பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டும் உடல் சோர்வை வெளிக் காட்டத் தெரியாமலும் சொல்லவும் தெரியாமல் இருக்கிற போது, குழந்தைகளுக்கு ஜலதோஷம் / சளி  பிடித்திருக்கு என்று பெற்றோராகிய நாம் எப்படிக் கண்டு பிடிப்பது?

  • குழந்தையின் கண்கள் கலங்கலாகவும், நிறம் / ஒளி குறைந்தும் இருக்கும்
  • வழக்கத்திற்கு மாறாக அழுகை அல்லது மகிழ்ச்சி குறைந்து இருக்கும்
  •  மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைபட்ட மூக்கு
  • தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல்
  • உடல் வெதுவெதுப்பாக இருக்கும்  / ஜுரம் இருக்கும்
  • தலையை உயர்த்தி பிடித்து வைத்துக் கொண்டால் சௌகரியமாக  உணரும்.
  • பசி குறைந்து இருக்கும் / சாப்பிட மறுக்கும்
  • சோர்வாய் இருக்கும், தூங்கி  வழியும், அதே சமயம் தூங்கவும் மறுக்கும்
  • நெஞ்சில் / முதுகில் கைவைத்துப் பார்த்தால் மார்பில் சளி கட்டிக் கொண்டு கர்கர் என்று ஒலி கேட்கும். இதனால் ஆஸ்துமா / இளைப்பு நோய் என்றெல்லாம் பயம் கொள்ள வேண்டாம்.
இரவு நேரம். அல்லது வேறேதோ இக்கட்டான சூழல். டாக்டரிடம் உடனடியாகக் கூட்டிச் செல்ல முடியாத நிலை. அப்போது என்ன செய்வது? 

  1. விக்ஸ் அல்லது யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை நெஞ்சிலும் முதுகிலும் மட்டும் தடவி விடவும். நெற்றியில் மூக்கில் தலையில் என்று சகட்டு மேனிக்கு எல்லாம் தடவ வேண்டாம்.
  2. கை, கால், நெஞ்சு, முதுகு, காது போன்ற உடல் பாகங்களை கெட்டியான துணி அல்லது பழைய காட்டன் புடவையால் நன்றாக சுற்றி வையுங்கள். சிறிது வளர்ந்த குழந்தை என்றால் ஸ்வெட்டர் போன்றவற்றை அணிவிக்கலாம். கம்பளியால் போர்த்துவதும் உதவும். ஆனால் முகத்தை மூடிக் கொண்டு விடும் அபாயம் இருப்பதால், பழைய காட்டன் புடவையை  உபயோகித்தல் நலம்.
  3. வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு சிறிய துண்டை (தோரயமாக அரை இன்ச் அளவு) நறுக்கி ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டு சப்பாத்திக் கல்லில் நசுக்கி, பின் ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் பிழிந்தால் மூன்று நான்கு சொட்டு இஞ்சிச் சாறு கிடைக்கும். இதை மூன்று சொட்டுத் தேனில் (டாபர் தேன் சுத்தமாக இருக்கிறது) குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுங்கள். உடனேயே இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் நின்று விடும். இதை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். 
  4. இஞ்சிச் சாரை பிழிந்து ப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டாம். உடலுக்கு கெடுதல். அவ்வப்போது புதிதாக சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. எப்போதும் கைவசம், ஜலதோஷத்திற்கு என்று ஏற்கனவே மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட மருந்து வைத்திருக்கவும். அதை ஒரே ஒரு டோஸ் தரலாம். குழந்தைகளுக்கான பாராசிடமால் மருந்தும் அப்போதைக்கு நிலைமையைக் கட்டுப் படுத்த உதவும். குழந்தையின் தலை பாரத்தைக் குறைக்கும்.
  6. சிறிது வளர்ந்த குழந்தை (ஒரு வயதுக்கு மேல்) என்றால் வெஜ் கிளியர் சூப் (முட்டைகோஸ் மற்றும் சோளமாவு (cornflour) போட்டு உப்பு-மிளகு  தூவி கொடுக்கலாம். ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தை என்றால் வெது வெதுவென்றிருக்கும் (ஜாக்கிரதை) வெந்நீரில் சிறிது தேன் விட்டு டீஸ்பூனால்  கொடுக்கலாம். மிகவும் கவனமாகக் கொடுங்கள்.
  7. அல்லது பாலில் ஒரு சிட்டிகை (pinch) மஞ்சள் பொடி மற்றும்  ஒரே ஒரு சிட்டிகை மிளகுத் தூள்  போட்டுக் கொடுக்கலாம்.
சுய மருத்துவம் / கை வைத்தியம் என்றும் எப்போதும் ஒரு டோஸ்சுக்கு மேல் நீங்களாகச்  செய்ய வேண்டாம். முடிந்தளவு சீக்கிரம் மருத்துவரிடம் காட்டுங்கள். வழக்கமாக குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அப்போது இல்லை என்றால் அருகிலுள்ள பொது மருத்துவரிடம் காட்டி தெளிவு பெறுங்கள்.

புதிய மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நீங்கள் ஏற்கனவே குழந்தைக்கு கொடுத்திருக்கவில்லை என்றால், என்னதான் அவை குழந்தைகளுக்கான மருந்துதான் என்றாலும், தயங்காமல் மருந்துகளைப் பற்றி அந்த மருத்துவரிடம் தீர விசாரித்து, மருந்தின் தீவிரத்தன்மை (strength of the medicines to the child) பற்றி நன்கு அறிந்து, உங்களுக்கு (மனதிற்கு) திருப்தி ஏற்பட்ட  பின்பே குழந்தைக்கு கொடுங்கள். தான் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பற்றி உங்களுக்கு விவரிப்பது மருத்துவரின் கடமை. அவர் தப்பா நினைச்சுப்பாரோ என்று ஒன்றும் கேட்காமல் வந்து விடாதீர்கள்.

பெரும்பாலும் தாய்க்கு instinct என்ற உள்ளுணர்வு குழந்தைக்கான இடர்களை உணர்த்தும். எந்த புதிய மருந்தையும் ஒரு டீஸ்பூன் (தாய்/தந்தை) தானே ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்து பின்பே குழந்தைக்கு கொடுக்கவும்.

பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளில் புதியதாக ஏதும் இருந்தால், குழந்தைக்கு கொடுக்கும் முதல் டோஸ் பாதிக்கும் குறைவாக கொடுத்து, நான்கு மணிநேரம் குழந்தையை நன்றாக கவனித்து,  பக்க விளைவு ஏதும் இல்லையா என்று அறிந்த பின்பே முழு டோசும் கொடுக்கவும்.

பக்க விளைவுகள் இருப்பதற்கான அறிகுறிகள்:
  • பெரும்பாலும் முதலில் விரல் நகங்களில் வழக்கமான நிறம் மாறி, கறுத்துப் போகும் அல்லது நிறம் அடர்த்தியாகும். 
  • கை கால்கள் ஜில்லிட்டு விடும் 
  • காது மடல்கள் சூடாகி விடும்.
  • குழந்தை வாந்தி எடுக்கும்
  • உடலில், கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தடித்து, சிவந்து போகும். அரிக்கும், குழந்தை அந்த இடங்களைச் சொரிந்து விடும்.
  • உடலில் கட்டிகள் பொரிகள் தோன்றலாம்
  • குழந்தை சிறு நீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டு அழும்
  • பேதி ஏற்படக் கூடும்
இந்த மாதிரி ஏற்பட்டால், பதட்டப் படாமல் (சொல்வது எளிது.... இருந்தாலும்), குறைந்த பட்சம் நீங்களே அழுது சோர்ந்து போகும் அளவுக்கு பதட்டப் படாமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் முழுதும் காட்டன் துணியால் நன்றாகப் போர்த்தி, கூட்டிச் சென்று விடுங்கள். அப்படி செல்லும் போது, நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்துகள் அனைத்தையும், மருத்துவரின் பிரிஸ்க்ரிப்ஷனையும் (prescription), மருந்து வாங்கிய கடை-பில்லையும் (medical bill) கையோடு கொண்டு செல்லுங்கள்.

===============================
new update: மேலும் சில தகவல்கள் ஹுசைன்னம்மா கேட்டதால் பின்னூட்டத்தில் கொடுத்தேன். ரீடரில் படிப்பவர்களுக்காகவும், பின்னூட்டங்கள் படிக்காதவர்களுக்கும், இங்கே கொடுக்கிறேன்.
===============================
/// ஃபிரிட்ஜில் ஒருவாரம் வரை வைத்துக் குடித்து வருகிறார். ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது அல்ல என்று சொன்னதால் ஒரு குழப்பம், அதான்.///

இஞ்சிச் சாறு சீக்கிரம் புளித்து விடும். அப்போது அதில் இருந்து சுரக்கும் அமிலம் வயிற்றிற்கு கேடு விளைவிக்கும், மேலும் இஞ்சியின் உண்மையான மருத்துவ குணம் மாறுபடும்.

அதிக கடினமான (சுக்கு அல்ல), கனமான, தோல் சுருங்கி இருக்கும், கொளகொளவென்றிருக்கும், மிகவும் பிஞ்சாக, சின்னதாக இருக்கும் இஞ்சியை, மருத்துவ குணம் இல்லாமலோ இழந்தோ இருப்பதால், உபயோகிக்கக் கூடாது.

இஞ்சியை துண்டுகளாக மதிரா (ஆல்கஹால், வயின்,ஸ்பிரிட்) அல்லது ஷெர்ரி போன்றவற்றில் இட்டு கண்ணாடிக் குடுவை / கண்ணாடி ஜாடியில் பாதுகாக்கிறார்கள்.

இஞ்சித் துண்டுகளை வெல்லம் / சர்க்கரைப் பாகு / frozen ginger போன்ற வகைகளிலும் பாதுகாக்கலாம்.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக, இஞ்சிச் சாரை பாதுகாக்கும் முறைகள் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. http://www.ehow.com/how_5692283_preserve-ginger-juice.html

எப்படி இருந்தாலும், ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு, பழைய / frozen வகை உணவுகளை முடிந்த வரை / அறவே தவிர்க்கலாம்.


