வானம்பாடிகள் ஐயாவை அறிமுகப் படுத்துவது சூரியனுக்கே டார்ச் அடிக்கறது போல.
அவரின் அனுமதியோடு மிகவும் அருமையான இந்தப் பதிவு parent's club வலைத்தளத்தில் வெளியிடப் படுகிறது.
யோசிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்லை, இந்த நிமஷம் முதலில் நம்மை நாமே கேள்வி கேட்டு மாற்றிக் கொள்ளவும் தூண்டும் பதிவு இது. நீங்க என்ன நினைக்கறீங்க? நாம் குழந்தைகளோடு ஒரு மணிநேரமாவது பேசியோ, விளையாடியோ, அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் பெரும்பாலும் மன-உடல் அயர்வோடுதான் வீட்டுக்குள் நுழைகிறோம். நம் முகமும் உணர்வலைகளும் பிள்ளைகளை நம்மோடு பேசத் தூண்டுமாறு இருக்கா..
வேலை நாட்களில் மாலையில் பெரும்பாலும் எனக்கு வீட்டில் தூங்கும் நேரம் தவிர வெறுமனே இருக்க ஒரு மணிநேரம் கிடைத்தாலே அதிகம். இதில் ஒன்று என் கணவரோடோ அல்லது குழந்தையோடோ என்று யாரேனும் ஒருவரை மட்டுமே பேசி கவனிக்க முடிகிறது. குழந்தைக்கு இன்னும் புரிந்து கொள்ளும் வயதாகவில்லை என்பதால், அவளோடு பெரும்பான்மை நேரங்களை ஒதுக்கி செலவிட வேண்டியிருக்கு. கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தாலும், இப்போதும் அவள் பல நேரங்களில் வேறு யாரோடும் பேசினால் கூட அம்மா அம்மா கன்னம் திருப்பி தன்னை பார்த்துக் கொண்டே அவரோடு பேசவேண்டும் என்று நச்சரிப்பது ஆரம்பித்த்தாள். அப்போதுதான் ஒரு வேளை வளர்ப்பதில் ஏதும் தவறு செய்கிறேனோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். முற்றிலும் என் தவறுதான், அவளை பொறுத்த வரையில், எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் கொடுத்தது யார்? நான்தானே... அப்போது முதல், அவளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களோடும் பேசத் தூண்டுவது, வந்த விருந்தாளிகளுக்கு ஸ்வீட், பிஸ்கட், போன்ற சிதறாத உணவு வகைகளை பரிமாற வைப்பது, கையலம்பிக் கொண்டதும் துடைத்துக் கொள்ள துண்டு போன்றவற்றைத் தரத் தூண்டுவது, போகும்போது சாகலேட், மஞ்சள் கிழங்கு, குங்குமம் தருவது என்று அவர்களையும் கவனிக்குமாறு செய்தேன். இப்போது அவளால் விருந்தாளிகள், முதன்முறை எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு புன்னகை கொடுக்க முடிகிறது. கேள்வி கேட்டால் தகுந்த பதிலும் தரும்படி ஆகி இருக்கிறாள்.
குழந்தையை mend செய்ய அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும் என்பது மறுக்க முடியாது.... குழந்தைகள் மட்டும் இல்லை, யாருமே ஏதேனும் தவறு செய்தால் பொதுவில் திட்டாமல் இருப்பது எனக்கு எப்போதும் உதவி இருக்கிறது. இவளிடமும் அப்படியே...
அதே போல கதை சொல்லி அதனூடே நமக்கு வேண்டிய 'அறிவுரைகளை' அல்லது விபரங்களை புத்தியில் ஏற்றுவது இலகுவாக இருக்கிறது. ஏதாவது தவறு செய்து விட்டால், குழந்தைக்கு அது தொடர்பாக கதை சொல்லுங்கள்... அறிவுரையாக இல்லை.
கீழிருக்கும் பதிவை வெளியிட அனுமதித்த வானம்பாடிகள் ஐயாவுக்கு நன்றிகள்.
அன்புடன்,
விதூஷ்.
======================================================
பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..
======================================================
ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம்.
மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை
* தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
* படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
* எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
* தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.
இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது
“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம்.
இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?
மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.
அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம்.
“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.
.
ஒரு ஊர்ல ஒரு அழகான அமைதியான ஏரி ஒன்னு இருந்துச்சாம். அந்த ஏரில நிறைய்ய்ய மீன்கள், நண்டு, கொக்கு எல்லாம் சந்தோஷமா வசிச்சு வந்தன. மீன்கள் தண்ணீரில் உருவாகும் சின்னச் சின்ன புழுக்களைத் தின்னு தண்ணீர் கெட்டுப் போகாம பாத்துக்கிச்சு. நண்டு ஏரில படியும் பாசி பூஞ்சை காளான் புழுபூச்சி எல்லாத்தையும் சாப்பிட்டு வாழ்ந்தது. சுறுசுறுப்பில்லாம மந்தமா இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் கொக்கு பிடிச்சு சாப்பிட்டுடும். இப்படி இந்த விலங்கினங்கள் தனக்கேற்ற உணவுகளை சாப்பிட்டு நீர்நிலை கெட்டுப் போகாம காப்பாத்திச்சு.
