தவறு.14..
கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை கேலி/கிண்டல் செய்வது.
காரணம்
கேலி செய்வதால் நம்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு வரும். அதனால் அந்தத் தீய பழக்கத்தை மேலும் தீவிரமாக செய்யலாம். கை சூப்பும் பழக்கம் பொதுவாக மிரட்டி வளர்க்கப்படுகின்ற, பெரியவர்கள் யாரும் உடன் இல்லாத குழந்தைகளிடமே காணப்படும். இப்பழக்கம் பொதுவாக பொழுது போகாமல் இருப்பதினாலும், கோப உணர்ச்சியின் வடிகாலாகவும் ஏற்படுகிறது எனலாம்.
தீர்வு
குழந்தையை ஏதாவது ஒரு விளையாட்டில் /பணியில் ஈடுபடுத்திக்கொண்டே இருங்கள். பெரியவர்கள் யாராவது உடன் விளையாடிக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருப்பது நல்லது. மேற்கண்ட சூழ்நிலை இல்லாதவர்கள் நிறைய விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிப் போடலாம். கணினி விளையாட்டை அறிமுகப்படுத்தலாம். வரைகலை drawing கற்றுக் கொடுக்கலாம். வண்ணம் தீட்டும் புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம். நாம் உடன் இருக்கும் வேலையில் சிறு சிறு வீட்டு வேலைகளையும் கொடுக்கலாம். பலவித வழிகளையும் ஏற்படுத்தி குழந்தை ஏதாவது ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
தவறு.15.
மகாத்மா காந்தியின் பென்சில் கதையை நினைத்துக்கொண்டு சிறிய பென்சிலை எழுதக் கொடுப்பது.
காரணம்
சிறிய பென்சிலைக் கொண்டு எழுதும்போது எழுத்துக்கல் அழகாக வராது.
தீர்வு
சிறு குழந்தைகளிடம் எழுதுவதற்கு பெரிய பென்சில்களையே கொடுக்க வேண்டும்.
தவறு.16.
பள்ளியில் பென்சில், ரப்பரைத் தொலைத்து விட்டு வரும் குழந்தையைத் திட்டுவது.
காரணம்
அதிகம் திட்டினால் அடுத்த நாள் பள்ளியில் பென்சில், ரப்பர் மீது தான் கவனம் இருக்குமே தவிர பாடத்தில் இருக்காது. மேலும் பென்சில் தொலைந்துவிட்டால் இன்னொருவன் பென்சிலை திருட வேண்டும் என்ற எண்ணம் வரும். பின் திருடனாகவும் மாறலாம்.
தீர்வு
1.வகுப்பிலேயே தேவையான பென்சிலையும், ரப்பரையும் பொதுவில் கொடுக்க சொல்லலாம்.
2.நிறைய பென்சில், ரப்பரை வாங்கி வைத்துக்கொண்டு தொலைந்தபோதெல்லாம் 'இதற்கே நிறைய செலவாகிரது, முடிந்த வரை தொலைக்காமல் கொண்டு வாருங்கள்' என்று சொல்லலாம்.
3.பென்சில், ரப்பரை இரண்டாக உடைத்துக் கொடுக்கலாம். (மிகச் சிறியதாக அல்ல).
மரு.இரா.வே.விசயக்குமார்
சும்மா சும்மா கட் காபி பேஸ் செய்ய முடியலீங்கோ.
அதான் லிங்க் கொடுத்து ஒரு பதிவு போட்டுடலாமேன்னு!!
:))
பிள்ளைகளுக்கு எழுதச் சொல்லிக் கொடுப்பது பள்ளியில் ஆசிரியரின் வேலை என்றாலும்
சில பள்ளிகளில் பிள்ளைகளை அதிகம் எழுத வற்புறுத்துகிறார்கள்.
எழுத்தை மனதில் பதிக்காமல் எழுத இயலாது. அதன் வடிவம், உச்சரிபு இவை மனதில் பதிய
வேண்டும். அதன் பிறகே எழுத இயலும்.
எப்படிச் சொல்லிக்கொடுப்பது?
அதற்கானப் பதிவு இங்கே அம்மாக்களின்
வலைப்பூவில் இருக்கிறது.
அப்பாக்களும் உதவலாம். தப்பில்லை.
நாம் பள்ளிகளில் படிக்கும் பொழுது வகுப்பிலிருந்து
வெளியில் எங்கு சென்றாலும் கிளாஸ் லீடரோ,
டீச்சரோ கொடுக்கும் குரல்,”எல்லாம் லைனா
போங்க!!” என்பது தான்.
நம் வகுப்பிலிருந்து பீடிக்கு, பாட்டுகிளாஸிற்கு
என எங்கு சென்றாலும் வரிசையாக சென்று
வரிசையாக வரவேண்டும். உயரத்தை
வைத்து யார் முதலில் நிற்க வேண்டும் என
சொல்லிக்கொடுப்பார் பீடி டீச்சர்.
பீடி வகுப்புக்களின் போது ஒரு மாணாக்கனுக்கும்
இன்னொரு மாணாக்கனுக்கு இடையே ஆன
தூரத்தை கைகளால் அளந்து நிற்க வேண்டும்.