// இஞ்சி+எலுமிச்சைச் சாறு தினமும் ஒரு டீஸ்பூன் போல அருந்தி வந்தால் சளி பிடிக்காது //

உண்மைதான். ஆனால் ஒரு தம்ளர் சாதாரண அறை வெப்பநிலையில் (normal room temperature) உள்ள தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றிற்கு மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு என்ற அளவே பயன்படுத்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. வெறும் வயிற்றில் பருகுவதால், இதில் ஒரு பின்ச் (சிட்டிகை) சர்க்கரை மற்றும் ஒரு பின்ச் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

இரவில் இஞ்சி சாப்பிடக் கூடாது. வாயுக் கோளாறு, மற்றும் ஜீரணக் கோளாறுகள் வரும்.


///இஞ்சிச் சாறின் அடியில் தேங்கும் வெண்ணிறப் படலம் ‍ அதைப் பொதுவாக நாம் நீக்கிவிட்டுத்தான் குடிப்போம். ஆனால் ஒரு தோழி, அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் என்று சொன்னார்.///

கால்சியம் எல்லாம் இல்லைங்க. அது ஸ்டார்ச் / ginger starch. சாறாக குடிக்கும் போது அதைப் பயன்படுத்தக் கூடாது.

இஞ்சிச் சாற்றை பிரிட்ஜில் பாதுகாத்தால் இந்த வெள்ளை வண்டலை (ஸ்டார்ச்) நீக்கி விட்டே பாதுகாக்க வேண்டும். fermentation-ஆவதற்கு ஸ்டார்ச் உதவுவதால், கண்ணாடிக் குடுவை வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

மாறாக இந்த ஸ்டார்ச்சை மீன் வறுக்கும் போதும், சூப் போன்றவற்றிலோ கலந்து பயன்படுத்தலாம். இந்த வெள்ளை வண்டலை காயவைத்து பாட்டிலில் வைத்தும் பயன் படுத்தலாம். மொலாசெஸ் போன்றவற்றில் இஞ்சியை பயன்படுத்தவே கூடாது.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

அனைவருக்கும் பேரன்ட்ஸ் கிளப் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



.

பிள்ளையை பார்த்து பார்த்து வளர்ப்போம்.

சில வீடுகளில் கண்டிப்பு அதிகமாகவே இருக்கும்.
அதுவும் உயர் பதிவுகளில் இருப்பவர்களின் பிள்ளைகள்,
கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் வீட்டுப்
பிள்ளைகள் கொஞ்சம் விலகியே இருப்பார்கள்.
காரணம் வீட்டில் விதிக்கப்படும் கட்டுப்பாடு.

என்ன கட்டுப்பாடு???

அவங்களோட சேராத. நமக்கு சமமானவங்க இல்ல!!

அவங்களோட சேர்ந்து சுத்தினா நமக்கு கொளரவ
குறைச்சல்!

நம்ம வீட்டு நிலையென்ன? அவுங்க நிலை என்ன?
பாத்து நட்பு வெச்சுக்கோ.

இப்படி தனிமைப்படுத்தி யாருடனும் அதிகமாக
கலக்காமல் வளர்ப்பதால் அந்தக் குழந்தையின் மனதில்
ஏக்கம் இருக்கும்.

என் நண்பர் ஒருவர். மிகச்சிறந்த வக்கீல். அருமையான
இரண்டு குழந்தைகள். மகனும், மகளும் மதிப்பு, மரியாதை
தெரிந்த குழந்தைகள். அனைவருடனும் அன்பாக இருப்பார்கள்.

”உங்கள் பிள்ளைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்! இனிமையான
பிள்ளைகள். அனைவருடனும் கலந்து பேசி மகிழ்வாக இருக்கிறார்கள்!”
என்றேன். அதற்கு அவர். பாராட்டிற்கு மிக்க சந்தோஷம்.

என் அப்பாவும் வக்கீல் தான். அதானால் வக்கீல்,
டாக்டர் போன்ற பதவிகளில்
இருப்பவர்களின் பிள்ளைகளோடுதான் விளையாடி, பேச
வேண்டும் என வீட்டில் கட்டுப்பாடு இருந்தது. அதனால் சராசரி
குழந்தையின் ஆனந்தத்தை அடைந்ததில்லை. பிள்ளையார
ஆற்றில் கரைக்க ஆடிச்செல்லும் சக நண்பனின் சந்தோஷம்
எனக்கு கிட்டியதே இல்லை.

நான் இழந்த பிள்ளை பிராயத்தை என் பிள்ளைகள் அனுபவிக்க
வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்”. என்றார்.

சத்தியமான வார்த்தைகள்.

திரும்ப கிடைக்காத பிள்ளை பருவத்தை தடையில்லாமல்
அனுபவிக்க அனைவருடனும் கலந்து பழக விடுங்கள்.

எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் இவனுக்கு புரியமாட்டேன் என்கிறது என்று சலித்துக் கொள்ளும் பெற்றோர் பலர். புரிய வைப்பதற்காக நாம் செய்யும் முயற்சிகள் பல தோல்வியையே தழுவுகின்றன. அதற்கான காரணங்களைப் பற்றி ஆராய்வோம்.

பொதுவாக புரிதல் எப்படி நடக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்வோம். நமக்கு ஏற்கெனவே தெரிந்த அல்லது புரிந்த ஒரு விசயத்தை வைத்தே புதிய விசயங்களை தெரிந்துகொள்கிறோம் அல்லது புரிந்து கொள்கிறோம். உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு குச்சியைப் (அல்லது கம்பி) பற்றி நன்றாக தெரியும். அது ஒரு சாதாரண பொருள். அதனால் அதை பார்த்திருக்கும், பயன்படுத்தியும் இருக்கும். ஒரு பேனாவை அதன் கையில் கொடுக்கும்பொழுது, அதை ஒரு குச்சியாகத்தான் குழந்தை பார்க்கும். நாம் மூடியை திறந்து எழுதிக் காண்பிக்கும்போது குச்சி எப்படி எழுதுகிறது எனும் வியப்போடே பார்க்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கீழ்க்கண்டவற்றை புரிந்துகொள்ளும்.
1. குச்சி மாதிரியே இருக்கிறது ஆனால் எழுதுகிறது.
2. ஒரு பக்கம்தான் எழுதுகிறது, இன்னொரு பக்கம் எழுதமாட்டேன் என்கிறது.
3. எழுதுகிற பக்கம் கூராக இருக்கிறது. அதுதான் எழுதுகிறது.
4. குச்சியை ஒடிக்க முடியும் பேனாவை ஒடிக்க முடியவில்லை.
இப்படி பேனாவைப் பற்றிய புரிதல் படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். இவை எல்லாம் முதல் பார்வையிலேயே புரிந்துவிடும் என்றும் சொல்ல முடியாது, இதே வரிசையில் நிகழும் என்றும் சொல்ல முடியாது. குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.

நாம் சொல்லித் தரும்போது என்ன நிகழ்கிறது? குழந்தை குச்சியுடன் ஒப்பிட்டு பேனாவை புரிந்துகொண்டிருக்கும் வேளையில், நாம் Lead penடன் (பந்து முனைப் பேனா) விளக்கிக் கொண்டிருப்போம். அதனால் குழந்தை ஒரு முரண்பட்ட மன நிலையில் இருக்கும். நாம் ஒப்பிடும் Lead penஉடனேயே குழுந்தையும் ஒப்பிட்டாலும் கூட, முதல் கருத்தை குழந்தை புரிந்து உள்வாங்கிக் கொண்டிருக்கும்போதே நாம் நான்கைந்து கருத்துக்களை ஒப்பித்துக்கொண்டிருப்போம். சரி மெதுவாக ஒவ்வொரு கருத்தாக சொல்லலாம் என்றால், குழந்தைகள் வேகமாக புரிந்துகொண்டிருக்கும் வேளையில் சலிப்படைய செய்துவிடும். இப்படி பல காரணங்களால் நாம் சொல்லித் தரும்போது முரணபாடான சூழ்நிலையை உருவாக்கி புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறோம்.

சரி நாம் என்னதான் செய்வது. உங்களுக்கு தெரிந்த வழியில் ஒரு முறை சொல்லிவிட்டு புரிந்தாலும் புரியாவிட்டாலும் அடுத்த பாடத்திற்கு சென்றுவிடுங்கள். புரிய வைத்து விட்டுத்தான் அடுத்த பாடம் செல்வேன் என்று அடம் பிடிக்காதீர்கள். சொல்லித் தரும்போது சிறிது நேரம் இடைவேளை விடுங்கள். அந்த நேரத்தில் அவர்கள் விளையாண்டாலும் படித்ததை புரிந்தகொள்ள முயற்சிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் சிறிது நாள் கழித்து அவன் புரிந்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

உதாரணத்திற்கு எனது மகனுக்கு கல்-கால், பல்-பால், படம்-பாடம், படி-பாடி என்று உச்சரிப்பை வைத்து எங்கே கால் வரும் என்ற வித்தியாசத்தை சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தேன். அவனுக்கு புரிந்தது போல் இருந்தது. Test வைத்தால் ஒன்று சரியாக எழுதினான், சிலவற்றை தவறாக எழுதினான். மறுபடியும் விளக்க முயற்சித்தேன். அவன் முகத்தில் ஒரு சலிப்பு தெரிந்தது. Rest என்று சொல்லி, விட்டு விட்டேன். நான் கணினியின் முன் அமர்ந்திருந்தேன். அவன் ஒரு சிறிய கார் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். விளாயாடிக்கொண்டே கல் கால் வராது, கால் கால் வரும் (குழப்பிக் கொள்ளாதீர்கள் ஹி! ஹி!) பல் கால் வராது பால் கால் வரும் என்று அவனாகவே பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ‘அப்பா பல்லுக்கு கால் வராது, பாலுக்கு கால் வரும் correct தானே’ என்றான். ‘very good சிபி correct ஆ சொல்றே’ என்று பாராட்டிவிட்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன், அவன் விளையாட ஆரம்பித்து விட்டான். இந்த நிகழ்ச்சி எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. நாம் புரிய வைக்க பல முறை முயற்சி செய்யும்போது நடக்காத புரிதல், பிறகு எப்படி நடந்தது என ஆராயும்போதே மேற்கண்ட கருத்துக்கள் எனக்குத் தோன்றின.

