16. குழந்தைகளின் வயதுக்குத் தக்கவாறு தினசரி செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைக் கொடுங்கள்.
17. குழந்தைகளின் பள்ளியில் நடக்கக்கூடிய அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டும்.
18. குழந்தையின் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
19. குழந்தைகளுடன் பேசும்பொழுது தெளிவான உச்சரிப்பில் பேச வேண்டும்.
20. குழந்தைகளிடம் மரியாதை கொடுத்து பேசுங்கள். (குழந்தைகள்தானே என்ற அசட்டை வேண்டாம்).
21. புதுப் புது வார்த்தைகளையும், பேசும்பொழுது பலவித முக பாவனைகளையும் அறிமுகப்படுத்துங்கள்.
22. குழந்தைகளிடம் பேசும்பொழுது முடிந்தவரை அவர்கள் உயரத்திற்கு குனிந்து பேசுங்கள்.
23. குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டே பேசுங்கள்.
24. அடிக்கடி குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டுப் பாடுங்கள்.
25. குழந்தைகளின் நேரம் முழுவதையும் என்ன செய்ய வேண்டும் என நீங்களே முடிவு செயாதீர்கள். சில நேரம் அவர்களாக விளையாட விடுங்கள் அதுவும் அவர்கள் விரும்பும் நேரத்தில்.
26. சாலை பாதுகாப்புப் பற்றிய விதிகளை சலையில் செல்லும்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துங்கள்.
27. வீட்டில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களைப் (கத்தி, தீப்பெட்டி, நெருப்பு) பற்றி சொல்லிக்கொடுங்கள்.
28. குழந்தைகளுக்கு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
29. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் எண்ணச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு முட்டை வாங்கி வந்தால் எத்தனை முட்டை உள்ளது என எண்ண சொல்லலாம்.
30. குடும்பத்தில் நடந்த சுவாரசியமான விசயங்களைக் கதையாகச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு அப்பா சின்னப் பையனாக இருந்தபோது (தற்புகழ்ச்சிக்காக பொய்யெல்லாம் வேண்டாம்)
தொடரும்,
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில் பேரன்ட்ஸ் க்ளப்புக்காக எனது சில கருத்துக்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அக்கரையில் இருந்தபடி அக்கறையில் சொல்லும்...
அன்பு
ராமலக்ஷ்மி
-------------------------------------------------------------------------------------
உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான்.
ஆனால் அதுவே போட்டி என்ற பெய(போ)ரில் தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும் களமாக மாறிப் போக வேண்டுமா?
சமீபத்தில் கல்கத்தாவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பெண் அதன் நடுவர்களின்
கருத்துக்களால் அங்கேயே கண்ணீர் சிந்தி வருத்தத்துடன் வீடு திரும்பியவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பெற்றோரால் குற்றம் சாட்டப் பட்டு, பத்திரிகைகளில் பரபரப்பாக்கப் பட்டு பெங்களூர் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆனார். பின்னர் ஏற்கனவே அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்ததால்தான் இத்தகைய மன உளைச்சல் ஏற்பட்டதென்றும் நிகழ்ச்சி நடுவர்கள் மேல் எந்தத் தவறுமில்லை எனவும் மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிரூபணமாகியதும் பலரும் அறிந்திருக்கக்கூடும். சேனல்,நிகழ்ச்சி, பெண்ணின் பெயர் எதுவும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.