தினமும் அசெம்பிளிக்கு செல்லும் பொழுது
வரிசை தவறினாலோ, சரியாக நிற்கா
விட்டாலோ அவ்வளவுதான். முழங்கால்
போட்டு பனிஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்கள்.
சரி ”இந்த வரிசையில் தான் செல்லவேண்டும்!”
என்ற கொள்கை பள்ளிகளில் ஏன் கட்டாயமாக்க
வைத்தார்கள்?
வளர்ந்த பிறகு வங்கி, ரயில்நிலையம் என
பொதுமக்கள் கூடும் இடங்களில் நாம்
வரிசையாக செல்லப் பழக வேண்டும்
என்பதற்காகத்தான்.
ஆனால் நம் மக்களுக்கு வரிசையில்
செல்வதெல்லாம் பிடிக்காது. கயிறு
கட்டியிருந்தாலும் தள்ளிக்கொண்டு,
முண்டியடித்து போனால் தான்
திருப்தி.!! அதுவும் வங்கிகளில்
பணம் போட ,எடுக்க என டென்ஷன்
இருந்தாலும் அடுத்தவரைப் பற்றி
கவலைப்படாமல் மேலே விழுவார்கள்.
விமான நிலையங்களில்
பாஸ்போர்ட்டில் குடியேற்றம் முத்திரை அடிக்க
நிற்கும் வரிசையில், கடவுச்சீட்டு கொடுத்திருக்கும்
நபருக்கு அவருக்கு பின்னால் நிற்கும் நபருக்கும்
இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்
என்பதால்,”ஒருவர் மட்டும்!” என எழுதியிருப்பார்கள்.
ஆனால் நிஜம் எப்படி இருக்கும் என்பது
பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
(குறிப்பாக நம் நாட்டில்)
வாஷிங்கடனில் திருமணம் நாவலில்
திரு. சாவி அவர்கள், அம்மாஞ்சி தக்களி
நூற்றதை மக்கள்.”வாராவதி மேல்
வாராவதியாக கவிழ்ந்து நின்று பார்த்ததாக
எழுதியிருப்பார்.”
எதுவாக இருந்தாலும் நம் மக்கள்
ஒருவர் மேல் ஒருவர் கவிழ்ந்து நின்றுதான்
பார்ப்பார்கள். சாலையில் ஏற்படும்
விபத்துக்களில் இவர்கள் கூட்டம் கூடி
பார்க்கும் பொழுது போதிய காற்று இல்லாத
காரணத்தால் விபத்துக்குள்ளானவர்
மயக்கமுறும் நிலமையும் ஏற்படு்ம்.
மாண்டிசோரி கல்வியில் இந்த
வரிசையில் செல்லும் பழக்கத்தை
போதிப்பது கட்டாயப் பாடம்.
வட்டமாகவோ, சதுரமாகவோ
சாக்பீஸால் வரைந்து மாணவர்களை
நிற்க வைத்து நடந்து வரப் பழக்குவோம்.
இதனால் பிள்ளைக்கு வரிசையில் செல்ல
பழக்கமாகிறது. கோட்டிற்கு மேல் நடக்க
வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதால்
கண்கள் பார்க்க கால்கள் அந்த தடம்
பிரழாமல் நடக்க பயிற்சி கிடைக்கிறது.
பிள்ளை தனது முறை வரும் வரை
பொறுமையாக காத்திருக்க பழகுகிறது.
ரயிலின் பெட்டிகள் வரிசையாக செல்லாமல்
தடம்புரண்டால் அது விபத்து. நாம் வரிசையில்
நிற்க வேண்டிய இடத்தில் வரிசையில் நில்லாமல்
போனாலும் பிரச்சனையே!
எறும்புக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் வரிசையில்
செல்ல வேண்டுமென?
அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது.
பெற்றோர் தான் குழந்தைக்கு ஒரு உதாரணம்.
வளரும் குழந்தை சுற்றுப்புரத்திலிருந்தும்
கற்றுக்கொள்கிறது.
நம்மைப் பார்த்து குழந்தை கெடாமல்
இருக்க நாமும் பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!
குழந்தை வளர்ப்பில் சின்னச்சின்ன விடயங்களையும்
பக்குவாமக கையாள வேண்டும். இதனால் என்ன
பெரிய பாதிப்பு வந்திடும் என அலட்சியமாக இருக்கக்
கூடாது. சக பதிவர் அமுதா அவர்கள் தன் வலைப்பூவில்
போட்டிருந்த பதிவு அனைவருக்கும் உதவும் என்பதால்
நமது கிளப்பிலும். இதோ அவரின் பதிவு.
குழந்தைகளின் குணநலன்கள் அமைவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. என்னை யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.
யோசிப்போமா பெற்றோர்களே...?
என் மகள் என்னிடம் அவள் தோழி அடிக்கடி தன் ஆசிரியருக்கு ஒன்றும் தெரியாது என்றோ, கோபமானவர் என்றோ கிண்டலாகக் கூறுவதாகக் கூறினாள். ஓரிருமுறை அவள் தாயார் ஆசிரியர் பற்றி அவள் முன்னே விமர்சிப்பதைக் கவனித்துள்ளேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மீது குழந்தைகளுக்கு மரியாதை இருந்தால் தானே கற்றல் முழுமையாகும்? ஆசிரியர்களும் மனிதர்கள் தான், குறைகள் இருக்கலாம். அதைக் குழந்தைகள் முன் கிண்டலாக விமர்சித்தால், குழந்தைகள் எப்படி மரியாதை கற்றுக் கொள்வர்? குறை களைய என்ன வழி என்று யோசிப்பதே நல்வழி, குழந்தைகள் முன் விமர்சிப்பது அல்ல. ஆசிரியர் என்று அல்ல மரியாதை கொடுக்கப்பட வேண்டிய எவருக்குமே இது தகும். யோசிப்போமா?