ஒரு நாள் மற்ற கொக்குகள் எல்லாம் வேடந்தாங்கல் போன்ற வேற நீர்நிலைகளுக்கு பறந்து போயிடுச்சு. ஒரு கொக்கு ரொம்ப வயசானதாக இருந்தது. அது மட்டும் அங்கியே தங்கிடுச்சு. வயதாகி விட்டதால் முன்பு போல மீன்களைப் பிடித்து சாப்பிட முடியாம இருந்துச்சு. அதுனால அந்த கொக்கு மீன்கள் கிட்டயும் நண்டுகள் கிட்டயும் நண்பன் போல நடிச்சு நம்பிக்கை ஏற்படுத்திக்குது. அவைகளும் அந்தக் கொக்கை நம்புறாங்க.
"ம்... எனக்கு வயசாகிடுச்சு. முன்ன மாதிரி எல்லாம் மீன்களைப் பிடிக்க முடியல. இவங்க கிட்ட நட்பாயிருந்து பின் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடலாம்" என்று நினைக்கிறது.
இப்படியே காத்துக் கிடக்கும் போது ஒரு நாள் மீனவர்கள் சிலர் வந்து "ஆகா.. இந்த ஏரியில் மீன்களும் நண்டுகளும் நிறைய்ய இருக்குதே! நாம கூடிய விரைவில் தகுந்த வலைகளோடு வந்து பிடிக்கலாம்" அப்படீன்னு பேசிக்கிறாங்க.
கொக்கு இதைக் கேட்டு "அய்யோ... இவங்க பிடிச்சுகிட்டு போயிட்டா நாம என்ன பண்ணறது?" அப்படீன்னு பயந்து கிட்டே, "நண்டுகிட்டயும் மீன்கள் கிட்டயும் இதைப்பற்றி சொல்லணும்" என்று நினைக்கிறது.
உடனே, எல்லா மீன்கள் மற்றும் நண்டுகள் கிட்ட இந்தச் செய்தியை கொக்கு சொல்கிறது.
"அப்படியா கொக்கண்ணே.... இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டன.
"ஆமாம்பா.. நெசந்தான்" அப்டீங்குது கொக்கு
"கொக்கண்ணே... இப்ப எப்படி தப்பிக்கிறது? ஏதாவது வழி சொல்லுங்கண்ணே! எங்களை காப்பாத்துங்கண்ணே" என்று புலம்பின.
கொக்கு உடனே "நானே வயசான பறவை. நம்ம விட மனுசனுக்கு அறிவு அதிகம். வலுவானவங்க. ஆயுதங்கள் வலைகள் வேற வைத்திருப்பாங்க... அவங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிக்க முடியும்?" என்று கேட்குது.
"கொக்கண்ணே! எங்கள கைவிட்டுராதீங்கண்ணே! எங்களக் காப்பாத்துங்கண்ணே! உங்கள விட்டா எங்களை யாருண்ணே காப்பாத்துவாங்க!" அப்டீன்னு கெஞ்சுறாங்க அவங்க.
கொக்கும் "சரி.. அப்படின்னா நான் ஒரு வழி சொல்றேன் கேப்பீங்களா?" என்று கேட்டது.
"நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே செய்யறோம்" என்றன.
"கேளுங்க. பக்கத்து ஊர்ல ஒரு கோவில் இருக்கு. கோவில் குளத்துல யாரும் மீன் பிடிக்க மாட்டாங்க. நெறய தண்ணீரும் இருக்கும். அந்த குளத்துக்கு எல்லாரும் போயிட்டா தப்பிச்சுடலாம்" என்று சொல்லுது.
மீன்களும் நண்டுகளும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டன. "சரிதான் அண்ணே. நல்ல திட்டம் தான். ஆனா நாங்க எப்படி அங்கே போறது?" என்று கேட்டன.
"ஓ. அதுவா. அதுக்குத்தான் நான் இருக்கேனே. நான் உங்களை எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிட்டு போறேன். உங்கள எல்லாம் பாதுகாப்பா அழைச்சுட்டு போவது என்பது இந்த வயசுல கஷ்டமான காரியம்தான்" என்று அலுத்துக் கொண்டது.
"ப்ளீஸ் அண்ணே. எங்களை எப்படியாவது காப்பாத்திடுங்க! வேலையை உடனே தொடங்கிடுங்க" என்று கெஞ்சி வேண்டின.
