பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

டீவியில இதைப் பத்தி பாத்ததும் அதிர்ச்சியாயிடுச்சு.


பல பேரு வீட்டுல இதெல்லாம் அன்றாடம்
உபயோகத்துல இருக்கறதாச்சே! உடனே
எல்லோருக்கும் சொல்லிப்புடணும்னுதான் இந்தப் பதிவு.


Appyfizz - இதைக் குடிக்கக்கூடாதாம். இதில்
கேன்சர் வரவைக்கக்கூடிய சமாசாரங்கள்
நிறைய இருக்காம்.!




இது மிக முக்கியம்:

நூடி்ல்ஸை விட பயங்கரம். டீவியில் இந்தக் குர்க்குரேவை
எரித்துக்காட்டினார்கள். இதில் பிளாஸ்டிக் உருகுவது தெரிந்தது.
ஆதாரம்: டீவி 9, டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இந்த மாதிரி பாக்கெட்டுகளில் வரும் எந்த வித
உணவுப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு
வாங்கிக் கொடுக்காதீர்கள். (இதையெல்லாம் படிச்சிட்டும்
பெரியவங்க வாங்கி சாப்பிடுவாங்களா? என்ன?)





மெந்தோஸ்:

பெப்ஸி/ கோக் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு இதை வாயில் போட்டால்
சிவலோக ப்ராப்திதானாம். சயனைடாக மாறிவிடுகிறதாம்.
ஜாக்கிரதை.




சிலருக்கு அதென்னவோ ஒரு மைண்ட் செட். காலையில் குளிச்சதும்
காதை கொடைஞ்சே ஆகணும். தேவையே இல்லீங்க.
காதுகளில் குறும்பு சேரும்போது மட்டும் பட்ஸ் கொண்டு
சுத்தம் செஞ்சா போதும்.

இயர் பட்ஸ் வாங்கும்போது ரொம்ப கவனம் தேவை:

ரோடோரத்தில் சீப்பா கிடைக்குதுன்னு வாங்கினீங்கன்னா
Herpes Zoster Oticus
(a viral infection of the inner, middle, and external ear)
இந்த நோய்க்கு நீங்கதாங்க முதல் விருந்தாளி.

ரோட்டோரோத்தில் விலை குறைவாக விற்கப்படும்
பட்ஸ்கள் மருத்துவமனைக் கழிவு பஞ்சுகளை
சேகரித்து சுத்தம் செய்து, ப்ளீச் செய்து பட்ஸ்
தயாரித்து விற்கிறார்கள். இதனால்தான் மேலே
சொன்ன புது வியாதி வருமாம்.

அப்படியே உங்களுக்கு காது குடைஞ்சே ஆகணும்னா
கண்டிப்பா ப்ராண்டட் பட்ஸ்களை வாங்குங்க.





அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க எல்லோத்துக்கும்
இந்த விசயத்தை சொல்லுங்க.

இமெயில் மூலமா கிடைச்ச விசயம் இது.
இதை நான் நம்பாம இருந்தப்பத்தான் டீவியில்
பாத்தேன். உடன் பதிவா போட்டுட்டேன்.

இதையும் படிங்க:

Message From Gautham Mukkavilli - Managing Director FritoLay India

அப்போது தான் கவனித்தான்.

ஆச்சர்யம்.. அங்கே யாரது அதே நீல வண்ண முகம்.. மயில் இறகு, கொண்டையில். அருகில் ஓடினான்.

"சாமி! சாமி!!"

அந்த உருவம் நின்றது..


"நீங்க யாரு சாமி? .. நீங்க தான் கடவுளா? உங்களை அடிக்கடி எனக்குள்ளே பார்த்து இருக்கேன்."

"கடவுளா? நானா? எனக்குத் தெரியாது! என்னை எல்லாரும் கண்ணன் என்றும் கிருஷ்ணன் என்றும் சொல்வார்கள்"

முகத்தில் மெல்லிய புன்னகை இழைந்தோடியது. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது..

"அப்ப நீங்க கடவுள் இல்லையா?"

மறுபடி புன்னகை.

"தெரியாதப்பா... கடவுள் எல்லாரிடமும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.. அப்படிப் பார்த்தால்.. நீயும் கடவுள்தான்; நானும் கடவுள்தான்"

"என்ன சாமி, அப்ப நான் கூட கடவுளா? அப்ப சாமி சிலை எல்லாம் எதுக்கு?"

"அது தன்னை அறியாதவர்களுக்கு."

"எப்படி என்னை நானே தெரிஞ்சிக்கிறது?"

"தியானம்.. நீ தினமும் காலையில் கண்மூடி செய்வாயே அது. அதை செம்மைபட செய்தால் உன்னில் கடவுளை உணரலாம் அதற்கு மனது கட்டுப்படவேண்டும்."

"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

"புலால் உணவைக் குறை. மனதுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. மாமிச உணவு மனதை அலைபாயச் செய்யும்"

"தியானம் செய்ய எதாவது விதிமுறைகள் இருக்கா சாமி?"

கண்ணன் சொல்லச் சொல்ல ஏகலைவன் வாய்பொத்திக் கேட்டுகொண்டு இருந்தான். மறுபடி ஒரு சிறு கீதோபதேசம் அரங்கேறியது.

"என் கட்டை விரல் குரு கேக்கும்போது உன்னைக் கேட்டேனே கொடுக்கவான்னுட்டு, அது இல்லாம எனக்கு எவ்வளோ பிரச்சினை.. சரியா வேட்டை ஆட முடியலை. நீ வேண்டாம்னு சொல்லியிருக்கக் கூடாதா"

ஏகலைவன் ஆதங்கத்துடன் கேட்டான்

கண்ணன் கண் சிமிட்டினான்..

"நான் வேண்டாம் என சொல்லியிருந்தால் மறுத்திருப்பாயா?"

ஏகலைவன் மௌனித்தான்.

என்னவாயிருந்தாலும், யாராக இருந்தாலும் குருவின் கட்டளையை அவன் நிறைவேற்றி இருப்பான். அது நிச்சயம்.

"சரி சாமி அது கெடக்குது, என் குரு சாமி செய்ஞ்சது சரியா"

கண்ணன் மௌனித்தான்; தன் நினைவைப் பின்னோக்கிச் செலுத்தினான். சகுனி தன்னுள்ளே குமைந்து கொண்டு இருந்த காட்சி தெரிந்தது. சகுனியின் வார்த்தைகளும் நினைவில் வந்தது.

"இந்த துரோணர் சும்மா இருக்கமாட்டாமல் அவன் கட்டை விரலைக் காணிக்கையாய் கேட்டு விட்டார். அர்ஜுனனுக்கு சரியான எதிரி கிடைத்தான் என நினைத்திருந்தேன்.. எல்லாம் பாழாய்ப் போனது"

கண்ணனுக்கும் சகுனிக்கும் மட்டும் தெரிந்த உண்மை இது. இதைக் கண்ணன் சொல்ல விரும்பவில்லை.

"நடந்தது, நடப்பது நடக்கப்போவது எல்லாம் நிச்சயிக்கப்பட்டது. எதுவும் யாராலும் மாற்ற முடியாது. நிகழ்வுகளின் நன்மை தீமை காலத்திற்கேற்றவாறு மாறுபடும். சரியும் தவறும் அந்த நேரத்துக்கேற்றவாறு மாறுபடும் இது உலக நியதி."


ஏகலைவன் மகன் குறுக்கிட்டான்.

"சாமி, அம்பு வுட்டுக் கொல்லும் போது எல்லா உசுருகளுக்கும் வலிக்கும் தானே.. எல்லா உசுரும் சமம்னு நீங்க சொல்றீங்க .. அப்படின்ன விலங்குகளைக் கொல்றது பாவம் இல்லையா??"

கண்ணன் சிறுவனிடம் திரும்பினான்.

"மகனே.. உணவுக்காகவும் தற்காப்புக்காவும் கொல்வதில் தவறில்லை. ஆனால்..."

சிறுவன் வெகு உன்னிப்பாக கவனித்தான்

"அதிகம் வதைக்கவிட்டுக் கொல்லக்கூடாது. அதுதான் பாவம்"

"சரி சாமி"

இருவரும் கண்ணன் காலடியில் வீழ்ந்து வணங்கினார்கள்..

"நாங்க வரோம் சாமி"

கண்ணன் எதோ நினைத்துச் சொன்னான்

"நான் போகிறேன்"

o o o

மறுநாளில் இருந்து ஏகலைவன் அந்த மரத்தடி விட்டு அதிகம் வருவதில்லை. மகனின் விற்பயிற்சி நேரம் மற்றும் உணவு நேரம் போக அந்த மரத்தடியே கதியாய் இருந்தான். புலால் உணவு அறவே துறந்திருந்தான். வேட்டைக்குp போவது எல்லாம் சிறுவன்தான்.

சிறுவனுக்கும் கண்ணன் மேல் ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு.. எங்கோ தேடி அலைந்து மயிற்பீலி கொண்டுவந்தான். கண்ணனைப் போலவே தலையில் சொருகிக்கொண்டான். வெகு நேரம் குளக்கரையில் தன் பிம்பத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்

அன்றும் அவன்தான் வேட்டைக்குச் சென்றது, ஒரு மானை துரத்தி கொண்டு வெகுதூரம் கானகத்தில் சென்றுவிட்டு இருந்தான். எல்லாம் முடித்து திரும்ப அந்திப்பொழுது ஆகி இருந்தது. அட இது என்ன புது மிருகம்.. சற்று நீல நிறமாய், காது சென்னிறமாய். அருகில் சென்று பார்க்கலாமா? அந்தி கருக்கிருட்டில் சரியாக எதுவும் தெரியவில்லை. வேண்டாம்.. அந்த மிருகம் பயந்து ஓடிவிடலாம் இல்லை கொடியமிருகமாய் இருந்து நம்மைத் தாக்கவும் செய்யலாம்.... அருகில் செல்ல சிறுவன் பயந்தான்.

