பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

என் மகனுக்கு தினசரி கதை சொல்வது வழக்கம்.. சொல்லாவிட்டால் தூங்க மாட்டார்..இதற்காக நானும் பெரிதாக தயாரித்துவைத்துக்கொள்ளவும் முடியாது.. படுத்ததும் கற்பனையில் என்ன தோணுதோ அதுதான் கதை..

அப்படி நேற்று இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்ப பிடித்து ரயில் அண்ணாவோடு
ஒன்றிவிட்டார்.. இதே போல மரங்கள் விலங்குகளோடும்..

அவருக்கு சொன்ன கதைகளை , பாட்டுகளை வைத்து ஒரு புத்தகமே போட்டிருக்கலாம்..:)
இப்பவாவது சில கதைகளை எழுதி வைக்கலாம்னு தோணியது..

இக்கதைகளை படிக்குமுன்பு 4-5 வயது சிறுவறாய் மாறிடுங்கள் ரசித்திட..]


*************************************************

புன்னைதைதேசம் எனும் வலைப்பூ வைத்திருக்கும்
தோழி இந்தக் கதையை நமக்கு அனுப்பியிருக்கிறார்.
******************************************************
கதை ஆரம்பம்.
" கூஊஊஊஊஊஊஊஊ. குச்...குச்...குச்...குச்.................."

" வந்தாச்சு வந்தாச்சு ரயில் அண்ணா , வந்தாச்சு...."


" பேராண்டி ஒனக்கும் ரயில் அண்ணாவா?.. எங்களுக்குத்தான் அவர் அண்ணா. உங்களுக்கெல்லாம் ரயில் மாமா.."


" இல்ல தாத்தா எங்களுக்கும் ரயிலண்ணா தான் .."

" என்ன முத்தையா சார், பேரப்பிள்ளையோடு பேரம் ? ." ரயிலண்ணா..

இப்படித்தான் அந்த தானியங்கி ரயில் எல்லோர் மனதிலும் உறவாய் ஆக்கிரமித்திருந்தது கடந்த பல வருடங்களாக... மலை தேச ரயில் மட்டுமல்ல , இதுவரை ஒருமுறை கூட விபத்து ஏற்படாமல் பயணிகளை பத்திரமாக சேர்ப்பதோடு அவர்களுக்கு பிடித்த வளைவு நெளிவான மலைகளில் நிறுத்தி நிதானமாக இயற்கை எழில் காட்சிகளை கண்டுகளித்திடவும் செய்வார் ரயிலண்ணா.

ஆறிலிருந்து அறுபது வரை அவருக்கு விசிறிகள் உண்டு...

ரயிலில் ஏறி அமர்ந்ததுமே இசைக்க ஆரம்பித்துவிடுவார்... அந்த மகிழ்ச்சியில் இணைந்து பயணிகளும் தாளத்துக்கேற்ப பாடலோடு ஆடவும் ஆரம்பித்திடுவார்கள்.. ரயிலை யாரும் அசுத்தப்படுத்துவதும் கிடையாது.. கீழே இறங்குமுன் தன்னால் முடிந்தளவு சுத்தப்படுத்திவிட்டே செல்வார்கள்.. இதை காணும் ரயிலண்ணாவுக்கு விழிகளில் நீர் முட்டும்... அதை அவர் சில சமயம் ஆவியாய் வெளியிடுவார்...

இப்படி மகிழ்வோடு இருந்த நாளில் வந்தது சோதனை...
நீலகிரி மலையில் சென்று கொண்டிருந்தபோது கனத்த மழையினால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தமையால் கவனமாகவே சென்ற ரயிலண்ணா சிறிது தடம் புரண்டுவிட்டார்... உடனே நிறுத்தியும் விட்டார், பயணிகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாமல்... எல்லோரும் இறங்கி வந்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதுமாய் பாதையை செப்பனிட உதவுவதுமாய் இருந்தார்கள்..

அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு இந்த ரயிலுக்கு வயதாகிவிட்டது கேரேஜில் வைத்திடலாம் என அறிக்கை சமர்ப்பித்து சென்றார்கள்..

கேரேஜில் வைக்கப்பட்ட ரயிலண்ணாவுக்கு மிகுந்த கவலையாகிவிட்டது...ஆனாலும் அங்கும் வந்து குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பத்தோடு வந்து விளையாடி சென்றனர்.. இருப்பினும் ரயிலண்ணா கவலை தீரவில்லை...

இதை கவனித்த குழந்தைகள்

" ரயிலண்ணா, ரயிலண்ணா, ஏன் முன்பு மாதிரி நீங்க மகிழ்ச்சியா இல்லை ?.."


" குழந்தைகளே , எனக்கு இன்னும் நல்ல தெம்பு இருக்குது பயணம் செய்ய.. ஆனால் சின்ன விபத்தால் என்னை இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டார்கள்.
ஏதோ புது ரயில் வரப்போகிறதாம்.. அதான் ... என்னோட உறவுகள் ஒவ்வோரு ஊரிலும் இருக்காங்களே அவர்களெல்லாம் என்னை தேடுவார்களே.. இப்படி சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டால் அவர்கள் பாடு பரிதாபமல்லவா?.." என வருந்தியது...

" அழாதீங்கண்ணா ...நாங்கல்லாம் இருக்கோம்.."


[[ இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே சின்னவருக்கு பொத்துக்கொண்டு வருது வீரமும் , சோகமும்..... அதுவரை ..ம்..ச்.. கொட்டிக்கொண்டிருந்தவர் , " நான் அந்த கேரேஜை திறந்து அந்த ரயிலண்ணாவை உடனே விடுவித்துவிட்டு வெளியில் ஓட செய்வேனே... ".. பொறுமை பொறுமை என அடக்கவேண்டியிருந்தது.. ]]]

" நீங்கல்லாம் சின்ன பிள்ளைகள் .. என்ன செய்ய முடியும்.. பரவாயில்லை...நான் உங்களுக்காக இனி மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறேன்.." ரயிலண்ணா கண்ணீரை துடைத்துக்கொண்டார்..

எல்லா சிறுவர்களும் வீடு சென்று எப்படியாவது இந்த ரயிலண்ணாவை விடுதலை செய்யணும்னு ஒரே பிடிவாதம் . அன்றிரவே ஊர் கூடியது..குழந்தைகளின் தொல்லை தாங்காமல்


அதிகாரிகளிடம் பேசினார்கள் பெரியவர்கள்... அதிகாரிகளும் வந்து பார்த்து சின்ன சின்ன கோளாறுகளை செப்பனிட்டார்கள்...


ரயிலண்ணா ஓட தயாரானார்.. அப்பதான் ரயில் அழுக்கேறி இருப்பதை பார்த்த குழந்தைகள் ரயிலண்ணாவுக்கு வண்ணம் தீட்டினால் என்ன என யோசனை சொன்னார்கள்.


அதற்கு அதிகம் செலவாகும் என சொன்னதும் எல்லோரும் வீட்டுக்கு சென்று உண்டியலையும் தம் சேமிப்பையும் எடுத்து வந்தார்கள்.. மொத்தமே ஆயிரம் ரூபாய் கூட தேரவில்லை...எல்லோருக்கும் சிரிப்பு..

இருப்பினும் குழந்தைகளின் உற்சாகத்தை பார்த்த அதிகாரிகள் ரயிலுக்கு வண்ணம் தீட்டுவதோடு பலவிதமான விலங்குகள், இயற்கை காட்சிகள் நிறைந்த
படங்களையும் ரயிலில் வரைய உத்தரவிட்டார்..

ரயிலண்ணா இப்போது மிக இளமையாக தோற்றமளித்தார்... முன்பை விட பன்மடங்கு உற்சாகத்தில் விசிலடித்துக்கொண்டே கிளம்பியதும் அந்த
உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக்கொள்ள எல்லோரும் ஏறிக்கொண்டனர் அந்த சோதனை ஓட்டத்தில்...