கொக்கும் மெல்ல மெல்ல ஒவ்வொரு கொழுத்த மீனாக கவ்விச் சென்று தொலைவில் உள்ள பாறையில் வைத்து கொன்று சாப்பிடுகிறது. சில மீன்களை பின்பு தின்பதற்காக காய வைத்து விட்டு மீண்டும் அந்த ஏரிக்கரைக்கு வருகிறது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. கொக்கும் உண்டு கொழுத்து வளர்ந்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஒரே சந்தேகம் ஆகிப் போனது. என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்னு நினைச்சது.
உடனே நண்டு "கொக்கண்ணே கொக்கண்ணே!" என்று பேச்சை ஆரம்பித்தது.
"என்ன நண்டு" என்றது கொக்கு.
"மீனவர்கள் வந்து விடுவாங்க போல இருக்கே. இம்முறை என்னைக் கூட்டிப் போறீங்களா அண்ணே" என்று கேட்டது.
மீன்களையே தின்று வாய் அலுத்து இருந்த கொக்கு "ஆகா. தானே வந்து மாட்டுறானே. இன்னைக்கு இந்த நண்டை சாப்பிட்டா என்ன?" என்று மனசுக்குள்ள நினைச்சுகிட்டே "சரி உன்னையே கூட்டிட்டு போறேன்" என்றது.
புத்திசாலி நண்டு உடனே "கொக்கண்ணே! என்னை கவ்விச் சென்றால் தவறி கீழே விழுந்திருவேன். அதுனால் உங்கள் கழுத்தை என் கொடுக்கால் பிடித்து தொங்கிக் கொண்டே வரேனே!" என்றது.
நண்டின் எண்ணத்தை புரிந்து கொள்ளாத முட்டாள் கொக்கு அதுக்கு சம்மதிச்சது. கொக்கும் நண்டைச் சுமந்து கொண்டு பறந்தது.
"அண்ணே.. இங்கே மலை போல தெரிகிறதே... குளம் எங்கே?" என்று கேட்டது நண்டு.
"ஹா ஹா ஹா .. அதோ பார் பள பளவென்று ஒரு பாறை தெரிகிறதே. அங்கு உன் நண்பர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க்ாங்க பாரு!" என்று சிரித்தது.
நண்டு கொக்கின் சூழ்ச்சியை உணர்ந்து "கொக்கண்ணே... நான் உன்னை சந்தேகப்பட்டது சரிதான் போலருக்கு. உடனே அந்த ஏரிக்கு என்னை திருப்பி கொண்டு போயி விடலேன்னா உன் கழுத்தை என் கொடுக்கால் துண்டாக்கிடுவேன்" என்றது.
கொக்கு பயந்திருச்சு. "வேண்டாம் நண்டு. என்னை விட்டுவிடு. உன்னை பழைய படி அந்த ஏரிக்கே கொண்டு விட்டுவிடறேன். என்னை கொன்றிடாதே" என்றது.
வேற வழியில்லாம கொக்கு அந்த நண்டை ஏரிக்கரைக்கே கொண்டு வந்து சேர்குது. மீன்கள் எல்லாம் என்ன நடந்ததுன்னு கேட்டன. நண்டு கொக்கி கழுத்தை துண்டாக்கி கொன்னுட்டு நடந்தை எல்லாம் சொல்லிச்சு. மீன்கள் எல்லாம் நண்டுக்கு நன்றி சொல்லி "கெடுவான் கேடு நினைப்பான்" என்று சொல்லின.
.
இந்த மிட் டேர்ம் டெஸ்ட்க்கு சிலபஸ் என்னவோ ஒன்று முதல் பத்து வரை தான். ஆனால் நட்ராஜ்க்கு இரண்டும் மூன்றும் மட்டும் எட்டிக்காய் ஆகிவிட்டது. 25 வரை சொன்னாலும் சொல்லுவேன். ஆனால் அந்த பாழாய் போன இரண்டும் மூன்றும் மட்டும் சொல்ல மாட்டேன் என பிடிவாதம்.
நாங்களும் க னா பாஷை மாதிரி இரண்டையும் மூன்றையும் சொல்லி பார்த்தோம். அதாவது 'டூ த்ரீ என்னங்க டூ த்ரீ கடைக்கு போய் டூ த்ரீ கத்தரிக்காய் டூ த்ரீ வாங்கிவாங்க" என சொல்வதும் அதுக்கு பதிலா நான் "டூ த்ரீ வாங்கி வரேன்" என சொல்வதும், அபி "அம்மா டூ த்ரீ ஹிந்தி கிளாஸ்க்கு டூ த்ரீ போயிட்டு வரேன்" என சொல்வதும் பலிக்காமல் போனது.
வேற வழி இல்லாமல் தோசை வழியா டூ த்ரீ போட ஆரம்பிச்சு ஊட்டிவிட்டாச்சு. அதிலும் ஒரு சிக்கல். இப்ப தம்பி ஒன்லி டூ த்ரீ மட்டும் தான் சொல்கிறான். இப்ப 3, 4 தோசை ரெடியாகுது.