எனக்கு புரிந்தும் புரியாமலும் இருந்த ஒரு விசயத்தை உங்களுக்கு புரியவைத்து விட்டேன் என நினைக்கிறேன். புரிந்தால் புரியுதுன்னு சொல்லுங்க.புரியலைனா புரியலைனு சொல்லுங்க. புரியாம புரிஞ்சதுன்னு சொன்னா எப்பவுமே புரியாம போகும். புரிஞ்சத புரியலன்னு சொன்னா புரிஞ்சதும் புரியாம போகும். நான் சொல்றது புரிஞ்சுதா, புரியலையா? உங்களுக்கு புரிஞ்சிதா இல்லை புரியலயான்னு எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க.

"உங்க பொண்ணு என்ன வகுப்பு படிக்கிறா?"

"இந்தம்மா சுஜா, இங்க வா..என்ன படிக்கிற மாமாகிட்ட சொல்லு..", "அதல பாருங்க..இவ என்ன படிக்கிறான்னே தெரியல..4ஆவதோ 5ஆவதோ...இது எல்லாம் என் மனைவி சமாச்சாரம்..எல்லாப் பொறுப்பும் அவகிட்ட விட்டாச்சு..நமக்கு நேரம் எங்க இருக்குங்க?"

இப்படி ஒரு அப்பா..

"என்ன ரேங்க் ராஜான்னா கேட்ட? ஏ ராஜா..சித்தி கேக்குறாங்க வந்து சொல்லுப்பா..நான் என்னத்தக் கண்டேன்? நா என்ன பெரிய படிப்பா படிச்சுருக்கேன்..எல்லாம் அவுக அப்பாதான் பாத்துப்பாக..இதெல்லாம் அவுக அப்பா சமாச்சாரம். நமக்கு என்ன தெரியும்?"

இப்படி ஒரு அம்மா..

இப்படியும் நடக்கிறது. குழந்தைகளின் உலகத்தில் இன்னும் காலடி எடுத்து வைக்காத பெற்றோரும் சிலருண்டு. தத்தம் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குபவர்கள் பிள்ளைகளுக்காக அன்றாட அலுவல்களுக்கேயன்றி நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகளின் உலகம் நம்முலகத்தினின்று வேறுபட்டது. நமக்குத் துச்சமென்பது அவர்களுக்கு உச்சம்..இதையே மாற்றியும் சொல்லலாம். இதைச் சரிவரப் புரிந்து கொள்வது அவசியம்.

இயந்திரகதி உலகமாகிப் போய்விட்டது இன்றைய உலகம். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக் குடும்பங்கள் தீவுக் குடும்பங்கள் என்று போய்க் கொண்டிருக்கிறோம். வேலை நிமித்தம் புலம் பெயர் வாழ்வு ஒரு பக்கம். நேரமில்லை நேரமில்லை என்று கூறி ஓடிக் கொண்டே இருக்கிறோம். குழந்தைகளுக்கான முன் மாதிரி இன்று பெற்றோர் மட்டும்தானே.

எது எப்படியோ, குழந்தை வளர்ப்பில் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குவதுதான் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான காரியம். இதற்கொன்றும் பெரிய படிப்போ, நாளின் பல மணி நேரங்களோ தேவையில்லை. குழந்தைகளின் ரசனை, ஈடுபாடு, திறமை, முயற்சித்திறன் இப்படி ஒரு குழந்தையின் பலவிதமான செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள, அவர்களைப் படிக்க அவர்களுக்காய்ச் சற்று நேரம் ஒதுக்குவது அத்தியாவசியமாகிறது.

இந்த வயதுதான் என்றில்லை..ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் தேவைகளும் செயல்பாடுகளும் மாறி மாறி அமையும். இதனைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

சில டிப்ஸ்:

1. அப்பா, அம்மா இருவரின் கூட்டுப் பங்களிப்பு - குழந்தையைப் பற்றி அ முதல் ஔ வரை
அறிதல் மிக முக்கியம். அவரவர் பார்வையில் குழந்தையைக் கண்காணிக்க நேரம் இருவருமே ஒதுக்குவது மிக முக்கியம்.

2. தினமும்..அல்லது அவ்வப்போது குழந்தையைப் பற்றிய புரிதலைத் தம்பதிகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்தல். சிறிய விஷயமென்று எதையும் ஒதுக்குதல் கூடாது.

3. குழந்தையின் ஈடுபாடுகளுக்கேற்ற சூழல் உருவாக்கிக் கொடுத்தல். உதாரணமாக ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் என்றால் அதற்குச் சமயம் ஒதுக்கிக் கொடுப்பது, அவர்கள் வேலைத்திறனை ஊக்குவிப்பது.

4. வேலைகள் இருந்து கொண்டேதானிருக்கும். இதையும் ஒரு வேலை என்றும் கடமை என்றும் நினைத்துச் செயல்படுங்கள்.


***************************************************

தோழி பாசமலரின் பதிவை மீள்பதிவாக போட்டிருக்கிறேன்.



இந்த வலைப் பக்கத்தைப் பற்றிய எனது பதிவை படிக்கவும்.


இன்றைய இலவச மென் பொருளாக மழலையருக்குரிய மென் தொகுப்பு உள்ளது.


நான் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை.


நேரம் கருதி இன்றே அவசர அவசரமாக இந்த பதிவை இடுகிறேன்.


உபயோகமா இருக்கலாம்.


இன்றே பதிவிறக்கம் செய்து நிறுவிப் பாருங்கள்.

பிள்ளைகள் மனது கல்மிஷமில்லாதது, பரிசுத்தமானது.
அதனால் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள்.

கள்ளங்கபடமற்ற அந்த பூக்களின் சுகந்தம் தரும்
சுகம் சுகமோ சுகம்.

அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விளைவிப்பது போல
பெரியவர்கள் நாமே பல செய்கைகள் செய்கிறோம்.
இது மிக மிக தவறு.

அப்படி என்னங்க செஞ்சிடறோம்னு கேட்டா...
பல பெரியவங்க அந்தக்கால ஆளுங்க மட்டுமில்ல
மாடன் காலத்து காரங்களும் தான் ஒரு குழந்தையை
பார்த்தா கொஞ்சினோமா, பேசினோமான்னு வாரது இல்ல.

கலர் குறைவா இருக்கற குழந்தையா இருந்தா
“உங்கப்பா,அம்மா என்ன நேரம்!! நீ மட்டும்
ஏண்டி கரிக்கட்டையா பொறந்திருக்க” என்று
சொல்வது.

”உங்க கலர் உங்க குழந்தைக்கு வரலை சார்”என்பது
இதெல்லாம் குழந்தையின் மனதில் நஞ்சை கட்டாயம்
விதைக்கிறது.

நிறத்தில் என்ன இருக்கிறது??? புற அழகு முக்கியாமா?
அக அழகு முக்கியமா??? அகம் அழுக்கு இல்லாமல்
இருந்தால் புறத்தில் தானாகவே தெரியும்.


பாரதியின் இந்தக் கவிதையை எப்போதும்
மறக்காதீர்கள் பெற்றோர்களே, பெரிய்வர்களே!!!


வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.



அடுத்த நஞ்சு,” பிள்ளைக்கு சோறே போட மாட்டீங்களா!!இப்படி
நோஞ்சானா இருக்கு!!”

பிள்ளை பெத்த பிறகு நீ நல்லா ஊறியிருக்க, உன் பிள்ளை
சவங்கி கிடக்கு”

இத்தகைய வார்த்தைகள் பிள்ளைகளின் மனதில் ஆறாத
காயத்தை உண்டாக்கி விடுகின்றன. எதிர்த்து பேசாமல்
குழந்தை இருக்கிறது என்பதற்காக பெரியவர்கள் செய்வது
எல்லாமும் சரியில்லை.

பல பிள்ளைகள் மனதுக்குள் வைத்து கொண்டே மெல்ல
மொளனமாக அழுவார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


தயவு செய்து பிள்ளை மனத்தில் நஞ்சு வளர்க்க வேண்டாம்.

வீட்டில் இன்னொரு உயிரின் வரவு அதே குதூகலத்தையும் சந்தோஷத்தையும் தரும். ஆனால் மூத்த குழந்தை??!!
அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கு? அதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும், இதுஎல்லாம் இன்னொரு குழந்தை பெற வேண்டும் என முடிவு செய்த உடனே பெற்றோர் இருவரும் முடிவெடுத்து, கலந்தோலாசித்து
செய்ய வேண்டிய மிக முக்கியமான விசயம்.

சகோதரி ஜெயந்தி தனது வலைப்பூவில் இதைப்பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார். அவரின் அனுமதியோடு அந்த பதிவை நம் வலைப்பூவில் அனைவரின் நலன் கருதியும் வெளியிடுவதில் மகிழ்ச்சி. தங்களது
பதிவை இங்கே பதிய ஒத்துக்கொண்டதற்கு நன்றி ஜெயந்தி.

ஜெயந்தியின் பதிவு:
***************************************************

முதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.

நமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.
மூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா?

அலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.

இரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.

எனவே பெற்றோர்களே! கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்!

**************************************************************

மேலும் சில எண்ணங்கள்:

1. முதல் குழந்தையை முன்னிருத்தி சுபாவோட தம்பி/தங்கை
என அறிமுகம் செய்வதால் குழந்தை நமக்கும் உறவு எனும் எண்ணம்
ஏற்படும்.