பொதுவாகப் பார்த்தால் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் தோல்விகளை குழந்தைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வண்ணம் ஒரு ஸ்போர்டிவ் ஸ்ப்ரிட் இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் வெகு கவனமாக இருக்கிறார்கள். நமது காலத்தை விட இக்காலத்தில் அதைப் பல பள்ளிகள் ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளார்கள். ஐந்தாவது வகுப்பு வரை படிப்புக்கு கூட ரேங்கிங் சிஸ்டம் இருப்பதில்லை. அதுபோல ஒரு ஆண்டு விழா என்றால் குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவரவருக்கு ஏற்ற வேடங்களாகக் கொடுத்து அத்தனை பேரையும் மேடையேற்றி அழகு பார்க்கிறார்கள். இந்த மாதிரியான தளங்களையும் தாண்டி தனித் திறமை வாய்ந்த குழந்தைகளின் பெற்றோர் மேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளை நாடுவதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. ஆனால் யாரோ சம்பாதிப்பதற்காக நமது குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பலியாக்கி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
சில நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் தவறுகளை மென்மையாகச் சொல்கிறார்கள். சிலவற்றில் குழந்தைகள் சரிவரச் செய்யாமல் தடுமாறுகையில் அவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் மாறி மாறிக் காட்டி டென்ஷனை அதிகரிப்பார்கள். இது இரு சாராருக்கும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒரு பிரபல சேனலின் ஜூனியர் பாட்டுப் போட்டி முதல் கட்டத் தேர்வுச் சுற்றிலே தேர்வாகாத குழந்தைகள் தேம்பி அழுதபடி கீழிறங்க இந்தப் பக்கம் ஏங்கி அழுதபடி பெற்றோர். அவ்வளவு ஏன்? அதே சேனலில் பெரியவர்களுக்கான ஜோடி ஆட்டபாட்ட நிகழ்ச்சியில் கூட தன் மகள் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாது தாயார் நடந்து கொண்ட விதம் பலரும் அறிந்திருக்கக் கூடும்.
தோல்வியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் எந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தோற்று நின்றால் அதுவே "வெற்றிக்கு முதல் படி" எனச் சொல்லித் தேற்றி அரவணைக்கும் முதிர்ச்சி முதலில் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள் 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விடாமல். இந்தப் பக்குவமும் முதிர்ச்சியும் மிஸ்ஸிங் என்றால் இந்த நிகழ்ச்சிகளின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்.
ஒரு சென்சேஷனை உண்டு பண்ணுமாறு நிர்ப்பந்திக்கும் விளம்பரதாரர்களுக்காகவும் அவர்கள் மூலம் கிடைக்கிற வருமானத்துக்காகவும் சேனல்கள் செய்யும் சர்க்கஸில் நாமோ நம் குழந்தைகளோ கோமாளிகளாகி விடக் கூடாது.
பி.கு: 'என்ன இப்படிச் சொதப்பிட்டே' என வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அளவுக்கு யாரும் இருப்பதில்லை என சிலர் சொல்லக் கூடும். விதி விலக்காய் இருக்கும் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படவே இப்பதிவு. மற்றொரு பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பமாக போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சுற்று பெற்றோரில் ஒருவர் க்ளூ கொடுக்க பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பதிலளிப்பார்கள். சில குழந்தைகள் தடுமாறி சரியான பதிலையும் கூடவே தங்கக் காசுகளையும் தவற விட்டு விட்டு குடும்பத்திடம் திரும்பி வருகையில் கடுகடு சிடுசிடுவென அவர்களை எதிர்கொள்ளும் தாய்மாரைக் காமிராக் கண்கள் கவரத் தவறியதில்லை. அவர்களுக்கு அவர்தம் வியாபாரம் முக்கியம் என்றால் நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இக்கரையில் இருந்தபடி இனிதாக பதிலளிக்கப் போகிறவர்
உங்கள்
புதுகைத் தென்றல்
பிள்ளைகளுக்கு உதவ விரும்பும் பெற்றோர்களுக்கு 101 ஐடியாக்கள் என்ற தலைப்பில் புதுகைத் தென்றல் அவர்கள் போட்ட பதிவின் தொடர்ச்சியே இப்பதிவு.
1. குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். எந்த மாதிரி குணங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
2. குழந்தைக்கென தனி அறை ஒதுக்குங்கள். அதில் எந்தவித தொந்திரவுகளும் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்.
3. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைச் சொல்லிக்கொடுங்கள். அவற்றினை நீங்களும் பின்பற்றுங்கள்.
4. நூலகத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்லுங்கள். அங்கிருந்து புத்தகம் எடுத்து வீட்டில் படித்துவிட்டு திரும்ப ஒப்படைக்கும் முறைக்கு பழக்கப்படுத்துங்கள்.
5. தினமும் சிறிது நேரமாவது குழந்தையுடன் அமர்ந்து நீங்களும் படியுங்கள்.