நீங்களும் இப்படி கூட படிப்பை ஊட்டலாமே!!!!

காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க காதினுள் உட்புகும் ஒலியானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோத வேண்டும்,ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நுழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டெப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப் படுகிறது,இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது,இதை இந்த வரைபடம் மூலம் தெளிவாக அறியலாம்.
நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி வயது வேறுபாடு இன்றி காதுக்குள் வினோதமான சத்தம் கேட்கத் தொடங்கினால் சில நாட்களில் சரியாகி விடக் கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது.அப்படி வினோதமான சத்தம் வரக் காரணம் என்ன என்பதை காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவரை அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு வினோத சப்தங்களுக்கான காரணங்களை உடனே அறிய முயற்சிக்க வேண்டும்.ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல்லாமல் புறக்கணித்து விட்டு ,நாட்கள் பல கடந்த பின் கேட்கும் திறனை முழுமையாக இழக்கும் நிலை வரை காத்திருப்பது புத்திசாலித்தனம் ஆகாதே.
காதுக்குள் வினோதமான சப்தங்கள் அடிக்கடி கேட்டால் அந்த குறைபாட்டை "ஒடெஸ்லோரோசிஸ்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்தக் குறைபாடு வரக் காரணம் நடுக்காதுப்பகுதியில் காணப்படும் சிறு எலும்புகளின் வளர்ச்சியே,இந்த சிறு எலும்புகளை மருத்துவர்கள் " ஸ்டேப்ஸ்" என்கிறார்கள்.இந்த எலும்புகள் சிலருக்கு பரம்பரை மூலக்கூறுகள் காரணமாக இயல்பான வளர்ச்சியைத் தாண்டி விரைவாக வளர ஆரம்பிக்கின்றனவாம். அப்படி வளரும் எலும்புகள் காதுக்குள் உட்புகும் ஒலி நடுக்காதுப் பகுதியில் இந்த எலும்புகளால் தடுக்கப் பட்டு காது ஜவ்வில் பட்டு ஒலிக்கும் திறனை இழக்கிறது ,மேலும் இடையில் தடுக்கப் படுவதால் வினோதமான சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது.இந்த ஸ்டேப்ஸ் எலும்புகளின் வளர்ச்சியை ஆரம்பம் முதலே அறுவை சிகிச்சை முறையில் முற்றிலுமாக கட்டுப் படுத்தலாம். ஆனால் அறுவை சிகிச்சை குறித்த பயம் உள்ள நோயாளிகள் வயது வித்தியாசமின்றி அறுவை சிகிச்சையைப் புறக்கணித்து காது கேட்கும் திறனளிக்கும் மெசின்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஸ்டேப்ஸ் எலும்புகள் அபிரிமிதமாக வளர்ந்து விட்டால் இந்த உபகரணங்களால் யாதொரு பயனும் இல்லை.படிப்படியாக காது கேட்கும் திறனை இழப்பதை விட ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை என்பதே முற்றாக பலனளிக்க வல்லது என காது,மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குறைபாடு பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளையே அதிகம் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.மேலும் பெண்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருக்கும் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடுபட்டாலும் கூட கர்ப்ப காலங்களில் இந்தக் குறைபாடுகள் \ தனது அறிகுறிகளை முழுதாகக் காட்டத் தொடங்கி விடுகின்றனவாம், அப்போதைக்கு வலிநிவாரணிகள் மூலம் சமாளித்தாலும் குழந்தை பிறந்த பின்பு முழு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்,இல்லா விட்டால் காலப் போக்கில் காதுகள் முற்றாக கேட்கும் திறனை இழக்கும் நிலை வரும்.
இதற்கான அறுவை சிகிச்சையை "ஸ்டேபிடெக்ட்டமி" என காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அறுவை சிகிச்சை காதின் உட்புறத்தில் நடத்தப் படுவதால் வெளிப்புறம் கத்தியால் அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படும் வடுக்கள் எதுவும் தோன்ற வாய்ப்புகளே இல்லை. மேலும் அறுவை சிகிச்சையின் பின் முழுமையாக காது கேட்கும் திறனை பெறுவதற்கான உத்திரவாதம் உண்டாம்.
சென்ற சனிக்கிழமை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் கே.கே.ஆர் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமனைக்குப் போயிருந்தோம் ,மருத்துவருக்காக காத்திருந்த நேரத்தில் வாசிக்கக் கிடைத்த தகவலே இன்றைய இடுகையானது ,பயனுள்ளதாக இருக்கக் கூடுமென எண்ணியதால் பகிர்கிறேன்.
மேலும் அங்கிருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் வெகுவாக கவனத்தை ஈர்த்தது .