2. விவரம் தெரியும் வரை இருவரின் பிறந்தநாளுக்கும் இருவருக்கும்
உடை எடுத்துக்கொடுப்பதால் பாதி பிரச்சனை தீரும்.

3. இருவரும் ஒரு செடியின் மலர்கள் என்பதை பெற்றவர்கள்
மறக்கக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் பெரிய குழந்தையை
உதாசினப்படுத்தக்கூடாது.

4. அதற்காக சின்னக் குழந்தையும், அதன் விருப்பு வெறுப்பையும்
ஏற்கத் தயங்ககூடாது.

5. ஆணோ, பெண்ணோ இரு குழந்தைகளும் இரு கண்கள்.
எதில் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய்
எனும் பாகுபாடு தயவு செய்து வேண்டாம்.

பிள்ளை மனதில் நஞ்சு நாமே கலக்க வேண்டாம்.





.

அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.


13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????


பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....


பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.


ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???


பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.



பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???


இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.


பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.


பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

எதை எழுதலாம் எதை விடலாம் என யோசித்து யோசித்து தலை முடி நாலு போனது மிச்சம். சரி கோயமுத்தூர் போனதில் இருந்து எழுதலாம் என நினைத்து எழுத ஆரம்பிச்சாச்சு.


ஒரு முக்கிய கல்யாணத்துக்கு கோவை போகலாம் யார் யார் வரீங்க கை தூக்குங்கன்னு ஒரு குடும்ப தலைவன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தா சொல்லி வச்சா மாதிரி அத்தினி பேரும் கையை டபார்ன்னு கீழே தொங்க போட்டதும் இல்லாம குழி தோண்டி கீழே புதைச்சுகிட்டாங்க. சரி சரி அப்பா வரலை யார் யார் இப்ப வரீங்கன்னு கேட்டா உட்ச பட்சமாக நட்டு வாட்டர் டேங் மேலே ஏறி நானும் வரேன்ன்னு கத்தல்.


ஒரு வழியா பெரிய அக்கா, சின்ன அக்கா, மாமா குடும்பம் எல்லாம் தயார் ஆக பிளைட் தேய்ந்து, கார் தேய்ந்து, வேன் தேய்ந்து, ஆம்னி தேய்ந்து கடைசியாய் அரசு போக்குவரத்து கழகம் மிஞ்சி உட்காந்தவுடன் நட்ராஜ் லீலைஆரம்பம். தஞ்சை வரை தூங்கினான். அடுத்து வல்லம் அருகே பஸ் போன போன போது முன்னே சீட்டிலே உட்காந்து இருந்த பட்டாச்சாரி மாமா வள்ன்னு கத்த டிரைவர் பிரேக் போட நேக்கு புரிஞ்சிடுத்து. புள்ளாண்டான் லீலை ஸ்டார்ட் பண்ணிட்டான்ன்னு. மாமா முதுகு அப்பfஇ ஒரு வாட்டம். எனக்கே கடிக்க ஆசையா இருந்துச்சு. புளியோதரை வாசம் வருமோன்னு விட்டுட்டேன்.


மாமா திரும்பி என் ஆத்துகாரியை பார்த்து "மாமி கொழந்த கடிக்கறான். பல்லு கொழக்கட்டை படைங்கோ எல்லாம் சரியாகிடும்"ன்னு சொன்னாரு. "மாமா மூனு தபா பண்ணிட்டேன்.ராட்சஷன் இம்சை தாங்கலை. பப்ளிக்ல இப்படியா பிகேவ் பண்ணுவா அப்படியே அப்பனை கொண்டிருக்கு"ன்னு சொல்ல நானும் ஆட்டையிலே சேரும் நல்ல நோக்கோடு " மாமா கொழக்கட்டை பூர்ணம் வச்சதா பூர்ணம் வைக்காம ப்ளைனாவா"ன்னு கேட்டு தொலைச்சேன். தேவையில்லாமல் இடுப்பில் ஒரு இடி வாங்கிக்கனும்ன்னு தலை எழுத்து. ஒரு வழியார் கோவை வ்ந்து சேரும் போது எனக்காக காத்திருந்த் நண்பர் வெயிலான் குளிரில் காய்ஞ்சு போய் அப்த்துவை அழைக்க ஏர்போர்ட் போயிட்டார்.


அடுத்த நாள் காலை கல்யாணம் எல்லாம் முடிஞ்சு மயிலக்காவுக்கு போன் செஞ்சா "அப்படியே ஆட்டோவிலே உட்காருங்க ஆட்டோகாரர் கண்ணை மூடினா நம்ம வீடு தான்"ன்னு சொன்னப்ப லைட்டா கிலி வந்துச்சு. ஆட்டோகாரர் கண்ணை தொறந்து இருந்தாலே சொர்க்கம் கன்பர்ம்டு. இதிலே மூடிகிட்டு இருந்ர்த்து கோச்சா இருக்கும்ன்னு நினைச்சு ஏறி கண்ணை மூடியாச்சு.

"தோ பாரு, இப்பா நாம போக போறது பெரிய பேஷன் டிசைனர் வீட்டுக்கு. இப்படி 16 முழம் கட்டிகிட்டு வந்து மானத்தை வாங்கிறியே எதுக்கும் லைட்டா தள்ளியே வா"ன்னு சொல்ல அதுக்கு அபிஅம்மா "ஹய்யோ, நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாட்டு பாடனும் போல இருக்கு. இந்த நிமிஷத்துல இருந்து நான் யாரோ நீங்க யாரோ"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே பேஷன் டிசைனர் கண்ணுல பட்டாச்சு. " என்னங்க பொண்ணு ராசாத்தி மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.


போய் உள்ளே உட்காந்ததுமே உள்ளே ஒரு பொண்ணு உட்காந்து இருந்துச்சு. எங்கயோ பார்த்த மாதிரியும் இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கு. நான் தான் ஜாடிக்கு ஏத்த மூடியாச்சே. உடனே என் பாரியாளிடம் கேட்டேன் ஜாடையில். "இது யாரு?"


"இதுதாங்க பாட்டியாலா"


""வட நாட்டு பொண்ணு பேர் மாதிரி இருக்கே"

\

"ஆமாம் வடநாடு தான் போல இருக்கு. பாப்பா கூட தீபாவளிக்கு இதை தான் தைக்கனும்னு சொன்னா"


அதுக்குள்ளே மயிலக்கா வந்து "இது தான் சந்தனமுல்லை"ன்னு சொல்ல எனக்கோ ஆச்சர்யம்.


"பாப்பா எதுக்கு சந்தனமுல்லையை தைக்கனும்"


"அட ராமா பாப்பா தைக்க சொன்னது பாட்டியாலாவை. இங்க பாருங்க சீத்தாமாமியோட ஓரகத்தி மாதிரி கன்னத்துல குழி விழறது"


அப்படியே ஷேம லாபம் எல்லாம் விசாரிச்சு முடிஞ்ச பின்னே, தாரணிபிரியாவின் வருகை. ஓடிபோய் முல்லை கதவிடுக்கில் மறைந்து கொண்டு வரும் போது "பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ"ன்னு கத்த நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஆனா தாரணி பிரியா இப்படி ஒரு பயம் காட்டிய விஷயம்





குட்டி ரோஜாக்களாய் என்றும் எங்கும் மணம் பரப்புவது
குழந்தைகள் தான்.

அந்த அழகு குட்டிச் செல்லங்களுக்கு எங்கள் பேரண்ட்ஸ்
கிளப் சார்பில் மனமார்ந்த குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.



எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின் நல்லவர்
ஆவதும் தீயவராவது பெற்றவர் வளர்ப்பினிலேன்னு
பாட்டே இருக்கு.

உண்மையில் குழந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
குழந்தை பிறந்த பிறகு நாம் நிறைய்ய கற்கிறோம்.
கதை சொல்ல, அமுதூட்ட, பொறுமையாக அவர்களின்
நள்ளிரவு விளையாட்டை ரசிக்க என பல கற்றல்கள்
நடக்கின்றன்.




நம்மை கற்க வைத்த அந்த குழந்தைகளுக்கு,
பெற்றவர்களாக்கிய பெருந்தெய்வங்களுக்கு
இந்த நல்ல நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

”நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா”!!!

”எனக்கொரு முயல்குட்டி வேணும்”

ஐயோ, இந்த பூனையை பாருங்களே”ன் எவ்வளவு
அழகா இருக்கு, நாம வளக்கலாம்”!!

இதெல்லாம் உங்க வீட்டுல பிள்ளைங்க அடிக்கடி
சொல்ற வார்த்தைகள் மாதிரி இருக்கா???

பிள்ளைகளுக்கு செல்லப்பிராணி வெச்சுக்கணும்னு
ரொம்ப ஆசை இருக்கும். அது நல்லதும் கூட.





செல்லப்பிராணி வீட்டுல வளர்ப்பதால பிள்ளைகளுக்கு
மனதளவில் நல்ல மாற்றம் இருக்கும். தனது
தோழனா நினைச்சு அவங்க அந்தப் பிராணியோடு
நேரம் போக்குவது அவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும்.

செல்லப்பிராணியை வளர்க்கும் பொறுப்பை
பிள்ளைகளிடம் கொடுப்பதால் அவர்களுக்கு
பொறுப்பு கூடுகிறது, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை
கவனித்துக்கொள்ளும் வளர்ச்சி ஏற்படும்.

உங்கள் வீட்டின் சூழ்நிலை, உங்களின் நிலை
எல்லாவற்றையும் யோசித்து, பிள்ளைகளுடன்
கலந்தாலோசித்து அவர்கள் விரும்பும் செல்லப்
பிராணியை பரிசளிக்கலாம்.






pets and kids எனும் இந்த வலைத்தளத்தை
பாருங்கள். நமக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும்.

ஆனால் எல்லா குழந்தைகளாலும் செல்லப்பிராணிகள்
வைத்துக்கொள்ள முடியாது. வசதியைப் பற்றிச்
சொல்லவில்லை. அவர்களின் உடல்நிலையை
பற்றி சொல்கிறேன்.