கொஞ்சம் தனியாக சுவாசிக்கட்டுமே?
எல்.கே.ஜி செல்லும் என் மகள் பள்ளியில், பல நாட்களாகப் பெற்றோர் வகுப்பறை வரை அனுமதிக்கப்படுவர். இதனால் ஏற்பட்ட ஒரு சில குழப்பங்களைத் தவிர்க்க, குழந்தைகளை வாசலில் விட்டுச் செல்லக் கூறினர். வாசலில் இருந்து பத்தடி தூரத்தில் வகுப்பறைகள் ஆரம்பித்து விடும். பள்ளியில் தான் நாம் குழந்தைகளின் விரலை விட்டு கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுவோம். எனவே இதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளை வழி நடத்த ஆசிரியர்களும், ஆயாக்களும் நின்று கொண்டுதான் இருக்ககின்றனர். என்றாலும் சிலர் வந்து போடும் கூச்சல் இருக்கின்றதே!!!! ஒவ்வொரு குழந்தையையும் விரல் பிடித்து வகுப்பறையில் விட வேண்டும் என்றால், என்று தான் அவர்களை சுவாசிக்க விடப்போகிறோம்?
விதிகளை மதிப்போமா?
என் பெண்ணிற்கு அப்பொழுத் எட்டு வயது. பூங்கா சென்றிருந்தோம். சில பெரியவர்கள் தங்கள் சின்ன புத்தியால் குழந்தைகளின் ஊஞ்சலில் ஆடுவார்கள். அதுவும் சிலர், அருகே ஏக்கத்துடன் நிற்கும் குழந்தைகளைக் கூட கவனியாது, கூறினாலும் கேட்காது ஆடுவார்கள். அப்படி ஒரு பூங்காவில், ஒரு சிறிய இராட்டினம் "6 வயதுக்குட்பட்டோர் மட்டும்" என்ற அறிவிப்புடன் இருந்தது. அவளுக்கு மிகவும் ஆசை, ஆனால் அறிவிப்பைக் கண்டவுடன் அவள் விலகி விட்டாள். "உனக்கு 2 வயது தான் அதிகம், தெரியாது ஏறிக் கொள்", என்றேன். அவள் மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு என்னை யோசிக்க வைத்தது. அறிவிப்பைக் காட்டி விதிகளை மதிக்க அவளுக்குப் புரிய வைக்க வேண்டிய நானே விதிகளை மிதிக்கக் கற்றுக் கொடுப்பது நியாயமா? ஊஞ்சலில் ஆடுவோரைக் குறை கூறும் தகுதி கூட இழந்து விடுகிறேன். இது போன்ற விஷயங்களிலும் சற்று கவனம் செலுத்தினால், நற்குணங்கள் என்றும் அவ்ர்களிடம் இருக்கும். அவளைப் பாராட்டினேன் விதிகளை மதித்ததற்கு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...
"வெயிலில் ஆடாது, கருத்து போய்டுவ...", இது என் குழந்தைகளிடம் எப்பொழுதாவது நான் கூறும் சொற்கள். இவை எனக்குத் தவறாகத் தெரியவில்லை, எனது தோழி கூறும்வரை. அவளது பிள்ளை நல்ல நிறம். வெயிலில் ஆடியதால் கருத்தாலும், "நீ கருத்துவிடுவாய்" என்று கூற அவள் விழையவில்லை. காரணம்... கருப்பு நல்ல நிறம் அல்ல என்ற எண்ணம் அவனுக்கு உருவாகக்கூடாது என்பதால். எனவே "நீ களைத்து விடுவாய்" என்பாளாம். ஆனால் அவள் பையன் அவளை மிஞ்சி விட்டான். "கருப்பா கூட ஆகுது... ஆனால் என்ன கருப்பும் நல்ல நிறம் தானே!!" என்றானாம். நிறம் பற்றிய தவறான எண்ணங்கள் உருவாகுவதைத் தவிருங்கள்.
ஒரு விசேஷத்துல 25 வயசு உறவுக்காரப்பொண்ணு
அழுதுகிட்டு இருந்துச்சு. “ஏம்மா! அழுவுறன்னு”
கேட்டேன். “எங்கம்மா திட்டிப்புட்டாங்க,
எல்லாம் உங்களாலத்தான்ன்னு” சொல்லவும்
”நாம் என்ன செஞ்சோம்னு!!” யோசிச்சுகிட்டு
இருக்கறப்ப அவங்க அம்மா அங்க வந்தாங்க.
“ஏன் திட்டினீங்க? என்னாலதான்னு வேற
சொல்றா!” அப்படின்னேன்.”இவளை அடிக்காம
விட்டேனேன்னு சந்தோஷப்படு! விசேஷ
வீட்டுல அம்பாரமா துணி துவைச்சு
காயவெச்சு கிடக்கு, மடிக்க ஆளில்லை.