குழந்தைகளுக்கோ பெருமை பிடிபடவில்லை....







பதின்ம வயது பிள்ளைகள் அந்தந்த வயதிற்கே உரிய வளர்ச்சியுடன்
காணப்படுவார்கள். பெண் பிள்ளை பூப்பெய்வதும் அப்போதுதான்.
வெளியே சொல்ல முடியாமல், சொன்னால் தவறாக நினைப்பார்களோ!!
என்று குழம்பி தவிப்பான் ஆண்பிள்ளை.

(13 வயது தான் டீன் ஏஜின் துவக்கம் என்றாலும் பல பிள்ளைகள்
11 வயது அடைந்த உடனே மாற்றங்கள் மெல்ல நிகழும்)


தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரியா? தவறா? எல்லோருக்கும்
இப்படித்தான் இருக்குமா? போன்ற அனாவசிய குழப்பங்கள்
பிள்ளைக்கு ஏற்படும். யாருக்கும் நேராத ஒன்று தனக்கு மட்டும்
ஏற்பட்டிருப்பதாக உள்ளுக்குள் புழுங்கிப்போவார்கள். தெளிய
வைக்க வேண்டியது நம் பொறுப்பு.

அந்தரங்க உறுப்புக்களில் முடிவளர்தல் சாதாரணமான ஒரு
நிகழ்ச்சி என்று புரிய வைக்க வேண்டும். பெண்களுக்கு
ஏற்படும் உடல் மாற்றத்தையும் சாதரண நிகழ்வு என
புரிய வைத்து மனதை லேசாக்கி வைப்பது அவசியம்.


என் மகனுடன் பேச முதலில் எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது.
இதுவே பெண்குழந்தையாக இருந்தால் இந்தத் தயக்கம் இருந்திருக்காது
என நினைக்கிறேன். அயித்தானோ அடிக்கடி டூர் போகிறவர். பக்கத்தில்
இருந்து மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஆண்டவன்
பெண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறான்.

குழ்ந்தை பிறக்கும் பொழுதுதான் தாய், தந்தையர் எனும் பதவி
வருகிறது. அதன் பிறகுதான் கற்றலும் நடக்கிறது. ஆம் தாயாக,
தந்தையாக நாம் செய்ய வேண்டியதை கற்கிறோம். இப்போது
பதின்ம வயது மகனை ஹேண்டில் செய்யும் திறனை நான்
வளர்த்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்து தனியறையில்
நானும் மகனும் மட்டும் உறவாடினேன்.

”கண்ணா, உன் உடலில் சில மாற்றங்கள் நேரும்
இதற்காக கலங்கக்கூடாது. மற்ற பிள்ளைகளிடம் இது குறித்து
ஆலோசனை செய்ய வேண்டாம். இது தவறல்ல! இயற்கை உன்னை சின்ன
குழந்தையிலிருந்து பெரிய மனிதனாக்க செய்யும் வேலை இது.
இது சாதாராண நிகழ்வு,” என்று சொன்னேன்.


”ஆமாம்மா, சின்ன சின்ன மாற்றம் பயமாயிருக்கு! என்ன செய்வதுன்னு
புரியலை!!” என்றான் கண்களில் நீருடன். தக்க சமயத்தில் பிள்ளையிடம்
பேசும் புத்தியை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கண்ணீரை
துடைத்து மடியில் இருத்திக்கொண்டேன்.


“நம் வாழ்க்கையில் டீன் ஏஜ் பருவம் ரொம்ப முக்கியம். ஏன் தெரியுமா?
inner PERSONALITY DEVELOPMENT அப்போதுதான் ஏற்படும். இதுவரை
சின்னக்குழந்தையாக தெரிந்த உன் உடல் இனி சில மாற்றங்கள் கொண்டு
தன்னை தயாராக்கிக்கொள்ளும். 13-19 வயது வரை நீ ரொம்பவே
கவனமாக இருக்க வேண்டும். பயப்பட ஏதும் இல்லை. ஆனந்தமாக
கொண்டாடலாம். இப்போது நீ குழந்தையுமில்லை, பெரிய மனிதனும்
இல்லை. அதனால் உனக்கு எப்போதாவது எதற்காவது சந்தேகம்
வந்தால் நானோ, அப்பாவோ உடன் இருக்கிறோம். கடினமான
இந்தக் கட்டத்தை நீ ஆனந்தமாக கடக்க நாங்கள் இருக்கிறோம்.


நீ செய்ய வேண்டியதெல்லாம், எங்களை நம்பு. 13-19 வயது
என்பதை ஏணிப்படி போல் கற்பனை செய்து கொள். ஒவ்வொரு
அடி எடுத்துவைக்கும்பொழுதும் உனக்குள் ஒவ்வொரு மாற்றம்,
ஒரு முதிர்ச்சி ஏற்படும். படியில் ஏறும்பொழுது கொஞ்சம் பயமாக
இருந்தால் என் கைகளைப்பிடித்துக்கொள்!!! அப்பாவைக் கேள்!நாங்கள் நீ ஏற
உதவி செய்கிறோம். நானும் உன்னைப்போல அந்த வயதைத்
தாண்டித்தானே வந்திருக்கிறேன், என்றதும் முகத்தில் நம்பிக்கை
வந்தது மகனுக்கு.

அவரிடமும் பேசி நீங்களும் மகனிடம் பேச வேண்டும்
என்று சொல்ல ,”நானும் அது பற்றி தான்
யோசித்து கொண்டிருக்கிறேன்!” உற்ற நண்பனாய் இருப்பேன்!! என்றார்.
சொன்னபடி செய்தும் வருகிறார்.


நாங்கள் அப்போது இருந்தது வெளிநாட்டில்! அங்கே கேர்ள்/ பாய்ஃப்ரெண்ட்
சகஜம். அது இல்லாவிட்டால் ஏதோ பெரும் குத்தம் என்பது
போல் பேசும் ஜென்மங்களும் உண்டு. அவர்களது கலாச்சாரம் அது.
6ஆம் வகுப்பு மகனிடம் கேர்ள் ஃப்ரெண்ட் பற்றி பேச தைரியம்
கொடுத்தது குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி. அப்போதுதான்
அவர் இது பற்றி சிநேகிதியில் எழுதியிருந்த தலையங்கம் படித்திருந்தேன்.
அவர் சொன்ன உதாரணத்தை என் மகனிடம் சொன்னேன்.

“பதினம வயதில் தான் ஆண்/பெண் கிளர்ச்சி ஏற்படும். வயதுக்கோளாறு
அது. ஆனால் அது உன் வாழ்வை நாசமாக்கி விடக்கூடாது. உன்
விருப்பப்படி நீ படித்து செட்டிலாகிவிட்டு அதைப் பற்றி யோசிக்கலாம்.
சில உதாரணங்கள் சொல்லி,” அம்மா இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன்
தெரியுமா? வானத்தில் ஆனந்தமாக பறக்கும் குருவி தன் காலில்
ஒரு சிறு கல்லைக் கட்டிக்கொண்டு பறந்தால் என்னவாகும்!?” எனக்கேட்டேன்.

“பறக்கவே கஷ்டமாக இருக்கும் அம்மா, ஃப்ரியா பறக்க முடியாது”
என்றான்.

“ஆமாம். படிக்கும் வயதில் காதல் கூட அப்படித்தான். ஒரு பாரமாகி
உன்னை திசை திருப்பும். பெண் நண்பர்கள் இருப்பது தவறில்லை.
உன் தோழி AQUILA இல்லையா. ஆனால் நட்பு வேறு காதல் வேறு!”
என்றதும் மகன் சொன்னது, ரொம்ப தேங்க்ஸ்மா, புரிய வெச்சதுக்கு!”
என்றான்.

என் மகனிடம் பேசியதை ஏன் இங்கே கொடுத்தேன் தெரியுமா??
நம் பிள்ளைகளிடம் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
நான் பேசுவது அட்வைஸாக இருந்தால் பிள்ளைகளுக்கு
போரடித்து விடும். அதுவே நட்பிடம் பகிர்வது போல் பக்குவமாக
பேசினால் நல்ல பலன் இருக்கும்.