சைனஸ்,அலர்ஜி, சுவாச பிரச்சனை உள்ள
குழந்தைகளுக்கு நாய்,பூனை இவற்றின் முடியினால்
பிரச்சனை அதிகமாகும்.

இது தெரியாமல் பிள்ளை ஆசை படுகிறானே என
வாங்கிக்கொடுத்து அவஸ்தைக்கு ஆளாக நேரும்.
குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு பிள்ளைக்கு
எந்த பாதிப்பும் இராத பட்சத்தில் செல்லப்பிராணி
ஒன்றை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

இல்லையேல் இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்
வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.


பதிவர் கிருஷ்ணாவின் வலைப்பூவில் இந்தப் பதிவு
பார்த்தேன்.

போரடித்துக்கிடக்கும் பிள்ளைகளுக்கு,தானும்
வலையை மேய நினைக்கும் பிள்ளைகளுக்கு
என சில வலைத்தளங்கள் இருப்பது பற்றி
பதிவிட்டிருந்தார்.

”நாள் தோறும் நீங்கள் இணையத்தில் நேரம் போக்கிக் கொண்டோ அல்லது உருப்படியாக எதாவது செய்து கொண்டோ இருப்பீர்கள்.

குழந்தைகளுக்காக எதாவது வலைப் பக்கங்கள் இருக்கின்றனவா என்று தேடிய போது தான் கிடைத்தது இந்த வலைப் பக்கம்.”

அவரின் பதிவு இங்கே

உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வீட்டு வாண்டும் அழகாக இனி
கணிணி்யில் உபயோகமாக நேரம் போக்கும்.
வாழ்த்துக்கள்.
நன்றி கிருஷ்ணகுமார்

ஈகைத் திறன்

கோதையூர் என்ற ஒரு ஊரை வெகு நாட்களுக்கு முன் கோதண்டராமன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்.

மன்னர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். அதோடு ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எல்லாம் உடனுக்குடன் செய்து கொடுப்பார். கலைஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குவார். இதனால் மன்னரின் புகழ் எல்லா நாட்டிலும் பரவத் தொடங்கியது.

வேங்கை நாட்டு மன்னர் வேழவேந்தன் கோதண்டராமனைக் கண்டு பொறாமையடைந்தார். அவரும் என்னைப் போன்ற மன்னர்தானே. அவருக்கு மட்டும் எப்படி இந்தப் பேரும்புகழும் கிடைத்தது? என்று வியப்போடு தனது மந்திரியாரான காளதீபனிடம் அடிக்கடி கேட்டுக் கொள்வார்.

மந்திரியார் காளதீபன் வேழவேந்தரின் கஞ்சத்தனத்தையும், கொடூர குணத்தையும் நன்கு அறிவார்.

நம் மன்னரைத் திருத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்ட அவர். மன்னரை வணங்கி அரசே! மன்னர் கோதண்டராமனுக்கு தாங்களும் இணையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஏற்படாத பேரும், புகழும் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை விளக்க நீங்களும், நானும் மாறுவேடம் அணிந்து அவர் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நான் சொன்னபடி நீங்களும் அங்கே நடிக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நாம் இன்றே கோதையூருக்குப்  புறப்படலாம் என்று கூறினார். மன்னர் வேழவேந்தனும் ஆர்வத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் ஏழை விவசாயியைப்போன்று மாறுவேடம் அணிந்து கொண்டு கோதையூருக்குப் புறப்பட்டார்கள்.

அரண்மனையில் நுழையும் நேரம் காவலர்கள் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார்கள்.

"ஐயா! நாங்கள் இருவரும் மிகவும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கின்றோம். மன்னரிடம் உதவி பெற்று எங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளோம்" என்று கூறினார் மாறுவேடத்தில் இருந்த காளதீபன்.

காவலர்கள் இருவரையும் தர்பாருக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்த நேரத்தில் தர்பாரில் மன்னர் இல்லை. மன்னர் அவசர வேலை காரணமாக தன் அறையைவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.

காவலர்கள் மன்னரை வணங்கி அவர் காதருகே ஏதோ கூறினார்கள்.

மன்னர் புன்னகைத்தபடி "நண்பர்களே! நீங்கள் இருவரும் என்னிடம் உதவிபெற வந்திருப்பததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதோ எனது முத்துமாலை இரண்டை உங்கள் இருவருக்கும் பரிசளிக்கிறேன்" என்று கூறியவாறு தன் கழுத்தில் கிடந்த இரண்டு முத்து மாலைகளையும் மாறுவேடத்தில் இருந்த மன்னர் வேழவேந்தனிடமும், மந்திரியார் காளதீபனிடமும் கொடுத்து விட்டுச் சென்றார்.

நினைத்த மாத்திரத்தில் தர்மம் செய்கின்ற மன்னரின் கொடைத் தன்மையைக் கண்டு மன்னர் வேழவேந்தன் வியப்புற்றார்.

இருவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மந்திரியார் காளதீபன் அரசே இப்போது கவனித்தீர்களா மன்னர் கோதண்டராமனின் தர்மம் செய்யும் முறையே, அவரை புகழ் உச்சியில் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னருக்கு ஈகை திறன் மிகவும் முக்கியம் என்றார்.

மன்னர் வேழவேந்தன் அன்றுமுதல் தன்னுடைய பொறாமை எண்ணத்தையும் கஞ்சத்தனத்தையும் விட்டுவிட்டார். தன் நாட்டு மக்களுக்கு பல உதவிகளையும் செய்யலானார். மன்னர் வேழவேந்தனின் செயல்களை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

தர்மம் செய்து வாழ்பவர்கள் எல்லா நன்மைகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.




.





பெற்றோர்கள் கூட்டாக நடத்தும் இந்த வலைப்பூ
வலையுலகில் ஒரு புது முயற்சி என விகடன்
பாராட்டியிருக்கிறது.




அங்கத்தினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஆதரவு அளிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

புதுகைத் தென்றல்





பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.


நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.


நன்றி: சங்கமம்

முன்பெல்லாம் பள்ளியில் மாரல் ஸ்டடி என்று ஒரு
வகுப்பு உண்டு. நல்லது கெட்டது கதைகளாக
சொல்லப்படும்.

value education என்று பிறகு மாற்றினார்கள்.

இப்போது இரண்டு வகையும் இல்லை. அதனால்
பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை
நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.

இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு
செல்கிறது.


குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும்
பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால்
உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால்
அடித்து திட்டி செய்வோம்.

தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி
நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்
சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள்
என்னவென்று பார்ப்போம்.

************************************

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது
கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி
முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக
சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில்
சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில்
இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/
தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது
கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன
வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை
தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது
நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை
திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள்
வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.
கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.
இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.

4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்
சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது
"You're welcome" சொல்ல மறக்காதீங்க.

5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.
பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே
போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எஜமான் பட நெப்போலியன்
போல,”கல்யாண வீட்டுல நான் தான் மாப்பிள்ளை, செத்த
வீட்டுல நா தான் பொணம், மாலையும் மரியாதையும்
எனக்குத்தான்” எனும் அந்த வசனம் சினிமாவில் சரி
நிஜத்தில் வெற்றி/தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை
வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப்
பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின்
மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு
வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால்
என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க
வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே
நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியே
வந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே
செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான்
நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது
மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு
படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின்
பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க
வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை
அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணரவேண்டு.



குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளா? கேள்வி ரொம்பவே
யோசிக்க வைக்குதுல்ல???

நண்பர் பதிவர் கதிர் அவர்கள் எழுதியிருப்பதை படிங்க.
பல பெற்றோர்களுக்கு உதவியாய் இருக்கும்.

***************************************************

என் மகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. (ஒன்னாப்பு தானுங்க படிக்குது) கடந்த மாதம் காலண்டுத் தேர்வுகள் முடிந்த பின், அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பிள்ளைகளின் தரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு.

முதலில் வகுப்பாசிரியையோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அடுத்து சோசியல் பாடம் எடுக்கும் ஆசிரியை சந்திக்கச் சென்றபோது, அந்த வகுப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரி மற்ற ஆசிரியைகளைப் பார்த்து விட்டு பின்னர் அவரைச் சந்திக்கலாம் என நினைத்து, மற்ற ஆசிரியைகளிடம் சில சில நிமிடங்களைச் செலவழித்து விட்டு கடைசியாக வந்த போதும், அந்த அறை கூட்டமாகவே இருந்தது.

சரி வேறு வழியில்லையென்று கூட்டத்தோடு நின்று கவனிக்கும் போது தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாப் பெற்றோர்களும்
* எப்பா பார்த்தாலும் விளையாட்டு
* அடங்காத குறும்பு
* வீட்டிலே படிக்கிறதேயில்லை
* சீக்கிரம் தூங்கறதில்லை
என அந்த ஆசிரியையைச் சுற்றி நின்று கொண்டு ஒவ்வொருவராக புகார் சொல்லிக் கொண்டேயிருந்தனர்.

என் மகள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அடிக்கண்ணால் என்னைப் குறுகுறுப்பாக பார்த்தது.

என் மகள் குறும்பு என்ற புகார் எப்போது என்னிடம் இருந்ததில்லை. நாற்காலியில் நான் உட்கார்ந்து இருக்கும் போது, பெரும்பாலும் என் கால்களின் மேலேயேதான் நின்று கொண்டிருக்கும், சில சமயம் பக்கவாட்டில் ஏறி கழுத்து மேல் உட்கார்ந்து சரிந்து சறுக்கல் விளையாடுவதும் நடக்கும்.