நேராக தந்தையிடம் ஓடினான்.. தான் பார்த்ததை எடுத்துச் சொன்னான்.

"நீ இங்கேயே இரு!"

மகனுக்கு ஆணையிட்டு அவன் குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடந்தான். அதென்ன புது மிருகம்.. நமக்குத்தெரியாமல்... யோசித்துக்கொண்டே அந்த இடம் சேர்ந்தான்.

அய்யோ இது என்ன கொடுமை.. இங்கே சாய்ந்து கிடப்பது கண்ணனைப் போல் இருக்கிறதே.. நம் மகன் தெரியாமல் கொன்றிருப்பானோ? மனம் பதைத்தான். அருகில் சென்று உற்று நோக்கினான். மாலை முழுதும் மங்கி இருந்தது. பக்கத்தில் இருந்த சருகுகளை ஒன்று குவித்து.. இரு கற்களை உரசி நெருப்பு உண்டாக்கினான் வெளிச்சத்தில் நன்றாக ஆராய்ந்தான். தன் மகனாய் இருக்காது.. அவன்தான் கண்ணனை பார்த்திருக்கிறானே. அதுவும் இல்லாமல் இது வெகு ஆழமாய் பாய்ந்திருக்கிறது. சிறுவனால் இதை செய்திருக்க முடியாது. ஆனால் யார் கண்ணனைக் கொன்றிருப்பார்கள்.

அவனுள் போர்க்களக் காட்சி ஓடியது. பாரதப் போர் பற்றி அடிக்கடி நாடு சென்று திரும்புவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருந்தான், என்ன கொடூரமானவர்கள் இந்த மனிதர்கள். ஒரு சிறுவனிடம் பத்து பேர் சேர்ந்து கொண்டு போர் புரிவார்களா? நினைக்கையில் அந்த சிறுவன் மேல் அபரிதமான ஒரு மரியாதை தோன்றியது. தன் குருவைக் கொன்ற த்ருஷ்டதுய்மன் மேல் கோபம் வந்தது. என்ன மனிதன் இவன்? யோக நித்திரையில் அமர்ந்த ஒருவனை கொல்வது எத்தனை பாதகமான செயல் என்று.

கண்ணனைக் கொன்றது ஒருவேளை போர்களத்தில் தப்பிய எதிரிகள் வேலையாய் இருக்குமோ?

கண்கள் பனித்தன.. யாராய் இருந்தால் என்ன, என் கண்ணன் இனி இல்லை, கண்ணனைப் பார்த்து கொண்டே அழுது கொண்டு இருந்தான்.

"நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நிச்சயிக்கப்பட்டது. எதுவும் யாராலும் மாற்ற முடியாது."

கண்ணனின் உபதேசம் மனதில் வந்தது. மரணமும் தவிர்க்க முடியாதது. அது உரிய நேரத்தில் அனைவர்க்கும் வந்து சேரும். கண்ணன் உடலுக்கு வேண்டிய மரியாதையைச் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பினான்.

மனம் முழுக்க கண்ணனின் எண்ணம் மட்டுமே வியாபித்து இருந்தது.

அந்தி நேரத்தில் யாரோ ஒரு வேடன் ஏதோ ஒரு மானின் மேல் அம்பு எய்ததும், அது குறி தவறி மான் நின்றிருந்த இடத்தின் பின்னால் சற்றே மறைவாக படுத்து இருந்த கண்ணன் மேல் பாய்ந்த்ததும், எய்தவனுக்கும் தெரியாது.. அது பாவம் இவனுக்கும் தெரியாது.

o o o-

"என்னதுப்பா அந்த மிருகம்?"

ஏகலைவன் யோசித்தான். நேற்று கண்ட ஒருவன் இன்று இறந்து விட்டான் என்று சொல்வதா?.. இல்லை பொய் சொல்வதா? உண்மை சொன்னால் மகன் தாங்குவானா? கண்ணன் என்றால் மகனுக்கு ரொம்பp பிடிக்குமே? மெல்ல தெரிந்து கொள்வான்.. கண்ணன் சிந்தனை, இந்த உள்ளத்தை வேறு திசையில் திருப்பக்கூடாது.

"எனக்கு எதுவும் தெம்படலையே.. நீ எதைப் பார்த்தியோ என்னமோ.. போய்த் தூங்கு"

"ஆமாம் நீ தினமும் அந்த மரத்தடியில போய் தூங்குறியே.. வீட்ல தூங்கக் கூடாதா?"

"அது தூக்கம் இல்லையப்பா... அதன் பெயர் தியானம்.."

"அப்படின்னா ... "

ஏகலைவன் விவரிக்க தொடங்கினான். அந்தப் பிஞ்சு உள்ளம் மெல்ல மெல்ல அதை உள்வாங்கத் தொடங்கியது. ஈரக் களிமண்ணை போன்று மனதிருக்கும்போதே தேவையான வடிவத்தை வடிக்கவேண்டும். அது கடினப்பட்டு கல் போலானபின் ஏதும் நடக்காது. ஏகலைவன் சொல்லச் சொல்ல அவன் மகனின் மனம் சரியான வடிவமைப்புக்கு மாறத்துவங்கியது.

இதோ மற்றும் ஓர் நல்ல உள்ளத்தின் சந்ததி உருவாகிக் கொண்டு இருக்கிறது.


-=- J -=-

இளங்காலைப் பொழுது, மார்கழிக் குளிரிலும் வியர்வையில் குளித்த பசும்புற்கள். சற்றே அடர்ந்த காடு. ஆங்காங்கே பனங்கழி கொண்டு மரத்தினிடையிலும் இரவு நேரத்தில் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க மரத்தின் மேலும் கட்டப்பட்ட குடில்கள். காட்டுô புற்கள் கொண்டு வேயப்பட்ட கூரை. வெய்யில் காலத்திலும் மழை காலத்திலும் வெப்பமோ இல்லை குளிரோ அதிகம் தாக்காத வண்ணம் கட்டப்பட்டது. இயற்கையோடு இயைந்து வாழும் வேடுவர் குலம் வாழும் காடு.

"அப்பா! அப்பா!!"

தந்தையுடன் வேட்டைக்குச் சென்று கொண்டு இருந்த சிறுவன் குரல். இடையில் கட்டப்பட்ட மான் தோல். தோளில் அவன் வயதுக்கேற்றவாறு செய்யப்பட்ட வில் மற்றும் அம்பராத்தூளி.

"அங்க பாரேன் சாமி ஒருத்தர் உக்காந்து தூங்குறாங்க பகல்ல"

தந்தை சிறுவன் சுட்டிì காட்டிய இடத்தைப் பார்த்தார்.

ஒரு முனிவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். வெளுத்த தாடி, ஒட்டி உலர்ந்திருந்தாலும் ஆரோக்யமான உடல். முகத்தில் காணும் ஒருவித பிரகாசம் காணும் யாவரையும் வணங்க செய்யும் தோற்றம். "அவங்க தூங்கலை கண்ணு, அவங்க சாமி கும்புடுறாங்க வா போய் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்" அப்பா அவனை அழைத்து சென்றார்.

அவர் கண்விழிக்கும் வரை காத்திருந்தனர்

"ஏன் சாமி நீங்க கண்ணு மூடிட்டு என்ன பண்ணிங்க" சிறுவனின் கேள்வி

எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறுவனின் கண்களில் பளிச்சிட்டது. குவிந்த கை அவன் தந்தையை போலô பணிவு

"மகனே அதற்குப் பெயர் தியானம்.. கடவுளைச் சேரும் வழி"

"அப்படின்னா எனக்கும் சொல்லி தருவிங்களா சாமி?"

ஒரு முனிவர் ஆதரவாய் சிறுவனின் தலை தடவினார்.

"உன் ஆர்வத்திற்கு எதையும் நீ சீக்கிரமாகக் கற்று கொள்வாய்; இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்"

"அப்ப சாமி, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க"

வேடுவன் தன் மகனை அழைத்துìகொண்டு சொன்னார்

"கொஞ்சம் *பஞ்சாட்சரம் தாங்க சாமி. நாங்க கெளம்பறோம் சாமி"

*(பஞ்சாட்சரம் = விபூதி )
o o o

காலம் தன் கடமை மறக்கவில்லை. அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடங்கள் உருண்டோட சிறுவன் இப்போது இளம் காளை. வேடுவக் கூட்டம் கூட சற்று அதிகரித்திருந்தது.

"ஏகலைவா!". தந்தை அழைத்தார். சுற்றிலும் கவலை தோய்ந்த பல முகங்கள்.

"என்னப்பா?"

"எனக்கு.. வயசாய்டிச்சி.. இனிமே நீதான் என்னோட பொறுப்பெல்லாம் பார்த்துக்கனும்" மரணப்படுக்கையில் இருந்து கொண்டு அவன் தந்தை சொன்னார்.

"ஆனா எனக்கு எதுவுமே தெரியாதப்பா."

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்" தந்தையின் கடைசி வார்த்தை.