வாடி மடிப்போம்னு கூப்பிட்டேன், வந்தா.
உம்புள்ளைங்களும் துணி மடிக்கறதைப்பாத்து
வந்து உக்காந்து மடிக்க ஆரம்பிச்சிருச்சு!!
இஸ்திரி போட்டமாதிரி அந்த ஆம்பளப்புள்ள்
சட்டை மடிக்குது. இதுக்கு பனியனை கூட
மடிக்கத் தெரியலை. வயசு ஆகுது 25.
இன்னும் துணி மடிக்க கூடத் தெரியலைன்னு
திட்டினேன். கோபம் வந்திருச்சாக்கும்!!!”
அப்படின்னு சொன்னார்.
இதுல அந்த பொண்ணோட தப்புன்னு (25 வயசுக்கும்
துணி மடிக்கத் தெரியாம இருக்கறது தப்புதான்னாலும்) சொல்வதை
விட அம்மா/அப்பாவோட தப்புன்னு சொல்வேன்.
என் உடல்நிலைக் காரணமாகவும், மாண்டிசோரி
பயிற்சியினாலும் பிள்ளைகளுக்கு துணி மடிக்க
சொல்லிக் கொடுத்திருக்கேன். சின்ன வயசுல
கைகள் வேலை செய்ய பழகாட்டி சோம்பேறித்தனம்
தான் வரும்.
துணி மடிக்கறது பெரியவங்க வேலை. அதுலயும்
குறிப்பா அது பெண்கள் டிபார்ட்மெண்டுன்னு மனசுல
ஆழமா பதிஞ்சு போச்சு. ஆனா இது சிறு பிராயத்திலேயே
கற்றுக்கொடுக்கப் படவேண்டிய விடயம்.
இந்த வாழ்க்கைக்கு உதவும் கல்வியின் உத்தேசமே
ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ” தன் கையே
தனக்குதவின்னு” வாழ கத்துக்கும். தன் தேவைகளை
தானே செஞ்சுக்க தெரியறதும் ஒரு கல்விதான்.
அப்படித்தான் அழகா வடிவமைச்சிருக்கார் மாண்டிசோரி
அம்மையார்.
துணி மடிப்பதும் ஒரு கலை. அழகா இஸ்திரி
போட்டா மாதிரி மடிச்சு அலமாரில வெச்சா
அழகா இருக்கும். இடத்தையும் அடைக்காது.
சட்டை மடிப்பது இப்படித்தான்:
துண்டு, நாப்கின் போன்றவற்றை நான்கு ஓரங்களும்
சமமாக சேர்த்து அழகா மடிச்சு வைக்கணும்.
வெயிலில் காயப்போடும்பொழுது சாயம் போகும்
என்பதால் கெட்ட பக்கம்(உல்டா சைடுன்னு சொல்வேன்)
வெயிலில் படும் படி போட்டுவிட்டு அதை அப்படியே
மடித்து வைப்பார்கள் சரி. எடுத்து சரியான பக்கத்துக்குத்
திருப்பி அழகா மடிக்கணும். இதை பிள்ளைகளுக்கு
சொல்லிக் கொடுக்கணும்.
நான் அன்றாடம் துணி மடிக்கும்பொழுது,” எனக்கு
ஹெல்ப் செய் கண்ணா!”ன்னு கூப்பிட்டு உக்காரவெச்சு
துணி மடிக்கச் சொல்லித் தரலாம்.
(இங்க வா! உனக்குத் துணி மடிக்கச் சொல்லித் தர்றேன்.
நாளைக்கு நீ கஷ்டப்படக்கூடாது அப்படின்னு சொன்னா
வரவே மாட்டாங்க, கத்துக்கவும் மாட்டாங்க!!!)
நாப்கின்கள் மடிப்பது தான் பள்ளியில் ஆரம்பப் பாடம்.
ஹோட்டல்களில் வகை வகையாக நாப்கின்களை
மடித்து வைத்திருப்பார்கள். ஒரிகமி மாதிரி
இதுவும் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள்
ச்ந்தோஷமாக கற்றுக்கொள்வார்கள்.
இந்த மடிக்கும் பயிற்சியின் பயன்கள்:
1. தன்னம்பிக்கை பிறக்கிறது.
2. நாப்கின்களை மடித்து பழகினால் பின்னாளில்
துணிகளை மடிக்க ஏதுவாகிறது.
3.முக்கியமா கண் பார்த்து கைகள் செய்யும்
பயிற்சி. இது வாழ்க்கைக்கு மிக முக்கியமான
பயிற்சி. ( என் அம்மாம்மா அடிக்கடி சொல்வது
கண்ணு பார்க்கணும், கை செய்யணும். சொல்லிக்
கொடுத்து செஞ்சா மண்டைல ஏறாது!!!)
(விடுமுறையில் எப்படி மேய்ப்பது? சம்மர் கேம்பில்
போடலாமான்னு யோசிப்பதை விட இந்தச்
சின்ன சின்ன விஷயங்களை வீட்டில்
கற்றுக் கொடுக்கலாமே!!)
நம்ப சக பதிவர் கவிநயா ஒரு கமெண்ட் போட்டிருந்தாங்க.