எல்லோருக்கும் ஒரு புன்னைகையோடு அந்த ஆசிரியை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். “இதுகெல்லாம் குழந்தைங்க, குழந்தைங்னா விளையாடத்தானே செய்யும். தயவுசெய்து குறும்பு செய்யும் குழந்தையை மிரட்டி மிரட்டி அடக்கி வைக்காதீங்க. நீங்க வீட்டில் அதைத் தொடாதே, அங்க போகாதேனு தொடர்ந்து மிரட்டினா, எதற்கெடுத்தாலும் அந்த குழந்தைக்கு பயம் வர ஆரம்பிக்கும் அல்லது அங்கே அடக்கி வைத்ததெல்லாம் பள்ளியில் வந்து வெளிப்படுத்த முயலும். நான் 40 நிமிட வகுப்பில் 25 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்துவதில்லை. மீதி 15 நிமிடங்கள் கட்டாயம் கதை பேசுவேன்” என்றார்.

இது போல் தொடர்ந்து நிறைய பகிர்ந்து கொண்டேயிருந்தார்...

மனது விட்டேத்தியாக இருந்தது. ‘ஏன் குழந்தைகள் பற்றி பெற்றோரிடம் இத்தனை புலம்பல்கள்’

*சமீபகாலமாக குழந்தைகளை அதிகமாக பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ?
அதிக தூரம் நடக்க பழக்குவதில்லை
*வீட்டு வாசலிலிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறோம்
*வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை
*நமக்கு சிரமம் கொடுக்கும் நேரங்களில் ஒன்று மிரட்டி தூங்க வைக்கிறோம் அல்லது தொலைக்காட்சி பார் என ஒதுக்கி வைக்கிறோம்.

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகளை அழகாகவும், சொகுசாகவும் குரோட்டன்ஸ் செடி போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோமோ என அச்சம் வருகிறது.

(உங்க கருத்தை கண்டிப்பா பதிஞ்சிட்டு போங்க.

-------------------------------------------------------------------------

ஒரிஜின்ல் பதிவு இங்கே இருக்கு.

சென்ற பதிவில் சுட்டிக்குழந்தைகள் நீண்ட நேரம் அமர மாட்டார்கள் மற்றும் அடிக்கடி செயல்களை மாற்றிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். அதனால் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது அடிக்கடி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பார்த்தோம். இந்த பதிவில் அவர்களிடம் இயற்கையாக உள்ள எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி எப்படி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக மாற்றுவது என்று பார்க்கலாம்.

4.எதிர்மறை மனோபாவம்

பொதுவாக குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு (கோபத்தில் மாற்றி செய்வதுஅல்ல, நல்ல மனநிலையில் அல்லது சிரித்துக்கொண்டே மாற்றி செய்வார்கள்). என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் எதிர்மறை மனோபாவமும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.

எதிர்மறை மனோபாவம் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ள ஒரு சின்ன நிகழ்ச்சி. தட்டில் சாப்பாடை போட்டுவைத்து விட்டு “நான் சவால் விடுகிறேன் உன்னால் இந்த சாப்பாடை 2 நிமிடத்தில் சாப்பிட முடியாது” என்று சொல்லுங்கள். உடனே சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.


இந்த முறையை எப்படி வீட்டுப்பாடத்திற்கு பயன்படுத்துவது.

முறை.1.
சொல்லித்தரும்போது scaleஐ முதுகுக்கு பின் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக சொன்னால் அடிப்பேன், தவறாக சொன்னால் அடிக்க மாட்டேன் என்று சொல்லுங்கள். லேசாக அடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவை அடி விழும்போதும் எவ்வளவு சந்தோசமாக படிக்கிறார்கள் அல்லது எழுதுகிறார்கள் என்று கவனியுங்கள். அடி விழாமல் போகும்போது என்ன தவறு என்று எவ்வளவு ஆர்வருடன் தேடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கும்.

முறை.2.
ஒரு கணக்கு போட ஆரம்பிக்கும்போது “இது ரொம்ப கஷ்டம். உன்னால முடியாது தம்பி” என்று சொல்லுங்கள். நன்றாக போட்டுவிட்டால் “சே.. மாட்டுக்குவான்னு நினைச்சேன், தப்பிச்சுட்டாண்டா” என்று சொல்லுங்கள். அடுத்த கணக்கிற்கு “போன தடவைதான் மாட்டல, இந்த தடவை மாட்டிக்குவான் பாரு” என்று தொடருங்கள்.
இந்த முறையை உங்கள் குழந்தைகளால் நன்றாக செய்ய முடிகிற பாடத்தில் மட்டும் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.

முறை.3.
குழந்தைகள் படிக்கும் பாடத்தை நீங்களும் படித்து அவர்களிடம் பார்க்காமல் சொல்லுங்கள். சொல்லும்போது சில இடங்களில் தவறுகளை செய்யுங்கள்.
உதாரணத்திற்கு குழந்தை 7 table படிக்கிறான் என்றால், படித்து முடித்தவுடன் நீங்கள் அதே tableஐ அவனிடம் பார்க்காமல் சொல்லுங்கள். “நீ பார்த்துக்கொண்டே வா, தவறாக சொன்னால் சொல்லு” என்று சொல்லுங்கள். அவன் படிக்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் குழந்தை கஷ்டப்பட்டிருந்தால் அந்த இடத்தில் நீங்கள் தவறாக சொல்லுங்கள். அவன் நம்மை திருத்தும்போது அவனுக்கு மனதில் நன்றாக பதியும். இது மீண்டும் மீண்டும் revision செய்ய வைக்கவும் ஒரு வழி.



எதிர் மறை மனோபாவம் முறையை பயன்படுத்த நினைப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் தவறான் நேரத்தில் பயன்படுத்திவிட்டால் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்து விடும்.

இந்த முறையை பயன்படுத்தக்கூடாத சூழ்நிலைகள்:
1. நீங்களும் உங்கள் குழந்தையும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதாவது tensionலோ, கோபத்திலோ இருக்கக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தி விட்டதாக தெரிந்தால் உடனே கவனத்தை வேறு விசயத்தில் திருப்பி விடுங்கள்
2. இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
3. குழந்தைகளுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது கௌரவத்தை பாதிக்கும் வித்தத்திலோ பயன்படுத்தக்கூடாது. அதாவது அவர்கள் தோற்கும் விதத்தில் இந்த முறையை பயன்படுத்தக்கூடாது.

நாம் வீட்டுப்பாடம் சொல்லித்தரும்போது புரிய வைக்க வேண்டும் என நினைத்து நாம் செய்யும் காரியங்கள் பல நேரங்களில் குழந்தைகள் அரைகுறையாக புரிந்து வைத்திருப்பதையும் குழப்பி விடுவதாக அமைகிறது. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.


.

எண்ணுவது உயர்வு

ஒரு ஊரில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆலமரமொன்றில் ஒரு காகமும், ஒரு புறாவும் நெடுநாட்களாகத் தவம் செய்துக் கொண்டிருந்தன.

அவைகளைப் பார்த்த இறைவன் மனமிரங்கினார். அந்த மலையடிவாரத்தில் அப்பறவைகள் முன் காட்சியளித்தார்.

இறைவனைத் தங்கள் கண் முன்னேக் கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.

பறவைகளே! உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார்.

உடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.

காகமே உனக்கு உனது எண்ணப்படியே வரம் தந்தேன் என்று கூறியவாறு இறைவன் உடனே புறாவைப் பார்த்தார்.

புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது. அன்பும் இல்லாமல், இரக்கமும் இல்லாமல் பலக் கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.

இறைவன் புறாவை வியப்போடு பார்த்தார்.

புறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை அப்படியே என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது. நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே நீ கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்கும் அனைவரும் அதை மதித்து நடப்பார்கள். உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.

காகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்னிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்து அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது.

புறாவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது.

புறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக் கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல்லறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு மதிப்புக் கிடைத்தது. புறாவும் மிகவும் மகிழ்ச்சியோடு தமக்குக் கிடைத்த உணவு வகைகளை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்துக் கொடுத்தது.

ஒரு நாள் பொன்னிறமான இறக்கைகள் கொண்டக் காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தைப் பிடித்துச் சென்று கூண்டிலடைத்து வேடிக்கைப் பொருளாக்கினான்.

வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது பேராசை பிடித்து கீழ் தரமான எண்ணத்தால் இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்தத் துன்பம் நேர்ந்திருக்காதே. இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவரின் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடைவார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.


எண்ணத்தால் எண்ணம் போல் வாழ்க்கை அமைவதால், நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்.




.

மலர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுட்டிப் பையன்களைப் பற்றி இந்த பதிவில் எழுதுகிறேன். நான் சுட்டிப் பையன்களை நேரடியாக கையாண்டதில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன். ஆகவே இந்த பதிவில் எனது கருத்து முழுமையாகிவிடாது. எனக்குப் புரிந்ததை எழுதுகிறேன். மேலும் அனைவரையும் பங்குகொள்ளவும் அழைக்கிறேன்.

சுட்டிக் குழந்தைகள்

இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள், நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள். எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டிருப்பார்கள் ஆனால் அதிக நேரம் ஒரு செயலில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் செயலை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

துரு துரு என்று இருப்பதால் அடிக்கடி காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதனால் நாம் அடிக்கடிஇதை செய்யாதே, அதை செய்யாதேஎன சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இச்செயலே நமக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி, நாம் எதை சொன்னாலும் குழந்தைகள் கேட்காமல் போகும் சூழ்நிலையில் கொண்டுபோய்விடும்.

இவர்களை எப்படி கையாள்வது என்பதிலிருந்த சென்றால்தான் விசயம் முழுமையாகும். இருப்பினும் இந்த பதிவில் வீட்டுப்பாடம் சொல்லித்தர என்ன விதிகளைக் கையாளலாம் என்பதை மட்டும் பதிய விழைகிறேன்.
குறுகிய நோக்கில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:

1. பள்ளியிலிருந்து வந்ததும் 1 மணி நேரமாவது நன்கு விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு என்றால் அறைக்குள் விளையாடும் விளையாட்டு அல்ல. மைதானத்தில் () வெட்ட வெளியில் தங்கு தடையில்லாமல் விளையாட அனுமதிக்க வேண்டும். In other word, First you fulfill their physical needs or their natural interest.