தன்னைக் குழந்தையாக நடத்தாமல் பெரிய பிள்ளை போல்
நடத்துவதாக பிள்ளை புரிந்து நம்மிடம் மனம் விட்டு பேச வரும்.
“என்ன ஆனாலும், நானிருக்கிறேன்!” என்ற நம்பிக்கையை
நாம் கொடுத்து விட்டால், என்னை காக்க என் பெற்றோர்
இருக்கிறார்கள் என்ற எண்ணமே தன்னம்பிக்கை மிளிர வைக்கும்.


நாமே நம் பிள்ளையிடம் பேசாவிட்டால் அந்தக் குழந்தை
தன்னை பாதுகாப்பற்றவனாக/ளாக ஆக நினைத்து வருந்தும்.
சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரிவதால் அவர்கள்தான்
தெய்வம் போலவும், தவறான நட்புக்கள் மூலம் பாதை மாறுதலும்
நடக்கும். வீட்டில் போதிய சப்போர்ட் இல்லாத குழந்தைகள் தான்
வழி மாறிச் செல்கின்றன.

போதை, குடி, சிகரெடி போன்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவது
இதனால் தான். தமிழ்த்துளி தேவா அவர்களின் இந்தப் பதிவை
பாருங்கள்.
போதை பழக்கத்துக்கு ஆளானல் மீட்பது கஷ்டம்.


குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படி நாகரீகம்


இதுவும் படிச்சி பாருங்க

வரும் திங்களன்று அடுத்த பதிவு வரும்
அதுவரை
தொடரும்....

குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்


குழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு.  என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இதில்: 
1. படமும் பாடலும் - Tamil Nursery Rhyme
2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக்  குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)
3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)
4. குழந்தைகளுக்கான புதிர்கள்
5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)
6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்
7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்

உங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நன்றி.

= =வித்யா

நானும் எல்லார் கிட்டயும் இதைப்பத்தி பதிவு போடுங்கன்னு
கேட்டுகிட்டே இருந்தேன். போடறேன்னு சொன்னவங்க எல்லோரும்
மறந்துட்டாங்களா?? என்னன்னு புரியலை.

wifeologyக்கு எதிரா யாராவது எழுதுவாங்கன்னு காத்திருந்து
அது நடக்காம போக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்
husbandoloy வகுப்புக்கள். :))

இப்பவும் நானே எழுதலாம்னு முடிவு செஞ்சிட்டேன். திரும்ப
ஹஸ்பண்டலாஜி இல்லீங்க. எதைப்பத்தி???? வாங்க பேசலாம்.

பதின்ம வயதுக்குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு
சுலபமான வேலையில்லை. குழந்தையும் அல்லாத,
பெரியவரும் அல்லாத இரண்டும்கெட்டான் மன நிலையில்
இருக்கும் அந்தக் வளரும் குழந்தைகளை மென்மையாக
கையாளவது மிக அவசியம்.




பெண் குழந்தைக்கு தரப்படும் அறிவுரையைப் போல ஆண்குழந்தைகளுக்குத்
தரப்படுவதில்லை. அதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இனி வரும் வாரங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்
வரப்போகும் இந்த பதின்மவயதுக்குழந்தைகள் தொடரில் இருபாலருக்கும்
பொதுவான சில பிரச்சனைகள், வளர்ப்பு முறை பற்றி பேசுவோம்.



என் தோழி ஒருத்தரை பத்தி முன்னமே சொல்லியிருக்கேன். இலங்கையில்
ஒரு கல்லூரியில் DIPLOMA IN PERSONALITY DEVELOPMENT அப்படின்னு
ஒரு பட்டயப்படிப்பு. பதின்ம வயது பிள்ளைகள் இந்த பயிற்சியில
கலந்துகிட்டு தன்னை நல்லா உருவாக்கிக்க முடியும். இந்த வகுப்பில்
சைக்காலஜி ஆசிரியை மேலே சொல்லியிருக்கும் என் தோழிதான்.

அவங்க தயாரிச்ச புத்தகத்தை அச்சில் ஏத்திக்கொடுக்கும் பொழுது
நிறைய்ய டிஸ்கஸ் செய்வோம். நாளை உனக்கும் உதவும் என்று
அந்த புத்தகத்தை எனக்கு ஒரு காபி தந்திருக்காங்க.

எனக்கும் பதின்மவயதில் அடி எடுத்துவைத்திருக்கும் மகன் இருக்கிறான்.
அவனுக்கும் அதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். என் பிள்ளைகள்
போல மற்ற பிள்ளைகளுக்கும் உதவவேண்டும் எனும் எண்ணத்தில்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. நான் பாடம் எடுக்கப்போவதில்லை.
அதில் எனக்குத் தேர்ச்சியும் இல்லை. ஒரு ஆசிரியையாகவும், தாயாகவும்
என் பார்வை எப்போதும் இருக்கும். நானும் கற்றுக்கொண்டு கற்றதை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.


இந்த பதிவுகள் பேரண்ட்ஸ் கிளப்பிலும் என் வலைப்பூவிலும் திங்கள்
மற்றும் வியாழக்கிழமைகளில் வரும்.


மெல்லச் சிறகு விரிக்கும் அந்த பட்டாம்பூச்சிகளுக்கு
வசந்தமான வாழ்வை அளிப்போம். நல்லதொரு
தலைமுறையை உருவாக்குவோம்.


அதிக ஜலதோஷத்தினால் (சளி) காதில் வலி ஏற்பட்டால், குழந்தை ஓயாமல் அழுது கொண்டும், காது வலியினாலும், அழுகையினால் ஏற்படும் தலை மற்றும் தொண்டை வலியினாலும் அதிக துன்பத்திருக்கும் ஆளாகும்.

காது இன்பக்ஷன் தானா இல்லை சளியால் ஏற்பட்ட காது வலியா என்று எப்படி அறிவது? எப்படித் தவிர்ப்பது?
சளியால் ஏற்பட்ட காது வலியில், ஒற்றைக் காதில் (பெரும்பாலும் இடது) ஊசி குத்துவது போன்ற வலியும், கண்ணுக்கு கீழ் மூக்கின் அருகிலும், நெற்றியில் (படத்தில் dark colour-இல் காட்டப் பட்ட பகுதிகள்) கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால லேசாக அழுத்திக் கொடுத்தால் இதமாகவும் உணரும்.


  • ஒரு வேளை அன்றுதான் தலைக்கு குளிப்பாட்டி இருந்தீர்கள் என்றால், சளி பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல சுத்தமான ear-buds அல்லது மல் துணியால் காதுகளை சுத்தம் செய்து விடவும். தலையை நன்றாகத் துவட்டி விட்டு, தலை உச்சியில் சிறிதளவு வீபூதியும் நெற்றியில் சிறிது வீபூதியும் மிக சிறிதளவும் தண்ணீரில் குழைத்து இட்டு விட்டால் நீர் கோத்துக் கொள்ளாமல் இருக்கும்.
  • இல்லை என்றால் நாட்டு மருந்துக் கடைகளில் "நீர் கோவை மாத்திரை" என்று கிடைக்கும். ரொம்ப வீரியம் கொண்டது மற்றும் காரமானது. கை கண்ட மருந்து. இதை அப்படியே குழைத்து குழந்தைகளுக்கு நெற்றியில் போட்டால் தோல் எரியும். அதனால் சிறிது வீபூதி அல்லது மஞ்சள் சேர்த்து குழைத்து இடவும். 
  • இல்லை என்றால் சுக்கோடு கடுகை அரைத்து மைதாவில் குழைத்து நெற்றிக்கு பத்து போடவும்.
  • மேலும் வாரம் ஒரு நாள், தலைக்கு குளிப்பாட்டும் அன்று, மூன்று பல் பூண்டு, மூன்று வெற்றிலை, ஒரு ஆர்க்கு வேப்பிலை, பத்து துளசி இலை, மற்றும் ஓமம், மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை,  வால் மிளகு, (எல்லாம் மூன்று டீஸ்பூன்) அதிமதுரம், கண்டந்திப்பிலி, அரிசித் திப்பிலி, (எல்லாம் ஒவ்வொன்று) இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒரு சொட்டு (ஒரே ஒரு சொட்டுதான்) விளக்கெண்ணை விட்டு வறுத்துக் கொண்டு மூன்று தம்ப்ளர் தண்ணீரில் போட்டு ஒரு தம்ப்ளராக வற்றும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டி, ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, வெது வெதுவென்று கொடுக்கவும். என் சொந்த அனுபவத்தில் எனக்கு ரொம்பவே உதவிய கஷாய ரெசிப்பீ இதுதான். குழந்தையை குளிப்பாட்ட வெந்நீர் போடும் போதே இதையும் ரெடியாக வைத்திருப்பேன். குளித்து தலை துவட்டியதும் தானே வந்து குடித்து விட்டு போய் விடுவாள்.