இறந்து விட்ட ஒரு யானையைச் சுற்றி நின்று கொண்டு அதன் அகன்ற காதுகளை ஒருவர்,நீண்ட தும்பிக்கையை ஒருவர் ,கழுத்தை(தொண்டை) ஒருவர் என மூன்று மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இது தான் அந்த ஓவியம் .ஆக மூன்று மருத்துவர்கள் சேர்ந்து அளிக்கத்தக்க சிகிச்சையை ஒரே மருத்துவர் அளிக்கத் தகுதி அடைவது தான் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் போல என எண்ணிக் கொண்டேன்.
:)
http://www.kkrenthospital.org (காது மூக்கு தொண்டைக்கு சிறப்பான மருத்துவம் இங்கே கிடைக்கும் என பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிந்துரைத்ததால் இந்த சுட்டி ,தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்)
ஹரிணிக்கு நாளை யூனிட் டெஸ்ட் ,அதையொட்டி நேற்று பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள்(தோம்).
ஆங்கிலத்தில் முதல் பாடம் மை பேமிலி .
இரண்டாம் பாடம் ஸ்மால் பேமிலி,லார்ஜ் பேமிலி,ஜாயின்ட் பேமிலி இவை மூன்றையும் ஒப்பிட்டு காட்டுவது தான் இரண்டாம் பாடம்.
மை பேமிலி அவளுக்கு எல்.கே.ஜி முதற்கொண்டே இருப்பதால் என்னிடம் கேட்பதற்கு கேள்வி ஒன்றும் இல்லை அவளுக்கு.
ஸ்மால் பேமிலி படித்து விட்டு My family is a small family என்றாள். ஆமாம் என்றேன்.
அடுத்து லார்ஜ் பேமிலி வந்தது ;
Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Childrenஇவர்கள் எல்லோரும் இணைந்து வசித்தால் அது லார்ஜ் பேமிலி .
அடுத்து ஜாயின்ட் பேமிலி ;
Father,Mother,Grand father,Grand mother,Uncle,Aunt,Cousins,Childrenஇவர்கள் எல்லோருமே சேர்ந்து வசித்தால் அது ஜாயின்ட் பேமிலி .
கடைசியில் Which family you like ?என்றொரு கேள்வி.
ஹரிணியின் பதில் -I LIKE ALL THE THREE FAMILIES .
என்னடா இப்பிடி சொல்ற ,ஏதாவது ஒரு பேமிலி பிடிக்கும்னு சொல்லலாமே என்றதற்கு ;
இல்ல ..எனக்கு எல்லா பேமிலியும் பிடிச்சிருக்கு , ஆனா ஜாயின்ட் பேமிலி தான் நான் இன்னும் பார்த்ததே இல்லை என்றாள். ரொம்ப ஜாலியா இருக்குமில்லம்மா ,நம்ம பெரியப்பாக்கள் நாலு பேரோட பேமிலி ,சித்தி பேமிலி,மாமா பேமிலி , அத்தைகளோட பேமிலி ,அப்புறம் Mummyசைடு தாத்தா,பாட்டி,Daddy சைடு தாத்தா பாட்டி ...அம்மாடி எவ்ளோ பெரிய ஜாயின்ட் பேமிலியா இருக்கும் !
சூப்பரா இருக்கும்ல?!
ம்ம்...சூப்பரா தான் இருக்கும்.
எப்போ நாம ஜாயின்ட் பேமிலி ஆவோம்?
ம்ம்...எப்போ !!! ...அது வந்து ஊர்ல திருவிழா நடந்தா அப்போ ஜாயின்ட் பேமிலி ஆயிடுவோம் அப்புறம் பெரியப்பாக்கள் வீட்ல ஏதாவது விசேசம்னா ,தாத்தா,பாட்டி வீட்ல ஏதாவது விசேஷம்னா ,சித்தி பையனுக்கு பெர்த் டேனா அப்போலாம் நாம எல்லாரும் ஜாயின்ட் பேமிலி தானடா என்றேன்.
அவளுக்கு என் பதில் சமாதானம் ஆகவில்லை போலும்.
அதுக்கு பேர் ஜாயின்ட் பேமிலியா ? ...நாம தான் ரெண்டு நாள்ல சென்னைக்கு வந்து திரும்பி ஸ்மால் பேமிலி ஆயிடரோமே!?
குழந்தையின் கண்களில் ஏக்கம் தெரியத்தான் செய்கிறது .கூடியமட்டும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வகையில் தான் இனிமேல் எந்த ஒரு குடும்ப விழாவையும் திட்டமிட வேண்டும் என அந்த நொடியில் மனதுக்குள் தோன்றியது.கூடவே என்ன தான் சின்னச் சின்ன உரசல்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நம் தலைமுறையோடு மறையட்டும் குழந்தைகளிடம் அவற்றை கடத்திக் கொண்டு தொடர வைக்க வேண்டாம் என்றும் தோன்றியது.
