foot ball ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இடையிடையே அந்த பந்தை சுவற்றில் உதைத்து விளையாட சொல்லுங்கள்.

இதில் ஒரு பிரச்சினை உண்டு. விளையாட்டை முடிக்கலாம் என்று நீங்கள் சொல்லும்போது அவர்கள் இன்னும் சிறிது நேரம் விளையாடலாம் என்று சொல்லுவார்கள். ஆகவே விளையாட்டை முடிக்கலாம் என நீங்கள் நினைக்கும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாகவே முடிக்கலாம் என்று சொல்லுங்கள். அவர்கள் இன்னும் சிறிது நேரம் என்று சொன்னால்சரி இன்னும் ஒரு முறை விளயாடிவிட்டு படிக்க வாஎன்று சொல்லுங்கள். அடுத்த முறை அழைக்கும்போது கண்டிப்பாக வந்து விடுவார்கள்.

4.எதிர்மறை மனோபாவம்
பொதுவாக குழுந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்க்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு. என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் இதுவும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.

இந்த எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக கொண்டுசெல்லாம். எப்படி? என்று அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.





.

2. வேகமாகப் படிப்பவர்கள் Fast Learners

இவர்கள் எதையும் சீக்கிரம் கற்றுக்கொளவர்கள். இவர்களைப் பெற்ற பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் வீட்டுப்பாடம் முடிப்பதில் எந்த சிரமும் இருக்காது. எல்லாவற்றையும் சீக்கிரம் முடித்துவிட்டு விளையாடுவதையோ அல்லது டி.வி பார்க்கவோ சென்றுவிடுவார்கள்.

இவர்களிடம் உள்ள பிரச்சினை சீக்கிரம் படிப்பதைப்போல் சீக்கிரம் மறந்தும் விடுவார்கள். படித்ததில் ஆழ்ந்த புரிதல் இருக்காது. புரிந்து படிப்பதைவிட மனப்பாடம் செயவதையே விரும்புவார்கள். அதனால் கணக்கு சரியாக வராது. மற்ற பாடங்கள் நன்றாக வரும். பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த வகையில் வருவார்கள்.

இவர்களுக்கு பாடம் சொல்லித் தரும்போது கீழ்கண்ட விதிகளைப் பின்பற்றுங்கள்.

1. அவர்களின் வேகம் என்னவோ அதே வேகத்தில் சொல்லிக்கொடுத்து விடுங்கள். புரியவைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு மெதுவாக சொல்லிக்கொடுத்தால் பாடம் போரடித்து வீட்டுப்பாடத்தையே வெறுப்பார்கள்.

2. இப்பொழுது புரிந்துபடிக்கவில்லை என்பதற்ககாக கடைசி வரை இப்படியே இருப்பார்கள் என எண்ண வேண்டியதில்லை. எந்த வயதிலும் புரிந்து படிப்பவர்களாக மாறலாம். நம்முடைய கடமை பாடத்தின்மீடு வெறுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் போதும்.


3. கடைக்கு செல்லும்போது கூட்டிச்செல்லுங்கள். பொருட்களின் விலை என்ன? எவ்வளவு கொடுத்தோம்? மீதி எவ்வளவு வாங்கினோம்? என்பதை வெறும் தகவலாக மட்டும் சொல்லுங்கள். சிறிது காலத்திற்கு பிறகு அவர்களாகவே கணக்கு கேட்பார்கள். அப்பொழுதுதான் எப்படி கூட்டினோம், கழித்தோம் என்ற கணக்கையெல்லாம் சொல்ல வேண்டும்.

அடுத்த வாரம் குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்