"சரிப்பா ஆன கடவுள் யாருப்பா?" அவன் சொன்னதைக் கேட்பதற்கு தந்தை உயிரோடு இல்லை. எல்லாம் முடிந்து விட்டது

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ஏகலைவன் தலைவன் பதவி வேண்டாம் என்று சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆகப்போகிறது.. ஊரெல்லாம் இதே பேச்சு

"ஏ புள்ளே, நம்ம தலைவரு பையன் ஏன் இப்படி இருக்குது.."

"அப்பா போன வருத்தம் புள்ளைக்கு இருக்காதா? எல்லாம் சரியாய்டும்.. நீ வா சாப்ட"

"நம்ம ஏகலைவன் பைத்தியம் மாதிரி திரியிறானே யாரு இனிமே தலைவரு?"

"அட நம்ம மருதப்பன் இருக்காருல்ல.."

"என்ன இருந்தாலும் இவருதாம்புள்ள வரணும்."

பல விமர்சனங்கள். ஏகலைவன் பித்தன் போல காடு மேடு எல்லாம் திரிந்தான். எதிர்வரும் எதையும் அறியவில்லை. யார் பேசியதையும் கேட்கவில்லை.

"கடவுளைக் கேளு, தானா எல்லாம் தெரியும்"

அப்பாவின் வார்தைகள் மட்டும் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் கடவுளை எப்படிப் பார்ப்பது?? எப்படிக் கேட்பது? அதுதான் புரியவில்லை.

"மரத்தடியில் உக்காந்திட்டு இருப்பாரே அந்த முனிவரைப் போய்ப் பார்த்தா என்ன?.."

மறுபடி கானகத்தை நோக்கி ஓடினான். முனிவரைத் தேடி அலைந்த்தான். அடடா அவரையும் காணலையே. அவர்கள் செய்தது போல நாமும் செய்தால் என்ன? அவர் இருந்த இடத்திலேயே கண்மூடி அமர்ந்து யோசித்தான்.

"அப்பாவின் பொறுப்பு மிகப் பெரியதாயிற்றே, அவர் பெரிய வேட்டைக்காரர்.. அவரை நம்பி பல குடும்பம் இருந்திச்சி.. இப்போ எல்லாம் நான் தானே பார்த்துக்கனும்.. எனக்கு அவ்வளவா வேட்டையாடத் தெரியாதே.. சே இந்த சாமி இங்க தானே இருந்தார், எங்க போனார் தெரியலை.. இருந்தா அவரையாவது கேக்கலாம்.. பல எண்ணங்கள் மனதுள் ஓட இன்னும் கண் மூடியே அமர்ந்திருந்தான்.

மனத்திற்க்கும் சுவாசத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. சுவாசம் கட்டுப்பட, சீரான மூச்சு மனதை கட்டுப்படுத்தும். கட்டுப்பட்ட மனதை தொடர்ந்து உற்று பார்க்க மனம் வெளி நினைவுகளில் இருந்து விடுபடும். வெளி நினைவுகள் விடுபட்டால் உள்ளே ஒரு அமைதி தோன்றும். குருவருள் இன்றி அது யாருக்கும் எளிதாக வராது. அவனுக்கு எந்த குருவின் உதவியும் இல்லாமல் தானாக வந்தது. அது கடவுளின் அருள். தான் தியானிப்பது தெரியாமலே தியானத்தில் ஆழ்ந்தான்.

அவன் எப்போது தன்னை மறந்தான், அவனுக்கே தெரியவில்லை. விழிப்பு வந்த போது பொழுது சாய்ந்து விட்டு இருந்த்தது. மனம் சற்று தெளிவாக இருப்பது அவனுக்கே புரிந்த்தது. ஏதோ ஒரு முகம் மட்டும் மனதில் வந்து போனது. அந்த முகம் தன்னை தலைமை ஏற்க சொன்னதாய் ஒர் உணர்வு இருந்தது அவனுக்கு. தினமும் அந்த இடத்தில் அமர்ந்து யோசிப்பது என முடிவு செய்தான். மெல்ல வீடு திரும்பினான்..

"எலே எங்க போன?.. இப்ப தான் ஊரு சனம் வந்து உன்னைத் தலைவரா தீர்மானமா முடிவு பண்ணிட்டு போனாங்க.. நீ பாட்டுக்கு நாளைக்கு எல்லார் முன்னாடியும் ஆவாதுன்னு சொல்லாதே.. இது பரம்பரை பரம்பரையா வர்றது. நீ மாத்திப்புடாதே.. அப்புறம் இந்தக் கிழவி சும்மா இருக்க மாட்டேன், ஆமாம்"

பாட்டியின் மிரட்டல் காதில் விழுந்தாலும் மனதில் விழவில்லை.

"சரி பாட்டி."

அவன் அறை நோக்கி சென்றான். அங்கே அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது எதோ ஒரு முகம் தெரிந்ததே.. யாருடையது.. சற்றே கரிய முகம் ஆனால் புன்னகையுடன் எளிதில் வசீகரிக்க கூடிய முகம்.. அந்தத் தலையில் கூட ஏதோ, ஆம்! மயில் இறகு இருந்தது.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அந்த முகத்தை நினைத்துக்கொண்டே உறங்கி விட்டான்.

ஏகலைவன் தலைவன் ஆகி இதோ பல மாதங்கள் ஆகி விட்டது. தந்தை சொல்லிக் கொடுத்த வில் பயிற்சி அவனுக்குப் போதாது போல் உணர்வு..

"எத்தனை பேர் என்னை நம்பிக்கினு இருக்கும் போது.. வெறும் வேட்டையாடறதுக்கா நானு? அதை இங்கு நெறைய பேர் செய்வாங்களே.. இவர்களைக் காப்பாத்த நான் நல்ல வில்லாளி ஆவணும். ஆனா யார் கிட்ட போய் கேட்கிறது? யார் சொல்லித் தருவாங்க... அடடா யோசிச்சிக்கினே ரொம்ப தூரம் வந்துட்டேன் போல் இருக்கிறது."

ஏகலைவன் திரும்ப எத்தனித்தான்..

நடுப்பகல், பசித்தது. எதிரே மாமரம் பொன்னிறத்தில் பழங்களுடன். அருகில் சென்று சில பழங்களை பறித்துச் சாப்பிட்டான். அந்த மரத்தின் பழம் ஓரளவு பசி தீர்த்தது.. அட இதென்ன ஆச்சர்யம்.. மரத்தின் அத்தனை இலைகளிலும் ஓட்டை? கீழே சிதறி கிடக்கும் அம்புகள்.. யார் செய்தது இந்த அதிசயத்தை.. யாரோ வருவது தெரிந்தது ...

"ஏன் சாமி இது என்ன புதுசா மாமரத்துல எல்லா எலையிலயும் ஓட்டை.. எப்படி வந்துச்சி?" எதிர்பட்டவரிடம் கேட்டான்..

"அதுவா.. நம்ம இளவரசர் அர்ஜுனன் இருக்காரில்லை அவர் பண்ணது.. இந்த வயசிலே வில்லு வச்சிட்டு என்ன ஒரு வேகம், தெகச்சி போய்ட்டேன் போ.. அவங்க குருவே அசந்துட்டாருன்னா" .. கேட்டதும் ஏகலைவன் மனம் குதூகலித்தது.

இவர் தான் என் குரு. இவரிடம் தான் நான் வில் கற்று கொள்ள வேண்டும்..

"ஏன் சாமி அவர் பேரு... "

"அட இது தெரியாதா தம்பி, நம்ம துரோணரப்பா, புது ஆச்சார்யார்"

"ரொம்ப நன்றிங்க சாமி!" உள்ளம் குதூகளிக்க துள்ளலுடன் நடந்து சென்றான்

o o o

அது அரச குமாரர்களுக்கான பாடசாலை. நிறைய மாணவர்கள். தயக்கத்துடன் வெளியே இருந்தான். அவனுடைய வித்யாசமான தோற்றம் உள்ளிருந்த்த மாணவர்களை கவர்ந்திருக்க வேண்டும். சிலர் பாடத்தை விட்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தனr. சில கண்கள் நகைத்தன. ஆச்சார்யாரின் பாடம் நின்றது.

"யாரப்பா நீ?"

"சாமி, எம்பேரு ஏகலைவன்"

"சொல்லப்பா, என்ன வேண்டும்?"

"சாமி நான் எங்க காட்ல இருக்கிற வேடர் தலைவனுங்க.. எங்க கும்பலை நான் காப்பாத்த எனக்கு நல்ல வில் பயிற்சி வோணும் சாமி, சாமி சாமி இங்க பாருங்க சாமிக்கு தட்சிணையா பாருங்க மலை தேனு .. ரொம்ப மேல இருந்துதுங்க சாமி.. உங்களுக்கா நானே எடுத்தேன் சாமி.. இங்க பாருங்க உயர்ந்த சாதி புள்ளி மான் தோலு, அப்புறம் இது ரொம்ப முத்துன சந்தனம், இது எல்லாம் எடுத்துகிட்டு எனக்கு வித்தை சொல்லித் தாங்க சாமி"

ஆச்சார்யார் அவனை உற்று பார்த்து கொண்டு இருந்தார்..

மிகுந்த வெகுளி முகம், உண்மை தவிர வேறொன்றும் பேசத் தெரியாத உள்ளம்.. மிகச்சிறிய வயது.. தனக்காக வித்தை கேட்காமல் தன் இனம் காக்க கேட்கிறான். இவன் வாழ வேண்டும்.. இவன் போன்றவர்கள் வாழத்தான் வேண்டும்.