குழந்தைகள் எப்போதும் தனிமையை விரும்புவதில்லை ,தன்வசதி வாய்ப்புகள் ,தன் வளர்ச்சி,சூழல் எனும் போர்வையில் பெரியவர்களுக்குத் தான் அதெல்லாம் தேவைப்படுகிறது.குழந்தைகள் எப்போதும் கூட்டமாய் குழுவாய் வாழவே விரும்புகிறார்கள் என்றும் தோன்றியது .
நண்பர் பதிவர் எஸ்.கே அவர்கள் ஒரு லிங்கை அனுப்பியிருந்தார்.
தற்போது அதிகமாகப் பேசப்படும் Child Sexual Abuseனால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளின் பிரச்சனையை தீர்க்கவும், பாதிக்கப்படாமல் காக்கவும்
பல வித செய்திகளை இந்தத் தளம் கொண்டுள்ளது.
பலருக்கும் உதவும் என்பதால் அந்தத் தளத்தின் முகவரி.
துளிர்
"http://www.hindu.com/2010/07/05/stories/2010070560611100.htm">Bill to deal with sexual offences against children soon, says Moily.
என் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா
போதும்!
என் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா
பொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி!!
இப்படி சொல்லும் வகை பெற்றோரா! உங்கள் குழந்தை அதிக
நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.
ADD - ATTENTION DEFICIT DISORDER
அதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு
ஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை
ஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்
அதீதமாக ஆக்டிவாக இருப்பதும்,(hyperactive)
முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)
போன்ற குறைபாடுகளும் இருக்கும்.
இந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது
பல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்
என்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
முறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு
பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,
சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை
கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்
நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்
பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்
இந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்
அடிக்கும் எச்சரிக்கை மணி.
பரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு
சாத்தியம் இருக்கிறது
நாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,
உண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்
ஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக
இருக்கக்கூடும்.
பல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி
குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி
பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி
பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு
கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி
வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்
காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து
இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.
நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்
பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான
மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்
போகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான
பழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி
அதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,
குறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்
செய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து
ஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.
தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,
நொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.
வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட
இதே விளைவைத் தருகின்றன.
கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை
நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை
ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத
பொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய
உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.
ADD - ATTENTION DEFICIT DISORDER இதன் அறிகுறிக்கள்:
சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,
சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு
தாவுதல்.
ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய
முடியாது.
ஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது
சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.
முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்
செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்
அதை செய்ய மாட்டார்கள்.
ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து
முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.
பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை
காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்
பெற்றோருக்கு வரும்.
பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.
குழப்பமான மனநிலை.
இவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.
தகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று
ஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,
ட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்
அறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.
ஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து
குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து
அதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.
வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.
அதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை
எடுத்துக்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட
சக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை
அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முறையான மனநலமருத்துவரைச் சந்தித்து
தேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்
குழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான
வாழ்க்கையை குழந்தைக்கு வழங்கலாம்.
பேரண்ட்ஸ் கிளப் ஆரம்பித்ததின் நோக்கமே ஒரு
வளமான எதிர்காலத்தை வளரும் குழந்தைகளுக்கு
பெற்றோர் வழங்க தங்கள் அனுபவங்களை பகிர்ந்து
பதிவு செய்து உதவி புரிந்து கொள்ளவே.
சென்ற மாதம் ஒரு மடல் பேரண்ட்ஸ் கிளப் ஐடிக்கு
வந்திருக்கிறது. நான் ஓய்வில் இருந்தது அனைவருக்கும்
தெரிந்தது. இன்றுதான் அந்த ஐடியை திறந்து பார்த்தேன்.
அதிர்ச்சியூட்டும் வரிகளுடன் ஒரு மடல் வந்திருந்தது.
25 வயதுக்குழந்தை ஒன்று தனது பருவத்தில் திகழ்க்க
வேண்டிய மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டதாக
சொல்லியிருந்த மடல் அது. எனக்கு ஏதாவது உதவி
செய்யுங்கள் என்று கேற்றிருக்கிறார்.
கிராமங்களில் இன்னமும் மனம், மணம் மாறா
மக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்
இந்த வேளையில் இவரின் மடல் பரிதாப நிலையைச்
சொல்கிறது.
மனம் நொந்து மடல் வடித்திருக்கும் அந்த நண்பரின்
பெற்றோர்கள் இருவருக்கு வயது 55, 50 வயதாகிறதாம்.
தந்தை விவாகரத்துக்கு கோறியிருக்கிறாம்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் பத்தாம் வகுப்பு
வரை படித்தவர்களாம். இவர்களின் கையாலாகாத
தனத்தால் இவர்களின் மகளின் வாழ்வும் நாசமாகி
அவருக்கும் திருமணமாகி விவாகரத்து வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தனது இந்த நிலை மன உளர்ச்சிக்கு ஆளாக்குவதாக
எழுதியிருக்கிறார்.” கிராமத்தில் பிளர்ந்து வளர்ந்த
எனக்கு என் வீட்டில் இப்படி ஒரு நிலை வரும் என்பதை
ஜீரணிக்க முடியவில்லை!” என்று எழுதியிருக்கிறார்.