6. குழந்தை உடைகளைத் தானே அணிந்துகொள்ள தேவையான நேரத்தை அளியுங்கள்.
7. தேவையான நேரம் உறக்கம் கொள்ள அனுமதியுங்கள்.
8. குழந்தைகளுக்குத் தனியான ஒரு அலமாரி ஒதுக்குங்கள். அவர்களது பொருட்களை அங்கு வைத்து பராமரிக்கப் பழக்குங்கள்.
9. குழந்தையின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்துகொள்ள வலியுறுத்துங்கள்.
10. வீட்டில் சிறு தோட்டத்தை அவர்களுக்காக கொடுங்கள் அல்லது சில தொட்டிச் செடிகளையாவது கொடுங்கள். செடிகளை வளர்த்து அனுபவம் பெறட்டும்.
11. தினமும் குழந்தைகளுடன் சிறு நடை (walking) செல்லுங்கள். அவர்கள் வேகத்துக்கு மெதுவாக நடக்கவேண்டும். அப்பொழுது சுற்றியுள்ள விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே செல்லுங்கள்.
12. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
13. குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் நீங்களும் உடன் பாருங்கள். பின் என்ன பார்த்தீர்கள் என்பது பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.
14. வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எங்கு வைக்க வேண்டும் என பழக்குங்கள்.
15. அடிக்கடி குழந்தைகளைக் கொங்சுங்கள்.
தொடரும்,
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக
நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை
நல்ல படியாக வளர்க்க முடியும்.
சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு
என்ற ரீதியில் இருப்பார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே பெரும்
மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்
தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும்,
அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில்
பெருமை.
சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே
மனைவியை திட்டுவது, அடிப்பது,
சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள்.
மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர்
ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில்
தாயின் மரியாதையை குறைத்து விடும்.
மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள்
பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள்.
அதாவது,” நான் இல்லாத போது அம்மா என்ன
செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னா
நான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று
சொல்வார்கள். இது மிக மிகத் தவறு.
இப்படி பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின்
எதிர் காலம் என்னவாகும்.
மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள்.
பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால்
சில சமயங்களில் பிள்ளையை காக்க
தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல்
இருந்து விடுவாள்.
”அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க.
அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு
அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு”
சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்ட
பிள்ளையல்ல”.
சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச்
செல்லும் போது, கணவன் திட்டுவார்
என்று தெரிந்தும் ஒரு பொருள் தான்
ஆசைப் பட்டதை வாங்கியிருப்பார்.
பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!!
“இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ.
அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!”
என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தை
நீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான்
செய்வதை நீயும் சொல்லாதே” என்று
பிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.
மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி
இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்த
கருத்து உடையவர்களாக இருந்தால் தான்
வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக,
அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம்
கொண்ட தலைமுறையாக உருவாகும்.
உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா
என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல்
பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்று
எனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும்.
அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன்
வாங்கிக்கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல்
அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோ
குழந்தை நடந்துகொள்கிறது என்றால் இருவரும்
சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.
என்னுடைய நன்பர்(ண்) ராஜேசை இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன்.பேச்சினூடே எங்கள் குழந்தைகளைப் பற்றிய பேச்சு வந்தது. அவனுடைய 4 வயது மகனுடைய சேட்டைகளைப் பற்றி மகிழ்வோடும்,பெருமையோடும் சொல்லிக்கொண்டு வந்தவன் அவனுடைய பிடிவாதத்தைப் பற்றிச் சொல்லும் போது சற்று வருத்தத்தோடு பேசத்துவங்கினான். அவனுக்கு ஏதேனும் ஓரு பொருளை வேண்டும் என்று நினைத்து விட்டால் மிகவும் பிடிவாதமும்,அழுகையும் பிடித்து அது கிடைத்தவுடன் தான் சமாதானம் ஆகிறான். அவன் விரும்பியதைக் கொடுக்காமல் அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று குறிப்பிட்டான்.
