கற்க வயது ஒரு தடை இல்லை. கற்க எவ்வளவோ விடயங்கள்
இருக்கின்றன. ஆனாலும் காலத்தின் கட்டாயத்தால்
அவசியத்தால் நாம் கற்க நேர்கிறது. அதில் ஒன்று
பெற்றோராக நம்மை தயார் படுத்திக்கொள்ளுதல்.
அப்படி என்ன கற்கிறோம்னு கேக்கறீங்களா?
நான் கற்றவற்றை சொல்கிறேன். இதைப் படிச்சிட்டு
நீங்களும்,”ஆமாம்! நானும் இதெல்லாம் கத்துகிட்டேன்
என்பீர்கள்”.
1.தூக்கம் என் கண்களை தழுவட்டுமேன்னு நினைச்ச
மாத்திரத்தில் தூங்கத் துவங்கியிருப்பேன்.
குழந்தை பிறந்த நேரத்திலிருந்து,
” தூக்கமா? அப்படின்னா என்ன?” என்று கேட்க கற்றேன்.
2. கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கு சாப்பாடு எடுத்து
செல்லும்போது என் டயலாக், “சோறு வைக்க வேண்டாம்.
கனமாக இருக்கும். சப்பாத்தி போதும்”.
குழந்தை பிறந்த பிறகோ, வாட்டர் பாட்டில்,
நாப்கின், டயாபர்.... இத்யாதிகள் கொண்ட
பெரிய பையுடன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு
நடக்க கற்றேன்.
3.குழந்தை தூங்கி எழும் முன் அனைத்து வேலையையும்
முடித்துக்கொள்ள கற்றது டைம் மேனேஜ்மெண்டைக்
கற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம்!
4. கையில் சின்ன கீறல் விழுந்தால் சாப்பாடு ஊட்டப்
பட்டது அன்று.
காலில் பால் கொட்டி காயம் ஏற்பட்டாலும்
பிள்ளைக்கு பசிக்குமே என்று அடுக்களைக்கு
போனது இன்று.
5. அம்மா இது என்ன? அது ஏன் இப்படி இருக்கு?
இப்படி வீசப்படும் கேள்வி கணைகளுக்கு தேடித்
தேடி பதில் கண்டு பிடிக்கையில், அறிவு
வளர்கிறது.
6. உணவு நேரத்தை இனிதாக்க விதம் விதமாக
சமைக்க கற்றதில் கேட்டரிங் பட்டம் வாங்கியது.
7. பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாது
போனால் பணிவிடை செய்யும் பொழுது
தேர்ந்த தாதியராக பயிற்சி கிடைக்கிறது.
8. பிள்ளைக்கு ப்ராஜக்ட் செய்ய உதவ
இணையத்தைக் குடையும் போது
நெட்டிசனாகிப் போகிறோம்.
9. மகனுக்காக கொஞ்சம் ஃப்ரென்ச் கற்றது,
இதோ மகளுக்காக மெஹந்தி கற்றது
என்று கற்றல் தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது.
10. சகிப்புத்தன்மை, பொறுமை
இவை குழந்தை பிறந்த பிறகு
4 மடங்காகிப் போகிறது.
11. சிங்கிளாக சென்று கொண்டிருந்த
சிங்கம், இப்போது எங்கும் கூட்டமாக
செல்லக்கற்றது.
12. எனக்கு அப்பர் பர்த்தான் வேண்டும்
என்று அடம்பிடித்த காலம் போய்,
“சரி நீ எடுத்துக்கொள்” என்று சொல்வதில்
விட்டுக்கொடுத்தலை மறக்காமல் இருக்க
கற்றது.
பள்ளி படிப்பைத் தவிர அனுபவ படிப்பு
பலமானது என்று சொல்வார்கள். இது
என் சுயபுராணம் அல்ல. பெற்றோராக
ஆனபின் நாம் எப்படி எல்லாம் கற்கிறோம்
என்பதை சொன்னேன்.
பிள்ளையைப் பெற்றதனால் தான் நாம்
பெற்றோர் ஆனோம். அதனால் ஒரு
நல்ல பெற்றோராக திகழ் என்ன செய்ய
வேண்டும் என்பதை கற்பது மிக அவசியம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
1 comments:
அட ஆமாம்... யோசிச்சுப்பார்த்தா சரியாத்தான் இருக்கு.. நன்றி.. புதுகை
Post a Comment