உங்க லிங்க்கை இங்கே பார்த்தேன் - "குட்... Blogs" - க்குக் கீழ்...
http://youthful.vikatan.com/youth/index.asp
:) வாழ்த்துகள்.
ஆஹான்னு அந்த லிங்கை பிடிச்சு போய் பார்த்தேன்.
இளமை விகடனில் குட் பிளாக் எனும் வரிசையில்
வாழ்க்கைக்கு உதவும் கல்வி:5 இதன் லிங்கை
கொடுத்திருக்காங்க.
விகடனுக்கும், அதை நமக்குத் தெரிவித்த
கவிநயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்
6 வருடம் முன்பு அம்ருதாவின் ப்ரீஸ்கூல் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்
வாங்க பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆசிரியர்
மிக கணிவாக பேசினார்.
”உங்க பொண்ணு புது இடத்தில நல்லா
செட்டாகிட்டா” இந்தாங்க அவ ரிப்போர்ட்.
இதுல சில இடங்கள் பிளாங்கா இருக்கும்.
அவைகள் அம்ருதா கற்றுக்கொள்ள வேண்டியது.
இந்த பரிமாணம் மெல்ல நிகளும், கவலைப்படாதீர்கள்”
என்றார். ரிப்போர்ட் பார்த்ததில் DRESSING, UNDRESSING
SKILL - NIL என இருந்தது.
அந்த 21/2 வயதில் அது கற்றுக்கொடுக்க வேண்டுமென
தோணவில்லை.( மாண்டிசோரி பயிற்சி அதற்கப்புறம்தான்
செய்தேன்.)சொல்லிக்கொடுத்ததில்
1 மாதத்தில் அம்ருதா தன் உடையை தானே
கழற்ற, போடக் கற்றுக்கொண்டாள்.
பல வீடுகளில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு கூட
வீட்டுப் பெரியவர்கள் தான் உடை போட்டுவிடுவார்கள்.
(சரி சரி, ரங்குவுக்கு சட்டை பொத்தான் போட்டதெல்லாம்
ரொமான்ஸ் கணக்குல போகும். அதெல்லாம் இங்க
சேத்துக்காதீங்க :)) )
இப்படி பிள்ளைகள் அந்தந்த வளர்ச்சிக்கு உரியவைகளைக்
கற்றுக்கொள்ளாமல் போவதை வளர்ச்சி குறைவு என
மாண்டிசோரி கல்வியில் சொல்கிறார்கள்.
தனது சட்டையை கழட்டி தானே போட்டுக்கொள்ள
பழக்க வேண்டும். தனது உடையலங்காரத்தை தானே
செய்துகொள்ள பழக்க வேண்டும்.
“பிள்ளை பெருசானா தானா கத்துக்க போவுது!
அதுக்கெதுக்கு இப்பவே கஷ்டப்படுத்தணும்!!!”
”வீட்டுல சும்மா தான(!!) இருக்கா உங்கம்மா!
குழந்தைக்கு ட்ரெஸ் போட்டுவிட்டா என்னாவாம்”
இப்படி வீட்டுல இருக்கற பெரியவங்க
சொல்வாங்க.
செல்லம் கொடுத்து கெடுக்கன்னே வீட்டுல ஒரு கூட்டம்
இருக்கும். அதையெல்லாம் புறம் தள்ளி குழந்தைக்கு
சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மாண்டிசோரிக் கல்வியில் இந்த சட்டங்களை
வைத்து பிள்ளைகளுக்கு பட்டன் போட,
முடிச்சு போட, பெல்ட் பக்கிள்ஸ் போட
சொல்லிக்கொடுப்போம்
இது சொல்லிக்கொடுத்த பிள்ளைகள் தன்
வேலையை தானே செய்துகொள்ளப் பழக்கப்படுவார்கள்
என்பதோடு கைகளுக்கு வேலை, சிந்தனை சக்தி,
செயல்திறன் ஆகியவைகளும் அதிகமாகும்.
HAND AND EYE CO ORDINATION எனப்படும் கண்கள்
பார்த்து கைகள் செய்வது இந்த பயிற்சியில்
கிடைக்கிறது
காசு கொட்டி சாமன் வாங்குவாங்க. ஆனா அதோட
நிலமை இது தான்!!:(
கண்ணாடி மாதிரி பளிச்சுன்னு வெச்சுக்க
ஆசைதான் அப்படின்னு சிலர் வேக்யுவம்
க்ளீனர் வாங்கி அது மேலயும் தூசி படிஞ்சிருக்கும்.
தூசி தட்டுறதுன்னு நம்ம ஊர்ல சொல்லி
தூசியை தட்டி இன்னும் கொஞ்சம் தும்மல்
வரவெச்சிடுவாங்க.
உண்மையில் தூசிகளை தட்டக்கூடாது.
துணி அல்லது டஸ்டர் கொண்டு துடைத்து
எடுக்கவேண்டும். அப்பொழுதுதான் காற்றில்
பரவாது.
முறையா தூசித் தட்டறது சின்ன வயசுல
கத்துக்கொடுக்காட்டி நிலமை இப்படி ஆயிடும்!! :))
ஹோட்டல்களில் டேபிள் துடைப்பார்களே அது மாதிரி
மெல்ல அழுந்த துடைத்து தூசி எடுக்கவேண்டும்.
