காட்சி-1:
ஒரு கடையில் ஒரு பையன் உருண்டு உருண்டு அழுது கொண்டிருக்கிறான்.
அம்மா: அது போல் கார் ஏற்கனவே இருக்குடா..வேண்டாம்.
அப்பா: நாலு சாத்து சாத்துனா சரியாப் போயிரும்..(சாத்துகிறார்..)
பையன் இன்னும் உருண்டு கொண்டிருக்கவே, மனனவியை பில் பணம் கொடுக்கச் சொல்லிவிட்டுத் தர தரவென்று பையனை இழுத்துச் செல்கிறார்.
காட்சி-2:
மகள்: எனக்கு பெப்ஸி வேணும்..
அம்மா: ஏற்கனவே 2 தடவை குடிச்சாச்சுடா..இனிமே குடிக்கக் கூடாது..நான் தர மாட்டேன்.
மகள்: (ஓ வென்ற குரலில் ஓலம்..)
அப்பா: இப்பதான் ஆபீஸ்லருந்து வந்தேன்..அதுக்குள்ளயா..அங்கயும் தலைவலி.. இங்கயுமா..
குடுத்துத் தொலை பெப்ஸியை..
அம்மா: வீட்ல இருந்தா எனக்கு மட்டும் டென்ஷன் இல்லியா..நாள் முழுசும் நான்தானே பாத்துக்கிறேன்..எப்படி அடம் பண்ணுறா பாருங்க..நீங்கதான் இவ கத்தாமப் பாத்துக்கிறது...
காட்சி-3:
மகள்: எனக்கு இன்னொரு சாக்லேட் வேணும்..
அம்மா: சொன்னாக் கேளுடி..அவ்ளதான்..எத்தன சாக்லேட் சாப்பிடுறது?
மகள்: இன்னோண்ணு வேணும்..
அம்மா: (சாக்லேட் கொடுத்துக் கொண்டே) இரு. இரு. அப்பா வந்ததும் சொல்றேன்.
இந்தக் காட்சிகள் அநேகமாக எல்லாப் பெற்றோரும் பார்ப்பதுதான்..அனுபவிப்பதுதான். அரவணைப்பு என்ற பெயரில் அதிகச் செல்லம் கொடுத்துப் பின் அவஸ்தைப் படுதலென்பது அநேக பெற்றோர் எதிர்நோக்கும் ப்ரச்னை. அரவணைப்பு அவசியந்தான்..அதுதான் குழந்தையினுடைய நியாயமான ஆசைகளைச் சரியான நேரத்தில் தீர்த்து வைப்பது. விளையாட்டுப் பொருட்களோ, தின்பண்டங்களோ அளவுடன் வாங்கிக் கொடுப்பது அவசியம். புரியாத வயதில் பழக்கங்களைக் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள நாமே காரணமாயிருந்து விட்டுப் பின் குழந்தைகளை அடிப்பதில், நோவதில் என்ன பயன்?
செல்லம் இருவரும் கொடுக்கத்தான் வேண்டும் - சரியான அளவில்.அரவணைப்புக்கும்,
செல்லத்துக்கும் இருக்கும் இடைவெளியைச் சரிவரப் புரிந்து கொண்டு நடக்கும் பெற்றோருக்குக் குழந்தை வளர்ப்பதில் எந்தச் சிரமமும் இராது என்பது அனுபவம் கூறும் உண்மை.
காட்சி-1. எவ்வளவு தர்மசங்கடம் ஒரு பொது இடத்தில்!
காட்சி-2. குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம். கணவன் மனைவி சண்டை.
காட்சி-3. அப்பா பெயரைக் கூறித் தப்பிக்க நினைக்கும் அம்மா, ப்ரச்னையையிலிருந்து தான் விடுபட அப்பாவைப் பலிகடா ஆக்குகிறார். குழந்தைக்கு அப்பாவிடமிருக்கும் பயம் அம்மாவிடமில்லாமல் போகும். அப்பா நம்பியார் ஆகிவிடுவார்.
இது தவிர வேறு ப்ரச்னைகள்:
1. குழந்தைக்கு அடம் பிடித்தால் எதுவும் கிடைக்கும் என்ற போக்கு பழக்கமாகிவிடும்.
2. அப்பா அம்மா சண்டையில் குழந்தை குளிர் காயப் பழகிக் கொண்டு நினைத்ததைச் சாதிக்க முற்படும்.
3. அம்மா/அப்பா ஒருவரிடம் மற்றும் ஒட்டிக் கொண்டு மற்றவரிடம் பயம் வளர்த்துக் கொண்டு விலகிவிடும்.
இதைத் தவிர்க்க/குறைக்க சில டிப்ஸ்:
1. மாதம் ஒரு முறை குழந்தைக்கான விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் முறை. அல்லது அதே பட்ஜெட்டை இரண்டாகப் பிரித்துக் கொண்டு வாங்கிக் கொடுக்கும் முறை.
2. கடைக்குப் போகுமுன் இதுதான் வாங்கிக் கொடுக்கப் போகிறேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிக் கூட்டிச் செல்லுதல். வார்த்தையைக் கண்டிப்பாகச் செயலாற்றிக் காட்டுதல்.