எப்படி கண்டு பிடிப்பது?
  • மஞ்சள்/பச்சையாக சளி கட்டிக் கொண்டு, சளி நாற்றம் அடிக்கும். 
  • மூக்கை உரிய சிரமப் படுவார்கள்.
  • தூக்கமின்மை  / படுத்துக்கொள்ள சிரமப்படும்
  • குழந்தை காதுகளை பிடித்து/பொத்திக் கொண்டு அழும் (அல்லது) காதை பிடித்து இழுக்கும், காதை அறைவது போல தட்டும் / தேய்த்து விட்டுக் கொள்ளும்
  • இருமல்
  • தலை வலி
  • மூக்கில் நீர் வடிதல்
  • உணவு உண்ண மறுத்தல்
  • விழுங்க சிரமப் படுதல்
  • மலம் / சிறுநீர் கழிக்காமல் இருத்தல் (குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு தரம் மலமும், அதிக பட்சம் ஆறு முறையாவது சிறுநீரும் கழிக்க வேண்டும்)
  • ஜுரம் வரலாம் 
  • வாந்தி எடுத்தால் 
  • நை நை என்று அழுது கொண்டே இருத்தல்
சரி, காது வலி வந்து விட்டது, என்ன செய்வது?

  • வாந்தி எடுத்தால் வீட்டில் ஓம வாட்டர் இருந்தால் தண்ணீரில் கலந்து குடிக்க வெந்நீர் கொடுங்கள்.
  • பஞ்சில் ஒரு சொட்டு யூகாலிப்டஸ் எண்ணெய் சொட்டி, அதை காதில் வையுங்கள். இதமாக இருக்கும்.
  • மூக்கு மற்றும் நெற்றி (சைனஸ் ஸ்பாட்டுகள்) ஆகிய இடங்களில் கொஞ்சமாக விக்ஸ் தடவி அழுத்திக் கொடுங்கள்.
  • மேலே சொன்ன "பத்து" ஏதாவது ஒன்றை போடுங்கள்.
  • முடிந்த வரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போங்கள். அப்படி போகும் போது "பத்து பதினொன்று", குழந்தையின் மூக்கு எல்லாவற்றையும் துடைத்து விட்டு கூட்டிப் போங்க.
  • டாக்டர் தரும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை தவறாமல் கொடுங்கள். Acetaminophen or ibuprofen முக்கால்வாசி காது வலிக்கு நல்ல மருந்தாகவே இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே காது வலி முழுமையாக குணமாகி விடுகிறது. இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி முழு டோஸும் கொடுத்து விடுங்கள்.
டாக்டர் கொடுத்த மருந்துகள் 24-மணி நேரத்துக்குள் செயல் படவில்லை என்றாலோ, தொடர்ந்து காது வலி இருந்து கொண்டே இருந்தாலோ, குழந்தையை சமாதானம் செய்ய முடியாதளவு அழுது கொண்டே இருந்தாலோ, குழந்தைக்கு கழுத்து பிடிப்பு (stiff neck) ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று விடுங்கள். அது காது இன்பெக்ஷன்னாகக் கூட இருக்கலாம்.



0

பதிவர் தோழி அமைதிச்சாரல் அவர்களின் பதிவு,
பலருக்கும் உதவும் என்பதால் பேரண்ட்ஸ் கிளப்பிலும்
மறுபதிவு செய்கிறேன்.

நன்றி அமைதிச்சாரல்

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள்ளாம் ஆரம்பிக்கப்போவுது.இவ்வளவு நாள் சரியா படிக்காதவங்க கூட,இப்போ ராத்திரி, பகலா விழுந்து, விழுந்து படிக்க ஆரம்பிச்சிருப்பாங்க..அம்மாக்களெல்லாம் ஹார்லிக்ஸும், மசாலா டீயும் போட்டுக்கொடுத்துட்டு, ஏதோ அவுங்க பரீட்சை எழுதப்போவது போல, டென்ஷனோட கூடவே முழிச்சிருப்பாங்க!!!. பாத்துப்பாத்து சமைச்சு கொடுப்பாங்க...

"கீரை சாப்புடு.... பழம் சாப்புடு.... பாவம்.. ராப்பகலா முழிச்சு புள்ளைக்கு உஷ்ணம் ஏறிப்போச்சு..படிச்சு,படிச்சு, புள்ளைக்கு தொண்டை கட்டிப்போச்சுன்னு சொல்லி சுக்கு காப்பி போட்டு கொண்டு வந்து, பக்குவமா ஆத்தி, புள்ளை இருக்கிற இடத்துக்கே, கையில கொண்டாந்து கொடுப்பாங்க..

புள்ளைங்களை பச்சத்தண்ணியில, குளிக்கக்கூட விட மாட்டாங்க.. ஜலதோஷம் பிடிச்சுக்குமாம்...லேசா ஒரு தும்மல் போட்டாக்கூட 'புள்ளையை சரியா கவனிக்கிறதை விட வேற என்ன வேலைன்னு'அம்மாவுக்கு திட்டு விழும்...பொதுப்பரீட்சை வருதுன்னு புள்ளையை பொத்தி பொத்தி, பாத்துக்குவாங்க..

பரிச்சை ஆரம்பமானதுலேர்ந்து,புள்ள படிக்கிது,அதோட கவனம் செதறக்கூடாதுன்னு சொல்லி,இவங்க கவனமா பாத்துப்பாங்க.பரிச்சைக்கு வேண்டிய எல்லாம் சரியா கொண்டு போவுதான்னு ஒன்னுக்கு ரெண்டு தரம் சரிபாத்து வைக்கிற பெற்றோர்கள் நிறையா பேர் இருக்காங்க.

அவுங்க மனசுலேயும் லேசா கலக்கம் இருக்கத்தான் செய்யும்.அவுங்க கலக்கம் பரிச்சையை நெனைச்சு இல்ல.. ரிசல்ட்டை நெனைச்சுதான்..ஊர்ல உள்ள, இல்லாத பொல்லாத நெனைப்பெல்லாம் அப்பத்தான் ஓடிவரும்."யப்பா!... கொலசாமி.... எம்புள்ளைக்கி நல்ல படிப்பையும், புத்தியையும் கொடுப்பா"ன்னு,ஆயிரத்தெட்டு வேண்டுதல் வெப்பாங்க.ரிசல்ட் வர்ற அன்னிக்கு புள்ளையை விட, டென்ஷன் படற பெத்தவங்க எக்கச்சக்கம். எல்லாம்...... இந்த பாழாப்போன அறிவு, அன்னைக்குன்னு சில புள்ளைங்களுக்கு மழுங்கிப்போயிருதே....அதை நெனைச்சுத்தான். அங்கன,.. அந்தப்பையன் அப்படி பண்ணிக்கிட்டான், இங்கன, இந்தப்பொண்ணு இப்படி பண்ணிக்கிட்டா அப்டிங்கிற ரிசல்ட்டும் சேர்ந்தே இல்ல வருது..