இதுவும் மாண்டிசோரி கல்வியில் இருக்கிறது.
பெருக்குவதனால் ஏற்படும் பயன்கள்(அந்த
பயிற்சியினால் ஏற்படும்)தான் டஸ்டிங்கிற்கும்.
இளமையிலேயே இதைப் பயின்றால்
அந்தப் பி்ள்ளை தன் வீட்டை சுத்தமாக
வைத்துக்கொள்ளும்.
புதுகைத் தென்றல்
மாண்டிசோரி பயிற்சி முடித்து பள்ளியில் ட்ரெயினிங்
எடுத்துக்கொண்டிருந்த நேரம். அந்தப் பள்ளியில்
உணவு இடைவேளையின் போது
ஒரு காட்சி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடவே
நான் பள்ளி செல்லும் போது அப்பா அடித்த டயலாக்கும்
ஞாபகம் வந்தது :)) )
நான் படித்தது ராணியார் அரசினர் பள்ளியில்.
எங்கள் வகுப்பறையை நாங்களே பெருக்கி
வெளியே வைத்தால் பச்சையம்மா வந்து
குப்பைகளை எடுத்துச் செல்வார்.
எங்கள் குரூப் முறையின் போது சீ்க்கிரமே
பள்ளிக்குச் சென்று பெருக்குவோம்.
“படிக்கப்போறியா! பெருக்கப்போறியான்னே
புரியலை!!” இதுதான் அவரின் டயலாக்.
உணவு இடைவேளையின் பொழுது நான்
கண்ட காட்சி இடைவேளைக்கு 5 நிமிடங்கள்
முன்பாக அந்த வகுப்பில் ஒரு மாணவன் கையில்
துடைப்பம், மற்றொரு மாணவன் கையில்
டஸ்ட் பேன். அவர்கள் தான் சுத்தம் செய்ய
வேண்டும். E.P.L பற்றி படித்திருந்தாலும்
அதை பிள்ளைகளுக்கு பயிற்சியாக தந்ததை
அதைப் பிள்ளைகளும் செய்ததை பார்த்து
ஆச்சரியப்பட்டேன். (நானும் என் வகுப்பு
மாணாக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன்)
பெருக்குதல்: SWEEPING
ஒரு பெரிய வட்டம் வரைந்து அதற்குள் குப்பையைச்
சேர்த்து அதைப் பெருக்கி குப்பையை அள்ளி
குப்பைத் தொட்டியில் போட வைப்பதை விட
தான் உணவு உண்ட பின் பிள்ளைகளைப்
பழக்குவது சுலபமாக இருந்தது.
21/2 வயது முதல் இந்தப் பயிற்சியை
கொடுக்கலாம்.
பெருக்கச் செய்வதால் என்னாங்க பலன்??
இரு்க்குங்க. சுற்றுப்புறச்சூழல், சுகாதரம் பற்றிய அறிவு
கிடைக்கிறது.
பெருக்கி, அள்ளி தொட்டியில் போடுதல் போன்ற
செயல்கள் கவனத்தை அதிகமாக்குகிறது.
செயல்திறனை அதிகரிக்கிறது.
உடலுக்கு அசைவு, சின்னச் சின்ன உடற்பயிற்சி
ஏற்படுகிறது.
பெருக்கி, அள்ளி தொட்டியில் போடுதல் போன்ற
செயல்களில் இருக்கும் தொடர்ச்சியை பிள்ளைகள்
புரிந்துகொள்ள முடியும்.
தன் வேலையை தானே செய்து கொள்ளும்
சுயத்தன்மை உண்டாகுகிறது.
கைகள் பிற்காலத்தில் வேலைக்கு பழக்கப்படுகின்றன.
சரி ஒரு சின்ன டெஸ்ட். மாண்டிசோரி
பயிற்சி நம் ஐம்புலன்களையும் வைத்துத் தான்.
பெருக்கும் இந்தப் பயிற்சியில் எந்தெந்த
புலன்கள் வேலை செய்கின்றன? சொல்லுங்க
பார்ப்போம். பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க.
என் அம்மம்மா அடிக்கடி சொல்லும் விஷயம்
குப்பையை பொறுக்கினாலும் தி பெஸ்ட்
குப்பை பொறுக்கி நான்தான் என நினைத்து
வேலை செய்தால் சுத்தமாக செய்வாய் என்பார்.
குப்பை பொறுக்குவது என்றால் என் நினைவுக்கு
உடன் வருவது முனிசிபாலிட்டி குப்பை பொறுக்குபவர்தான்.
அம்மா சில சமயங்களில் காய்கறி வெட்டிய
குப்பைகளைத் தம்பியை(அப்ப ரொம்ப குட்டிப் பையன்)
எடுத்து குப்பைத் தொட்டியில் போடச்சொல்வார்.
முறத்தை போய் எடுத்து வர சோம்பி தன்
கையிலேயே கொண்டு போய் போடுவான்.
நாங்கள் வந்து பார்க்கும் பொழுது சில
குப்பை அங்கேயே இருக்கும்! :)
அம்மா உடன்,” உனக்கு முனிசிபாலிட்டியில்
குப்பை பொறுக்கற வேலைக்கு சேரணுமா!”