"இல்லையப்பா... நான் இந்த அரச குமாரர்களுக்கு தவிர யாருக்கும் சொல்லி தருவதில்லை என்ற விரதம் கொண்டு இருக்கிறேன்"

"சாமி அப்படி சொன்னா எப்படி.. நான் உங்களை நம்பி வந்துட்டேன்.. நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும்"

அர்ஜுனன் முகத்தில் கனல் தெரித்தது... இருந்தும் சும்மா இருந்தான்.. ஆனால் துரியன்..

"குருவே.. அரகுமாரர்களுக்கு இணையாய் ஒரு வேடுவன் பயில்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" துரியோதனன் வெளிநடப்பு செய்யும் வேகத்தில் இருந்த்தான்..

காலை முதல் துரோணர் அர்ஜுனனை வாழ்த்திப் பேசியது ஏற்கனவே மனதை அரித்திருந்தது. துரோணர் மெளனமாய் இயலாமையுடன் அந்த வேடுவன் தலை தடவி கொண்டு இருந்தார்..

"மகனே என்னால் உனக்குக் கல்வி சொல்லித் தர இயலாது.. சென்றுவா.."

வருத்தம் தோய்ந்த முகத்துடன் துரோணர் சொன்னார்.

"சாமி..."

"கடவுளைக் கேள் மகனே.. உனக்கு வேண்டியது கிட்டும்.. இப்போது நீ புறப்படு.. நான் பாடத்தைத் தொடர வேண்டும்.. நீ கொண்டு வந்த தட்சிணையை எடுத்துச் செல்"

"இல்லை சாமி அது உங்களுக்காகக் கொண்டுவந்தது.."

கொண்டு வந்ததை அப்படியே வைத்துவிட்டு ஏகலைவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

"அர்ஜுனா எடு வில்லை.. அந்த மரத்தின் பின்னால் இருக்கும் பொம்மையை உன் ஒரு கணையால் வீழ்த்து!" பின்னால் குருவின் குரல் மெல்ல மெல்ல காதுகளில் ஒலி குறைந்து ஒலித்தது.

o o o

ஏகலைவன் தினமும் அமரும் மரத்தடி.. இப்போதும் கண் மூடி அமர்ந்திருந்தான். இப்போதெல்லாம் அந்த முகம் சற்று தெளிவாய் இருப்பதாய் உணர்ந்தான். தந்தையின் ஆணை மற்றும் குருவின் ஆணை.. கடவுளைக் கேட்க சொல்லி..

ஆனால் கடவுள் யாரென்று தெரியவில்லை. வெறும் சிலை வைத்து ஏதோ ஒரு உருவம் கொடுத்து வணங்குகிறோமே அது தான் கடவுளா? இல்லை அதைத் தாண்டி ஏதோ ஒன்று.. சிலை வெறும் வாயில். அதன் மூலம் கடவுள் நமக்கு அருள் செய்கிறார். உண்மையில் எது கடவுள்? அதுதான் யாரென்று தெரியவில்லை. ஒருவேளை அடிக்கடி மனதில் வந்து போகும் அந்த முகம்தான் கடவுளோ? அதையே கேட்டால் என்ன?

கடவுள்... கடவுள்.. கடவுள்....

கடவுள் என்றதும் அவனுள் ஒரு பொறி தட்டியது. கடவுளை சிலையாய் வடித்துதானே கும்பிடுகிறோம், அந்த சிலை அருள் செய்யும் போது.. குரு அருள் செய்ய மாட்டாரா என்ன? மலர்ந்தான். குருவின் சிலை மெல்ல மெல்ல உருவானது. இராப்பகலாய் உழைத்தான்.. இதோ குருவின் சிலை தயாராகிவிட்டது. அடடா என்ன கனிவான முகம்.. என்ன ஒரு அருட்பொங்கும் பார்வை.. குருவைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவன் மனத்தின் அழகு சிலையில் வெளி வந்தது. பக்கத்தில் இருந்த மூங்கில் வளைந்து கொடுத்தது போல் இருந்த்தது.. எல்லாம் குருவின் ஆசிர்வாதம். அந்த மூங்கில் கொண்டு அழகான ஒரு வில் செய்தான்.

இரவு பகல் இல்லாத அசுரத்தனமான பயிற்சி. எல்லாம் வெகுவாய் இலகுவாய் வந்தது. இப்போது ஏகலைவன் சிறந்த வில்லாளி. சில நேரம் எதிர் வந்த பகையை வெகு இலகுவாய் ஒருவனாய் துரத்தினான். அவன் ஊரெல்லாம் அதே பேச்சு. இருந்தும் தினமும் அவன் செய்யும் தியானமும் குருவின் முன்னால் விற்பயிற்சியும் தவறுவதில்லை. இச்செய்தி அர்ஜுனன் காதில் தீயென விழுந்தது. பொறாமை மெல்ல உயிர்தெழுந்தது. அது குருவுடன் கானகம் செல்லத் தூண்டியது.

"குருவே இன்றைய பயிற்சியைக் கானகத்தில் வைத்து கொள்ளலாமா??"

குருவுக்கும் தெரிந்திருந்தது ஏகலைவன் புகழ். எப்படிக் கற்றுகொண்டான் இத்தனை அஸ்திரப்ரயோகம்.. நாம் தான் மறுத்து விட்டோமே, வேறு யாரவது? ஒருவேளை கிருபர் சொல்லித் தந்திருப்பாரோ.. சே சே.. இருக்காது.. சரி நேரில் சென்று கேட்டால் என்ன...

"சரி அர்ஜுனா.. அப்படியே ஆகட்டும்" ஆச்சார்யார் சம்மதித்தார்

ஒரு படை போல் திரண்டு சென்றனர் குருவும் மாணவர்களும். கூடவே கானகத்தில் வீழ்த்திய விலங்குகளை இழுத்து வர ஒரு நாயுடன்.

வழக்கம் போல் தியானத்தில் அமர்ந்திருந்தவன் காதில் தான் செல்லமாய் வளர்த்த மானின் அபயக்குரல். எழுந்து சென்று பார்த்தான்.. அங்கே ஒரு நாய் இடைவிடாது குரைத்து மானை பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஒரே ஒரு கணை.. நாயின் குரல் அடங்கியது. பின்னலிட்டு தைத்தார்போல் அதன் வாய் அந்தக் கணையால் கட்டுண்டது.

இது என்ன புது நாய், யாருடையது?.. விளங்காமல் அதன் பின்னே சென்றான். அங்கே, துரோணர் அர்ஜுனனுக்கு பயிற்றுவித்துக் கொண்டுஇருந்தார்.

"அர்ஜுனா.. இந்த அஸ்திரம் எந்த விலங்குகளின் வாயையும் கட்டக் கூடியது.. இதைத் தெரிந்தவர்கள் அதிகம் கிடையாது.. இதை உனக்கு சொல்லித் தருகிறேன்.. கேள்.. நான் சொன்ன மந்திரம் உச்சரித்து இந்த கணை செலுத்து.. "

அர்ஜுனன் கணை எய்ததோ ஒரு புலியின் மேல்.. வாய் தைக்கபட்டு வந்து எதிர் நின்றதோ அவன் அழைத்து வந்த நாய். தவறாய் எய்துவிட்டோமோ.. ஆனால் புலியும் வாய் கட்டுண்டு கிடந்தது. இது வேறு யாரோ எய்த அம்பு.

அர்ஜுனன் கோபம் கனலாய் இருந்தது..

"குருவே.. எனக்கும் மேலான மாணவன் உங்களுக்கு கிடைத்துள்ளான் போலும்.. " பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அழுகையை விட கொடிய ஆயுதம் இல்லை. அர்ஜுனன் அதை அந்த நேரத்தில் நன்றாக பயன் படுத்திக்கொண்டான். கோபம் அழுகையாய் மாறியது..

துரோணர் பதைத்துப் போனார். அரச குல மக்கள் அழுவது நல்லதல்லவே... அது தனக்குத் தீங்காய் அல்லவா முடியும்... துரோணர் சுற்றிலும் பார்த்தார். அங்கே நிற்பது யார்?.. அடடா இது அந்த வேடுவன் அல்லவா.. அவனுக்கு எப்படித் தெரிந்தது இந்த வித்தை....

"நீ ஏகலைவன் தானே?.. இங்கே வா!"

அவர் அழைப்புக் குரல் கேட்டதும் அவர் காலடியில் இருந்தான் ..

"ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி!"

"எழுந்திரு மகனே.. நீடூழி வாழ். இந்த அத்திரப் பிரயோகம் மிகவும் அரிதாயிற்றே, உனக்கெப்படித் தெரிந்தது"

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் சாமி!"

"நான் உனக்கு எதுவும் சொல்லி தரவில்லையே, பின்பு எப்படி ??"

அவன் அந்த சிலை பற்றி விவரித்தான். அதற்குள் ஊர் திரண்டிருந்தது.

குரு அர்ஜுனன் முகம் பார்த்தார்.. தலை கவிழ்ந்து பொறாமையுடன் கோபத்தை மனதுக்குள் அடக்கிக் கொண்டு கண்களில் நீருடன் இருக்கும் அவனைப் பார்க்கும் போது முதன்முறையாக அவன்மேல் சிறு வெறுப்பு ஏற்பட்டது. இருந்தும் இவனால் தான் என் சபதம் நிறைவேற வேண்டும்... துரோணரின் மனமும் முகமும் இறுகியது.