என்னுடைய செல்ல மகள் ஓருமுறை அவள் விரும்பிய ஓன்றைக் கேட்டு அழத்துவங்கிய போது அதைக்குடுத்து சமாதானம் செய்யலாம் என யோசித்தேன். அப்போது எனது மனைவி கூறிய வார்த்தைகள் வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் என் நினைவில் உள்ளது..... "இன்று இந்த அழுகைக்காக இதை செய்தால் அழுதால் எதுவும் நடந்துவிடும் என்ற எண்ணம் அவளுக்கு ஆழமாகப் பதிந்துவிடும்" எனவே கண்டுக்காம விடுங்க. அப்படி ஓரிரு முறை நாங்கள் அவள் அழுகையை சகித்துக் கொண்டு கண்டு கொள்ளாமல் போக இப்போது அவள் நிறைவேறாத எந்த விருப்பங்களுக்காகவும் அழுவதோ ஆர்ப்பாட்டம் செய்வதோ இல்லவே இல்லை. அதேபோல் குழந்தை கேட்கின்ற எந்த விஷயத்தையும் உடனடியாக நிறைவேற்றுகின்ற நிலையில் இறைவன் வைத்த போதும் இன்னோரு பழக்கமும் வைத்து இருக்கிறேன். அவள் ஏதேனும் அவளுக்குத் தேவை எனக்கூறினால் அப்பாவுக்கு சம்பளம் ஓன்னாம் தேதிதான் கிடைக்கும்,எனவே அப்போது வாங்கித் தருகிறேன் எனச் சொல்லிவிடுவேன். இதனால் அவளுக்கு உண்மையிலேயே என்ன தேவையோ அது மட்டுமே அவளுக்கு ஓன்னாம் தேதி வரை நினைவில் இருக்கின்றது.மூன்று நான்கு விஷயங்களாக சொன்னால் ஓருவேளை எதுவும் நடக்காமல் போய்விடுமோ என நினைத்தே பெரும்பாலும் அவளுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்கிறாள். இதோ இப்பொழுது எனது இரண்டாம் மகளும் பிறந்து விட்டாள். அவளுக்கும் இதே ஃபார்முலாதான் :))
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது.
ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு “அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை” என எண்ண வைத்துவிடும்.
இதையே ஜான் ஹோல்ட் என்பவர் “ பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார். குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
பதில் தெரியாத இடத்தில் “தெரியாது” என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.
முறை.1.
“அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்” என்று கூறலாம்.
பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.
முறை. 2.
“இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்” என்று சொல்லலாம்.
பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.
முறை.3.
குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், “நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்” எனலாம்.
பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.
முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து “இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது” எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து “இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா” என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.
மரு. இரா. வே. விசயக்குமார்.
parents club blogல் எழுத ஆசைப்பட்டு, கீழே எனது பதிவை போட்டுள்ளேன். நல்லதாக இருந்தால், போடலாம்.
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி!:)
என் கருத்துகள்:
வளரும் பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது என்பது பெற்றோர்களுக்கு சற்று கடினமாக தெரியலாம். ஆனா, எந்த ஒரு கஷ்டத்தையும் நமக்கு சாதகமாக ஆக்கி கொண்டால், அது நமக்கு இஷ்டமான வேலையாக மாறிவிடும். கண்டிப்பு என்ற பெயரில் நிறைய பெற்றோர்கள் செய்வது என்ன?
பக்கத்துவீட்டு பையன், எதிர்வீட்டு பையன், சித்தி மகள், தங்கச்சி மகள் என்று மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்ப்பது! ஒரு பதின்ம வயது பிள்ளையின் மனநிலைமையை சற்று நினைத்து பாருங்க... அவனுக்கோ/அவளுக்கோ அது எப்படி வேதனையாக இருக்கும், இருந்திருக்கும்! நாளைக்கு அதே பிள்ளை பெற்றோரை, பக்கத்துவீட்டு பெற்றோருடன் ஒப்பிட்டு பேசினால், பெற்றோர்களால் அது தாங்கி கொள்ள முடியமா?