ஏஞ்சாமி....படிப்ஸ் பார்ட்டிங்களை விடுங்க...அவுங்க பாஸாகிடுவாங்க... கொஞ்சம் முயற்சி செஞ்சா தேறுறவங்க, கடைசி நேரத்துல, விழுந்து விழுந்து படிச்சிட்டு ஓடுறவங்க இவுங்கள்ளாம் கொஞ்சம் யோசிக்கலாமில்ல...பெத்தவங்க கண்ணீருக்கு யாருப்பா பதில் சொல்றது.. இப்பல்லாம், அனேகமா புள்ளைங்க இஷ்டப்படற படிப்பைத்தானே படிக்கிறாங்க....அப்படி இல்லையா... மொதல்லே அப்பா.. அம்மா.... கிட்டே உட்கார்ந்து பேசுங்க... புரிய வையுங்க..."ஃப்யூச்சர்ல என்னவா ஆகப்போறோம்கிறதை எட்டு, அல்லது ஒன்பதாம் வகுப்பு வரும்போதே முடிவு செஞ்சுக்கோங்க,அதுக்கேத்த மாதிரி உழைங்க" அப்டின்னு நான் இல்லை,.. ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.

அவரவருக்கான அரிசியை ஆண்டவன் அளந்து வெச்சிருப்பான், அதனால தயவு செஞ்சு மனச அலைபாய விடாதீங்க.

அப்பா... அம்மாக்களும் கொஞ்சம் யோசிக்கணும். பரிச்சை கிட்டே வந்த பிறகு, பசங்களை ஓட ஓட விரட்டுவதை விட,மொதல்லேயே அவங்க கிட்ட உக்காந்து பேசுங்க... ஏதாவது பிரச்சினை இருந்தா, அவங்களுக்கு அதை தீர்க்க உதவி செய்யுங்க.. இதில் முக்கியம், தீர்க்கிறேன் பேர்வழின்னு நீங்களே பிரச்சினையா மாறிடாதீங்க...

அவங்களுக்கு, தேவையானத வாங்கி கொடுப்பது மட்டுமில்லை... வீட்டுல படிக்கிறதுக்கான அமைதியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொடுங்க.உங்களோட நிறைவேறாத ஆசைகளை உதாரணமா கலெக்டர், இஞ்சினியர், டாக்டர்ன்னு இருந்தா அவுங்க மேல திணிக்காதீங்க. ரிசல்ட் பற்றிய பயம் அவங்களுக்கு வராம பாத்துக்கோங்க..படிக்கிறப்ப லேசான கண்காணிப்பு தேவை...பாடங்களை கரெக்டா முடிக்க முடியலையா... டைம்டேபிள் போட்டு படிக்கச்சொல்லுங்க...

ஓரொருத்தருக்கு, ஓரொரு மாதிரி படிக்கிற பழக்கம் இருக்கும். "நான் விடியக்காலையில எந்திரிச்சு படிச்சேன். நீயும் அப்டித்தான் படிக்கணும்"ன்னு எல்லாம் வற்புறுத்தாதீங்க. அவங்களுக்கு, தன்னம்பிக்கை வர்றமாதிரி பேசுங்க..என்ன மார்க் வாங்கினாலும், அப்பா...அம்மா... நம்மள வெறுக்க மாட்டாங்கன்னு நம்பிக்கை வெச்சாலே , அந்தப்புள்ளை, தவறா முடிவெடுக்காது.

பல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல.
எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும்
நானே வளர்ந்திருப்பேன்” என்ற நிலைதான். மாரல் ஸ்டடி வகுப்புக்களும்
இல்லை, வீட்டிலும் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை எனும்
நிலையில் ஒரு தலைமுறையே முறையாக வளர்க்கப்படாமல்
போய்விட்டது.

நாம் செய்யக்கூடாதவை என்னென்ன என்று தெரிந்து விட்டால்
செய்யக்கூடியவை புரிந்துவிடும். பெற்றோர்கள் நல்ல பிள்ளைகளை
வளர்க்க இது உதவும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.


1.குழந்தை ஆசையா சொல்லணும்னோ, பேசனும்னோ
வந்தா ”நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசலாம்”!,
மேல விழுந்து கொஞ்சனமாக்கும் தள்ளி நின்னு அப்படின்னுல்லாம்
பேசக்கூடாது. அம்மா, அப்பா, தன்னை தவிர்க்கிறார்கள்,
உதாசினப்படுத்துகிறார்கள் எனும் எண்ணம் விதைக்கப்படுகிறது.


2. பெல்டால அடி, குட்டு, கிள்ளுவது, கைல கிடைச்சதால அடி
இவை physica abuse வகை. இவை தரும் நேர்மறை விளைவுகள்.

3. அடிப்பது குத்தம். வாய்க்கு வந்தபடி திட்டுவது மஹா கொடுமை.
நம் நாட்டில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது இன்னமும் குற்றமாக
இல்லை. மேலை நாடுகளில் எங்கப்பா அடிச்சார், அம்மா திட்டினாங்கன்னு
போலிஸ்ல கேஸ் போட முடியும். நம்ம நாட்டுல அந்த வசதி
இல்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் திட்டுவது
“தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்டவடு”ஆகிப்போகும்னு
வள்ளுவர் சொல்லி வெச்சிருக்கார்.

4.” நான் பெத்தது சரியில்லீங்க!!!” ”இதெல்லாம் நாளைக்கு
எனக்கு சோறா போடப்போகுது!!” இதெல்லாம் தன் மனக்குறையை
அடுத்தவங்க கிட்ட சொல்லிக்கிறா மாதிரி பெத்தவங்க பேசுவது.
ஆனா இது தவறு. நம்ம பிள்ளையை பத்தி நாமே குறையா
அடுத்தவங்க கிட்ட சொல்லக்கூடாது. அதே சமயம் ரொம்பவும்
புகழ்ந்தும் சொல்லக்கூடாது.

“தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்”
என்பதையும் மறக்கக்கூடாது.

5. இந்த உலகத்துல ஒண்ணு கூட சரியில்லை, “உங்கம்மா
ஒரு உதவாக்கரை!!” உங்கப்பனுக்கு மூளையே வேலை செய்யாது”
”நீ பைசா ப்ரோயஜன்ம் இல்லாதவன்” இப்படி அடுத்தவர்
பற்றியோ பிள்ளைகள் பற்றி பிள்ளைகளிடமோ குறை சொல்வதும்
ஆகாது.

6. அடுத்தவங்களைப் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சா போதும் மக்களுக்கு.
இதுல எதுத்து பேச முடியாத பிள்ளைகளை பத்தி விமர்சனம்
செய்ய தயங்கவும் மாட்டாங்க. அந்த விமர்சனங்கள் அவர்களின்
வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

7. நம் கனவுகளை சுமக்க பிறந்தவங்க இல்லை பிள்ளைகள்.
அவர்கள் விரும்பும் படிப்பு,வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாம் சொல்லுவதை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கக்கூடாது.

8. அம்மா, அப்பா சண்டை போட்டுக்கொள்ளும் சூழ்நிலையில் வளரும்
குழந்தை பாதுக்காப்பின்மையாக உணர்ந்து கூனிக்குறுகி முன்னேர
முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் முரட்டுத்தனமாக
மாறிவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

9. பசங்க சின்னவங்க என்பதால் அவங்க செய்வது எல்லாமே
தவறா இருக்கணும்னு சட்டமில்லை. அவர்களின் செயல்கள்,
பேச்சுக்கள், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் தவறாகவே
புரிந்துக்கொள்ளக் கூடாது.

10. ”என் பையன் எதிர்காலம் என்னாகுமோ!!”
“நாளைக்கு அவங்க என்ன ஆவாங்களோ!!”
“எஞ்சினியரிங், டாக்டர் படிகாட்டி கை நிறைய்ய
சம்பாதிக்க முடியாதே” போன்ற தேவையில்லாத வருத்தங்கள்
பட வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

11. பிள்ளைகள் விரும்பியதை அவர்கள் அடைந்தே தீர்வார்கள்
எனும் நம்பிக்கை நமக்கு முதலில் இருக்க வேண்டும்.