"ஏகலைவா.. குருதட்சிணை இல்லாமல் பயில்வது தவறல்லவா... "

"என்ன வேண்டும் சொல்லுங்க சாமி.. என் உசுரு வோணும்னா கூட குடுத்துடுவேன்."

"உன்னுடைய வலது கை பெருவிரல் வேண்டும்"

பேரதிர்வுக்குள்ளான ஊர் மக்கள் கோபத்தால் ஏசினர்..

"ஏகலைவா இந்தாளு உனக்கு ஒண்ணும் சொல்லி தரலே.. நீயா கத்துக்கிட்டே.. அதனால நீ சும்மா எங்க கூட வா.. அவங்களை நாங்க பாத்துக்கறோம்"

அர்ஜுனன் கை வேகமாய் வில்லின் பக்கம் போனது.. ஏகலைவன் அலட்சியமாய் அர்ஜுனனைப் பார்த்தான். பின் தன் கூட்டத்தினரிடம் திரும்பினான்

"எல்லாரும் சும்மா இருங்க.. கடவுளை சிலையா வச்சித் தான் கும்புடுரோம்.. அதனால கடவுள் நமக்கு அருள் செய்யலைன்னு ஆயிடுமா அது மாதிரி தான் இதுவும் "

கண்ணை மூடினான்.. அந்த நீலவண்ண முகம் பளிச்சிட்டது..

"சம்மதமா" கேட்டான்..


அந்த முகம் சம்மதம் எனத் தலையாட்டியது..

இடையில் இருந்த குறுவாள் மீதிப் பணி செய்தது. குருவின் காலடியில் அவன் பெருவிரல் துடித்தது. துரோணரின் இறுக்கமான முகம் எந்த சலனமும் இல்லாமல் அர்ஜுனனைப் பார்த்தது..

அர்ஜுனன் மகிழ்சியில் தத்தளித்துக்கொண்டு இருந்தான்.

அட இது என்ன துரோணச் சிலையின் கண்களில் நீர் துளிர்ப்பு?? காலைப் பனித்துளி இன்னும் காயலையோ இல்லை துரோணரின் மனத்தின் அழுகை சிலையின் கண்ணீராய் வெளிவந்ததோ? எதையும் பார்க்கும் நிலையில் ஏகலைவன் இல்லை. வலி உயிர் வரை பாய்ந்த்தது. மெல்ல மெல்ல நினைவிழந்தான்.

o o o

ஏகலைவனுக்கு மணமாகி ஒருகுழந்தைக்கு தந்தை ஆகிவிட்டான். தந்தையை கேள்வி கேட்கும் வயது அவன் குழந்தைக்கு. கேள்வி கேட்பது குழந்தைகள் குணம். எதையும் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்ளும். மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் வெளிப்பார்வைக்கு அர்த்தமற்றதாகத் தோன்றினாலும் ஏதேனும் தேடல் உள்பொதிந்து இருக்கும். இந்தப் பருவத்தில் எழும் கேள்விகளும் அதற்குக் கிடைக்கும் பதில்களுமே அவர்கள் வாழ்க்கையின் அத்திவாரங்கள்.

மகனுக்கு முதல் விற்பயிற்சி, குழந்தையின் கேள்விகளுடன் ஆரம்பம் ஆனது.

"முதலில் எந்த விலங்கு மீதும் அனாவசியமாக அம்பு செலுத்தக் கூடாது"

"அப்பா எது அவசியம்? எது அனாவசியம்?"

"உணவுக்காகவும் தற்காப்புக்காகவும் செய்வது அவசியம், விளையாட்டுக்காவும் வெறி கொண்டு கொல்வதும் தவறு"

"உணவுக்காகக் கொல்வது தவறில்லையா?"

"அது நம் குலதர்மம்."

"உங்கள் கட்டை விரல் எங்கே?"

"குருவுக்குக் காணிக்கையாய் வெட்டிக் கொடுத்துவிட்டேன்"

"அப்போது உங்களுக்கு வலிக்கவில்லலையா?"

"வலிச்சது.. மிகவும் வலிச்சது கண்ணா, உயிர் போறது போல வலிச்சது"

"கட்டை விரலுக்கே உனக்கு அவ்வளவு வலித்ததா?"

"ஆமாம் கண்ணு "

"அப்படியானால் நாம் அம்பு எய்து கொல்லும் உயிர்களுக்கும் வலிக்கும் தானே.. அது பாவமில்லையா?"

ஏகலைவன் அயர்ந்தான். என்ன சொல்வது.. கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றா? இல்லை கொல்லுதல் கூடாதென்றா?.. கொல்லாமல் உயிர் வாழ்வதெப்படி? சற்று நேரம் மௌனமாய் இருந்தான். அந்தக் கேள்வி வெகுவாய் பாதித்தது. சற்று நேரம் தேவையான அடிப்படை வித்தை சொல்லித்தந்து விட்டு அதனை மறுபடி செய்யச்சொல்லி சரிபார்த்தான். பரவாயில்லை.. வேகமாய் கற்றுக் கொள்கிறான்.. மனம் திருப்தி அடைந்தது.

மகனை அழைத்துக் கொண்டு அவன் அமரும் மரத்தடி சென்றான். இலை உதிர் காலம்.. மரம் எதையோ பறி கொடுத்தார் போல சோகமாய் இருப்பது போல் தெரிந்தது. அவன் மனம் இன்று ஒருமுகப்படவில்லை.. பிள்ளையின் கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது. சற்று காலாற நடந்தால் என்ன.. எழுந்து நடந்து சென்றான்.

அப்போது .....

( தொடரும் )
இரண்டாம் பாகம்





வேலைக்காகப்
போனீங்க இன்டர்வ்யூ,
ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே
எங்களுக்கு இன்டர்வ்யூ!
*

நலுங்காமல் நாலு வயசில்
நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!
நாலைந்து நோட்டுதான்
நாலாவது வகுப்பு வரை.
*

எம் மழலை மாறும் முன்னே
ப்ளே ஸ்கூல் அறிமுகம்!
வருஷங்கள் ஆக ஆக நிரம்பி
வழிகின்ற புஸ்தகங்கள்.
*
அஸ்ட்ரனாட் முதுகிலே
ஆக்ஸிஜன் ஸிலிண்டரோடு
அசைஞ்சு அசைஞ்சு
மிதக்கிறாப்பலே-
தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க
அதை ஏன் கேக்குறீங்க ?
*

ஏழாவது வகுப்பிலே நீங்க
வாசிச்ச விஷயமெல்லாம்
எல்கேஜியிலேயே நாங்க
யோசிக்கத் தெரிஞ்சுக்கணும்.
*

இருபது வயசிலே நீங்க
வியந்து பார்த்த மானிட்டரிலே
இப்போதிலிருந்தே நாங்க
புகுந்து கேம் ஆடறோம்.
*

கதவை விரியத் திறங்க!
இன்னும் என்னென்ன
காத்து இருக்குன்னு
பாத்து வச்சுக்கிறோம்.
*

கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்.
*** *** *** *** ***

குழந்தையின் குரலாய் நம்பிக்கை கவிதையை
அனுப்பி வைத்த ராமலக்ஷ்மிக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

பூக்களாய்ச் சிரிக்கும் பிள்ளைகள்.
பூமிக்கு கிடைத்திருக்கும் நித்திய மலர்கள்.

அந்த மு்கத்தில் என்றும் புன்னகை தவழ்ந்திருக்க
இறைவனைப் பிரார்த்திக்கி்றோம்.

















பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள் சார்பாக
அனைத்து குட்டீஸுகளுக்கும் மனமார்ந்த
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

இதற்கு முந்தைய பதிவில் பலரின் பலவகையான கருத்துக்களைப் பார்த்தோம்.

அதிக வீட்டுப்பாடம் தவறு என்றாலும் பிள்ளைகள்
வீட்டுப்பாடத்துடன் தான் வீட்டிற்கு வருகிறார்கள்.

வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதின் உண்மையான நோக்கம்
இதுதான்.

1. பள்ளியில் படித்த பாடத்தை ரிவைச் செய்துக்கொள்ள.

வீட்டில் ஒரு முறைப் படித்தால் பள்ளியில் படித்தது
நன்றாக மனதில் பதியும்.

2. நன்கு படிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.
படித்ததில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

3. வீட்டுப்பாடம் செய்யப் பழகுவாதால் பிள்ளைகள்
தன் வேலையைத் தானே செய்யப் பழகுகிறார்கள்.

4. படிப்பைத் தவிர தனித்துவமாக வேலையை
முடிக்கப் பழகுகிறார்கள்.

5. சாதாரணமாக ஒரு பாடத்திற்கு கேள்வி, பதில்
எழுதும் பொழுது கூட சில மாணவர்கள் அதை
அசைன் மெண்ட் மாதிரி அழகாக ச்கெட்ச் கொண்டு
தலைப்பு எழுதி, அழகாக கோடு போட்டு என்ரு
செய்வார்கள். இதனால் ஒரு பெருமை உணர்வு
கிடைக்கும்.

இப்படி சில பாசிடிவ்களும் இருக்கிறது
வீட்டுப்பாடத்தில்.

இங்கு பெற்றோராக நாம் பின் பற்றி ஆகிய வேண்டிய
சில வி்டயங்களைப் பார்ப்போம்.

இன்னைக்கும் உங்க ஸ்கூல்ல ஹோம்வொர்க் கொடுத்துட்டாங்களா?!
என்று பிள்ளைகள் எதிரில் பேசினால் படிக்கும் பள்ளியைப்
பற்றி, படிப்பைப் பற்றி தவறான அபிப்பிராயம் பிள்ளைகளுக்கு
ஏற்படு்ம்.