சரி, ஏன் பிள்ளைகளை ஒப்பிட்டு பேசுகிறோம்? பிள்ளைகளின் நலனுக்காக என்றே பதில் வரும். எது பிள்ளைகளின் நலன் என்று ஒரு நாளாவது சிந்தித்து பார்த்து இருப்போமா? சந்தோஷ் சுப்பரமணியம் படத்தில் பிரகாஷ்ராஜ்(அப்பா) , ஜெயம் ரவியிடம்(மகன்) கேரம் விளையாடும்போது, அப்படி செய், இப்படி நகர்த்து என்று கூறுவார். கடைசி கிளைமெக்ஸில் ஜெயம் ரவி கேட்பார் "என் விளையாட்ட, நீங்களே விளையாண்டால், நான் எதுக்குப்பா?" என்று கூறும்போது, படத்தை பார்த்த எத்தனையோ இளையர்களின் கண்கள் குளமாகியதை நான் பார்த்தேன். பிள்ளைகளின் நலன் கருதி எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வதே ஒரு பெற்றோர்களின் தலையாய கடமை! அப்படி பிள்ளைகளின் நலன் எது, அவங்களுக்கு எது பிடிக்கும் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
இதுவரைக்கும் பிள்ளைகளின் உணர்வுகளை
புரிந்து கொண்டு வந்தீர்களா? (understand their feelings)
ஆம் என்றால், அது தவறு. வெறும் புரிதல் மட்டும் போதாது.
அவர்களின் உணர்வுகளை உணருங்கள்(feel their feelings)
உதாரணத்திற்கு,பையன் பக்கத்து தெருவில் சும்மா கிரிக்கெட் விளையாடி வீடு திரும்புகின்றான். அருமையா 3 விக்கெட்களை வீழ்த்திவிட்டேன் என்று பெருமையாக சொல்கிறான். உடனே, பெற்றோர்கள் என்ன செய்வோம்?
"படிக்கறத விட்டுடு, கிரிக்கெட் விளையாடுறீயா? நாளைக்கு கிரிக்கெட்டா உனக்கு சோறு போட போகுது" என்று சொல்லும் ஒரு வகை பெற்றோர்கள் உள்ளனர். இன்னொரு வகையினர் "ஓ, அப்படியா. சரி. போய் குளி" என்று உப்புசப்பு இல்லாமல் பேசுவர். இரண்டுமே பிள்ளைகளின் தன்னம்பிக்கையை உடைத்துவிடும்.
மாறாக இப்படி செய்து பார்க்கலாமே?
"டேய், நிஜமாவா? யார் அந்த மூனு விக்கெட்கள்? கேட்ச்சா, இல்ல ரன் வுட்டா?.... நீ பேட்டிங் பண்ணலய்யா?" என்று பி்ள்ளைகளின் உணர்வுகளை சேர்ந்தே உணர்ந்து பாருங்கள்! இவ்வாறு தான் உங்களுக்கும் பதின்ம வயதினருக்கும் உள்ள உறவு மேன்மையடையும். அடுத்து, அவர்களை பற்றி மேலும் புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு, குடும்பத்தோடு ஒன்றாக கூடி உண்ணும்போது. ஒரு இரவு சாப்பாட்டு நேரம் என்று வைத்து கொள்வோம். பிள்ளைகள் அவர்களுக்கு அன்று என்ன நடந்தது என்பதை பற்றி பேசுவர்.
கேளுங்கள். ஆனால், அந்த நேரத்தில் அட்வைஸ் பண்ணாதீங்க. அந்த நேரத்துல 'நல்ல படிக்கனும், படிப்பு தான் முக்கியம்... நாங்க இப்படி கஷ்டப்பட்டோம்" என்று கூறுவதை தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்! குறிப்பா பதின்ம வயதினருக்கு பிடிக்காத ஒன்று அதுதான்! மாறாக, சினிமா, விளையாட்டு, இசை பற்றி பேசுங்க. பதின்ம வயது பெண்கள் மாதவன் பற்றியோ, சூர்யா பற்றியோ பேசினால், ரசித்து பாருங்க. அப்படி பேசும்போது, அவர்களை கொலைகுற்றவாளி பார்ப்பதுபோல் பார்க்காதீங்க. மிஞ்சி மிஞ்சி போனால், அப்பெண்கள் தங்களது படுக்கையறையில் மாதவன் போஸ்டர் ஓட்டுவார்கள். அதனால், இவர்கள் சினிமா பார்த்து கெட்டுபோய்விடுவார்கள் என்ற நினைப்பை முதலில் விட்டுவிடுங்கள்! பதின்ம வயதில் இது சகஜம் என்பதை அறிய வேண்டும் (ஒரு காலத்தில் நீங்கள்கூட சரோஜா தேவியை பார்த்து ரசித்தவராக இருந்திருக்கலாம்...)
நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், அது தவறு! அது ஆபத்து! என்ற எண்ணத்தை மாற்றுங்கள்! இதை ஏன் சொல்கிறேன் என்றால்...நிறைய பெற்றோர்கள் MSN chat, yahoo chat, orkut, friendster, facebook போன்றவற்றை தவறாக பார்க்கிறார்கள். இதனால் சில தீயவை நடப்பது உண்மை தான்! ஆனால், தன் பிள்ளையும் வழி மாறி போய்விடும் என்று தன் பிள்ளையின் மீது நம்பிக்கை இல்லை என்றால், அப்பிள்ளைக்கு இவ்வுலகில் வேறு யாரு அவர்களின் மீது நம்பிக்கை வைக்க முடியும். இது போன்ற networking விஷயங்களால் நடக்கும் நல்லதையும் கெட்டதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பெற்றோர்களே மனம் திறந்து பேசும்போது, பிள்ளைகள் வழி மாறி செல்வார்களா என்ன? எனக்கு தெரிந்த சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் orkut, friendster, facebook ஆகியவற்றில் சேர்ந்து இருக்கிறார்கள். கேட்டபோது ஆச்சிரியமாக இருந்தது, பெற்றோர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
பதின்ம வயது பிள்ளைகளை வளர்ப்பது என்பது கையில் பட்டாம்பூச்சியை வைத்து இருப்பதுபோன்றது. ரொம்ப அழுத்தி பிடித்தால், பட்டாம்பூச்சி செத்துவிடும். கையை அகலவிரித்தால், நம் கையை விட்டு பறந்துவிடும். ஆக, சரியான அளவில் பட்டாம்பூச்சியை வாழ விடுவோம்!!
நாளைக்கு என் பிள்ளை பதின்ம வயதை எட்டும்போது, நான் அவளுக்கோ/அவனுக்கோ ஒரு பெற்றோராக இல்லாமல், அவன்/ள் தினமும் எழுதும் டைரியாக இருக்க ஆசைப்படும்
தமிழ்மாங்கனி
நமது பேரன்ட்ஸ் கிளப்பில் பதிவெழுத உங்களை அழைக்கிறோம்.
குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜிலும் தேவையானவற்றை
இங்கே பதிகிறோம்.
அடலச்ன்ஸ் வயதில் பெண் பிள்ளைகளுக்கும்,
ஆண் குழந்தைகளுக்கும் தேவையான
அறிவுரைகள், ஊட்டச் சத்து மிக்க உணவுகள்
(பெண் குழந்தைக்கு உளுந்தங்க களி)
]அந்த வயதினரைக் கையாள்வது எப்படி?
இது போன்ற இன்னும் பல தலைப்புகளில்
உங்களுக்குத் தெரிந்ததை இங்கே பகிர்ந்துக்
கொள்ளுங்கள்.
ஒரு உறவாகவோ, நட்பாகவோ உங்களை'உருவக
படுத்திக்கொண்டு எதிர் கால சமுதாயத்திற்கு
உதவுங்கள்.
நீங்கள் மடல் அனுப்பினாலும் சரி.
தொடர்ந்து உறுப்பினராக விரும்பினாலும் சரி.
எமக்குத் தெரியப் படுத்துங்கள்.
முகவரி: parentsclub08@gmail.com/ pdkt2007@gmail.com
கற்க வயது ஒரு தடை இல்லை. கற்க எவ்வளவோ விடயங்கள்
இருக்கின்றன. ஆனாலும் காலத்தின் கட்டாயத்தால்
அவசியத்தால் நாம் கற்க நேர்கிறது. அதில் ஒன்று
பெற்றோராக நம்மை தயார் படுத்திக்கொள்ளுதல்.
அப்படி என்ன கற்கிறோம்னு கேக்கறீங்களா?