என்பார். கோபப்பட்ட தம்பிக்கு ஒரு நாள்
குப்பை அள்பவர் எப்படி அரைகுறையாக
வேலை செய்கிறார் என்பதைக் காட்ட
அன்று முதல் சுத்தமாக செய்வான்.
குப்பை பொறுக்கும் தன் வேலையைக் கூட
சுத்தமாக செய்யாதது அவரின் தவறு
மட்டுமல்ல அந்த வேலையை முறையாகச்
செய்ய பழக்கப் படாததால் தான் இந்தப்
பிரச்சினை. நம்ம பிள்ளைகளுக்கு நல்ல
பயிற்சி கொடுத்தால் நம் வீட்டைச் சுத்தமாக
வைத்திருப்பார்கள்.
அது எப்படின்னு பாப்போம்.
இந்த மாதிரி சின்ன சைஸ் டஸ்ட் பான் ஒண்ணு
பசங்களுக்காக வாங்கிக் கொடுத்திடுங்க. அதை வெச்சு
குப்பைகளை எடுத்து குப்பைத்தொட்டியில் போடச்
சொல்லி பழக்கினால் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக
வீதியில் கூட குப்பை போடாத சிறந்த குடிமகனாக
பிள்ளை வளரும்.
இந்த நர்சரி ரைம் நல்லா இருக்கும். அதைப் பாடிகிட்டே
குப்பையை எடுத்து போடச் சொல்லுங்க. பாடிகிட்டே
அழகா செய்வாங்க.
என் தோழி தன் பிள்ளைகளுடன் என்னைப்பார்க்க வந்திருந்த
பொழுது அவள் மகன் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு கவரைப் போட சுத்தி
குப்பைத் தொட்டி ஏதும் இல்லாததால் அம்மாவிடம்
அந்தக் கவரை கொடுத்து, ”வீட்டுக்கு போனதும் குப்பையில்
போடுறேன் அம்மா!” என்ற பொழுது ஆச்சரியமாக
பார்த்தேன். (இது நடந்து 10 வருடங்கள் ஆகிறது)
இன்றும் என் பிள்ளைகள் வீதியில் குப்பை போடாமல்
கவனமாக இருக்கிறேன்.
அதென்னவோ பல வீடுகளில் நிலமை இதுதான்.
அந்த வீட்டு தங்கமணி இப்படித்தான் பாடுவாங்க.
“அழைப்பு மணி எந்தன் வீட்டில் கேட்டால்
அடுக்களையில் இருந்தாலும்
ஓடி நாந்தான் வந்து பார்ப்பேன்”
ஓ புரிஞ்சிடுச்சா! கரெக்ட்
நாம் பார்க்கப்போகும் பாடம் ANSWERING THE CALL.
அழைப்புக்கு பதில் சொல்லுதல்.
(முக்கியமான விஷயம். இந்த பாடத்தை
எல்லாம் பிள்ளைகளிடம் விளையாட்டா
கொண்டு போகணும்.)
வா கண்ணா நாம் இப்ப ஒரு விளையாட்டு
விளையாடலாம்னு சொல்லி ஆரம்பிங்க.
தேவையான பொருட்கள்:
மணி.
கதவுக்கு பின்னால் நாம் நின்று கொள்ள வேண்டும்.
குழந்தையிடம் மணியைக்கொடுத்து அடிக்கச் சொல்லவும்.
மணியோசை கேட்டதும் மெல்லக் கதவைத் திறந்து
இன்முகத்தோடு,”யாரு வந்திருக்காங்க?” என் கேட்க
வேண்டும்.
இப்பொழுது பிள்ளை கதவுக்கு பின்னால் மணி்
நம் கையில்.
அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இருந்தால்
அவர்களையும் சேர்த்துக்கொண்டு விளையாடலாம்.
கதவை தாளிடக்கூடாது என்று சொல்ல மறக்காதீர்கள்!
சரி இந்த அழைப்புக்கு பதில் சொல்லுதலால் என்ன
பயன்??
1. குழந்தைக்கு கேட்கும் திறன் அதிகமாகிறது.
கேட்கும் தன்மையை இங்கே உபயோகப் படுத்துகிறோம்.
2. விருந்தோம்பலை, விருந்தினரை வரவேற்றலை
சிறு வயதிலேயே விதைத்துவிடுகிறோம்.
3. கதவைத் திறக்க கைகளை உபயோகிப்பதால்
கைகளை உபயோகிக்கும் திறனை அதிகமாக்குகிறது.
4. கதவுக்கு பின்னே இருந்து வருதல் போன்ற
செய்கைகளால் சின்னச் சின்ன உடற்பயிற்சிக்ள்
செய்யப்படுகிறது.
5.கை கால்களின் உந்து சக்தி (MOTOR ACTIVITY)
அதிகமாகிறது
இப்படி பழகிய பிள்ளை அழைப்பு மணி
அடித்தால் அடுத்தவர் வந்து கதவு
திறக்கட்டும் என்று காத்திராமல்
இன்முகத்தோடு கதவைத் திறந்து
பாராட்டைப் பெறும்.
”ஏட்டுச் சுரைககாய் கறிக்கு உதவாது” இது நம்
முன்னோர்களின் வாக்கு. சத்தியாமான் உண்மை இது.