12. பிள்ளையின் கனவை நனவாக்க நமது தூண்டுகோல்(சுடர்
விளைக்கைத் தூண்டும் தூண்டுகோல் போல)இருக்க வேண்டும்.
அவர்கள் சோர்வுறும் தருணத்தில் ஆதரித்து, பேசி
முன்னேற்றப்பாதையில் நடக்க வைக்க வேண்டும்.

13. ”வயசாகிடுச்சு இன்னும் என்ன அம்மாவை கட்டிகிட்டு”
”வயசு வந்த பொண்ணு அப்பனை கட்டிக்கிறது எல்லாம்
எங்க காலத்துல இல்லை” எனும் பேச்சுக்களை கேட்டிருப்போம்.
நம் பிள்ளைகளை நாம் கட்டியணைத்து, பேசினால் அவர்களின்
தன்னம்பிக்கை வளரும். வசூல் ராஜா எம்பீபீ எஸ் பரிந்துரைத்த
”கட்டிப்பிடி வைத்தியம்” ரொம்ப முக்கியம். நம் குழ்ந்தைகளிடம்
மட்டும்.

14. அன்றாட வாழ்க்கையில் பசங்களின் நடவடிக்கை, பேச்சு,
ஆகியவைகளை கண்காணிப்பது அவசியம். ஏதும் மாறுதல் இருந்தால்
அட்வைஸ் மழை பொழியாமல் நட்புடன் பேசுவது போல பேசி
கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

15. ”உபகாரம் செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா
போதும்னு!!” பெரியவங்க சொல்லியிருக்காங்க. பசங்களின்
வளர்ச்சிக்கு உதவும் வார்த்தைகள் சொல்லாட்டியும் அவர்களை
Demotivate செய்யும் வார்த்தைகளை பேசாமல் இருப்பது உசிதம்.


16. பெரிய தவறுகள் செய்தால் தண்டனை அவசியம்.
சின்ன சின்ன தவறுகளுக்கும் பெரிய பெரிய தண்டனை கொடுத்தால்
தண்டனையில் தன் தவறை புரிந்து கொள்வது போய் பிள்ளை
முரடாக தயாராக வாய்ப்பிருக்கிறது. தண்டனை தவறாக புரிந்து
கொள்ளப்படும்.

நாம் தவறு செய்திருக்கிறோம், அதை மறுமுறை
செய்யக்கூடாது என அறிவுறுத்தத்தான் தண்டனை.
அந்த பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டால் நமக்கு
பிரச்சினையே இல்லை.

செய்யக்கூடாதது தெரிந்து கொண்டதால், நாம் செய்ய வேண்டியது
தெளிவாக புரிந்து கொள்ள வசதி. நல்ல பெற்றோராக
பிள்ளையின் வளர்ச்சிக்கு உதவுவோம்.


சிவகாசிராம்குமார் எனும் இந்த நண்பரின் தளத்தில்
பல விடயங்கள் இருக்கின்றன. பாருங்களேன்.



பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை. 

குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத் திறமைகள் எனக்கு ரொம்ப பயன்பட்டது. ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பயன் படுத்தினேன்.என் பையனுக்கும் அதைக்கற்றுத் தந்திருக்கிறேன்.


வாழ்க்கை ரொம்ப சுலபம் இல்லை.திடீர் திடீர் என்று கிறுக்கல் அடித்து நம்மை வேடிக்கைப் பார்க்கும்.

பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால படிப்பாளி.திறமைசாலி அல்ல. நூற்றுக்கு நூறு மார்க் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தரும். பள்ளி படிப்பில் முதலில் இருக்கும் சில பேர் பொரோபஷனல் (professional) வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒளியற்று இருப்பார்கள்.மக்குத்தனம் இருக்கும்.படிப்பு வேறு.புத்திசாலித்தனம் வேறு.


குழந்தைகள் நூற்றுக்கு நூறு பார்டியாக இல்லாவிட்டாலும் “உஷார் பார்ட்டி”யாக (சாமர்த்தியசாலியாக..) இருக்கவேண்டும்.இப்போது இருக்கும் உலக நடப்புக்கு அதுதான் யதார்த்தம்.“உஷார் பார்ட்டி” with நேர்மை/ஒழுக்கம்/பக்தி/அன்பு. Be practical. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வர வேண்டும்.


அது என்ன வாழ்க்கைத் திற்மைகள்(Life Skills):-




உதாரணம்- 1
பக்கத்துவீட்டுப் பையன் படிப்பில் கில்லாடி.ஆனால் தன் சைக்கிளின் செயின் கழண்டால் அதை சரி செய்யக் கூடத்தெரியாது.தள்ளிக்கொண்டுதான் வருவான்.ஆறு கிலோ மீட்டர்.காற்று கூட அடிக்கத் தெரியாது. அடிப்பது அவன் அப்பா.இழப்பு யாருக்கு?


உதாரணம்- 2
பல வலைப்பதிவர்கள் மெது மெதுவாக தங்கள் திறமைகளை(skills) பயன்படுத்தி வலையை ஜொலிக்க வைக்கிறார்கள்.எல்லாம் ரெடிமேடாக கிடைத்தாலும் அதை நிறுவும் பொழுதில் கிடைக்கும் அனுபவம் அடுத்த முயற்சிக்கு தூண்டுகிறது.அறிவு /அனுபவம் வளருகிறது.திறமைகள் வளர்கிறது.


உதாரணம்- 3
நடிகர் கமல் நாலாவதுதான் படித்திருக்கிறார்.புகழின் உச்சியில் இருக்கிறார்.அவர் கால கதாநாயகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.காரணம் கமல் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். தொலை நோக்குப் பார்வையில் சினிமாவை எடைப்போட்டு காணாமல் போகாமல் தன்னை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய சிவப்பு நிறம் அழகான முகம் ரொம்ப நாள் “தாக்குப்பிடிக்காது” என்று தெரியும்.


உதாரணம்- 4
பக்கத்து வீட்டுப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டி நின்று விட்டது.காரணம் தெரியவில்லை மெயின் ரோட்.ஆள் நடமாட்டம் கம்மி.மெக்கனிக் ஆறு கிலோ மீட்டர் தள்ளி.எப்படி நடுரோடில் விட்டு வருவது. ஐடியா! பக்கத்து பங்களாவின் மாடியில் நின்றவரைக் தையரிமாக கூப்பிட்டு ”excuse me, if you don't mind" சொல்லி புன்னகைத்து வண்டியை  உள்ளே விட்டு விட்டாள்.சாமர்த்தியம்!
பிறகு ரிப்பேர்.


உதாரணம்- 5
பிளாட் லிப்டில் கரெண்ட் போய் ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான்.எமர்ஜென்சி அலாரம் வேலைச் செய்யவில்லை.”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”என்று பெரும் குரலில் கத்தினான். ஷூவைக் கழட்டி லிப்ட் கதவில் அடித்தான். அடுத்த கணத்தில் உதவி வந்தது.அலாரம் வேலைச் செய்யா விட்டால்”அய்யோ அம்மா, அய்யோ அம்மா”..கதவைத் தட்டுதல்...” போன்றவற்றை செய்யவேண்டும் என்று சொன்னது அவன் அப்பா.அப்பா கே.ரவிஷங்கர். பையன் ஆதித்யா.


உதாரணம்- 6
பக்கத்து வீட்டு மாமிக்கு காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் புதுசு மாட்டத் தெரியாது.வாட்ச்மேன் அல்லது எதிர்வீடுதான் உதவி செய்யவேண்டும்.அந்த இரண்டு பேர் இல்லாவிட்டால் என்ன செய்வார்?


இந்த திறமைகளைப்(skills) பற்றிச்சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.


