சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது.
ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு “அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை” என எண்ண வைத்துவிடும்.
இதையே ஜான் ஹோல்ட் என்பவர் “ பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார். குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
பதில் தெரியாத இடத்தில் “தெரியாது” என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.
முறை.1.
“அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்” என்று கூறலாம்.
பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.
முறை. 2.
“இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்” என்று சொல்லலாம்.
பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.
முறை.3.
குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், “நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்” எனலாம்.
பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.
முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து “இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது” எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து “இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா” என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.
மரு. இரா. வே. விசயக்குமார்.
vandhaan vadivelan
1 year ago
4 comments:
அடப் போங்கப்பா மூளையக் கசக்கி கசக்கி பதிவு போட்டாலும், படிச்சிட்டு(?) அலுங்காம ஒரு விமர்சனம் கூடப் போடாம போயிடறீங்க. அதனால இனி நானே விமர்சனமும் எழுதிக்கிறேன்.
நன்றி.
விசயக்குமார்!
வலைப்பதிவில் ஒரு மறுமொழி என்பது குறைந்தபட்சம் நூறு பேர் பார்த்தபின் வருவது ("மீ த ஃபஸ்டு" வகையறாக்களை விடுங்கள்!) எனவே அதெல்லாம் கண்டுக்காதிங்க! தொடர்ந்து எழுதுங்க! கொஞ்ச நாளைக்கு பிறகு (ஒரு ஆறு அல்லது எட்டு மாதங்களுக்குப் பிறகு) மெல்ல நிலை மாறும்! மட்டுமல்லாமல் மறுமொழிக்காக எழுதுவதை விட நமக்காகவே எழுதுவோம்!
தொடர்ந்து எழுதுங்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
அன்பு விசயக்குமார்!
பதிவ எழுதுரது மட்டும் போதாது.அதை தமிழ்மணத்தில் உடனே இணைக்கவும் வேண்டும். நான் என்னுடைய பதிவை தமிழ்மணத்தில் இணைத்த போது உங்க பதிவின் தலைப்பும் இணைப்பிற்காக வந்தது. இப்போது தான் உங்களின் இந்தப் பதிவையும் தமிழ்மணத்தில் இணைத்தேன். அதனால் தான் உங்களுக்கு பின்னூட்டம் வரவில்லை.தமிழ்மணத்தில் இணைத்தால் தான் பலருக்கும் நம்முடைய பதிவைப் படிக்கும் வாய்ப்பும், பின்னூட்டம் இடும் வாய்ப்பும் கிடைக்கும்.
வெங்கட்ராமன் மற்றும் அப்துல்லா அவர்களின் அறிவுரைகளுக்கு நன்றி
Post a Comment