பள்ளியிலிருந்து வந்ததும் உண்ண உணவுக் கொடுத்து
சிறிது நேரம் விளையாட விடுங்கள்.

அதன் பிறகு அன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது
என்று கேட்டு அறிந்து பிறகு என்ன பாடம் நடத்தினார்கள்?
என்று கேட்டு பிறகு ஹோம் வொர்க் செய்யச் சொல்லுங்கள்.

ஆம் வீட்டுப்பாடத்தைப் பிள்ளைகள் தான் செய்ய வேண்டும். நாம் செய்து கொடுப்பதினால்
அவர்கள் சோம்பேறிகளாகிறார்கள். மேலும் பள்ளியில்
ஆசிரியர் இது ஹோம் வொர்க் என்று சொல்லும்போது
ஹ, நானா செய்யப் போகிறேன்! என்று நினைக்கையில்
படிப்பே தேவையில்லை என்ற மன நிலைக்கு ஆவார்கள்.


பிள்ளைகளை வீட்டுப்பாடத்தைச் செய்யச் சொல்லவேண்டும்.
தவறாகச் செய்தாலும் சரி. தவறில் இருந்துதான் கற்றுக்கொள்ள
முடியும். தவறாகவே இருந்தாலும் அவர்களாகவே செய்து
முடிப்பார்கள். தன் வேலையைத் தானே செய்யும் திறமை
உண்டாகும். அடுத்தவர்களைச் சார்ந்து இருக்க மாட்டார்கள்.

வீட்டுப் பாடத்தை முடிக்க இயலாத போது (அதாவது
புரியாத கணக்கு, புரியாத வார்த்தை, புரியாத அர்த்தம்)
போன்ற சமயத்தில் நாம் அருகிருந்து அவர்களுக்கு உதவ
வேண்டும்.

பெற்றோர்களின் ஈடுபாடு பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு
வழிவகுக்கும். அதுவே பெற்றோரே செய்து கொடுத்தால்
அவர்களது முன்னேற்றத்திற்கு நாம் ஒரு தடைக்கல்லாகிறோம்.


***********************************************************

வீட்டுபாடத்தில் பிள்ளைகளுக்கு இப்படியும் உதவலாம்.

வீட்டுப்பாடம் செய்யும் நேரம் நாம் வீட்டில்
இருக்கும் நேரமாக பார்த்துக்கொள்ளவும்.
(இதுதான் பலரின் பிரச்சனை. வேலைக்குச்
செல்லும் அம்மாக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்).

அப்படிபட்ட நிலையில் பி்ள்ளைகள் தன்னால் இயன்ற
பாடத்தை செய்து முடித்துவிட்டு தெரியாததை
பெற்றோ்ர் வந்ததும் கேட்டுச் செய்வது போல்
திட்டமிட்டுக்கொள்ள்லாம்.

ஏதோ அவசர வேலையில் வர முடியாவிட்டால்
பிள்ளையை போனிலாவது தொடர்பு கொண்டு உதவுங்கள்.

இப்படிச் செய்வதன் முக்கிய நோக்கம் பிள்ளைக்கு
அவனும் அவனது பாடங்களும், வேலையும்
நமக்கு முக்கியம் என்ற செய்தியைச் சொல்கிறோம்.

படிக்க என்று தனியாக ஒரு இடம் அவசியம்.
டைனிங்டேபிளில் உட்கார்ந்தும் படிக்கலாம்.
ஆனால் டீவி போடப்பட்டிருக்கக்கூடாது.
பிள்ளைகளின் கவனம் திசை திரும்பும்
வஸ்துக்கள் ஏதும் அருகில் இல்லாமல்
பார்க்கவேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில்
உட்கார்ந்து படிக்கவேண்டும் என்று திட்ட
மிட்டுவிட்டால் பிரச்சனையில்லை.

சனி, ஞாயி்று விடுமுறை தினங்களில்
கொஞ்சம் அதிகாமாக வீட்டுப்பாடம்
கொடுத்திருந்தால் கூட அவைகளை
வெள்ளி இரவுக்குள் முடித்துவிடக்
கூறுங்கள். இதனால் சனி, ஞாயிறு
விடுமுறையை பிள்ளைகள் அனுபவிக்க
முடியும்.

மொத்ததில் வீட்டுப்பாடத்தை சுமையில்லாமல்
ஆக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பிள்ளைங்களுக்கு பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம்
அதாங்க ஹோம்வொர்க் கொ்டுத்தா அது
பிள்ளைகளுக்கா? இல்லை பெற்றோர்களுக்கா!ன்னு
கேக்குற அளவுக்கு இருக்கு.

ப்ரொஜ்க்ட் கொடுத்தாங்கன்னா, எக்சிபிஷனுக்கு
ஏதாவது செய்யுங்கன்னா எல்லாம் பெத்தவங்களுக்குத்தான்.


நாம படிச்சு முடிச்சதுக்கப்புறமும் ஹோம்வொர்க்
பூதம் நம்மளை துரத்துற மாதிரியே இருக்கா?

இல்ல குழந்தையா இருந்து அழகா செய்ய முடியாம
விட்ட ஹோம்வொர்க்கை இப்ப ஆசையோடு
செஞ்சு கொடுக்கறீங்களா?

சரி வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதன் நோக்கம்
என்னன்னு நீங்க நினைக்கறீங்க.

எம்புட்டு ஹோம்வொர்க் கொடுக்கலாம்னு நினைக்கறீங்க.

வாங்களேன்! இந்த ஹோம்வொர்க் டென்சனைப் பத்தி
ஒரு கலந்துரையாடல் செய்யலாம்.

உங்க கருத்தை பதிஞ்சுட்டு போங்க.

தவறு.11.
சிறு நீர், மலம் கழிக்கக் குழந்தைகள் அவசரப்படுத்தும்போது திட்டுவது

காரணம்
சிறுநீர் மற்றும் மலத்தை தேவையான நேரம் வரும் அடக்குவதற்கு சில தசைகளின் ஒத்துழைப்புத் தேவை. ஆனால் இத்தசைகள் 3 வயது வரை குழந்தையின் கட்டுப்பாட்டிற்கு வராது. ஆகவே தேவையான நேரம் வரை அடக்குவது குழந்தைகளால் இயலாது.

தீர்வு
இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

தவறு.12.
இரவில் படுக்கையில் சிறுநீர் போய் விடுவதை திட்டுவது மற்றும் கேலி செய்வது

காரணம்
3வயது வரை படுக்கையில் சிறுநீர் போய்விடுவதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன
1.சிறுநீரை அடக்குவதற்கான தசைகள் கட்டுப்பாட்டிற்குள் வராமல் இருப்பது
2.அதிகப்படியான பயம் மற்றும் அச்சம் கலந்த சுபாவம்
3.குழந்தைகளின் பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு
4.வியாதி உ.தா: காய்ச்சல்
மேலும் கேலி செய்வதால் இந்தப் பழக்கம் அதிகமாகும். அதற்குப் பதிலாக அன்பும், அரவணைப்பும் இப்பழக்கத்திலிருந்து விடுபட உதவி செய்யும்.

தீர்வு
1.மேற்கண்ட காரணங்களில் ஏதேனும் ஒன்றால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறாரா என ஆராய்ந்து அதற்கான தீர்வு காணுங்கள்.
2.இரவு படுக்கும் முன் திரவ உணவுப் பொருளைத் தவிர்த்து விடுங்கள்.
3.நடு இரவில் ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள்.
4.அன்பும் அரவணைப்பும் வழங்குவது.
மேற்கண்ட வழிகளில் தீர்க்க முடியாமல் 3 வயதிற்கு மேலும் இப்பழக்கம் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.


தவறு.13.
பாலுறுப்பில் கையை வைத்துக்கொண்டு இருந்தால் திட்டுவது.

காரணம்
எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் திட்டுவதால் திருத்த முடியாது. திட்டும்பபோது, “அப்படி என்னத்தான் இருக்கிறது இந்த செயலில், அம்மா/அப்பா திட்டுகிறார்கள்” என்று எண்ணி அந்தச் செயலின்மீது மேலும் ஆர்வம் அதிகரிக்கும்.

தீர்வு
1.ஆடை எதுவும் அணிவிக்காமல் சும்மா விடும்பொழுதே இந்த மாதிரி பழக்கம் ஏற்பட காரணமாகிறது. ஆகவே ஆடை இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க விடாதீர்கள்.
2.ஆடைகள் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
3.தினமும் 2 நேரம் குழந்தைகளைக் குளிக்கவையுங்கள்.
4.'பால் உறுப்பில் அடிக்கடி கை வைத்தால் அழுக்கு ஒட்டி புண்ணாகும் 'என்று சொல்லுங்கள். 'நான் சின்ன வயதாக இருக்கும்போது எனது நண்பன் X இப்படித்தான் செய்து புண்ணாகி ஆஸ்பத்திரி சென்று 10 நாள் ஊசி போட்டார்கள்' என்று சொல்லுங்கள்.

மரு.இரா.வே.விசயக்குமார்

முந்தைய பதிவுக்க்கு இங்கே.


திட்டமிட்டால் மட்டும் போதாது. அதை
பிள்ளைகள் முறையாக பின்பற்றச் சொல்லிக்
கொடுத்தால்தான் திட்டமிட்டதின் பலனை
அனுபவிக்கலாம். அதைச் செய்வது
எவ்வாறு? அதை இங்கே பார்க்கலாம்.