நான் கடையில் ஒரு நாள் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தேன்.அப்போது என் மகன்
(வயது 10) என்னைக் கடந்து சைக்கிளில் போய் சிக்னலில் நின்றான்.என்னை கவனிக்கவில்லைஅப்போது எதிரில் வந்த தண்ணீர் லாரி சடன் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி தண்ணீர் பீச்சியடித்து அவன், சைக்கிள்,புத்தகப்பை எல்லாம் அருவியில் குளித்த மாதிரி ஆகிவிட்டது.


வாழ்க்கையைப் பச்சையாக (raw formஇல்) சந்திக்கிறான்.என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்னசெய்யப்போகிறான் என்று பார்த்தேன்.


நனைந்ததால் உடலோடு ஆடைகள் ஒட்டி கட் பனியன்,ஜட்டி ஷேப் தெரிந்தது.(வெள்ளை யூனிபார்ம்).அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது. வாழ்க்கையின் ஒரத்தில் இருந்தான்.(பொது ஜனங்கள் “உச்” கொட்டிவிட்டு ”பாத்துத் தம்பி” என்று நகர்ந்தார்கள்).


தண்ணீரில் நனைந்ததிலிருந்து வீடு வந்து சேரும் வரை அவனுடைய திறமைகள்:-


1.அடுத்த வினாடி முக்கியமான புத்தகங்களை பையின் பின் அறைக்கு மாற்றினான்.(அங்கு ஈரமில்லை). (மெயிண்டனென்ஸ்/வாழ்வாதாரம்(survival)


2.TNEB Junction Boxலிருந்து தள்ளி நின்று கொண்டு தலையை கர்சீப்பால் தவிட்டிக்கொண்டான். (பாதுகாப்பு)


3.அடுத்து வேறு சந்தில் நுழைந்து சில நிமிடம் காத்திருந்து கிளாஸ் டீச்சரை ரோடில் சந்தித்து “see my position" என்று லேட்டாக வருவேன் என்று பர்மிஷன் வாங்கினான். (முன் யோசனை/சமயோசிதம்/பயம்)


4.PCOக்குப் போய் எனக்கு செல்லடித்தான்.(உதவி/தகவல்) நான் செல் எடுக்கவில்லை காரணமாக. (இவனுக்கு பணம் எப்படி? இதை தனியாக கவனிக்க வேண்டும்)


திறமையின்மை:


1,வண்டியை ஓட்டாமல் தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தான். உலகமே தன்னைப் பார்த்து பரிதாபப் பட வேண்டும்.(சுய பச்சாதாபம்)


2.பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று லாஜிக் யோசிக்கமால் செல்லடித்தது. (முன் யோசனையில்லாமை)


3.ஸ்கூலுக்கு மறுபடியும் திரும்பி போகும்போது வேற சுத்து ரூட்.ஏன்? திரும்பவும் தண்ணீர் லாரி வந்து விட்டால்? (பயம்/வெறுப்பு/உஷார்)


4.அவன் என்னை வரச் சொல்லியிருந்தான்.செக்யூரிட்டி/லேட் மிஸ் என்று வாசலில் இருப்பவரிடம் நான் விளக்கிச் சொல்லி உள்ளே அனுப்ப.அவன் தன் சொந்த திறமையில் இதை சமாளிக்க வேண்டும்.செய்யவில்லை. (தன்னம்பிக்கையின்மை)


எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்‌ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.


”என் பையன் மாதிரி கம்பூயட்டர் கேம்ஸ் விளையாட.....என்றும் செல்போனக் கொடுத்துட்டா போதும் அதுல பூந்து விளையாடுவான்...அவன மாதிரி..” என்று மற்றவர்கள் முன்னால் குழந்தைகளை செல்லம் கொஞ்சுவார்கள்.இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை காமெடி. ஏனென்றால் 99% சதவீதம் குழந்தைகளுக்குத் இதெல்லாம் தெரியும்.


”கண்ணே...செல்லம்...உச்சு புச்சு..”என்று கொஞ்சிக் கொண்டு இருக்காமல் வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அடிப்படை எதார்த்தங்களை (ground realities) கற்றுக் கொடுங்கள்.


குழந்தையை வளர்ப்பதும் ஒரு பெரிய(life skill) திறமைதான். (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவதில் என்ன நன்மைகள்:-


1.சுயசிந்தனை
2.அடுத்தவரை சாராமை
3.அனுபவம்
4.அனுபவத்தில் பெறப்படும் அறிவு
5.சுறுசுறுப்பு
6.பொது அறிவு
7.பிரச்சனை எதிர் நோக்கும் துணிவு
8.ஒரு வித சுய சந்தோஷம்(நானே செய்தேன்!)
9.சமயோசிதம்
10.கெளரவம் பார்க்காமை



ஒரு தலைமுறை குழந்தைகளுக்குக்கு(நகர்புறம் சார்ந்த) இருக்கும் lifeskills அடுத்த தலைமுறைக்கு இல்லை.இப்போது இருக்கும் தலைமுறைக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.


பாதுகாக்கபட்ட சுழ்நிலையில் வளர்கிறது.(highly protected zone).போனதலைமுறை மாதிரி அல்லதுஅதற்கு முந்திய தலைமுறை அலைந்துதான் எல்லாம் பெற வேண்டும் .கையில் எதுவும் தொப்பென்று விழாது.


கடைசியாக... மிருகங்கள தங்கள் வாழ்வாதர திறமைகளை எப்படி பயன்படுத்துகிறது என்று டிஸ்கவரி சேனல்,அனிமல் பிளானெட்டில் பாருங்கள். Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொருந்தும்.






.

அனைவருக்கும் வணக்கம்,

பேரண்ட்ஸ் கிளப்பில் இணைய விருப்பம் தெரிவித்து
பல மடல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பலரை சென்றடைந்திருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதுவும் விகடன் வரவேற்பறையில் வந்த பிறகு
அதிக ரெஸ்பான்ஸ். ஃபாலோயர்களும் 100ஐத் தாண்டி
விட்டது.

இணைய விரும்புபவர்களுக்கு வேண்டுகோள்.

தாங்கள் பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து மெம்பரானால்
மட்டும் போதாது தங்களின் பங்களிப்பும் மிக அவசியம்.

தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அவசியம்.
அதுதான் இந்த வலைப்பூ துவங்கப்பட்டதன் காரணம்.



பல் வேறு பதிவர்கள் இந்த வலைப்பூவில் பதிகிறார்கள்.
குறைந்த பட்சம் அதை படித்து பின்னூட்டமாவது போட
வேண்டுகிறேன்.


தங்கள் கருத்துக்களை பதிந்து, பல பெற்றோர்களுக்கு
உதவும் எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே இந்த
வலைப்பூவில் இணைந்து பதிவுகளைத் தர வேண்டுகிறேன்.

நானும் இணைய விருப்பம் என விருப்பம் தெரிவித்த
பலரை இணைத்து 2 மாதமாகியும் 1 பதிவு கூட
போடப்படவில்லை!!! இணைந்ததன் நோக்கம் என்ன??

தவறாக நினைக்க வேண்டாம். இப்போது வைரஸ்
தாக்கம் வலைப்பூக்களில் அதிகமாக இருப்பதால்
அதிகமான எண்ணிக்கையில் மெம்பர்கள் இருந்தால்
வலைப்பூவுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கின்ற அச்சமே
இந்தப் பதிவுக்கு காரணம்.

உண்மையாக இணைந்து கருத்துக்களை பதிய
விரும்புபவர்களை இருகரம் நீட்டி இந்த வலைப்பூ
வரவேற்கிறது.

பெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்

பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை. 

