விருட்சம்.காம் வலைதளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்
ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள …
இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி விட்டால் விட்டது தொல்லை. மாறாக யோசிக்காமல் வாங்கி ஓன்று வாயில் இடுக்கிக் கொண்டால் பிடித்தது ஏழரை என்பதைக் கூட உணராமல் அதில் மாணவக் கண்மணிகள் மூழ்கிக் கொண்டு இருக்கும் அவலம்
இப்போ கண்டுபிடித்திருக்கிறது ஒரு தனியார் பள்ளி.
பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.
பின் விளைவுகள் என்னென்ன? வேறு என்ன ஒரு நாள் எடுத்துக் கொள்ள வில்லை என்றால் தலை வலி எரிச்சல் தூக்க மின்மை, எரிந்து விழுதல், படிப்பில் கவனமின்மை.
இதை விளம்பரப்படுத்தும் இந்தச் சுட்டி
சொல்லுவது இது ஹெர்பல் தயாரிப்பாம். ஆரோக்கியத்துக்கு நண்பனாம் அதான் ஹெல்த் பிரெண்ட்லி
ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் புகையிலை தயாரிப்பு என்று ஏதாவது உண்டோ.
4ஆம் வகுப்பு மாணவன் கூட ஐ லவ் யூ என்று தன்
சகவகுப்பு மாணவியிடமோ, தோழியிடமோ சொல்லும்
காலம் இப்போது. இந்த நிலையில் பதின்மவயதுக்குழந்தைகள்
பற்றி சொல்லவே வேண்டாம்.
பாய்ஃப்ரெண்ட்/கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாவிடில் அவர்கள்
எதற்கும் லாயக்கற்றவர்கள் என சொல்லும் நட்பு வட்டம்...
ஸ்டேடஸ் சிம்பளாக ஒரு பெண்ணோடோ/ஆணோட
நட்பு இருப்பதாக காட்டிக்கொள்வது சர்வ சாதரணமாகிவிட்ட
சூழல் என இருக்கும் நிலையில் பிள்ளைகள் காதல்
வயப்படுகிறார்கள். இது உண்மையில் காதலில்லை
என்று சொன்னால் கேட்கும் மனநிலை அவர்களுக்கு இல்லை.
தனக்கென ஒரு உலகம் அமைத்து அதற்குள் வாழும் அவர்கள்,
தனக்கான தனி அடையாளம் அமைத்துக்கொள்ள என்ன
வேண்டுமானாலும் செய்ய கூடிய ஒரு மனநிலையில்
இருப்பார்கள்.
வீட்டுக்குள் அடைப்பது, திட்டுவது, அடிப்பது, சோறு
போடாமல் கண்டிப்பது எல்லாம் வேலைக்கு ஆவாது.
அவர்களுடன் பேசி நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள
வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள்
தான் தனது வாழ்க்கையின் முக்கிய எதிரி என நினைப்பார்கள்.
அன்பான வார்த்தை கூட எடுபடாத இந்த சூழலில்
இது எதிர்பாலினத்தரின் மீதான ஒரு கவர்ச்சி. இது
இப்பொழுது நிகழக்கூடிய ஒன்று. இதை காதல் என
தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கையை வீணாக்காமல்
படிப்பை கவனித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என
பேசிப் பேசி புரிய வைக்க வேண்டும்.
சொல்வது போன்ற எளிது கிடையாது.
தற்போது படிப்பில் கவனதை செலுத்தி நல்லதொரு
வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு
அப்போதும் இருவருக்கும் இருந்தால் பார்க்கலாம்
என சொல்லலாம். ஏன் கூடாது??? என எதிர் கேள்வி
வீசப்போகும் பிள்ளைக்கு அதை புரிய வைக்க வேண்டியது,
நிதர்சன உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது
பெற்றோரின் கடமை.
ஆகாயத்தில் கோட்டை கட்டாமல் நிதர்சனங்களை அலசி
ஆராய்ந்து தனக்கென கால் ஊன்றிய பிறகு தன் வாழ்க்கை
துணையை தேர்ந்தெடுப்பது நலம் என சொல்லவேண்டும்.
இந்த வயதில் இந்த இனக்கவர்ச்சி இயல்பானது என்பதை
புரிந்து கொண்டு பெற்றோரும் குழந்தைகளை அதிகமாக
கட்டுபடுத்தாமல் நல்ல வழிகாட்டியாக பிள்ளைகளுக்கு
உதவி இனிதாக பதின்மவயதை தாண்ட உதவ வேண்டும்.
ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,
இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.
நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர்.
அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.
பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை."லட்ச்சுமணா "என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.
வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராடனங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.
பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.
கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.
அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.
அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;
"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.
பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.
இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.
வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .
"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.
வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.
வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.
தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.
" நீயோ என்னைக் கொன்றது !?"
தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;
"என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே"!
அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;
"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! "
தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.
குழந்தைக்கு ஒன்றுமில்லையா!அப்படியானால் லட்சுமணன்!
பாதையில் கண்ட கீரி நீயோ!
என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!
ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!
அலறித் துடித்தார் அந்தணர்."
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!
மாரல் ஃஆப் தி ஸ்டோரி :
ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.
எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,
முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,
ம்மா ...ரொம்ப வலிக்குமா ?
ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;
சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.
அதெல்லாம் இல்ல...
அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !
ஏன் ?
அவ மகர ராசியாம்
வாட்?!
ம்ம்...டி.வி ல சொன்னாங்க .
சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!
இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...
( !!! )வேறென்ன பல்பு தான் .
அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .
போம்மா நீ பொய் சொல்ற .
நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.
ம்மா ...
ம்ம் ...சொல்லு
ம்மா
சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.
ம்மா ...
கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...
சொல்லிட்டு தூங்கும்மா
சரி கேளு
எப்போ பல்லு விழும்.
அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.
ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.
இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.
இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.
சரி ...சரி தூங்குடா இப்போ .
இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?
சீக்கிரமாவே தான் .
அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?
(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .
ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .
ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.
:((((
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி) நோட்:
நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;
"கடக்" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.
அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .
ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.
கர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.
தன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.
முதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.
சுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.
அம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ!” என்று நீட்டுவதால் வந்த பேரோ?
இதன் செய் முறை:
குருந்தட்டி வேர் - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
சாரண வேர் - 50 கிராம்
மூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.
இதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.
அடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.
பிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.
தொடரும்
post by நானானி
அந்தக்காலத்தில் பிள்ளை பேறு என்றால் பத்தியம், பக்குவமான சாப்பாடு
என இழந்த சக்தியை மீட்டுத் தரும் வகையில் குழந்தை பெற்ற
பெண்ணின் உடலை பாதுகாக்கும் டெக்னிக் பாட்டி வைத்தியம்.
அதனால்தான் அந்தக்காலத்தில் பெண்கள் ஸ்ட்ராங்காக இருந்தார்கள்.
பிள்ளை பிறந்த உடன் டாக்டருக்குத் தெரியாமல் தேனைக்குழைத்து
கோரசினை மருந்தை நாக்கில் தடவிவிடுபவர்களும் உண்டு.
நம் பாரம்பரிய பாட்டி வைத்தியம் சில தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.
நம் நானானி அவற்றை அழகாகத் தொகுத்து தன் வலைப்பூவில்
பதிவிட்டுக்கொண்டு வருகிறார். பேரண்ட்ஸ் கிளப் வாசகர்களுக்கும்
அவை பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி
பெற்று அவரது அனுமதியுடன் இங்கே அந்தத் தொகுப்பை ஒவ்வொன்றாக
பிரசூரிக்க இருக்கிறோம்.
இதோ அவர் சொல்வதை கேளுங்கள்:
பிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.
முதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.
உள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.
என்ன செய்யலாமென்று,"திங்..திங்.." என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா!!!!
அதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.
அந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.
அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.
தொடரும் இவரது பதிவுகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் சிந்தனையைத் தூண்டி அறிவுத்திறனைப் பெருக்கும் முறையில் வடிவமைக்கட்டுள்ளன. ஆனால், இப்போது நாம் பரவலாக கல்வி என்பது
அறிவு என்ற கோணத்தை மீறி கல்வி என்றால் மதிப்பெண்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காலத்தின் மாற்றத்தில் இதுவும் அவசியமாகிப் போய்விட்டது.
பள்ளிகளும் சரி, பெற்றோரும் சரி....மதிப்பெண்களையே முன்னிலைப்படுத்தி, முக்கியப்படுத்திப் பார்க்கப் பழகிவிட்டோம்.