வெறும் படிப்பறிவு மட்டும் அறிவாகிவிடாது.
அதை செய்ல்படுத்தும் முறையும் அத்துடன்
பட்டறிவும் சேர்ந்தால்தான் முழுமையான அறிவுத்திறன்.
மாண்டிசோரி கல்வியில் எண்ணும் எழுத்தும் மட்டும்
கற்றால் போதும் என்ற நிலை இல்லை. அன்றாட
வாழ்க்கைக்கு தேவையான செய்ல்களிலும் பிள்ளைகள்
கற்று அதில் தேர்ச்சி பெறுவதைத்தான் முழுமையான
கல்வி என்கிறோம்.
வளர்ந்த பலர் தான் படுத்த படுக்கையை மடிக்க
மாட்டார்கள், சாப்பிடத்தட்டை கழுவ மாட்டார்கள்,
வீடு பெறுக்குதல் மகா குற்றம், தன் சட்டையின்
பொத்தான் போனால் கூட சம்சாரத்தைத்தான்
அழைப்பார்கள். இந்த நிலைக்கு காரணம்
அவர்கள் சிறிய வயதில் முறையான பயிற்சி
பெறாததுதான். அது அவர்களின் குற்றமல்ல,
கற்றுக்கொடுக்காத பெற்றோரின் குற்றம்.
அந்த நிலை வருங்கால சந்ததியினருக்கு
வரக்கூடாது. அனைவருக்கும் மாண்டிசோரி
கல்வி சாத்தியமில்லை. அதனால் உங்கள்
வீட்டுப் பிள்ளைகளுக்கு உதவும் வகையில்
exercises of Practical Life
தொடர் பதிவுகளாக வரவிருக்கின்றது.
என் குழந்தை பெரியவனாகிவிட்டான்/ள் அதனால்
இப்போது என்ன செய்ய? என்று நினைக்காதீர்கள்.
கற்றுக்கொள்ள வயது ஒரு தடை அல்ல.
பிள்ளைகளுக்கு படிப்போடு சின்னச் சின்ன
வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்குதல் நல்லது
என உளவியலார்கள் கூறுகிறார்கள்.
வாழ்க்கைக்கு உதவும் கல்வி தொடர்
அமர்க்களமாக ஆரம்ப மாகிறது.
exercises of Practical Life பற்றி மாண்டிசோரி
அம்மையார் தனது புத்தகத்தில் கூறியிருக்கும்
வார்த்தைகள் இவை:
"No one can be free if he is not independent...."
The indirect aims of the Practical Life exercises is to meet the child's needs, to encourage and facilitate development, and to facilitate the child's adaptation to the world.
" If teaching is to be effective with young children, it must assist them to advance on the way to independence. It must initiate them into those kinds of activities, which they can perform themselves. We must help them to learn how to walk without assistance, to run, to go up and down the stairs, to pick up fallen objects, to dress and undress, to wash themselves, to express their needs, and to attempt to satisfy their desires through their own efforts. All this is part of an education for independence. "....(The Discovery of the Child, MM, pg. 56~57)
Exercises for practical life are simple Montessori activities which adults perform daily in order to maintain control of the environment in which they live and work. The child is influenced by the adult's daily routine and activities. By imitating the activities, it is the child's way of adapting to the world around him and constructing reality.
கான்பெரா: குழந்தைகள் சினிமா பார்த்தால் அவர்களது கற்கும் திறன் அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய டாக்டர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் கற்கும் திறன் மற்றும் படங்கள் இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஆஸ்திரேலிய டாக்டர் குழு ஒன்று பள்ளி குழந்தைகளிடையே ஆராய்ச்சி மேற்கொண்டது.
அதில் ஒரே வகுப்பில் உள்ள குழந்தைகள் 17 பேர் ஹாரி பாட்டர் படம் தங்களுக்கு பிடித்த படம் என்றும் அதை 10க்கும் மேற்பட்டமுறை பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளனர். மற்ற மாணவர்களை விட இவர்களிடம் கற்கும் திறன் அதிகமிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் ஆராய்ச்சிக்காக ஒரு குழந்தையின் வீட்டில் 90 நிமிடம் ஓடும் படம் ஒன்றை இரண்டு குழந்தைகளாக உட்கார்ந்து பார்க்க செய்தனர்.
டாக்டர் பிரைன் பின்ச் கூறுகையில்,
படத்தின் வசனம், கதாபாத்திரங்கள் ஆகியவற்றை குழந்தைகள் உற்று கவனிக்கின்றன. அதிலிருந்து அவர்கள் கதையின் ஆழத்தை உணர்கின்றனர்.
ஹாரிபாட்டர் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல அவரும் சாதாரண மாணவர் தான். அவர் வகுப்பில் முதல் மாணவரும் கிடையாது என்பதை உணர்ந்துள்ளனர்.
படம் பார்க்கும் போது அவர்கள் மிமிக்கிரி செய்வது, சைகை செய்வது போன்றவை அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் படத்தில் வசனம்மூலம் சொல்லப்படாத உணர்ச்சிபூர்வமான விஷயங்களையும் அவர்கள் எளிதாக புரிந்து கொள்கின்றனர் என்றார் டாக்டர் பின்ச்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்