2. சொல்லித்தருபவர் அவருக்கென ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சொல்லித்தர அமரவேண்டும். நாம் சொல்லும் அறிவுரையைவிட நாம் செய்யும் செயல்களையே குழந்தைகள் பின்பற்றுகிறார்கள். நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். (இந்த ஒரு விதிக்கு மட்டும் ஒரு பதிவு போடலாம். இப்பொழுது இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்)

3. ஒரு நாளில் 3 மணிநேரம் சொல்லித் தருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் 1-1.30 மணி நேரம் மட்டுமே பாடத்தை சொல்லித்தர வேண்டும். அதாவது 10 நிமிடம் படித்தால் 15 நிமிடம் வீட்டிற்குள்ளேயே விளையாட்டு. இங்கு விளையாட்டிற்கு அதிகம் யோசிக்க வேண்டாம். சிறு சிறு விளையாட்டுக்கள் போதும் (ஏனெனில் சீக்கிரம் விளையாட்டை முடிக்க வேண்டும்.அதுவும் முக்கியம்) ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்டுபிடிப்பது, இருவரும் எதிரேதிரே அமர்ந்து கை தட்டுவது, கழுவிய பாத்திரத்தை எடுத்து வைப்பது போன்றவை. Foot ball ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இடையிடையே அந்த பந்தை சுவற்றில் உதைத்து விளையாட சொல்லுங்கள்.

இதில் ஒரு பிரச்சினை உண்டு. விளையாட்டை முடிக்கலாம் என்று நீங்கள் சொல்லும்போது அவர்கள் இன்னும் சிறிது நேரம் விளையாடலாம் என்று சொல்லுவார்கள். ஆகவே விளையாட்டை முடிக்கலாம் என நீங்கள் நினைக்கும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாகவே முடிக்கலாம் என்று சொல்லுங்கள். அவர்கள் இன்னும் சிறிது நேரம் என்று சொன்னால்சரி இன்னும் ஒரு முறை விளயாடிவிட்டு படிக்க வாஎன்று சொல்லுங்கள். அடுத்த முறை அழைக்கும்போது கண்டிப்பாக வந்து விடுவார்கள்.

4.எதிர்மறை மனோபாவம்
பொதுவாக குழுந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். சுட்டிக் குழந்தைகள் அதிகம் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். நகைச்சுவை என்பதே பொதுவாக நடக்கும் ஒரு விசயத்தை மாற்றி செய்வது. பல நேரங்களில் நாம் சொல்வதை மாற்றி செய்யவே குழதைகள் விரும்புகின்றன. அதற்க்குக் காரணம் அவர்களின் நகைச்சுவை உணர்வு. என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் உலகை புரிந்தகொள்ள பயன்படுத்தும் பல வழிகளில் இதுவும் ஒரு வழி என்றே தோன்றுகிறது.

இந்த எதிர்மறை மனோபாவத்தை பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை கவர்ச்சிகரமாக கொண்டுசெல்லாம். எப்படி? என்று அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.





.

2. வேகமாகப் படிப்பவர்கள் Fast Learners

இவர்கள் எதையும் சீக்கிரம் கற்றுக்கொளவர்கள். இவர்களைப் பெற்ற பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் வீட்டுப்பாடம் முடிப்பதில் எந்த சிரமும் இருக்காது. எல்லாவற்றையும் சீக்கிரம் முடித்துவிட்டு விளையாடுவதையோ அல்லது டி.வி பார்க்கவோ சென்றுவிடுவார்கள்.

இவர்களிடம் உள்ள பிரச்சினை சீக்கிரம் படிப்பதைப்போல் சீக்கிரம் மறந்தும் விடுவார்கள். படித்ததில் ஆழ்ந்த புரிதல் இருக்காது. புரிந்து படிப்பதைவிட மனப்பாடம் செயவதையே விரும்புவார்கள். அதனால் கணக்கு சரியாக வராது. மற்ற பாடங்கள் நன்றாக வரும். பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த வகையில் வருவார்கள்.

இவர்களுக்கு பாடம் சொல்லித் தரும்போது கீழ்கண்ட விதிகளைப் பின்பற்றுங்கள்.

1. அவர்களின் வேகம் என்னவோ அதே வேகத்தில் சொல்லிக்கொடுத்து விடுங்கள். புரியவைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு மெதுவாக சொல்லிக்கொடுத்தால் பாடம் போரடித்து வீட்டுப்பாடத்தையே வெறுப்பார்கள்.

2. இப்பொழுது புரிந்துபடிக்கவில்லை என்பதற்ககாக கடைசி வரை இப்படியே இருப்பார்கள் என எண்ண வேண்டியதில்லை. எந்த வயதிலும் புரிந்து படிப்பவர்களாக மாறலாம். நம்முடைய கடமை பாடத்தின்மீடு வெறுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் போதும்.


3. கடைக்கு செல்லும்போது கூட்டிச்செல்லுங்கள். பொருட்களின் விலை என்ன? எவ்வளவு கொடுத்தோம்? மீதி எவ்வளவு வாங்கினோம்? என்பதை வெறும் தகவலாக மட்டும் சொல்லுங்கள். சிறிது காலத்திற்கு பிறகு அவர்களாகவே கணக்கு கேட்பார்கள். அப்பொழுதுதான் எப்படி கூட்டினோம், கழித்தோம் என்ற கணக்கையெல்லாம் சொல்ல வேண்டும்.

அடுத்த வாரம் குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சிங்க வேஷம் போட்ட கழுதை

ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. பக்கத்துக் கிராமத்திலிருந்து அந்தக் காட்டுக்குள்ள ஒரு கழுதை வழி மாறி வந்திருச்சாம். காட்டுக்குள்ள ஒருத்தர் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு மண் சாலை வழியா நடந்து நடந்து களைச்சுப் போச்சு. தண்ணீர் குடிக்கலாம்முன்னு ஒரு ஓடைப் பக்கம் போனது.

அந்த ஓடைக்கு பக்கத்துல சில வேட்டைக்காரர்கள் வசித்து வந்தாங்க. அவங்க தான் வேட்டையாடிய சிங்கம், புலி, மான் போன்ற சில மிருகங்களின் தோலை எல்லாம் அங்கிருந்தப் பாறைகள் மேலக் காய வைத்திருந்தாங்க.

இதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தோட தோலை எடுத்துத் தன் உடம்பு மேல போத்திக்கிச்சாம். பார்க்க சிங்கம் போலவே இருந்ததுனால, மற்ற மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் போனதாம். மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்துக் கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. மனிசங்களையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து கிராமத்துக்குள்ள போயி சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்திச்சாம். அதோட குரல் அது கழுதைன்னு காட்டிக் கொடுத்திருச்சு. அதுக்குப் பிறகு கழுதைய யாருமே மதிக்கவேயில்லை. யாரும் அதைப் பார்த்துப் பயப்படவேயில்லை.

நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.



(ஈசாப் நீதிக் கதைகள் ஆங்கில மூலத்தின் ஆதாரத்தில் சிறிது மாற்றி தமிழில் கூறுவது விதூஷ்)

The Ass in the Lion's Skin
An Ass once found a Lion's skin which the hunters had left out in the sun to dry. He put it on and went towards his native village. All fled at his approach, both men and animals, and he was a proud Ass that day. In his delight he lifted up his voice and brayed, but then every one knew him, and his owner came up and gave him a sound cudgelling for the fright he had caused. And shortly afterwards a Fox came up to him and said: "Ah, I knew you by your voice."

Fine clothes may disguise, but silly words will disclose a fool.


.

வீட்டுப்பாடம் இனிக்க பல யோசனைகளை தருவதற்கு முன் மாணவர்களை இரண்டாக பிரித்துக்கொள்வோம். மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners), வேகமாக படிப்பவர்கள் (Fast Learners).இவ்விருவர்களின் குணங்களை முதலில் தெரிந்துகொள்வோம்.

1. மெதுவாக படிப்பவர்கள் (Slow Learners)

இவர்களைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்குள் வாழ்க்கையை வெறுப்பது உறுதி. பெரும்பாலான ஆண் குழந்தைகள் இந்த வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதையே விரும்புவார்கள். அதனால் படித்து முடிப்பதற்கு காலதாமதமாகும். இவர்களுக்கு கணிதம் நன்றாக வரும். ஓரிரு வார்த்தைகளில் படிக்கும் கோடிட்ட இடத்தை நிருப்புக, பொருத்துக, சரியா? தவறா? போன்றவற்றை சீக்கிரம், தெளிவாக புரிந்துகொண்டு சரியாக விடை அளிப்பார்கள். ஆனால் கேள்வி பதில்கள் பகுதி சீக்கிரம் படிக்க மாட்டார்கள். பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் இவர்களே. இன்றைய கல்வி முறை இவர்களுக்கு எதிராக உள்ளது என்பதும் ஒரு கசப்பான உண்மை.

இவர்களுக்கு பாடம் சொல்லித் தருவது மிக கடினம். ஏனென்றால்

1. ஒரு பாடத்தை புரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அது வரை சொல்லித்தரும் நமக்கு பொறுமை இருக்காது. அவர்கள் படிக்கும் வேகத்தை புரிந்துகொண்டு தேவையான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தக்கூடாது.

2. நாம் 1 தடவைக்கு 2 தடவை சொல்லித் தந்தால் உடனே சரியாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் இக்குழந்தைகள் 1 தடவை 2 தடவைகளில் புரிந்துகொளவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. சில (சின்ன சின்ன) விசயங்களை முதல் தடவையிலேயே புரிந்துகொள்வார்கள். சில விசயங்களை அவர்களாகவே சிறிது காலதாமதத்திற்கு பிறகு அவர்களாகவே புரிந்துகொள்கிறார்கள். அது எப்போது எப்படி நிகழ்கிறது என்பது நமக்குத் தெரியாது.