பிரச்சனைகளின் காரண கர்த்தாக்களான பெற்றோர்களிடம்
கெஞ்சி, கூத்தாடி அறிவுரை சொல்லி என எத்தனையோ
செய்து பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்
இருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய கோரி மடல்
அனுப்பியிருக்கிறார்.
இந்த பிரச்சனைக்கு சுமூகமான விடை பெற
தமிழகத்தில் உங்கள் யாருக்காவது தெரிந்த
marriage counsellerஇருந்தால் தனக்குத் தெரியப்படுத்தி
உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
pshycologis பார்க்க பெற்றோர்களும், சகோதரியும்
ஒத்துக்கொள்ளவில்லை போல் தெரிகிறது.
பெயரை மாற்றியாவது என் மடலை தங்களின்
வலைப்பூவில் வெளியிட வேண்டுகிறேன், என்
கண்ணீர் கதையைப் படித்தாவது சில பெற்றோர்கள்
திருந்தட்டும் என கேட்டிருப்பதால் பதிவிட்டிருக்கிறேன்.
உங்களால் ஆன உதவியை செய்ய வேண்டுகிறேன்.
ஸ்கூல் திறக்க போவுது, சிலருக்கு திறந்திருக்கும்.
நேற்றுவரை அம்மாவின் துப்பட்டாவை கட்டிக்கொண்டு
அலைந்த பிள்ளை ,”புது யூனிஃபார்ம், புது டிபன் பாக்ஸ்,
புது பேக், புது வாட்டர் பாட்டில் கலக்கறே சந்துரு””!!
என்று பள்ளிக்கு செல்ல தயராக இருக்கும்.
எல்லாம் புதுசாதான் வாங்கிக் கொடுத்திருக்கோம்.
பையன்/பொண்ணு அழுகாம ஸ்கூலுக்கு போயிடுவாங்கன்னு
நினைச்சிருப்போம். அப்படியே கவுத்து ரகளை செஞ்சு
நம்மளை, டீச்சரை ஒரு வழி ஆக்கிடுவாங்க.
அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு தொங்கிய என்
கிளாஸ் பையன் ஞாபகத்துக்கு வர்றான். ஆரம்பப்பள்ளி
ஆசிரியைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே
குழந்தையை முதலில் அழாமல் வகுப்பில் உட்கார
வைப்பதுதான். ஒரு குழந்தை அழுகை நிப்பாட்டிய
நேரத்தில் இன்னொன்று மூலையில் உட்கார்ந்து
அழுவதைப் பார்த்து மத்ததுக்கும் பொங்கும்.
கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும் இந்த நிலை மாற.
அப்புறம் நாம் ஸ்கூல் கேட்கிட்ட போறவரைக்கும்தான்.
கையை ஒதறிட்டு டாடா காட்டக்கூட மறந்துட்டு
பிள்ளை ஓடிடும்.
வீட்டிலேயே நாம் குழந்தையை இந்தப் பிரிவுக்கு
தயார் படுத்த வேண்டும்.
சொல்லாதீங்க பதிவை படிச்சிருக்கீங்களா!
இதுவும் முக்கியம்:
சரி பிரிவுக்கு தயார் செய்வது எப்படின்னு பாக்கலாம்.
டே கேர் செண்டரிலோ/பள்ளியிலோ விடுவதை
ஆரம்பத்தில் குழந்தை விரும்பாது. பிரிவை தாங்க
இயலாத இந்த சுபாவம் ரொம்ப இயற்கையானது.
பெற்றோரின் அணுகுமுறை ரொம்ப முக்கியம்.
அடிப்பதோ, திட்டுவதோ கோபப்படுவதோ சுத்தமாக
உதவாது. பொறுமை, பொறுமை, முறையாக கையாளுதல்
தான் உதவும். கீழே கொடுத்திருக்கும் முறைகள்
உளவியலாளர்களின் கருத்துக்களும் கூட.
1. முத்த மழை பொழிந்து:
அன்னையின் அரவணைப்பு பிள்ளைக்கு தரும்
இதம் சொல்ல முடியாது. அழும் குழந்தையை
ஏதும் சொல்லமால் பக்கத்தில் இருத்தி
முத்தம் கொடுப்பது நல்லது. இப்பொழுதெல்லாம்
1 வாரம் வரை பெற்றோர்களும் வகுப்பிலேயே
உடன் இருக்க அனுமதிக்கிறார்கள்.