அந்தந்த வகுப்புக்கு, அந்தந்தப் பாடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளா போதிய செய்திகள் மாணவர்களிடம் பல நேரங்களில் சரியாகச் சென்று சேர்வதில்லை.
ஆசிரியரின் போதனையை இங்கே நான் குறைசொல்ல வரவில்லை. மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தும் காரணத்தால், முக்கியமான பல கேள்விகளுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது சில நேரங்களில், சில பகுதிகளையே தவிர்க்கும் சூழலுக்கு மாணவர்களைத் தள்ளுகிறது.
எல்லா மாணவர்களும், எல்லா நேரமும் 100/100 மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், அவரவர் வயதுக்கேற்ற, வகுப்பிக்கேற்ற அறிவைப் பெறுவது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட கேள்வி பதில்களை மட்டுமல்லாமல், பாடத்தின் மொத்த வரிகளையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டியது மிகவும்
அவசியம்.
CBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.
ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன். அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது.
புதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.
http://malar-studyroom.blogspot.com/
ஒன்பதாம் வகுப்பு (CBSE) இரண்டாம் பருவத்திற்கான அறிவியல், சமூக அறிவியல் பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.
குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு பெற்றோர்களுக்கு
இருப்பது போல குழந்தை நல மருத்துவருக்கும் இருக்கு.
குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிரது இவர்களது
வேலை. மிகவும் ஸ்ட்ரெஸ் தரும் மருத்துவத்துறையில்
இருப்பதாலோ என்னவோ பல மருத்துவர்கள் எதையும்
பெற்றோர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நோய்க்குண்டான மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு
அனுப்பி விடுவார்கள்.
என் அம்மாவின் ஒன்று விட்ட தம்பி ஒரு குழந்தை
நல மருத்துவர். அம்ருதா பிறந்த உடன் தலையை இஞ்ச்
டேப் வைத்து அளந்து பார்த்து, கைகளில் பென்சில் கொடுத்து
பிடிக்கிறாளா என்றெல்லாம் செக் செய்தார். 1 1/2 நாளிலேயே
அம்ருதாவுக்கு ஜாண்டிஸ் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து
உடன் போட்டோதெரப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார்.
அப்போதுதான் எனக்கு குழந்தை நல மருத்துவரின்
முக்கியத்துவம் புரிந்தது. தலையின் அளவை வைத்து
மூளையின் சைஸை கண்டுபிடிப்பார்களாம்! கையில்
கொடுப்பதை பிடிக்கும் சக்தி, திறன் இவற்றை சோதித்து
ஏதும் பிரச்சனை என்றால் ஆரம்பித்திலேயே கண்டு
பிடிப்பார்கள் என குழந்தை நல மருத்துவரின் பங்கு
சொல்லிவிட முடியாது. வெறும் காய்ச்சலுக்கும், ஜுரத்துக்கும்
மட்டும் மருந்து கொடுக்கும் மருத்துவர் போல இல்லை.
சரி இவ்வளவு ராமாயணம் ஏன்? எனது சென்ற பதிவுக்கு
ஒரு குழந்தை நல மருத்துவரிடமிருந்து வந்திருந்த
பின்னூட்டத்தை தொடர்ந்து அவரின் வலைப்பூக்களை
சென்று பார்த்தேன். வியந்தேன். எப்படிப்பட்ட நிகழ்வுகள்
பெற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ அவற்றை
மிக அழகாக தொகுத்து தனது வலைப்பூவில் தந்திருக்கிறார்
டாக்டர்.ராஜ்மோஹன்.
பலருக்கும் உதவும் என்பதால் அவரின் வலைத்தளங்களை
இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.
குழந்தை நலம் வலைப்பூ:
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
குழந்தையின் ஜிப் அவிழ்க்கும் போது மாட்டிக்கொண்டால்?
உங்கள் குழந்தையின் உயரத்தைக் கணிக்க
இப்படி நிறைய்ய்ய இருக்குங்க அவரது வலைப்பூவில்.
இந்தப் பதிவின் மூலம் மதிப்பிற்குரிய டாக்டர்.ராஜமோஹன்
அவர்களுக்கு நமது பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து
பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து
வைத்து பதிவு போட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
http://www.livechennai.com/detailnews.asp?newsid=1488
வாசகர்களுக்கான தகவல் :
சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ 250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது .
இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி ரூ 50 குறைக்கப்பட்டது. அதன்படி, தடுப்பு மருந்துக்கு ரூ 100, தடுப்பூசிக்கு ரூ 200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடபடுகிறது
முகவரி :
Alandur Road, SIDCO Industrial Estate
Chennai, Tamil Nadu 600032
044 22501520
044 22501778
044 22501706
044 22501233
.
வயது வித்தியாசமில்லாம எல்லா பெண்ணும் சலிச்சுக்கும்
விஷயம் இது. யாரு கூப்பிட்டா இந்த அழையா விருந்தாளிய?
எப்ப வேணாம்னு நினைக்கிறோமோ அப்ப கரெக்டா வந்திடும்?
இப்படி அர்ச்சனை வாங்குவது வேற யாருமில்லை மாதாமாதாம்
வரும் மாதவிடாய்க்குப் பெயர் தான் அழையா விருந்தாளி.
ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள்னு சொன்னாலே பாவம்! இன்னும்
35 வயசுக்கு கஷ்டப்படணும், தலையெழுத்து!!! நல்லவங்களுக்குத்தான்
40ல நிக்கும்!! என ஏஏஏகப்பட்ட சொலவடைகள் சொல்லி
டெர்ரர் ஆக்குவதே வேலையா இருக்கும். இது மனோதத்துவ
ரீதியில பாதிச்சு மனசுல செட்டாகி மாதவிடாய் என்றாலே
ஏதோ ஒரு வியாதி மாதிரி ஆகி அதனாலே கூட அந்த
சமயங்களில் உபாதைகள் அதிகமா இருக்காம்.
இப்பெல்லாம் பெண் குழந்தைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்திடறாங்க.
அதனால அவங்களுக்கு எல்லாம் சொல்லி வைக்க வேண்டியது
அவசியம். என்னைப்பொறுத்தவரைக்கும் இதை ஒரு
mental preparation அப்படின்னு சொல்வேன். இப்படி செய்வதால
அழுது, பயந்து, மயக்கமாகின்னு பசங்க கஷ்டப்படாம இருக்கும்.
தனது வகுப்பில் ஒரு ஃப்ரெண்ட் பூப்படைந்ததை அம்ருதா
சொல்வதற்கு முன்னே அவளிடம் பேசிக்கொண்டு தான்
இருந்தேன். ஆனாலும் அவள் எதற்கோ தயங்குவது போல
தெரிந்தது.
“நான் தான் எல்லாம் சொல்லியிருக்கேனே பாப்பா! உங்களுக்கென்ன
பயம்?” அப்படின்னு கேக்கவும் அம்மா ஆரம்பிச்சாங்க.
“இல்ல!!! வந்து.... பீரியட்ஸ் வந்தா நானும் உங்களை மாதிரி
கஷ்டப்படுவேனா??? அதை நினைச்சாலே பயம்மா இருக்கு!!இது ஏந்தான்
பெண்களுக்கு வரணும்? ஏம்மா இந்தக் கஷ்டம்??”
நான் இந்தக் கோணத்தில் யோசிக்கலையே. என் நிலை
மகளுக்கு பயம் தரும்னு நினைக்கலையே!!! பெற்றவர்கள்
ஆன பிறகு கற்பதுதானே நிறைய்ய...
பக்கத்தில் உக்கார வெச்சு பேசினேன். இந்த மாதிரி எல்லோருக்கும்
இருக்காது, என் வயசென்ன? உன் வயசென்ன? அப்படி எல்லாம்
இருக்காது! போன்ற பதில்கள் சமாதானம் ஆக்கவில்லை. தேவையாம்மா
இப்படி ஒரு பீரியட்ஸ்? அதனால என்ன பலன்? அப்படின்னு கேட்டாள்.
நானும் முன்பு மாதவிடாய் காலங்களில் பாரதியாரின் பாடல்வரிகளை உல்டா
செஞ்சு “மங்கயராகப் பிறப்பதற்கே மாபாதகம் செய்திடல் வேணுமடா””ன்னு பாடியிருக்கேன்.
எல்லாத்தையும் சொல்லிட முடியுமா??? ஆனா சிலதை அழகாச்
சொல்லலாமேன்னு முயற்சி செஞ்சேன். குழந்தையின் மனதிலிருந்து
பயத்தை எடுப்பது தான் என் நோக்கம்.