3. பெப்ஸி, காபி, சாக்லேட் போன்றவற்றின் சுவையை மாற்றித் தருதல்.பெப்ஸியில் அவர்கள் அறியா வண்ணம் தண்ணீரைக் கலத்தல், அதிகக் காபித்தூள் போடுதல், சாக்லேட்டைக் குளிர்ப்பெட்டியில் வைக்காமல் வெளியே வைத்தல்..கொழ கொழவென்ற சாக்லேட் 3 வயது தாண்டிய குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பிடிக்காது. 3 வயதுக்கு முன் வேறு விளையாட்டுப் பொருள் அல்லது தின்பண்டங்கள் மூலம் திசை திருப்பலாம். (இது என் அனுபவத்தில் கண்ட வெற்றி.)
4. பாவம் பார்த்துப் பழக்கத்தை நாமே ஏற்படுத்திவிடக்கூடாது. அரவணைப்புக்கும் செல்லத்துக்கும் இடையே கண்டிப்பு என்ற பாலம் அவசியம்.
5. குழந்தைக்கு இருவரிடமும் பயமும் அன்பும் இருக்க வேண்டும்..அப்பா செல்லம், அம்மா செல்லம் என்று ஆரம்பத்தில் கூறும் நம் அறியாமை, நாளடைவில் யாரேனும் ஒருவரிடம் அனாவசிய பயத்தை உருவாக்கிவிடும்.
கஷ்டந்தான்..என்ன செய்வது? ஒவ்வொரு தலைமுறையும் மாறிவர வர, knowledge explosion சதவிகிதம் கூடுவதால் நாமும் புதிய புதிய உத்திகளை உருவாக்க வேண்டியுள்ளது.
மீண்டும் சந்திப்போம்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
10 comments:
வாழ்த்துக்கள் பாசமலர்,
அருமையா அழகா சொல்லியிருக்கீங்க.
பலவீடுகளில் தந்தையும் பிள்ளைகளும் ஒரு கட்சி, அம்மாவுக்கு மதிப்பே இல்லை.
பிள்ளைகள் எதிரிலேயே மனைவியை ஏசுதல் ஆகியவைக் கூட குழந்தைகள் மனதில் விஷ வித்தாக விழுந்துவிடும்.
அதனால் அப்பாச்செல்லமாக குட்டிச்சுவராகி காலம்போனக் காலத்தில் அவதிப்படுபவர்கள் இருக்காங்க.
குழந்தை வளர்ப்பில் கணவன் - மனைவ்யி என்பதைவிட பெற்றோர் என இருவரும் சேர்ந்துத்தான் கவனம் செலுத்த வேண்டும்.
அம்மா போன ஜென்மத்தில் ஒரு ஜெயில் வார்டனாகவோ, சர்க்கஸ் ரிங்க் மாஸ்ட்டராகவோ இருந்திருக்க வேண்டுமென மிகத்தீவரமாய் நம்பியது ஒரு காலம்...
ஆனால் இன்றைக்கு அம்மா அத்தனை கண்டிப்பாக இருந்ததன் பலனை இன்று நான் அனுபவிக்கும் போது மெத்தப் பெருமையாய் உணர்கிறேன்.ஆனால் ஏனோ நான் அத்தனை கண்டிப்பானவனாக இல்லை...தீர்வுகளை திணிப்பதில்லை மாறாக விவாதிப்பதன் மூலம் உணரவைக்கிறேன், ஓரளவிற்கு வெற்றிகரமான அப்பாவாகத்தான் இருக்கிறேன் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றதொரு பதிவு
இரண்டாம் சொக்கன்,
நானும் என் அப்பாவை பற்றி அப்படி ஒரு கண்ணோட்டத்தில்தான் இருந்தேன்.
6 வயதில் தனியாக கடைக்கு அனுப்பி, 25 கிலோ அரிசி மூட்டையை சைக்கிளில் சுமந்துவரச்சொல்வார்.
இன்று அவை எனக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது.
சூரியவம்சம் படத்தில் சரத்குமார் ஒரு வசனம் சொல்வார்,
உளி அடிக்குபயந்த கல்லு சிலையாக முடியாது,
சத்தியமான வார்த்தை அது.
நல்ல விஷயங்களை எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளீர்கள். நன்றி.
நான் படிச்சுட்டேன்.
இரண்டாம் சொக்கன் கூறுவது போல் அப்பா அம்மாவை வில்லனாக எல்லோரும் ஒரு காலகட்டத்தில் பார்த்திருப்போம். நம் நன்மைக்கே என்பது பின்னால்தான் தெரியும்..அதுவும் நாம் பெற்றோர் ஆகும் போது..
கருத்தான,அதே சமயம் கண்டிப்பான பாசமலர்தான்!!!
அன்புடன் அருணா
//கருத்தான,அதே சமயம் கண்டிப்பான பாசமலர்தான்!!!//
3ஆவது மட்டுந்தான் என் அனுபவம் அருணா..மற்றதெல்லாம் அங்கே அங்கே பார்த்தது, கேட்டது..
கண்டிப்பா?..எல்லா பலவீனங்களும் உள்ள ஓர் அம்மாதான் நான்..
Post a Comment