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு என்னும் சம்பிரதாயம். இது வருடத்திற்கு இரண்டு முறையோ நான்கு முறையோ பள்ளியில் படிக்கும் தம் குழந்தைகளின் ”எப்படி படித்துக் கிழிக்கிறார்கள்” பற்றிய பின்னூட்டத்தை(feed back) நேரடியாக ஆசிரியர்களிடம் பெறுவதுதான்.பெற்றுக்கொண்டு சீர்படுத்துவது.இங்கு அனானி பின்னூட்டம் இல்லை.பிள்ளைகளின் ”ஓபன் சீக்ரெட்”

இது எவ்வளவு பள்ளிகளில் இருக்கிறது என்பது தெரியாது.

இதில் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை _________ “எனக்கேட்க அம்மாவும் “ மகன் தந்தைக்கு _____________இவன் தந்தை  என்னோற்றன் கொல்லொனுஞ் சொல்”லை கேட்க அப்பாவும் வருவதுண்டு. கடந்த நான்கு வருடங்களாக நிறைய அப்பாக்கள் தென்படுகிறார்கள்.

என் வீட்டில் மாறிமாறிப் போவதுண்டு.நான் போவதற்கு முன் எனக்கும் ஒரு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடக்கும்.அங்கு போய் இதைப் பற்றி பதிவுப் போடுவதற்கு மண்டையில் யோசித்துக்கொண்டிருக்காமல் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக காதில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதாக."படிப்பு முக்கியம்...பதிவு அல்ல.understand?" "Yes.... mam!"
 
புத்தகத்திருவிழாவில் ஸ்டால் ஸ்டாலாகப் போவது போல் இங்கு வகுப்பு வகுப்பாகப்  போக வேண்டும்.முக்கால்வாசி கவலைத் தோய்ந்த முகங்களைப் பார்த்தாலும் இங்கு நடக்கும்  இந்த சந்திப்புகள் பார்த்தால்  நன்றாக பொழுதுபோகும்.

ஆசிரியரைக் கும்பலாக சூழ்ந்துக்கொண்டு மற்ற குழந்தைகளின் மார்க்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அவர்களின் “ஓபன் சீக்ரெட்டை”காதில் கேட்டுக்கொண்டுதான் நடக்கும்.அடுத்து அழுவது.ஒரு முறை ஒரு மாணவனின் தாயார் (விசும்பி விசும்பி) அழுதைப் பார்த்தேன்.(இது கண்டிப்பாகத்  தவிர்க்க வேண்டிய செயல்.)பிறகு மாணவ/வியின் காதைத் திருகி அங்கேயே கண்டிப்பது.அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது.
  
ஒரு ஆசிரியர் ஒரு நாளில் கிட்டத்தட்ட 200 பெற்றோர்களைச் சந்தித்து பின்னூட்டம் கொடுக்கிறார்.பரிதாபம்.முப்பது அல்லது நாப்பதாவது பின்னூட்டத்திலேயே சலிப்பு வந்து ரோபோவாகி “டெம்பிளேட் பின்னூட்டம்” ஆகிவிடுகிறது. ”நிறைய பிராக்டீஸ் பண்ணனும்” “கான்செப்ட்ட தெரிஞ்சிகிடனும்””சில்லி மிஸ்டேக்ஸ்””வாய்விட்டு படிக்கணும்” “She/He can still do better"”lacking concentration".
 
( Lacking concentration எனும்போது இப்போது இருக்கும் தலைமுறைக்கு கவனக்கலைப்புகள் அதிகம்.இதிலிருந்து மீண்டு படிப்பில் பாடம் செலுத்துவது இமாலய சாதனை.)இது பெற்றோர்களுக்கும் ஒரு சவால்.இதில் பல பெற்றோர்கள் சலித்துப்போய் அலுத்து நொந்து விடுகிறார்கள்.

இங்கும் ஒரு பக்கப் பார்வைதான்(one sided view) பார்க்கப்படுகிறது.அதாவது ஆசிரியர்களிடம் குற்றமே இல்லாத மாதிரியும் மாணவ/விகள்தான் முழு பொறுப்பு என்பதாக.பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும்  பதிலுக்கு உண்மையான “டெம்பிளேட் பின்னூட்டங்கள்”தொண்டையில் உண்டு.ஆனால் சொல்வதில்லை. அவை” போர்ஷ்ன்களை மின்னல் வேகத்தில் நடத்திக்கொண்டுப் போவது” “பாடத்தை எழுதுவதற்குள் அழித்துவிடுவது””எப்படி இருந்தாலும் மாணவ/விகள் டுயூஷன் வைத்துவிடுவதால் மேலோட்டமாக சொல்லிக்கொடுப்பது”” மார்க் குறைந்தாலும் பணம் இருப்பதால் இன்ஜினியரிங் கல்லூரி சேர்த்துவிடலாம்”

வகுப்பில் ஆசிரியர்களின் கண்டிப்பில் வீரியம்  குறைவாகத்தான் இருக்கிறது.காரணம் மாணவ/விகள் தற்கொலை.மனித உரிமைக் கழகம்.ஏதாவது நடந்தால் ரெடியாகக் காத்திருக்கும் புலானய்வு ஊடகங்கள்.

நான பார்க்கும்  உலக மகா அபத்தம் கம் குற்றம்  ஒரு வகுப்புக்கு 65 மாணவ/விகள் மேல் இருப்பது.இருக்க வேண்டியது 30.எவ்வளவு சொல்லியும் இந்த டெம்பிளேட் பின்னூட்டத்தை யாரும் காதில் போட்டுக்கொள்வதில்லை.

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவ/மாணவிகளின் பெற்றோர்களுக்கு எங்கு தவறு என்று நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது.தெரியவில்லை என்றால் முட்டாள் பெற்றோர் என்றுதான் சொல்வேன்.

சில படித்தப் பெற்றோர்கள் டுயூஷன் வைக்காமல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.ஆனால் இதற்கு.எல்லையில்லா பொறுமையும் எனர்ஜியும் வேண்டும்.அதுவும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் வீடு? அம்மாடியோவ்!


பெரும்பாலும் கணக்குப்பாடத்தில் சறுக்குவது சகஜம்.காரணம் இதில் கதை விட முடியாது. அடிப்படைத் தெரியவேண்டும்.கவனம் குறைந்தால் காலிதான்.

அடுத்து ஆங்கிலம்.இலக்கணம் மிக முக்கியமானது.ஆசிரியர்/மாணவர் இரண்டுமே இங்கு சொதப்பல். மூன்றாம் நான்காம் வகுப்பிலேயே அடித்தளம் பலமாக போட வேண்டும்.இல்லாவிட்டால் காலி.தமிழ்(2nd language) இங்கும் சொதப்பல்.காரணம் மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதால்.இதை இரு தரப்பும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.காரணம் இது சோறுப் போடப்
போவதில்லை என்பதால்.பிளாக் எழுத உதவும்(????).

என் மகன் 2nd language தமிழ்தான். ”ஐனூத்தி என்பத்தி நாலு ரூபாய்” என்பதை மார்வாடி போல் தட்டுத்தடுமாறி உச்சரிப்பான்.

இந்த சந்திப்பில் வெளி வரும் விஷயங்கள்:

  • பாடத்தின் அடைப்படையை மண்டையில் ஏற்றுதல்
  • மாணவ/விகளின் சோம்பேறித்தனம்
  • கணக்கில் பயிற்சி நிறைய செய்யவேண்டும்.அசுர சாதகம்.போட போட கணக்கு, பாடபாட பாட்டு.....
  • அடித்தளம் பலமாக இருக்கவேண்டும்.இது ஆரம்ப நிலையிலேயே
  • பொறுமையின்மை(பெற்றோர்/குழந்தைகள்)
  • கவனக்கலைப்புகளை கண்டறிதல்
  • டீச்சர்களுக்கும் கவனக்கலைப்புகள்
  • பாடச் சுமை
  • வாய்விட்டுப் படித்தல்
  • தனி கவனம் இல்லாமை
  • கூலிக்கு மாரடிப்பது

கவனக்கலைப்பு: டிவி,ரேடியோ,டிவிடி,நண்பர்கள்,வீட்டு உறுப்பினர்கள், ஷாப்பிங், குர்குரே இத்யாதிகள்






0

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்