அம்ருதம்மா, PUBERTY ஆண்டவன் பெண்களுக்கு கொடுத்திருக்கும்
வரம். ஹார்மோன்ஸ் சேஞ்சாகி சின்னக்குழந்தைக்கும்-
பெரிய பெண்ணிற்கும் இடைபட்ட இந்த நிலை ரொம்ப
முக்கியம். மாதாமாதம் சின்ன சின்ன கஷ்டம் இருக்கும்.
இல்லைன்னு சொல்லலை. இது கிளைமேட்
சேஞ்சானா எப்படி தும்மல், ஜுரம் வருதோ அதுமாதிரி தான்.
அதுக்காக மழைக்காலமே வேணாம், குளிர்காலமே வேணாம்னு
சொல்வோமா!!
இல்ல சொல்ல மாட்டோம். வீ வில் எஞ்சாய் த கிளைமேட் வித் த
கிளைமேடிக் சேஞ்ச் என்றாள் அம்ருதம்மா.
ஆமாம். உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாறுதல்களை சகிச்சுகிட்டாத்தான்
அழகான பெண்மை ஏற்படும். இதுதான் உனக்கு அழகைத் தரும்.
அழகான உடலமைப்பு, நல்ல சத்துள்ள எலும்புகள் எல்லாத்துக்கும்
உன்னை பாதுகாக்கும் ஒரு ஃப்ரெண்டா பீரியட்ஸ் இருக்கு.
45-50 வயது வரைக்கும் கூட வரும் இந்த ஃப்ரெண்டால தான்
நம் எலும்புகள் வலுவா இருக்கு. இதனால நமக்கு எத்தனையோ
நன்மைகள் இருக்கும்மா” என
சொன்னதும் கண்களை அகல விரித்து இவ்வளவு இருக்கா!!
தெரியலையே அம்மா! என்றாள்.
இப்பச் சொல்லு இந்தப் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும்
வேணுமா? வேண்டாமா?
கண்டிப்பாய் வேணும்மா! நீங்க எப்பவும் சொல்வது போல்
with out pain no gain புரிஞ்சுகிட்டேன்! அப்படின்னு சொல்லியும்
மனசு பூர்த்தியா நிறைஞ்ச மாதிரித் தெரியலை.
இனிமே பீரியட்ஸை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்.
அந்த ஃப்ரெண்ட் இல்லாட்டி நமக்கு கஷ்டம் தானே.
ஆக பெண்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் பீரிட்யட்ஸ். சரியா?
என்றேன். சரிம்மா என்ற கண்களில் இருந்த ஒளி மனதுக்கு
நிம்மதியை தந்தது.
எல்லா பெண்களும் மாதவிடாயின் போது
படும் துயரங்களை வீட்டில் இருக்கும் மகளும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறாள் என்பதை நினைவில் வைய்யுங்கள். அதற்காக
வலி பொறுத்து நடிக்க வேண்டுமென்பதில்லை. அந்த
நேரத்தை வேண்டா வெறுப்பான நேரமாக்கி விடாதீர்கள்.
நாம்தான் நம் பிள்ளைகளுக்கு முன்னுதாரனங்கள். நாமே
வெறுப்பு உமிழ பேசினால் அது அவர்களுடைய மனதிலும்
பசுமரத்தாணி போல உட்கார்ந்துவிடும்.
இப்பொழுதெல்லாம் அம்ருதம்மா நான் அதிக டயர்டாக
இருந்தாலோ இல்லை பீ எம் எஸ் சிம்ப்டங்களுடன்(இப்போது
எவ்வளவோ குறைந்துவிட்டன)இருப்பதை உணர்ந்தாலோ,
“ஏம்மா டயர்டா இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் வந்தாச்சா??”
என்று கேட்கிறாள். பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் மகளிடம் பேசுவதும்
ஒரு சுகம். பகிர்ந்துகொள்ள ஒரு தோழி கிடைத்தது போல்
இருக்கிறது.
மாதவிடாயை அழையா விருந்தாளி எனச் சொல்லி வெறுத்து
ஒதுக்காமல் அன்புத்தோழி ஆக்கி ஆனந்தமாக இருப்போம்.
ஒவ்வொரு வீட்டில் பிள்ளைகளும் வேறுபடலாம். ஆனால்
எனக்கும் எனது மகளுக்குமிடையேயான இந்த உரையாடல்
சிலருக்கு உதவலாம் என்பதால் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.