3. புரியவில்லை என்பதற்காக நாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்தாலும் போரடித்துவிடுகிறது. ஆகவே 2 முறைக்கு மேல் சொல்லிக்கொடுக்காமல் இருப்பதே நல்லது.

4. அதிக வீட்டுப்பாடங்கள் இருப்பதால் இவர்களால் முடிக்க முடியாமல் போகும். அல்லது ஒன்றையுமே தெரிந்துகொள்ளாமல் பெயருக்கு (Physically) முடித்து விடுவார்கள்.


உடலினை உறுதிசெய்



ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.


குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரே! உமக்கு என்ன நேர்ந்தது! ஏன் குகையை விட்டு இரண்டு நாளாக வெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.


கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது.


சுருண்டு படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்கு என்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா? அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது.


"கரடியாரே! நான் என்ன செய்வது? எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. அதன் காரணமாக உடலும் சோர்வடைகிறது. நாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டே போகிறது" என கவலையுடன் கூறியது.


அதனைக்கேட்ட கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும் அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலைவலுப்படுத்த நீர் துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர். அதனால்தான் உமக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றது.


கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன். என் உடல் நிலை சீராக நீ எனக்கு உதவி செய்வாயா என்று கேட்டது நரி.


நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும். நாம் இருவரும் சிறிது நேரம் உற்பயிற்சி செய்யலாம். என்றது கரடி.


நரியும், கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன. கரடி உடனே மரக்கிளையைப் பிடித்து ஊஞ்சலாடத் தொடங்கியது. அதனைப் பார்த்து நரியும் சிறிது நேரம் ஆடியது.


கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது.


தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரி உணர்ந்தது.


அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? ஏதோ உற்சாகம் நிரம்பியவர் போன்று காணப்படுகின்றீரே என்று கேட்டது.


ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனைப் போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம் மறைந்துவிடும். என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.


அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.


நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.




.

வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கா? பெற்றோரகளுக்கா? என்கிற அளவுக்கு குழந்தைகளின் வீட்டுப்பாடம் குழந்தைகளுக்கு மட்டுமால்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. குழந்தை வளர்ப்பில் இது ஒரு பெரும் சவால் என்றே நினைக்கிறேன். (என் 6 வயது மகனுடன் நான் போராடி வருகிறேன்). இதைப் பற்றி அலசவே இந்தத் தொடர்.

வீட்டுப்பாடம் தேவையா?

வீட்டுப்பாடம் தேவையா?, வீட்டில் இவ்வளவு சொல்லித் தரவேண்டும் என்றால், பள்ளியில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள், வீட்டிலும் படிப்பு பள்ளியிலும் படிப்பு என்றால் குழந்தை எப்பொழுதுதான் விளையாடுவது என்பது பல பெற்றோர்களின் புலம்பலாக உள்ளது. இக்கருத்து நமது வலையில் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டது. அதற்கு புதுகைத் தென்றல் அவர்கள்கூட “குழந்தைகள் கற்றலில் பாடங்களை மனதில் நிறுத்திக்கொள்ள அதிக revision தேவைப்படுகிறது அதனால் வீட்டுப்பாடம் தேவைதான்” என்று கூறியிருந்தார்கள்.

மேலும் சில காரணங்களை முன் மொழிய ஆசைப்படுகிறேன்.

1. நாம் பேசுவது ஒரு மொழி. ஆனால் நம் குழந்தைகள் படிப்பது ஒரு மொழி. இந்த இடைவெளியை போக்க, பாடத்தைப் புரிய வைக்க ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக கவனிக்கப்படவேண்டி இருக்கிறது. இதனை பள்ளியால் செய்ய இயலாது.
2. குழந்தைகள் விளையாடி கற்க நினைக்கும் வயதில், நாம் படித்து கற்க வற்புறுத்துகிறோம். இந்த முரண்பாட்டினால் கற்றல் கற்பித்தல் இரண்டுமே கடினமாகிறது.
3. பெரும்பாலும் ஆண் குழந்தைகள் புரிந்து படிப்பதையே விரும்புகின்றனர். (மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படும்)ஆனால் நமது கல்வி அதிகம் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. ஆகையால் அதிக revision தேவைப்படுகிறது.

வீட்டுப்பாடம் சொல்லித்தருவதில் ஏன் சிக்கல்கள் எழுகின்றன, அதனை கையாளுவது எப்படி என கட்டுரை தொடரும்...

- விசயகுமார்


ஒற்றுமை வலிமையாம்

ஒரு ஊருல, வயலோரத்தில் அடர்ந்த புளிய மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த புளியமரத்தில் ஏராளமான கொக்குகள் வசித்து வந்தன.

அந்தக் கொக்குகள் பொறாமையின் காரணமாக தங்களுக்குள் "நீ பெரியவனா.. நான் பெரியவனா.." என்று போட்டியிட்டவாறு வாழ்ந்து கொண்டிருந்தன.

வரப்போரமாக நின்று கொண்டு தனித்தனியாகப் பிரிந்து தாங்கள் இரையை தேடி அலைந்தன.

ஒரு நாள் வேட்டைக்காரர் ஒருவர் அந்த புளியமரத்தின் பக்கமாக வந்தார். அவர் பார்வைக்கு கொக்குகள் எல்லாம் தெரிந்துவிட்டன. அதுவும் ஒவ்வொரு கொக்கும் தனித்தனியாக பிரிந்து சென்று இரை தேடிக் கொண்டிருப்பதையும் கண்டார். உடனே தன் வேட்டை துப்பாக்கியை எடுத்து தனித்தனியாக நின்று கொண்டிருக்கும் கொக்குகளை எல்லாம் சுட ஆரம்பித்தார்.

"ஆஹா.. இன்று எனக்கு நல்ல வேட்டைதான். இதோ மூன்று கொக்குகளை சுட்டு வீழ்த்தி விட்டேன். இனி நாளை வேட்டையாட வந்தால் போதும்" என்று மகிழ்ச்சியடைந்தார்.

மூன்று கொக்குகள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டதை கண்ட புளிய மரம் மிகவும் வருந்தியது.

"இந்த கொக்குகளுக்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் இனிமேல் இந்த வேட்டைக்காரனுக்கு மிகவும் கொண்டாட்டமாகவே இருக்கும். தினமும் இங்கு வந்து இந்த கொக்குகளை எல்லாம் வேட்டையாட ஆரம்பித்துவிடுவான். நாம் அதற்கு முன்னர் இந்த கொக்குகளை ஒற்றுமையாக இருக்கும்படி செய்துவிட வேண்டும்" என்று எண்ணியது.

மாலை நேரத்தில் கொக்குகள் எல்லாம் இரை தேடி முடித்து விட்டு மரத்தில் வந்து தங்கத் தொடங்கின. அதுவரையிலும் கொக்குகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த புளியமரம், கொக்குகளைப் பார்த்து, புளியமரம் பேசியது.

"பறவையின நண்பர்களே நெடு நாட்களாக என் மனதில் இருந்து வந்ததை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அதனை கவனமுடன் கேட்கின்றீர்களா?" என்று அன்போடு கேட்டது.

புளியமரம் அன்போடு பேசுவதை கண்டு கொக்குகளும் அதன் பேச்சை கேட்க வேண்டி ஆவலாயின.

"புளியமரமே! உனது கிளைகளில்தான் நாங்கள் எல்லோரும் கூடுகட்டி வசித்துக் கொண்டிருக்கிறோம். உன் நன்றியை மறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாங்கள் உனது பேச்சைக் கேட்க மறுப்பு தெரிவிக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் எங்களிடம் தாராளமாக கூறலாம்" என்றன.
"பறவையின நண்பர்களே! நீங்கள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு வாழ்வதால் உங்களில் மூன்று பேர்கள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டார்கள். இனிமேலும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்தால் வேட்டைக்காரருக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். உங்கள் கூட்டத்தினர்கள் ஒவ்வொருவரையும் அவர் சுட்டு வீழ்த்திக் கொண்டேயிருப்பார். முடிவில் உங்கள் கூட்டத்தினர்கள் எல்லோருமே காலியாகிவிடுவீர்கள். இதனை நன்கு யோசித்து உங்கள் பொறாமை எண்ணத்தை கைவிட்டு ஒற்றுமையோடு வாழுங்கள்" என்று கூறியது.

மறுநாள் வேட்டைக்காரர் கையில் வேட்டை துப்பாக்கியுடன் புளியமரத்தின் அருகே வந்தார். வேட்டைக்காரர் எதிர்பாராத வண்ணம் புளிய மரத்திலிருந்து கொக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக வேட்டைகாரரை நோக்கிப் பறந்தன.

அவரை சூழ்ந்து கொண்டு அவர் கையில் இருந்து வேட்டை துப்பாக்கியை கீழே தட்டிவிட்டு கைகளை பலமாக தம் அலகுகளால் கொத்த தொடங்கின. இன்னும் சில கொக்குகள் அவரின் முகத்தைப் பலமாக தாக்கத் தொடங்கின.

கொக்குகளின் கூட்டமான தாக்குதலுக்குப் பயந்துபோய் வேட்டைகாரர் ஓட்டமெடுத்தார்.

கொக்குகள் எல்லாம் ஒற்றுமையின் வலிமையை உணர்ந்தன. கொக்குள் எல்லாம் மனம் மாறியதைக் கண்டு புளியமரம் மகிழ்ச்சியடைந்தது.

ஒற்றுமையுடன் வாழ்வதால் எந்த தீமையும் நம்மை நெருங்காது.

=================================================================

குழந்தைகள் கற்றுக் கொள்ளும் புதிய வார்த்தைகள்:

வயல்
வரப்பு
கொக்கு
புளியமரம்
வேட்டைக்காரன்
துப்பாக்கி
ஒற்றுமை
கொத்துதல்
அலகு
எதிர்பாராதது
பொறாமை


=================================================================
குழந்தைகளுக்கான தமிழ் ரைம்ஸ் இங்கே தொகுத்துள்ளேன்.

அன்புடன்,
விதூஷ்
.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்