2. குழந்தையின் பையில் ஒரு நோட்டிலோ
அல்லது பள்ளி டயரியிலோ குடும்ப
புகைப்படம் ஒன்றை வைத்து அனுப்புவதும்
உதவுமாம். ஞாபகம் வரும் பொழுது
புகைப்படத்தை எடுத்து பார்த்து குழந்தை
கொஞ்சம் திருப்தி பட்டுக்கொள்ளும்.
3. நல்லபிள்ளை விளையாட்டு:
நீ அழாம நல்ல பிள்ளையாய் ஸ்கூலுக்கு
ரெடியாகும் ஒவ்வொரு நாளும் பாயிண்ட்ஸ்
கொடுப்பேன், அதை வைத்து உனக்குத்
தேவையான விளையாட்டு சாமான்கள்
வாங்கிக்கொள்ளலாம், என்றோ ஹாப்பி
ஃபேஸ் சார்ட் ஒட்டி அதில் எத்தனை ஹாப்பி
ஃபேஸ் வருகிறதோ அதுக்குத் தகுந்த மாதிரி
பிள்ளை விரும்பும் சாமான் அல்லது தின்பண்டம்
என்றும் வைக்கலாம்.
4. பேசாமல் இருத்தல்:
அழும் குழந்தையோடு “டூ” விடுவதல்ல.
சில சமயம் குழந்தை அழும் பொழுது
நாம் உடன் ரியாக்ட் செய்யாமல் 10 நிமிடம்
போல நம் வேலையை அருகிலேயே
உட்கார்ந்து செய்து கொண்டிருந்தால்
தன் நடவடிக்கையை கவனிப்பார் இல்லாமல்
தானே சமாதானமாகி விடும். சில சமயம்
அழும் குழந்தையை சமாதானம் செய்கிறேன்
என்று பெற்றோர் செய்யும் ஆட்டம் அதிகமாக
இருக்கும்.
5. உறுதி மொழி:
எங்கே நம்மை அப்படியே விட்டுவிடுவார்களோ!
எனும் பயம் குழந்தைக்கு இருக்கும். அதனால்
ஸ்கூல் 11 மணிக்கு முடிஞ்சிடும், வீட்டுக்கு
வந்திடலாம், உனக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சு
வெச்சுகிட்டு அம்மா ரெடியா காத்திருப்பேனாம்!/
ஸ்கூல் பெல் அடிச்சதும் வெளியே யார் இருப்பாங்கன்னு
பாரு!போன்ற உறுதிமொழிகள் பயத்தை குறைக்கும்.
6. நேற்று என்பது வரலாறு அதைப்பற்றி பேசலாம்:
தான் சாதித்தவற்றைப் பற்றி பேசுவது குழந்தைகளுக்கு
ரொம்ப பிடிக்கும். நேத்து எவ்வளவு குட் பாயா எந்திரிச்சு
ரெடியான!, ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும்
நாம பைக்ல ஒரு ரவுண்ட் கூட போனோம்ல என
பேசுவது தான் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவோம்
என்ற எண்ணமும் நல்லபடியாக கிளம்பி போனால்
ட்ரீட் கிடைக்கும் என்பதும் புரியும்.
7. பிள்ளை விரும்பும் பூ, பொம்மை, மிக விரும்பும்
வகை உணவு, போன்றவற்றை மறைத்துவைத்து
சர்ப்ரைஸாக கொடுக்கலாம்.
8. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர் ரிலாக்ஸ்டாக
இருக்க வேண்டும். இந்த மாறுதலை குழந்தை புரிந்து
கொள்ளும் வரை நாம் புரிய வைக்க முயற்சி செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் நம் கோபத்தையோ டென்ஷனையோ
குழந்தை மீது காட்டினால் அது நிலமையை இன்னும்
மோசமாக்கும். “அழாதே! அழுகையை நிப்பாட்டு”
போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவது நலம்.
நம் முன்னால் ஏதும் நடவாத மாதிரி பொறுமையாக
சிரித்த முகத்துடன் இருந்தாலே போதும். குழந்தையை
பிரிகிறோமே, பிரிக்கிறோமோ என்று தேவையில்லாமல்
குழம்பாமல் நிம்மதியாக குழந்தையை பள்ளியில்
விட்டுவிட்டு வரவேண்டும்.
ஆசிரியை, பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சியினால்தான்
ஒரு குழந்தையின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
பெற்றோரும் சிலவற்றைச் சொல்லிக்கொடுத்து
பிள்ளையை வளர்த்தால்தான் பள்ளியில் மேலும்
கற்க அது உதவும்.
புதுகை மாவட்டம் ராயவரம் ஒன்றியத்தைச் சேர்ந்த
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்
பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
பள்ளி செல்ல விரும்பு
பாடம் நல்லக் கரும்பு
படித்து விட்டுத் திரும்பு
பண்ண வேண்டாம் குறும்பு;
அரும்பு போல சிரிப்பாய்
எறும்பு போல இருப்பாய்!