நான் கற்றவற்றை சொல்கிறேன். இதைப் படிச்சிட்டு
நீங்களும்,”ஆமாம்! நானும் இதெல்லாம் கத்துகிட்டேன்
என்பீர்கள்”.
1.தூக்கம் என் கண்களை தழுவட்டுமேன்னு நினைச்ச
மாத்திரத்தில் தூங்கத் துவங்கியிருப்பேன்.
குழந்தை பிறந்த நேரத்திலிருந்து,
” தூக்கமா? அப்படின்னா என்ன?” என்று கேட்க கற்றேன்.
2. கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கு சாப்பாடு எடுத்து
செல்லும்போது என் டயலாக், “சோறு வைக்க வேண்டாம்.
கனமாக இருக்கும். சப்பாத்தி போதும்”.
குழந்தை பிறந்த பிறகோ, வாட்டர் பாட்டில்,
நாப்கின், டயாபர்.... இத்யாதிகள் கொண்ட
பெரிய பையுடன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு
நடக்க கற்றேன்.
3.குழந்தை தூங்கி எழும் முன் அனைத்து வேலையையும்
முடித்துக்கொள்ள கற்றது டைம் மேனேஜ்மெண்டைக்
கற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம்!
4. கையில் சின்ன கீறல் விழுந்தால் சாப்பாடு ஊட்டப்
பட்டது அன்று.
காலில் பால் கொட்டி காயம் ஏற்பட்டாலும்
பிள்ளைக்கு பசிக்குமே என்று அடுக்களைக்கு
போனது இன்று.
5. அம்மா இது என்ன? அது ஏன் இப்படி இருக்கு?
இப்படி வீசப்படும் கேள்வி கணைகளுக்கு தேடித்
தேடி பதில் கண்டு பிடிக்கையில், அறிவு
வளர்கிறது.
6. உணவு நேரத்தை இனிதாக்க விதம் விதமாக
சமைக்க கற்றதில் கேட்டரிங் பட்டம் வாங்கியது.
7. பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாது
போனால் பணிவிடை செய்யும் பொழுது
தேர்ந்த தாதியராக பயிற்சி கிடைக்கிறது.
8. பிள்ளைக்கு ப்ராஜக்ட் செய்ய உதவ
இணையத்தைக் குடையும் போது
நெட்டிசனாகிப் போகிறோம்.
9. மகனுக்காக கொஞ்சம் ஃப்ரென்ச் கற்றது,
இதோ மகளுக்காக மெஹந்தி கற்றது
என்று கற்றல் தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது.
10. சகிப்புத்தன்மை, பொறுமை
இவை குழந்தை பிறந்த பிறகு
4 மடங்காகிப் போகிறது.
11. சிங்கிளாக சென்று கொண்டிருந்த
சிங்கம், இப்போது எங்கும் கூட்டமாக
செல்லக்கற்றது.
12. எனக்கு அப்பர் பர்த்தான் வேண்டும்
என்று அடம்பிடித்த காலம் போய்,
“சரி நீ எடுத்துக்கொள்” என்று சொல்வதில்
விட்டுக்கொடுத்தலை மறக்காமல் இருக்க
கற்றது.
பள்ளி படிப்பைத் தவிர அனுபவ படிப்பு
பலமானது என்று சொல்வார்கள். இது
என் சுயபுராணம் அல்ல. பெற்றோராக
ஆனபின் நாம் எப்படி எல்லாம் கற்கிறோம்
என்பதை சொன்னேன்.
பிள்ளையைப் பெற்றதனால் தான் நாம்
பெற்றோர் ஆனோம். அதனால் ஒரு
நல்ல பெற்றோராக திகழ் என்ன செய்ய
வேண்டும் என்பதை கற்பது மிக அவசியம்.
குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும். ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:
நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். இதில் நாம் சந்தோசப்பட வேண்டிய விசயம், நம் குழந்தை விடை கிடைக்கும் வரை எவ்வளவு தூரம் போராடுகிறது என்பது?. எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,
முறை.1:
பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், “அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்” என்று சொல்லுங்கள்.
காரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
முறை.2.
சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.
முறை.3.
வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.
-மரு. இரா. வே. விசயக்குமார்.