பொன்னான காலத்தை வீணாக போகவிட்டால்
திரும்ப வராது என்பதை பி்ள்ளைகளுக்குச்
சொல்ல வேண்டும். ( காலம் பொண் போன்றது என்பதை
கதையாகச் சொல்லலாம்.)

தொலைந்ததைத் தேடுவதிலேயே நாளின்
பெரும் பகுதி போய்விடும். இதனால்
பிள்ளைகள் தேடித்தேடி இளைத்து,
அழுது எல்லாம் முடிவில் அலுத்து
போய்விடுவார்கள்.

பிள்ளைகள் தங்களின் உடைகள், புத்தகங்கள்,
விளையாட்டுப்பொருட்கள், பெண்குழந்தையாய்
இருப்பின் அவர்களது ஹெர்பின், ஸ்டிக்கர்ஸ்
(இவைகள் வைக்க சரியான டப்பா எது
தெரியுமா? சமையலறையில் உபயோகிக்கப்
படும் அஞ்சறைப்பெட்டி) இப்படி எல்லாவற்றையும்
எடுத்த பொருட்களை திரும்ப அதே இடத்தில்
வைக்கப் பழக்க வேண்டும்.

அவர்களுக்கென ஒரு சின்ன அலமாரி
இயலாவிட்டால், நம் அலமாரியில் கீழ்
இரண்டு செல்ஃப் அவர்களுக்கென ஒதுக்கலாம்.

ஸ்கூலுக்கு போகும் அவசரத்தில் வைத்துவிட்டாள்,
புத்தகம் இங்கே கிடக்கிறது என்று நாம்
எடுத்து வைப்பதை விட பிள்ளைகளை
எடுத்து வைக்கச் சொல்லவேண்டும்.
தனது அறையை/அலமாரியை வாரம் ஒரு
முறையாவது சுத்தமாக்கி முறையாக
அடுக்கிவைக்கப் பழக்கவேண்டும்.

அவர்களது பொருட்களுக்கு அவர்களே
பொறுப்பு என்பதை உணர்த்த வேண்டும்.
இப்படிச் செய்வதால்,”அம்மா! என் ஹிஸ்டரி
புக் டேபிள் மேல் வெச்சிருந்தேன், இப்பக் காணோம்!
நீ பாத்தியா,”,”அப்பா! என் வொயிட் சாக்ஸை
பாத்தீங்களா”வெல்லாம் இருக்காது.

தன்னை தன் பொருட்களையும் பார்த்துக்கொள்ளும்
திறமை அவர்களிடம் நிறையவே இருக்கிறது.
அதை வெளிக்கொணரவேண்டியது மட்டுமே
நம் செயல். இல்லாவிட்டால் அவர்கள் சோம்பேறிகளாகவும்,
நாம் மட்டுமே உழைப்பாளிகளாகவும் ஆகிவிடுவோம்.

முந்தைய பதிவிற்கு இங்கே:


திட்டமிடுதல் குறித்து பிள்ளைகளிடம் பேசியாகிவிட்டதா?
சரி அவங்களுக்கு எப்படி திட்டமிடக் கற்றுக்
கொடுப்பதுன்னு இப்ப பார்ப்போம்.

திட்டமிட வேண்டிய பொழுது கவனிக்க
வேண்டியவை இவைகள் தான்.

1. கல்வியாண்டில் குழந்தையிடமிருந்து
என்ன எதிர் பார்க்கிறோம்?
(இங்கே குறிப்பிட வேண்டிய மிக
முக்கியமான விடயம் அவர்கள் விரும்பிக்
கற்பதை மாத்திரம் கற்கட்டும். நம்
விருப்பத்திற்காக பாட்டு, கராத்தே,நீச்சல்
எல்லாம் வேண்டாம். பாவம் பிள்ளைகள்.
குழந்தைப் பருவத்தை ஆனந்தமாக
அனுபவிக்கட்டும். திரும்பி வராத பருவம்
தித்திப்பாய் இருக்கட்டுமே!)

2. பள்ளியில் கொடுக்கப்படும்
அசைண்மெண்டுகளுக்கான நாட்களை
குறித்து வைத்தல்.

3. பள்ளிப்பாடத்தை தவிர குழந்தைகளுக்கான
கதைப்புத்தகங்களை படிக்க, செய்தித்தாள்கள்
வாசிக்க நேரம் ஒதுக்குதல்.

(இவை மறைமுகமாக பிள்ளைகளின்
அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
படிக்கும் பழக்கமும் ஏற்படும்.
ஆங்கில, தமிழ் இதழ்கள் படிக்கப்படும்
போது பல புதிய வார்த்தைகள்
கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.)

4. செய்யவேண்டியவைகளை குறித்து
வைத்துக்கொள்ளுதல் ( to do list )

அடுத்தநாள் பள்ளிக்கு கொண்டு செல்ல
வேண்டியவைகளை குறித்துக்கொள்ளுதல்,

இப்படிச் செய்வதால் அதை மறந்தேன்,
இதை மறந்தேன் என்று அவர்களும்
டென்ஷ்னாகி என்று காலை நேரம்
பரபரப்பாகாது.

5. பள்ளியில் டீச்சர் வரைபடம்,
ரிப்பன் போன்று எது வாங்கி வரச்
சொன்னாலும் அதை ஒரு சின்ன
டயரி மாதிரி நோட்டில் எழுதிக்
கொண்டு வரச்சொன்னால் நாமும்
சரி பார்க்க வசதியாக இருக்கும்.
(திங்கள் கிழமைகாலையில்
“அம்மா! சொல்ல மறந்துட்டேன்.
சயன்ஸ் நோட் தீர்ந்து போச்சு
என்பார்களே! அது இனி சொல்ல
மாட்டார்கள்.

6. அந்தந்த வார இறுதிக்குள்
செய்து முடிக்கவேண்டிய
வேலைகளை டார்கெட் செட்
செய்து கொண்டு டார்கெட் தேதியையும்,
செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும்
கு்றித்து வைத்துக்கொள்ள பழக்க வேண்டும்.


இப்படி ஒவ்வொன்றையும் குறித்து வைத்துக்கொண்டு
அதை நிறைவேற்றுமாறு ஒரு டைம் டேபிள்
போட்டுக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக:

காலையில் எழுந்தது முதல் பள்ளி செல்லும் வரை
செய்ய வேண்டியவை,

பள்ளியிலிருந்து வந்த பிறகு செய்ய வேண்டியவை,

படிக்கும் நேரம், விளையாட்டு நேரம்,
பள்ளிப்பாடங்கள் செய்யும் நேரம்,

அடுத்த நாளுக்கு புத்தகங்களையும், யூனிபார்ம்களையும்
எடுத்து வைத்தல்

என்று நேரப்படி டைம்டேபிள் அவர்களை விட்டே
போடச்சொன்னால், நேரத்தை அழகாக
திட்டமிடக் கற்றுக்கொள்வார்கள்.
அவர்களூக்கும் மகிழ்ச்சி, நமக்கும் நிம்மதி.

பெரிதாக எழுதி அவர்கள் அறையில்
மாட்டி வைத்துவிட்டால் அதைப் பார்த்து
அவர்கள் நடக்க வசதியாய் இருக்கும்.

இவ்வளவு செய்யும் குழந்தைகளுக்கு
டைம் டேபிள் படி நடந்தால் பாராட்டோடு
பரிசும் கொடுக்க மறக்காதீர்கள்.

பிள்ளைகளுக்கு திட்டமிடக் கற்று கொடுத்துவிட்டோம்.
அதை பின்பற்றக் கற்றுக்கொடுத்தால்தானே
பிள்ளைகளுக்குட் தெரியும்.

நாளை அதையும் பார்க்கலாம்.

அன்புடன்
புதுகைத்தென்றால்

நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
காலையில் புதுகைத்தென்றல் பிளாக்கில்
போடப்பட்ட வாக்கினில் இனிமை வேண்டும்
கதை பேரண்ட்ஸ் கிளப்பில் அதன் ப்ரத்யேக
வாசகர்களுக்காக( அப்படித்தான் ராமலக்ஷ்மி
பின்னூட்டத்துல சொல்லியிருக்காங்க.)

*********************************************

”நீதான் பேய்!,” என்று கத்திக்கொண்டே

ஓடி வந்து என்னிடம் ஒளிந்துக்கொண்ட
தம்பி் நவீனை துரத்திக்கொண்டே ஓடிவந்தாள்
என் பெரிய மகள் நீலிமா.

பொழுது விடிந்து பொழுது போவதற்குள்
வீட்டில் ஒரே களேபரம்தான். இவர்கள்
இருவரும் பள்ளிக்கு சென்றிருக்கு நேரம்தான்
வீடு நிசப்தமாக இருக்கும்.

”இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டேன்.

”அக்கா! என்னைத் திட்டறாங்க. தலையில
கூட கொட்டிட்டாங்க பாருங்கம்மா வலிக்குது!”என்றான்
மகன் நவீன்.

“திட்டனதையும், கொட்டினதையும் மட்டும் சொல்லு!”
நீ செஞ்சதைச் சொல்லாத, என்ற பெரி்ய மகள்
நீலிமாவிடம்,”என்ன நடந்தது? ப்ரச்சன்னை என்னன்னு?
நீதான் சொல்லு” என்றேன்.

”பாத்துட்டு தர்றேன்னு சொல்லி என் ஃபரெண்டு
கொடுத்த கீ செயினை உடைச்சிட்டான்! என்
பெஸ்ட் ப்ரெண்ட் என் பர்த்டேக்காக கொடுதது
அது”, என்று வருத்தத்தோடு சொன்னாள்.

”அதுக்கு அக்கா என்னை கோட்டான், நாய்
அப்படின்னு திட்டி்னாங்கம்மா!” என்றான்.

”எதுக்கு தலையில கொட்டின?,” என்றதும்
”வெவ்வேன்னு அழகு காட்டினான் தம்பி”,
என்றாள்.

அலுப்பாக வந்தது எனக்கு. எப்போதும் இதே
நிலைதான். அடிதடி சண்டை நடக்கும்.
இவள் முடியைப்பிடித்து் இழுப்பான், அவள்
அடிக்க என்று பெரிய யுத்தமே நடக்கும்.

தாளமுடியாமால் இருவருக்கும் 2 போட்டு
விட்டு வருவேன். ஆளுக்கொரு மூலையில்
உட்கார்ந்து அழுவார்கள். இதுதான் இவர்களின்
சண்டையின் முடிவாக இருக்கும்.
பிள்ளைகளை அடித்துவிட்டு அந்த
வருத்தத்தில் சாப்பிடமால் இருப்பேன்.
இந்த நிலமை தொடரக்கூடாது.
புரிய வைக்கவேண்டும்
என்று முடிவு செய்தேன்.

”என் கூட வாங்க ரெண்டு பேரும்”, என்றேன்.
அடிக்காமல் அழைத்த அம்மாவை ஆச்சரியமாக
பார்த்தனர் பிள்ளைகள்.
” இப்படி உட்காருங்க” என்று டைனிங் டேபிளு்ருகில்
அமர்த்தி விட்டு உள்ளே சென்றேன்.

தலையைத் தடவிக்கொண்டே மகனும்,
முனுமுனுத்துக்கொண்டே மகளும் உட்கார்ந்திருந்தனர்.

“ம்ம். ரெண்டு பேரும் இதை சாப்பிடுங்க”, என்று
அவர்களிடம் நீட்டிய தட்டை பார்த்து முகம்
சுளித்தனர்.

“என்னம்மா! வாழைக்காயைக் கொடுக்கறீங்க.
காயை பச்சையா சாப்பிட்டா பல் கறுப்பாயிடும்னு
சொல்வீங்களே!” என்று கேட்டாள் மகள்.

”பரவாயில்லை சாப்பிடுங்க” என்றேன்.
“காயைச் சாப்பிட்டா நல்லா இருக்காதும்மா.
பழம் தான் சுவையா இருக்கும், இருங்க
நான் போய் வாழப்பழத்தை எடுத்துகிட்டு
வர்றேன்”! என்று எழுந்த மகனை
உட்கார வைத்தேன்.

”வாழைக்காய், வாழைப்பழம் ரெண்டும்
ஒரே மரத்திலேர்ந்துதானே வருது.
அப்ப ஏன் வாழைப்பழத்தை மட்டும்
விரும்பி சாப்பிடற? என்றதும் மகள்
அதான் தம்பி சொன்னானே அம்மா,
“ பழம் சுவையா இருக்கும்னு. அதான்!”
என்றாள் மகள்.

”சரியா சொன்ன! சுவையான பழம் இருக்க
காயைச் சாப்பிட யாருக்குத்தான்
விருப்பம் இருக்கும்?” அதே போல
அன்பான கனிவான வார்த்தைகள்
இருக்க ரெண்டுபேரும் கடுமையான
வார்த்தைகளை உபயோகிக்கலாமா??”
என்றேன்.


என்னை ஏறிட்ட மகளிடம்,”தம்பி
கீழே போட்டு உடைச்சது தப்பு. என்னிடம்
வந்து சொல்லியிருக்கணும். இல்ல
இப்படி செய்யலாமான்னு மென்மையா
கண்டிக்கணும். அதைவிட்டு
கோட்டான், நாய்னு சொல்லலாமா,”என்றேன்.

”தப்புதாம்மா!” என்றாள் மகள்.

“அக்காவோட சாமானை பாக்க எடுத்த சரி.
அதை பத்திரமாக கையாள வேண்டாமா?
அது உடஞ்சதுல அக்கா எவ்வளவு
வேதனைப்படறாங்க, வயசுல பெரியவங்களை
பேய்னு வேற சொல்வது சரியா நவீன்?
என்றதும் தலையைக் குனிந்து கொண்டு
”சாரி” என்றான்.

”சாரி, சொல்லவேண்டியது எனக்கில்லை”
என்றதும் அக்கா எழுந்து போய் தம்பிக்கு
முத்தம் கொடுத்து,”சாரிடா தம்பி! வலிக்குதா?
வா! ஐஸ் க்ப்யூஸ் வைக்கிறேன்,” என்றழைத்தாள்.

அவனும் பதிலுக்கு முத்தம் கொடுத்து
“இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன்
அக்கா!”என்றபடி அக்காவுடன் சென்றான்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்வர்ந்தற்று

என்ற திருக்குறளை படித்து அதன்
பொருள் அறிந்திருந்தாலும் பொறுமை
இன்மையால் பிள்ளைகளிடம் கடுமையாக
நடந்து கொண்டிருந்தேன். இன்று பிள்ளைகளை
அடிக்காமல் இதமாக புரியவைத்ததன் பலன்
அனைவருக்கும் மகிழ்ச்சி.

என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைதான்
ஞாபகம் வந்தது.”படித்தால் மட்டும் போதாது!”

*****************************************************

தொடர் பதிவாக வந்து கொண்டிருக்கும்
திருக்குறள் பதிவிற்காக இன்னொரு கதை இது.

இறைவன் எல்லோருக்கும் அதே 24 மணிநேரம்தான்
கொடுத்திருக்காரு. ஆனால் அதை முறையா திட்டமிட்டவங்க
வாழ்வில் ஜெயிக்கிறாங்க. பிள்ளைகள் மேல் பாசம்
வைத்திருக்கும் நாம் அவர்களுக்கு அந்த நேரத்தை
உபயோகப்படுத்தனும்னு அழகா சொல்லிக்கொடுத்து
விட்டால் நம்ம பசங்களும் ஜெயிப்பாங்களே!


நாமலே போடற திட்டத்தை கடைபிடிக்காம
போறோம், இதுல பிள்ளைங்களுக்கு என்ன
சொல்லிக்கொடுப்போம்னு? நினைக்காதீங்க.
அவங்களுக்கு சொல்லிக்கொடுக்கற சாக்குல
நாமளும் நம்மளை முறைப்படுத்திக்கலாமே.



ரெண்டு பேருக்குள்ள ஒரு போட்டி மாதிரி
வெச்சுகிட்டு யார் டார்கெட்டை அசீவ்
செய்யறாங்களோ அவங்களுக்கு பரிசுன்னு
செஞ்சு பாக்கலாம். மாற்றம் சில சமயம்
நல்லது.


எதுக்குமே MIND SETTING ரொம்ப முக்கியம்.
முதலில் பிள்ளையை பக்கத்தில் இருத்தி
பேசுங்க. நாம இப்ப வீட்டுக்கு ஒரு
டைம் டேபிள் செய்யப்போறோம். இதுனால
உனக்கு படிக்க, விளையாட, டீவி பார்க்க,
ஒண்ணுமே செய்யாம சும்மா இருக்க,
(அதுவும் முக்கியமுங்க.அதைப்பத்தின ஒரு
பதிவும் இருக்கு. லிங்க் கொடுக்க முடியல.
பேரண்டிங் டிப்ஸை கிளிக்கினால் பார்க்கலாம்)
எல்லாத்துக்கும் நேரம் கிடைக்கும்.
அப்படின்னு சொல்லவேண்டும்.


நேரத்தை திட்டுமிடுதலின் அவசியத்தை
பிள்ளைக்கு உணர்த்தனும்

திட்டமிடும்போது நிறைய “நோ”
சொல்ற மாதிரி டைம்டேபிள்
இல்லாமல் அவங்கவங்க தேவை
வீட்டுச்சூழலை மனசுல வெச்சுகிட்டு
டைம் டேபிள் போடக் கற்று கொடுக்கலாம்.



ஆமாம். நாம டைம்டேபிள் போட்டு
அதை பிள்ளைகள் கடைபிடிக்க
வேண்டுமென்றால் அவர்கள் விரும்ப
மாட்டார்கள். ஆகவே டைம்டேபிள்
போடல் ஐடியா கொடுக்கணும். பசங்க
எழுதணும்.


போட்டுவத்தை திட்டத்தை அவங்க
ஒழுங்கா கடைபிடிக்கிறாங்களா?
அப்படின்னு பாத்து அதை பாயிண்ட்ஸ்களாகவோ,
ஹேப்பி பேஸாகவோ, ஸ்டார் ஸ்டிக்கர்களாகவோ
குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்படி முறையா செய்யவதன் பலனை
பிள்ளைகள் விரும்ப ஆரம்பிச்சிருவாங்க.
ஏன் என்றால் எல்லாவற்றிற்கும் அதில்
நேரம் இருக்குல்ல. படிப்பு, விளையாட்டு
டீவி எல்லாமும் சரிவிகிதமா இருக்கும்.
பிள்ளைகள் இதை விரும்புவாங்க.

சரி, முதலில் பிள்ளைகளிடம் பேசிட்டு
வாங்க. திட்டமிடுதல் எப்படின்னு
பார்ப்போம்.

(தொடரும்)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்